Bio Data !!

13 December, 2020

 உன்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தேன்?

யாரை? யாரை இல்லைங்க எதை?

எனக்கு பிபி இருக்குதுன்னு தெரிஞ்சுகிட்ட அந்த நேரம்?

எல்லோரும் கதை கேட்க தயாராகிட்டீங்களா?

ம்ம்ம்

என்னிடம் அப்போ ஸ்கூட்டி ப்ளஸ் (லைட் ரோஸ் நிறம் தான் இளம் பெண்கள் விரும்புவார்கள்னு கூடுதல் 500ரூபாய் வச்சிருக்கும் போது எனக்கு இந்த ரத்த சிவப்பு தான் பிடித்ததுனு எடுத்தேன். என்ன ஒண்ணு சிவப்பு கலர் சாரி ப்ளவுஸ்ல போனா தீயணைப்புப் படை ஒண்ணு வருவது போல் இருக்கும். மத்தபடி ஓகே)

அலுவலகத்தில் ஷெட்டில் நிறுத்தினதும் லேசா தலை சுற்றி விழப் போனேன். தட்டி விட கல்லு கூட இல்லையேன்னு நினைச்சவ டாக்டரிடம் தானே போயிருக்கணும். நேரா வேலை செய்ய போயிட்டேன். அப்போ நான் இருந்த செக்‌ஷன் ப்ராட்பேன்ட் சம்பந்தமானது. கொடுக்க ஆரம்பித்த புதிது. இப்போ நினைச்சு பார்த்தா எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கோம்னு புரியுது.

சாவகாசமா மாலை வீட்டுக்கு போற வழியில டாக்டரை பார்த்தேன். விஷயத்தை சொன்னதும் பிபி செக் பண்ணினவங்க "நீங்க பிபிக்கு என்ன மாத்திரை எடுக்கிறீங்கன்னாங்க. " எனக்கு பிபி இல்லை டாக்டர் ன்னேன்.

அதை நீ சொல்லக் கூடாது ன்னவங்க படுக்க வச்சு நிக்க வச்சு எல்லாம் மறுபடி மறுபடி எடுத்தாங்க. "பிபி ரொம்ப அதிகமா இருக்கு. 220க்கு மேல. உன்னை வீட்டுக்கு அனுப்ப முடியாது. அட்மிட் ஆகுன்னாங்க. "

ஆத்தீ! "டாக்டர் எனக்கு எந்த சிம்ப்டமும் இல்லை. காலையில லேசா தலை சுத்திச்சு Now i am alright னு பழைய படத்தில மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி நான் சொல்ல அவங்க இவ்வளவு அதிகமா இருந்தும் நான் எப்படி வண்டி ஓட்டிக்கிட்டு வந்தேன்னு ஆச்சர்யப்பட்டு கிட்டு இருக்கும் போது நான் " டாக்டர் நீங்க மாத்திரை கொடுங்க. நான் வீட்டுக்கு போயிட்டு நாளைக் காலையில வந்து அட்மிட் ஆகிறேன்னு" சொல்லிட்டு அவங்க கொடுத்த 600₹ மாத்திரையையும் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டேன்.

மறு நாள் காலை என் மகளை மதுரைக்கு அனுப்ப வண்ணாரப்பேட்டை க்கு போனேன். பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது ஒரு தெரிந்த அண்ணன் வந்தாங்க. அவங்கள்ட முந்தின நாள் நடந்த செய்தியை சொன்னேன். "நல்ல வேளை அவங்க கொடுத்த மாத்திரை சாப்பிட ஆரம்பிக்கல.  நீ ஹோமியோபதி அல்லது சித்தா பாரு. குறைச்சு கொண்டு வந்த பிறகு வேணா மறுபடி அலோபதி டாக்டர் பாரு. பிபி ரொம்ப அதிகமா இருக்கும் போது குறைக்க அலோபதி சாப்பிட்டா கிட்னி பாதிப்பு வருது" ன்னாங்க. 

நாம தான் டாக்டரை தவிர மீதி எல்லார் சொல்றதையும் கேட்கிற கூட்டத்தை சேர்ந்தவங்களாச்சே. மறு நாள் ஒரு ஹோமியோபதி மருத்துவரை பார்த்தேன். அவரிடம் ஆறு மாதங்கள் மருந்து சாப்பிட்டு ஓரளவு குறைந்த பிறகு  அலோபதி டாக்டர் பார்த்து அன்றிலிருந்து இன்று வரை குறைந்த அளவு பிபி மாத்திரையோடு வண்டி ஓடுகிறது. 

கொஞ்ச நாள் முன்ன சுகமில்லைன்னு எழுதி இருந்தேன் அப்போ பிபி 180தான்(!!!!) இருந்தது. அதற்கே ஆம்புலன்சில் மருத்துவமனை செல்லும் நிலை. அப்போ தான் முதன்முதலாக பிபி இருக்குன்னு கண்டுபிடிக்கும் போது 220க்கு எப்படி ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்தேன்னு வியப்பா இருந்துச்சு. அது வா.......லி......ப வயசு. 

ஒரு சிலருக்கு ஆரம்பத்திலேயே நோய் அறிகுறி தெரிஞ்சிடும். சிலருக்கு அதிகமான பின் தான் தெரியும். சிலருக்கு உயிரைக் காப்பாற்ற நேரமில்லாமல் போயிடும். அதனால் உடல் நலம் பேணுவோம். முக்கியமாக பெண்கள். தன் உடல் நலம் பற்றி அக்கரை எடுப்பதே இல்லை. அதை மாற்றிக் கொள்வோம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!