Bio Data !!

13 January, 2023

நான் கிருஷ்ண தேவ ராயன் ஆசிரியர் ரா.கி. ரங்கராஜன்.

புத்தகத்தின் பெயர் : நான் கிருஷ்ணதேவராயன் ஆசிரியர் : ரா. கி. ரங்கராஜன் பூம்பாவை பதிப்பகம். விலை : ரூ 450/- நான் ஆசிரியருடைய :”அவன்” என்னும் நாவல் வாசித்தேன். அதன் முன்னுரையில் “கிருஷ்ணதேவ ராயன் கதையை சொல்லும் போது “ நான்” என்று எழுதியதால் என் கதையை சொல்லும் போது “அவன்” என்று சொல்கிறேன் என்று இந்த புத்தகத்தை குறிப்பிட்டிருந்தார். அப்பொழுதே இதை படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். பொதுவாக புத்தகங்களை நாம் தேடிப் போக வேண்டியதில்லை. அவை நல்ல வாசகனை தேடி வந்து சேர்ந்து விடும் என்று நினைப்பேன். அதைப் போலவே ஊர்ப்புற நூலகத்துக்கு நான் போனதும் என்னை கை தட்டி அழைத்தார் கிருஷ்ண தேவ ராயர். இந்த நாவலை எழுத ஆசிரியர் கடுமையாக உழைத்திருக்கிறார். கதையில் ஒரு இடத்தில் நட்சத்திரங்களின் நிலையை வைத்து அரசர் எதிரியை வீழ்த்துவது போல எழுதி இருக்கிறார். இதைப் படித்த ஒரு விஞ்ஞானி தான் எழுதும் புத்தகத்துக்கு இவரிடம் உதவி கேட்டாராம். இந்த புத்தகம் அரசரது அரசியல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவரது காதல் மனத்தையும் அரச வாழ்க்கையில் அது படும் அவஸ்தையையும் சொல்கிறது. சுஜாதா அவர்கள் தன் பாராட்டுரையில் தமிழில் தன்மை ஒருமையில் சரித்திர கதை இதற்கு முன் வந்ததில்லை என்கிறார். இலக்கிய ரசனை மிகுந்த திரு கமல ஹாசன் அவர்கள் தான், இப்படி ஒன்றை எழுதும் எண்ணத்தை விதைத்தவர் என்கிறார் ஆசிரியர். இவருடைய முன்னுரையை படிக்கும் போது அவர் எடுத்திருக்கும் பெரும் முயற்சி தெரிகிறது. கதையின் முதல் வரியே “ என் பெயர் கிருஷ்ணன். முன்னோர்களுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக தேவராயன் என்று சேர்த்துக் கொண்டிருக்கிறேன் “ என்று வருகிறது. எந்த வித படோபடோபமும் இல்லாத ஒரு எளிய பேரரசர் என்பது புரிந்து விடுகிறது. அதை உறுதிப்படுத்துவது போலவே பணியாளர்களிடம் சாதாரணமாக உரையாடுவது, குடி மக்களின் துயரம் கண்டு துவண்டு அதைத் தீர்க்க உடனடி முடிவெடுப்பது என பல சம்பவங்கள் வருகின்றன. நாவலை வாசித்து முடிக்கும் போது கிருஷ்ண தேவராயர் மேல் நாம் கொண்டிருந்த மதிப்பு இன்னும் உயரே போயிருப்பதை உணர முடியும். நடனப் பெண்மணி சின்னா தேவி மேல் பெருங் காதல் கொள்கிறார் அரசர். ஆனால் இரண்டு குடும்பங்களுக்கும் முன்னோர் காலத்தில் இருந்த முரண்பட்ட சம்பவத்தால் காதல் வளர்வது பெரும்பாடாய் இருக்கிறது. சின்னா தேவியின் அண்ணன் எதிராஜன் அவர்கள் காதல் தெரிந்த உடனேயே அவளைத் தனியே அழைத்துச் சென்று விடுகிறார். அன்றைய காலத்தின் அவல வழி முறைகள் பலவற்றை கதை நெடுக சொல்லி வருகிறார். அதில் ஒன்று அரண்மனை வளாகத்துக்குள் அரச குடும்பத்தவரை பல்லக்கிலோ அல்லது பணியாளர்கள் தம் தோளிலோ தூக்கிச் செல்வது.அவர்கள் பொதுவாக வாட்ட சாட்டமான நடு வயதுக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் அரசர் அந்தப்புரத்துக்கு போகும் போது ஆண்கள் வர முடியாது என்பதால் ஒரு பெண் அவரை தோளில் தூக்கிச் செல்ல நிற்பாள். உடனடியாக அதை கண்டித்து அவளைத் தன் அந்தரங்க சேவகியாக அமர்த்திக் கொள்கிறார். அவள் பெயர் காயத்ரி. கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரம்.. அவள் ஒரு முக்கிய கடமையை முடிக்க அரசரின் அன்பையும் இளகிய மனத்தையும் பயன்படுத்திக் கொள்கிறாள். அவளிடம் அரசர் ஒரு மென் மனத்துடன் இருப்பது அரசவையின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை.அரசருக்கும் காயத்ரியால் ஒரு காரியம் நடக்க வேண்டி இருக்கிறது. சின்னா தேவியின் இருப்பிடத்தை கண்டு பிடித்துச் சொல்வதாக வாக்குக் கொடுக்கிறாள். அதனாலேயே காயத்ரி அரசரிடம் நெருங்கி பழகுவதை தடுக்க மற்றவர்களால் முடியவில்லை. மற்றொரு வேதனையான வழி முறை ஒன்றையும் குறிப்பிடுகிறார். ஒரு பெண் கெட்டுப் போய் விட்டதாக சந்தேகம் வந்து விட்டால் அவள் ஜாதிக்காரரகள் அவளை ஜாதியை விட்டு விலக்கி வைத்து அதற்கு அடையாளமாக அவள் கையில் ஒரு பெருக்கல் குறி போல் சூடு வைத்து விடுகிறார்கள். காலம் காலமாக கெட்டுப் போவது பெண்ணாக மட்டுமே இருக்கிறாள் அவலம் தான். ஒரு சுவையான பழக்கத்தைப் பற்றியும் சொல்லி இருக்கிறார். ஒவ்வொறு அரசரும் புதிதாக முடியேற்றதும் அதற்கு முன் இருந்த அரசரின் வைர வைடூரியங்கள் இருக்கும் பெட்டியை மூடி பூட்டி விடுவார்கள். அதை அடுத்து வரும் அரசர் பயன்படுத்துவதில்லை. அவை தவிர்க்க முடியாத காலங்களில் மக்களுக்கு பயன்படும். அது போலவே அரசர் ஒரு நாள் உடுத்திய உடையை இன்னொரு முறை பயன்படுத்த மாட்டார். அதை சேர்த்து வைப்பார்களாம். ஏதாவது ஒரு முக்கியமான நபர் வரும் போது அவருக்கு அளிப்பார்களாம். அவர்களும் அரசர் ஒரு முறை உடுத்திய உடை என்பதால் சந்தோஷமாகவும் பெருமையாகவும் வாங்கி உடுத்திக் கொள்வார்களாம்.. அரசரின் அரசவையில் தெனாலி என்பவர் விகடகவியாகவும் விதூஷகனாகவும் இருந்தது நமக்கெல்லாம் தெரியும். அவர் பெயர் ராம கிருஷ்ண கவி என்பதும் அவர் “ பாண்டுரங்க மகாத்மியம்” என்னும் நூலை எழுதினார் என்பதும் எனக்கு புதிய செய்தி. அவர் “ நான் பண்டிதர்களின் மத்தியில் இருக்கும் போது அவர்களுக்குச் சமமாக நடந்து கொள்கிறேன். பாமரர்களுடன் இருக்கும் போது பாமரனாக இருக்கிறேன். வேடிக்கை கதைகள் சொல்கிறேன்” என்கிறார். தெனாலி மேல் நாம் கொண்ட பார்வையே வேறு விதமாக மாறி விடுகிறது. போருக்கு செல்லும் போது போர் வீரர்களின் மனைவி குழந்தைகள் உடன் செல்லும் வழக்கம் இருந்தது. அவர்களின் காப்பாறுவதற்காகவாவது கடுமையாக போரிடுவார்கள் என்பது காரணமாக இருந்தது. கிருஷ்ண தேவ ராயர் அதை மாற்றினார். போருக்கு செல்லும் போது வீரர்களின் குடும்பத்தார் உடன் வரக்கூடாது என்று கட்டளை இட்டார். எனக்கு விளையாட்டு வீரர்கள் வெளிநாடு செல்லும் போது மனைவி உடன் செல்லலாம் , கூடாது என்று இரண்டு கருத்து நிலவுவது நினைவுக்கு வந்தது. ஆண்கள் முக்கிய பணியிலிருக்கும் போது, அவர்கள் மனதுக்கு நெருக்கமானவர்கள் உடன் இருப்பது சாதகமா? பாதகமா? அரசர் சின்னாதேவியைக் கண்டடைந்தாரா? அவளை மணந்தாரா? அல்லது நாட்டின் நலன் கருதி வேறு பெண்ணை மணந்தாரா? அவருடன் இனிமையாக குடும்பம் நடத்தினாரா? தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறதா புத்தகதை தேடுங்கள். கண்டடைவீர்கள்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!