Bio Data !!

27 March, 2011

அப்பாய்!

வெற்றிமாறன் ஆ.வி யில் தன் ஆச்சியைப் பற்றி எழுதியதும் எனக்கு எங்க அப்பாயி பற்றி நினைவோடையில் ஒரு நீர் சுழிப்பு.

எங்க வழக்கம் அம்மாவோட அம்மாவை ஆச்சின்னும், அப்பாவோட அம்மாவை அப்பாயீன்னும் அழைப்போம். எங்க அப்பாவோட குடும்பத்தில ஆறு பெண் ரெண்டு ஆண், இறந்தவர்கள் தவிர்த்து. அப்பாயி பார்க்க சித்துருவமாக இருப்பார். நல்ல மஞ்சள் நிறம். சட்டை அணியாமல் சேலையை ஒரு விதமாக தொய்வாக அணிந்திருப்பார். காது வளர்த்து பாம்படம் போட்டு இருப்பாங்க. கழுத்தில் கனத்த ஒரு செயின். தோலில் பல சுருக்கங்கள். எனது மிகப் பெரிய பொழுதுபோக்கே கைகளின் தோலை இரு விரல்களால் அழுத்தி பிடித்து விடுவது. அது தளர்ந்து பழைய நிலைக்கு வர சிறிது நேரம் பிடிக்கும். அந்நேரம் சரியாக மறுபடியும் அழுத்தி விடுவது.

இறை பக்தியில் அவர்களை மிஞ்ச ஆளே இல்லை எனலாம். காலை நாலு மணிக்கே எழுந்து செபம் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள். ஐந்து மணி கோவிலில் மணி அடிக்கும் சத்தம் கேட்டதும் எழுந்து வெளியே பூட்டிக் கொண்டு கோவிலுக்கு சென்று விடுவார்கள். இறைவனை முதல் ஆளாய் சென்று சந்திப்பதில் அவ்வளவு ஆர்வம். ஒரு முறை அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து, கோவில் மணி அடித்ததை கேட்க தவறி விட்டோம் என்று நினைத்து சேலையால் தலையில் முக்காடு போட்டபடி கோவிலை நோக்கி சென்று விட்டார்கள். சாத்திய சர்ச்சின் வாசலில் அவர்கள் அமர்ந்திருந்ததை பார்த்த, அந்த வழியாக ரோந்து வந்த போலீஸ் ஒரு திருடனைப் பிடிக்கப் போகும் த்ரில்லோடு விரைந்து அவர்களை மடக்கினார் . கோவிலுக்கு போறதுக்கு கூடவா போலீஸ் பிடிக்கும் என்று அப்பாயி மருள, புதையலை நழுவ விட்ட முழியோடு காவல்காரர் , அவர்களை அழைத்து வந்து வீட்டில் விட்டார். எங்கள் தந்தையிடம் " பெரியம்மாவை விடிஞ்ச பிறகு கோவிலுக்கு போகச் சொல்லக் கூடாதா சார் ? " என்றார். 
"என்ன இன்னும் கொஞ்ச நேரத்தில விடிஞ்சிடப் போகுது" என்று முணுமுணுத்த படியே உள்ளே சென்றார் அப்பாயி. 

எங்கள் தெருவில் எங்கள் வீடு மட்டும் தான் மாடியுடன் கூடிய வீடு. ஒரு முறை நான் கீழே படித்துக் கொண்டிருந்த போது மாடியில் இருந்து வினோதமான சத்தம். அப்போ  நான் பள்ளி மாணவி. பயந்த படியே மாடியேறிப் பார்த்தால்  ஏசு படத்தின் முன் முழந்தாள் இட்ட படி ஒரு பெரிய சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு அடியின் போதும் "ஏசுவே! ஏசுவே!" என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் பதறிய படி அவர்களை தடுக்க "கீழே போ !இன்னும் கொஞ்ச நேரத்தில வந்திடுவேன். "
"ஏன் அப்பாயி உங்களையே அடிச்சுக்கிறீங்க "
'நமக்காக கல்வாரியில எத்தன கசையடி வாங்கினாரு. இதெல்லாம் ஒண்ணுமே இல்லை . கீழே போ வந்திடுறேன்." னு சொல்லி என்னை விரட்டி விடுவாங்க. மறுபடியும் தொடரும் கசை அடி. ஒவ்வொரு அடியும் அவர்கள் சிவந்த உடம்பில் வரி வரியாய் மழைப் பூச்சிகளை ஓடவிடும்.

பின்னொரு நாளில் அதே இடத்தில் எனக்கும் கிடைத்தது கசைஅடி. நான் காதலிக்கும்  விஷயம் அறிந்ததும் என் தந்தையின் கைகளில் சுழன்றது. நான் அழுத சத்தத்திற்கும் அசைந்து கொடுக்காமல் பரிதவித்த படி அமர்ந்திருந்தனர் என் தாயும், என் தந்தையின் தாயும் , என் தந்தையின் கோபம் அறிந்ததால். 

தன் ஆறு பெண்களில் நான்கு பெண்களை இறைப் பணிக்கு தயாரித்து அனுப்பிய   உன்னத பெண்மணி.எங்கள் கிராமத்திலேயே கிட்டத்தட்ட எண்பது ஆண்டுகள் முன்னதாக முதன் முதலாக முது கலைப் பட்டம் பெற்றவரை தம்பியாகவும், இரண்டாவதாக பட்டம் பெற்றவரை மகனாகவும் பெற்றிருந்தும் எந்த ஒரு பெருமையும் இல்லாமல் வெள்ளந்தியாய் பழகும் குணம் கொண்டிருந்தார். 

அந்த காலங்களில் காலராவுக்கு பலியாகி ஒவ்வொரு குடும்பத்திலும் கூட்டம் கூட்டமாக சாவு விழுவதும், இறந்த உடல் வீட்டினுள் இருந்தால் மற்றவர்களுக்கும் பரவி விடும் என்பதால் வாசலில் பிணங்களை போட்டு விடுவதும், பின்னர் வண்டிகளில் வந்து அள்ளிப் போட்டு போவதையும் பற்றி அவர்கள் சொல்லும் போது இப்படிக் கூடவா நடக்கும் என நினைப்பேன். ஆனால் இப்பொழுது சுனாமியில் இறந்தவர்களைப் புதைக்கும் போது நான் சிறு பிராயத்தில் கேட்டது மறு ஒளிப்பரப்பானது போல் இருந்தது. 

நன்றி வெற்றிமாறன், இறந்து போய் இருந்த என் உணர்வின் ஒரு பகுதிக்கு   உயிர் கொடுத்ததற்கு. மனதின் ஆழத்தில் கிடந்த அப்பாவி அப்பாயியின் நினைவுகளை இறைத்து வெளியேற்றினமைக்கு  மீண்டும் ஓர் நன்றி.

22 March, 2011

படித்து ரசித்தது !

"உன்னை
எந்த  அளவுக்கு
பிடிக்கும்  என்று
தெரியவில்லை …
ஆனால் !
உன்னை
பிடித்த  அளவுக்கு
இந்த  உலகத்தில்
வேறு  எதுவும்
எனக்கு  பிடிக்கவில்லை …"

"உன்  கண்ணுக்கு  மை  – மோனை
கால்  விரலுக்கு  மெட்டி  – எதுகை
ஆனால் ,
நீயோ  ஒரு  – புதுக்கவிதை
இனிமை  என்ற  வார்த்தைக்கு
இன்னொரு  அர்த்தம்  – நீ
நானோ  , தனிமையின்  தோழன் !"

20 March, 2011

பகல் வீடு - பாகம் II

வீட்டுக்கு வந்ததில் இருந்து என் மகனிடம் எப்படி ஆரம்பிப்பது என்பதே பெருங் குழப்பமாக இருந்தது. அவன் டிவி முன் அமர்ந்து ஒரு நொடிக்கு நூறு தரம் சானல்களை மாற்றிக் கொண்டே இருந்தான், கூட அமர்ந்திருக்கும் தந்தையோ, தன் மனைவியோ எப்படி இதை சகித்துக் கொள்வார்கள் என்ற எண்ணமே துளியும் இன்றி. "இப்படி மாற்றிக்கிட்டே இருந்தா என்ன புரியும் பாலா என்றேன்?"
"அப்பறம் உங்களை மாதிரி சீரியல் பார்க்கச் சொல்றீங்களா?"
பூமராங் போல் திரும்பிய பதிலில் நான் என் கூட்டுக்குள் நத்தையாய் சுருண்டேன். 

மெல்ல எழுந்து, அடுத்த அறையில் இருந்து, காகிதத்தில் பெயிண்டிங் செய்து கொண்டிருந்த பேரன் அருகில் அமர்ந்து,

"ஏண்டா செல்லம், வசதியா உட்கார்ந்து வரையலாம் தானே?" என்றேன். அவன் பதிலே பேசாமல் அவன் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தான். கவனம் கலையாமல் ஒரு காரியம் செய்தால் தான் முழுமை இருக்கும் என்று அங்கே உட்கார்ந்து அவனை கவனித்துக் கொண்டிருந்தேன். முழுதாய் பதினைந்து நிமிடங்கள் ஆன  பின்னும் அவன் என்னிடம் பேசாமல் இருந்தது என்னை அலட்சியம் செய்தது போல் நினைக்க வைத்தது. 

வீட்டை சுற்றி என் பார்வையை சுழல விட்டேன். நேர்த்தியாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. நீளமாக வரிசை வரிசையை தொங்க விட்டிருந்த மணிகள் காற்றுக்கு அசைந்து மெல்லிய நாதம் இசைத்துக் கொண்டிருந்தன . யார் கவனித்தாலும், அசட்டை செய்தாலும் தன் பணியை அது நிறுத்தியதே இல்லை. என் மனம் மட்டும் ஏன் இப்படி அலை பாய்கிறது. ஹாலில் என் பார்வை நின்றது. நான் எழுந்ததும் என் மருமகள், மகனின் காலடியில் நெருங்கி அமர்ந்து அவன் தொடையில் தலை சாய்த்திருந்தாள். இவர்களுக்கு நான் இடைஞ்சல் தானோ? 

என் அறைக்கு செல்லலாம் என்று எழுந்தேன். பேரனுக்கு இணையாக தரையில் அமர்ந்திருந்ததால் எழுந்ததும் இடது முழங்காலில் சுண்டியது போல் வலி. உடம்பின் எல்லா பாகங்களும் ஒரே நேரத்தில் தானே பிறக்குது, இந்த முழங்காலுக்கு மட்டும் ஏன் சீக்கிரம் வயசாகிடுது என்று நினைத்த படி என் அறைக்குள் சென்றேன்.
முந்திய நாட்களில் மகன் பேசியது நினைவுக்கு வந்தது. 
"எங்கேப்பா கிடைச்சது இந்த கர்ட்டன் . அது ஏன் தான் உங்க ரசனை இப்படி இருக்குதோ?"
"இத்தனை புத்தகங்களை வாங்கி அடுக்கி வச்சிருக்கீங்களே? எப்போவாவது புரட்டி இருக்கீங்களா? எல்லாம் துட்டுக்கு பிடிச்ச விரயம்." (மகனே விடிய விடிய படித்தாலும் அதை அடுக்கி ஒழுங்கு படுத்தி விட்டு நான் படுப்பது உனக்கு தெரியுமா?)
ஜன்னலோரத்தில் நான் தேடி தேடி வாங்கி வந்த ஈசி சேர். கால் பகுதியை   நீட்டியபடி சாய்ந்து அமர்ந்தேன். புத்தகம் படித்தபடியே உறங்குவதற்கு ஏற்ற வாகனம். அதை வாங்கி வந்த அன்று ,கொஞ்ச நேரத்திலேயே மருமகள் அதை எடுத்து போட்டு டிவி முன்னால் அமர்ந்தாள். எனக்குள் அப்பப்போ உண்டாகும் ஆழிப் பேரலை. 
"அலைஞ்சு திரிஞ்சு கடை கடையாய்  ஏறி இறங்கி வாங்கி வந்தால் நீ அதிலே மகாராணி மாதிரி சாஞ்சிகிட்டு இருக்கே" என்றேன். வெடுக்கென எழுந்தவள் அதை முரட்டுத் தனமாக மடித்து என் அறை வாசலில் சாய்த்து முணுமுணுத்தபடியே  சமையல் அறைக்குள் சென்றாள். உள்ளே பாத்திரங்கள் சில்வராய் இருந்ததால் உடையாமல் தப்பின. அதன் பின் அவள் சகஜமாகி எனக்கு சாதம் பரிமாற சரியாய் மூன்று மாதங்கள் ஆனது. 

 நான் பணியில் சேர்ந்த ஐந்து ஆண்டுகளிலேயே கடனை உடனை வாங்கி கட்டிய இந்த கட்டடம் இப்பொழுது எனக்கே அந்நியமாகிப் போனது போல் இருந்தது. மனைவி என்பவள் ஒரு பெரிய உறவுப் பாலம் தான். அவள் போன இரண்டு ஆண்டுகளுக்குள் உறவுகளுக்குள் எத்தனை இடைவெளி. என் மனைவி என்னிடம் காட்டிய பரிவை நினைத்தபடியே துணிமணிகளை எடுத்து ஒரு ரோலர் பெட்டியில் அடுக்கி வைத்தேன். ஓரங்கள் மடங்காமல் நேர்ப் படுத்தினேன் . ஒரு பையில் மற்ற சில்லறை சாமான்களை எடுத்து வைத்தேன். என் மனைவி இருந்த போது குடும்பத்தோடு எடுத்து லாமினேட் செய்திருந்த போட்டோவை எடுத்து ஒரு கைத்துண்டினால் துடைத்தேன். அவள் 'களுக் ' கென போட்டோவில் இருந்து சிரித்தது போல் இருந்தது. "எத்தனை நாள் கூத்துக்கு இந்த புறப்பாடு?" என்று கேட்பது போல் இருந்தது. 

"எங்கேப்பா? ஊருக்கு போறீங்களா?" குடும்ப புகைப் படத்தை எடுத்து வைப்பதை பார்த்தும் அசட்டுத் தனமாக கேட்டான் என் மகன்.
"பக்கத்தில ஒரு முதியோர் இல்லம் போகலாம்னு இருக்கேன்" எப்படி சொல்வது என்று பல விதமாக தயங்கிக் கொண்டிருந்தது போய் சிதறு தேங்காயாய்  உடைத்து விட்டேன். 
"என்னது?" அவன் போட்ட சத்தத்தில் என் மருமகளும், பேரனும் பயந்த படி அரை வாசலில் வந்து நின்றார்கள். அதன் பின் அன்று இரவும் மறு நாள் விடிந்த பின்னும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவே இல்லை. நான் சிற்றுண்டிக்காக வந்து அமர்ந்ததும் ஒரு தட்டில் ஐந்து இட்லிகளும், வெங்காயச் சட்னியும், ஒரு கிண்ணத்தில் பொடியும் எண்ணையும் கலந்து அமைதியாகவே வைத்துச் சென்றாள். ஒவ்வொரு துண்டு இட்லியும் தொண்டையில் சிக்கி சிக்கியே உள்ளே இறங்கியது. இரண்டு பெட்டிகளையும் இரு கைகளில் எடுத்துக் கொண்டு 
"வரேன் பாலா, வரேன்மா , வரேண்டா செல்லம்" என்றபடி படிகளில் இறங்கி நடக்கத் தொடங்கினேன்.

13 March, 2011

பகல் வீடு!!

அது ஓர் முதியோர் இல்லம்.  அதன் பெயர் பகல் வீடு. பெயர்க்காரணம் நாள் முழுவதும் தங்குபவர்கள் மட்டும் இன்றி பகல் பொழுது மட்டும், வீட்டில் உள்ளவர்கள் வெளியே போகும் நேரம் வந்து மாலையில் வெயில் தாழ்ந்ததும் திரும்பி விடலாம். ரிசெப்ஷன் எல்லாம் போட்டு அங்கே இருக்கும் முதியவர்களை கூட இளைஞர்கள் ஆக்கும் கூடம். 

எனக்கு அந்த பகல் வீட்டைப் பற்றி தகவல் கிடைத்ததும் போய் பார்த்து வரலாமே என்று எண்ணம் வந்து விட்டது. என் மனைவி இறந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு வித தனிமை என் குணாதிசயங்களை மாற்றிக் கொண்டு இருப்பதை மெல்ல உணரத் தொடங்கி விட்டேன்.  இது வரை இல்லாத விதமாக தந்தை ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று மகன் குழம்புவதையும், சில நேரங்களில் பொறுமை என் எல்லை மீறிப் போவதால் குடும்ப அமைதி கெடுவதையும் பார்த்ததால் இந்த முடிவு. மகனிடம் சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டான் என்பதால் 
"இப்படியே கொஞ்சம் காலாற நடந்துட்டு வரேன் " என் மருமகளிடம் சொல்லி கிளம்பி விட்டேன். 
"பகல் வீடு ! பகல் வீடு !  சார் பகல் வீடு இறங்கணும்னு சொன்னீங்களே?" கண்டக்டர் என் அருகில் வந்து குரல் கொடுத்ததும் திடுக்கிட்டு விழித்தேன். அதென்னமோ இப்போல்லாம் கோழி தூங்குறதைப் போல கொஞ்சம் நேரம் கிடைத்தாலும் கண் அசந்து விடுகிறது. எல்லோரும் தூங்குற நேரம் துளி கூட தூக்கம் வர்றதில்லை. ஏதாவது படிக்க ஆரம்பித்தால் நேரம் போவதே தெரிவதில்லை. விடி காலை ஐந்து மணிக்கு மருமகள் அடுப்படியில் புழங்கத் தொடங்கிய சத்தம் கேட்டு புத்தகத்தை மூடி வைத்திருக்கிறேன். 

"ஏம்ப்பா ! ராத்திரி தூங்கவே இல்லை போலிருக்கு " மகன் கேட்கும் போது அதில் நான் தூங்கவில்லை என்ற அக்கறையை விட தன் தூக்கம் கெட்டதே என்ற கோபம் இருப்பது போல் தெரியும். 

மெல்ல இறங்கி பகல் வீட்டினுள் சென்றேன். ரிசெப்ஷனில் ஒரு முப்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒரு பெண்மணி. கையில் ஜோ டி க்ரூஸின் "ஆழி சூழ் உலகு"  அவள் ஈடுபட்டு படிப்பதைக் கெடுத்து விடக் கூடாது என்று மெதுவாக அவள் எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தேன். எனக்குள் ஏதோ "இது தான், இது தான் உனக்கான இடம் " என்று சொல்லிக் கொண்டே இருந்தது. 

உள்ளுணர்வு உந்த புத்தகத்தில் இருந்து தலை நிமிர்த்தி, என்னைப் பார்த்தவள் " சாரி சார்,  என்னை கூப்பிட்டு இருக்கலாமே. " என்றாள்.
"ரொம்ப ஆர்வமா படிச்சிட்டு இருந்த மாதிரி இருந்தது. அதான்..." என்றேன். 
"ஆமாம் சார், பெண்ணாப் பிறக்கிறதே ரொம்ப பாவம். "
"அந்த கர்ப்பிணிப் பெண் சாரா கற்பழிக்கப் படறது என் நினைவில் இருந்து அழிய ரொம்ப காலம் ஆச்சு. " 
திடுக்கிட்டு " நீங்க வாசிச்சிருக்கீங்களா?" 
"என் நுரையீரலுக்கான ஆக்சிஜன் தர்றதே புத்தகங்கள் தான்."
"என்ன விஷயமா வந்திருக்கீங்க" 
"ச்சும்மா பார்த்து விசாரிச்சிட்டு போகலாம்னு வந்தேன்" 

அவள் இப்போது தன் பணிக்கு திரும்பி இருந்தாள். "இங்கே தங்குவதற்கு தனித்தனி அறைகள் எல்லா வசதிகளோடும் இருக்குது. மாதம் ஐந்தாயிரம் செலுத்தணும்.அது தவிர குடும்பத்தோட இருக்க விரும்பறவங்க பகல் நேரம் மற்ற எல்லோரும் வெளியே போற நேரம் மட்டும் இங்கே வரலாம். அதுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கறோம். எங்கள் வாகனமே உங்களை வீட்டில் வந்து அழைத்து வந்து விடும், மதிய உணவு இங்கேயே கொடுத்திடுவோம். மாதம் இரண்டு அல்லது மூன்று பேரை உரை நிகழ்த்த அழைப்போம். மற்றபடி புத்தகங்கள், தொலை காட்சி பெட்டி, இன் டோர் கேம்ஸ் எல்லாம் இருக்குது. வாழ்க்கையை சந்தோஷமாக கழிப்பதற்கு உகந்த இடம். இதை மிஸ்டர் டேனியல் ஒரு சேவையாக செய்து வருகிறார். பணம் வாங்குவதற்கு காரணம் எந்த ஒரு செயலுக்கும் விலை இருந்தால் தான் மதிப்பு இருக்கிறது என்பதற்காகத்தான். 
ஒரு நீண்ட உரை ஆற்றி முடித்திருந்தாள். அவள் பேசியதே இந்த பணியை எவ்வளவு விரும்பி செய்கிறாள் என்பதை உணர்த்தியது. 
"சரிம்மா, வீட்டில பேசி முடிவு எடுத்திட்டு வரேன். எனக்கு என்னமோ இப்போ எல்லாம் என் வயதை ஒத்தவர்களுடன் இருந்தால் தான் ஒரு படபடப்பு இல்லாமல் நிதானமாக இருக்க முடியும் போல் தோன்றுகிறது. மகன் ஒத்துக் கொள்ள மாட்டான். பார்ப்போம். உன்னை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. இங்கே வந்தால் நாம் பகிர்ந்து கொள்ள பொதுவான விஷயம் நிறைய இருக்கும்னு நினைக்கிறேன். மீண்டும் சந்திப்போம்" என்று சொல்லி விடை பெற்றேன்.
(இன்னும் வரும்)