Bio Data !!

27 January, 2011

சிகரம் சமைத்திட வா ! சாதனைப் பெண்ணே !!

குருவியின் கொறித்தலும்,
கோழியின் தூக்கமும்,
எருமையின் சுரணையும்,
குதிரையின் பாய்ச்சலும்  கொண்டு
 சிகரங்கள் சமைக்கும் 
சாதனைப்  பெண்ணே !

                                               இரைப்பைக்குள்
                                               அருவமாய் சுருண்டு கிடக்கும்
                                                பொறாமை நாகம்
                                                 சீறிப் படமெடுத்து தன்
                                                  விஷப் பற்களால்                         
                                                  உன்னைக் கொத்தக் கூடும்.
                                                  உன் சாதனை பார்த்த நொடி. 

கலங்கி விடாதே,
சிதறி விடாதே,
படமெடுத்தல்  தானே
நாகம் என்று விலகி விடு.
பறவைக்கு ஓர் குணம்
பாம்புக்கு மற்றொன்று.
இரண்டும் ஒன்றாய் இல்லை என்று 
ஏங்கி விடாதே. 

                                                     பாராட்டும் பழிச்சொல்லும்
                                                     ஒன்றெனவே கொண்டு
                                                     சிகரம் சமைத்திட வா !
                                                     சாதனைப் பெண்ணே !!






21 January, 2011

வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய நற்செய்தி,

வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய நற்செய்தி, 
அம்மா அப்பா வைத்த பேரை திருப்தி இல்லைன்னு வளர்ந்த பிறகு மாற்றிக்கிறோமே அது போல் நமது செல் தொலைபேசி ஆப்பரேட்டர்  மேல் அதிருப்தி இருந்தால் எண்ணை மாற்றாமல் ஆப்பரேட்டர் மட்டும் மாற்றிக் கொள்ளலாம். 
இந்த வசதி உலகின் பல நாடுகளில் எப்போதோ வந்திருக்க நமக்கும் வந்தது நல்ல காலம். 
வாடிக்கையாளர்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்து இருக்கும் இந்த நாளில், அவர்கள் முன் சாய்ஸ் பரந்து விரிந்து கிடக்கிறது. 
வாடிக்கையாளர் சேவை மையங்களில் பணி புரிபவர்கள், தங்கள் சொல், செயல், எண்ணம் அனைத்திலும் மாற்றம் கொண்டு வர வேண்டிய கட்டாய காலம் இது. சொல், செயல் சரி, அது என்ன எண்ணம் என்கிறீர்களா? எண்ணத்தில் மாற்றம் கொண்டு வந்து விட்டால், சொல், செயல்  பற்றி கவலைப் பட வேண்டியதில்லை, இல்லையென்றால் நாம் அசந்த நேரம் படம் எடுத்து ஆடி விடும் சொல் செயல் மூலம். 
சரி விஷயத்துக்கு வருவோம். 
மொபைல்  எண் மாறாமல் நிறுவனத்தை மாற்றிக் கொள்ள நினைத்தால் நாம் செய்ய வேண்டியது இது தான்:
port (space) present mobile number,  send sms to 1900
எட்டு இலக்கத்தில் ஒரு எண் ,உங்கள் கை பேசிக்கு எஸ் எம் எஸ் இல் வரும். 
எண் மாற்றுவதற்காக உள்ள விண்ணப்பத்தையும்(அதில் எஸ் எம் எஸ் இல் வந்த எண்ணை தவறில்லாமல் எழுதவும்), புது சிம் பெறுவதற்கான விண்ணப்பத்தையும் இணைத்து   அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தில் கொண்டு கொடுக்கவும். எட்டு இலக்க எண் வந்து விட்டால் குறுகிய கால இடைவெளி தான் கொடுக்கப் பட்டிருப்பதால் உடனடியாக விண்ணப்பத்தை கொடுக்கவும். 
எண் மாறுவதற்கு பத்தொன்பது ரூபாய் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. BSNL    அந்த தொகையை நீக்கி உள்ளது.
ஒரு முறை நிறுவனம் மாறி விட்டால் மூன்று மாதங்கள் அதில் இயங்க வேண்டியது கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. 
எண் மாறும் இடைவெளியில் சுமார் ஒரு மணி நேரம் மட்டும் செல் இயங்காது இருக்கும். 
prepaid , postpaid  எண்கள் எல்லாமே மாற்றிக் கொள்ளலாம். postpaid ஆக இருந்தால் கடைசியாக பணம் செலுத்திய பில்லும், ரசீதும்  கொண்டு செல்லவும். பழைய நிறுவனத்தில் கிடைத்த ரேட் கட்டர் போன்ற வசதிகள் புதிய நிறுவனத்தில் தொடர்ந்து கிடைக்காது. 
Now this is the Golden Opportunity to become a fully transparent , customer oriented  Govt. owned BSNL Mobile customer with out change of your mobile number with MNP.
Welcome to BSNL !! 
பின் குறிப்பு: இடைவெளியில் இரு  முறை சொடுக்குங்கள் ஒரு ஆச்சர்யம் உள்ளது.

14 January, 2011

வெள்ளித்திரையில் மட்டுமே வில்லேஜ் !!

முதலில் அனைவருக்கும்  புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!
வெள்ளித்திரையில் கிராமங்களை பற்றி எடுக்கும் எல்லா படங்களும் சூப்பர் ஹிட்.
அதனாலேயே ஹிட் கொடுப்பதற்காகவே வில்லேஜ் பற்றிய படங்கள். மொத்தத்தில் வியாபாரம் ஆக்கப்படும் கிராமங்கள். எனக்கு கற்பழிக்கப்பட்ட  பெண்களைத்தான் அவை  நினைவூட்டுகின்றன. 'தாசி திருந்தாமல் இருந்தால் தான் தனக்கு லாபம்' என நினைக்கும் ஆணின் மனது தான் தெரிகின்றது.

அது திரைப்படம் ஆனாலும் சரி, கதைகள் ஆனாலும் சரி, அதன் அடிப்படை நாதம் கிராமங்களாக இருந்தால் மிகுந்த உயிர்ப்போடு தான் இருக்கின்றன. ஆனால் கிராமங்கள் மட்டும் கிராமங்களாகவே, வறுமையிலேயே நின்று , வாசல் படலைப் பிடித்த படி நகரங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.  கிராமங்களை தூக்கி நிறுத்த முயலும்  "கந்தசாமி"க்கள் தோல்வியில் துவண்டு சரிந்து கொக்கரித்துக் கிடக்கிறார்கள். 

இதெல்லாம் இப்படி இருக்க நான் இந்த பதிவு எழுத காரணம்.
கிராமத்தில் இருக்கும் இளம் பெண்கள் இந்த படங்களை பார்ப்பதன் மூலம் தன்னை திரைக்கதாநாயகிகளாக நினைத்துக் கொண்டு  தன் வாழ்வை பாழாக்கிக் கொள்வதை பார்ப்பதால் தான்.திரை அரங்குகள் ஆனாலும் சரி, ஊர் அடங்கி இருக்கும் மதிய மூன்று மணி வேளையானாலும் சரி அங்கங்கே ஜோடிப் புறாக்கள். அத்தனையும் கிராமப் புறாக்கள். பஸ் ஸ்டாண்டிலோ கண்களில் பயமும் பதற்றமும் படபடக்க, காதலனுக்காக காத்துக் கொண்டு மெல்ல நடை பயிலும் கிராமத்து மயில்கள். இளைஞன் இளம்பெண் இருவருமே அந்த நேர மகிழ்வைத் தவிர எதையும் நினைப்பதாய் இல்லை. தம் குடும்ப நிலை உயர்த்த, உழைக்க வேண்டும் உச்ச நிலை அடைய வேண்டும் என்ற எண்ணம் எல்லாம்  பின் தள்ளப்பட்டு வயிற்றுக்கும் தொண்டைக்கும் இடையே உருளும் உருண்டையில் மட்டுமே கவனம்.  

இவர்களின் உரையாடலைக் கவனித்தால் ஒரு விஷயம் நன்கு புரியும். அந்த இளைஞன், இளம் பெண்ணின் தோழியைப் பற்றி மிகவும் புகழ்வதும், புகழ்வதாலேயே ஒரு பொறாமை உணர்ச்சியை தூண்டி, எதையும் செய்ய சம்மதிக்கும் மன நிலையை பற்ற வைப்பதும், பரவலாக இருப்பது புரியும். "பாவம் பெண்ணே !! நீ பயணிக்க வேண்டிய பாதை இதுவல்ல என உனக்கு புரிய வைக்கப் போவது யார்?" 
மென்மையான ரசிப்பும் அழகும் இன்னம் மிச்சம் இருக்கும் கிராமங்களை விட்டு, நகரங்களின் மேல் நரக ஆசை கொண்டு உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்.

இந்தப் பொங்கலுக்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள் கிராமத்துக் குயில்களுக்கு தான்.
நகரங்களில் இருந்து நல்லவை எடுத்து அல்லவை நீக்கும் அன்றில் போல் வாழ வாழ்த்துக்கள்!

10 January, 2011

எண்ணச் சிதறல்கள் !

என்ன புது வருஷம் ஜம்முனு போகுதா?

இந்த தடவை புது வருஷம் சனிக்கிழமை தொடங்கி இருப்பதால் விபத்துக்கள் அதிகம் நடக்க வாய்ப்புண்டுனு சொல்லறாங்க. எல்லோரும் கவனமா வண்டி ஓட்டுங்க. 
புத்தக கண்காட்சியை பற்றி பார்த்ததுமே ஒரு குடும்ப விழாவை பார்த்தது போல் மனதில் சந்தோஷம் பூக்கிறது. சென்னைவாசிகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள் தான்.

2G பிரச்னை "எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ ?" னு பாட வைக்குது. முடிவு தெரிந்தாலும் எந்த அதிர்ச்சியும் அடையும் நிலையில் மக்கள் இல்லை ஏன்னா வெங்காய விலையும் காய்கறி விலையும் "அட போங்கப்பா ! நீங்களும் உங்க 2G உம்"னு முணங்க வைக்குது.

நான் சமீபத்தில் படித்து முடித்த ஒரு புத்தகம். திருமதி சுமதி எழுதிய "கல் மண்டபம்" வாழத் துடிக்கும் ஒரு இளைஞன் ஒவ்வொரு அடி முன்னேறினால் பத்தடி பின் கீழே சறுக்குவதை பற்றிய கதை. அவனுக்கு வாழ்க்கை என்பது இது தான் என்பதை புரிய வைக்கும் ஒரு நண்பன். அவன் படிக்கும் காலத்தில் ஹாக்கி விளையாடுவதில் சிறந்து விளங்கியவன். ஒரு விபத்தில் பெற்றோர் இருவரும் இறந்து விட தனியனாகி இறந்த சடலங்களை எரிக்கும் இடத்தில் பணிக்கு சேர்கிறான். தனது விளையாட்டுத் திறமையை எரிந்த சடலங்கள் எலும்பை நொறுக்க பயன்படுத்துவதை பூடகமாக சொல்லும் இடம் நமக்கே அதிர்வை தருகிறது. 

தற்போது படித்துக் கொண்டு இருப்பது, தமிழ் செல்வியின் "கற்றாழை" அவர்களின் "அளம்" மிகுந்த பாதிப்பை ஏற்டுத்த இதை வாசிக்க தொடங்கினேன். ஆனால் நண்பர் ஒருவர் சொல்வது சரிதான் எனத் தோன்றுகிறது. எந்த எழுத்தாளரும் பிடிக்கிறது என்று தொடர்ந்து அதே எழுத்தாளருடையதை படிக்க கூடாது என்பார். ஒரு விதமான similarity  தெரிவதால் முழுவதுமாக ரசிக்க முடிவதில்லை. இருந்தாலும் ஏழ்மையும் அதன் விவரிப்புகளும் தமிழ் செல்விக்கு  மிக இயல்பாக  வருகிறது. சாண வேலையில் இரு கைகளும் திளைக்கும் நேரத்தில் தான் தலையில் அரிப்பு ஏற்படுவதை அவர் விவரிக்கும் போது இரு கைகளிலும் மருதாணி பூசி "அம்மா இங்கே சொறிந்து விடுங்க"னு தலையை அங்கும் இங்கும் காட்டி, அப்படியும் போதாமல் முழங்கையால் தலையத் தேய்த்துக் கொள்ளும் சிறு வயது நினைவு வந்தது.
  
இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன். 
எல்லோரும் வளமோடு வாழுங்கள்!! நலமோடு வாழுங்கள்!!
திரை அரங்கம் சென்று திரைப்படம் காணுங்கள்!!!
விலை கொடுத்து வாங்கி புத்தகம் படியுங்கள்!!!
மீண்டும் சந்திப்போம்.

02 January, 2011

திரை விமர்சனம் - மன் மதன் அம்பு

யார் சொல்லப் போகிறீர்கள் கமலிடம் நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் 'சூப்பர்'  என்று சொல்வோம் என்று இன்னும் எத்தனை நாள் எண்ணிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்.

த்ரிஷா போன்ற சின்னப் பொண்ணை ஜோடியாய்ப் போடுவானேன் அவள் அருகில் தான் ரொம்ப வயதானவனாய்த் தோன்றி விடுவோமோ என்று லாங் ஷாட் வைப்பானேன். நான் இறுதிக் காட்சியில் கப்பலில் புள்ளியாய் இருவரும் தெரிவதை சொன்னேன்.

த்ரிஷா ரொம்ப underplay . அது சில இடங்களில் நடிப்புக்கு சிறிதும்  சிரத்தை எடுக்காதது போல் தோன்றி விடுகிறது. ஆனால் ஒரு ரகசியம் தெரியாவிட்டால் தலை விக்ரமாதித்தன் கதையில் வருவது போல் வெடித்து விடும் போல் இருக்கிறது. இந்த ஜீரோ சைஸ் இத்தனை வருடங்கள் எப்படி மாறாமல் வைத்து இருக்க முடிகிறது.

மாதவன் சந்தேகப் படும் கணவன் வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பதை, தான் நம்புவதை நடப்பதாக சொல்லும் வரை தான் நம்பப் போவதில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக  நன்கு  செய்திருக்கிறார். இருந்தாலும் அவரது பாத்திரப் படைப்பு கொஞ்சம் கவனக் குறைவாகத் தான் படைக்கப் பட்டு இருக்கிறது.

பெண்களில் நகைச்சுவை சிறப்பாக செய்யும் ஊர்வசியை அநியாயத்துக்கு இப்படி ஒரு அழுமூஞ்சியாக காட்டி இருப்பது கண்டனத்துக்கு உரியது. கிடைத்த கேப் இல் அலை பேசியில் தன் தாலியை தட்டிக் காட்டி தன் கணவன் பிழைத்து விட்டான் என்பதை உணர்த்தும் இடம் சிறப்பு.

இப்படி எல்லாம் இருந்தும் படத்தில் என்னைக் கவர்ந்த ஒருவர் உண்டு. கமல் ? ம்ம்ஹும் இல்லை சங்கீதா. படம் தொடங்கும் பொழுதில் இருந்து முடியும் வரையில் தன் கதாப் பாத்திரம் இது தான் என்பதை அழுத்தமாக பதிய வைக்கிறார். கொஞ்சம் புத்திசாலித் தனம் குறைந்த பெண் என்பதை "சூப்பர் ஜீவனாம்சம் " என்பதில் காட்டுவதில் தொடங்கி படம் இறுதியில் மயங்கி விழும் வரை குரல் , நடை, உடை பார்வை என ஒவ்வொன்றிலும் அவர் முயற்சி சிறப்பு. இந்தப் பெண்ணுக்கு ஏற்ற தீனி கொடுக்கும் கதைப் பாத்திரம் யார் கையில் இருக்கிறது

காதல் மன்னன் கமலிடம் காதல் இன்னும் பாக்கி இருக்கிறது என்பதை சொல்லும் சில இடங்கள். அடல்ட்ஸ் ஒன்லி ஷோ பார்க்கும் இடத்தில் இருக்கையின் கம்பிகளுக்கு மேலும் கீழுமாக பார்வையை மாற்றி மாற்றி த்ரிஷாவிடம் செலுத்தும் இடமும், பதில் பார்வை அதே போல் மேலும் கீழுமாக மாறி மாறி வருவதும். கொடிது கொடிது வயதின் முதிர்ச்சி கொடிது. திரைப்படத்தின் இறுதி காட்சியில் காதல் கொப்பளிக்க கமல் பார்க்கும் பார்வை முப்பது ஆண்டுகளுக்கு முந்திய அதே பார்வை. அதை கண் இரைப்பைகளின் வீக்கம் அதன் பவர் குறைக்கிறது. ஆனால் உங்கள் முப்பது வயதில் பார்த்த பார்வையை பார்த்தவர்களுக்கு அந்த கண்களின் கூர்மை நினைவூட்டியது.

அதே அடல்ட்ஸ் ஒன்லி ஷோ முடிந்து வெளியே வரும் த்ரிஷா பார்க்கும் பார்வை "என்னை பின் தொடர்ந்து வா " என சொல்ல டிவி திரையில் நடனம் ஆடும் பெண்களும் இசைக்கு ஏற்றவாறு "பின் செல்" எனச் சொல்லும் இடம் சொல்லியது கதா நாயகனோ, இயக்குனரோ, துணை இயக்குனரோ யாரை இருந்தாலும் ஒரு பாராட்டு.

ஒளிப்பதிவாளருக்கு சிறப்பு பாராட்டு.
தேவி ஸ்ரீப்ரசாத் இசையில் ஒரு சில பாட்டுக்களில் கலக்கி இருக்கிறார். கமலும் த்ரிஷாவும் கப்பலில் கவிதை சொல்லும் இடம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டியது படத்தின் நடுவில் வந்திருந்தால். கமலின் படத்தை இசை அமைப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள். அவரின் படத்தின் வசனங்கள் சில இடங்களில் மிகச் சிறப்பாக அமையும். அந்த இடங்களில் இசையை குறித்தோ, முழுவதுமாக நீக்கியோ உதவி செய்தால் அந்த வசனங்களில் நகைச்சுவையும், சிறப்பும் அனவைரும் ரசிக்கும் படி இருக்கும்.

படத்தின் அத்தனை குறைகளையும் சொல்லியும் விகடனில் மதிப்பெண்கள் ஏன் 40 ?
தைரியமாக விமர்சனம் செய்யுங்கள் அது கலையின் உச்சத்தை அடைந்தவர்களுக்கு சில நேரம் ஏற்படும் தொய்வை சரி செய்யும்.

எதிர்பார்ப்பில்லாத ஏமாற்றத்தை விட எதிர்ப்பார்த்து ஏமாறும் வலி அதிகம். அந்த வலியை இனி கொடுக்காமல் இருக்கப் பாருங்கள் கமல். யாரும் சொல்லா விடினும் நானே சொல்லி விடுகிறேன்
"நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் 'சூப்பர்'  என்று சொல்வோம் என்று இன்னும் எத்தனை நாள் எண்ணிக் கொண்டு இருக்கப் போகிறீர்கள்."