Bio Data !!

17 April, 2011

எண்ணச் சிதறல்கள் !!

சித்திரை திருநாள் சிறப்பு நிகழ்ச்சியாக "நீயா நானா?" வில் நமது பதிவாளர்களின் பங்கேற்றம். திரு ஜாக்கி சேகர் தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தி தான் நினைத்ததை தெளிவாக சொன்னார். வாழ்த்துக்கள்!! தேனம்மை, தமிழரசி பேசினார்கள். அதிக வாய்ப்பு கொடுக்கவில்லையா, இல்லை கொடுத்ததையும் எடிட்டி விட்டார்களா தெரியவில்லை.

திரு ஜோ அருண் சொன்ன ஒரு கருத்து 'இன்றைய தகவலாக' இருந்தது. 
"கால மாற்றங்களுக்கு ஏற்ப நாம் உண்ணும் உணவு, உடுத்தும் உடை,பழக்க வழக்கங்களில் மாற்றம் வேண்டும். அதை நமக்கு உணர்த்தும் விதமாக கோடை தொடங்குகிறது என்பதை சுட்டும் விதமாக சித்திரை திருநாளை கொண்டாடுகிறோம்." என்றார். அது சரி தான்,ஆனால் இன்று கால நிலைகள் எதற்கும் கட்டுப்படாத குழந்தையைப் போல் அல்லவா கடந்து செல்கின்றன. 

ஒரு செய்தி, நொய்டா வில் இரு பெண்கள், நாற்பதைக் கடந்தவர்கள், திருமணம் ஆகாதவர்கள் ,நன்கு படித்தவர்கள், தன் தந்தை இறந்து, தன் தம்பியும் சண்டை இட்டு பிரிந்ததும் ஆறு மாதங்களாக ஒரு வீட்டினுள் அடைந்து, உண்ணாமல், நீர் கூட அருந்தாமல் நொந்து போன நிலையில் இருந்த தகவல் அறிந்து, போய் கதவை உடைத்து மீட்டிருக்கிறார்கள்.  அதில் ஒரு பெண் மீட்ட ஒரு நாளிலேயே அட்டாக் வந்து இறந்து விட்டாள். அருகில் இருந்த வீட்டில் உள்ளவர்கள் ஆறு மாதங்கள் இப்படி அடைபட்டு இருப்பதை அறியாமல் இருப்பதை காவல் அதிகாரி கண்டித்திருக்கிறார். சமுதாயம் சீர் கெட்டு  சுயநல சமுதாயமாகி விட்டது என்பது எல்லாம் சரி தான். தான் படித்த படிப்பு வாழ்க்கையின் மேடு பள்ளங்களில், அலை மேல் படகாய், சுமுகமாய் செல்ல உதவ வில்லை என்றால் நாம் படித்த படிப்பால் என்ன பயன்? 

இது வரை வாக்களித்தவர்களின் எண்ணிக்கையில் இந்த முறை தான் அதிக சதவிகிதமாம் 77 .4 % இத்தனை பேரை வாக்களிக்க வைத்ததில் மீடியாவின் பங்கு மிக அதிகம். பாராட்டுக்கள் !! ஆனால் இவ்வளவு வளர்ச்சி அடைந்த நாளில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாத அவகாசம் ஏன் என்றால் மேற்கு வங்காளத்தில் , பல கட்டங்களாக நடக்கும் தேர்தல் முடிந்ததும் தான் எண்ண வேண்டுமாம். ஒரு பாமரனாகிய எனக்கு ஒரு சந்தேகம். அப்போ மற்ற மாநிலங்களிலும் மேற்கு வங்காளத்தில் முடியும் நாளை ஒட்டி தேர்தல் நடத்தலாமே? ஒரு மாத காலம் இந்த வாக்குகளை பாதுகாக்க ஆகும் செலவு வீண் தானே? இதன் தத்துவார்த்த நியாயத்தை யாராவது விளக்குங்கப்பா!

சின்னக் குயில் சித்ராவின் மகளின் மரணம் மனதைப் பிசைந்தது. அந்தப் பெண்மணியின் சிரிப்பை இறைவன் தான் மீட்டுத் தர வேண்டும். buzz ல ஆட்டிசம்  உள்ள குழந்தையை பற்றி ஒரு ஐந்து நிமிட படம் பார்த்தேன்.  
இந்தக் குழந்தைகள் சிறப்பாக நேசிக்கப் பட வேண்டியவர்கள்.

13 April, 2011

நாங்க போட்டாச்சு ! அப்போ நீங்க !!

அப்போ நீங்க !!                  பத்திரிகைகளும், வானொலிகளும் உங்கள் வாக்குகளை பதிவு பண்ணுங்க னு பலமுறை வற்புறுத்தி கூறினாலும் வாக்கு போடுவதில் என் நேரத்தை வீண் பண்ண போவதில்லைனு  
பிடிவாதமா இருக்கிறவங்களுக்கு இந்த வேண்டுகோள்: 
                       இது நமது உரிமை. நமக்கென்ன என்று பலரும் இருப்பதால் தான் அரசியல் பாத்திரத்தில் ஒரே தண்ணீர் மயம். நமது கடமையை செய்யாமல் விட்டு காலம் காலமாய் புலம்புவதில் என்ன லாபம். இன்று உங்கள் சுட்டு விரலைக் கரை ஆக்காமல் விட்டால் பிறரை சுட்டி குற்றம் சாட்ட உரிமை அற்றுப் போவீர்கள்.  அதனால் கண்டிப்பாக உங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுங்கள். 
                                வாக்குச் சாவடியில் ரசித்த விஷயங்கள்:
                              தன் முதல் ஓட்டை பதிவு செய்ய வந்திருந்த ஒரு பதினெட்டு "ஒரே பரபரப்பா இருக்குது.இது தான் எனது முதல் வாக்குரிமை. நாம வோட்டு போட்டவங்க ஜெயிக்கணும். " எனக்கு காவல் துறைப் பணியை விரும்பி, காதலித்து ஏற்று, பல கனவுகளுடன் வரும் ஒருவன் நிஜத்தை சந்திக்கும் போது வரும் அதிர்ச்சி ஏனோ வேளை கேட்ட வேளையில் நினைவுக்கு வருகிறது. 
                                           பதிவு சீட்டு வாங்காமல் வாக்கு அளிக்க வந்திருந்த ஒரு தம்பதியர் அவர்கள் பெயர் இல்லை என்ற கோபத்தில் கணவன் "நேரே போய் உன் ரேஷன் கார்டை நீயே வச்சுக்கனு கொடுத்திட வேண்டியது தான. வாக்கு போட முடியல இது எதுக்கு வெட்டியா. இதுக்கு ஒரு  உடை உடுத்தி போயே ஆகணும்னு பிடிவாதம் பிடிச்சி, நேரமெல்லாம் வேணாப் போச்சு. " அர்ச்சனைப் பெற்ற அம்மனாய் அமைதியாய் பின் தொடரும் மனைவி. 
                                        இத்தனைக்கும் நடுவில் முறையாய் வாக்கு பதிவு செய்த பெருமிதம் முகத்தில் படர கை விரல் கரை கலங்கி விடாமல் சுட்டு  விரலை ஒதுக்கிப் பிடித்த படியே ஒய்யாரமாய் செல்லும் பெண்கள் கூட்டம். 
                                       எதை செய்தாலும் முறைப்படி ஒரு ஒழுங்கோடு செய்யும் ஆசிரியர்களை இந்தப் பணியில் நியமித்தது ரொம்ப பொருத்தமானது. நிமிர்ந்து யாரையும் பார்க்காமல் கருமமே கண்ணாக ஒரு ஒழுங்கு முறையோடு பணி செய்து கொண்டிருந்த போலிங் அதிகாரிகள் 
                                           மொத்தத்தில் அழகான அனுபவம். இழந்து விடாதீர்கள் உங்கள் உரிமையை .
                                               வாக்களிக்க மறவாதீர் !!




  

10 April, 2011

தாலாட்டு சுகம்!!

சின்ன குழந்தைகளுக்கு இப்போ தாலாட்டு சுகம் குறைஞ்சிடுச்சு, சில இடங்களில் இல்லைனே ஆகிப் போச்சு
ஆனால் தோளில் சாய்த்து, மெல்லிய தொனியில் பாடும் பாடலுக்கு சுலபமாய் கண்ணயரும் குழந்தைகள், இதற்கு பெரிய கவித்துவம் தேவையில்லை, தாலாட்டும் ராகம் மட்டும் போதும்.
ஒரு சின்ன முயற்சி, என்னுள் இருக்கும் ராகம் உங்களுக்குள் இறங்குதானு கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஆ..ரி ரா..ரி ராரி 
ராரோ !
ஆரி ரா...ரோ 
ரா....ரா....ரோ! (2 )

புன்னகை பூக்கும் 
நிலவே !
உன் புன்னகைப் 
பொருளென்ன !
அசைக்க மறந்த 
காற்றே !
உன் அமைதிக்கு 
பொருளென்ன !

சீறிச் சுட்டெரிக்கும் 
நெருப்பே !
உன் சிலிர்ப்புக்கு 
பொருளென்ன !

ஆழம் மறந்த 
கடலே !
உன் மடங்கலின் 
பொருளென்ன !

எல்லாம் ஒரு நாள் 
அடங்கும் !
அன்று நீயுமில்லை 
நானுமில்லை !

அதற்குள் இந்த ஆட்டம்
எதற்கு ?
அற்ப மானிடனே 
நீ அடங்கு !

ஆ..ரி ரா..ரி ராரி 
ராரோ !
ஆரி ரா...ரோ 
ரா....ரா....ரோ! (2 )




04 April, 2011

நேரமும் மிச்சம் காசும் செலவில்லை !!

@@@ரொம்ப சந்தோஷமா இருக்குங்க உலக கோப்பையை நாம் அடைந்தது. சந்தர்ப்பங்களுக்கு தோதாய் உடனடி முடிவுகள் எடுக்கும் தலைமை இருந்தால் சச்சினே அவுட் ஆனாலும் ஆட்டத்தில் ஜெயிக்கலாம் என்பதற்கு உதாரணம்  உலக கோப்பை இறுதி ஆட்டம். மொத்த இந்தியாவிலும் கோலாகலத்தை பார்த்த வீரர்களுக்கு குறிப்பாய் கேப்டன் டோனிக்கு தான் பட்ட வேதனை எல்லாம் மறந்து போகும், மரத்துப் போகும்.முதல் இருவர் அவுட் ஆனதும், இலங்கை அணியினர் இனி கோப்பை நமக்குத் தான் என்ற எண்ணத்தில்  கோட்டை விட்டனர். இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நான் கற்றுக் கொண்ட பாடம், வெற்றிக் கனி கையில் கிடைக்கும் வரை வெற்றி பெற்றதாய் மமதை கொள்ளக் கூடாது.

@@@ இந்த விளம்பரங்கள்ல என்ன தான் சொல்றதுன்னு கிடையாதா? **** எண்ணெய் விளம்பரத்தில தினமும் பிள்ளைங்களுக்கு இட்லிப் பொடி போட்டுக் கொடுக்கிறதால "சாம்பார் சட்னின்னு செய்ய வேண்டியதில்லை. நேரமும் மிச்சம். காசும் செலவில்லை " னு ஒரு அபத்தமான விளம்பரம். சின்ன குழந்தைகளுக்கு நேரமும் காசும் மிச்சப் படுத்த தினமும் பொடி வைத்து இட்லி கொடுத்தால் அந்த சின்ன வயிறு என்ன ஆகும். விளம்பரதாரர்கள் இன்னும் கொஞ்சம் யோசிக்கலாமே?

@@@ ஆனா ரசிக்கத் தக்க விளம்பரமும் ஒண்ணு இருக்குது. சூர்யா ஜோதிகா ஜோடி, "காபியை தொடாமல் இருக்க முடியல இல்ல " னு ஜோதிகா சொல்ல "இல்ல உன்னை " னு சூர்யா ஹஸ்கி குரலில் சொல்வது ரசிக்க வைக்கும் ரொமான்ஸ். இவர்கள் விளம்பரங்களில் கவிதை எழுதத் தெரிந்தவர்கள். விளம்பரக் கான்வாஸில் ஓவியம் தீட்டத் தெரிந்தவர்கள்.

@@@ சுந்தர ராமசாமி அவர்கள் 1951 முதல் 2000 வரை எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு வாசிக்கும் அனுபவம் கிடைத்தது. பெரிய அலங்காரங்கள் இல்லாமல் ஜோடனைகள் இல்லாமல் சின்ன சின்ன நிகழ்வுகளால், மயிலிறகால் வருடிச் செல்லும் வசந்த காலக் கதைகள். கதைக்களங்கள் புதிது புதிதாய். 

உதாரணமாய்ச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு ரயிலின் ஓட்டுனர் தான் தினசரி செல்லும் பாதையில் சலிப்புற்ற நேரம் , பாதையில் உள்ள ஒரு வீட்டின் முன்புறம் நிற்கும் ஒரு தாயின் கையில் உள்ள குழந்தையிடம் 'நேசம்' வளர்ப்பதும் ,உலர்த்தி இருந்த அந்தக் குழந்தையின் உடை காற்றில் பறந்து வர அதைப் பத்திரப் படுத்தி வைப்பதும், சில காலம் அந்தக் குழந்தை கண்ணில் பட வில்லை என்றதும், தவித்துப் போய் அந்த உடையைக் கொண்டு கொடுக்கும் சாக்கில் அவர்கள் வீடு செல்லும் போது அந்த குழந்தை இறந்து விட்ட செய்தி அறிந்து துக்கத்தோடு திரும்பி மறுபடியும் அதே வெறுமையோடு ரயில் ஓட்டுவதுமாக செல்லும் கதை. 

@@@ இவ்வளவு சொல்லிட்டு இதைச் சொல்லாமல் போனால் நல்லா இருக்குமா? BSNL இல் 'நேசம் ' என்றொரு புதிய பிளான் அறிமுகம் செய்து இருக்கிறோம். Friends and family இல் ஐந்து எண்கள் வைத்துக் கொள்ளலாம். இதன் சிறப்பம்சம் ஐந்து எண்களில் மற்ற ஆப்பரேட்டர் எண்களும் வைத்துக் கொள்ள சம்மதிக்கிறோம். BSNL எண்களை ஒரு நிமிடத்திற்கு பத்து பைசா செலவிலும், மற்ற  ஆப்பரேட்டர் எண்களை நிமிடத்திற்கு முப்பது பைசா செலவிலும் பேசிக் கொள்ளலாம். இந்த ஐந்து தவிர மற்ற எண்கள் நொடிக்கு ஒரு பைசா . 15.06.2011 வரை இந்த ப்ளான் அமலில் இருக்கிறது. பழைய ப்ளானில் இருப்பவர்களும் ரூபாய் 198/- செலுத்தி 'நேசத்திற்கு 'வந்து விடலாம். 

@@@ ஊரெல்லாம் ஒரே தேர்தல் ஜுரம். ஊழல் நர்த்தகிகளின் ஊழித்தாண்டவம் நிறைய பார்த்து விட்டோம். வெயிலுக்கு வெதும்பி விடாமல், காத்திருத்தலின் சுகம் அனுபவித்து, கறை படாத கரங்களுக்கு சொந்தக்காரர்களை தேர்ந்தெடுத்து, உங்கள் விரல்களை கறை படுத்திக் கொள்ளுங்கள். இலவசமாக கொடுக்கும் பொருட்களை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளி உரியவருக்கு உங்கள் ஓட்டு சென்று சேரும்படி செய்யுங்கள். நல்லதே நடக்கும்!!