Bio Data !!

20 November, 2021

 ஜெயமோகனின் "வெண்கடல்" சிறுகதையிலிருந்து."பெண்ணடியாளுக்க வலியைக் கண்டா ஆணாய் பிறந்ததே பாவம்னு தோணிப் போயிரும்." என்றான் குமரேசன். "ஆணுக்கு அந்த மாதிரி வலி இல்லையா" என்றேன். "இல்லையே!இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக் கூதறயா இருந்திருக்குமா? ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே" என்றார் அப்பு அண்ணா. 

இதைப் படித்ததும் என் சிந்தனை. ஆண்களுக்கு சிறு வயதிலேயே வலி தாங்கும் மன வலிமை இருக்கிறது. என் பேரனுக்கு அப்போது எட்டு வயது இருக்கும். நாங்கள் ராஜஸ்தான் வந்த புதிது. குளிர் காலங்களில் காலை பதினோரு மணி போல பார்க்கில் விளையாட விட்டு நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் விளையாடிய பிள்ளை தரையிலமர்ந்து தன் முழங்காலில் முகத்தை புதைத்த படி இருக்கிறான். 

ஏதோ சந்தேகம் வர பக்கத்தில் போய் பார்த்தால் அழுது கொண்டிருக்கிறான். நெற்றியில் புருவத்துக்கு அருகே காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது. பதறிப் போனேன். இதுவே பெண் பிள்ளையாக இருந்தால் இரத்தம் கண்டதும் நடுங்கி பாட்டியிடம் ஓடி வந்திருக்கும்.

ஆனால் அதே குழந்தை வளர்ந்து பெண்ணானதும் எவ்வளவு வலி தாங்குகிறது. பூப்பெய்துவது சிலருக்கு பூப்போல முடிந்து விடும். சிலருக்கோ மாதா மாதம் ரண வேதனை. அருவருப்பு. தனது உடலே நாறிப் போனது போல் ஒரு உணர்வு. பக்கத்தில் இருப்பவர்களுக்கு அந்த நாற்றம் தெரிந்து விடுமோ என்னும் பதைபதைப்பு. 

அடுத்து திருமண உறவு. சுத்தமின்மையை பெரிதாய் எடுத்துக் கொள்ளாத பெண்ணாய் இருந்தால் பரவாயில்லை. அதுவே தூய்மை பேணும் பெண்ணாய் இருந்தால் இரவில் வியர்வை கசகசப்போடு தன் மனம் உடன்படாத நேரத்திலும் தன்னை நெருங்கும் கணவனை சந்தோஷப்படுத்த வேண்டிய வலி. ஈடுபாடு குறைந்ததை  கண்டு பிடித்து விட்டால் "வேற எவனையாவது நினைச்சுக்கிட்டு இருக்கியா" என்னும் கூர்வாள் பாயும். உன் வாடையும் நசநசப்பும் தான் தாங்க முடியலன்னு சொல்லவா முடியும்.

அடுத்து பிரசவம். சொல்லவே வேண்டாம். மறு ஜென்மம். இப்போ ஆப்பரேஷன் பண்ணி சுலபமா குழந்தையை எடுத்திடுறாங்கன்னு சொல்றாங்க. ஆனால் அதற்காக நடு முதுகில் போடப்படும் ஊசி நகரும் போதெல்லாம் உறுத்தும். 

குழந்தை பிறந்து பால் கொடுக்க இயலாமை ஒரு வலி என்றால் ஏதோ காரணங்களால் பால் இருந்தும் கொடுக்க முடியாமை பெருவலி. அதைத்தான் இந்த கதையில் சொல்லி இருக்கிறார். பால்கட்டை எடுக்க அட்டைகளை மாரில் வைத்து கட்டும் ஒரு முறையை சொல்லி இருக்கிறார். அவை வலி தெரியாமல் உறுஞ்சி விடும். பின் அந்த அட்டைகளை அழித்து விடச் சொல்லும் போது அப்பெண் சொல்கிறாள் "ஆற்றிலேயே விட்டிடுங்க. என்ன இருந்தாலும் அவை என் பாலைக் குடித்தவை"  இந்த வரியில் நொறுங்கிப் போனேன் நான். 

வயதாகி தீட்டு நின்றாலும் நிற்பதில்லை வலி சிலருக்கு. எத்தனை குழந்தைகளை தாங்கிய கருப்பை தளர்ந்து நெகிழ்ந்து வெளியே வந்து விடுகிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் கூச்சம். ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் சொல்லும் போது அதை வெட்டி நீக்க வேண்டிய அவசியம். முடியாத சமயத்தில் வெளியே சொல்ல முடியாத வேறொரு தீர்வும் இருக்கிறது.

இப்பொழுது முதல் பாரா படியுங்கள். ஆசிரியர் சொன்னது எவ்வளவு சரியென்று தெரியும். பெண் எவ்வளவு வலியும் தாங்க கூடியவள் அவள் முடியவில்லை என்று சொன்னால் அது மனதின் வலியின் பிரதிபலிப்பு எனப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டின் பெண் முடியவில்லை என்று சொன்னால் சகித்துக் கொள்பவர்களின் சதவீதம் கூட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட பதிவு. 

நாங்கள் இருக்கிறோம் எனச் சிலர் சொல்வீர்கள். அந்த ஒரு சிலர் போதாது. அனைத்து பெண்களுக்குமே அந்த பராமரிப்பு கிடைக்க வேண்டும்.