Bio Data !!

25 August, 2011

எண்ணச் சிதறல்கள் !!

அம்மா ஜெ !
    சித்திரை நன்னாளில் இருந்த தமிழ் புத்தாண்டை தைப் பொங்கலன்று மாற்றினார் கலைஞர். அதற்கு பல இலக்கிய ஆதாரங்களை சொன்னாலும் மக்கள் மனதில் அது பதியவில்லை. இன்று மறுபடியும் சித்திரைக்கே கொண்டு சென்றது சரிதானா என்று எப் எம் மில் மக்கள் கருத்து கேட்கப் பட்டது. ஓரிருவரைத் தவிரை அனைவரும் சித்திரையே சிறந்தது என்றார்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 

 தேனில் நனைந்த பலாவின் குரல் !
       விஜய் டி வி யின் சூப்பர் சிங்கர் தேர்வு இதுவரை பார்க்காதவர்கள்  இருந்தால் இனி கண்டிப்பாக பாருங்கள். இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் இருக்கும் பூஜா , சத்ய பிரகாஷ் இருவருக்கு இருப்பது தான் தேனில் நனைந்த பலாவின் குரல் மூன்றாவது இடத்தில் இருக்கும் சாய் சரண் நன்றாக பாடினாலும் குரல் உயர்த்தி பாடினால் சுதி பிசகும் போது தெரிந்து விடுமே என்றே மெல்லிய குரலில் பாடியதாக தோன்றியது. அதனால் தான் மூன்றாம் இடம் என்று நினைக்கிறேன். எனக்கு பிடித்தது சத்ய பிரகாஷ் குரல் தான், வீட்டுக்காரருக்கு பூஜா. அது என்னவோ ரெண்டு பேருக்கும் ஒரே ஆளை ஒரு போதும் பிடிப்பதில்லை.

அ! ஆ !
         எங்கள் வீட்டு செல்லக் குட்டி ஒவ்வொன்றும் புதிது புதிதாய் படிக்கும் போது   வீட்டில் எல்லோருக்கும் ஒரே கொண்டாட்டம் தான். இப்பொழுது அது புதிதாக செய்வது ஏதாவது பொருளை கையில் வைத்துக் கொண்டு இது ? என்பது நாம் அதன் பெயரை சொன்னவுடன் அதை கீழே போட்டு அடுத்த பொருளை எடுத்து இது?  இது... இது... இது முடிவில்லாத கேள்வி தான்.அடுத்ததாக அ...ஆ... இ ...ஈ ... எனக்கு அதை கேட்டதும் எ...ஏ... பி... பீ  என மதராச பட்டணத்தில் ஆர்யா செய்த ரகளை தான் நினைவுக்கு வந்தது. 

தங்கத்தின் விலை அம்மாடியோ !!
        தங்கத்தின்  விலையை தினமும் செய்தியில் கேட்கும் போது இதயம் ஒரு முறை எம்பி எழுந்து அமர்கிறது. நான் இப்பொழுது ஐம்பொன்னில் செய்த கம்மல், செயின் என இறங்கி விட்டேன். கம்மல் முந்நூறு ரூபாய் , செயின் ஆயிரம் ரூபாய்க்குள். அரை பவுன் விலையில் ஐந்தாறு செட். உடைக்கு பொருத்தமாய். விலை ஏறுவது ராக்கட் வேகத்தில் என்றால் இறங்குவது மாட்டு வண்டியின் வேகத்தில். தங்கம்னதும் பத்மனாபபுரம் கோயில் நகைகள் ஞாபகம் வருது. எல்லாம் பத்திரமா இருக்கா?

அன்னா ஹசாரே !!
   பல டாக் ஷோக்களில்  இந்திய சுதந்திரம் பெற்ற காலங்களில் உள்ளது போல் எங்களை வழி நடத்த தலைவர்கள் இல்லை என இளைய சமுதாயம் பொங்கியது. ஆனால் இன்று லஞ்ச ஊழலை ஒழிப்பதற்காக, பிரதமர் முதல் அனைவரையும்  விசாரணை செய்யும் உரிமை வேண்டும் என்பதற்காகவும் , இன்னும் பல காரணங்களுக்காக உண்ணா விரதம் இருக்கும் அன்னா ஹசாரேயை ஆதரித்து இன்றைய இளைஞர்கள் யாரும் குரல் கொடுத்ததாக தெரியவில்லையே ஏன்? ஏன்? ஏன்?

BSNL இன் சிறப்பு சலுகை !
  .     எல்லாம் சொல்லி BSNL  பற்றி சொல்லாமல் எண்ணச் சிதறல்கள் எப்படி முடிவடையும்  . நாளை அதாவது 26 .8 .2011 முதல் 30 .8 .2011 முடிய ஐந்து நாட்களுக்கு ரூபாய் 100  முதல் 1100  வரை full  டாக் டைம். என்ஜாய் !!

09 August, 2011

சிவசு வாத்தியார் ‍‍ நிறைவு பாகம்

(அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்கு  மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.)

பள்ளிக்குச் சென்றதும் மகன் அவரைக் கண்டு ஓடி வந்தான். " அப்பா , எங்களுக்கு ஒரு புது சார் வந்து இருக்காங்க. அவர் உங்கள்ட தான் படிச்சாராம். உங்களை ரொம்ப புகழ்ராருப்பா.எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வாங்கப்பா அவரை பார்க்கலாம். "
மகன் பெருமையாக ஓடி சென்று அழைத்து வந்தான். வந்தது ஐயாவின் பழைய மாணவன். "இன்று வரை தன் வாழ்வின் எந்த அடியும் அவரை நினைத்து தான் எடுப்பதாகவும் எந்த இடத்திலும் தவறியதில்லை என்றும், தன்னைப் போல் அவருடைய பல மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் தான் எடுக்கும் வகுப்பு மாணவர்களிடம் அவரை குறிப்பிடத் தவறியதில்லை" என்றும் பேசிக் கொண்டே சென்றார். 

ஆசிரியர் ஒரு வித மயக்க நிலைக்கு போய் விட்டார். தான் எடுக்கும் எந்த முடிவும் தன்னை மட்டும் பாதிப்பதில்லை இன்னும் எத்தனை பேரை?ஓய்வு பெரும் வரை யாவது.  வெளி உலகுக்காக இந்த வாழ்க்கை வாழ்ந்து தான் ஆக வேண்டும். முடிவு எடுத்த பின் மகளை அவசர அவசர மாகப் பார்த்து விட்டு ஊர் போய் சேர்ந்தார். அதன் பின் இருவரும் நடை பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். 

அவரது மனம் சஞ்சலப் படுவதை புரிந்து கொண்ட சந்துரு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக் கொண்டான். அவளைப் பற்றி பிறர் மூலம் பல விஷயங்களை அறிந்து கொண்டு அவளே தன்னிடம் சொன்னது போல் சிவசு ஐயாவைப் பார்க்கும் போதெல்லாம் சொன்னான். தன் மனைவியிடம் வெளிப்படையாக பேசி இருந்தால்  சுலபத்தில் சரி செய்யக் கூடிய விஷயத்தை இடியாப்பச் சிக்கலாக்கினார். அவளிடம் பேசுவதையே முற்றிலுமாக குறைத்துக் கொண்டார். 

சியாமளாவின் நிலையோ பரிதாபமாக இருந்தது. பள்ளி விழாவன்று சொன்ன சொல்லுக்காகத்தான் இந்த தண்டனை என்று நினைத்துக் கொண்டாள். அங்கே மேலும் மேலும் அக்னி சேர்ந்து கொண்டே இருப்பதை அவள் அறியாமலே போனாள். அவரது வைராக்கியம் அவள் அறிந்த ஒன்று என்பதால் அவரிடம் பேசிப் பார்க்கும் தைரியம் இல்லாமல் போனது. திரௌபதியின் ஒற்றைச் சிரிப்பு ஒரு இதிகாசத்தையே உருவாக்கியது. இவளது ஒற்றை சொல் இவள் வாழ்வையே பறித்தது. 

 சிவசு வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதற்கு மேல் பிறருக்காக வாழ வேண்டிய அவசியம் இல்லை. இந்த பாரம் நெஞ்சில் கருங்கல்லாய் இறங்குகிறது. ஒரு வக்கீலைப் பார்த்து தன் பிரச்சினையை பட்டும் படாமலும் சொல்லி விட்டார்." இப்படியே மிச்ச நாளையும் போக்கி விடலாமே . இந்த வயதில் விவாகரத்து தேவையா" என்ற அவரின் கேள்விக்கு " நான் மட்டும் இந்த வாத்தியார் தொழில் பார்க்காமல் இருந்தால் என்றோ அவளை விட்டு பிரிந்து இருப்பேன். அவளாவது சந்தோஷமாய் இருந்திருப்பாள். என்னைக் கட்டிய பாவத்துக்கு இவ்வளவு நாள் என்னோட இருந்தது போதும். மிச்ச நாளாவது அவள் விருப்பப்படி இருக்கட்டும். சந்துரு சொன்னதெல்லாம் வைச்சு பார்த்தா எந்த வயசிலும் அவளை ஏத்துக்கிடுவான் போலத் தான் தெரியுது. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்களேன்" என்று பரிதாபமாகச் சொன்னதும் வக்கீலும் சம்மதித்து விட்டார்.

சியாமளா வக்கீலிடம் இருந்து வந்த நோட்டீஸ் ஐப் பார்த்து பதறிப் போனாள். ஐயா பேசாமல் இருந்தாலும் மிச்ச நாட்களை அவரைப் பார்த்துக் கொண்டே ஓட்டி விடலாம் என்று இருந்தாள். இது பேரிடி. வருடங்கள் பல கடந்ததால் அவளால் அவரிடம் பேச முடிய வில்லை. தயங்கி தயங்கி அவர் அருகில் போய் பேசுவதற்கு நின்றாலும் அழுகை தான் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவரோ அதற்குள் இடத்தை காலி செய்து விட்டு இருந்தார். இப்படிப்பட்டவர்கள் தன்னைப் போல் வைராக்கியம் யாருக்கு உண்டு என்ற வெட்டி ஜம்பத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு மீதி அனைத்தையும் இழக்கிறார்கள். சியாமளா இந்த பிரச்சினையை யாரிடமும்  கொண்டு செல்வதாய்  இல்லை. நேராக குடும்ப வழக்கு நடக்கும் இடத்திற்கே சென்று என்ன ஆனாலும் தான் அவரை பிரிவதாக இல்லை என்றும் ஆயுள் முடியும் வரை அவருடனே வாழ விரும்புவதாகவும் அழுத்தம் திருத்தமாக சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். 

அவள் எடுத்த முடிவை பற்றி அறியாமல்கொளுத்தும் வெயிலுக்கு விரித்து பிடித்த குடையும், கால் தடுக்காமல் வேட்டியின் ஒரு முனையை வலது கையின் இரு விரல்களால் தூக்கிப் பிடித்த படி மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தார் சிவசு  வாத்தியார்.அவரது நிலை கண்டு கோபித்து சிவந்தது போல் எழுந்து நிற்கிறது கோர்ட் கட்டடம் " நீங்கள் நினைப்பது போல் எனக்கும் சந்துருவுக்கும் எதுவும் இல்லை நான் உங்களுடனே வாழ விரும்புகிறேன் " என்று அவள் சொல்லி விட மாட்டாளா என்று மனதின் ஒரு ஓரம் அவருக்கு முனங்கிக் கொண்டு தான் இருந்தது. 


(முற்றும்)


(இதனால் யாவருக்கும் சொல்ல விரும்புவது: சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும். பதிவர் ஒருவரின் விருப்பத்திற்காக மனச் சிக்கலை கொண்டு ஒரு கதை எழுதிப் பார்த்தேன். வெற்றி பெற்றேனா தெரியவில்லை. ஒரு நல்ல செய்தியை சொன்ன நிறைவிருக்கிறது. முடித்து விட்டேன் நாடோடி, நன்றி ) 

08 August, 2011

சிவசு வாத்தியார் -Part III

இத்தனை ஆண்டுகளாக தன்னை ஒரு ஜடப் பொருளாக நடத்திய ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக இதற்க்கு மட்டும் எங்கிருந்து வந்தது உரிமை என்று கோபப் பட்டவளாக முகத்தை நேருக்கு நேர் பார்த்த படி சொன்னாள்" நானும் அவரும் காதலித்தோம். அவரை மணந்திருந்தால் அந்த மேடையில் இருக்க வேண்டியவள் தான் உங்களை மணந்து இப்படி அல்லாடிக் கொண்டு இருக்கிறேன். ஒரு பிச்சை எடுப்பவளுக்கு கிடைக்கும் சந்தோஷம் கூட இல்லாமல் அவளை விட கேவலமானவளாக இருந்து கொண்டு இருக்கிறேன். ..." இன்னும் என்னன்னவோ பொரிந்து தள்ளினாள். கண்களில் தண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.

இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்....)

அன்று இரவு அதிர்ச்சியிலும் , கலக்கத்திலும் கடந்தது.
அடுத்து வந்த இரு நாட்களும் ஒரு வித அழுத்தமான அமைதியில் அடர்ந்து இருந்தது.

சிவசு ஐயா பல விதமான குழப்பத்தில் இருந்தார். "இத்தனை ஆண்டுகள் இருவரும் தொடர்பில் இருந்திருப்பார்களோ? இல்லையென்றால் அவளுடைய என்றுமில்லாத அலங்காரத்திற்கு வேறு அர்த்தம் தெரியவில்லையே? இவளை விவாகரத்து செய்து விட வேண்டியது தான். பிள்ளைகள் இருவரும் மதுரையில் தான் படிக்கிறார்கள். இவளில்லாமல் அவர்களை சமாளித்து விட முடியாதா? " என பல விதமான எண்ணச் சூழல்களில் சிக்கிச் சுழன்று கொண்டு இருந்தார்.

சியாமளா வேறு விதமான சிந்தனையில் சிக்கிக் கொண்டு இருந்தாள். அந்த நிமிட கோபத்திலும், வெறுமையிலும், அவனைப் பார்த்த சந்தோஷத்திலும் சொல்லி  விட்டாளே ஒழிய வேறு எந்த விதமான அந்தரங்க ஆசையும் அவளிடம் இல்லை. தன் மனம் அவனிடம் செல்வதைக் கூட, தன் கணவனிடம் உண்டான அன்பை அதிகரித்துக் கொண்டு தான் தடுக்க வேண்டும் என முடிவெடுத்தாள். ஆனால் அவரது இறுக்கம் அவளுக்கு மூச்சு முட்டியது. . எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் தானாக சென்று பேசி சுமுகம் ஆக்கிக் கொள்ளும் திறமை படைத்தவள் தான். ஆனால் நெருங்கி இருக்க வேண்டிய சிவசு ஐயாவிடம் அவளால் நெருங்க முடியவில்லை. இயல்பான நேரங்களில் பேச முடிகிறதே தவிர இறுக்கமான நேரங்களில் அவரது மௌனம் அவர்களுக்கிடையே ஒரு அரணாய் நின்று விடுகிறது.

அன்று இரவு அவர் படுத்ததும் மெல்ல பக்கத்தில் போய் அவர் காலை பிடித்து விட போனாள். விருட்டென்று இரு கால்களையும் சுருக்கிக் கொண்டவர் போர்வையை இழுத்து தலை வரை மூடினார். " என்னை மன்னிச்சிருங்க, ஏதோ ஒரு வேகத்தில சொல்லிட்டேன். மற்றபடி நான் வாழ்ற வாழ்க்கையில சந்தோஷமாத்தான் இருக்கேன். " இன்னும் எவ்வளவோ பேச நினைத்தாலும் அழுகையும் துக்கமும் சேர்ந்து தொண்டையை அடைக்க வெறும் தரையில் தலையணையை தூக்கி போட்டு படுத்து கொஞ்ச நேரத்தில் தூங்கியும் போனாள்.

அடுத்து வந்த நாட்களில் அவர் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது போல் இருந்தாலும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அவரது தேவைகளை ஒற்றை வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் பொறுமை காத்துக் கொண்டு இருந்தாள். அவர்களுக்கிடையே தாம்பத்தியம் சரியாக இருந்திருந்தால் எவ்வளவு பெரிய பிரச்னையும் பனி போல் விலகி இருக்கும். அதற்க்கு வழி இல்லாமல் இருந்தது.

கொஞ்ச நாள் சியாமா தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்று தவிர்த்து ஒரு வாரம் கழித்து சந்துரு அவர்கள் வீட்டிற்க்கு புறப்பட்டான்.அதிகம் பேர் கண்ணில் படாமல் தப்பலாம் என்று மதியம் மூன்று மணியைத் தேர்ந்தெடுத்தான். டிரைவரிடம் அவர்கள் வீடு எங்கே இருக்கிறது என்று ஏற்கனவே கேட்டு வைத்து இருந்தான். வீட்டிற்க்கு கொஞ்சம் தள்ளி உள்ள சந்தில் காரை பார்க் செய்து வந்து கதவில் மெல்ல தட்டினான்.
கதவைத் திறந்த சியாமா அதிர்ச்சி ஆகி சுதாரித்துக் கொண்டு " வாங்க" என்றாள்.

' ரொம்ப வருஷங்களுக்கு பின்ன ஸ்கூல் இல உன்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டேன். ஷ்யாம். என்னால உன்னை மறக்க முடியல. நீயும் நிச்சயம் அப்படித்தான் இருந்திருப்ப. அது உன் பார்வையிலே தெரிஞ்சது. என்னடா, ஒண்ணுமே பேசாம இருக்கிற? ' அவசரம் பிடித்தவன் அவள் என்ன நினைக்கிறாள் என்பதே தெரிந்து கொள்ளாமல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவோடு பேசிக்கொண்டிருந்தான்.

அவன் இப்படி நேரிடையாக விஷயத்துக்கு வந்ததும் அவனை முகத்தில் அடித்தாற் போல் விரட்டுவதா இல்லை மென்மையாக புரிய வைத்து அனுப்புவதா என்ற குழப்பத்தில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

'என்ன ஷ்யாம் என்னைப் பார்த்த சந்தோஷத்தில உனக்கு பேச்சே வரல்ல போல் இருக்குது. இப்போ நீ மட்டும் ம்ம்ம் னு சொல்லு ஐயா, என்ன கேட்டாலும் கொடுத்து உன்னை என்னோட கூட்டிட்டு போய்டுறேன். '

சேறு எனக் கண்டு விட்டோம் என்றால் தன் மீது தெறித்து விடாமல் ஒதுங்கிச் செல்வது தான் புத்திசாலித்தனம். மீறிக் கோபத்தில் அதனை உதைத்தால் அசிங்கப் படப் போவது தான் தான் என்பதை புரிந்தவளாய் சரம் சரமாய் வார்த்தைகளை கோர்த்து அவனை அழுத்தமாகப் பார்த்த படி சொன்னாள். " அவுக இல்லாத நேரத்தில நீங்க இங்க வரது எனக்கு பிடிக்கல. அதுவும் இந்த மாதிரி பேசுறது சுத்தமா பிடிக்கல. " என்றாள். அப்போது தான் தன்னை அவள் அமரக் கூட சொல்லவில்லை என்பது உரைத்தது.
"இல்ல ஷ்யாம், " என்று இழுத்தான். அவள் இறுக்கமான முகத்துடன் வாசலைப் பார்ப்பதைப் பார்த்து முகம் தொங்கிப் போக வெளியேறினான்.

பள்ளியில் மனம் ஒரு நிலைப் படாமல், சிவசு ஐயா வீட்டுக்கு போய் ஒரு தூக்கம் போட்டால் நல்ல இருக்கும் போல் தோன்ற அரை நாள் விடுப்பு சொல்லி வந்து கொண்டு இருந்தார். அவரை தூரத்தில் பார்த்ததுமே மனதுக்குள் ஒரு திருட்டுத்தனம் எட்டிப் பார்க்க தனது தொங்கிப் போய் இருந்த முகத்தை இஸ்திரி செய்தது போல் மாற்றிக் கொண்டு முக மலர்ச்சியுடனும் துள்ளல் நடையுடனும் அவரைப் பார்க்காதது போல் சென்று காரில் ஏறி புறப்பட்டான் சந்துரு .

அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்க்கு மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.

(இன்னும் வரும் )

07 August, 2011

சிவசு வாத்தியார் -Part II

(பாகம் ஒன்றிலிருந்து கொஞ்சம் ......

எண்ணி விடலாம் சேர்ந்து இருந்த நாட்களை. அப்படிப் பட்ட அற்புதமான நாட்களில் உருவானது தான் இரண்டு முத்துக்கள்.

மற்ற சந்தர்ப்பங்களில் அவளை ஒரு மனுஷியாக மதித்து அவளது ஆசா பாசங்களுக்கு முக்கியத்துவமே தரத் தோன்றியதில்லை. இயல்பிலிருந்து தான் விலகி இருப்பதாகவே தோன்றியது. சிந்தித்த படியே கண் அயர்ந்து விட்டார். "ஐயா, வீட்டுக்கு போகலிங்களா ஐயா ?" என்று பள்ளி யின் பணியாள் வந்து குரல் கொடுத்ததும் தான் விழித்தார்.

மறு நாளில் இருந்து தனது வாழ்க்கையில் இடி மின்னல் புயல் வரப் போவதை உணராமல் வீட்டுக்கு கிளம்பினார்.)
இனி தொடருங்கள் .... 

மறு நாள் மாலை பள்ளி ஆண்டு விழாவுக்கு புறப்பட்டுக்  கொண்டு இருந்தார்கள்.
"சியாமா! சீக்கிரம் மா . விழா தொடங்கிடும். "
"இதோ "

என்றபடி மெல்லிய ரோஜா வண்ண புடவையில், எடுப்பாக தெரியும் படி கருக மணி மாலையை தவழ விட்டு  தலையில் வைத்த பூவை சரி செய்த படியே வந்தாள். அவளது நீள முடிக்கு நீளமாக பூ வைத்தால் தான் அழகு. என்னமோ வைப்பதில்லை. ஆனால் இன்று எல்லாமே ஸ்பெஷல் தான்.

ஒரு நிமிடம் அவளைப் பார்த்ததும் சிவசு ஐயாவுக்கு கட்டி அணைத்து கன்னத்தில் முத்தமிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் அதெல்லாம் செய்ய வேண்டிய வயதில் செய்ததில்லை. இன்று செய்ய வேண்டும் போல் இருக்கிறது. வெட்கம் தடுக்கிறது.

"என்ன மனுஷன்! ஒரு பாராட்டு வாய் வார்த்தையாய். இல்ல சின்ன ஒரு இமை உயர்த்தல். மரக்கட்டை போல வாழும் இந்த மனிதரிடம் இதை எல்லாம் எதிர்பார்ப்பது என் தவறு." என்று எண்ணியபடி சியாமா தன் விரல் நுனிகளால் தலையில் லேசாக தலையில் தட்டிக் கொண்டாள்.

அதைக் கவனித்து விட்ட ஆசிரியர் " என்னம்மா எதையாவது மறந்திட்டியா? " என்றார்.
" ஆமா ... எல்லாமே மறந்து போச்சு" என்று முணுமுணுத்த படி " வாங்க போகலாம்" என்றாள்.

பள்ளி பக்கத்தில் தான் என்பதால் நடந்தே போய் விடுவார்.  ஸ்கூட்டர் ஒன்று வைத்து இருக்கிறார். அந்த காலத்திய வெஸ்பா. எப்போவாவது எடுப்பதுண்டு. எப்பொழுதும் துடைத்து துடைத்து அழகு பார்ப்பது தான் . இப்படித்தான் சிலர், உபயோகித்தால் வீணாகி விடும் என்று ஒரு பொருள் உருவானதன் பயனையே வீணாக்கி விடுகிறார்கள்.

இன்று இவ்வளவு அலங்காரத்துடன் அவருடன் நடந்து செல்ல கூச்சமாக இருந்தது. இன்றாவது வண்டியை எடுப்பாரானு எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம். "பக்கத்தில தான எட்டி நடை போட்டா பத்து நிமிஷம் தான் " என்ற படி வேகமாக நடக்கத் தொடங்கி விட்டார். இவ்வளவு அலங்காரத்தோட அவரை பிடிக்க ஓட்டமும் நடையுமாக செல்வது அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.

ஆனாலும் இந்த அலங்காரத்திற்கு காரணம் உண்டு. ஆண்டு விழாவுக்கு தலைமை ஏற்க வருவது ஒரு பெரிய மில் அதிபர் சந்திரசேகரன் என்று சொல்லி இருந்தார். அது தன்னை கல்லூரி நாட்களில் விழுந்து விழுந்து காதலித்த சந்துரு வாக இருக்குமோ என்ற நப்பாசை தான் காரணம். அவனோட அப்பாவும் மில் தானே வைத்து இருந்தார். ஆனாலும் அவனோட மாமரத்து நிழலில பேசிக்கிட்டு இருக்கும் போது அவனோட  அப்பா  புல்லேட்ல வந்து இருவரையும் மிரட்டி அவனை இழுத்து வண்டியில போட்டுக்கிட்டு போன பிறகு அவனைப் பற்றிய தகவலே யாரும் சொல்லவில்லை. சியாமாவும் ஒரு காலத்துக்கு அப்பறம் கல்யாணத்தை தள்ளிப்போட முடியாம இந்த  சிவசு வாத்தியாருக்கு கழுத்தை நீட்டி காலமும் ஓடி போச்சு.

பள்ளிக்கு போனதும் சியாமளாவை ஒரு இடம் பார்த்து அமர வைத்து விட்டு வாத்தியார் தன் வேலைகளைப் பார்க்க போய் விட்டார். சியாமளாவுக்கு படபடப் பாக இருந்தது. கார்கள் விரையும் சத்தம் கேட்டதும். காரிலிருந்து இறங்கியது அவனே தான். வருடங்கள் ஓடியதால் கொஞ்சம் பூசினார் போல் இருந்தான். நிறம் கொஞ்சம் கூடி இருந்தது, சியாமளாவைப் பார்த்ததும் கண்கள் விரிய புன்னகைத்தான். அதைப் பார்த்த தலைமை ஆசிரியர் " எங்கள் பள்ளி சிவசு ஐயாவோட மனைவி. " என்றார்.

அவன் இரு கரம் கூப்பி வேகமாக நடந்தான். கொஞ்ச தூரம் போனதும் பின்னால் இருப்பவரிடம் எதோ கேட்கப் போவது போல் திரும்பி அவளைப் பார்த்தான். அவள் தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்ததும் ஒரு திருப்தியோடு மேடை ஏறினான்.

இந்த நாடகத்தை சிவசு வாத்தியார் தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டு இருந்தார். அவள் அதிகப் படியான அலங்காரமும், படபடப்பும் சந்திர சேகரனின் நடையில் இருந்த கர்வமும் ஏதோ சொல்வது போலவும் இருந்தது.தனது எண்ணம் தவறாகவும் இருக்கலாம்.  பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி தொடங்கியது. இடை இடையே அவர் சந்துருவையும் சியாமா வையும் பார்க்கும் போது இருவரது பார்வையும் நேர்கோட்டில் இருப்பது போலவே பட்டது. சந்துரு பேச எழுந்தவன் "உங்கள் எல்லோரையும் பார்த்ததில் நான் இன்று ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் . இந்த பள்ளியின்  ஆண்டு விழாவுக்கு தலைமை ஏற்பதை  என் பாக்கியமாக கருதுகிறேன். ஒரு பொருளை தொலைத்த இடத்தில தான் தேட வேண்டும் என்பார்கள் ஆனால் நானோ எங்கள் ஊரில் தொலைத்த என் சந்தோஷத்தை உங்கள் பள்ளியில் கண்டு எடுத்து இருக்கிறேன். பள்ளியில் ஒரு கட்டடம் கட்ட டொனேஷன் வேண்டும் என்று உங்கள் தலைமை ஆசிரியர் கேட்டு இருந்தார். அந்த கட்டடத்தின் மொத்த செலவையும் நான் ஏற்றுக் கொள்கிறேன்...."
அரங்கம் கை தட்டலால் அதிர்ந்து கொண்டு இருந்தது.

சிவசு ஐயா சியாமளாவை பார்த்தார். அவள் கற் சிலை போல் நின்றிருந்தாள். பயமும் பதற்றமும் அவருக்குள் ஊறியது. தேவை இல்லாத கற்பனை என்று ஒதுக்க முயன்றாலும் நடப்பவை எல்லாம் அவர் சந்தேகத்தை ஊர்ஜிதப் படுத்துவதாகவே இருந்தது. நிகழ்ச்சி முடிந்து ஆசிரியருக்கும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவருக்கு அதில் கலந்த கொள்ள விருப்பம் இல்லை. அவளை கூட்டி கொண்டு அந்த இடத்தை விட்டு போய் விட வேண்டும் போல் இருந்தது. ஏன் அந்த ஊரை விட்டே எங்காவது போய் விட்டால் தேவலை போல் இருந்தது.

"என்ன ஐயா கிளம்பிட்டீங்களா? " சந்துருவிடம் இருந்து கிளம்பிய கேள்வி சிவசு ஐயாவிடமும்,  பார்வை அவர் மனைவி இடமும் இருந்தது.
" ஆமாங்க, கொஞ்சம் அவசர வேலை."
"எப்படி போவீங்க?"
"இந்தா இங்க பக்கத்தில தான். நடந்தே போய்டுவோம்."
"நோ நோ, என் கார் ல டிராப் பண்ண சொல்றேன் "
அவர் மறுக்க மறுக்க காரில் அவர்களை அனுப்பி வைத்தான். அதில் அவர்கள் வீட்டை தெரிந்து கொள்ளும் கள்ளத் தனமான ஆவலும் அடங்கி இருந்தது.

வழி முழுவதும் ஒன்றுமே பேசாமல் வந்தார். வீட்டிற்க்குள் சென்றதும் கதவை சாத்தி " உனக்கு அவரை முன்னமே தெரியுமா? " என்றார்.
"யாரை?"
"மிஸ்டர். சந்திர சேகர்"
இத்தனை ஆண்டுகளாக தன்னை ஒரு ஜடப் பொருளாக நடத்திய ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக இதற்க்கு மட்டும் எங்கிருந்து வந்தது உரிமை என்று கோபப் பட்டவளாக முகத்தை நேருக்கு நேர் பார்த்த படி சொன்னாள்" நானும் அவரும் காதலித்தோம். அவரை மணந்திருந்தால் அந்த மேடையில் இருக்க வேண்டியவள் தான் உங்களை மணந்து இப்படி அல்லாடிக் கொண்டு இருக்கிறேன். ஒரு பிச்சை எடுப்பவளுக்கு கிடைக்கும் சந்தோஷம் கூட இல்லாமல் அவளை விட கேவலமானவளாக இருந்து கொண்டு இருக்கிறேன். ..." இன்னும் என்னன்னவோ பொரிந்து தள்ளினாள். கண்களில் தண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.

இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்.

(இன்னும் வரும் )

04 August, 2011

நெல்லையில் மற்றுமோர் பதிவர் சந்திப்பு!

(மீ த first , 'மனதோடு மட்டும்' கௌசல்யா, 'வெடிவால்' சகாதேவன் ஐயா  'யானைக்குட்டி' ஞானேந்திரன் {நான் சரியா தானே சொல்றேன்}த கிரேட் செல்வா, 'வலைச்சரம்' சீனா ஐயா, 'உணவு உலகம்' சங்கரலிங்கம் ) 
அது ஓர் தித்திப்பான காலைப் பொழுது. அலுவலகப் பணிகளை ஆரம்பிக்கத் தொடங்கிய நேரம், அன்பை மழை எனப் பொழியும் தோழி தேனம்மையிடம் இருந்து அலைபேசியில் அழைப்பு. "ஒரு நண்பர் சென்னையில் இருந்து நெல்லை வந்திருக்கிறார் அவர் நெல்லை பதிவர்களை சந்திக்க விரும்புகிறார். அவரிடம் உங்கள் தொலைபேசி எண்ணை கொடுத்திருக்கிறேன். " என்றார்கள். மாதத்தின் ஆரம்ப நாள். வழக்கமான அரசு அலுவலகங்களின் monthly  statement  திரு விழா கொண்டாட்டத்தில் இருந்ததால், அவர் பெயர் செல்வா என்பதைத் தவிர வேறு அதிக தகவல்கள் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் "சரி " என்றேன்.

சிறிது நேரத்தில் செல்வாவிடம் இருந்து அழைப்பு. 
உற்சாகமாக "குட் மார்னிங் ரூபினா" என்றார். அழைப்பதில் நமது பெயரை சேர்த்து சொன்னாலே அன்னியோன்யம் வந்துவிடும் என்னும் ரகசியம் அறிந்தவர்.
"இன்று மதியம் விமானத்தில் செல்வதாய் இருந்தேன். நெல்லை பதிவர் சந்திப்பைப் பற்றி சித்ரா சொன்னதில் இருந்து நெல்லை பதிவர்களை சந்திக்க ஆவலாய் இருக்கிறேன்" என்றார். எனக்கு தெரிந்த பதிவர்கள்  நெல்லையில் நாலே நாலு  பேர் தான் இருக்கிறார்கள்.  அது வரை அவர் திரைப்படம் இயக்குவதற்காக வந்திருக்கிறார் என்று எனக்கு தெரியாது. அவரும் சொல்லவில்லை. நெல்லைக்கே 'அண்ணா'  ஒருவர் இருக்கிறாரே சங்கரலிங்கம் (உணவு உலகம்) அவர் சிறப்பாக செய்து விடுவார் என்ற நம்பிக்கையில் அவர் பக்கம் கை காட்டினேன். 

அவர் மாகி நூடுல்ஸ் போல குறைந்த நேரத்தில் ருசிகரமான ஒரு ஏற்பாட்டை செய்து விட்டார். நாலு பேர் பத்து பேர் ஆனோம். இது வரை முகம் தெரிந்தவர்கள் சந்திப்பிற்காக கூடி இருக்கிறோம். இப்படி பார்த்திராத ஒருவருக்காக வேறு ஊர்களில் இருந்து வந்து காத்திருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று  சொல்லி சொல்லி மாய்ந்து போனார் செல்வா. நாகர்கோவிலில் இருந்து விஜயன், மதுரை யில் இருந்து வலைச்சரம் சீனா ஐயா, மற்றும் நெல்லைவாசிகள். சீனியர் பதிவர் 'வெடிவேல்' சகாதேவன் ஐயா அவர்கள் கலந்து கொண்டது ஆச்சர்ய சந்தோஷம். விஜயனைப் பார்த்ததும் நாஞ்சில் மனோ நினைவு வந்ததோ என்னவோ சங்கரலிங்கம் சார், அங்கே இருந்தே மனோவை அலைபேசியில் அழைத்து வெறுப்பேற்றினார்கள். அந்த நேரம் விமானம் கிடைத்திருந்தால் வந்திருந்தாலும் வந்திருப்பார். 

செல்வா அவர்கள் அமைதியாகவே நிறைய சாதனைகள் செய்து இருக்கிறார். கணினி வந்த புதிதில் தான் வாங்கி வைத்திருந்த கணினியைப் பார்க்க டெல்லியில் இருந்து வந்தார்கள் என்று சொல்லி ஆச்சர்யப் படுத்தினார். தான் ஒரு குறும் படம் எடுத்திருப்பதாகவும் நாங்கள் பார்க்க விரும்பினால் காட்ட இருப்பதாகவும் சொன்னார். ஏக மனதான விருப்பத்தின் அடிப்படையில் அங்கேயே பார்க்க தயாரானோம். அந்த குறும்படத்தின் கதாநாயகர் கீழே உள்ளார். அவர் காட்டிய முக பாவங்களில் காதலில் விழுந்த நான் இன்னும் எழுந்தபாடாய் இல்லை. ட்ராக் பாட வந்தவர் அதிர்ஷ்டம் அழைத்து ஒரிஜினல் பாடகர் ஆனது போல் அந்த கதா பாத்திரத்துக்கு நடிக்க வேண்டியவர் வராததால் செல்வா அவர்களின் சித்தப்பாவே நடித்து இருக்கிறார். இயக்குனர்கள் நடிக்க சொல்லித்தரலாம். நடிகர்கள் நடிக்க முயலலாம். அந்த உணர்வு அந்த முக பாவனையில் அப்படியே பொருந்திப் போக வேண்டும். அது அவருக்கு நடந்தது. குறும் படத்தின் ஒளிப்பதிவும் செல்வாவே தான். 
அவர் லாப் டாப்பில் க்ளோஸ் அப்பில் வந்த நொடியில் எடுத்ததால் கொஞ்சம் சிதைந்த படமாக இருக்கிறது. இருந்தும் அந்த நாசியும் உதடுகளும் எவ்வளவு வேதனையை உணர்த்துகின்றன. உடல்கள் அழியலாம் ஆனால் ஆன்மா அழிவதில்லை என்னும் கருத்தை உள்ளடக்கி இருந்தது குறும் படம். கடற்கரையில் தன் மகள் சுனாமியில் இறந்ததை சொல்லி " மண்ணில் புதைத்த எதுவும் முளைக்காமல் போனதில்லை. என் மகளும் மறுபடியும் பிறந்திருப்பாள். எனக்கு தாயாய், தோழியாய், மனைவியாய் இன்னும் எல்லா உறவுகளும் அடங்கிய அன்பைத் தரும் ஒரு பெண்ணை மனைவியாய் அடைய தேடிக் கொண்டு இருக்கிறேன் என்று சொன்னாய். அப்படி ஒரு பெண்ணை சந்தித்தால் எனக்கு கண்டிப்பாக தெரியப் படுத்து. அவளில் தான் என் மகளின் ஆன்மா உறைந்திருக்கும். நான் அவளை பார்க்க விரும்புகிறேன்." Hats  off  to  U  " செல்வா சார். இந்த குறும்படத்தை ஜப்பான் மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார். சுனாமியின் பாதிப்பு சுண்டல் சாப்பிடுவது போல் ஆகி விட்ட அந்த நாட்டில் இந்த குறும் படம் திரையிடப் பட இருக்கிறது. வாழ்த்துக்கள்!!

சங்கலிங்கம் அவர்களின் நண்பரின் ஹோட்டலில் தான் சந்தித்தோம். அவருக்கு வலை பூக்களில் இருந்த ஈடுபாடு அந்த அரை முழுவதும் ஆச்சர்யக் குறிகளாய் நிரம்பி இருந்தது. அல்வா (!?!) பப்ஸ், நல்ல தொரு லெமன் டீ என மனதோடு வயிறும் நிறைந்தது. 'மனதோடு மட்டும்' கௌசல்யாவின் கணவர் ஒரு தனித்துவம் நிறைந்த நபர். எந்த ஒரு வெற்றி பெற்ற ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்வோம். ஆனால் பல வெற்றிகளை சாதிக்கப் போகும் இந்தப் பெண்ணின் பின்னால் இருக்கும் ஆண் அவர்.

கருவாளி, யானைக்குட்டி வலைப்பூக்களின் சொந்தக்காரர்கள் இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி எழுதலாம். அவர்களிடம் ஒளிந்திருக்கும் திறமை இடைஇடையே அவர்களின் கலந்துரையாடலில் வெளிப்படுகிறது. வலைச்சரம் சீனா ஐயா அமைதியாக அங்கே இருந்து அத்தனை பேருக்கும் சிபி ஸ்டைலில் மார்க் போட்டது போல் இருந்தது. நான் பாஸ் ஆகி விட்டேனா என்று அவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

மற்றும் ஒரு சித்த மருத்துவரும் கலந்து கொண்டார். ரயிலைப் பிடிக்கும் அவசரத்திலும் அங்கே வந்து எல்லோரோடும் அறிமுகம் செய்து கொண்டார். "என்ன ஒரே நாய்க்குட்டி, யானைக்குட்டி யா இருக்கு " என்றார். எனது நாய்க்குட்டி மனசு, மற்றொரு வலைப்பூ யானைக்குட்டி. செல்வாவை சந்தித்ததன் மகிழ்வை காட்டி எல்லோரோடும் ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டு ரயிலைப் பிடிக்க பறந்தார். 

எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க ஆசை தான். வீட்டு வாசலில் ஒரு கம்போடு (நாய்க்குட்டி ஆச்சே!)கணவர் காத்திருப்பது போல் ஒரு நிமிடம் கண் முன் ஒரு காட்சி வந்து போனதால், அனைவரிடமும் விடை பெற்று வீடு நோக்கி விரைந்தேன். எனக்கு ஆணாய்ப் பிறக்க வில்லையே என்ற ஆதங்கம் ஒரு நொடி வந்து போனது.