Bio Data !!

25 November, 2012

"தே............வதை"



முதன் முறையாய்
தொண்டை நரம்புகள் புடைக்க
என்னைப் பார்த்து நீ
"தே .................!" என்று கத்திய போது
பதறிப் போனேன் .
நான் "தேவதை" என்று
நிரூபிக்கத் துடித்தேன்.

தவறி மலக் கிடங்கினுள்
முழுமையாய் விழுந்து
எழுந்ததைப் போல
குன்றிப்   போனேன்.

என்னைப் பெற்றவர்கள் வளர்ப்பின்
எச்சத்தின் மிச்சங்களால்
உறக்கத்தில் கூட
உதறி எழுந்தேன்.

காலச் சக்கரம்
சுழன்று ஓடியது.

இன்றும் கோபம் கொப்பளிக்க
குரல் தடிக்க அழைக்கிறாய்
"தே ....................!"
என்னைப் பெயர் சொல்லி
அழைத்தது போல்
இயல்பாய் திரும்புகிறேன்.

17 November, 2012

செல்லம்







நீ இருக்கும் போது

உன்னுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்

அருகில் நீ இல்லாத போது

உன் நினைவுகளுடன்.

அண்டை நாடுகளை மிஞ்சி விடுகிறது

என் மீதான உன் ஆக்கிரமிப்பு


 உன் ஒவ்வொரு வளர்ச்சியையும் பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத படி இம்மாம் தொலைவு போய் இருக்கியேடா செல்லம்

14 November, 2012

உழைப்பின் சின்னம்

அன்றொரு நாள் , நான் சாலையில் கண்ட வயதானவர் தான் இந்த கவிதையின் கருவானவர். நல்லா வந்த மாதிரி இருக்குதேன்னு பத்த்ரிகைகளுக்கு அனுப்பினேன், மெயிலில் தான், ஹார்ட் காப்பி அனுப்புவதில் படு சோம்பேறியான நான் , ஆனால் வந்த பாடாய் இல்லை சரி இருக்கவே இருக்குது வலைப்பூன்னு நினைச்சு போட்டு விட்டேன் . நல்லா இருக்குதா சொல்லுங்க.
                                                                                .........
ஒடுங்கிய தேகம்,
இடுங்கிய கண்கள்,
ஒட்டிய கன்னம்,
கையில் குறுந்தடி,
அரையில் அழுக்கு வேஷ்டி,
கீழே
இரு சிறு துணிப் பொதி,
வயது எண்பதிருக்கலாம் ,
அதற்கு மேலேயும் இருக்கலாம்,

உள்ளிருந்து ஏனத்துடன்
வரும் பெண்ணை
பார்த்திருந்த கிழவரை
என் பரிதாபப் பார்வை
ஊடுருவ
சுற்றுமுற்றும்  பார்த்து
குரல் கொடுத்தார்,
"கோலப் பொடிய்ய்ய்ய்ய்ய்........"

உழைப்பின் சின்னமாய்
இருந்த அவரை
கூசிக் குறுகி பார்த்த நான்
மெல்லச் சொன்னேன் ,
"இங்கிருந்து மூணாவது ,
தெக்கப் பார்த்த வீடு,
வாங்க, வாங்கணும் "
உள்ளுக்குள் சொல்லக் கொண்டேன்
"நாளையிலிருந்து கோலம் போட
பழகணும்"