Bio Data !!

02 February, 2023

நான் உறுப்பினராக இருக்கும் “வாருங்கள் படிப்போம்” குழுவிலிருந்து ஒரு ஸூம் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்பொழுது ஊரெல்லாம், உலகமெல்லாம் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கும் CHATGPT ஐப் பற்றி அதில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கும் மைக்ரோ சாப்ட்டின் இயக்குனர் மனோஜ் சிசில் விளக்கம் அளித்தார். எங்கள் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். தற்போது கூகுளில் நமக்குத் தேவையான தகவல்களை search engine மூலம் கண்டு பிடித்துக் கொள்கிறோம். இது இன்னும் பல செயல்களை செய்து விடுகிறது. உதாரணமாக ஒரு மாணவனுக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை வேண்டுமென்றால் அது கட்டுரையாகவே தயாரித்துக் கொடுத்து விடுகிறது. இன்னும் தகவல்களை அதிகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கேற்ற கேள்விகளைக் கேட்டு மெருகேற்றிக் கொள்ளலாம். இது பரிசோதனை முயற்சியில் தான் இருக்கிறது. சிக்கல்கள் வர வர சரி செய்து மெருகேற்றிக் கொள்ளும். இந்த இடத்தில் எல்லோருக்கும் ஏற்பட்ட பொதுவான சந்தேகத்தை நண்பர் ஒளிவண்ணன் கேட்டார். ஒரு வகுப்பின் எல்லா மாணவர்களும் இதை பயன்படுத்தி ஒரு கட்டுரை தயாரித்து ஆசிரியரிடம் கொடுத்தால் எல்லாம் ஒரே மாதிரி இருக்குமே. அது மாணவர்களை மதிப்பிட எப்படி உதவும் என்றார். அதற்கு நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றார் போல் கட்டுரையும் வேறுபடும் என்றார். பதிப்பக துறையில் இதன் பயன்பாடு அதிகம். பிழை திருத்தம் இதன் மூலம் செய்து விடலாம். பிழையில்லாமலும் வேகமாகவும் செய்து முடிக்கும். உலகின் பல நாடுகளின் மொழிகளில் மொழி பெயர்க்கலாம். அது மிகவும் உதவும். பிற நாடுகளின் சிறந்த நாவல்களை தமிழில் மொழி பெயர்த்து படிக்கலாம். தமிழின் சிறந்த படைப்புகளை பிற மொழிகளுக்கு சுலபமாக கொண்டு செல்லலாம்.. இப்பொழுது பயன்பாட்டில் speech to text என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அதில் வருவதை பிழை திருத்துவது மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. ஆனால் CHATGPT யில் ஒரு மொழியின் பல உச்சரிப்புகளையும் சரியாக புரிந்து கொள்ளும் வகையில் வசதி செய்து தரப் பட்டிருக்கிறது என்றார். எனக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். இப்பொழுதே நம் மூளையின் செயல் திறத்தில் மிக குறைந்த பகுதியையே பயன் படுத்துகிறோம் என்கிறார்களே. அதிலும் இப்படி ரெடிமேடாக கேட்பதையெல்லாம் கொடுத்து விட்டால் மூளையின் திறன் இன்னும் குறைந்து விடாதா? என்றேன். ஒரு இயந்திரம் மனிதனின் எண்ணங்களை மேம்படுத்த தான் பயன்படுமே ஒழிய மனிதனுக்கு மாற்றாக முடியாது என்றார். டெக்னாலஜி வளர்ச்சி என்பதை நிறுத்த முடியாது. அதோடு சேர்ந்து நாமும் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்றார். அதற்கு உதாரணமாக புகைப்பட பிலிம் நிறுவனமான கோடக் முழுமையாக அழிவை சந்தித்ததை சொன்னார். எனக்கு கணினி வந்த புதிதில் எங்கள் துறையில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் படிக்க மனமில்லாமல் தெரிந்து கொள்ளாமல் இருந்த போது அவர்கள் சந்தித்த சிரமங்கள் நினைவுக்கு வந்தது. அந்த சமயத்தில் படிப்பறிவில்லாதவர்கள் (illiterates) போல கணினி படிப்பறிவில்லாதவர்களூம் (computer illiterates)இருந்தார்கள்.. இருபது ஆண்டுகளில் எல்லா வேலைகளுக்கும் கணினி அறிவு கட்டாய தேவை என்றாகி விட்டது. எந்த ஒரு வளர்ச்சியிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். அன்னப் பறவை போல நமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள நாம் , முக்கியமாக வளரும் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். அதை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. ஒரு புது விஷயத்தைத் தெரிந்து கொண்ட திருப்தி ஏற்பட்டது.

No comments:

Post a Comment

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!