"ஒரு லட்சமா? யாருட்ட இருக்கு அவ்வளவு பணம் ."
"டேய், இப்படி சொன்னா எப்படிடா? அவர் நல்லா இருக்கிறப்ப உழைச்சதை எல்லாம் நமக்கு தானடா செலவு செஞ்சாரு தனக்குன்னு ஒத்த பைசா எடுத்து வைக்காத மனுஷன்டா அவரு. "
தன் மனைவி மகனிடம் கெஞ்சிக் கொண்டு இருப்பதை வருத்தத்தோடு கவனித்துக் கொண்டிருந்தார் ராஜன்.
"சரி எப்படியாவது ஐம்பதாயிரம் புரட்டறேன் மீதிய தம்பிகிட்ட வாங்கிக்கோ." தந்தையைக் காப்பாற்ற பங்கு போட்டுக் கொண்டு இருந்தான். எப்படியோ உருண்டு புரண்டு பணத்தைப் புரட்டி ராஜனைக் காப்பாற்றி விட்டாள் அவர் மனைவி.
கைத்தாங்கலாக காரில் இருந்து இறக்கி வீட்டிற்குள் கூட்டி வந்தாள். வீட்டிற்கு வந்த பின் தான், தான் செய்த முட்டாள்தனம் முழுவதும் புரிந்தது ராஜனுக்கு . பென்ஷன் தொகை அவரது மருந்துக்கே முழுவதும் செலவாக வீட்டுச் செலவுக்கு தாயை கெஞ்ச வைத்துக் கொண்டு இருந்தார்கள் மகன்கள் இருவரும்.
ஒரு நாள்
"டேய் பெரியவனே, மஞ்ச மசாலா வாங்க கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு போடா"
" போம்மா , உன்னோட பெரிய ரோதனையா போச்சு, எப்ப பாரு கொடு கொடு னு உசிரை வாங்கறே. " தன் இரத்தத்தை பாலாக்கி தந்த தாயை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளி இருந்தான்.
" அவர் வாங்கின தெல்லாம் உங்களுக்கு தானடா கொடுத்தாரு."
"ஆமா கொடுத்தாரு . கொடுத்ததை போல பத்து மடங்கு புடிங்கிடுவாரு போலிருக்கு. "
மகனும் நல்லவன் தான். அப்பா திடீர்னு அஞ்சு லட்சம் கொடுத்ததும் மேல பாதிக்கு கடனை போட்டு ஒரு வீட்டை வாங்கி விட்டான். அவன் நிதி நிலைமை அவனை கல் நெஞ்சக் காரனாய் ஆக்கி விட்டது
ராஜனுக்கு எப்போதுமே வெளிப்படையாய் பேசி பழக்க மில்லை. தன் மனைவி ஒவ்வொரு முறை மகன்களிடம் உதவி கேட்பதும் அவர்கள் உதறிப் போவதையும் கவனித்துக் கொண்டிருந்தார். "உடம்பு கொஞ்சம் நல்லா ஆனதும் மறுபடியும் வேலைக்கு போய் விட வேண்டியதுதான். இந்த பயல்கள்ட வாங்கின பணத்தை எல்லாம் தூக்கி வீசிடணும்." என்று மனதுக்குள்ளேயே மறுகிக் கொண்டிருந்தார். என்ன வேலை பார்ப்பது என்ற சிந்தனையிலே நேரத்தை போக்கி கொண்டு இருந்தார்.
" ஐயா சுகமா இருக்கீங்களா?"
" வாய்யா சிதம்பரம், வியாபாரம் நல்லா போகுதா? "
"ஏதோ போகுது. இப்போ தான் எந்தக் கடை தொறந்தாலும் உடனே தெருவுக்கு நாலு கடை தொறந்து போடுதான். "
"உனக்கு கடைக்கு உதவிக்கு ஆள் தேவைப்படுதாய்யா "
"யாரும் சின்ன பையங்க வேலை தேடிட்டு இருக்காங்களா?"
"இல்லப்பா, எனக்கு தான் நேரமே போக மாட்டேங்குது. உன் கடைக்கு வந்தா வேலையும் பார்த்தாப்பல ஆச்சு நாலு ஆளைப் பார்த்தாப்ல இருக்கும்."
"போங்கையா உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தான்.உடம்ப நல்லா பார்த்துக்கோங்க ஐயா"
வருபவர் போவோரிடம் எல்லாம் ராஜன் தனக்கு வேலை வாய்ப்பு தேடி அழைப்பு விடுவதும் அவர்கள் அதை விளையாட்டாய் நினைத்து சிரித்து பேசி போவதும் வழக்கம் ஆகியது. திடீரென்று அவருக்கு தனது நண்பன் பாரதி, ஹோட்டல் வைத்து இருப்பது நினைவு வந்தது,
"வீட்டுக்குளேயே இருக்கிறது ரொம்ப அசதியா இருக்கு கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன்" என்று சொன்னபடி மனைவியின் சொல்லுக்கு காத்திருக்காமல் வேகமாக நடந்தார்.
ஓட்டமும் நடையுமாக பெண்கள் வேலைக்கு போய் கொண்டு இருந்தார்கள். குழந்தைகளை மூட்டைகளாய் உள்ளே அடைத்து, மேலே அவர்களின் பைகளை அடைத்து ஆட்டோக்கள் விரைந்து கொண்டு இருந்தன. தன்னைத் தவிர எல்லோரும் அவசர கதியில் இருப்பது போல் இருந்தது.
"ராஜன், எப்படியா இருக்கிற?"
குரல் கேட்டதும் தான் ஹோட்டல் பாரதியை தாண்டி தான் சென்று விட்டது புரிந்தது.
"உன்னை பார்க்க தானப்பா வந்தேன்."
"வா உள்ளே வா. "
"தம்பி மாஸ்டர்ட ஸ்ட்ராங் ஆ ஒரு காபி போடா சொல்லு"
"உட்காரு ராஜன், உடம்பு இப்போ எப்படி இருக்கு, பேத்தி என்ன சொல்றா"
"எல்லோரும் நல்லா இருக்கோம். எனக்கு உன் ஹோட்டல்ல ஒரு வேலை வேணும்ப்பா" நேரிடையாக விஷயத்துக்கு வந்தார். அவர் நடந்த விஷயங்களை சொல்ல சொல்ல "இங்க வாப்பா இது உன் ஹோட்டல் " என்று சொல்லி எழுந்து கல்லாவில் அவரை உட்கார வைத்தார். அன்றிலிருந்து தொடங்கியது அவரது பணி. ஆனால் அவருக்கு தான் அந்த வேலை சரிப்பட்டு வரவில்லை. ஒவ்வொரு நாளும் பில் தொகைக்கும் கல்லா தொகைக்கும் கணவன் மனைவி சண்டை தான். ஒரு நாளும் ரெண்டும் ஒத்து இருந்ததே இல்லை. முதல் நாள் பாரதி வியாபார நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்தார். அடுத்தடுத்த நாட்களில் அவர் குரலில் சலிப்பு தெரிந்ததால் துண்டு விழும் தொகையை ராஜன் தன் பையில் இருந்து போடத் தொடங்கினார். ஒரு மாதம் முடியும் போது இது தனக்கு சரிப்பட்டு வராது எனத் தோன்ற நண்பனிடம் சொல்லி நின்று கொண்டார்.
ரொம்ப யோசனைக்கு பிறகு பழகிய வேலை தான் தனக்கு சரிப்படும் என்று முடிவுக்கு வந்தார். தான் வேலை செய்த அலுவலகத்திலேயே மாதம் மூவாயிரம் சம்பளத்துக்கு நிறைய பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறார். அதிகாரி எவ்வளவோ சொல்லியும் தான் வேலையை விட்டு நின்றது நெருஞ்சி முள்ளாய் உறுத்தியது. வேற வழி இல்லை அவரைப் பார்க்க சென்றார்.
"வாங்க ராஜன் நல்லா இருக்கீங்களா?"
"நல்லா இருக்கேன் சார், சார் இடம் ஒரு உதவி கேட்டு வந்தேன். எவ்வளவோ நடந்து போச்சு சார், நான் வேலையை விட்டு இருக்க கூடாது. எல்லாம் கிடைச்சிடுச்சுனு ஒரு நிறைவு கிடைச்சது. இப்போ புரட்டி போட்ட மாதிரி இருக்குது சார், எதுவுமே இல்லாத மாதிரி ஆகிடுச்சு. " கண்களில் நீர் துளிர்க்க உடம்பு லேசாக குலுங்கியது.
"ரிலாக்ஸ் ராஜன் , ரிலாக்ஸ். நாங்கல்லாம் இருக்கோமே எதுக்கு கவலைபடுறீங்க. எல்லாம் சரி செய்திடலாம். இப்போ நான் என்ன உதவி செய்யணும் சொல்லுங்க. "
"எனக்கு நம்ம ஆபீஸ்ல வேலை வேணும் சார், வேற எந்த வேலையும் எனக்கு செய்ய தெரியல. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் எப்படியும் வேலை செய்யணும் சார், என் பையன்கள் எனக்கு செலவு செய்ததை திருப்பிக் கொடுக்கவாவது நான் வேலை செய்யணும் . தயவு செய்து எனக்கு எப்படியாவது வேலை போட்டுத் தாருங்கள்"
அதிகாரியின் கைகளை பிடித்துக் கொண்டு குலுங்கி அழுதார். விருது பெற்றபோது இருந்த கம்பீரம் கலைந்து இறைஞ்சும் போது செத்து விடலாமா என்று இருந்தது. இந்த மரண நிமிடங்கள் யாருக்கு வரக் கூடாது என்று நினைத்துக் கொண்டார்.
"கண்ணத் தொடச்சுக்கோங்க ராஜன், இன்னைக்கே வேலையில சேருங்க. உங்க அனுபவம் எங்கள் சொத்து. அது திரும்ப கிடைச்சதில எனக்கு ரொம்ப சந்தோஷம்.
எல்லாம் சரி ஆயிடும். சந்தோஷமா போய் வேலையை ஆரம்பியுங்க. " என்றார்.
தன் வீட்டில் கிடைக்காத பாதுகாப்பு இங்கே கிடைத்ததாக உணர்ந்தார்.
இனிமேலாவது மனைவி சொல்லும் போது கொஞ்சம் யோசிப்போம்னு நினைத்தபடியே வேலையில் மூழ்கி உற்சாகமானார். "எல்லாம் சரி ஆயிடும்" எவ்வளவு பாதுகாப்பு தரும் சொற்கள் என்று எண்ணிய படியே மாலையில் வீடு நோக்கி மெல்ல நடைபோடத் தொடங்கினார்.
(முற்றும்)
அசத்தல் அருமை அட்டகாசம்
ReplyDeleteஉங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் இருக்கும் போது தொடருங்கள்.. இங்கு வந்து பாருங்கள்..
ReplyDeletehttp://nadodiyinparvaiyil.blogspot.com/2010/07/blog-post_11.html
ரெம்ப நல்லா இருந்தது... உங்கள் அனுபவத்தில் நீங்கள் பார்த்ததை வைத்து எழுதியிருக்கிறீகள் என்று நினைக்கிறேன்... வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉலவு.காம் மிக்க நன்றி.
ReplyDeleteநன்றி நாடோடி தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு, கண்டிப்பாக தொடர்கிறேன்.
ReplyDeleteகதை என்ற பெயரில் யாராவது சிலரையாவது சிந்திக்க வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. அந்த முயற்சி தான் இது. வாழ்த்துக்கு நன்றி.
எங்கள் அலுவலகத்தில் பணிமூப்பு பெற்று செல்பவர்களுக்கு செட்டில்மெண்ட் பணத்துடன் பொது மேலாளர் சொல்லும் அறிவுரை இதுதான். உங்கள் பணத்தை யோசித்து பகிருங்கள் என்பது. கதை அருமை.
ReplyDeleteநன்றி வானம்பாடிகள் ஐயா,
ReplyDeleteபாசம் அதிகமானதால் பகிர்பவர்கள் அதிகம் பாதிப்பு அடைகிறார்கள்.
அளவோடு பாசம் காட்டி அளவோடு பகிர்பவர்கள் உற்சாகமாய் இருக்கிறார்கள்
உடல் நிலை சரியாகும் கட்டத்தை வேகமாக கடந்து விட்டீர்கள் . மற்றபடி நல்ல நடை. யதார்த்தமான கதை. பாராட்டுக்கள்
ReplyDelete"சரி எப்படியாவது ஐம்பதாயிரம் புரட்டறேன் மீதிய தம்பிகிட்ட வாங்கிக்கோ." தந்தையைக் காப்பாற்ற பங்கு போட்டுக் கொண்டு இருந்தான். எப்படியோ உருண்டு புரண்டு பணத்தைப் புரட்டி ராஜனைக் காப்பாற்றி விட்டாள் அவர் மனைவி.
ReplyDeleteஇந்த இடம் , சரியாக சொல்லப்படவில்லை...
எப்படி கஷ்டப்பட்டார், வேலையில் எப்படி போராடினார் என்பதையெல்லாம், காட்சிகளாகவும், வசனங் கலாகவும் காட்டி இருக்கும் நீங்கள், இதை ஒரே ஜம்ப்பாக தாண்டி இருப்பது , அவசரத்தில் எழுதப்பட்டது போல இருந்தது...
அனால், கதை அழுத்தமானது , ஆழமானது ... உணர்வு பூர்வமாக இருந்தது...
இன்னும் விரிவாக எழுதி இருக்கலாம் என்று தோன்ற வைப்பது , உங்கள் எழுத்தின் வெற்றி
:)
ReplyDelete:-/
:-)
:)
ReplyDelete:-/
:-)
:)
ReplyDelete:-/
:-)
சிவாஜி இனிமே இப்படி பின்னூட்டம் இட்டால் அதிரடி நடவடிக்கை எடுக்கப் படும் என்று அன்போடு சொல்லிக் கொள்கிறேன்.
ReplyDeleteசும்மா தான், எப்படி வேண்டுமானாலும் பின் போடலாம். ஏன் ரொம்ப ஆணியோ?