Bio Data !!

05 February, 2024

அமுதென்பதா? விஷமென்பதா? அமுத விஷமென்பதா? எதை? நம் அஞ்சரைப் பெட்டியை. கொஞ்சம் நான் எண்ணுவதை சொல்கிறேன் கேளுங்கள். பின் சரியா தவறா என்பதை "நீங்கள் " சொல்லுங்கள் நான் கேட்டுக் கொள்கிறேன். என் தோழி ஒருவர் தினம் காலையில் எழுந்த உடன் வெறும் வயிற்றில் நாலு மிளகை வாயில் போட்டு மெல்லுவேன் என்று சொல்வார்கள். அது எதற்கு நல்லது என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதை பார்க்கிறேன். பல வெளி நாட்டினருக்கு இல்லாத, வெளி மாநிலத்தினருக்கு இல்லாத ஒரு அனுகூலம் நம் அஞ்சரைப் பெட்டி. கொரோனா வரும் வரை கிராம்பிலும் பட்டையிலும் உள்ள மருத்துவக் குணங்கள் வெளியே பலரும் அறியாத விஷயமாகத் தான் இருந்தது. பல புரதச் சத்துக்களும் தேவையான விட்டமின்களும் நிறைந்தது நம் உணவு. ஆனால் எது எவற்றுடன் எவ்வளவு சேர வேண்டும் என்பது ரொம்ப முக்கியம். அது மாறும் போது தான் அமுதம் விஷமாகிப் போகும். புளியைக் கெட்டியாக கரைத்து அதை நிகர் செய்ய உப்பை அள்ளிப் போட்டு, உரைப்பு தூக்கலாக தெரிய வற்றலையும் அதிகம் சேர்த்து இவை அத்தனையையும் சரி செய்ய எண்ணையையும் கோரி ஊற்றி நாம் ஒரு சமையல் செய்தால் அது அமுதமா? விஷமா? நாக்குக்கு ருசிஆகவே இருந்தாலும் நாம ஒரு பிடி விஷத்தை கூடுதலாக உண்போமா? . வெறும் பச்சை மிளகாயையும் உப்பையும் அரைத்து தொட்டுக் கொண்டு ருசிக்காக உண்டவர்கள் காலப் போக்கில் கும்பியும் குடலும் புண்ணாகி உப்பு சப்பற்ற உணவை உண்டது எனக்குத் தெரியும். பொரியல் கூட்டு வகையறா எங்களுக்கு பிடிக்காது ஃப்ரை ஐட்டம் தான் செய்வோம் என்பவர்கள் நாளானால் எண்ணெயே இல்லாமல் சமைக்க நேருகிறது. நாம் ஒரு விஷயத்தை சிந்திக்க வேண்டும் . ஒரு குடும்பத்தின் அத்தனை பேரின் உடல் நலம் அந்த வீட்டின் சமையலறை யார் பொறுப்பில் இருக்கிறதோ அவர்கள் கையில் இருக்கிறது. பல வீடுகளில் வீட்டுப்பெண்களின் கையில் , சில வீடுகளில் வீட்டு ஆண்களின் கையில். இன்னும் சில வீடுகளில் சமையல்கார பெண்மணிகளின் கையில். அந்த பொறுப்பை எடுத்துக் கொண்டவர்களுக்கு அந்த வீட்டில் உள்ள அத்தனை பேர் உடல் நலமும் கவனத்தில் இருக்க வேண்டும். சமையல் வேலை செய்பவர்களுக்கு இருக்குமா? அதனால் தான் நான் வலியுறுத்தி சொல்வது சமையல் பொறுப்பை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள் என்று. இதைச் சொல்ல எனக்கு முழுத் தகுதியும் இருக்கிறது. என் அம்மா வீட்டில் சேர்ந்திருந்த காலம் தவிர 44 ஆண்டுகளை நெருங்கும் என் திருமண வாழ்வில் நான் உதவிக்கு ஆள் வைத்துக் கொண்டதே இல்லை. இதனால் நான் சொல்ல வருவது, இத்தகைய அபூர்வ அமிர்த சுரபியாக இருக்கும் நம் அஞ்சரைப் பெட்டியை, சரியாகப் பயன்படுத்தி நம் உடல் நலம் காப்போம். இன்று அத்தியாவசிய தேவை உயிர் வாழ்பவர் அத்தனை பேருக்கும் பணமாக இருந்தாலும் அதை தொட்டு அடுத்து close range ல் வருவது ஆரோக்கியமும் தான். பின் குறிப்பு: என் வீட்டில் உள்ளவர்கள் நீ ரொம்ப health conscience ஆ ஆகிட்ட. எப்போ பார்த்தாலும் உடல் நலம் பற்றியே பேசிக்கிட்டு இருக்கிற என்கிறார்கள். நான் மட்டுமா நண்பர்களே!!