Bio Data !!

17 July, 2011

தெய்வத் திருமகள் - திரை விமர்சனம்

விக்ரம் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒவ்வொரு முகம் எடுக்கிறார்.
இதில் அப்பாவி, மன வளர்ச்சி குன்றியவர் முகம்.
பெயர் போடும் போது வலைப்பதிவர் அஜயன் பாலாவுக்கு நன்றி போடுகிறார்கள் அவர் பங்கு     இதில் என்ன  என்று கேட்க வேண்டும்
முதல் சீனில் ஓடி வரும் விக்ரம் அடி பட்டு கீழே விழுவதும், அவரைத்தாண்டி, 'மன நலம் மிகுந்தவர்கள்' சட்டை செய்யாமல் செல்வதும்,
சிறிது  நலமாகி  எழுந்து  செல்லும் விக்ரம்  அடிபட்டு  கீழே கிடக்கும்  மற்றவனுக்கு  உதவி  செய்வதும், வீணாகச் செல்லும் தண்ணீர் குழாயை அடைப்பதும் , ஒரு ஆள் கூட  இல்லாத சிக்னலில் பச்சை விளக்கு எரியும் வரை நின்று செல்வதும், மன நலம் குன்றியது விக்ரமா அவரைச் சுற்றியுள்ளவர்களா என யோசிக்க வைக்கிறது

அங்கேயே டாப் கியரில் தொடங்கும் டைரக்டர் விஜய் இறுதி வரை அந்த வேகம் குறையாமல் கொண்டு சென்றிருக்கிறார் .
இரண்டு பாடல்கள் விக்ரம் தன் சொந்த குரலில் பாடி இருந்தாலும் "ப பா ப பா வருதே எனக்கு பாப்பா" பாடலில் நல்ல உணர்வு கொண்டு வந்திருக்கிறார்.


அடுத்து சின்ன பொண்ணு சாரா. பேபி அஞ்சு, பேபி ஷாலினி போன்ற சில செல்லக் குழந்தைகள் திகட்ட திகட்ட அத்தனை பேரையும் பேச வைத்திருக்கும் அந்த வரிசையில் சாராவும் வருவார். துல்லியமான உணர்வுகளை புரிந்து வெளிக் கொணர்ந்திருக்கிறார்.  அவள் தந்தையிடம் காட்டும் பாசம் எந்தத் தந்தைக்கும் தனக்கு அப்படி ஒரு பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையை துளிர்க்க வைக்கும். கோர்ட்டில் நாசர் வாதாடிக் கொண்டிருக்க கூண்டுக்குள் இருந்து தந்தையும், தூரத்தில் இருந்து மகளுமாக சைகை மூலம் சமாதானம் ஆகிக் கொள்வது ரசிக்க வைக்கிறது.

அனுஷ்கா  எனக்கு மிகவும் பிடித்த நடிகை. பெரிய பொட்டும், நீள கூந்தலுமாக அருந்ததி அளவு வேறு எந்த படத்திலும் மிரட்டவில்லை என்றாலும் கோர்ட்டில் வாதாடும் போது மறைந்த சுஜாதாவின் 'விதி' யை நினைவூட்டுகிறார். படத்தின் ஆரம்பத்தில் விக்ரமிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் போதும், அதே நேரம் சந்தானத்தை கோபப்பார்வை பார்க்கும் போதும் அவர் முகத்தில் பல வித பாவனைகள் நர்த்தனம் ஆடுகின்றன. கிடைத்த பாலை சிக்ஸர் அடிக்காம விடுவதில்லை. ஊரின் மிகப் பெரிய ஒரு வக்கீலை கதாநாயகி என்ற காரணத்தாலேயே வென்று விடுவதாக காட்டாமல் அந்தக் கூட்டத்தின் ஒரு 'வெள்ளை ஆடு' வெற்றிக்கு உதவுவதாக காட்டுவதில் இயக்குனர் யதார்த்தத்துக்கு முயற்சி செய்வது தெரிகிறது. இருந்தாலும் இடி க்கு பயந்து
 அனுஷ்காவை விக்ரம் கட்டிப் பிடித்ததும் காதல் தோன்றி கனவுப் பாட்டு போட்டு அதை சரி செய்து விடுவது தான் உறுத்தல்.

இந்த படத்தை பெண்களே இல்லாமல் ஒரு புது விதமாக முயற்சி செய்து பார்த்திருக்கலாம். தமிழ் நாட்டு ஆண்கள் மேல் இயக்குனர்களுக்கு இன்னும் அந்த அளவுக்கு நம்பிக்கை வரவில்லை என நினைக்கிறேன். மதராச பட்டினம் என்னும் ஓவியத்தை  படைத்த இயக்குனர் விஜய் இதில் ஒரு நவீனம் படைத்திருக்கிறார். பாராட்டுக்கள் விஜய் புது புது முயற்சிகளுக்கு!!
கேமரா உறுத்தல் இல்லாமல் கதையோடு ஒன்றிச் செல்கிறது.
'மேலே சொல்லு' னு சொல்றீங்களா,
இன்னும் படம் பார்க்கலைனா உடனே கண்டிப்பா 'தியேட்டரில் ' சென்று பாருங்கள்.
பார்த்தாச்சுன்னா இன்னும் ஒரு ஒருமுறை பாருங்கள், நாம் கவனிக்காத விஷயங்கள் கண்ணில் படும், நல்ல முயற்சிகளுக்கு நாம் செய்யும் பதில் மரியாதை இது தானே ?

13 July, 2011

செல்ல பூனைக்குட்டி!!

அது எங்கள் செல்ல பூனைக்குட்டி.
அதற்கென்று தனியாய் எதுவும் பெயர் இல்லை.
அழகான செங்கல் நிறத்தில் உடம்பெல்லாம் வரி வரியாய்.
நான் காலை நேரத்தில் வெளியே சென்று வந்தால் தனக்கு பிடித்தமான உணவு கிடைக்கப் போகும் ஆர்வத்தில் துள்ளி குதித்து ஓடி வரும் தன் வாலை செங்குத்தாக உயர்த்தி மெல்ல அதிர்ந்த படி. 
காலை நேர அவசர வேலைகளுக்கு நடுவேயும் அதன் சின்ன சின்ன குறும்புகளை ரசிப்பது பிடிக்கும்.

இப்படித்தான் ஒரு நாள்.
கிட்சனின் ஒரு ஓரத்தில் காய்ந்த சின்ன வாழை இலைத் துண்டு சுருண்டு கிடந்தது.
அதைப் பார்த்ததும் தன் எதிரியோ என்று என் செல்ல பூனைக்குட்டிக்கு சந்தேகம்.‌
புலி பாய்வதற்கு முன் பதுங்குவது போல் பதுங்கி அமர்ந்தது.
மெல்ல மெல்ல முன்னேறியது. அது எட்டும் தூரம் வரும் முன்னேயே, ஒரு காலை மட்டும் நீட்டி அதை தொடப் பார்த்தது.
பின் மெல்ல முன்னேறியது. இப்படியே அது காலுக்கெட்டும் தூரம் வரும் வரை மெல்ல முன்னே ஊர்ந்தது.எட்டும் தூரம் வந்தவுடன் நான் வேணுமென்றே ஒரு பாத்திரத்தால் சத்தம் செய்ய அது நிச்சயம் தன் எதிரி தான் என்று உறுதி செய்தபடி பின்னேறியது.

மறுபடியும் அதே முன்னேறல்.
இப்படியாய் அதன் அருகே வந்து விட்டது. அதன் காலும் அந்த இலை மேல்  பட்டு விட்டது. உடனே அது எதிர் தாக்குதல் செய்யும் என்று கொஞ்சம் பின்னுக்கு வந்தது.
அசைவில்லை என்றதும் தைரியமாய் அருகில் போல் இரண்டு கால்களாலும் புட் பாலை கோல் பாய்ண்டுக்கு கொண்டு செல்வது போல் தட்டியது.
அது வரை இருந்த கவனமும் முன்னெச்சரிக்கையும் நீங்க, அந்தக் காய்ந்த வாழை இலையை நன்கு கால்களால் நையப்புடைத்து அங்கிருந்து நீங்கியது.

எனக்கும் வாழ்வின் ஒரு தத்துவத்தை உணர்த்தியது.
இப்படியாகத்தான் நாமும் இல்லாத, கற்பனையான பிரச்னைகளுக்காக  பயந்து, அதனிடம் இருந்து நம்மைக் காப்பாற்றி கொள்ள முயற்சி எடுத்து, நமது நேரத்தை விரயம் செய்கிறோம். 
சிறிது நேரம் கழித்து வந்தாலே மனைவி மேல் கணவனுக்கு சந்தேகம்.
ஏதாவது புது விஷயத்தை பற்றி பேசி விட்டால் யாரிடம் இருந்து தெரிந்து கொண்டு இருப்பாள் என்று உறுத்தல்.
என்றும் இல்லா திருநாளாக, அழகாக உடை உடுத்தி கணவன் வேலைக்கு புறப்பட்டால் அலுவலகத்தில் ஏதும் புது நட்பு கிடைத்திருக்குமோ என மனைவிக்கு ஆர்வம். பெண் குழந்தைகள் அதிக நேரம் அலைபேசியில் சிரித்து சிரித்து பேசினால் அந்தப்புறம் இருப்பது ஆடவன் தானோ என பெற்றோருக்கு மன உழற்சி .இது தான் போகட்டும் என்றால் நல்ல நட்புக்குள்ளே கூட பொசஸ்சிவ்நஸ் தரும் கற்பனை அதிர்வுகள்.

எல்லாம் இதைப் போன்றது தான். ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான அனுபவம் தரும். சிக்கல்களைப் பிரிப்பதில் ஒவ்வொருவர் செயல்பாடு தனித்துவம் நிரம்பியதாய் இருக்கும்.
 பிறரது அனுபவத்தைக் கேட்டு நமக்கும் அதே தான் நேரும் என்று நினைக்க வேண்டியது இல்லை.இதற்கு சரியான உதாரணம், தலையணை மந்திரம் பற்றி பெரிசுகள் சொல்லி கொடுப்பது. சில நேரங்களில் பிரச்னைக்கு வழியை நாம் சிந்திக்காமல் பிறரது அறிவுரைகளை கேட்பதாலேயே துயர் தீரா முனைக்கு கொண்டு செல்லப்படுவதும் உண்டு.நாம் தேர்ந்தெடுக்கும் தீர்வே எல்லா சமயங்களிலும் ஒரே போல இருப்பதில்லை. சமயத்திற்கு ஏற்றபடி, சந்தற்பத்திற்கேற்ற படி மாறும்.  எந்த சிக்கலும் வந்த பின் அதற்கான தீர்வைப் பற்றி சிந்திப்போம்.
யூகங்களுக்கும், கற்பனைகளுக்கும் இடம் கொடுத்தால் நமது பொன்னான நேரமும், உடல் மன நலமும் தான் பாதிக்குமே தவிர வேறெதுவும் நடப்பதற்கில்லை

ஏதோ  சொல்றதை  சொல்லிப்புட்டேன் , செய்றதை செஞ்சுக்கங்க.  


10 July, 2011

பூதம் காத்த புதையல் !!

எந்த ராசா ஆரம்பித்து வைத்தாரோ லட்சம் கோடிகளை? அதை தொடர்ந்து பல லட்சம் கோடிகள். தற்போதைய லேட்டஸ்ட் லட்சம் கோடி திருவனந்தபுரத்தில் இருக்கும் பத்மனாபசாமி கோயிலில் இருக்கும், ஐந்து லட்சம் கோடிகளுக்கும் மேலான அரச நகைகள், வைரம், வைடூரியக் கற்கள். கூகிள் எர்த் இல் கடந்த ஒரு வாரமாக அதிகமாக பார்க்கப்பட்ட இடம் இது தானாம். தகவல் அறியும் சட்டம் என்பது ஒரு பாமரனுக்கு கிடைத்துள்ள புதையல். அதன் கீழ் தான் முதலில் இந்த பணி தொடங்கியது. ஆரம்பிக்கும் போது யாருமே இந்த அளவுக்கு விஷயம் தீவிரமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை 
கோவிலில் மொத்தம் ஆறு அறைகள் ஒரு நூற்றாண்டுக்கும் மேல் திறக்கப்படாமல் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு அறையாக திறக்கத் திறக்க நகைக் குவியல்கள். ஐந்து அறைகளை திறந்து விட்டார்கள். இன்னும் ஒன்று பாக்கி. அதை திறந்தால் நாட்டுக்கு கேடு என்பதான ஐதீகத்தில் அதில் தாமதம். ஆனால் அதுவும் திறக்கப்பட்டு விடும். அந்த அறையின் கதவில் பாம்பு படம் வரைந்திருப்பதாகவும், அங்குள்ள நகைகளை அந்த பாம்பு காவல் காக்கலாம் என்றும் ஒரு செய்தி பரவி வருகிறது.
 
இன்னும் மூன்று அறைகள் குளத்தினுள் இருக்கும் கிணறுகளாய் இருக்கலாம் என்று அரச குடும்பத்தின் வாரிசுகள் தகவல் தந்திருக்கிறார்கள்.
அரசருக்கு இத்தனை நகைகள் எங்கிருந்து கிடைக்கும்?
நாட்டு மக்கள் வரிப்பணமாக செலுத்தியதாக இருக்கும்.
ஆனந்த சயனத்தில் இருக்கும் அனந்த பத்மனாபருக்கு பக்தர்கள் அளித்த காணிக்கையாக இருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் நாய் உருட்டும் தெங்கம்பழமாக யாருக்கும் உதவாமல் இருப்பது சரியல்ல என்று காசர்கோடில் இருந்து ஒரு இயக்கம் இந்த செல்வங்கள் ஏழை மக்களுக்கு செலவு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறது.
ஒரு சொடுக்கு போடும் நேரத்தில் திருப்பதி சாமியை விட பணக்கார சாமியாகி விட்டார் பத்மநாபர். வயிற்றுக்கே எதுவும் இல்லை என்றாலும் கடவுளுக்கு காணிக்கை செலுத்தும் நம் மக்களின் பாவப்பட்ட மனதின் மற்றுமொரு தரிசனம் இது

சாயிபாபா இறந்த பின் அங்கே இருப்பதாக சொல்லப்படும் சொத்துக்கள், ஸ்விஸ் வங்கியில் இருப்பதாக சொல்லப்படும் பணம், தற்போது திருவனந்தபுரத்தில் கண்டு பிடிக்கப்பட்டிருக்கும் புதையல் இவ்வளவுக்குப் பின்னும் நிலவலாமா நம் நாட்டில் வறுமை?  இன்னும் ஹோட்டல் வாசல்களில் ஒட்டிய வயிறுடன், கையில் குழந்தையுடன் பிச்சை எடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். வீட்டின் வறுமையை போக்க,  வேலைக்குப் போய், கிடைத்த ஒரு விடுமுறை நாளில் வாதாம் பருப்புக்காக உயிரை விடும் பாலகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வயதின் காரணமாக தோன்றும் நோய்களோடு மட்டுமல்லாமல் வறுமையோடும் போராடும் வயோதிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
என்று மாறும் இந்த நிலைமை?

ஆழ்ந்து சிந்தித்தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. ஏழை நாடாக இருக்கலாம், பணக்கார நாடாக இருக்கலாம். இப்படி ஏழைக்கும் பணத்தில் மிதப்பவருக்கும் இடையில் இப்படி ஒரு அதல பாதாள இடைவெளி இருக்கலாமா? சிந்தியுங்கள் தோழர்களே?

டிஸ்கி :எங்கள் வீட்டு குட்டி செல்லம் இப்போ தான் நடக்கத் தொடங்கி இருக்கிறது. அது தடுமாறும் போது உடலை பின் புறம் வளைத்து பாலன்ஸ் செய்து கொள்கிறது. அதற்கு புவி ஈர்ப்பு விசையை சொல்லிக் கொடுத்தது யார்?

03 July, 2011

எண்ணச் சிதறல்கள் !!

எனது முந்திய பதிவு வங்கியில் நாம்  ATM  மூலம் பணம் எடுக்கும் போது ஏற்படும் சிக்கல் பற்றியது. இங்கே அடிச்ச மணிக்கு எங்கேயோ விளக்கு எரிந்து விட்டது. 
2 .7 .2011 சனிக்கிழமை செய்தித் தாளில் ஒரு செய்தி. 

ATM  மூலம் தவறு நேர்ந்து பணம் கழிக்கப்பட்டால் அது ஏழு நாட்களுக்குள் நமது வங்கிக் கணக்கில் ஏறி விட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி ஏற்கனவே கொடுத்துள்ள கட்டளையை மறுபடியும் வலியுறித்தி இருக்கிறது. அது வல்ல செய்தி. அப்படி தர வில்லை என்றால் ஒவ்வொரு நாளுக்கும் ரூபாய் .100 /- வீதம் வங்கி அளிக்க வேண்டும். இது 1 .7 .2011 முதல் அமுலுக்கு வருகிறது. 
வாழ்க பாரதம்!!
அது மட்டும் அல்லாது மற்றும் ஓர் அலர்ட் சிக்னல். 
உங்கள் பணத்தை கணக்கு இருக்கும் வங்கி அல்லாது மற்ற வங்கிகளில் ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் எடுத்தால் தொகை கழிக்கப்படும். இது நாம் அறிந்தது. இனி mini statement , balance  enquiry  போன்றவையும் ஐந்து தடவைக்கு மேல் நம் கணக்கு இல்லாத வங்கிகளில் எடுத்தால் தொகை கழிக்கப் படும் 

பல   ஆண் சிங்கங்களே சமையல் குறிப்பு எழுதும் போது, நாம எழுதாம இருந்தா எப்படின்னு ஒரு சிந்தனை. அதனால் இதோ உங்களுக்கே உங்களுக்காக "மசால் தோசை " 
இரண்டு பெரிய உருளைக் கிழங்குகளை துண்டுகளாக வெட்டிப் போட்டு குக்கரில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.  சிறிது ஆற விட்டு தோல் உரித்து கையால் நன்கு மசித்து வைத்து கொள்ளவும்.
பல்லாரி வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
எட்டு பெரிய பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி, ஒரு துண்டு இஞ்சி தோல் நீக்கி, நாலு பெரிய பூண்டு  சேர்த்து தட்டி வைத்துக்கொள்ளவும். 
மல்லி தழையை நீரில் நன்கு கழுவி பொடிப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். 
இன்னும் ஐந்தே நொடியில் மசால் தயார். 
வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பல்லாரி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு தட்டியது போட்டு வதக்கி, பொட்டுக்கடலை கொஞ்சம் போட்டு உருளைக் கிழங்குகளை சேர்த்து , லேசாக கிண்டி விடவும். உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். சேர்ந்து வரும் போது மல்லி தழையை போட்டு இறக்கி விடலாம். 
தோசைகல்லில் எண்ணை லேசாக தடவி, மாவை கல்லில் பரத்தி சுற்றி நெய்விட்டு , தோசை முருகி வரும் போது ஒரு கரண்டி மசாலை தோசையில் பாதி வரும் படி தேய்த்து , மீதி பாதி தோசையை மசாலின் மேல் மூடி எடுக்கவும். சாம்பாரும், சட்னியும் சேர்த்து சாப்பிட்டால் ஹோட்டலில் சாப்பிட்ட எப்பெக்ட் வரும். சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க

எங்கள் ஊரில் ஆட்டோவில் அடைக்கப்பட்ட ஏழு வயது பள்ளி மாணவன், எதிரே வந்த வானில் ஆட்டோ மோதியதால் கீழே விழுந்து மூளை சிதறி தெருவில் மூடி வைக்கப்பட்டிருந்தான். பச்சிளம் பாலகன். வெளியில் தெரிந்த ஷூ போட்ட இரு கால்களும் என்னை கொஞ்சு, கொஞ்சு என்றன. பெற்றவன் அழுகை காணச் சகியாததாய் இருந்தது. அதுவும் இப்போதெல்லாம் ஆட்டோவின் பின் புறம் கம்பி தடுப்பால் அடைக்கப் பட்டு குழந்தைகள் செல்வதை பார்க்கும் போது நாய் வண்டி தான் நினைவுக்கு வருகிறது . ஒரு ஆட்டோவில் இத்தனை குழந்தைகள் தான் அழைத்து செல்லலாம் என்று ஒரு சட்டம் கொண்டு வருவதில் உள்ள சிக்கல் தான் என்ன?. 

கடந்த வாரம் என் செவிகள் பெற்றவற்றுள் ஒரு சிறப்பு விஷயம்.
நமது வாழ்க்கையில் துன்பச் சுமைகள் நிறைய இருக்கின்றன. அவை வருவதை மூன்று விதமாக பிரித்துக் கொள்ளலாம்.
1 ) நாமே வருவித்துக் கொள்பவை. கோபம் , காமம், பொறாமை போன்ற குணங்களால் நாம் சிவப்புக் கம்பளம் விரித்து பெற்றுக் கொள்ளும் சுமைகள் ஒரு வகை.
2 ) இயற்கையின் சீற்றங்களால் வரும் சுனாமி , புயல், போன்ற சுமைகள்.
3) இறைவன் நமக்குத் தரும் சுமைகள். இவை நம்மை புடம் போட்டு இன்னும் ஒளிரச் செய்வதற்காக.
இதை கவனித்துப் பார்த்தால் நம்முடைய சுமைகளில் பாதிக்கு மேல் நாம் வரவழைத்துக் கொள்வது தான். அதை எப்படி குறைப்பது என்று சிந்தித்து முடிவெடுப்பது நம் கையில் தான் இருக்கிறது. இன்னும் ஏன் நாம் நெய்க்காக அலைந்து கொண்டு இருக்கிறோம்.சந்தோஷமாக இருப்போம் !!