Bio Data !!

21 April, 2024

 அமேசான் ப்ரைமில் JBABY என்று ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன். இயக்குநர் சுரேஷ் மாரி. முக்கிய கதாபாத்திரங்களில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன். தயாரிப்பு பா. ரஞ்சித் உள்ளிட்ட பலர். OTT வந்த பிறகு நல்ல நல்ல கருத்துகளில் படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயாராய் இருப்பது  அதிகரித்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது. இது பாராட்டுக்குரியது

இசை டோனி பிரிட்டோ. ப்ரதீப் குமார் அன்னி  ஜே பாடிய "நெடுமரம் தொலைந்ததே" என்னும் இப் படப் பாடல் அன்னையர் தினத்தை ஒட்டி வெளியிடப் பட்டு இருக்கிறது. சூப்பர் மெலடி. 

மனித மனம் என்பது கண்ணாடி போன்றது. அது Glass, Handle with care என்று அறிவுறுத்த எடுத்த படம் போல் உள்ளது.

JBABY ஆக ஊர்வசி . இது அவரது வயதுக்கும் அனுபவத்துக்கும் ஏற்ற கதாபாத்திரம் என்பதால் ஜொலிக்கிறார். மூன்று ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் பெற்ற தாய்,  கணவனையும் இழந்த நிலையில் , வாழ்க்கையின் வலிகளை தாங்க முடியாத ஒரு கட்டத்தில் புத்தி பேதலித்து , பல செயல்களைச் செய்து விடுகிறார். 

கதவிலேயே பூட்டு மாட்டி இருந்தால் அடுத்த வீடுகளில் இருப்பவர்களை உள்ளேயே வைத்து பூட்டி சாவியை எடுத்து வந்து விடுவது, வீட்டில் உள்ள சின்ன சின்ன நகைகளை கொண்டு போய் கஷ்டப்படுபவர்களுக்கு உதவியாக கொடுத்து விடுவது, பிற வீடுகளின் லெட்டர் பாக்சில் உள்ள கடிதங்களை எடுத்து வந்து விடுவது, பிரச்னைகளில் மாட்டிக் கொள்ளும் போது நான் ஸ்டாலினின் தோழி, ஜெயலலிதாவின் தோழி என புருடா  அடித்து விடுவது என ரகளை  பண்ணி வரும் ஒரு முதிய பெண் கோபத்தில் வீட்டை விட்டு காணாமல் போய் விடுகிறார். அவர் கல்கத்தாவில் இருப்பதாக அதிகார பூர்வ தகவல் கிடைத்து போய் அழைத்து வருவதற்குள் அந்த நடுத்தரத்துக்கும் கீழ்ப்பட்ட பிள்ளைகள் படும் துயரம் நம்மை நெகிழ வைத்து விடுகிறது. 

பொதுவாகவே வயதானவர்களை பெண் பிள்ளைகள் அளவு ஆண் பிள்ளைகள் கவனித்துக் கொள்வதில்லை என்ற கருத்தை இந்த படத்தில் முறித்திருக்கிறார்கள். ஐந்து பிள்ளைகளுமே அம்மா மேல் அனுசரணையோடு தான் இருக்கிறார்கள். 

சில இடங்களில் நம்மை கண் கலங்க வைத்து விடுகிறார் இயக்குநர். உதாரணமாக அம்மா மேல் கோபத்தில் கை ஓங்கி விடும் தினேஷ் அம்மா திரும்பி வந்ததும் 

 சாப்பிடச் சொன்னதும் , அம்மா முதல் வாயை மகனுக்கு ஊட்டி விட,  அம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு " ஏம்மா என்னை பாவம் பண்ண வைக்கிற " என்று தினேஷ் கண் கலங்குவதும். அதற்கு அம்மா "நீ ஏன்ப்பா அழுற நானா உன்னை அடிச்சேன். நீ தான என்னை அடிச்ச" என்று கேட்கும் போது நாமும் பதறி விடுகிறோம். 

ஒரு விஷயம் எனக்கு நெருடலாய் இருந்தது. வயதின் முதிர்ச்சியும் பிரச்னைகளின் அழுத்தமும் காரணமாகி வரும் மெல்லிய மன நோயை குணப்படுத்த வைத்திருக்கும் மருத்துவமனையில்  உள்ள நோயாளிகள் எல்லாம் முற்றிய மன நோய் உடையவர்களாகக் காண்பித்திருப்பது தான் அந்த நெருடல். 

தந்தை இல்லாத தினேஷ் தன் குடிகார அண்ணனிடம் "வாப்பா போப்பா" என்று பேசுவது அவ்வளவு பாந்தமாக இருக்கிறது.

இது ஒரு நிஜ நிகழ்வின் அடிப்படையில் எடுத்த படம் என்கிறார்கள் முடிவில். அது மட்டுமல்லாது கல்கத்தாவிற்கு போய் விட்ட பேபி அம்மாவை கண்டு பிடிக்க உதவும் எக்ஸ் மிலிட்டரி மேன் பாத்திரத்தில் நிஜத்தில் உதவியவரையே நடிக்க வைத்திருக்கிறார்கள்.

நம்மை பெற்றவர்களை இறந்த பிறகு அப்படி கவனிச்சிருக்கணும் இப்படி கவனிச்சிருக்கணும்னு சொல்வதை விட்டு  இருக்கும் போதே நல்லா பார்த்துக்கணும்னு நம்மை சிந்திக்க வைக்கும் நல்ல படம். Don't miss it.

20 March, 2024

 எனக்கு பிடித்த இன்னொரு படம் "ஆட்டம்"  மலையாளம்.

இயக்குநர் : ஆனந்த் ஏகர்ஷி ( இது இயக்குநரின் முதல் படம் என்று சொல்கிறார்கள்)
முக்கிய கதாபாத்திரத்தில் :  வினய் ஃபோர்ட், கலாபவன் ஷாஜோன், ஜரின் ஷிஹாப்

முதல் படத்திலேயே கை தட்டல் வாங்கி விடுகிறார் இயக்குநர். படத்தின் முடிவு ஒரு தேர்ந்த இயக்குநரின் அனுபவத்தை சொல்கிறது.

ஒரு டிராமா குரூப். அத்தனை ஆண் நடிகர்களுடன் ஒரே ஒரு பெண் ( அஞ்சலி)  நடிக்கிறார். எந்த வித ஆண்,  பெண் பாகுபாடும் இன்றி பழகுகிறார். அதில் பள்ளியிலிருந்தே உடன் படித்த ஒரு நண்பர்( வினீத்)  இருக்கிறார். அவரோடு ரிலேஷன் ஷிப்பில் இருக்கிறார் அஞ்சலி . ஆனால் வினய் திருமணமானவர். மனைவி உடனான விவாகரத்து வழக்கு முடிவடையாத நிலையில் அந்த நட்பு வெளியே தெரிய வேண்டாம் என நினைக்கிறார். 

நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினய் புதிதாக நடிக்க வந்த ஹரியால் பின்னுக்கு தள்ளப்படுகிறார். ஹரி சினிமாவில் நடித்திருப்பதால் கூடுதல் கவர்ச்சி. ஹரியின் வெளிநாட்டு நண்பர்கள் நாடகம் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு ரிசார்ட்டில் பார்ட்டி கொடுக்கிறார்கள்.
அந்த பார்ட்டியில் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் குடிக்கிறார்கள். ( மலையாளப் படத்தில் குடிப்பது என்பது தவறாமல் இடம் பெறுவதில் எனக்கும் உடன்பாடில்லை)

 படுக்கப் போன பிறகு அஞ்சலிக்கு ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அதை தன் காதலன் வினய்யிடம் மட்டும் சொல்லி பிறருக்குத் தெரியாமல் நடவடிக்கை எடுக்கச் சொல்ல அவரும் குழுவின் சீனியரிடம் அஞ்சலியே சொன்னதாக சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார். அங்கே தொடங்குது முதல் பொய்.

குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப் படும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அஜென்டா. ஒரு பெண்ணின் மன உணர்வுகளுக்கு அங்கே இடமே இல்லை. மொத்த குழுவாக விவாதித்தாலும் ஒத்த கருத்துள்ள இருவர் மூவராக தனியாகவும் விவாதிக்கிறார்கள்.  எல்லோர் சொல்லும் கருத்துக்கும் பின்னால் அவர்களுக்கான சுயநலம் இருக்கிறது என்பதை அடையாளப்படுத்திய காட்சிகள். 

சில பல காரணங்களைச் சொல்லி மேலும் மேலும் பொய் சொல்ல வினய் அழுத்தம் கொடுக்கும் போது அஞ்சலி என்ன முடிவெடுக்கிறாள். யார் அந்த தவறைச் செய்தவர்கள். தண்டனை பெற்றார்களா என்பதை அறிய அமேசான் ப்ரைமில் "ஆட்டம்" மலையாளப் படம் பாருங்கள்

05 February, 2024

அமுதென்பதா? விஷமென்பதா? அமுத விஷமென்பதா? எதை? நம் அஞ்சரைப் பெட்டியை. கொஞ்சம் நான் எண்ணுவதை சொல்கிறேன் கேளுங்கள். பின் சரியா தவறா என்பதை "நீங்கள் " சொல்லுங்கள் நான் கேட்டுக் கொள்கிறேன். என் தோழி ஒருவர் தினம் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் நாலு மிளகை வாயில் போட்டு மெல்லுவேன் என்று சொல்வார்கள். அது எதற்கு நல்லது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை பார்க்கிறேன். பல வெளி நாட்டினருக்கு இல்லாத, வெளி மாநிலத்தினருக்கு இல்லாத ஒரு அனுகூலம் நம் அஞ்சரைப் பெட்டி. கொரோனா வரும் வரை கிராம்பிலும் பட்டையிலும் உள்ள மருத்துவக் குணங்கள் வெளியே பலரும் அறியாத விஷயமாகத் தான் இருந்தது. பல புரதச் சத்துக்களும் தேவையான விட்டமின்களும் நிறைந்தது நம் உணவு. ஆனால் எது எவற்றுடன் எவ்வளவு சேர வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். அது மாறும் போது தான் அமுதம் விஷமாகிப் போகும். புளியைக் கெட்டியாக கரைத்து அதை நிகர் செய்ய உப்பை அள்ளிப் போட்டு, உரைப்பு தூக்கலாக தெரிய வற்றலையும் அதிகம் சேர்த்து இவை அத்தனையையும் சரி செய்ய எண்ணையையும் கோரி ஊற்றி நாம் ஒரு சமையல் செய்தால் அது அமுதமா? விஷமா? நாக்குக்கு ருசிஆகவே இருந்தாலும் நாம ஒரு பிடி விஷத்தை கூடுதலாக உண்போமா? . வெறும் பச்சை மிளகாயையும் உப்பையும் அரைத்து தொட்டுக் கொண்டு ருசிக்காக உண்டவர்கள் காலப் போக்கில் கும்பியும் குடலும் புண்ணாகி உப்பு சப்பற்ற உணவை உண்டது எனக்குத் தெரியும். பொரியல் கூட்டு வகையறா எங்களுக்கு பிடிக்காது ஃப்ரை ஐட்டம் தான் செய்வோம் என்பவர்கள் நாளானால் எண்ணெயே இல்லாமல் சமைக்க நேருகிறது. நாம் ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும் . ஒரு குடும்பத்தின் அத்தனை பேரின் உடல் நலம் அந்த வீட்டின் சமையலறை யார் பொறுப்பில் இருக்கிறதோ அவர்கள் கையில் இருக்கிறது. பல வீடுகளில் வீட்டுப்பெண்களின் கையில் , சில வீடுகளில் வீட்டு ஆண்களின் கையில். இன்னும் சில வீடுகளில் சமையல்கார பெண்மணிகளின் கையில். அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டவர்களுக்கு அந்த வீட்டில் உள்ள அத்தனை பேர் உடல் நலமும் கவனத்தில் இருக்க வேண்டும். சமையல் வேலை செய்பவர்களுக்கு இருக்குமா? அதனால் தான் நான் வலியுறுத்தி சொல்வது சமையல் பொறுப்பை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் என்று. இதைச் சொல்ல எனக்கு முழுத் தகுதியும் இருக்கிறது. என் அம்மா வீட்டில் சேர்ந்திருந்த காலம் தவிர 44 ஆண்டுகளை நெருங்கும் என் திருமண வாழ்வில் நான் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டதே இல்லை. இதனால் நான் சொல்ல வருவது, இத்தகைய அபூர்வ அமிர்த சுரபியாக இருக்கும் நம் அஞ்சரைப் பெட்டியை, சரியாகப் பயன்படுத்தி நம் உடல் நலம் காப்போம். இன்று அத்தியாவசிய தேவை உயிர் வாழ்பவர் அத்தனை பேருக்கும் பணமாக இருந்தாலும் அதை தொட்டு அடுத்து close range ல் வருவது ஆரோக்கியமும் தான். பின் குறிப்பு: என் வீட்டில் உள்ளவர்கள் நீ ரொம்ப health conscience ஆ ஆகிட்ட. எப்போ பார்த்தாலும் உடல் நலம் பற்றியே பேசிக்கிட்டு இருக்கிற என்கிறார்கள். நான் மட்டுமா நண்பர்களே!!

04 January, 2024

அண்ணன் சப்தரிஷி எழுதிய பதிவு இதை எழுதத் தூண்டியது. பல வருடங்களுக்கு முன் , எனது 30+ வயதில் நடந்த நிகழ்வு. நாங்கள் அப்போ ஈரோடில் குடியிருந்தோம். இரவில் நானும் என் கணவரும் கடைக்குப் போய் விட்டு நடந்து வரும் போது ஒரு இருபது வயது மதிக்கத் தக்க ஒரு பெண் என்னை ஒட்டிய படி நடந்து வந்தாள். மெலிந்த உருவம். சோர்ந்த முகம். வழக்கமான முன்னெச்செரிக்கை உணர்வோடு என் கைப்பையை அழுத்திப் பிடித்துக் கொண்டேன். எங்க வீட்டுக்குப் பக்கம் வரும் போது தான் கவனித்தேன் எங்களுக்கு இணையாக தெருவின் அடுத்த பக்கத்தில் ஒரு இளைஞன் வருவதை. அந்த பெண்ணை நிறுத்தி "நீ யார்? எங்கு போகிறாய்?" என்று நான் கேட்பதை பார்த்தும் இளைஞன் வேகமாக நகர்ந்து விட்டான். அந்த பெண் ஒரு ஊரைக் குறிப்பிட்டு அங்கிருந்து ஒரு வீட்டில் வேலை வாங்கித் தருவதாக ஒரு அம்மா கூட்டி வந்தாங்க. ஈரோடு பஸ் ஸ்டான்டில் இந்தா வந்திடுறேன்னு சொல்லி "உன் பையை நான் பத்திரமா வச்சிருப்பேன்" னு சொல்லி வாங்கிட்டு போனாங்க. திரும்பி வரவே இல்லை. காலையில இருந்து இந்த பையன் என்னை சுத்தி சுத்தி வர்ரான். தப்பான காரியத்துக்கு அழைக்கிறான். நான் மறுத்தாலும் என்னை விட்டு போகல. இப்போ நீங்க பேசினதைப் பார்த்து தான் போறான்" என்றாள். பணம் கொடுத்தால் ஊருக்கு போய் விடுவதாக சொன்னாள். நான் அப்போ இருந்தது. இரண்ட்டுக்கு மாடி வீடு.படத்தில் இருக்கும் வீடு தான். அப்போ சிறு நகரங்களில் அபார்ட்மென்ட் வராத காலத்திலேயே ஈரோடில் இது இருந்தது. மொத்தம் 36 வீடுகள். நிறைய பேர் வந்து ஆள் ஆளாளுக்கு விசாரித்து மணி ஒன்பதாகி விட்டது. ஆளுக்கொரு யோசனை. 1) கொண்டு போலீஸ் ஸ்டேஷன்ல விட்டிடுங்க. 2) பணத்தைக் கொடுத்து ஊருக்குப் போக சொல்லுங்க. 3) இந்த காலத்தில யாரை நம்ப முடியுது. தேவையில்லாம பொறுப்பு எடுக்காதீங்க. ஆனால் எனக்கு அழைத்து வந்து ஒரு மணி நேரம் விசாரிச்சிட்டு அப்படியே விட மனசில்லை. வீட்டுக்கு கூட்டிட்டு போவோம். நாளைக் காலையில யோசிச்சுக்குவோம் னு நினைச்சேன். என் கணவரும் சரி என்றார். ஆனால் மற்றவர்கள் பயமுறுத்தினார்கள். தேவையில்லாம பிரச்னையில மாட்டப் போறீங்க. ஏன் இந்த வேண்டாத வேலைன்னாங்க. ஆனால் நான் "எனக்கும் இரண்டு பெண் பிள்ளைகள் இருக்குது. அப்படி விட முடியாது" ன்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டோம். சாப்பிட சொன்னேன் . சாப்பிட்டாள் அந்நிய வீட்டில் இருக்கிற உணர்வே இல்லாமல் ஒரு ஓரமாக படுத்து உறங்கி விட்டாள். நானும் கணவரும் நிம்மதியாக உறங்க முடியாமல் மாறி மாறி விடியும் வரை விழித்திருந்தோம். மறு்நாள் அமைதியாக விடிந்தது. எங்கள் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் சென்று சொன்னதும் ஒரு கான்ஸ்டபிளுடன் அந்த பெண்ணை அனுப்பி பஸ் ஏத்தி விடச் சொன்னார். ஒரு பெண் குழந்தையை ஒரு இரவு பாதுகாத்த நிம்மதியோடு அன்றாடப் பணியை தொடங்கினேன்.

27 December, 2023

Amazon ல "கிடா" னு ஒரு படம் பார்த்தேன். இதன் இயக்குநர் ரா. வெங்கட். பூ ராம் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். காளி வெங்கட்டும், பேரனாக வரும் சிறுவனும் பாட்டியாக வருபவரும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள். அதுவும் முக்கியமாக பேரன் விரும்பும் உடையை தன் பணத்தில் வாங்கி கடையை விட்டு வெளியே வரும் போது பாட்டி நடக்கும் கம்பீர நடை!! சான்சே இல்லை. கறி வெட்டுபவராக வந்து படம் முழுவதும் கலக்கி இருக்கிறார் காளி வெங்கட். முந்நூறு ரூபாய் குறைவாக இருந்தாலும் இருக்கும் பணத்துக்கே உடையை கொடுக்கும் கடைக்காரர், பாட்டி கேட்டு வரும் பணத்தை மறு கேள்வி கேட்காமல் எடுத்துக் கொடுக்கும் மனிதர், அதோடு தன் கை பணத்தையும் சேர்த்துக் கொடுக்கும் அவர் அம்மா, என்று பலரும் நல்லவர்களாக இருந்து நம் மனதை மயிலிறகால் வருடுகிறார்கள். நான் முந்தி "எறும்பு" னு ஒரு படம் பார்த்தேன். OTT ல் படம் பார்க்க விரும்பும் என் பெண் தோழிகளுக்காக ஒரு வாட்ஸ் அப் குரூப் வைத்திருக்கிறேன். அதில் எல்லோரும் அவரவர் விருப்ப படத்தை குறிப்பிடுவார்கள். அதில் ஒரு தோழி "எறும்பு" படத்தை பார்த்திட்டு "நீ சொல்லலைன்னா இந்த படம் பார்த்திருக்க மாட்டேன். பெயர் ஈர்க்கவில்லை" என்றாள். அது போல ஏழ்மையின் வலி சொல்லும் இந்த படமும் பெயர் பெரிதாய் ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால் மிகச் சிறப்பான படம். பெத்த பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாததே வலின்னா, பேரப் பிள்ளைகள், அதுவும் பெற்றோர் இல்லாத பேரப் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாதது பெரும் வலி. அதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள். படம் முழுக்க பெண்கள் எவ்வளவு அறிவுபூர்வமாக நடந்து கொள்கிறார்கள் என்பது வலிந்து சொல்லப் பட்டு இருக்கிறது. முக்கியமாக கிராமங்களில் ஏழ்மையில் வாழும் பெண்கள் குடும்பத்துக்கு எப்படி ஒரு தூணாய் விளங்குகிறார்கள் என்பதையும், அதை அவர்கள் கணவர்கள் எவ்வளவு பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். மனதை மிருதுவாக்கும் மிக நல்ல படம்.