Bio Data !!

26 December, 2020

 கோண தாத்தா

சிறுகதை எழுதியவர் குதிரை சுதாகர்.

ஒரு சிறுகதை மூலம் இவ்வளவு வலி கொடுக்க முடியுமா? முடிகிறது.


சாமான்ய மக்களோடு இருக்கும் போது மனசு வெகுஇயல்பாய் இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.உண்மை அவர்கள் வாழ்க்கை நாடக பூச்சு இல்லாத நடைமுறை வாழ்க்கை.

எனக்கு வாழ்க்கையை அதன் போக்கில் விடலாம் எனத் தோன்றும். அவரோடது போராட்டக் குணம் என்கிறார். வாழ்க்கை எப்போதும் இப்படியான எதிரெதிர் துருவங்களைத் தானே இணைக்கிறது. 

சொந்த தாத்தாவாக இல்லாமலிருந்தாலும் எல்லாமுமாக இருந்திருக்கிறார் கோண தாத்தா. தாத்தாவின் பூர்வீகம் யாருக்கும் தெரியாது.விந்தி விந்தி உடம்பைக் கோணி கோணி நடப்பதால் இந்த பெயர் வந்து சேர்ந்தது. என்னைப் பார்த்ததும் கண்ணால் மனசு கசிந்து சிரிப்பார் என்கிறார் ஆசிரியர்.

வெற்றி பெற்ற விளையாட்டு வீரன் தன் நாட்டுக் கொடியை இரு கைகளாலும் உயரத் தூக்கிப் பிடித்த படி மைதானத்தை வலம் வருவது போல அவர் குளித்து தன் வேட்டியை பிடித்து காய வைத்து வருவது இருக்கும் என்கிறார். என்ன அழகான உருவகம். 

மாரி என்னும் ஐஸ் விற்கும் காரெக்டர் ஒன்றைப் பற்றி சொல்கிறார்.மாரி ஐஸ் விற்று வந்ததும்  தாத்தா உட்பட குழந்தைகள் பெட்டிக்குள் துளாவி கிடைத்த துண்டுகளை எடுப்பதை சொல்லி இருக்கிறார். தாத்தா அடித்து பிடித்து எடுத்து வரும் துண்டைக. கீழே போட்டு இவனை அதன் மீதேறி நிற்கச் சொல்வார்.

எருமை கோவிந்தன் என்றொரு காரெக்டர். நன்றாகக் குடித்திருந்தவன் தாத்தாவை எட்டி உதைக்க தண்ணீரில் சுருண்டு விழுந்தார். அப்பா தலை வருடி முதுகு தடவி கொடுக்கத் தெரியாமல் அய்யனார் சிலை மாதிரி கம்பீரமாக வாழ்ந்தாலும் வாழ்க்கையை வாழச் சொல்லிக் கொடுத்தவர் தாத்தா தான். கண் பார்த்துத் தான் பேச வேண்டும் என்றும் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் நடந்தால் தான் கலப்புத் திருமணம் என்றும் வாழ்வின் நெறி முறைகளைச் சொல்லிக் கொடுத்தவர். ஒரு மாட்டு வண்டியில் தலை சாய்த்து நுறை தள்ளித் தாத்தா இறந்து கிடந்தார். தண்ணீரைக் குடம் குடமாய் தலையில் ஊற்றி புது வேஷ்டி கட்ட முற்படும் போது ஒருவன் நக்கலாக "கோண ஆம்பளையும் இல்ல பொம்பளயும் இல்லடா" என்றான். போவோர் வருவோர் அந்த பிறந்த மேனியை வேடிக்கை பார்த்து சிரித்தபடி நகர்ந்தனர். 

எல்லா ரகசியங்களையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து அவமானங்களைப் புதைத்து பிணமாக கோணிக் கோணிச் சென் று கொண்டருந்தார் கோண தாத்தா. 

என் 25 வயதில் இப்படி ஒரு குழந்தையை நான் பார்த்ததும் அது பதின்ம வயது வந்து அதன் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் ஆணா பெண்ணா என்று நிர்ணயித்து ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று வலியோடு அதன் தாய் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

13 December, 2020

 உன்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தேன்?

யாரை? யாரை இல்லைங்க எதை?

எனக்கு பிபி இருக்குதுன்னு தெரிஞ்சுகிட்ட அந்த நேரம்?

எல்லோரும் கதை கேட்க தயாராகிட்டீங்களா?

ம்ம்ம்

என்னிடம் அப்போ ஸ்கூட்டி ப்ளஸ் (லைட் ரோஸ் நிறம் தான் இளம் பெண்கள் விரும்புவார்கள்னு கூடுதல் 500ரூபாய் வச்சிருக்கும் போது எனக்கு இந்த ரத்த சிவப்பு தான் பிடித்ததுனு எடுத்தேன். என்ன ஒண்ணு சிவப்பு கலர் சாரி ப்ளவுஸ்ல போனா தீயணைப்புப் படை ஒண்ணு வருவது போல் இருக்கும். மத்தபடி ஓகே)

அலுவலகத்தில் ஷெட்டில் நிறுத்தினதும் லேசா தலை சுற்றி விழப் போனேன். தட்டி விட கல்லு கூட இல்லையேன்னு நினைச்சவ டாக்டரிடம் தானே போயிருக்கணும். நேரா வேலை செய்ய போயிட்டேன். அப்போ நான் இருந்த செக்‌ஷன் ப்ராட்பேன்ட் சம்பந்தமானது. கொடுக்க ஆரம்பித்த புதிது. இப்போ நினைச்சு பார்த்தா எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கோம்னு புரியுது.

சாவகாசமா மாலை வீட்டுக்கு போற வழியில டாக்டரை பார்த்தேன். விஷயத்தை சொன்னதும் பிபி செக் பண்ணினவங்க "நீங்க பிபிக்கு என்ன மாத்திரை எடுக்கிறீங்கன்னாங்க. " எனக்கு பிபி இல்லை டாக்டர் ன்னேன்.

அதை நீ சொல்லக் கூடாது ன்னவங்க படுக்க வச்சு நிக்க வச்சு எல்லாம் மறுபடி மறுபடி எடுத்தாங்க. "பிபி ரொம்ப அதிகமா இருக்கு. 220க்கு மேல. உன்னை வீட்டுக்கு அனுப்ப முடியாது. அட்மிட் ஆகுன்னாங்க. "

ஆத்தீ! "டாக்டர் எனக்கு எந்த சிம்ப்டமும் இல்லை. காலையில லேசா தலை சுத்திச்சு Now i am alright னு பழைய படத்தில மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி நான் சொல்ல அவங்க இவ்வளவு அதிகமா இருந்தும் நான் எப்படி வண்டி ஓட்டிக்கிட்டு வந்தேன்னு ஆச்சர்யப்பட்டு கிட்டு இருக்கும் போது நான் " டாக்டர் நீங்க மாத்திரை கொடுங்க. நான் வீட்டுக்கு போயிட்டு நாளைக் காலையில வந்து அட்மிட் ஆகிறேன்னு" சொல்லிட்டு அவங்க கொடுத்த 600₹ மாத்திரையையும் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டேன்.

மறு நாள் காலை என் மகளை மதுரைக்கு அனுப்ப வண்ணாரப்பேட்டை க்கு போனேன். பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது ஒரு தெரிந்த அண்ணன் வந்தாங்க. அவங்கள்ட முந்தின நாள் நடந்த செய்தியை சொன்னேன். "நல்ல வேளை அவங்க கொடுத்த மாத்திரை சாப்பிட ஆரம்பிக்கல.  நீ ஹோமியோபதி அல்லது சித்தா பாரு. குறைச்சு கொண்டு வந்த பிறகு வேணா மறுபடி அலோபதி டாக்டர் பாரு. பிபி ரொம்ப அதிகமா இருக்கும் போது குறைக்க அலோபதி சாப்பிட்டா கிட்னி பாதிப்பு வருது" ன்னாங்க. 

நாம தான் டாக்டரை தவிர மீதி எல்லார் சொல்றதையும் கேட்கிற கூட்டத்தை சேர்ந்தவங்களாச்சே. மறு நாள் ஒரு ஹோமியோபதி மருத்துவரை பார்த்தேன். அவரிடம் ஆறு மாதங்கள் மருந்து சாப்பிட்டு ஓரளவு குறைந்த பிறகு  அலோபதி டாக்டர் பார்த்து அன்றிலிருந்து இன்று வரை குறைந்த அளவு பிபி மாத்திரையோடு வண்டி ஓடுகிறது. 

கொஞ்ச நாள் முன்ன சுகமில்லைன்னு எழுதி இருந்தேன் அப்போ பிபி 180தான்(!!!!) இருந்தது. அதற்கே ஆம்புலன்சில் மருத்துவமனை செல்லும் நிலை. அப்போ தான் முதன்முதலாக பிபி இருக்குன்னு கண்டுபிடிக்கும் போது 220க்கு எப்படி ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்தேன்னு வியப்பா இருந்துச்சு. அது வா.......லி......ப வயசு. 

ஒரு சிலருக்கு ஆரம்பத்திலேயே நோய் அறிகுறி தெரிஞ்சிடும். சிலருக்கு அதிகமான பின் தான் தெரியும். சிலருக்கு உயிரைக் காப்பாற்ற நேரமில்லாமல் போயிடும். அதனால் உடல் நலம் பேணுவோம். முக்கியமாக பெண்கள். தன் உடல் நலம் பற்றி அக்கரை எடுப்பதே இல்லை. அதை மாற்றிக் கொள்வோம்.

07 December, 2020

 என் 

உடலும் உள்ளமும்

ஒரு ஜோடி

காதல் பறவைகள்

(லவ் பேர்ட்ஸ்)

ஒத்த நிறம்

கொண்டவை.

ஒன்றையொன்று

கொஞ்சிக் கொள்ளும்.

ஒன்றொ மற்றொன்று

புகழ்ந்து கொள்ளும்.

இளமை மாறாமல்

பார்த்துக் கொள்ளும்.

கோரமான நேரமொன்று

வந்த போது

உள்ளமொடுங்க

இணைப் பறவையும்

வாடி

உடலும் ஒடுங்கியது.

காதல் பறவைகளில்

ஒன்று மரித்து

ஒன்று மீள்தல் 

சாத்தியமோ?

உள்ளம் உரமிழக்க

உயிரிழக்க

உடலோ கண் நீர் வடித்து

உயிர் துரக்க தயாராய்.

உயிர் நீங்கிய உடலை

பிணமென்போம்.

உயிர் நீங்கிய உள்ளத்தின்

என்னவெனலாம்?



04 December, 2020

 வேங்கட வீரன்.

எழுதியவர் இலக்கியா சுப்ரமணியன்.

இது "காவியத் தலைவன்" என்ற போட்டிக்காக ஆசிரியர் எழுதிய முதல் வரலாற்று நாவலாம். முதல் நாவலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. தேர்ந்த எழுத்தாளரின் நடை வீச்சு. இது ஒரு கற்பனை கலந்த குறுங்காவியம் என்கிறார்.

வேங்கட வீரனை மிக அழகாக வர்ணிக்கிறார். "பொதிய மலையை ஒத்த அவன் புஜங்களில் நூலிலையில் கோர்த்த ருத்ராட்சமும் அவனது எழில் பொருந்திய கழுத்தில் கூரிய கருஞ்சிறுத்தையின் பற்களும் கைகளில் வளைந்து நெளிந்த கங்கணமும் பாதத்தில்  வட்ட வடிவ தண்டையும் அவனுடலோடு பிணைந்து கிடந்தது. "

கதை நாயகியை அதை விட அழகாக விவரிக்கிறார். "தங்கத்தையும் மஞ்சளையும் உரலில் இடித்து பசும் பாலில் குழைத்து கை தேர்ந்த சிற்பிகளை தேர்ந்தெடுத்து செதுக்கிய பொன்னிற சிற்பமொன்றின் பூவுடல் தன்னை உரசியதால் உண்டான மின்னல் தாக்குதலு " க்கு வேங்கட வீரன் ஆளானதாகச் சொல்கிறார். 

ஆதினியாள் அவள் தான் கதை நாயகி. அவளுக்கும் வேங்கட வீரனுக்கும் காதல் முகிழ்க்கும் இடமும் மிகவும் ரசனையோடு சொல்லப் பட்டிருக்கிறது. "தன்னை எதிர்த்த வீர்ர்களிடம் இருந்து தப்பித்த ஆதினியாள் அடுத்த அடி எடுத்து வைக்க பெண்ணவளின் காலானது சேற்றைக் குழைத்து பிறழ அதையுணர்ந்த வேங்கட வீரனின் கைகள் அவளைத் தாங்கிப் பிடித்தது. கொடியிடையை சுற்றி இறுக்கிப் பிடித்தவன் அவளைக் கீழே சரியாமல் தன்னோடு அணைத்திருக்க முதன் முதலில் ஆடவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தபாவையவளின் உடலைநாணம் பிய்த்துத் தின்றது. அவள் விழிகள் அகிலத்தை மறந்து ஆடவனின் விழிகளுக்குள் நுழைந்தது. " 

தன்னுடன் வந்தவன் வேங்கட வீரனல்ல வேங்கட அரசன் என ஆதினி அறியும் இடமும் மிகவும் அழகு. "சூரிய திலகத்தை நெற்றியில் அனலென ஏந்தி திரண்டு எழுந்து நிற்கும் இமயம் போன்ற இரு தோள்பட்டைகளிலும் பவளத்தை சூடி ஈசன் குடியிருக்கும் எருதின் திமில் போன்ற நெஞ்சம் நிமிர்த்தி........புல்லி நாட்டுடையன் சிம்ம சொப்பனமாய்  நடந்து வந்தான். எனக்கு மட்டும் மன்னன் என்று நினைத்திருந்தவன் இத்தேச மன்னா?" இப்படிச் செல்கிறது. 

அரசனிடம் தான் வந்த காரியம் சொல்லி தன் நாட்டு இளவரசியைக் காக்க வேண்டிய அவசியத்தையும் அவள் விரும்பும் சந்திர சீரனுடன் இளவரசியுன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றும் அரசரின் நண்பரான சந்திர சீரர் சொல்லியே தான் அரசரை சந்தித்ததாகவும் சொல்ல அரசன் தன் நண்பனின் உதவிக் குரலுக்கு உடன் இசைந்து சென்று காத்து பின் தன் மனதுக்கு இயைந்த ஆதினியாளுடன் இணைந்து கதை இனிதாக முடிகிறது. 

இலைகளை உரசிச் செல்லும் காற்றைப் போல நான் கதையை லேசாக தொட்டு மட்டும் தான் செல்கிறேன். தென்றலின் முழு சுகந்தத்தையும் அனுபவிக்க கிண்டிலில் "வேங்கட வீரனை" வாசியுங்கள்.