Bio Data !!

07 November, 2024

ஒரு குடும்ப விவகாரம் யூட்யூபில் நாம் அனேகர் அடிக்கடி பார்த்திருக்கலாம். அது எனக்கு ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பிரச்னையாகத் தோன்றாததால் தான் இந்தப் பதிவு. கணவன் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பில் பள்ளி முதல் மாணவனாகத் தேறி இருக்கிறான். ஏழை மாணவன். நாட்டுப்புறக் கலைஞன். பல வெளிநாட்டு விருதுகள் வாங்கி இருக்கிறார். பல பட்டங்கள் பெற்றவர். பத்தொன்பது வயதில் தான் காதலித்த பெண்ணை நான்கே மணி நேரங்களில் திருமணம் செய்கிறான். இவ்வளவு நன்றாகப் படிக்கும் மாணவன் வாழ்வில் ஒரு உயர்ந்த குறிக்கோளைக் கொள்ளாமல் அவசரப்பட்டு திருமணம் செய்தது. முதல் தவறு. அந்த பெண் அறிமுகம் ஆன நான்கு மணி நேரத்தில் ஒரு பூங்காவில் வைத்து அந்த பெண்ணுக்கு தாலி கட்டுகிறான். இதுவே அவர்கள் இருவரும் எந்த அளவுக்கு நிதானமற்றவர்கள் என்பதைக் காட்டுகிறது. முறையில்லாத இடத்தில் திருமணம். இரண்டாவது தவறு. திருமணமான ஐந்து வருடங்களில் அந்த பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இரண்டு அபார்ஷன்கள். திருமணம், வாழ்க்கை என்பதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளும் முன்பாகவே ஐந்து கருக்கள் உருக் கொள்கின்றன. மூன்று உயிரோடு பிழைக்க, இரண்டு கலைந்து போக, அந்த கணவனைப் பற்றிய தவறான தகவல் வர வர, அந்த பெண் நிதானமிழக்கிறாள். அதன் பின் தவறான முடிவெடுப்பதில் போட்டி போட்டு இருவரும் முன்னேறுகிறார்கள். ஊடகங்கள் கொஞ்சம் அக்கரையோடும் கொஞ்சம் சுயநலத்தோடும் , அவர்கள் இருவரின் பேட்டிகளைப் போடப் போட விரிசல் இன்னும் இன்னும் விரிந்து கொண்டே செல்கிறது. இன்று அந்த கணவன் இனி அவளோடு வாழ முடியாது, தான் படித்து கலெக்டர் ஆகப் போவதாகச் சொல்கிறார். எல்லாம் தலை கீழ். படித்து கலெக்டராகி , அதன் பின் காதலித்து திருமணம் செய்திருந்தால் முறையாக இருந்திருக்கும். ஆரம்ப காலங்களில் இந்த இருவரும் பறை எடுத்து ஆடுவதும், வீடியோக்கள் போடுவதும் அவ்வளவு அழகாக இருக்கும். இன்று இவர்கள் குடும்ப விஷயம் நடுத் தெருவில் நின்று தலை விரித்து ஆடுகிறது. திறமைசாலிகளாக இருப்பவர்கள் காதலில் விழுவது சகஜம். அதில் ஒருவர் துணிவற்றவராய் இருந்தாலே அடுத்த கட்டத்திற்கு நகராது. இருவரும் துணிச்சலோடு இருக்கும் போது அடுத்தடுத்து நகரும். அதே துணிச்சல் தான் அவர்கள் எதையும் செய்து விடுவார்கள் என்ற சந்தேகத்தையும் கொடுக்கும். அந்த சந்தேகம் தான் மொத்த வாழ்க்கையையும் கலைத்து போடும். ஒரு பெண் கடுமையாக நடந்து கொள்கிறாள் என ஆழ அகலமாக அலசி ஆராயும் சமூகம் அதற்கு அடிக் காரணமாக ஆண் செய்யும் தவறை எளிதாகக் கடந்து விடுகிறது. கணவன் மனைவி இருவர் செய்த அடுக்கடுக்கான தவறுகளுக்கு பலிகடா ஆவது குழந்தைகள். திறமையானவர்களாய் இருப்பது பெரிய விஷயமல்ல. தீர்க்கமாய் முடிவெடுப்பதே முக்கியம்.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!