Bio Data !!

03 May, 2023

புத்தகத்தின் பெயர் : ஹவுஸ் புல் ஆசிரியர் : ரா.கி.ரங்கராஜன். பதிப்பகம் : அல்லயன்ஸ் ஆசிரியர் 1500 க்கும் மேற்பட்ட கதைகளையும் 50 நாவல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் மொழி பெயர்ப்பு நாவல்களையும் எழுதி உள்ளார். எழுத்தாளர் சுஜாதா ரா.கி..ர பற்றி கூறியது “சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம் கொண்டவர்” இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளி வ்ந்தன. “ பல புனைவு பெயர்களில் எழுதினாலும் ஒவ்வொன்றுக்கும் நடையிலோ உருவத்திலோ கருத்திலோ தொடர்பு இல்லாத படி பார்த்துக் கொள்வார்” என்கிறார் கல்கி இவரைப் பற்றி.. ஹவுஸ் புல் ஆரம்பமே வித்தியாசமான கதை என்று சொல்லியது. முதல் அத்தியாயம் 4 என்று ஆரம்பிக்கிறது. அதிலிருந்து 4,3,2,1 என்று போகிறது. பைன்டிங் தவறோ என்று எண்ணம் வருகிறது. இல்லை அது வேண்டுமென்றே தரப்பட்டது என்று முன்னுரையில் சொல்கிறார். ராஜ நாராயணன் என்பவர் எழுதிய உயில் அவர் இறப்புக்குப் பின் அவர் குடும்ப நண்பர் கிருஷ்ணப்பாவால் குடும்ப உறுப்பினர் முன்னிலையில் வாசிக்கப் படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் எழுதப்பட்ட வித்தியாசமான இரண்டு உயில்கள்.. முதல் உயில் வாசித்து ஒரு வார காலத்துக்குப் பின் இரண்டாவது உயில் வாசிக்கப் படுகிறது. முதல் உயில் அவர்கள் நடவடிக்கையை கண்காணிக்க எழுதப்பட்ட டிரையல் உயில். கதையில் ஒரு இடத்தில் இப்படி வருகிறது. “ மாதவிக்கு கல்யாணமாகி விட்டதா? பிரிக்கவே முடியாத மூன்று முடிச்சுகள் அவள் கழுத்தில் போடப்பட்டு விட்டனவா? இனி ஆசையுடன் நினைப்பதற்கு கூட உரிமையில்லாத தூய மலராகி விட்டாளா” திருமணமான பெண்ணை ஆசையுடன் நினைப்பது கூட தவறு என்றிருந்த அந்த காலம் இனி வருமா? இப்போ கதைக்கு வருவோம் ஒரு பணக்கார தந்தைக்கு மூன்று குழந்தைகள். தசரதன், மல்லி, காமேஸ்வரி. மூன்று பேருமே பணக்கார சூழலில் வளர்ந்ததால் பொறுப்பற்று இருக்கிறார்கள். தசரதன் ஒரு மருத்துவராக இருந்தாலும் தான் முதலில் கவனித்த ஒரு நோயாளி இறந்து போனதாலேயே மருத்துவ தொழில் செய்யவே அச்சமுற்று இருக்கிறார். மல்லி தான் துணிந்து முடிவெடுக்க வேண்டிய எந்த சூழ்நிலையிலும் கோழையாக தப்பித்தி ஓடுகிறார். காமேஸ்வரி தான் பிறந்த வீட்டின் வசதி கணவன் வீட்டில் இல்லாததாலேயே தன் பிறந்த வீட்டுக்கே அடிக்கடி வந்து விடுகிறார். மூன்று குழந்தைகளுக்குமே நல்ல குணமும் கெட்ட குணமும் இருப்பதாக காட்டுகிறார். யாரையுமே முழுமையான நல்லவனாகவோ கெட்டவனாகவோ காட்டினால் அது புனைவு என்று அப்பட்டமாகத் தெரிந்து விடும். இதில் மூவருடைய குண நலன்களையுமே நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. காமேஸ்வரியுன் கணவர் ஒரு தொழிற் சங்க தலைவர். அவர் ஏழைகளோடு ஏழைகளாக வாழ விரும்புகிறார். படோபடோபம் விரும்பும் காமேஸ்வரியால் அந்த அளவுக்கு இறங்க முடிவதில்லை. ஆனாலும் கணவனை அன்பு செய்வதால் கூட போய் வாழ விரும்பினாலும் அவன் செய்யும் தியாக காரியங்கள் எரிச்சல் மூட்டுவதால் பழைய படி தன் தந்தை வீட்டுக்கே வந்து விடுகிறார். இத்தகைய குழந்தைகள் திருந்தி நல் வழிக்கு வந்தால் மட்டுமே தன் சொத்ஹ்டு அவர்களைச் சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்து இறந்து போகிறார் தந்தை. இவர்கள் மூவரும் கடந்து வரும் பாதையையும் இவர்களை அரவணைத்துச் செல்லும் அத்தைஅமிர்தம்மாளின் அன்பும் தான் கதையை நகர்த்துகிறது. அவர்கண் வீட்டிலேயே ஒரு ஓரமாய் அமர்த்து அங்கே நடப்பதை எல்லாம் பார்த்தது போல் இருக்கிறது கதை வாசித்து முடிக்கும் போது. நான் மிகவும் ரசித்த வரி. “ ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல சுபாவமும் இருக்குது . கெட்ட சுபாவமும் இருக்குது. அதது அவனவனுக்கேத் தெரியும். இல்லைன்னாலும் மத்தவங்க எடுத்துச் சொல்லாம இருக்க மாட்டாங்க. நல்ல சுபாவம்னு சொல்றதை உடும்புப் பிடியாய் பிடிச்சுக்கணும் கெட்ட சுபாவம்னு சொல்றதை தலையை சுத்தி வீசி எறிஞ்சிடணும்.” ஒரு நல்ல அனுபவம் ரா.கி.ரங்கராஜனின் ஹவுஸ் புல்

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!