Bio Data !!

20 March, 2024

 எனக்கு பிடித்த இன்னொரு படம் "ஆட்டம்"  மலையாளம்.

இயக்குநர் : ஆனந்த் ஏகர்ஷி ( இது இயக்குநரின் முதல் படம் என்று சொல்கிறார்கள்)
முக்கிய கதாபாத்திரத்தில் :  வினய் ஃபோர்ட், கலாபவன் ஷாஜோன், ஜரின் ஷிஹாப்

முதல் படத்திலேயே கை தட்டல் வாங்கி விடுகிறார் இயக்குநர். படத்தின் முடிவு ஒரு தேர்ந்த இயக்குநரின் அனுபவத்தை சொல்கிறது.

ஒரு டிராமா குரூப். அத்தனை ஆண் நடிகர்களுடன் ஒரே ஒரு பெண் ( அஞ்சலி)  நடிக்கிறார். எந்த வித ஆண்,  பெண் பாகுபாடும் இன்றி பழகுகிறார். அதில் பள்ளியிலிருந்தே உடன் படித்த ஒரு நண்பர்( வினீத்)  இருக்கிறார். அவரோடு ரிலேஷன் ஷிப்பில் இருக்கிறார் அஞ்சலி . ஆனால் வினய் திருமணமானவர். மனைவி உடனான விவாகரத்து வழக்கு முடிவடையாத நிலையில் அந்த நட்பு வெளியே தெரிய வேண்டாம் என நினைக்கிறார். 

நாடகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வினய் புதிதாக நடிக்க வந்த ஹரியால் பின்னுக்கு தள்ளப்படுகிறார். ஹரி சினிமாவில் நடித்திருப்பதால் கூடுதல் கவர்ச்சி. ஹரியின் வெளிநாட்டு நண்பர்கள் நாடகம் பார்த்த மகிழ்ச்சியில் ஒரு ரிசார்ட்டில் பார்ட்டி கொடுக்கிறார்கள்.
அந்த பார்ட்டியில் ஆண் பெண் வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் குடிக்கிறார்கள். ( மலையாளப் படத்தில் குடிப்பது என்பது தவறாமல் இடம் பெறுவதில் எனக்கும் உடன்பாடில்லை)

 படுக்கப் போன பிறகு அஞ்சலிக்கு ஒரு அசம்பாவிதம் நடக்கிறது. அதை தன் காதலன் வினய்யிடம் மட்டும் சொல்லி பிறருக்குத் தெரியாமல் நடவடிக்கை எடுக்கச் சொல்ல அவரும் குழுவின் சீனியரிடம் அஞ்சலியே சொன்னதாக சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்கிறார். அங்கே தொடங்குது முதல் பொய்.

குழுவில் இந்த விஷயம் விவாதிக்கப் படும் போது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அஜென்டா. ஒரு பெண்ணின் மன உணர்வுகளுக்கு அங்கே இடமே இல்லை. மொத்த குழுவாக விவாதித்தாலும் ஒத்த கருத்துள்ள இருவர் மூவராக தனியாகவும் விவாதிக்கிறார்கள்.  எல்லோர் சொல்லும் கருத்துக்கும் பின்னால் அவர்களுக்கான சுயநலம் இருக்கிறது என்பதை அடையாளப்படுத்திய காட்சிகள். 

சில பல காரணங்களைச் சொல்லி மேலும் மேலும் பொய் சொல்ல வினய் அழுத்தம் கொடுக்கும் போது அஞ்சலி என்ன முடிவெடுக்கிறாள். யார் அந்த தவறைச் செய்தவர்கள். தண்டனை பெற்றார்களா என்பதை அறிய அமேசான் ப்ரைமில் "ஆட்டம்" மலையாளப் படம் பாருங்கள்