Bio Data !!

16 October, 2024

திரைப்படம் பெயர் : நந்தன் இயக்குநர் : இரா சரவணன் முக்கிய காதாபாத்திரங்கள் : பாலாஜி சக்திவேல், சசி குமார், ஸ்ருதி பெரியசாமி. "இந்த நாட்டுக்கு வேணா யார்னாலும் ப்ரசிடென்ட்டா வரலாம். ( நான் கொஞ்சம் மாத்தி இருக்கிறேன்) ஆனா நம்ம ஊருக்கு நம்ம ஜாதி ஆளுங்க தான் ப்ரசிடென்ட்டா வரணும். " படத்தின் முதல் வசனமே இது தான். நிமிர்ந்து உட்கார வைக்கும் வசனம். பழைய ப்ரசிடென்ட்டின் படுக்கையில் இருக்கும் அப்பாவுக்கு சேவகம் செய்யும் அம்பேத் குமாரை (சசிகுமார்) வணங்காமுடி என்றொரு கிராமம் ரிசர்வ் தொகுதியானதும் ப்ரசிடென்ட் ஆக்குகிறார்கள் பெயரளவில். தான் என்ன சொன்னாலும் கேட்பான் என்ற நம்பிக்கையில். வெள்ளை சட்டை வேட்டியுடன் கிளம்பும் அவரை , அவரை அன்பு செய்பவர்கள் தூக்கிச் செல்லத் தொடங்க , அவர் பையன் என்னவோ ஏதோவென்று பயந்து அவர்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு " எங்க அப்பா வாங்கின பணத்தைக் கொடுத்திடுவாரு. விட்டிடுங்க" என்று அழுகிறான். பொருளாதாரத்தில் அடி மட்டத்தில் இருப்பவர்கள் தேவைக்கு பணம் வாங்குவதும் அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் அவமானப்படுவதும் குழந்தைகளை எவ்வளவு பதற்றப்படுத்தும் என்பதைச் சொல்லும் காட்சி. இன்னும் கொஞ்சம் அழுத்தமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. தான் ப்ரசிடென்ட் என்பதையே மறந்து முந்தைய ப்ரசிடென்ட்டையே " ப்ரசிடென்ட் ஐயாட்ட கேட்டுட்டு் வரேன்" னு சொல்வதும், அவரை முழுவதுமாக நம்புவதும் , அம்பேத்குமாரின் வெள்ளந்தியான போக்கும் அந்தப் பாத்திரத்துக்கு உரமூட்டுகிறது. BDO வாக நல்ல ஒரு அரசாங்க அதிகாரியாக வரும் சமுத்திர கனி உள்ளபடி பணத்துக்கு விலை போகாமல் நேர்மையான அதிகாரிகள் எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வருகிறார். படத்தின் இறுதியில் ஒரு சஸ்பென்சும் தருகிறார். ஸ்ருதி பெரியசாமி . மேக்கப் போட்டு கருப்பாக்கி அம்பேத் குமாரின் மனைவியாக ஆக்கி இருக்கிறார்கள். நகரப் பெண்கள் மட்டுமல்ல கிராமப் புரத்தைச் சேர்ந்த பெண்களும் கணவருக்கு எவ்வளவு பக்க பலமாக இருக்க முடியும் என்பதை இந்தக் கதா பாத்திரம் மூலம் சொல்கிறார்கள். பல இடங்களில் அம்பேத் குமார் எடுக்கும் தீர்க்கமான முடிவுகளுக்குப் பின்னால் அவர் மனைவி இருக்கிறார். ரிசர்வ் தொகுதி ஆவதற்கு முன்னால் உள்ள ப்ரசிடென்ட்டாக வரும் பாலாஜி சக்திவேல் அந்த பாத்திரத்துக்கு அட்டகாசமாகப் பொருந்தி இருக்கிறார். எல்லோரும் இருக்கும் இடத்தில் பெருந்தன்மை உள்ளவராகவும், தனிமையில் பழி வாங்கும் குணத்தை வெளிப்படுத்துபவராகவும் சிறப்பாகச் செய்திருக்கிறார். "பாடல் எக்கி எக்கி பார்க்கிற பூன போல உக்கி உக்கி பார்க்கிற யானை போல. " பாட்டு ரொம்ப நல்லா இருக்குது. இசை ஜிப்ரான். ரசித்த வசனம். "வாழ வழியில்லாம போராடலாம் நாங்க சாக வழியில்லாம போராடுறோம்" இது இப்படி இருந்திருக்கலாமோ என எனக்குத் தோன்றியது. " செத்த பிறகும் வழியில்லாம போராட வேண்டி இருக்குது" அடித்து பெய்யும் மழையூடே அம்பேத் குமாரின் இறந்த பாட்டியை மாற்று சாதியினர் அவர்கள் இடத்தில் எரிக்க விடாததால், குழி தோண்டி தண்ணீருக்குள் பிணம் மிதக்க மிதக்க மண்ணை அள்ளிப் போட்டு மூடும் இடம் கண்ணில் நீரை வரவழைக்கும். என்றோ நடந்ததை இன்று ஏன் படமாக எடுக்கணும் என்று வழக்கம் போல கேள்வி உயர்த்த வேண்டாம். பாப்பாக்குடி நிகழ்வு சமீபத்தில் நடந்தது தானே. முற்றுமாய் தீண்டாமை அழிக்கப்படும் வரை இத்தகைய படங்கள் வந்து கொண்டு தான் இருக்கும்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!