Bio Data !!

21 December, 2021

ஒரு கதை பற்றிய விமர்சனம் என்னை இந்த பதிவை எழுதத் தூண்டியது. கதை அறுபது வயது, மனைவியை இழந்த ஆண். பிள்ளைகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில் காலை நடையில் சந்தித்த ஐம்பது வயது, கணவனை இழந்த பெண்ணை மணக்கிறார். பதிவு இதை பகடி செய்தது. சாகப் போகும் காலத்தில் இது தேவையா என்கிறது. இது சார்ந்த என் கருத்து: முதலில் அறுபது வயது சாகப் போகும் வயது இல்லை. நிறைய பேருக்கு பிள்ளைகள் படிப்பு திருமணம் முடிந்து பெற்றோர் தமக்காக வாழத் தொடங்கும் நேரம். உடலின் நோய் கூறுகள் எதையும் கண்டு கொள்ளாமல் ஓடி இருப்போம். அவை அப்போது தான் தலை தூக்கும். என்னை கொஞ்சம் கவனி என்று சொல்லும். பல் கண் ஆகியவற்றில் வயதுக்கே உரிய மாற்றங்கள் நிகழும். அப்போ தான் தனியாகவே சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கும் மருத்துவ மனையில் தனிமையில் காத்துக் கிடக்கும் போது ஒரு துணை தேடும். இரத்தத்தை பரிசோதனைக்கு கொடுத்து என்ன சொல்வார்களோ ஏது சொல்வார்களோன்னு பயப்படும் போது “ஒண்ணும் இருக்காது “ன்னு தோள் தட்டி சொல்ல ஒரு கரம் தேடும். படுக்கை சுகத்துக்கு மட்டும் அல்ல திருமணம். பிள்ளைகள் இப்போ தூர தேசங்களில் வேலை செய்யும் போது பெற்றவர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் துணை வர முடிவதில்லை. அப்பொழுது அவர்களுக்கு தேவையான துணையை தேடுவதில் தவறில்லை. சுற்றி இருக்கும் உலகம் “ இந்த வயதில் இது தேவையான்னு” தான் சொல்லும். தனிமையில் வயதான் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்யாமல் நல்ல நட்பின் பொருட்டு அடிக்கடி சந்தித்துக் கொண்டால் மட்டும் வயதுக்கு மரியாதை கொடுத்து தவறாக பேசாமல் இருக்குமா? பேசும். அதற்கு திருமணம் நல்ல தீர்வல்லவா? அவர்கள் மன நிலைக்கு பொறுத்தமான துணை கிடைத்தால் செய்து கொள்ளட்டுமே! இதில் நமக்கு என்ன பிரச்சினை. கூட இருபது முப்பது ஆண்டுகள் வாழ்வார்கள். நல்லது தானே. சில மரணங்கள் என்னை ரொம்ப தொந்தரவு செய்கின்றன. வளர்த்தெடுக்க சின்ன பிள்ளைகள் இருக்கும் போது நேரும் மரணங்கள். பிள்ளைகள் எல்லாம் வெளி நாட்டில் இருக்கும் சந்தோஷத்தில் கணவனும் மனைவியுமாக சந்தோஷமாக வாழும் நேரத்தில் இணையில் ஒரு பறவை மரணித்து போவது. சிலருக்கு தனிமை சொர்க்கம். இங்கு அவர்களைப் பற்றிய பேச்சில்லை. தனிமை நரகமாய் இருப்பவர்கள் தங்களுக்கேற்ற துணை கிடைத்தால் சேர்ந்து கொள்ளட்டும். வாழ்த்துவோம்.

07 December, 2021

#புத்தக விமர்சனம் 

கதையின் பெயர்  : பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை.

ஆசிரியர் : பெருமாள் முருகன்.

பதிப்பகம்   : காலச்சுவடு

விலை : ரூ 175/-

கையில் புழுப் போல் நெளியும் கரிய நிற சிறிய வெள்ளாட்டுக் குட்டி.. அதை ஒரு கிழவன், வழியில் ஒரு மனிதன் கொடுத்ததாக சொல்லி தன் கிழவியிடம் கொடுத்து வளர்க்கச் சொல்கிறான்.. கிழவி பூனை ஏற்கனவே வளர்த்தவள். அதை பூனாச்சி என்று அழைப்பதால் வெள்ளாட்டுக் குட்டியையும் பூனாச்சி என்றே அழைக்கிறாள்.

இரவில் அழும் குட்டியை தன் வீட்டிலுள்ள வெள்ளாட்டிடம் பால் குடிக்க விட முதலில் ஏமாந்து பால் சுரந்த ஆடு புரிந்து கொண்டு பூனாச்சி குடிக்க வந்தால் சுரக்காது இருந்து விடுகிறது. அதை “ கள்ள மடி” என்கிறார் ஆசிரியர்.

வெள்ளாடு என்றால் இரண்டு மூன்று குட்டி போடும். செம்மறி ஒரு சமயம் ஒரு குட்டி தான் போடும் போன்ற நான் அறியாத தகவல்கள் பல கிடைத்தன இந்த கதையை வாசிக்கும் போது.

“வாயிருப்பது மூடிக் கொள்ளத்தான் . கையிருப்பது கும்பிடு போடத்தான். காலிருப்பது மண்டி இடத்தான். முதுகிருப்பது குனியத்தான். உடலிருப்பது ஒடுங்கத்தான். ராசாங்கத்திடம் எப்படி நடக்க வேண்டும் என்பதை எல்லோரும் நன்றாகவே கற்றிருந்தார்கள்”” இதைச் சொல்வதன் மூலம் எளியோரின் வேதனையை நம் கண் முன்னே கொண்டு நிறுத்துகிறார் ஆசிரியர்.

“ செம்மறிக் குட்டிகளை அவளுக்குப் பிடிக்கவில்லை. அவை எப்போதும் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டே இருக்கின்றன. வெள்ளாடுகளைப் பார் எப்போதும் தலை நிமிர்த்திக் கொண்டு தான் இருக்கின்றன.” எவ்வளவு நுண்ணிய அவதானம். சிந்தித்து பார்த்தால் செம்மறி ஆடுகள் சோகம் ததும்பும் கண்களை உடையவை தான்.

“குனிவைத் தளை என்று உணராமல் வாழும் பாக்கியம் பெற்றவை செம்மறிகள் “ என்கிறார்..

ஒடை அடிப்பது என்னும் புது சொல்லை படித்தேன். காளைகளை காயடிப்பது எனக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இதுவும் அது போலத்தான் போலும். ஆனாலும் மனிதர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள். எனக்கும் கொடூரமாய் ஒரு எண்ணம் தோன்றியது. பச்சிளம் குழந்தகளை பாழ் பண்ணும் மனிதர்களுக்கு இதையே தண்டனையாய் கொடுக்கலாமோ? ஓரிருவருக்கு கொடுத்தால் போதும். எல்லாம் ஒழுங்காகும்.

கதைக்கு ஊடாக சமுதாய அக்கரையை பிறர் பேச வைப்பார். அப்படித்தான் “ சனம், எல்லாத்தையும் அழிச்சு அழிச்சு கையில வழிச்சு வழிச்சு வாயில் போட்டுக்குது. அப்புறம் சனத்தை தவிர வேறெது இங்க வாழ முடியும். கடசியா சனமுந்தான் வாழ முடியுமா? “ என்று அக்கிழவி பெருமூச்சு விட்டாள் என்கிறார்..

பிரபஞ்சம் எல்லோருக்குமானது. நமது வசதிக்காக காடு, பறவைகள் , விலங்குகளை அழிக்கிறோம் என்ற ஆதங்கம் புரிகிறது. பஞ்சத்தின் கொடுமையை அவர் விவரிக்கும் போது பதறுகிறது. ஜனத்தின் வலி நம்மை உணற வைக்க பக்கம் பக்கமாய் எழுத வேண்டியதில்லை. ஒரு 140 பக்கங்கள் போதும். அது இதில் இருக்கிறது.

 

 

 

 

 

20 November, 2021

 ஜெயமோகனின் "வெண்கடல்" சிறுகதையிலிருந்து."பெண்ணடியாளுக்க வலியைக் கண்டா ஆணாய் பிறந்ததே பாவம்னு தோணிப் போயிரும்." என்றான் குமரேசன். "ஆணுக்கு அந்த மாதிரி வலி இல்லையா" என்றேன். "இல்லையே!இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக் கூதறயா இருந்திருக்குமா? ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே" என்றார் அப்பு அண்ணா. 

இதைப் படித்ததும் என் சிந்தனை. ஆண்களுக்கு சிறு வயதிலேயே வலி தாங்கும் மன வலிமை இருக்கிறது. என் பேரனுக்கு அப்போது எட்டு வயது இருக்கும். நாங்கள் ராஜஸ்தான் வந்த புதிது. குளிர் காலங்களில் காலை பதினோரு மணி போல பார்க்கில் விளையாட விட்டு நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் விளையாடிய பிள்ளை தரையிலமர்ந்து தன் முழங்காலில் முகத்தை புதைத்த படி இருக்கிறான். 

ஏதோ சந்தேகம் வர பக்கத்தில் போய் பார்த்தால் அழுது கொண்டிருக்கிறான். நெற்றியில் புருவத்துக்கு அருகே காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது. பதறிப் போனேன். இதுவே பெண் பிள்ளையாக இருந்தால் இரத்தம் கண்டதும் நடுங்கி பாட்டியிடம் ஓடி வந்திருக்கும்.

ஆனால் அதே குழந்தை வளர்ந்து பெண்ணானதும் எவ்வளவு வலி தாங்குகிறது. பூப்பெய்துவது சிலருக்கு பூப்போல முடிந்து விடும். சிலருக்கோ மாதா மாதம் ரண வேதனை. அருவருப்பு. தனது உடலே நாறிப் போனது போல் ஒரு உணர்வு. பக்கத்தில் இருப்பவர்களுக்கு அந்த நாற்றம் தெரிந்து விடுமோ என்னும் பதைபதைப்பு. 

அடுத்து திருமண உறவு. சுத்தமின்மையை பெரிதாய் எடுத்துக் கொள்ளாத பெண்ணாய் இருந்தால் பரவாயில்லை. அதுவே தூய்மை பேணும் பெண்ணாய் இருந்தால் இரவில் வியர்வை கசகசப்போடு தன் மனம் உடன்படாத நேரத்திலும் தன்னை நெருங்கும் கணவனை சந்தோஷப்படுத்த வேண்டிய வலி. ஈடுபாடு குறைந்ததை  கண்டு பிடித்து விட்டால் "வேற எவனையாவது நினைச்சுக்கிட்டு இருக்கியா" என்னும் கூர்வாள் பாயும். உன் வாடையும் நசநசப்பும் தான் தாங்க முடியலன்னு சொல்லவா முடியும்.

அடுத்து பிரசவம். சொல்லவே வேண்டாம். மறு ஜென்மம். இப்போ ஆப்பரேஷன் பண்ணி சுலபமா குழந்தையை எடுத்திடுறாங்கன்னு சொல்றாங்க. ஆனால் அதற்காக நடு முதுகில் போடப்படும் ஊசி நகரும் போதெல்லாம் உறுத்தும். 

குழந்தை பிறந்து பால் கொடுக்க இயலாமை ஒரு வலி என்றால் ஏதோ காரணங்களால் பால் இருந்தும் கொடுக்க முடியாமை பெருவலி. அதைத்தான் இந்த கதையில் சொல்லி இருக்கிறார். பால்கட்டை எடுக்க அட்டைகளை மாரில் வைத்து கட்டும் ஒரு முறையை சொல்லி இருக்கிறார். அவை வலி தெரியாமல் உறுஞ்சி விடும். பின் அந்த அட்டைகளை அழித்து விடச் சொல்லும் போது அப்பெண் சொல்கிறாள் "ஆற்றிலேயே விட்டிடுங்க. என்ன இருந்தாலும் அவை என் பாலைக் குடித்தவை"  இந்த வரியில் நொறுங்கிப் போனேன் நான். 

வயதாகி தீட்டு நின்றாலும் நிற்பதில்லை வலி சிலருக்கு. எத்தனை குழந்தைகளை தாங்கிய கருப்பை தளர்ந்து நெகிழ்ந்து வெளியே வந்து விடுகிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் கூச்சம். ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் சொல்லும் போது அதை வெட்டி நீக்க வேண்டிய அவசியம். முடியாத சமயத்தில் வெளியே சொல்ல முடியாத வேறொரு தீர்வும் இருக்கிறது.

இப்பொழுது முதல் பாரா படியுங்கள். ஆசிரியர் சொன்னது எவ்வளவு சரியென்று தெரியும். பெண் எவ்வளவு வலியும் தாங்க கூடியவள் அவள் முடியவில்லை என்று சொன்னால் அது மனதின் வலியின் பிரதிபலிப்பு எனப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டின் பெண் முடியவில்லை என்று சொன்னால் சகித்துக் கொள்பவர்களின் சதவீதம் கூட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட பதிவு. 

நாங்கள் இருக்கிறோம் எனச் சிலர் சொல்வீர்கள். அந்த ஒரு சிலர் போதாது. அனைத்து பெண்களுக்குமே அந்த பராமரிப்பு கிடைக்க வேண்டும்.

30 October, 2021

 # புத்தக விமர்சனம்

இந்திய இலக்கியச் சிற்பிகள்.

எழுத்தாளர் லா.ச.ரா பற்றி எழுதியவர் லா.ச.ரா.சப்தரிஷி

இன்று லா.ச.ரா அவர்களின் ஜன்ம தினமும் இறப்பு தினமும். எத்தனை பேருக்கு இப்படி அமையும். 

இது சாகித்ய அகடமி வெளியீடு. விலை ₹50/-

பதினைந்து தலைப்புகளில் எழுதி உள்ளார். இதன் கூடுதல் சிறப்பு மகனே தந்தையைப் பற்றி எழுதுவது.

அவருடைய மொத்த புத்தகங்களையும் மனப்பாடம் செய்தவர் போல ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் அது எந்த எந்த கதையில் எந்த விதமாக வருகிறது என்று ஒரு ஆய்வு மாணவரைப் போல குறிப்பிடுகின்றார்.

"லா.ச.ரா பற்றி நான்" என்பது முதல் தலைப்பு. அதில் அங்கங்கே ஆங்கில சொற்றொடர்களை ஆங்கில எழுத்துக்களிலேயே சொல்லி இருப்பது லா.ச.ரா வின் தனித்துவத்தைப் பிரதிபலித்தது.

லாசரா அவர்கள் கதைக்கான தலைப்பைத் தீர்மானித்துக் கொண்டு தான் எழுதத் தொடங்க வேண்டும் . சில சமயங்களில் தலைப்புக்கே கதையை மேலே தள்ளிக் கொண்டு போகும் சக்தி உண்டு என்பாராம்.

லாசராவை பிடிக்காதவர்கள் லாசராவைப் படிக்காதவர்கள். அவர் எழுத்தை புரிந்து படித்து உள்ளே இறங்கி விட்டோமானால் அவரை வெளியேற்றுவது கடினம். அவர் எழுத்தின் மயக் அப்படிப்பட்டது என்கிறார் நூலின்  ஆசிரியர்.

லாசரா அவர்கள் அவருடைய எழுத்தில் தான் பேசுவதாக நினைப்பதில்லை. அவர் மூலமாய் அவர் எழுத்து மூலமாய் அவர் மூதாதைகளே பேசுவதாய் நம்புகிறார்.

சப்தரிஷி அவர்கள் "எல்லா வார்த்தைகளையும் இந்த கதையிலேயே போட்டு விட்டால் அடுத்த கதைக்கு என்ன செய்வீங்க" என்பாராம். அதற்கு லாசரா "உலகத்திலே எல்லோருமே மூச்சு விடுகிறோம். காத்து தீர்ந்தா போய் விட்டது" என்பாராம். 

"அவள் கைகள் அவன் கழுத்தை வளைத்துக் கொள்கையில் மார் மேல் மார்பு அழுந்தித் திணறுகையில் அவள் தொண்டையிலிருந்து புறா முனகல் வெளிப்படுகையில் .............இப்படியே தொடர்கிறது. இவர் சொல்லின் செல்வர் அல்லாமல் வேறெவர்? 

அவர் எழுதிய புத்தகத்தின் பெயரான சிந்தா நதியை " ஸிந்தா நதி" என்கிறார்கள். நதி ஸிந்தாமல் இருக்குமா? அது சிந்தா நதி ( Chindha nathi) சிந்தனை நதி என்பாராம்.

லாசரா ஒரு நேர்காணலில் குறிப்பிட்டாராம்." சாவே உன்னை ஏற்கிறேன். ஏனெனில் எனக்கு வேறு வழி இல்லை. நீ நியதி. உன்னுடன் என்றுமே சமாதானமாக முடியாது. நீ பலவான். ஆனால் நியாயவான் இல்லை' என்றாராம்.   உண்மை தானே. வேற வழியில்லை. சாவை ஏற்றுத் தானே ஆக வேண்டும்.

கவிஞர் வாலி அவர்கள் லாசரா பற்றி இப்படி சொல்லி இருக்கிறார். " லாசரா இலக்கிய உலகின் பிதாமகர்.அவர் ஆஞ்சநேயர். அவருக்குத் தன் பலமே தெரியாது. வார்த்தைகள் வரிசையா வந்து அவர் வீட்டு வாசலில் நின்று லாசரா நம்மைப் பற்றி பேசாரா என ஏங்கும்." 

எழுத்தாளர் பிரபஞ்சன் லாசராவை "சொல் வலை வேட்டுவன்" என்கிறார். லாசராவின் எழுத்துகளைப் பற்றி பல எழுத்தாளர்கள் பேசியதும். இறுதியில் அவரே தன் எழுத்து பற்றி பேசியதும் வாசிக்க வாசிக்க திகட்டாதவை.

30.10.1916 இல் பிறந்த லாசரா தான் எழுத ஆரம்பித்து மிகச் சரியாக எழுபத்தி ஐந்தாம் வருடத்தில் 30.10.2007 இல்  மறைந்தார். தனது மனைவி ஹேமாவதியுடன் 62 வருடங்கள் வாழ்ந்துள்ளார். இவருக்கு நான்கு மகன்களும். ஒரு மகளும் உள்ளனர்.

்என்னைப் பின்னிருத்திக் கொண்டு முடிந்த வரை லாசராவின் வார்த்தைகளிலேயே சொல்லி இருக்கிறேன் என்கிறார் சப்தரிஷி.

இந்த புத்தகம் வாங்கி பொக்கிஷமாக நம் வீட்டில் வைக்கப் பட வேண்டிய ஒன்று.

25 October, 2021

# புத்தக விமர்சனம்

 "ஒரு கோட்டுக்கு வெளியே" 

எழுதியவர் சு.சமுத்திரம்.


ஒரு முன்னேற்றமடையாத ஜாதி பாகுபாடு அதிக முக்கியத்துவம் பெற்ற கிராமம். அங்கே தவறு செய்ததாகக் கருதியவர்களை வட்டமாக ஒரு கோடு வரைந்து அதற்குள் வைத்து அதை விட்டு வெளியே வர விட மாட்டேன் என்கிறார்கள். அவரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தண்டனைத் தொகையை கட்டிய பின் தான் வெளியே விடுவார்கள். 


உலகம்மை என்னும் ஒரு அப்பாவிப் பெண்ணும். அவள் தந்தையும் தான் கதையில் முக்கியமானவர்கள்.  தனக்குத் தர வேண்டிய  பாக்கி பணத்தை தரவில்லை என்று வட்டமாக ஒரு கோடு வரைந்து உலகம்மையின் தந்தையை அதனுள்  நிறுத்துகிறார்கள். ஆனால் உண்மையான காரணம் அதுவல்ல. 


ஜாதி உயர்வு தாழ்வு என்றாலே அது பிராமணர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது போல் ஒரு மாயை இருக்கிறது. ஆனால் அனேகம் பேருக்கு  ஜாதி வரிசையில் தனக்கு கீழே இருப்பவர்களை தன்னை விட தாழ்ந்தவன் என்று இழிவாய் நடத்தும் பழக்கம் தான் இருந்திருக்கிறது. இருக்கிறது. இன்று ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு பெண் முடி திருத்தும் தொழிலாளியின் தாய் "சேரியிலிருந்து வருபவர்களுக்கு என் மகன் முடி திருத்த மாட்டான் " என்கிறாள். தெளிவாகத் தெரிகிறது சேரி என்று குறிப்பிடுவது அவர்களை விட தாழ்ந்த்தாக நினைக்கும் மக்கள் குடியிருக்கும் பகுதியை என்பது. பதிவு எழுதும் போது சரியாக அந்த வீடியோ பார்க்க கிடைத்தது.


உலகம்மையையும் ஊர் தள்ளி வைத்திருக்கிது. "ஒரே ஒரு தீக்குச்சிக்காக அவள் அப்படி நடக்கும் போது அவள் வயிற்றில் ஒரு தீக்குச்சியை வைத்திருந்தால் அதில் தீப்பிடித்திருக்கும்" இதை விட அழுத்தமாய் ஒரு பெண்ணின் வலியைச் சொல்ல முடியாது. 


"பாரதம் கிராமங்களில் வாழ்வதாக பல தலைவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அந்த கிராமங்கள் சேரிகளில் வாழ்கின்றன என்னும் உண்மை இன்னும் பலர் காதுகளுக்கு எட்டவில்லை" என்று ஆசிரியர் கதை எழுதும் போது சொல்லி இருக்கிறார். இத்தனை ஆண்டு காலத்தில் இது மாறி இருக்குமென்றே நம்புவோம்.


கிழவரான உலகம்மையின் தந்தை,  ஐவராசா தன் வீட்டிலிருந்து வெளியேற இருக்கும் ஒரே பாதையையும் அடைப்பதை தடுக்க ஊர்க்காரர்கள் ஒவ்வொருவரையாக கெஞ்சும் இடம் பரிதாபத்தின் உச்சம்.


இறுதியில் உலகம்மை எடுக்கும் அதிரடி முடிவு ஜாதி ஜாதி என்று வெறி பிடித்து அலைபவர்களுக்கு கொடுக்கும் சவுக்கடி. அப்பொழுது எல்லோரும் அவளை மன்னிக்க தயாராய் இருக்கிறார்கள். ஆனால் அவள் முடிவில் மாற்றமில்லை.


"பெத்தவன்" . எழுதியவர் இமையம். இதுவும் சாதிகள் நர்த்தனம் புரியும் கதை தான். காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. தங்களை விட தாழ்ந்ததாக சொல்லப்பட்ட ஜாதி சார்ந்த ஒரு பையனை காதலித்ததற்காக ஒரு பெண் கடந்து வரும் அவஸ்தைகள் தான் கதை. அந்த காதலை கை விட அவளுக்கு நடக்கும் அநியாயங்கள் கற்பனை என்று கடந்து விட முடியாது. இன்றும் ஏதோ ஒரு மூலையில் நடந்து கொண்டு தான் இருக்கிறது.   சமுதாயம் ஒருவனது சொந்த வாழ்வில் ஓரளவுக்குத் தான் தலையிட முடியும். அவரவர்க்கான முடிவை அவரவர் தான் எடுக்க வேண்டும் என்று அழுத்தமாக சொல்லிக் கொடுக்கும்  கதை.

40₹ விலையில் ஒரு அதி அற்புத நாவல். பெத்தவன் பெரியவன்.

01 October, 2021

 #cinema சினிமா

You tube இல் ஆதாமின்ட  மகன் அபு என்றொரு மலையாளப் படம் பார்த்தேன். படத்தின் பெயரே உரைப்பது போல ஒரு முஸ்லிம் தம்பதியர் ஹஜ் யாத்திரைக்காக பணம் சேர்க்கிறார்கள். அவர்கள் ஹஜ்  போனார்களா? திரும்பி வந்தார்களா என்பதைப் பற்றி சொல்லும் கதை.

கதையின் அத்தனை மாந்தர்களுள்  99.9% சதவீதம் நல்லவர்கள். அந்த .1% கெட்டவனும் மனம் மாறி சொல்லும் வசனம் நம் நெஞ்சில் அறையும்.

அபு ஹஜ்க்கு புறப்படு முன் ஒவ்வொருவரிடமாகப் போய் தான் ஏதும் தவறு செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளும் படி கேட்பார். அப்படி தன் பக்கத்து வீட்டுக்காரன் நிலத்துக்காக தன்னிடம் சண்டையிட்டவனிடம் செல்வார். அவன் ஒரு விபத்தால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாய் கிடப்பான். இவரைப் பார்த்தும்  ஒன்று சொல்வான். "நான் அல்லா ஏன் என்னை எடுத்துக் கொள்ளாமல் இன்னும் கஷ்டப்பட விட்டிருக்கிறான் என நினைப்பேன். நீங்க மன்னிப்பு கேட்க வரும் போது நான் இல்லாமலிருந்தால் உங்க மனம் வருந்தும். அது கூடாதுன்னு தான் என்னை இவ்வளவு கஷ்டப்பட்டு இருக்க வைத்திருக்கிறான். " 

ஹலால் என்பது உணவுக்கு தான் சம்பந்தப்பட்டது என்று நினைத்திருந்தேன். ஆனால் இந்த படம் பார்ந்த பிறகு தான் ஹஜ் செல்ல பயன்படுத்தும் பணம் சம்பந்தமாக கூட ஹலால் வருகிறது என்று புரிந்தேன். அபுவின் மனைவி ஹஜ் செல்ல தன் மகனை பணம் அனுப்ப சொல்லலாமா எனக் கேட்கும் போது அவர் மறுத்து இவன் எந்த வழியில் சம்பாதித்ததோ என்று சொல்லும் போதும் ஹலால் என்று வருகிறது. நம் இஸ்லாம் தோழர்கள் யாராவது தெளிவுபடுத்துங்கள்.

அபு என்ற முஸ்லிம், ஜான்சனாக வரும் கலாபவன் மணி  கிறிஸ்தவர் பள்ளி ஆசிரியர் , கோவிந்தன் மாஸ்டராக  வரும் நெடுமுடி வேணு மூவரும் நல்லவர்களாக இருப்பதில் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறார்கள். அபு வாக வரும் சலீம் குமார் தேசிய விருது வாங்கினாராம். காமெடி நடிகர்களாக வருபவர்களிடம் தைர்யமாக இத்தகைய ரோல்களைக் கொடுக்கிறார்கள்.

என் கணவர் சொன்னார் "இவருக்கு நேஷனல் விருது கிடைத்திருக்கிறது. நேஷனல் என்ன  இன்டர் நேஷனல் விருதே கொடுக்கலாம். " ஆமாம் இந்த ஆஸ்கார் விருது கொடுப்பவர்கள் மென்னுணர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தால் இவர் நிச்சயமாக ஆஸ்கார் வாங்கி இருப்பார். இவர் மனைவியாக வரும் ஜரினா வகாப் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். இந்த படத்தின் இயக்குநர் சலீம் அகமதுவுக்கு இது முதல் படமாம். 

மலையாளப் பின்னணியோடு இயைந்து பார்க்கத் தக்க நல்ல ஒரு படம்.2011 இல் வெளி வந்த படம். எப்படியோ என் கண்ணில் இவ்வளவு நாள் சிக்கவில்லை.  யூட்யூபில் சப் டைட்டிலும் வருகிறது. கண்டிப்பாக பாருங்கள்

30 August, 2021

 தனிமை


முதியவர்க்கு மட்டுமல்ல தனிமை


பெரும்படை கொண்டு முன்னேறும் முரட்டு பெருவேந்தனுக்கு தன் பாதிப்படை அழியும் போது கிளம்பும் ஒரு தனிமை.

அப்பப்பா அம்மம்மா பெரியப்பா பெரியம்மா சித்தப்பா சித்தி என கூட்டுக் குடும்பமாய் வாழுமிடத்தில் ஒரு குடும்பம் தனித்துப் போனாலும் கிளம்பும் ஒரு தனிமை.

தனிக்குடும்பமாகவே இருந்தாலும் ஒரு பெண் பிள்ளை திருமணமாகிப் போனதும் கிளம்பும் ஒரு தனிமை.

திருமணமான பெண் பிரசவத்துக்கு வந்து திரும்பும் போது பேரப் பிள்ளைகளின் அழு குரல் நின்று கிளம்பும் ஒரு தனிமை.

பிள்ளைப் பிராய பள்ளித்  தோழி ஒருத்தி தந்தையின் வேலை மாற்றத்தால் பிரிந்து போனால் கிளம்பும் ஒரு தனிமை.

இறுதி வரை துணையிருப்பேன் என்று கரம் பிடித்த கணவனோ மனைவியோ நடு வழியில் தவிக்க விட்டு பிரிந்து போனாலோ , இறந்து பிரிந்தாலோ கிளம்பும் ஒரு தனிமை. 

இவ்வளவுக்கும் பின் தான் பெற்ற பிள்ளைகள் வரவேயில்லையே என முதுமையில் கிளம்பும் ஒரு தனிமை.

ஆனால் நாம் முதுமையின் தனிமைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து துவண்டு போகிறோம். 

துவண்டு போகும் நேரத்தில் நம்மை தூக்கி விடவே ஆன்மீகம். நான் மேலே சொன்ன  தனிமையில் வாடும் வகையினருக்கு நாம் துணையிருப்போம். மீண்டு வர கரம் கொடுப்போம்.

25 August, 2021

 "வாருங்கள் படிப்போம்" என்னும் குழுவில் நேற்று பவா செல்லத்துரை அவர்களுடன் ஒரு ஸூம் மீட்டிங் நடத்தினார்கள். எனது மாலை இத்தகைய நிகழ்வுகளால் மணம் பெறுகிறது. 


பவா செல்லத்துரை கதை சொல்லியாக ஜொலித்துக் கொண்டிருப்பவர். அவர் எழுத்தாளர், கதைசொல்லி, நடிகர் என பல வேடங்களை ஏற்பவர். அவர் சொன்னது "எந்த கலை வடிவமும் தொடர்ந்து நடத்திக் கொண்டே இருந்தால் நீர்த்துப் போகும். எந்த art form ம் உச்சத்தில் இருக்கும் போது நிறுத்தி விட வேண்டும்" என்றார். 

40 வருடங்களாக தொடர் வாசிப்பில் இருப்பதாக சொன்னார்.அனேகமாக ஜெயகாந்தனின் எல்லா கதைகளையும் வாசித்திருப்பதாக சொன்னார். 

தான் எத்தனை கதைகளை சொல்லி இருந்தாலும் ஒரு சிலரது கதைகளை சொல்ல முடிந்ததில்லை என்றார். உதாரணமாக லா.ச.ரா, நகுலன், மௌனி போன்றவர்கள். ஜெயமோகன், பிரபஞ்சன், ஜெயகாந்தன் போன்றவர்களுடைய கதைகள் சொல்வதற்கு எளிதானது என்றார். 

நிகழ்ச்சி நடத்தியவர் கதையின் முடிவையும் சொல்லி விடுகிறீர்களே வாசிப்பவர்களின் ஆர்வத்தை குறைத்து விடாதா என்று கேட்டார். ஒவ்வொருவருடைய வாசிப்பும் தனித்துவமானது.  கதை சொல்வதை கேட்பது ஆர்வத்தைக் குறைக்காது என்றார். இதில் எனது எண்ணம் துப்பறியும் கதைகள் போன்றவை தான் முடிவைத் தெரிந்து கொண்டால்  ஆர்வத்தை குறைக்கலாம். ஆனால் அது கூட என்னைப் போன்றவர்கள் முடிவைத் தெரிந்து கதை வாசிக்கும் போது எழுத்தாளன் அந்த முடிவுக்கு கதையை எவ்வளவு அழகாக நகர்த்தி செல்கிறார் என்று ரசிப்போம். 

ஒவ்வொரு கதை ஒவ்வொருவரோடு நெருக்கமாக கனெக்ட் ஆகும். உதாரணமாக ஒரு தந்தையை இழந்தவர் ஒரு கதையில் தந்தையின் இழப்பு வரும் இடத்தில் ஒன்றிப் போவார். மற்றவர்கள் எளிதாக கடந்து போவார்கள். பவா தன் தலை மகனை மூன்றரை வயதில் விபத்தில் பலி கொடுத்திருக்கிறார். இவர் சொல்லும் ஒரு கதையில் இதை ஒத்த ஒரு நிகழ்வு வந்த போது கதை கேட்டுக் கொண்டிருந்த  இவர் மனைவி கேட்க முடியாமல் அழுது கொண்டே அந்த இடத்தை விட்டுப் போனதாக சொன்னார். தாய் மனம் அல்லவா? 

நான் நோ சொல்லத் தெரியாதவன் என்கிறார். "நான் வாசகர்களோடு இருக்கும் போது மீனின் துள்ளலை உணர்கிறேன். இது நீரிலிருந்து கரையில் எடுத்து விட்ட மீனின் துள்ளல் அல்ல. நீருக்குள் இருந்து உல்லாசமாக உயரே எழுந்து நீருக்குள் வீழும் மீனின் துள்ளல். கடவுளின் கைகளில் இருப்பது போல் உணர்கிறேன்" என்றார்

எழுதுபவர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும். "பயணம் என்பது வெளி நாட்டுப் பயணம் அல்ல. உங்கள் ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் தங்கி இரவில் கயிற்றுக் கட்டிலில் படுத்தபடி வானத்து அழகை ரசிக்கும் அனுபவத்தை உணருங்கள்" என்றார். ஆனால் பெண்களுக்கான் பயணம் துயரமானது. துணை வேண்டும். அனுமதி வேண்டும். "தனிமையில் பயணிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் பாக்யவான்கள் "  என்றார். எனக்குத் தோன்றியது ஒத்த மனமுடையவர்களுடன் ஒத்த ரசனையுடையவர்களுடன் செய்யும் பயணம் பாக்கியமானது. 

நம் பிள்ளைகள் நம் வாழ்வின் நீட்சியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர்களை தனித்துவமாக வளர விடுங்கள் என்றார். இவர் கதை சொல்லி ஆறு மாதங்களுக்கு மேலாகிறது. மீண்டும் கதை சொல்லத் தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோளோடு இந்த பதிவை முடித்துக் கொள்கிறேன்.

30 July, 2021


#இது ஒரு நீண்ட பதிவு. கண்டிப்பா வாசிங்க. ஒரு மன நிறைவும் தைரியமும் கிடைக்கும். நான் Guarantee.

 *********

நான் எனக்கு அறிமுகமாகும் அருமையான மனிதர்களை உங்களுக்கும் தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறேன். படத்தில் இருப்பவர் எனது தோழி. கடந்த பதினைந்து வருடங்களுக்கு முன் Hello FM "நிலா முற்றம் "என்னும் நிகழ்ச்சி நடத்தியது. அதில் நானும் பேசினேன். இவர்களும் பேசினார்கள். நான் பேசிய விதம் பிடித்து Hello FM யிடம்  என் தொலைபேசி எண்ணை வாங்கி தொடர்பு கொண்டார்கள். ஒரே அலை வரிசையில் இருந்ததால் நட்பு பலப்பட்டது.  


கொஞ்ச நாட்களுக்கு பிறகே தெரிந்தது இவர்கள் கண் பார்வையை நடு வழியில் தொலைத்தவர்கள்  என்பது. அது வரை தானாக சொல்லவுமில்லை. நான் கண்டு பிடிக்கும் படி பேசியதுமில்லை. இரண்டு பையன்கள் பிறக்கும் வரை நல்ல பார்வையோடு என்னைப் போலவே வாசிப்பில் அதிக ஈடுபாடு கொண்ட சுபாஷினி பார்வை இழந்த போது பெரிதும் வருந்தியது தான் இனி புத்தகங்கள் வாசிக்க முடியாதே என்பதற்கு தான். தன் பார்வை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கிய போது ஒரு பதற்றம் வந்தாலும்  மனம் அதை ஏற்றுக் கொள்ளாமல் சரியாகத் தான் இருக்கிறேன் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். 


எவ்வளவோ மருத்துவர்களைப் பார்த்து இருக்கும்  பார்வையையாவது தக்க வைத்துக் கொள்ள போராடி இருக்கிறார்கள். இனி பார்வை திரும்ப வழியில்லை என்ற பதிலையே பெற்றிருக்கிறார்கள். ஒரு நாளில் பார்வை முழுமையாக பறி போனது.   ஆனால் தன்னம்பிக்கை இழக்கவில்லை இந்த பெண்மணி. தன்  காரியங்களை தானே பார்த்துக் கொள்வதோடு அவர்கள் கணவன் நடத்தும் ஹோட்டலுக்கு தேவையான  பொடி வகைகளையும்   வீட்டிலிருந்தே பணியாட்கள் துணையோடு தயாரித்து அனுப்புகிறார்கள் இதற்கு நல்ல வரவேற்பு. அழகாக உடை உடுத்துவார்கள். 


சுய சார்பு உள்ளவர்கள் என்பதற்கு ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். புடவையின் நல்ல பக்கம் கெட்ட பக்கம் தெரிந்து கொள்ள இடுப்பில் சொருக வேண்டிய இடத்தில் டெய்லரிடம் லேசாக மடித்து தைத்து வாங்கிக் கொள்கிறார்கள்.(அவர்களின் சுய சார்பு பற்றி தனியாகவே ஒரு பதிவு போடும் அளவுக்கு விஷயங்கள் சொன்னார்கள்) தான் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வை தானே சிந்தித்து அதற்கு ஒரு வழியைக் கண்டு பிடித்து விடுகிறார்கள். 


ஒரு வித தயக்கத்தில் பார்வை போன பிறகு வீட்டை விட்டு எங்கேயும் போகாமல் இருந்தார்கள். நான் பழகத் தொடங்கிய பின் அவர்களை ரொம்ப தைர்யப்படுத்தி அவர்கள்  கணவரிடம் அழைத்து வரச் சொன்னேன். ஒரு தோழியின் வீட்டு நிகழ்ச்சிக்கு போனோம். நிகழ்ச்சி முழுவதும் உடன் இருந்து அழைத்து வந்து வீட்டில் விட்டேன்.  அதன் பின் தைர்யம் பெற்று இன்று பல இடங்களுக்கு தன் கணவன் மகன்கள் உதவியோடு போய் வருகிறார்கள். ஒரு முறை உறவினர்களோடு குற்றாலம் போய் வந்தேன் என்று சொன்ன போது அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்.  


இவர்களின் கூடுதல் திறமை கவிதை எழுதுவது. கவிதையின்  வார்த்தைகளை மனதிலேயே சேர்த்து கோர்த்து  ஒரு கவிதை வடிவத்துக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். பின்  கணவன் அல்லது மகன்களிடம்  இந்த கவிதை இவர்கள் சொல்ல சொல்ல எழுதி வாங்கி வைத்துக் கொள்கிறார்கள். 


பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நான் ஏதோ ஒரு விஷயம் சொல்வதற்காக எழுத்தாளர் வண்ணதாசனை அவர்களை  போனில் அழைக்க அவர் அம்பைக்கு ஒரு உறவினர் வீட்டுக்கு வந்திருக்கிறேன். என்றார். அன்று சுபாவிற்கு பிறந்த நாள். "அவர்கள் கண் பார்வை இழந்தவர்கள். கவிதையில் ஈடுபாடு உடையவர்கள் அவர்களை நேரில் வந்து உங்களை சந்திக்கச் சொல்லலாமா?  அது அவர்களுக்கு நான் கொடுக்கும் பிறந்த நாள் பரிசாக இருக்கும் "எனக் கேட்க உணர்ச்சி வயப்பட்ட வண்ணதாசன் அவர்கள் தானே சென்று சந்தித்தார். உற்சாகமாக அவர்கள் கொடுத்த நோட்டில் சுபா "எழுதி" இருந்த கவிதைகளை வாசித்து பாராட்டி இருக்கிறார். இதை விட சிறந்த ஒரு பிறந்த நாள் பரிசை நான் கொடுத்திருக்க வாய்ப்பில்லை. 


இன்று வரை எதிர் நீச்சல் போட்டு உற்சாகமாக தன்னை வைத்துக் கொண்டிருக்கும் அற்புத மனுஷி எழுதிய கவிதைகள் இரண்டு இங்கே. 

சருகுகள் உதிர்கின்றன

தளிரும் முற்றா இலைகளும் உதிர்கின்றன.

உயிரின் அருமை தெரியவா?

வெட்டியானின் வறுமை போக்கவா?

இறைவனின் சாபமா?

இயற்கையின் கோபமா?

விடை தெரியாமல்

காத்திருக்கின்றோம்

நம்பிக்கையுடன்

                  *******

வாழ்க்கை தேவைக்காகவே வாழ்ந்தால் அலுப்பாகும்

ஆசைக்காகவும் வாழ்ந்தால்

அழகாகும்.

பிறருக்காகவே வாழ்ந்தால்

சலிப்பாகும்

நமக்காகவும் வாழ்ந்தால் 

சுவாரஸ்யமாகும்.

கடந்த காலத்தை 

எண்ணாமல்

வருங்காலத்துக்காக

கலங்காமல்

இந்நொடி வாழ்வோம்.

வாழ்வதற்கே வாழ்க்கை.

                      ******

இன்றும் இவர்கள் கணவனும் மகன்களும் இவர்களை குறைவு பட்டவர்களாகவே எண்ணாமல் நடத்துவதால் இவர்களும் இயல்பான ஒரு பெண்ணின் வாழ்க்கையை நடத்த முடிகிறது என்று மகிழ்வோடு  சொன்னார்கள்.

02 July, 2021

 Bynge இல் லாசரா அவர்கள் எழுதிய "உத்ராயணம்" என்னும் சிறுகதை வாசித்தேன். உடனே ஒரு உத்வேகம் எழுந்தது. அவருடைய எல்லா கதைகளையும் வாசித்து அத்தனை சொற்களையும் பொக்கிஷமாய் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 எனக்கு ஒரு பாக்கியம் இருக்கிறது. வாசித்தவுடன் அவருடைய அருமை மகனுடன் ஒரு conversation வைத்துக் கொள்வேன். இதோ அண்ணன் சப்தரிஷியும் நானும் பேசிக் கொண்டது. 

நான்: அண்ணன் இன்று லாசரா எழுதிய உத்ராயணம் வாசித்தேன். அதில் கண்ணன் னு குறிப்பிடுவது உங்களைத் தானா?

அண்ணன்: ஆமா. உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் தரேன். அதுவும் லாசராவின் கதைகளைச் சொல்லும் ரம்யா கண்டுபிடித்த சொன்ன விஷயம். அவர் எழுதும் கதைகளில் பாசிட்டிவ் காரெக்டர்களுக்கு அதிகம் தன் பிள்ளைகளின் பெயரையே பயன்படுத்தி இருக்கிறார். நெகடிவ் காரெக்டர்களுக்கு பெயர் இல்லாமல் அவன் அவள் என்றே எழுதி இருக்கிறார். 

நான்: இதை இனி கவனத்தில் இருத்தி வாசிக்கிறேன் அண்ணன்.

அண்ணன்: உங்களுக்கு இந்து தத்துவங்களில் ஆர்வமிருப்பதால் இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். எங்க அப்பா புருவம் திக்கா நீண்டு வளர்ந்து இருக்கும். அது போல் பீஷ்மரின் புருவமும் இரண்டு பக்கமும் நீண்டு வளர்ந்து தொங்கி போர் புரியும் போது தொந்தரவாய் இருக்குமாம். அதனால் இரு போர் வீரர்கள் இரண்டு புறமும் அம்பினால் புருவத்தை தூக்கிப் பிடித்து அவர் போர் செய்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்களாம். 

நான்: interesting ஆன விஷயம் அண்ணன்.

இப்போ ஏன் இந்த விஷயத்தை அண்ணன் சொல்றார் உத்ராயணம் வாசிச்சு பாருங்க புரியும்.

இப்போ உத்ராயணம் கதையில் நான் ரசித்த வரிகள்:

"இது வரை ரெண்டு தடவை கிணற்றிலிருந்து மொண்டு மேலே கொட்டிக் கொண்டாச்சு. காஞ்சாச்சு. ஆனால் உடல் வாணலியாய் பொரிகிறது. இனி மேல் ஈரம் பட்டால் இந்த வயதுக்கு மார்பில் கொலுசு தான். ஒரு தினுசான மயக்கமா? மதிய உறக்கமா?"( மார்பில் சளி நிறைந்து இருமும் போது ஏற்படும் சத்தத்தை மார்பில் கொலுசு என்கிறார்) 

" இது குறைக்கிற நாயுமல்ல. கடிக்கிற நாயுமல்ல. நாய்களில் ஊமை உண்டோ?" (அட ஆமால்ல! நாய்களின் முக்கிய அடையாளமே குறைப்பு தானே! வாய் பேச முடியாத குறைக்க முடியாத நாய்கள் உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?)

"நாங்கள் எங்கே பேசிக்கிறோம். எங்களைப் பிணைக்கும் மௌனச் சரடே எங்கள் பேச்சென்றால் நாங்கள் நிறையப் பேசுகிறோம்"

"இரவு வேளை கடலோரம் அலைகள் மோதி மீள்கையில் விட்டுச் செல்லும் நுறைத் துளிகள்.பொரியும் முத்துக் கொதிகள்"

கல்வித் தெய்வம் அவரோடு கை கோர்த்துக் கொண்டு வார்த்தைகளை வாரிக் கொட்டி இருக்கிறது. முத்துக்களாய் அவை கதைகள் எங்கும் ஜொலிக்கின்றன.

30 May, 2021

 # சிறுகதை "மனச் சிதைவு"

அவள் தன் மனம் சிதைவடைந்து கொண்டிருக்கிறது என்பதையே அறியாதிருந்தாள். தன் தோழி ஒரு முறை சொன்னது லேசாக உறுத்தினாலும் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தன் தோழியிடம் "என்னன்னே தெரியலப்பா. இப்பல்லாம் பீரோவைத் திறந்தாலே ஏன் இவ்வளவு வாங்கி சேர்த்து வைத்திருக்கிறோம்னு வெறுப்பா வருது" ன்னு அவள் சொன்ன போது " உன்னை சின்ன வயதில் இருந்தே எனக்குத் தெரியும். உடை உடுத்துவதில் அதீத ப்ரியம் கொண்டவள் நீ. ரொம்ப பிடிச்ச விஷயத்தில் திடீர்னு வெறுப்பு வருதுன்னா அது டிப்ரஷனின் சிம்ப்டம் ஆச்சே" என்று போற போக்கில் சொன் னாள் தோழி. அதை அவளும் மறந்து விட்டாள். தோழியும் மறந்து விட்டாள். 

இல்லை என்றால் அந்த கொடுமையின் உச்சத்துக்கு போகாமல் காத்திருக்கலாம். 

அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவடைந்து கொண்டே வந்தது. துள்ளல் நடையோடு தன் வயதை மறந்தவளாய் நடமாடிக் கொண்டிருந்தவள் தன் வேகம் மறந்தாள். "எதுக்கு இந்த வயதில் இவ்வளவு உற்சாகம்" என்று கொஞ்சம் பொறாமையோடு சலித்துக் கொண்டிருந்தவர்கள் கூட என்னவோ ஏதோவென வருத்தப்படத் தொடங்கினார்கள். 

எந்நேரமும் மனதுக்குள் ஒரு அச்சம். அஞ்சா நெஞ்சக் காரி அவள். ஆனால் இப்போதோ தூங்கி எழும் போது நெஞ்சுக்குள் புறா படபடக்கிறது. அலுவலக வேலையில் ஒரு தெளிவின்மை. தனக்குள் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள். எதனால் என்பது புரியவில்லை. இறுதியாய் தனக்கு ஏதோ மிகப் பயங்கரமாய் ஒரு வியாதி வந்து விட்டது என்று முழுமையாய் நம்பத் தொடங்கினாள். தன் நிறம் குறைந்து கருமை அடைந்து கொண்டிருப்பதாய் நம்பினாள். அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டாள்.

 தன் மூக்கை உடலாய் கொண்டு  இரு கன்னங்களிலும் ஒரு கருப்பு பட்டாம்பூச்சி தன் இறக்கை விரித்து அமர்ந்திருப்பது போல் தோன்றியது. நொடிக்கு ஒரு தடவை தனக்கு இருப்பதாக நினைக்கும் அறிகுறிகளுக்கு என்ன வியாதி இருக்கலாம் என இணையத்தில் தேடினாள். ஒவ்வொரு முறையும் அது பயங்கரமான வியாதியின் பெயர்களை உச்சரித்துக் கொண்டிருந்தது கூடுதலாய் அருவருப்பான படங்களுடன். 

இதைக் கண்டதும் அவள் மனம் மேலும் சிதையத் தொடங்கியது. தன் கற்பனையின் வீர்யம் தாங்காமல் அவள் ஒரு நாள் அலறிய போது அவள் கணவன் அவள் காலிலேயே விழுந்தார். "வீட்டில் இருக்கும் பிள்ளைகளை பயமுறுத்தாதே! கொஞ்சம் பொறுமையாய் இரு" என்று அமைதிப் படுத்தப் பார்த்தார். நடக்கவில்லை. 

அன்று அவள் கணவர் டீவியில் செய்தி பார்த்துக் கொண்டிருந்தார். அவளோ அவர் காலடியில் அமர்ந்த படி தன் செல்லில் உள்ள கேமராவில் தன் முகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள். "முன்னால இந்த இடம் இவ்வளவு சொறசொறப்பா இருக்காதே. இவ்வளவு கருமையா இருக்காதே" அப்போது டீவியில் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். "கொரோனா வியாதிக்கு  சிகிச்சை எடுத்துக் கொண்டதில் சிலருக்கு கருப்பு பூஞ்சை என்னும் வியாதி வருகிறது என்பது கண்டு பிடிக்கப் பட்டிருக்கிறது" அந்த வியாதி வந்த சிலரின் புகைப்படங்கள் காட்டப்பட்டன. 

நிமிர்ந்து பார்த்தவள் மீண்டும் செல் போனின் காமராவில் தன் முகத்தை பார்த்தாள். அங்கே கருப்பு பூஞ்சை மெல்ல மெல்ல படரத் தொடங்கி இருந்தது. இரு கன்னங்களில் அமர்ந்திருந்த பட்டாம்பூச்சி மெல்ல விஸ்வரூபம் எடுத்தது. "வீல்" என அலறிய படியே மயங்கிச் சரிந்தாள். அவர்கள் குடும்ப டாக்டர் அறிவுரைப்படி ஒரு சைக்யாட்ரிஸ்டிடம் அழைத்து வந்திருந்தார்கள். அவர் சொல்லிக் கொண்டிருந்தார் " மனம் என்பது ரொம்ப அருமையான ஒன்று. அது சிதைவதென்பது ஒரு நாளில் நடப்பதில்லை. தான் வாங்கும் அடிகளை கொஞ்சம் கொஞ்சமாய் தாங்கிக் கொண்டிருக்கும். ஒரு மென்மையான பொழுதில் நொறுங்கத் தொடங்கும். 

தொடக்கத்திலேயே எங்களிடம் வந்து விட்டீர்கள் என்றால் சரிப்படுத்துவது சுலபமாக இருந்திருக்கும். மொத்தமாக சிதைந்த நிலையில் அழைத்து வந்திருக்கிறீர்கள். முயன்று பார்ப்போம். " என்றார். மூன்று வருடங்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தார். தான் கொடுக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னார். 

அது வரை தான் தனது என்று சுயநலமாய் இருந்த கணவர் ஒரு வீட்டின் தலைவி அதிர்ந்து போனால் மொத்த குடும்பமே அதிர்ந்து போகும் என்பதை புரிந்து அவள் மேல் அதிக அக்கரை எடுத்துக் கொள்ளத் தொடங்கினார். முழுமையாக இயல்புக்கு வந்த அவள் அதே துள்ளல் நடையோடு தன் காரியங்களை செய்யத் தொடங்கினாள். டீவியில் செய்தி சொல்லிக் கொண்டிருந்தார்கள். "உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்து கொரோனா முழுமையாக ஒழிக்கப்பட்டது. உலக மக்கள் அமைதியாக தம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். வாண வேடிக்கைகளோடு கொரோனா ஒழிப்பை மக்கள் கொண்டாடினர்"

20 April, 2021

 "டைட்டஸ் ஆன்ட்ரானிக்கஸ்"

வில்லியம் ஷேக்‌ஸ்பியர் எழுதிய நாவலின் தமிழ் வடிவம் ஜே. கே ராஜசேகரன்.

பதிப்பகம் : அவர் பதிப்பகம்

 

இது ஷேக்‌ஷ்பியர் எழுதியதுதானா இல்லை வேறு ஒருவர் எழுதியதை பட்டி டிங்கரிங் பார்த்து அவர் தன் பெயரில் போட்டுக் கொண்டதா என்ற வாக்குவாதம் பல வருடங்கள் நடந்து பின் அவர் எழுதியது தான் என்று ஒத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது.

பாமர ரசிகனை ஈர்க்கக்கூடிய கொஞ்சம் பாலியல் சங்கதிகள் மெல்லிய நகைச்சுவை போன்றவை இதிலும் உண்டு.

எனக்கு பொதுவாகவே புத்தகங்களை பற்றி எழுதுவது ரொம்ப பிடிக்கும்.  இந்த புத்தகத்தை பற்றி எழுதுவதில் எனக்கு கூடுதல் சந்தோஷம். காரணம் தமிழில் மொழி பெயர்த்திருப்பது என் கொழுந்தன் என்பதால். என் கணவருக்கும் எனக்கும் இந்த புத்தகத்தை டெடிகேட் செய்திருப்பதால். 

ஷேக்ஸ்பியர் மேல் இவ்வளவு காதல் கொண்டு அவருடைய 37 நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று முடிவு செய்து கிட்டத்தட்ட பாதி கிணறு தாண்டி விட்டார். "அவர் " பதிப்பகம் என்ற ஒன்றும் தொடங்கி இருக்கிறார். 

ஷேக்ஸ்பியரின் முக்கியமான நாடகங்களை பலர் தமிழில் மொழி பெயர்த்திருந்தாலும் அத்தனை நாடகங்களையும் எத்தனை பேர் மொழி பெயர்த்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 

ஆரம்பத்தில் இவர் தன் ஆர்வத்தை சொன்ன போது எத்தனை பேர் ஆர்வமாக வாசித்து விடுவார்கள் என்று நினைத்தேன். 

ஆனால் ஒவ்வொரு புத்தகம் வெளியிடும் போது அவரது முக நூல் பக்கத்தில் அவரது பதிவுக்கு வரும் பின்னூட்டங்களை பார்க்கும் போது நம்பிக்கை வருகிறது. அவரது எண்ணம் போல் அத்தனை நாடகங்களையும் தமிழில் மொழி பெயர்க்கும் ஆசை நிறைவேற என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

புத்தகத்தை பொறுத்த வரை வெளி நாட்டு பெயர்களுடைய கதா பாத்திரங்கள் நிறைய வருவதால் கதையோடு ஒன்ற ஆரம்பத்தில் சிரமமிருந்தது. ஆனால் நான் வாசிக்கும் இடத்தை மாற்றி அமைதியான ஒரு பூங்காவில் இள மாலை வெயில் புத்தகத்துக்கு கதகதப்பு ஊட்ட வாசிக்கும் போது அனுபவிக்க முடிந்தது. 

இன்று ஆசிரியர் ஒரு அறிமுகம். நாளை புத்தகம் பற்றி எழுதுகிறேன்

 படத்தின் பெயர் : மழையத்து

அமேசானில்

டைரக்டர் : சுவீரன்

ஹீரோ.  : நிகேஷ் ராம்

ஹீரோயின் :அபர்ணா கோபிநாத்

குழந்தை நட்சத்திரம்: நந்தனா வர்மா.

கொஞ்சம் பலவீனமான மனம் படைத்தவர்கள் பார்க்காமல் தவிர்த்து விடலாம். 

இந்த கொரோனா காலத்தில் சிலர் வலிக்கும் விஷயங்களைக் கூட தவிர்த்து விடுகிறார்கள். அவர்களும் விலகிச் செல்லலாம்.

ஒரு பதின் பருவத்து பெண் குழந்தையும் அதன் பெற்றோரும் கடந்து வரும் கடினமான பாதை தான் கதை.

அப்பாவுக்கும் மகளுக்கும் இடையேயான உறவு மிக அழகாக நெய்யப்பட்டிருக்கிறது. 

எனக்கும் என் தந்தைக்கும் இடையே இருந்த அந்த குறுகிய கால நட்பு. கண்டிப்பும் கனிவும் கலந்தது. அதன்  நினைவுச் சுகந்தமானது. 

பதின் பருவத்தில் பிள்ளைகள் மனத்தால் குழந்தைகளாகவும் உடலால் வளர்ந்தும் இருப்பார்கள். அது வரை இருந்தது போல் அல்லாமல் அப்பா அண்ணன் தம்பி ஆண் நண்பர்களிடமிருந்து சற்று விலகியே இருக்கச் சொல்லித் தரும் தாய் மகளுக்கு எதிரியாகிப் போவது அந்த நேரம் தான். 

சுற்றி மலையும் மரங்களும் சூழ்ந்திருக்க கூடுதலாய் சின்ன சின்ன தொட்டிச் செடிகளுமிருக்க அந்த வீடே ஒரு கவிதை. 

பள்ளியின் தலைமை ஆசிரியையாக வருபவர் பன்னீர் புஷ்பங்கள் படத்தில் அறிமுகமான சாந்தி கிருஷ்ணா. 

படம் பார்த்து முடித்ததும் என் மனம் உச்சரித்தது " பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் பத்தாது பத்திரமா பார்த்துங்கங்க"

 நாவல் : குற்ற பரம்பரை

ஆசிரியர்: வேல ராமமூர்த்தி

பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ்

விலை : ₹ 400

 இந்த கதைக்கு முன்னுரை எழுதிய செம்மலர் ஆசிரியர் எஸ். ஏ. பெருமாள் இதை "பூர்விக ரத்த தடயங்கள்" என்கிறார். கொம்பூதி என்னும் கிராமத்துக் கள்ளர் இனத்தவரின்  வாழ்க்கை தான் இந்நாவலின் கரு. 

தென் மாவட்டங்களில் இன்று முரண்பட்டுக் கிடக்கும் இரு இன மக்களும் கடந்த காலத்தில் எவ்வளவு ஒற்றுமையாய் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாவல் தெளிவாக்குகிறது. பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு எனவும் இந்த இரு சாதிப் பிரிவினர் மோதினால் சாதிக் கலவரம் எனவும் அக்னி வளர்த்தார்கள் என்கிறார் ஆசிரியர்.

திருடுவதற்கு ஒரு வீட்டைத் தேர்த்தெடுத்து ஒருவரை அனுப்புகிறார்கள். அவர்கள் சொல்லும் 'லெக்கை' வைத்து பணம் இருக்கும் அறையில் கன்னமிடுகிறார்கள்.பின் ஆட்காட்டிக் குருவியை ஒரு நூலைக் கட்டி பொந்துக்குள் விடுகிறார்கள்.  உள்ளே சென்ற குருவி சத்தமிடவில்லை என்றால் கன்னம் போட்ட அறையில்  ஆள் இல்லை என்று அர்த்தம். சத்தம் வெளியே கேட்காமல் குத்துக் கம்பியால் சுவரில் இடித்து ஒவ்வொரு கல்லாய் உருவுகிறார்கள். ஒரு ஆள் நுழையுமளவு பொந்து போட்டதும் ஒருவன் பொந்துக்கு நேராக நெடுஞ்சாண்கிடையாக படுத்து மெல்ல ஊர்ந்து ஊர்ந்து உள்ளே போய் கொண்டு வர வேண்டிய பொருளை பொந்து வழியாக மெல்ல நகர்த்த வெளியே இருப்பவன் அணைவாய் பற்றி வெளியேற்றுகிறான். எவ்வளவு தொழில் சுத்தம்!!!

கூழானிக் கிழவி மூலம் காளத்தி கதையைச் சொல்லுகிறார் ஆசிரியர். காளத்தி கதையை கன்னிப் பொண்ணுக கேட்கக் கூடாதுன்னு சொல்லி சொல்லியே அன்னமயிலுக்கு கதை சொல்கிறாள் கிழவி. ஆறு அண்ணன்களுக்கு பிறகு பிறந்த காளத்தியை கொண்டாடுகிறார்கள் தந்தையும் அண்ணன்களும். அது பொறுக்காத மதினிமார் செய்யும் சூழ்ச்சி தான் கதை.நம்மை பதற வைக்கும் கதை. காளத்தியின் மகன் தான் வையத்துரை. வையத்துரை பிறந்த நாளும் அவன் பெற்றோர் இறந்த நாளும் ஒன்றே! 

"ஆம்பளைக எல்லாம் தொழிலுக்கு போயிருக்காகளாம். களவுக்குப் போறது தான் அவுகளுக்கு தொழிலு. களவு பண்றது தப்புன்னு கூட தெரியல" இந்த ஒரு வரியிலேயே அந்த காலத்தில் அவர்கள் தவறென்றே அறியாமல் செய்த காரியத்தை விளக்கி விடுகிறார்.

"எறும்பு புத்திலே துருவனைக் கட்டிப் போட்ட மாதிரி கொடுமை எல்லாம் இன்னிக்கு நேத்தா நடக்குது. தொன்று தொட்டு நடக்குது. அதை எதிர்க்கிறதா? ஏத்துக்கிறதான்னு விளங்கலே. ஏத்துக்கிட்டால் அவமானம். எதிர்த்தால் பட்டினி." இந்த வரிகள் சட்டத்தை அவரவர் கைகளில் எடுத்துக் கொண்டதால் வரும் ரெண்டுங்கெட்டான் சிக்கலை சொல்கிறது.

"நம்பியவர்களுக்கு உயிரைக் கொடுக்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளைக் கொலை செய்கிறார்கள். வேட்டைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் இவர்கள்"  கொம்பூதிக்காரர்களைப் பற்றி இப்படிச் சொல்கிறார் ஆசிரியர். ஒரு காட்சியை விவரிக்கிறார் ஆசிரியர்.  "வடக்கே இருந்து வில்லாயுதம் தலைமையில் திருடிய நகைப் பெட்டியும் கிழக்கே இருந்து பெரு நாழிக்காரர்கள் போலீஸ் உடன் வர முதல் கரை தங்கச்சாமி  தலைமையில் தாம்பூலத்தட்டோடும் கோயிலை நெருங்கி வந்து கொண்டு இருந்தனர்"  எப்படி செம த்ரில்லிங்ல?

கொம்பூதிக்காரர் ஒருவரையே போலீஸ் அதிகாரியாக்கி அவரை வைத்தே அந்த கிராமத்தை திருட்டுத் தொழிலில் இருந்து மீட்பதும் இருந்தாலும் சில புல்லுறுவிகள் செய்த செயலால் கதை துன்ப முடிவே கொண்டிருக்கிறது. 

தீர்ப்பிடாமல் பிற மனங்களை புரிந்து கொள்ள உதவும் ஒரு நல்ல புத்தகம். கண்டிப்பாக வாசியுங்கள்.

 என் முக நூல் நண்பர் ஒருவரின் பதிவு பார்த்தேன். 

பழைய ஞாபகம். 

சின்ன பிள்ளையா இருக்கிறப்போ எங்க வீட்டில வீட்டு உபயோகத்துக்கு மொத்தமா புளி வாங்கி  உடைப்போம். தோடோட புளி வாங்கி வருவாங்க. சின்ன கண்ணனுக்கு இடுப்பில் கயிறு கட்ட சுற்றி ஓட இடம் விட்டு கல்லுரலில் கட்டுவது போல அந்த ஓட்டுக்குள் அந்த புளியம்பழம் அங்கும் இங்கும் போய் வர இடம் தாராளமாய் இருக்கும். 

அதை உடைத்து ஓடை நீக்கி அதனுள் இருக்கும் கொட்டையை பிரித்து எடுத்து புளியை ஒரு பாத்திரத்தில் போடணும். அப்பா அம்மா பிள்ளைகள் எல்லோரும் சேர்ந்து உட்கார்ந்து அந்த வேலையை செய்வோம். 

அந்த காலத்தில் விடுமுறையை உபயோகமா கழிக்க என்னல்லாம் யோசிச்சிருக்காங்க.

பெரியவர்களுக்கு தெரியாமல் கொஞ்சம் புளியை வாய்க்குள் அதக்குவோம். அவர்களும் அதைப் பார்க்காதது போலவே விட்டு விடுவார்கள். வாயை மூடிய படியே அந்த புளிப்புச் சுவையை நாக்கில் ருசிப்பது அமிர்தம். 

சில நேரம் அந்த புளிக்குள் இருக்கிற கொட்டையை அறியாமல் முழுங்கி விடுவோம். திரு திருன்னு முழிக்கிறதப் பார்த்து அப்பா சொல்வார் " போச்சா! மறைச்சு மறைச்சு வாயில போட்டு கொட்டையை முழுங்கியாச்சா? ( அப்ப தான் நமக்கு உரைக்கும். அவங்க பார்க்கலன்னு நாம நினைச்சது பெருந்தப்புன்னு) நான் மெதுவா கேட்பேன் " அப்பா கொட்டை உள்ளே போய் ஒண்ணும் செய்யாதில்ல?" 

"அதெப்படி? மண்ணுக்குள்ள விதையை பொதச்சு வச்சா என்ன நடக்கும்னு படிச்சிருக்கிற"

" முளைக்கும். சயன்ஸ்ல படம்லாம் வரைஞ்சிருக்கோமே!"

"அதே தான் நடக்கும். முளைக்கும்"

"எப்படி வெளியே வரும்?"

"உன் வாய் வழியா தான்" 

ஆத்தீ எத்தனை நாள் தனியா இருக்கும் போது கண்ணாடியில குருவி போல  வாயைத் திறந்து திறந்து பார்த்து தொண்டையில புளிய இலை தெரியுதான்னு பார்த்திருக்கோம். இந்த அனுபவம் உங்கள்ல யாருக்கெல்லாம் இருக்கு?

இப்படிக் கொஞ்ச நஞ்சமா ஙே ன்னு முழிச்சிருக்கோம்.

 THE ILLEGAL

Ameson இல் The Illegal என்றொரு ஹிந்தி படம் பார்த்தேன். படம் முழுவதும் வெளிநாட்டில் படமாக்கப் பட்டிருக்கிறது. அதனால் பாதிக்குப் பாதி வசனங்கள் ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. 

ஒரு இளைஞன் வெளி நாட்டில்   சினிமா சம்பந்தப்பட்ட படிப்பு படிக்க போகிறான். அங்கு இவன் தங்கி படிக்கலாம் என்று நம்பிப் போன இடத்தில் இடப் பற்றாக் குறை காரணமாக மறுக்கிறார்கள். ஒரு ஹோட்டலில் பகுதி நேர பணியாளராகப் பணி புரிந்து படிக்கிறான். ஹோட்டல் உரிமையாளர் உனக்கு கிடைக்கும் டிப்ஸ்ஸை என்னிடம் கொடுத்து விட வேண்டும். நான் உன் செலவுகளை எல்லாம் பார்த்துக் கொள்கிறேன் என்கிறான். 

படிக்குமிடத்தில் இவன் படும் சிரமங்கள், ஒரு வெளி நாட்டுப் பெண் இவன் மேல் கொள்ளும் மெல்லிய காதல் பணி புரியும் இடத்தில் ஒரு பெரியவருடன் இவனுக்கு உண்டாகும் பாசம் பணி புரியும் இடத்திலுள்ள போட்டி பொறாமை என கதை மெல்ல நகர்கிறது. 

திடீரென ஊரில் இவனுடைய தந்தை நோய்வாய்பட ஆப்பரேஷனுக்கு ஒரு பெரிம் தொகை தேவைப்படும் போது ஹோட்டல் உரிமையாளர் அந்த தொகையை கடனாகக் கொடுக்கிறார். அதை அடைக்க அவன் பகுதி நேர ஊழியராய் இருந்தவன் முழு நேர ஊழியராகிறான். படிப்பு தொலைகிறது. படிப்பு போயும் அவன் கடன் அடையாததால் பாஸ்போர்ட் உரிமையாளரிடம் மாட்டிக் கொள்ள ஒரு நாட்டுக்கு legal ஆக உள்ளே நுழைந்தவன் Illegal ஆக தங்கிப் போகிறான். ஐந்து வருடங்களில் அப்பா நலமாகிறார். தங்கை திருமணம் நடக்கிறது. அவன் இன்னும் கடனை அடைத்துக் கொண்டே இருக்கிறான்.

படம் முடியும் போது அவன் வயதுடைய மற்றொரு இளைஞன் அதே இடத்தில் பணிக்குச் சேருகிறான். உரிமையாளர் இவனிடம் சொன்ன அதே கண்டிஷன்களை அவனிடமும் சொல்கிறார். அவன் ஹீரோவை விட புத்திசாலி. தனக்கு கிடைக்கும் டிப்ஸ்சில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டே உரிமையாளரிடம் கொடுக்கிறான். 

படம் எனக்கு ரொம்ப பிடித்ததற்கு முக்கிய காரணம் 

படிக்கும் காலத்திலேயே US போய் அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்ட என் தம்பியை (சித்தி மகன்) ஹீரோ ஒத்திருந்ததால். 

குடும்பத்துக்காக வெளி நாடுகளில் மெழுகாய் உருகும் எத்தனையோ ஆண்களை படம் பிரதிபலிப்பதால்.

பார்க்க வேண்டிய படம்.

07 April, 2021

 புத்தகத்தின் பெயர் : யாமம்

ஆசிரியர். : எஸ். ராமகிருஷ்ணன்.
பதிப்பகம். : தேசாந்திரி
இரண்டாம் பதிப்பு. : பெப்ரவரி 2019
யாமம்

யாமம் கதை படிக்கும் போது எனக்கு சிறு வயதில் என் அம்மா பின்னி விட்ட ஆயிரம் கால் ஜடை ஞாபகம் வந்தது. கொஞ்சம் கொஞ்சமாய் முடி எடுத்து சின்ன சின்ன பின்னலாய் போட்டு அத்தனை பின்னலையும் ஒன்றாய் சேர்த்து மடக்கி கட்டி விடுவார்கள். கட்டி விடுவது அம்மாவின் வேலை. மறு நாள் அதை ஒன்றொன்றாய் பிரிப்பது நம் வேலை. கவனமாய் பிரிக்கலைன்னா சிக்காகி விடும். 

சரி அது ஏன் யாமம் படிக்கும் போது ஆயிரங் கால் ஜடை ஞாபகம் வந்தது. ஆரம்பத்தில் ஒவ்வொரு அதிகாரத்துக்கும் ஒரு புது காரெக்டர் அறிமுகமாகிறது. நாலைந்து அதிகாரங்களுக்குப் பின் அந்த காரெக்டர் மறுபடி வரும் போது நாம் சரியாக அங்கே போய் சேர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் கதையை ரசிக்க முடியும். 

பத்ரகிரி என்னும் ஒரு கதாபாத்திரம். அன்பான கணவன். அப்பாவின் கொடுமையில் அம்மா நோயாளி ஆகி இறந்தும் போனதும் சித்தி பத்ரகிரியையும் அவன் தம்பி திருச்சிற்றம்பலத்தையும் எடுத்து வளர்க்கிறாள். தானே வளர்த்து திருமணம் செய்து கொடுத்த தம்பியின் மனைவியோடு சந்தர்ப்பவசத்தால் தவறிப் போக நேர்ந்து விடுகிறது. தம்பிக்கு வெளி நாட்டில் பணி. நம்பிக்கைத் துரோகமாக நமக்குத் தெரியும் ஒரு விஷயத்தை தம்பி மனைவி வெகு இயல்பாக எடுத்துக் கொள்கிறாள். நாம் பொதுவாக நினைப்பது வெளி நாட்டில் தவறுவது சகஜமென. ஆனால் திருச்சிற்றம்பலம் வெளி நாட்டிலிருந்து அப்பழுக்கில்லாமல் வருகிறான்.

காசிம் என்னும் ஒரு அத்தர் வியாபாரி. அந்த அத்தரின் பெயர் தான் யாமம். அடுத்தடுத்து மூன்று பெண்களைத் திருமணம் செய்த அவர் ஒரு தகாத நட்பால் குதிரைப் பந்தயம் பழகி தன் அத்தனை சொத்தும் இழந்து தன் மூன்று மனைவிகளையும் ஒரு பெண் குழந்தையையும் அனாதரவாய் விட்டு தலை மறைவாகிறார்.

நாவலில் நான் ரசித்த சிலவரிகள் கீழே
"இரவின் நீளமும் ஆழமும் எவ்வளவு பெரியது காசிம்.
மனதிலிருக்கும் வார்த்தைகள் எவ்வளவு ஆழத்தில் கிடக்கிறதோ அவ்வளவு ஆழமுடையதும் சொல்லப்பட்டு விட்ட வார்த்தைகள் ஒன்று சேர்ந்தால் எவ்வளவு நீளமிருக்குமோ அத்தனை நீளமானது"

"இரவு என்பது ஒரு கையால் அள்ளி எடுக்க முடியாம ஒரு திரவம். அது எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக் கொண்டிருக்கிறது. " என்றார்.

"இந்த அத்தரின் பெயர் யாமம். இரவைப் போல பரிசுத்தமானதும் ஆழங்காண முடியாததுமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் என்றும் பரிமளம் மாறாததும் தினமும் புதுப்புது வாசனையோடு தோன்றக்கூடியதுமாக இருப்பது இரவு மட்டும் தான்."

"மண்புழு கூட தன் இருப்பிடத்திலேயே இருக்கிறதில்லை. ஈரம் கண்ட இடத்துக்கு ஊர்ந்துகிட்டு தான் இருக்கு. மனுசன் மட்டும் தான் நட்டகல்லு மாதிரி இருப்பிடம் விட்டு அசையாம இருக்கப் பார்க்கிறான்"

"ஆம்பளையோ பொம்பளையோ இஷ்டமா இருந்தாத் தானே மனசு ஒட்டும். வலிய ஒட்டு ஒட்டுனா சேர்ந்திருமா? நம்ம குழந்தைகள் நம்ம நம்பி நம்ம வித்தா வந்து பிறந்திருக்குடா. என்ன கஷ்டம் வந்தாலும் குழந்தைகளை விட்டுக் கொடுக்க கூடாதுடா"

நான் ரசித்த பத்ரகிரி திருச்சிற்றம்பலம் வைத்தே கதை முடிவு பெறுகிறது. நான் மிகவும் ரசித்த ஒரு நாவல்.

29 March, 2021

இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் மிகப் பெரிய கனியாக நான் ஸூம் மீட்டிங்குகளை பார்க்கிறேன். அப்படி ஒரு கனியை நேற்று ருசித்தேன். எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார் அவர்களின் முக நூல் பக்கத்தில் இந்த தகவலைப் பார்த்தேன். நேற்று (27.3.2021) இரவு 8.30க்கு ஒரு ஸூம் மீட்டிங் "ஏன் இலக்கியம்." என்ற தலைப்பில்  அவர் பேசப் போவதாக. பென்சில்வேனியாவில் ஏற்பாடு செய்திருந்தார்கள். கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.


அவர் பேசியதில் நான் கிரகித்ததில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

வாசிப்பு சிந்தனையைத் தூண்டும். இன்றைய வாழ்க்கையில் படிப்பு என்பதே  சிந்திப்பதைக் குறைத்துக் கொண்டு  வாழ்க்கைக்கான investment ஆக எடுத்துக் கொண்டதால் தான் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவில் குறைந்து விட்டன. இந்தியாவில் புதியவை கண்டுபிடித்து 60 ஆண்டுகள் ஆகிடுச்சுன்னு சொல்றாங்க என்றார். 


எனக்கு புதியதாய் பல செய்திகள் இந்த மீட்டிங்கில் கிடைத்தன. அதில் ஒன்று  பார்சிக்களின் இறுதிச் சடங்கு நடத்தும் முறை.  பார்சிக்கள் இறந்தவர்களை புதைப்பதுமில்லை எரிப்பதுமில்லை. அவர்களது சூர்யக் கோயிலின் உச்சியில் இறந்த உடலைப் போட்டு விடுவார்கள். கழுகுகளுக்கு அந்த உடல் உணவாகி விடும் என்னும் புதிய செய்தி எனக்குக் கிடைத்தது.(இதைப் பற்றி இன்னும் விரிவாய் தெரிந்து கொள்ள வேண்டும்)


ஒரு கதை சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வரக் கூடியது என்பதற்கு உதாரணமாக கிறுக்குக் கோழி என்று ஒரு கதை சொன்னார். சாதாரணமாக நாம் கடந்து போகும் ஒரு கதையோ கவிதையோ ஒரு சிலரின் வாழ்க்கையையே மாற்றும் திறன் படைத்தது என்றார். 


 விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கொடுக்கும் ஒரு sofistication in life நம்ம எதிக்ஸை தொலைக்க வைக்கிறதோ எனச் சந்தேகம் எழுகிறது என்றார். இந்த இடத்தில் தான் நான் மாறுபட்டேன். அந்த விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு பகுதி தான் ஸூம் மீட்டிங். இன்றைய லக்ஷ்மி சரவணகுமாரின் பேச்சைக் கேட்டவர்கள் கண்டிப்பாக தன் வாசிப்பின் நீளத்தையும் ஆழத்தையும் அதிகரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. 


தமிழ்நாட்டில் பெரிய பெரிய நூலகங்கள் பேய் பங்களா போல் இருக்கின்றன என்றார். கேரளாவில் அவர் ஒரு டூர் போன போது ஒரு நூலகம் புது பளபளப்புடன் இருந்ததாம்.  விசாரித்த போது அங்கே நூலகங்களை புதுப்பித்து புத்தகங்களில்  பழையன நீக்கி புதியவை சேர்த்து எழுத்தாளர்களை மக்களிடம் சென்று புத்தக வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்க வைத்து வாசிப்பை விரிவுபடுத்துகிறார்கள் என்று தெரிந்ததாம்.  நம் தமிழக நூலகங்களில் இன்னும் வளர்ச்சி வேண்டும் என்று தோன்றியது. 


நல்ல கதைகளை  வாசித்து வரும்  ஒருவன் வாழ்க்கையை பார்க்கும் முறைக்கும் வாசிக்கும் பழக்கம் இல்லாத  ஒருவன் பார்க்கும் முறைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன என்கிறார். உண்மை தான். ஏன் நம்மை சுற்றி உள்ள பலருக்கு பார்வை விசாலம் இல்லை என நினைப்பேன். அதற்கு இந்த வாசிப்பு குறைபாடு தான் காரணம் என்று புரிந்தது. 


சர்வாதிகாரிகள் பொதுவாகவே புத்தகங்களுக்கு எதிரானவர்களாகவே இருந்திருக்கிறார்கள். புத்தகங்கள் மக்களுக்கு சிந்திக்க சொல்லிக் கொடுத்து விடும் என்ற அச்சம் தான் காரணம். என்று சொல்லி புத்தகங்கள் எவ்வளவு வலுவான ஆயுதங்கள் என்று புரிய வைத்தார். 


ஒரு நாவல் எழுதுவதற்காக தான் கம்போடியா போய் வந்த அனுபவத்தை சொன்னார். எழுத்துத் தொழில் மேல் அவருக்கு இருக்கும் sincerity மெய் சிலிர்க்க வைத்தது.


பயில்வானின் மத்தளம். என்னும் ஒரு கதையைப் பற்றி சொன்னார். ஒரு கைப்பிடி அளவு கோதுமை என்ற ஒரு கதை படித்தாலே நமக்கு போதுமான வாழ்க்கை அறிவு கிடைக்கும் என்றார். அவரது பரந்த வாசிப்பு என் அகங்காரத்தில் ஒரு அடி வைத்தது. பத்து வயதிலிருந்து வாசிக்கிறேன். நிறைய வாசித்து விட்டேன் என்ற என் எண்ணம் சரிந்தது. 


நமது தமிழ் மொழியிலேயே இரண்டு தலைமுறைக்கு வாசிப்பதற்கான விஷயங்கள் இருக்கின்றன. இன்னும் எழுதிக் கொண்டே இருக்கிறார்கள் என்றார். உண்மை தான். வாசிப்பை அதிகரிப்போம். வாசிப்பதில்லை என்றால் இன்றே தொடங்குவோம்.

23 March, 2021

#Bachelor days
அப்போ நான் ஒன்பதாவது படிச்சுகிட்டு இருந்தேன். கொஞ்சம் கூடுதலாகவே துரு துரு. சுற்று வட்டாரத்தில் முதன் முதலாக சைக்கிள் ஓட்டிய பெண். பையன்கள் பேச நினைத்தாலும் எங்க அப்பா கல்லூரிப் பேராசிரியரானதால் பயப்படுவார்கள்.
ஒரு நாள் மாலை நானும் என் தோழியும் சயன்ஸ் மிஸ்ஸிடம்  சந்தேகம் கேட்பதற்காக சென்றோம். போகும் வழியில் சிவன் கோயில் தேர் அருகே வரும் போது தேரை ஒட்டி நானும் எனக்கடுத்து தோழியும் வர ஒருவன் வேகமாக வந்து என்னை மோதியபடி தேருக்கும் எனக்கும் இடையே சென்றான். என் தோழி "எடு செருப்ப" என்றாள். அப்போ திட்டுவதற்கு பொதுவாக உபயோகிக்கும் வார்த்தை. நாங்க போன இடத்தில் நேரமாகிட்டுது. இருட்டி விட்டது. திரும்பும் போது தேரின் அருகில் ஒரு கூட்டமாய் பையன்கள் நிற்கிறார்கள். என் தோழி "பயப்படாம வா. நாம கடந்து போயிடுவோம்" னு சொல்றா. எனக்கு கை கால் எல்லாம் உதறுது. நாங்க பயப்படுவோம்னு நினைச்சவங்க நாங்க தைரியமா கடந்ததும் ஒண்ணும் சொல்லாம விட்டுட்டாங்க.

நாங்க வீட்டுக்கு வந்தும் இந்த சாகஸ செயலை பேசிகிட்டு இருக்கிறோம். எங்க அப்பா வந்திட்டாங்க. என்னன்னு விசாரிச்சதும் என் தோழி விஷயத்தை சொல்லிட்டாள். அந்த பையன்்களின் ஒரு தோழன் எங்க வீட்டுக்கு அடுத்த வீடு. அங்கே எல்லோரும் வந்து நின்னு பேசிகிட்டு இருந்தாங்க எங்க அப்பா இடித்தது யாருன்னு கேட்டு அவனை வீட்டுக்கு கூப்பிட்டு மிரட்டி அனுப்பிட்டாங்க.

இவன் எல்லோரிடமும் நானும் அவளும் காதலிக்கிறோம். அதனால அவங்க அப்பா என்னைக் கூப்பிட்டு திட்டினார்னு சொல்லி என்னை பழி வாங்கி விட்டான். இது எங்களுக்கு தெரிய வரவே இல்லை. மூன்று வருடங்களில் எங்க அப்பா இறந்த போக எனக்கும் என் இன்றைய கணவருக்கும் காதல் பிறந்தது. அப்போ அதே பையன் இவரிடமும் "என்னை அவள் காதலிக்கிறாள். எனக்காக இந்தவாக மதம் மாற தயாராய் இருக்கிறாள்" என்று கதை விட்டு இருக்கிறான். என்னவர் மனம் பொதுவாகவே புதைகுழி. என்னிடம் ஏதும் கேட்கவில்லை.

ஐந்து வருடங்கள் கழித்து எனக்கும் இவருக்கும் திருமணமான பிறகு என்னிடம் கேட்கிறார். "அவன் ஏன் என்னிடம் இப்படி சொன்னான். நீ அவனோடு பேசி இருக்கிறாயா? " என்றார். அப்பொழுது நடந்த விவரத்தையும் எங்க அப்பா திட்டியதற்கு அவன் இப்படி பழி வாங்கி இருக்கிறான் போலிருக்கிறது என்று சொன்னேன்.

நல்ல வேளை காதலித்தவரையே திருமணம் முடித்தேன் இல்லையென்றால் இவன் எத்தனை பேரிடம் இப்படி சொல்லி என் திருமணத்தை தடை செய்திருப்பான். நான் அடிக்கடி சொல்வது இது தான் "தண்டனை அனுபவிக்க நாம் கண்டிப்பாக தவறு செய்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை"

பதின் வயதில் நான் அனுபவித்தது தான் இன்றும் யார் யாரைப் பற்றி தவறாகப் பேசினாலும் அதை அலட்சியப்படுத்தி உதற என்னால் முடிகிறது.

10 March, 2021

 ஜெயமோகனின் "கொதி" என்னும் சிறுகதையைப் படித்ததும் எனக்கு என் வாழ்வின் ஒரு நிகழ்வு நினைவுக்கு வந்தது. 

அப்போ நான் நாகர்கோயிலில் பணி புரிந்து கொண்டிருந்தேன். பெரிய அலுவலகமாக இல்லாமல் இரண்டு மூன்று வீடுகளை வாடகைக்கு எடுத்து செக்‌ஷன்களை பிரித்து பிரித்து வைத்திருந்தார்கள். நான் பில்லிங் செக்‌ஷனில் இருந்தேன். அப்போ வெளியூர்கள் வெளிநாடுகள் போன் பேச வேண்டுமென்றால் STD ISD போட்டுத் தான் பேச வேண்டும். எந்த இடம் எவ்வளவு நேரம் என்ன வகையான கால்கள் என்பதெல்லாம் எழுதப்பட்ட டிக்கெட்டுகள் கட்டு கட்டாக எங்கள் செக்‌ஷனுக்கு வரும். 

அதை இரண்டு விதமாக தகவல் சேகரிப்பார்கள். இரண்டு பேர் வெறும் தொகைகளை மட்டுமாய் அடித்து ஒவ்வொரு தொலைபேசி எண்ணுக்கும் மொத்தமாய் எவ்வளவு தொகை என்று கணக்கெடுப்பார்கள். வேறு இரண்டு பேர் முழு விவரணைகளோடு கணக்கெடுப்பார்கள். இரண்டையும் டேலி செய்து அடித்த தொகையை சரி பார்ப்பார்கள். மூன்றாவது இடம் பிராட்மா. பிரம்மா இல்லைங்க பிராட்மா . 

ஆரம்ப கால கம்ப்யூட்டர் ஒரு அறையை முழுவதும் அடைத்து இருந்ததாமே அது  போல் இந்த பிராட்மா மெஷின் ஒரு அறை முழுவதும் அடைத்து இருக்கும். ஒரு பெரிய யானையை அங்குசம் கொண்டு அடக்குவது போல் ஒருவர் அந்த மெஷினை ஆண்டு கொண்டிருப்பார். அவர் ஏற்கனவே பெரிய உருவம். பெயர் செல்வராஜ். அந்த அறையின் புழுக்கம் தாங்காமல் தன் ஷர்ட்டைக் கழட்டிப் போட்டு பேன்ட்டும் பனியனோடும் இருந்து பணி புரிவார். அவருக்கு மட்டும் அந்த சலுகை உண்டு. 

வீடு தான் அலுவலகம் என்பதால் சாப்பிடுவதற்கு தனி அறை கிடையாது. அவரவர் இடத்திலேயே அமர்ந்து சாப்பிடுவார்கள். நானும் என் தோழியான காசி மாரியம்மாளும் வீட்டின் முன் பகுதியில் போர்ட்டிகோவில் அமர்ந்து மதிய உணவு எடுத்துக் கொள்வோம். நாங்கள் சாப்பிடும் போது ஒரு நாய் வந்து எங்கள் முன்னால் நின்று கொண்டு இருக்கும். அதற்கு உணவு அளித்திருப்பேனா என்று உறுதியாக எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் சின்ன வட்ட டிபன் பாக்சில் கொண்டு செல்லும் சாப்பாடு எங்களுக்கே பத்தியும் பத்தாமல் தான் இருக்கும். ஒரு வேளை போட்டும் இருக்கலாம். ஏனென்றால் போட்டதால் தான் பல நாட்கள் அந்த நாய் வந்திருக்கும். அந்த நாய் தினமும் நாங்கள்  சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே இருந்ததில் எனக்கு கொதி விழுந்து விட்டது. உணவைக் கண்டாலே வெறுப்பு. கொண்டு செல்லும் டிபன் பாக்ஸ் உணவில் கொஞ்சம் சாப்பிட்டதும் அதற்கு மேல் சாப்பிடவே முடியாது. மொத்த உணவையும் நாய்க்கு போட்டு விடுவேன். உடல் மெலியத் தொடங்கி விட்டது. அப்பொழுது கதையில் வந்தது போல் கொதி எடுத்த ஞாபகம் லேசாக இருக்கிறது. சரியாக ஞாபகம் இல்லை. 

இன்று நவீன மயமான  உலகில் அந்த கொதி விழுவதும் எடுப்பதும் கூட குறைந்து விட்டது. பார்க்க வைத்து சாப்பிடாதே. பகிர்ந்து சாப்பிடுன்னு சொல்லிக் கொடுக்கிறோம். குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பகிர்ந்துண்ணுதல் பழக்குதல் நலம். 

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விஷயம் நடந்தது. பழ ஜூஸ் என்று பல பழங்களையும் வெட்டி போட்டு ஒரு பெரிய எவர்சில்வர் அண்டாவில் கலந்து ஐஸ் போட்டு  ஜூஸ் பழக்கடைகளில் வைத்திருப்பார்கள். அது எனக்கு ரொம்ப favourite. என் கணவர் திட்டினாலும் எனது சாய்ஸ் அதுவாகத் தான் இருக்கும். என் கணவர் அது விற்க முடியாமல் கொஞ்சம் சிதைந்து போன பழங்களால் பண்றது சாப்பிடாதே என்று சொல்வார்.நாமளா கேட்போம்!

அப்படி ஒரு வேலை முடிந்து நான் கடையில் நின்று குடித்துக் கொண்டிருந்த போது ஒரு வயதான பெண்மணி என்னைப் பார்த்து கொண்டே வந்தார். எனக்கு கொரோனா பல உழைக்கும் நடுத்தர மக்களை உழைப்பில்லாமல் ஆக்கி இரந்து பிழைக்க வைத்திருந்தது ஞாபகம் வந்தது. "குடிக்கிறீங்களாம்மா" ன்னு கேட்டேன். சரி என்பது சரியாகத் தெரிந்து விடாமல் தலையை அசைத்தார்கள். அவர்களுக்கும் ஒரு தம்ளர் வாங்கிக் கொடுத்து நகர்ந்தேன். சில நேரங்களில் சில நல்ல விஷயங்கள் திடீரென மனதில் உதிக்கும். இனி ஹோட்டல்களிலோ பழக் கடைகளிலோ வெளி இடங்களில் உணவு உண்ண நேர்ந்தால் அருகில் இருக்கும் ஒரு இல்லாதவருக்கும் உடனே உணவு வாங்கி அளித்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன். 

ஒரு சிறுகதை நம்முள் எத்தனை எண்ணங்களை கிளறி விடுகிறது.

 MRI scan

(கொஞ்சம் நீளமான பதிவு தான். கடந்து போகாமல் வாசியுங்கள். )


பிள்ளைகளை,  பெற்றவர்களாகிய  நாம் அன்பைக் கொட்டித் தான் வளர்க்கிறோம். பிரதி அன்பை எதிர்பார்ப்பதில்லை. ஆனால் முக்கியமான சந்தர்ப்பங்களில் அவர்கள் அன்பைக் காட்டும் போது நாம் மகிழ்ந்து போகிறோம். அது தான் அவர்களுக்கு அவர்கள் பிள்ளைகளுக்கு ஆசீர்வாதமாய் அமையும். 


ஐந்து மாதங்களுக்கு முன் நான் திடீரென்று சுகமில்லாமல் ஆன போது அவசரத்துக்கு CT Scan எடுத்து மருந்து கொடுத்தார்கள். அதில் ஒன்று blood thinner க்காக உள்ளது. அதை ராஜஸ்தானில் இருக்கும் வரை தொடர்ந்து எடுக்க சொன்னார்கள். 

இப்போது ஒரு MRI scan எடுத்த பிறகு மருந்து தொடர்ந்து எடுக்க வேண்டுமா என்பதை பார்க்கலாம் என்று மருத்துவர்  ஆலோசித்ததால் ஒரு MRI அனுபவம்.


MRI எடுப்பதற்கு முன் எந்த உலோகமும் உடம்பில் இல்லாதவாறு எடுத்து விடச் சொல்கிறார்கள். புடவையில் குத்தும் சேஃப்டி பின் (பற்களை நேர் செய்வதற்காக போடப்படும் கிளிப் இருக்கிறதா என உறுதி செய்து கொள்கிறார்கள்) முதற் கொண்டு ஆபரணங்கள் அனைத்தையும் கழட்டி விடச் சொல்கிறார்கள். அதனால் உடன் ஒருவரை அழைத்துச் செல்லுதல் நலம். 


அப்படி இல்லாமல் தனியாகச் செல்ல நேர்ந்தாலும் ஒரு லாக்கர் கொடுக்கிறார்கள் அதில் வைத்துக் கொள்ளலாம். சில வருடங்களுக்கு முன் அம்மாவை MRI scan எடுக்க அழைத்துச் சென்ற நினைவு வந்தது. மிகப் பெரிய அந்த மெஷினில் படுக்கச் சொன்னதும் பயந்து போய் என் கை விரல்களை இறுகப் பற்றிக் கொண்டதன் ஈரப் பளபளப்பை இப்போது உணர்ந்தேன். என்னை வெளியேறச் சொன்னதும் கையை இன்னும் இறுகப் பற்றிக் கொண்டார்கள். 


இப்போது நான் அவர்கள் சொன்னது போல் தயாராகி அந்த பெரிய மிஷினில் ஏறிப் படுத்தேன். 

இரு பஞ்சு உருண்டைகளை கொடுத்து காதுகளில் அடைத்துக் கொள்ளச் சொன்னார்கள். மெஷின் பெரிய சத்தத்துடன் இயங்கும் என நினைக்கிறேன். தலை அசைந்து விடாமல் அணைவாக வைக்கிறார்கள். கையில் பந்து போன்ற ஒன்றைக் கொடுத்து ஏதும் எமர்ஜென்சின்னா இதை அழுத்துங்கள் என்றார்கள். அப்போது ஒரு "தடக்" எமர்ஜென்சின்னா என்ன செய்யும் எனக் கேட்டேன். எது எமர்ஜென்சி என்று தெரியாமல் இருந்து விடக் கூடாதல்லவா. ஏதேனும் discomfort இருந்தா இந்த பந்தை அழுத்தினா நாங்க வந்து விடுவோம் என்றார்கள். அப்பொழுது தான் அந்த மெஷினோடு நம்மை தனியே விட்டு அவர்கள் விலகப் போகிறார்கள் என்பது புரிந்தது. ஒரு பதினைந்து நிமிடத்தில் முடிந்து விடும் என்று சொல்லி சென்றார்கள். மெஷின் ஆன் ஆனது. தடதடத்தது. நாம் காதுகளையும் அடைத்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டதால் அதன் அதிர்வின் ஆக்சுவல் டெசிபல் தெரியவில்லை. கண்களை மூடிக் கொண்டிருப்பதால் உறங்கி விடக் கூடாது என்கிறார்கள். 


நான் அந்த பதினைந்து நிமிடத்தை கடக்க இப்படி யோசித்தேன். மனதில் பயமும் எழுந்து விடக் கூடாது. உறங்கியும் விடக் கூடாது. கடவுளை நம்புபவர்களின் ஆயுதமான பிரார்த்தனையை கையில் எடுத்தேன். நாங்கள் கிறிஸ்தவர்கள்,  சொல்லும் ஜெபமாலையை சொல்லத் தொடங்கினேன். சொல்லத் தொடங்கும் முன் இந்த டெஸ்ட் எடுக்கும் போது நான் பயப்படக் கூடாது என்றும் இதன் ரிசல்ட்டில் எனக்கு தொந்தரவான எந்த செய்தியும் வரக் கூடாதென்றும் வேண்டிக் கொண்டேன். பதினைந்து நிமிடங்கள் பதினைந்து நொடிகளாக கடந்து போனது. இடையிடையே சின்ன சின்ன அதிர்வு. ஒரு சின்ன அசைவில் நம் உடல் முன்னேறுவது தெரிகிறது. டைப் அடிப்பதைப் போலவோ மரங் கொத்திப் பறவை ஏற்படுத்தும் சத்தம் போல டொக் டொக் என்றோ கேட்டுக் கொண்டே இருக்கிறது. வழக்கம் போலவே அறிவியல் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. 


அங்கே முடிந்த பிறகு கடலில் இறங்கி குளித்த பின் நல்ல தண்ணியில் குளிப்பது போல ஏற்கனவே எடுத்த மெஷினுக்கு தங்கை போல இருந்த இன்னொரு மெஷினில் மறுபடியும் டெஸ்ட் செய்தார்கள். வெளியே வந்ததும்  ரிபோர்ட் தயார் ஆனதும் நம் செல்லுக்கு மெசேஜ் வரும் என்றார்கள். தலை லேசாக வலிப்பது போல் இருந்தது. அது என் கற்பனையாக கூட இருக்கலாம். காரை நானே ஓட்டி வந்திருந்ததால் மறுபடியும் ஓட்டிச் செல்லலாமா என்ற என் ஐயத்தை தெளிவுபடுத்திக் கொண்டேன். செல்லலாம் என்று சொல்லி விட்டார்கள். ஒரு வியாதி தாக்கிய நேரத்தில்  இதே ஸ்கான் எடுக்கச் சென்றிருந்தால் இவ்வளவு நிதானமாக இருந்திருப்பேனா என்பது சந்தேகம் தான். என் டார்லிங் வேகன் R ஐ கிளப்பி ஜாலியாக ஓட்டத் தொடங்கினேன். மறுநாள்  ரிப்போர்ட் ரெடி ஆனதும் நம் போனுக்கு தகவல் வரும் என்று சொன்னார்கள். ஆனால் சில மணி நேரங்களிலேயே தகவல் வந்து விட்டது. 


நாங்கள் மறு நாள் போய் ரிபோர்ட் வாங்கி மருத்துவரையும் பார்த்தோம். பயப்படும்படி ஏதும் இல்லை என்றும் பிரச்னை சிறிய அளவில் இருப்பதால் மருந்து எடுத்துக் கொள்ளும் படியும் சொன்னார்கள். மூளை என்பது நம் உடலின் very delicate darling. அதை மிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.


என் பிள்ளையை நான் ஆசீர்வதித்த சமயம் இது தான்.  தன் பிசி schedule யிலும் தலைக்கு மேல் அவள் பணிகள் மிதந்து கொண்டிருந்த போதும் இந்த டெஸ்ட்டை எடுத்து விட வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து சென்ற அந்த பொழுது,  என்னை நான் பெற்ற மகளை வாழ்த்தச் சொன்னது. 


என்ன தான் தைரியமாக இருந்தாலும் என் மிரட்சி கண்களிலே தெரிந்ததால் அதை படத்தோடு பதிய வேணும் என்று அந்த நேரத்திலும் செல்ஃபி எடுத்த கூத்தை எங்கே போய் சொல்ல 😀

09 February, 2021

 #வாழ்க்கை பயணம்

ஆசையைத் துற! 

பற்றற்று இரு!!


பெண்களுக்கு பொதுவாகவே புடவை நகை மேல் பெரிய ஈர்ப்பு இருக்கும். அதிலும் புடவை என்பது தன்னளவில் முடியும் என்பதால் புடவை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வமில்லாத பெண்கள் ரொம்ப அரிது. வசதி உள்ளவர்கள் வாங்கிக் குவிப்பார்கள். வசதி இல்லாதவர்கள் தவணை முறையிலாவது நல்ல நாள் பெரிய நாளுக்கு கட்ட வாங்கி வைப்பார்கள். 


என் அம்மாவிலிருந்து ஆரம்பிக்கிறேன். எங்க அப்பா இருக்கும் வரை மிக நன்றாக அவர்கள் உடுத்தி பார்த்திருக்கிறேன். அப்பா இறந்தது கிறிஸ்மசுக்கு ஒரு வாரம் இருக்கும் போது டிசம்பர் 18 ஆம் தேதி. அந்த கிறிஸ்மஸ்சுக்கு  அம்மாவுக்கு எடுத்து வைத்திருந்த பட்டுப் புடவை நன்றாக நினைவிருக்கிறது. பசுஞ் சாணத்தின் நிறத்தில் செல்ஃப் பார்டர். அவர்கள் திருமணப் புடவையும் தகதகவென நினைவில் மின்னுகிறது. உடம்பு முழுவதும் தங்க நிறத்தில் முழுவதும் ஜரிகையாய். அப்பா இறந்து ரொம்ப வருடங்கள் கழித்து கட்டப்படாமலே இருந்த அந்த புடவையை நான் ஒரு நாள் கட்டவா எனக் கேட்டேன். (இப்பொழுது நினைத்தால் அபத்தமாக இருக்கிறது) அம்மா மறுத்து விட்டார்கள். வேற எந்த புடவையையும் எடுத்து கட்டு. இது வேண்டாமென. நாங்கள் பெண்கள் மூணு பேரும் ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும்  எடுத்துக் கொடுப்போம். ரொம்ப சந்தோஷமா வாங்கிக் கொள்வார்கள். ஆனால் வேறொரு சந்தர்ப்பத்தில் அதை விட அதிக விலை போட்டு எங்களுக்கு எடுத்துக் கொடுத்து விடுவார்கள். அந்த புடவைகளை பீரோவில் மிக நேர்த்தியாக அடுக்கி வைத்திருப்பார்கள். எத்தனை இருந்தாலும் வீட்டில் பழையதையே கட்டி இருப்பதைப் பார்த்து ரொம்ப அழுத்திச் சொல்லி அதை மாற்றினோம். மிகுந்த முயற்சிக்குப் பின் வீட்டில் இருக்கும் போதும் நல்ல புடவை கட்ட வைத்தோம். இறந்த பிறகு அம்மாவின் அத்தனை புடவைகளையும் தானமாக கொடுத்தோம். 


என் தங்கைக்கு ஒரு பழக்கம் உண்டு. மொத்தம் இருபது புடவைகளே வைத்திருப்பாள். அதற்கு மேல் வாங்கும் போது இருப்பதை யாருக்காவது கொடுத்து விடுவாள். அவள் உடுத்தும் அத்தனை புடவைகளும் புதுக் கருக்கு மாறாமல் இருக்கும். ஆனால் நன்கு விலை உயர்ந்த புடவைகள் மட்டுமே வாங்குவாள். 


இதில் நான் அவளுக்கு நேர் எதிர் ரகம். ஏகப்பட்டது வாங்கி சேர்த்து வைத்திருப்பேன். திருமணம் ஆன புதிதில் நான் ஒரு வீம்பில் வீட்டிலிருந்து நாலே நாலு புடவைகளை மட்டும் எடுத்து போயிருந்தேன். போய் கொஞ்ச நாளிலேயே ரொம்ப சிரமமாக இருக்க எங்க தாய் மாமா மூலம் இன்னும் கொஞ்சம் சேலைகளை அம்மாவிடமிருந்து வாங்கி வரச் சொல்ல அம்மா நெத்தியடியாக சொல்லி அனுப்பி விட்டார்கள். "போகும் போது என்ன தேவையோ எல்லாம் எடுத்திட்டு போன்னு சொன்னேன். வீம்புல நாலை மட்டும் எடுத்திட்டு போச்சு. வாழ்க்கை என்னனு படிக்கட்டும் "னு சொல்லி தர மறுத்து விட்டார்கள். அதன் பிறகு என் கணவர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வாங்கிக் கொடுத்தார். திருமணத்துக்கு முன்பாக நான் மிக நன்றாக உடை உடுத்தி அவர் பார்த்திருப்பதால் ஒரு குற்ற உணர்ச்சியோடு அந்த குறையை நிறை செய்தார். 


ஆரம்ப காலங்களில் வாங்கிய ஒவ்வொரு புடவையும் ஒரு உணர்வுக் குவியலால் நெய்ததாக இருக்கும். எனக்கு அவர் முதன் முதல் வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவையும் நன்றாக நினைவிருக்கிறது. மாம்பழ மஞ்சளில் அரக்கு பார்டர். பார்டர் முழுவதும் பொடியாக கட்டம். 


அலுவலகம் செல்லும் வரை தேவையாகத் தோன்றிய அதிக உடைகள் இப்பொழுது பாரமாகத் தெரிகிறது. இன்று எனக்கு அம்மாவுக்கு வந்த அதே விரக்தி நிலை வந்திருக்கிறது. ஏன் இத்தனை வாங்கி சேர்த்து வைத்திருக்கிறோம். தேவைக்கு மட்டும் வைத்து கொண்டு மீதிஎல்லாவற்றையும் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடும் மன நிலை வந்து விட்டது. 


ஓரளவு நம் தேவைகள் நிறைவேறி விட்டாலே வயது அதிகமாகும் போது இந்த ஆசையைத் துறக்கும் மன நிலை வந்து விடும் போலிருக்கிறது. 

கூட்டிக் கழித்துப் பார்த்தால் என் தங்கை செய்வது தான் சரியென்று படுகிறது. பீரோ பீரோவா சேர்த்து வைக்கவும் வேண்டாம். ஒரு இக்கட்டான நேரத்தில் தூக்கிக் கொடுக்கவும் வேண்டாம். எப்போதுமே Less luggage more comfort  தானே.

 இது புடவைக்கு மட்டுமல்ல நாம் சுமந்து கொண்டிருக்கும் கோபங்கள் வைராக்கியங்கள் ஆதங்கங்களுக்கும் தான்.  அப்பப்போ சுமைகளை இறக்கி விட வேண்டும்.

என்ன நான் சொல்றது? சரி தானே?

 #வாழ்க்கை பயணம்

ஒரு தோழி எழுதிய டிரெயின் அனுபவம் இந்த பதிவை எழுதத் தூண்டியது.


1984இல் நான் என் இரண்டாவது மகளைக் கருவில் தாங்கினேன். அப்பொழுது என் கணவர் கேரளாவிலுள்ள காசர்கோடில் பணி புரிந்தார். அந்த சமயம் எழுத்தாளர் ஜெயமோகன் அங்கே ஆப்பரேட்டராக பணி புரிந்தார் என நினைக்கிறேன். 

நான்  மூத்த மகளுடனும் வயிற்றில் சிசுவோடும் தனியாக இருக்க முடியாது என்பதால் எங்கள் வீட்டை நாகர்கோவிலிலிருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றினோம். அப்போ அம்மா என்னை ஏற்றுக் கொண்டிருந்தார்களே ஒழிய என் கணவரை ஏற்கவில்லை. அதனால் அம்மா வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீடு. என் கணவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவார். வரும் போது மட்டும் அந்த வீடு. மற்ற நேரங்களில் அம்மா வீட்டில் அவர்களோடு சேர்ந்து இருப்போம்.


 பாளையில் வீட்டிலிருந்து மார்க்கெட்டுக்கு நடந்து பஸ் பிடித்து ஜங்ஷன் போய் அங்கிருந்து சீசன் டிக்கெட்டில் டிரெயினில் தினம் நாகர்கோயில் போய் பணி புரிந்து வந்தேன். நாகர்கோயிலில் ஸ்டேஷனிலிருந்து ஆஃபீஸ் இருக்கிற இடம் அரை மணி நேரம் நடக்கணும். அப்போ அதற்கு டவுன் பஸ் இல்லை. நாள் ஒன்றுக்கு மூன்று மூன்று ஆறு மணி நேரப் பயணம் வயிற்றில் குழந்தையுடன். 


அக்டோபர் 31, 1984  அன்னை இந்திராவை சுட்டு கொன்றார்கள் என்ற தகவல் மதியம் கிடைத்தது. நாங்கள் பல துறைகளிலும் பணி புரிபவர்கள் ஒரு குரூப்பாகத் தான் வருவோம். அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொண்டார்கள். மாலை ஒரு வேளை டிரெயின் நிறுத்தப்படலாம் அதனால் மதிய டிரெயினிலேயே எல்லோரும் போய் விடுவோம் என. அப்பொழுது எனக்கு ஏழு மாதம். ஆட்டோவில் ஸ்டேஷன் நோக்கி விரைகிறேன். கலவரம் தொடங்கி விட்டது. வழி மறிக்கிறார்கள். ஆட்டோகாரர் " புள்ளைத்தாச்சியை கூட்டிட்டு போறேன். வழி விடுங்கப்பான்னு"கெஞ்சுறார். நான் கோழிக்குஞ்சைப் போல் நடுங்கி ஒடுங்கி இருக்கிறேன். ஒருவன் தலையை ஆட்டோவில் நுழைத்து பார்க்கிறான். " ஆமா புள்ளதாச்சி தாம்ப்பா" என போக சம்மதிக்கிறான். 


ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோ டிரைவரை கை எடுத்து கும்பிட்டபடி டிரெயினை நோக்கி ஓடுகிறேன். நவம்பர் 1 நெல்லை நாகர்கோவிலுக்கு  டிரெயின் விட்டு முதலாண்டு நிறைவு  நாள். அதனால் அதை டிரெயின் டே எனக் கொண்டாட தோவாளையில் நிறைய பூக்கள் ஆர்டர் செய்திருந்தோம். நாங்கள் இருந்த கம்ப்பார்ட்மென்ட்டில் ஏற்றி விட்டார்கள். வழக்கமாக கலகலப்பும் குதூகலமுமாக பயணிப்போம். அன்று அத்தனை பேர் முகங்களிலும் சோகம். ஒரு பெரிய ஆளுமையை இழந்த வருத்தம். நெல்லையில் போய் இறங்கும் போது அங்கே பஸ்ஸை நிறுத்தி விட்டார்கள். பஸ் ஸ்டான்ட் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஒரு கூடை நிறைய பூக்கள். வேறு வழியில்லாமல் பஸ் ஸ்டான்டிலேயே ஒரு இடத்தில் அந்த கூடையை வைத்தோம். ஆளுக்கு ஒரு பக்கமாக போக வேண்டும்.


 முத்து என்பவர் ஒரு பாங்க் ஊழியர். திருமணமாகாத இளைஞன். அவரிடம் என்னை ஒப்படைத்தார்கள். எங்கள் வீட்டில் கொண்டு விட்டு விடும்படி. ஜங்ஷனிலிருந்து பாளை கிட்டத்தட்ட 5கிமீ இருக்கும். நடந்தேன் வயிற்றில் பிள்ளையை சுமந்தபடி. (இப்போ எங்கே போனது அந்த மன உறுதியும் தைரியமும்??? அப்போ வயது 25. )  எங்கள் வீட்டில் கொண்டு என்னை ஒப்படைத்த பின் தான் நண்பர் முத்து நிம்மதியாக மூச்சு விட்டிருப்பார். இன்று அந்த நண்பர் எங்கிருக்கிறார். தெரியவில்லை. ஆனால் என் நினைவில் மனதில் அழியாமல் இருக்கிறார். 


இவள் தான் அன்று என் வயிற்றில் இருந்த மகள். இன்று இரு பிள்ளைகளின் தான். காலம் தான் ரெக்கை கட்டிக் கொண்டு எவ்வளவு வேகமாக பறக்கிறது.