Bio Data !!

20 January, 2023

புத்தகத்தின் பெயர் : வாதி ஆசிரியர் : நாராயணி கண்ணகி “எழுத்து” பிரசுரம் விலை : ரூ 320/- இந்த புத்தகம் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 இன் மூன்றாம் பரிசு பெற்றது.. இந்த ஆசிரியர் எழுதியவற்றுள் நான் வாசிக்கும் முதல் நாவல். இப்பொழுதெல்லாம் இலக்கியத் தரம் வாய்ந்த புத்தகங்களை வாசித்து முடிக்கும் போதே மறுபடியும் முதலில் இருந்து வாசிக்கணும் என்ற எண்ணம் வருகிறது. கண்ணப்பன் என்பவர் தன் கதை சொல்லுவது போல் வருகிறது. அவரை அழைக்க க்யூ பிராஞ்ச் போலீஸ்காரன் சந்திரகுமார் வருகிறார். எதிரில் வரும் மாடுகள் மடியைச் சுமந்து கொண்டு அரக்கி அரக்கி நடப்பதைப் பார்க்கும் போது பால்மடி முதுகில் வரும் படி தயாரித்தாலாவது பரவாயில்லை எப்படியும் கன்று குட்டிகளுக்கு பால் கொடுக்கப் போவதில்லை என் நினைக்கிறார்.அந்த இளகிய மனசுக்காரர். “ ஞாபகம் தான் நாம் பிறந்ததிலிருந்து புலன்களெனும் ஆயுதம் தாங்கி வாழ்நாளெல்லாம் தொடரும் யுத்தங்கலிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உத்தி” இந்த ஞாபகத்தின் வலு வயதானவர்களைக் கேட்டால் தான் தெரியும். சமயத்தில் ஒரு பெயர் நினைவுக்கு வராமல் அவர்கள் படும் பாடு. அதென்ன பெயர்களில் மட்டும் நினைவுபடுத்துதலில் அததனை தடுமாற்றம்..இதைக் கேட்ட போது என் நண்பரின் தந்தை சொன்னார் “ முதலில் மறக்கத் தொடங்குவது பெயர்களும் எண்களும் தான்”என்று. கண்ணப்பனின் சிறு வயது நினைவில் கதை தொடர்கிறது. நடராசண்ணன் தன்னோடு அவனை தான் செல்லும் இடத்துக்கெல்லாம் அழைத்துச் செல்கிறார். நடராசனின் தொழில் அங்கே வரும் கூட்ஸ் ரயில் மேடேறி மெல்ல போகும் போது பாய்ந்து ஏறி அதில் உள்ள அரிசி கோதுமை போன்றவற்றின் மூட்டைகளை கீழே தள்ளி தன் கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுப்பார். சோஷலிச “ வாதி.” கண்ணப்பனின் அம்மா ஒரு முறை சொல்லிக் கொடுக்கிறாள் “ யானை உடம்பை பார்க்காதடா பயந்திருவ. கண்ணப் பாரு. ஆளுங்க கண்ணு மாதிரியே இருக்கும். பாசத்தோட பார்க்கும்” இதை வாசிக்கும் போது எனக்குத் தோன்றியது. ஒரு பிரச்னை கண் முன்னே யானை போல் நிற்கும் போது அதன் அளவைப் பார்த்தால் பயந்து போவோம். பிரச்னையின் கண்ணான அதன் வேர்க்காலை தேடிப் பார்த்தால் அதன் தீர்வு தெரியும். கண்ணப்பனை டீ குடிக்க அழைத்துச் செல்லும் கடையின் சொந்தக்காரர் ராமசாமி. அவர் மனைவி தனம் அவ்வளவு அழகு. எப்போதும் சிரித்துப் பேசிக் கொண்டே இருப்பாள். தன் அழகுக்கு எந்த வகையிலும் ஈடில்லாத மாமாவிடமும் குழந்தைகளிடமும் பாசத்தைப் பொழிந்தாள். அதோடு கூட கண்ணப்பனிடமும். கதையின் முக்கிய கரு ஜமீந்தார்களின் அக்கிரமம். ஒரு பெண் குழந்தை பெரியவளானதும் ஜமீந்தார்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு பச்சைப் பிள்ளைகள் தான் கூடுதல் ஆனந்தம். இரவு கடந்து அந்த குழந்தை “ சீர் குலைந்து சீர் கொண்டு வருவாள். இரண்டு ஜரிகைப் புடவை, இரண்டு ரவிக்கை ஒரு ஜோடி தங்கத்தோடு ஒரு எட்டுக்கல் மூக்குத்தி வெள்ளிக் கால் கொலுசு கண்ணாடி வளையல்கள், சீப்பு குங்குமம் மஞ்சள் . காலம் பூராவும் பெண்ணின் குடும்பம் உழைத்ததற்கும் சிறுமி தன்னை இழப்பதற்குமான சீர்.{என்ன ஒரு கொடுமை. } நடராசனோடு சேர்ந்து இன்னும் சில நண்பர்களும் இதற்கு முடிவு கட்ட துணிகிறார்கள். அவர்களில் ஒருவர் பாலாமணி. திருமணம் செய்யாதவர். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் பினாங்கிலிருந்து பர்மா அகதிகளாய் இந்தியா வந்து சேர்ந்தவர்கள் .பாலாமணி தன் செயல்களை தடுக்கும் தாயிடம் இவ்வாறு சொல்கிறார். “உனக்குப் புரியும். உலகப் போர பாத்திருக்க. கண்ணுக்கெதிர்ல ராணுவம். பீரங்கி துப்பாக்கி சாவு ரத்தம் ஜனங்க உடம்புலருந்து மரம் உலுக்கி காய்ங்க விழற மாதிரி காலு கையி கண்ணுமுட்ட தல ரோட்ல விழுந்து சிதறனதை பாத்து இருக்கே.உனக்குப் புரியும். நானே போராடலைன்னா வேற யார் போராடுவா. இவங்க இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் கொத்தடிமையாவே வதைபடுவாங்க” அநியாயம் அழிக்க அனைவரும் அமைதியாய் வாழ ஒரு சிலர் தியாகம் செய்யத்தான் வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு சிலர் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தான் எடுத்துக் கொண்ட கதை களத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். நான் மிகவும் ரசித்த வரிகள்: “ ஒவ்வொறு மனுசனும் ஒரு சுடு காடுய்யா. வயித்தில எம்முட்டு பொணம் பொதைக்கிறோம். ஆடு, கோழி, பன்னி, மீனு முட்டன்னு வயித்துச் சுடுகாட்டுல எம்முட்டு பொதைக்கிறோம்” “மீனுங்க தூண்டி முள்ளுல புடுச்சா அதுங்களுக்கு தொண்ட வலிக்குமுன்னு வல போட்டுத் தான் புடிப்போம்” “ கடவுள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை எழுதும் போது ஒவ்வொரு வகையான மையினால் எழுதி விடுகிறார். போராளிகள் வாழ்க்கையை ரத்தத்தினாலும் ஏழைகளின் வாழ்க்கையை வியர்வையாலும் ஜமீந்தாரர்களின் வாழ்க்கையை தங்கத்தினாலும் தனம் கனகா டீச்சர் போன்ற பெண்களின் வாழ்க்கையைக் கண்ணீராலும் எழுதி விடுகிறார்”

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!