16 October, 2024
திரைப்படம் பெயர் : நந்தன்
இயக்குநர் : இரா சரவணன்
முக்கிய காதாபாத்திரங்கள் : பாலாஜி சக்திவேல், சசி குமார், ஸ்ருதி பெரியசாமி.
"இந்த நாட்டுக்கு வேணா யார்னாலும் ப்ரசிடென்ட்டா வரலாம். ( நான் கொஞ்சம் மாத்தி இருக்கிறேன்) ஆனா நம்ம ஊருக்கு நம்ம ஜாதி ஆளுங்க தான் ப்ரசிடென்ட்டா வரணும். " படத்தின் முதல் வசனமே இது தான். நிமிர்ந்து உட்கார வைக்கும் வசனம்.
பழைய ப்ரசிடென்ட்டின் படுக்கையில் இருக்கும் அப்பாவுக்கு சேவகம் செய்யும் அம்பேத் குமாரை (சசிகுமார்) வணங்காமுடி என்றொரு கிராமம் ரிசர்வ் தொகுதியானதும் ப்ரசிடென்ட் ஆக்குகிறார்கள் பெயரளவில். தான் என்ன சொன்னாலும் கேட்பான் என்ற நம்பிக்கையில்.
வெள்ளை சட்டை வேட்டியுடன் கிளம்பும் அவரை , அவரை அன்பு செய்பவர்கள் தூக்கிச் செல்லத் தொடங்க , அவர் பையன் என்னவோ ஏதோவென்று பயந்து அவர்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு " எங்க அப்பா வாங்கின பணத்தைக் கொடுத்திடுவாரு. விட்டிடுங்க" என்று அழுகிறான். பொருளாதாரத்தில் அடி மட்டத்தில் இருப்பவர்கள் தேவைக்கு பணம் வாங்குவதும் அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவமானப்படுவதும் குழந்தைகளை எவ்வளவு பதற்றப்படுத்தும் என்பதைச் சொல்லும் காட்சி.
இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது.
தான் ப்ரசிடென்ட் என்பதையே மறந்து முந்தைய ப்ரசிடென்ட்டையே " ப்ரசிடென்ட் ஐயாட்ட கேட்டுட்டு் வரேன்" னு சொல்வதும், அவரை முழுவதுமாக நம்புவதும் , அம்பேத்குமாரின் வெள்ளந்தியான போக்கும் அந்தப் பாத்திரத்துக்கு உரமூட்டுகிறது.
BDO வாக நல்ல ஒரு அரசாங்க அதிகாரியாக வரும் சமுத்திர கனி உள்ளபடி பணத்துக்கு விலை போகாமல் நேர்மையான அதிகாரிகள் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வருகிறார். படத்தின் இறுதியில் ஒரு சஸ்பென்சும் தருகிறார்.
ஸ்ருதி பெரியசாமி . மேக்கப் போட்டு கருப்பாக்கி அம்பேத் குமாரின் மனைவியாக ஆக்கி இருக்கிறார்கள். நகரப் பெண்கள் மட்டுமல்ல கிராமப் புரத்தைச் சேர்ந்த பெண்களும் கணவருக்கு எவ்வளவு பக்க பலமாக இருக்க முடியும் என்பதை இந்தக் கதா பாத்திரம் மூலம் சொல்கிறார்கள். பல இடங்களில் அம்பேத் குமார் எடுக்கும் தீர்க்கமான முடிவுகளுக்குப் பின்னால் அவர் மனைவி இருக்கிறார்.
ரிசர்வ் தொகுதி ஆவதற்கு முன்னால் உள்ள ப்ரசிடென்ட்டாக வரும் பாலாஜி சக்திவேல் அந்த பாத்திரத்துக்கு அட்டகாசமாகப் பொருந்தி இருக்கிறார். எல்லோரும் இருக்கும் இடத்தில் பெருந்தன்மை உள்ளவராகவும், தனிமையில் பழி வாங்கும் குணத்தை வெளிப்படுத்துபவராகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
"பாடல் எக்கி எக்கி பார்க்கிற பூன போல
உக்கி உக்கி பார்க்கிற யானை போல. " பாட்டு ரொம்ப நல்லா இருக்குது. இசை ஜிப்ரான்.
ரசித்த வசனம்.
"வாழ வழியில்லாம போராடலாம் நாங்க சாக வழியில்லாம போராடுறோம்"
இது இப்படி இருந்திருக்கலாமோ என எனக்குத் தோன்றியது. " செத்த பிறகும் வழியில்லாம போராட வேண்டி இருக்குது" அடித்து பெய்யும் மழையூடே அம்பேத் குமாரின் இறந்த பாட்டியை மாற்று சாதியினர் அவர்கள் இடத்தில் எரிக்க விடாததால், குழி தோண்டி தண்ணீருக்குள் பிணம் மிதக்க மிதக்க மண்ணை அள்ளிப் போட்டு மூடும் இடம் கண்ணில் நீரை வரவழைக்கும்.
என்றோ நடந்ததை இன்று ஏன் படமாக எடுக்கணும் என்று வழக்கம் போல கேள்வி உயர்த்த வேண்டாம். பாப்பாக்குடி நிகழ்வு சமீபத்தில் நடந்தது தானே. முற்றுமாய் தீண்டாமை அழிக்கப்படும் வரை இத்தகைய படங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.
04 October, 2024
நட்பென்பது!!
ஒன்று பணம்/ அழகைக் காட்டி நட்பாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அல்லது நட்பாக்கிக் கொண்டு பணம்/ அழகைப் பெறலாம் என்று நினைக்கிறார்கள்.
இந்த இரண்டைத் தாண்டி சிந்திக்கும் போது தான் நல்ல நட்பு கிடைக்கும்.
யாருக்கு வேணும் நல்ல நட்பு என்றும் ஒரு குரல் கேட்கிறது.
முன்பெல்லாம் நண்பனைக் காதல் கவிதை எழுத வைத்து, காதலை கட்டி எழுப்ப முயன்றார்கள். இப்பொழுதோ யாரோ எழுதி 6k like வாங்கிய கவிதையை, ரீல்ஸில் திருடி, மெசென்ஜரில் அனுப்பி , காதல் கோட்டையை கட்டி எழுப்ப முயல்கிறார்கள்.
மொத்தத்தில் நாம தான் கோளாறாய் போனோமோ என எண்ண வைத்து விடுகிறார்கள். உணர்வுகளோடு விளையாடித் தான் செய்யும் தவறு புரியாமல்.
கோளாறாய் போனது நாமல்ல மொத்த காதல் உலகமே என்பது மெள்ளத் தான் புரிகிறது.
விரல் நுனி மரத்துப் போகிறது தேவையற்றதை நீக்கி நீக்கி. தம் எல்லை தெரிந்து பயணிப்பவர்கள் உடன் வரலாம் பல காலம். கடல் மணலில் தேடி முத்துள்ள சிப்பியைக் கண்டடைவது போல் கடின வேலை நல்ல நட்பை அடைவது. ஆனால் கிடைக்கும்.
03 October, 2024
#நாவல் விமர்சனம்
நாவலின் பெயர் : நீர்ப்பரணி
ஆசிரியர் : எம் .எம். தீன்
"படைப்பு" பதிப்பகம்.
விலை : 300 ரூபாய்
முதல் பதிப்பு 2024 .
******
பொதிகையில் பிறந்து ஓடிவரும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் முன்னர் வருடத்திற்கு இருமுறை வெள்ளம் வந்து பேரழிவு நேர்ந்திருக்கிறது. அதன்பின் பல நீர்த் தேக்கங்களும் தடுப்பணைகளும் கட்டி அதைக் கட்டுப்படுத்தி இருந்திருக்கின்றனர். அந்த காலத்தில் வெள்ளம் பாதிக்காத இடங்களில் குடியேற்ற பேட் மாநகரம் , கேம்பலாபாத், பர்கிட் மாநகரம் இவற்றை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர். அதில் கேம்பலாபாத் என்ற ஊரின் வெள்ளக் கதையை "நீர்ப்பரணி" என்ற பெயரில் நாவலாக்கி இருக்கிறார் .
தலைகுனிந்து வயதுக்கு வந்த பெண்ணைப் போலச் சென்று கொண்டிருந்த தாமிரபரணி சமீப காலமாக தன் குழந்தைப் பருவ சேட்டைகளைத் தொடங்கி இருப்பது இவரை இந்த நாவல் எழுதத் தூண்டி இருக்கலாம் என்பது என் யூகம்.
பதிப்பாளர் ஜின்னா அஸ்மி மிக அழகாக சொல்லி இருக்கிறார். "மனிதனுக்குப் பிறந்த மண் என்பது ஆயுள் ரேகையின் ஆரம்பப் புள்ளி" இந்த நாவல் மறைந்து போன வாழ்வின் வரலாற்றைப் புரிய வைக்கும். கொஞ்சம் உருக வைக்கும். நிறைய உறைய வைக்கும்.
நாவல் பகுதி பகுதியாக பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது. 1850 இல் தொடங்கி 1933 வரை 83 வருடங்களின் கதையை ஆறு பகுதிகளாகச் சொல்கிறது.
கதையின் ஆரம்பமே நம்மை உறைய வைக்கும். பொருள்களோடு, உறவுகளோடு மகிழ்ச்சியோடும் தோணியில் ஏறிய புதிதாகத் திருமணமான பெண்ணும் மாப்பிள்ளையும் வெள்ளத்தில் மாட்டி இருவரும் கட்டிப்பிடித்த நிலையில் பெண்ணின் கனத்தப் பட்டுச் சேலை மாப்பிள்ளையின் உடலை சேர்த்துச் சுற்றி, இறப்பிலும் பிணைத்தே வைத்திருப்பதோடு தொடங்குகிறது.
இடையிடையே தரமான விஷயங்களை அழுத்தமாகச் சொல்வது ஆசிரியரின் பாணி.
" எப்போதும் மனிதன் நடந்த கதையை சந்தேகித்து விட்டு, பொய்யான சம்பவத்தை முழுமையாக நம்புவான். உண்மையற்ற கற்பனை போட்ட பொய்க் குட்டிகளை நம்புவதில் வாழ்வு சுவைக்கிறது."
சவராமங்கலம் என்னும் ஊரில் வாழும் மக்கள் சந்தித்த வெள்ளத்தின் அவலம் உள்ளம் உருக்கும் வண்ணம் சொல்லப்பட்டு இருக்கிறது.
பல வகை மரங்கள், பறவைகள் என தான் ரசித்தவற்றை கதையின் நடுவே ஊடுபாவாக சொல்லிவிடுவார். உதாரணமாக "இலவ மரத்தின் பூக்கள் கருப்பாய் உதிர்ந்து கிடந்தன. கருப்புப் பூ, உலகில் இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்தார் . அது தப்பு என்று சொன்னது இலவ மரம்.
சவராமங்கலம் குட்டி கொழும்பு போல மாறிக்கொண்டிருந்தது. கொழும்புவில் விற்கும் பொருட்கள் அடுத்த நாள் ஊரில் கிடைக்கும் என்றானது.
ஒழுக்கரைப்பெட்டி என்றொரு வார்த்தை எனக்கு அறிமுகமானது. மிகவும் கனமான இரும்பினால் செய்யப்பட்ட பெட்டி . அதை நகர்த்த பல பேர் தேவைப்படும் நிலையில் அந்த வெள்ளம் ஒரு வீட்டில் இருந்து, மூன்று பெட்டிகளை அடித்துச் சென்றதை சொல்லும்போதே , நமக்கு வெள்ளத்தின் வீரியம் புரிகிறது.
வட்டலப்பம் செய்முறையை விளக்கும் போது நாவில் நீரூறுவதை நிறுத்த முடியாது. ஒழுக்கரைப் பெட்டி போலவே நான் தெரிந்து கொண்ட இன்னொரு வார்த்தை ஹூருளீன் கன்னிகள். இதற்கு சொர்க்கத்தில் இருக்கும் கற்பழியா கன்னிகள் என்று அர்த்தமாம்.
மோகனா என்றொரு பாத்திரம், பூனைப் பெத்தா என்று ஒரு கதாபாத்திரம் இவை எல்லாம் காலத்தால் நம் மனதில் நின்று என்றும் அழியாதவை.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு உயர்ந்த பகுதியில் இடம் வாங்கித் தர ஏற்பாடு செய்த சாய்பு வக்கீலைப் பற்றி சொல்லும் போது " சில முகங்கள் எப்போதும் எல்லோரையும் கவர்ந்து விடுகிறது அந்த முகத்தின் அடையாளங்களுக்குள் ஒரு கல்மிசம் அற்ற ஜொலிப்பு இருக்கும். ஈர்ப்பு இருக்கும்" என்கிறார்.
அப்படி கேம்பெல் துரையிடம் இருந்து வாங்கிக் கொடுத்த இடம்தான் அவர் பெயரால் கேம்பலாபாத் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாவல் எழுத ஆசிரியர் மேற்கொண்ட மெனக்கிடல் நாவல் நெடுகத் தெரிகிறது.
கண்டிப்பாக நமது நூலகத்திலிருந்து நம் சந்ததிகளும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களைச் சொல்ல கூடிய ஒரு நாவல் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.
ரசித்தது:
" நதியோடு கலப்பவனுக்கு நதியைப் போல வயதில்லாமல் போகிறது"
" வெள்ளம் என்பது எல்லா மழை நீரும் சேர்ந்து என்னை ஆவி சேர்த்துக் கொள்கிறது. அப்போது நான் என்னை மறந்து போகிறேன். என்னைத் தாண்டி என் மேல் சைத்தான் போல ஏறிக் கொள்கிறது. அது செய்யும் கொடுமைக்கு துணையாகிப் போகிறேன்" என்று தாமிரபரணி சொல்வது போல எழுதி இருப்பது.
#திரைப்படம் JUNA FURNITURE
நேற்று "உலக முதியவர்கள் தினம்" அதை முன்னிட்டு எழுத வேண்டிய பதிவு கொஞ்சம் தாமதமாக.
மலையாளப் படங்களைப் போலவே மராத்தி படங்களும் விரிந்த கதைக்களம் கொண்டவை. சமீபத்தில் அமேசான் ப்ரைமில் நான் பார்த்த " JUNA FURNITURE" முதியவர்களிடம் , நாம் ஏற்றி விட்ட ஏணியை எட்டி உதைப்பவர்களாக நடப்பதைக் கண்டிக்கும், கடிந்து காட்டும் படமாக இருந்தது.
இயக்குநர் : மகேஷ் மஞ்சுரேக்கர்.
கோவிந்த் பதக் ( மகேஷ் மஞ்சுரேக்கர்) அறிமுகமாகும் போதே அவர் குண நலன், நமக்கு தெரிந்து விடுகிறது. சந்தையில் துணிச்சலாக ஒரு ரௌடியை எதிர்க்கிறார். வீட்டில் மனைவியுடன் ( மனைவியாக மேத்தா மஞ்சுரேக்கர்) அந்நியோன்யமாக குடும்பம் நடத்துகிறார். தன் ஒரே மகனை பலவித சிரமங்களுக்கு மத்தியில் படிக்க வைத்து ஐஏஎஸ் அதிகாரி ஆக்குகிறார். மகனோ ஒரு பணக்கார வீட்டிப் பெண்ணை திருமணம் முடித்து வீட்டோடு மாப்பிள்ளையாக போய் விடுகிறான்.
திடீரென்று மனைவி உடல் நலமில்லாமல் போக, தன் திருமண நாள் பார்ட்டியை, தன் பெற்றோரை அழைக்காமல் பெரிய பெரிய விஐபிக்களோடு கொண்டாடிக் கொண்டு இருக்கும் மகனைத் தொடர்பு கொள்ள முடியாமல் போகிறது. அன்றே மனைவி இறந்து விடுகிறார்கள்.
தன் மகனின் அலட்சியத்தால் தான் தன் மனைவி இறந்து விட்டார்கள் , தொடர்பு கொண்டிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று கோர்ட்டில் ஒரு பெரிய தொகை ( பெரிய தொகைன்னா அப்படி இப்படி இல்லை ஜென்டில்மென் நாலே முக்கால் சொச்சம் கோடி) கேட்டு வாதாடுகிறார்.
அதன் பின் தான் விறுவிறுப்பான கோர்ட் காட்சிகள். எல்லா பெற்றோரும் தான் பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்று சுலபமாக கடந்து போக முடியாது.எல்லாவற்றிற்கும் மேலானதாக top most priority குழந்தைகளுக்கு பெற்றோர் கொடுக்கிறார்கள். பதிலாக தன்னைச் சார்ந்து இருக்கும் பெற்றோருக்கு least most priority தான் தருகிறார்கள். எவ்வளவு வேதனை.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நெருப்பாற்றில் நீந்தித் தான் தன் பிள்ளைகளை கரை சேர்க்கிறார்கள். ஆனால் கரை சேர்ந்த பிள்ளைகள் தமக்குப் பின்னால் கரை சேர எத்தனிக்கும் பெற்றோருக்கு கை கொடுப்பதில்லை.
காட்சிகள் மிக அழகாக எடுக்கப்பட்டு அடுக்கப்பட்டு இருக்கின்றன. இசைக்கு அதிகம் வேலை இல்லை. அப்படியே நடனத்துக்கும். ஸ்டன்ட்டுக்கும். இதனாலேயே நம் மொழியில் இது போன்ற கதைக் களன்களை சிந்திக்கத் தயங்குகிறார்களோ.
படத்தை முழுவதும் சொல்லிட்டீங்களேன்னு சொல்லாதீங்க. கோர்ட் நிகழ்வுகளும், கடைசியில் வரும் திருப்பமும் கண்டிப்பாகத் தவற விடக் கூடாத ஒன்று.
தவறாமல் பார்க்க வேண்டிய படம்.
( பதிவு கொஞ்சம் நீளம் தான். ஆனால் வாசிக்க எளிதாக் தான் இருக்கும். கண்டிப்பாக தவற விடாதீர்கள்)
Subscribe to:
Posts (Atom)