Bio Data !!

21 December, 2013

தாயார் சன்னதி - சுகா

பதிவு எழுதுவது என்பதே மிக சிரமமான ஒரு காரியம் ஆகி  விட்டது.பல காரணங்கள். புத்தகங்கள் படித்ததையாவது எழுதி விடுவோம் என்று நினைத்து தான் இந்த பதிவு.  எனக்கு பிடித்து இருந்தது. உங்களுக்கும் பிடிக்கிறதா என்று பாருங்கள்.

சுகா எங்கள் ஊர்க்காரர் - நெல்லை. அவருடைய தந்தை திரு நெல்லை கண்ணன் அவர்கள் தான் எனக்கு நல்ல பழக்கம். இவருடன் பரிச்சயமில்லை. இந்த புத்தகம் அவருடன் பரிச்சயம் உண்டாக்கியது. 

இது அனுபவங்களின் தொகுப்பு. ஆனாலும் இனிமையான அனுபவங்களின் தொகுப்பு. அதுவும் நெல்லை தமிழின் பிரயோகம் தித்திக்கும் திகட்டாத பால் கொழுக்கட்டை. 

நகைச்சுவை இழையோடும் கதாபாத்திரங்கள். சாமியாடிக் கொண்டிருக்கும் பரமசிவன் பிள்ளையின் கழுத்தில் முறுக்கு மலையை அவர் வைப்பாட்டி போடுவதும் அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அந்த முறுக்கை அவர் கடித்து தின்பதாக வருவதை நகைச்சுவை யோடு எழுதி இருக்கிறார் .

"துப்பு" சொல்லும் வீரையன் தாத்தா.  பயந்த சுபாவம் மிகுந்த பிள்ளைமார் இனத்தில் "வீரையன்" பெயரே வித்தியாசமானது. எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் கல்யாணி ஆச்சி. 

கதைத் தலைப்பான  " தாயார் சன்னதியில்" தன்  தாயார் கான்செர் வியாதியால் இறந்த துக்கத்தை பகிர்ந்திருப்பது நல்ல irony . "அந்த பொண்ணுக்கு ஏதோ  சோகம் இருக்கும்மா" என்பதும் "எல்லா ஆம்பிள  பயல்களும் பொம்பள பிள்ளையை பார்த்து சொல்றது தான் இது. உளறாதே " என்பதும் தாய் மகன் உறவை அழகாகக் காட்டும் இடம். 

சுகாவின் தந்தை இணைய இணைப்பை நான் சரி செய்து கொடுத்த வகையில் தான் எனக்கு முதன் முதலில் அறிமுகம் ஆனார். மிகவும் நகைச்சுவையாகவும் பாசமாகவும் பேசக் கூடியவர். ஒரு மூத்த அண்ணன் , கடைக்குட்டி தம்பி, தன மனைவி இத்தனை பேரின்  இழப்பை சந்தித்திருக்கிறார் என்று வாசித்ததும் நாளை கண்டிப்பாக அவருக்கு ஒரு 'கால்" பண்ண வேண்டும் என்று தோன்றியது. "மீதமொரு முலை எரி ' என்ற அவர் கவிதைத் தொகுப்பை வாசித்ததும் அவரை முதன் முதலாக தொடர்பு கொண்டதும்  சில புத்தகங்களை எனக்கு அன்பாக தந்த அவரது முதல் சந்திப்பும், இன்றும் அவரது எண்ணில்  கேட்கும் காலர் tune  "சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா " ஆசையாக எனது எண்ணில்  இருந்து அவர் கேட்டுப் பெற்றதும், இன்றும் ஏதேனும் விஷயமாக அழைத்தால் "வணக்கம்மா! சொல்லுங்கம்மா . நல்லா இருக்கீங்களா? " என்று அன்போடு  விசாரிப்பதும்  இனிமையாக நினைவுக்கு வருகிறது.

வண்ணதாசன் அவர்கள் அழகான முன்னுரை வழங்கி இருக்கிறார். அவர் சொல்லியது போல சுகா அவர்களுக்கு தமிழ் எழுத்து அக்கன்னா வில் இருந்து தான் ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ ஒவ்வொரு பகுதியும் முடிக்கும் போது  ஒரு பன்ச் . 

"க்ளோ " நான் கூட இனி போனை எடுத்ததும் இப்படி சொல்லலாம் என்று இருக்கிறேன்.  எதிர் முனை என்ன சொல்கிறாள் என்றும் யோசிக்கும் நேரத்தில் நாம் கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளலாம் . நகைச்சுவை முந்திரியை அங்கங்கே  தெளித்திருக்கிறார் . 

"அங்கு கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் யாரும் இல்லை என்பது "எனக்கே" தெரியும். "  சாதரணமாக சொல்லப்பட்டதாக இந்த வரி தெரிந்தாலும் தன்னை தானே நையாண்டி செய்து கொள்ளும் இந்த பகுதி இளங் காலை நேரத்தில் என்னை வாய் விட்டு சிரிக்க வைத்தது சுகா. 

"பாம்பு என்ற பூச்சி" மிகவும் நகைச்சுவை நிறைந்த பகுதி.  இவர் நண்பர் குஞ்சு " நீ கவனிக்கல நம்ம வளையல் கடை ராமையா மகா அவ வீட்டு வாசல்ல இருந்து என்னையே பார்த்துக் கிட்டிருந்தா " என்று சொல்கிறார்.   " ஊஞ்சல் வளையத்தில்  இவன் தொங்கிக் கொண்டிருந்ததை அவள் பார்க்க வில்லையே என்று நினைத்துக் கொண்டேன் " என்று சுகா சொல்வதும் Why  this kolaiveri  suga? 

மிகவும் இயல்பாக தன்னை சுற்றி உள்ளவர்களை பற்றியும் தன்  சொந்த மண்ணின் சிறப்புகளையும் நாம் ரசிக்கும் வண்ணம் கூறியதில் சுகா வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம். இன்னும் இது போல் பல எழுதுங்கள். நகைச்சுவையாக எழுது வது மிகவும் கடினமான ஒன்று. அது உங்களுக்கு ரொம்ப இயல்பாக வருகிறது. தந்தை வழி சொத்தாக இருக்கலாம். வாழ்த்துக்கள் !!

சாகித்திய அகடமி விருது பெற்ற திரு ஜோ -டி -க்ருஸ்  அவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அவரது விருது பெற்ற கொற்கை நாவல் பற்றி தெரிந்து கொள்ள எனது இந்த கொற்கை பகுதியை பாருங்கள்.

14 July, 2013

அஞ்ஞாடி !! புத்தக பகிர்வு

"அஞ்ஞாடி"  என்னும் பூமணியின் நாவலை வாசித்து முடித்தேன். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். யாரிடமும் சொன்னால் எப்படி அவ்வளவு பெரிய புத்தகத்தை வாசித்து முடித்தீர்கள் என்று கேட்கிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு மாதம் வைத்து வாசித்து சுவைத்தேன்.  வாசித்து முடித்து எழுத தொடங்கினால் சில சுவையான விஷயங்கள் விட்டுப் போகும் என்பதால் ரசித்தவற்றை அவ்வப்பொழுதே எழுதி வைத்தேன்.

"அஞ்ஞாடி" பெயர் புதுமையாய் இருந்தது. போகப் போகத் தான் ஒரு குறிப்பிட்ட இனத்தில் அம்மாவை "அஞ்ஞா" என்று அழைக்கும் வழக்கமும் "அஞ்ஞாடி"  என்பது "அம்மாடி" என்பதாய் இருக்குமோ என்பதும் புரிந்தது.   ஆண்டி , மாரி  என்று இரண்டு நண்பர்கள். சிறு வயதில் அவர்கள் அடிக்கும் லூட்டியில் ஆரம்பிக்கிறது கதை. மாரி வண்ணான் குடும்பத்தை சேர்ந்தவன். அவனோடு சரிக்கு சமமாய் பழக விடாததால் வீட்டுக்குத் தெரியாமல் போய்  சேர்ந்து விளையாடுகிறான் ஆண்டி. அவர்கள் விளையாடும் விதவிதமான விளையாட்டுக்கள் இன்னொரு பிறவி எடுத்து கிராமத்தில் ஒரு சிறுவனின் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியது. 

வேக வேகமாக வளர்ந்து இளைஞர்கள் ஆகி திருமணம் முடித்து கதை போகும் போது ஆசிரியர் இன்னும் மீதி பக்கங்களில் என்ன சொல்லப் போகிறார் என்று ஆவல் எழுகிறது. 75 பக்கங்களில் மாரி  மரணிக்கும் போது  அடடா! சின்ன வயதில் தான் போகப் போவதை அறிந்து தான் வாழ்க்கையை அவ்வளவு வேக வேகமாக வாழ்ந்து முடித்தானோ என்று பரிதாபம் ஏற்படுகிறது. 

ஒரு குறிப்பிட்ட இனம் தங்களை கோயில் இருக்கும் தெருவுக்குள்ளேயே விடாமல் தடுப்பதை எதிர்த்து எந்த நீதி மன்றத்தின் ஆதரவும் கிடைக்காமல் 100 குடும்பங்கள் உள்ள ஒரு கிராமம் முழுவதுமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாற விரும்புவதைப் பார்க்கும் போது  ஜாதியின் பெயரை சொல்லி மனிதர்களுக்கும் ஏற்றதாழ்வு காட்டும் சமுதாயம் என்று தான் திருந்துமோ என்று ஆற்றாமை  இயல்பாய் எழுகிறது. 

இறந்து பேயாய் சுற்றுபவர்கள் தங்கள் பேரன்களை சந்திக்கும் இடம் நல்ல கற்பனை. விட்டலாச்சாரியார் படம் பார்த்த எபக்ட் .பனை மரத்தில் தன் வாலை சுற்றி பற்றிக் கொண்டு கதை சொல்லும் பேயை நேரில்  பார்த்தது போலவே இருந்தது. 

கடவுளர்கள் இயேசுவின் தாய் மாதா, முருகன் , வள்ளி மூவரும் சந்தித்து உரையாடுவதாக வருவது யதார்தத்தை  நகைச்சுவை உணர்வு கலந்து சொல்லப் பட்டதாக இருக்கிறது. 

சாகித்திய அகடமிக்கு பரிந்து உரைக்கப்பட்ட நாவல்.  பக்கங்கள் கொஞ்சம் குறைவாக இருந்திருக்கலாமோ? ஆனாலும் ஆசிரியரின் இமாலய முயற்சி அதீத பாராட்டுக்கு உரியது. எந்த நல்ல நாவலைப் படித்து முடித்தாலும் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற உந்துதல் இப்பொழுதும் ஏற்பட்டதால் இந்த பகிர்வு. கீழே உள்ளது புத்தகம் வாசிக்க முடிவெடுத்ததும் நான் பார்த்த ஒரு வலைத்தளத்தில் எனக்கு பிடித்த வரிகள். உங்களுக்கும் பிடிக்குதா பாருங்களேன்! " அஞ்ஞாடியில் நூற்றாண்டுகளின் காலச்சித்திரம் தீட்டி அதற்குள் ஒரு கதையை வைத்து கதைக்குள் இன்னும் பல கதைகளையும் கனவுகளையும் வைத்து வாசகனின் பாஷையிலே பேசி... பூமணி உயரத்தை தொட்டிருக்கின்றார். என்னை மாதிரி வாசகர்கள் அந்த உயரத்தைத் தொடுவதற்குத் தோதாக படிக்கட்டுகள் , பிடித்தேற பக்கவாட்டு கைப்பிடிகள், அங்கங்கே மூச்சு வாங்கும் போது சற்று இளைப்பாற்ச் செல்ல திண்டுகள் என்று திட்டமிட்டு அமைத்துள்ளார். அஞ்ஞாடி மொத்தத்தையும் 22 பாகங்களாகப் பிரித்து ஒன்றிலிருந்து இன்னொன்று போக அளவாக படிக்கட்டுகளை அமைத்து ஓய்வெடுக்க திண்டுகளை அமைத்திருந்தாலும் சில பகுதிகள் மிக செங்குத்தாக இருக்க , என்னைப் போன்ற வாசகர்களுக்கு மூச்சுத் திணறத் தான் செய்கிறது. " 

எல்லாம் தொட்டு தொட்டு அரை குறையாக விட்டது போல் இருக்கிறதா. விளம்பரத்தில் அனு சொல்லுவது போல "யாங் ! புத்தகத்தை வாசித்து பார்த்து ரசிங்க "விளம்பரம்னு சொன்னதும் ஒரு விஷயம் ஞாயபகம் வருது. இடை இடையே நான் ரசித்த விளம்பரங்களை நான் குறிப்பிடுவது உண்டு. தற்சமயம் நான் ரசிக்கும்   விளம்பரம் "DAIRY MILK SILK"  என்ன ஒரு அழகான காட்சி அமைப்பு. அதில் வருபவர்களின் முக பாவம். சிக்னலில் கிடைக்கும் நிமிட இடை வெளியில் பரிமாறிக் கொள்ளும் உணர்வுப் பரிமாற்றம். அந்த பெண்ணின் சிரிப்பு ரொம்ப அழகாக இருக்கிறது.

20 June, 2013

நெல்லையில் புத்தகத் திருவிழா !!

நெல்லையில் புத்தகத் திருவிழா !!

என்னைக்கு தொடங்கியது . இப்போ தான் எழுத நேரம் கிடைத்ததான்னு சொல்றீங்களா?  Better late than Never என்ன நான் சொல்றது சரி தானா?இன்னும் மூன்றே நாட்கள் தான். நெல்லை வாசிகள் இன்னும் பார்க்க வில்லை என்றால் உடனே புறப்படவும். 

இந்த புகைப்படத்தில் இருப்பது என்னவென்று சொல்பவர்களுக்கு புத்தகத் திருவிழா நடக்கும் இடத்தில் களை கட்டிக் கொண்டிருக்கும் "உணவுத் திருவிழா" விலிருந்து அருமையான கம்மங் கஞ்சி  வழங்கப்படும். 

கண்டு பிடிக்க வில்லை என்றால் கடைசியில் விடை சொல்கிறேன்.

சென்னையிலும் மதுரையிலும் புத்தகக் கண்காட்சியை பார்க்கும் போது எல்லாம் நம்ம ஊரில் எப்போ எப்போ என்று மனசு கிடந்து அடித்துக் கொள்ளும். ஒரு மாசம் முன்னதாக அறிவிப்பை கண்டவுடன்  ரகசியமாக டப்பாங்கூத்து ஒன்று போட்டு விட்டது. 

முதலில் இதை ஏற்பாடு செய்த அனைவருக்கும் ஒரு ராயல் சல்யூட். !!!
மாவட்ட ஆட்சியாளர் ஒரு புத்தகப் பிரியர் என்று அறிந்தேன். தன்னை வாசிப்பினால் மகிழ்வித்த புத்தகங்களுக்கு மறு மரியாதை செய்திருக்கிறார் இந்த விழாவை ஏற்பாடு செய்ய உதவிக் கரம் நீட்டுவதன் மூலம். ஆரம்ப நாளன்று போயிருந்தேன். ஒரு சிறு வருத்தம். மூன்றே பெண்கள் தான் இருந்தோம்.. அடுத்த அடுத்த நாட்களில் பெண்களும் இருந்தார்கள்.

"மாதொருபாகன்" வாசித்ததில் இருந்து பெருமாள் முருகன் அவர்களின் தீவிர ரசிகை ஆகி விட்டதால் அவரது புத்தகங்கள் ரெண்டு வாங்கினேன். அவரது நாவல்களின் பெயரே வாசிக்கத் தூண்டுவதாய் இருக்கிறது. 

அநேகம் பள்ளிகளில் இருந்து மாணவர்களை அழைத்து வருகிறார்கள். சந்தோஷமாக இருந்தது. மாலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பேச்சாளர்கள் திகட்ட திகட்ட விருந்து தருகிறார்கள். திரு இறைஅன்பு அவர்களும் திரு சைலேந்திர பாபு அவர்களும் வருகை தர இருக்கிறார்கள். தவற விட்டு  விடாதீர்கள். 


புத்தகங்களை பற்றி எழுதிக் கொண்டு இருக்கும் போது இடையில் என்ன படம்னு பார்க்கிறீர்களா? இது நெல்லை மாவட்ட ஆட்சியாளர் எடுத்த புகைப்படம். இதைப் போல அவர் எடுத்த புகைப்படங்கள் ஒரு ஸ்டால் முழுவதும் வைத்து இருக்கிறார்கள். பத்தாண்டுகளுக்கு பின் நடந்தாலும் தித்திக்கும் விருந்தை அளிக்கிறது நெல்லை புத்தகத் திருவிழா !!

தமிழ் வளர்ச்சி பண்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவராய் இருந்து இதில் முக்கியப் பங்காற்றும் "மயன் " கட்டுமானப் பணியின் உரிமையாளர் திரு ரமேஷ் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!! ஒரே ஒரே கேள்வி மட்டும் உங்களிடம்.  எங்கே இருந்து  கிடைக்கிறது உங்களுக்கு மட்டும் இதற்கெல்லாம் நேரம்.இதற்கு மேல் "நீங்கள்" "உங்கள்" என்று உன்னை அழைக்க முடியாது "குட்டி"  பல புத்தகப் பிரியர்களின் சார்பாக மனமார்ந்த நன்றிகள் !!

30 May, 2013

அழகை அதிகரிக்க சில வழிகள் !!!


நான் சமீபத்தில் கேட்ட ஒரு கருத்து "அழகாக"  இருந்ததால் இங்கே பகிர்கிறேன்.

நாம் வீடு கட்டும் போது ஜன்னல்கள் வைத்து கட்டுகிறோம். ஏன் ? நல்ல காற்றோட்டம்  இருப்பதற்காக. நல்ல திரை சீலைகள் போடுகிறோம்  வீட்டை அழகு படுத்த..

அதைப் போலவே நமது உடலில் இரண்டு ஜன்னல்கள் இருக்கின்றன. அவை தான் அழுகையும் சிரிப்பும். நாம் அழ வேண்டிய நேரத்தில் அழவும்  சிரிக்க வேண்டிய நேரத்தில் சிரிக்கவும் செய்தால் அழகாக இருப்போம். சிறு குழந்தைகள் எல்லாமே அழகு தான். காரணம் அவை அழுவதற்கோ சிரிப்பதற்கோ தயங்குவதில்லை. ஆனால் நாம் எங்கே அழுதால் நம்மை பலவீனமாய் நினைத்து விடுவார்களோ என்று அழுகையை அடக்கிக் கொள்கிறோம் . சரி அழுவதற்கு தான் தயக்கம் என்றால் சிரிக்கவாவது செய்கிறோமா என்றால் அதவும் இல்லை.

எனக்கு வாய் விட்டு சிரிப்பவர்களை பார்த்தால் பொறாமையாக இருக்கும் நான் சிரிப்பை மறந்து பல கால ம் ஆனதால். சிரிப்பில் சில வகை இருக்கும். பிறருடைய குறைகளை நக்கலாய் சொல்லி விட்டு அவர்களே பலமாக சிரிப்பார்கள். அவர்கள் தன்னம்பிக்கை குறைந்தவர்கள். இன்னும் சிலர் தன குறைகளை சொல்லி தானே சிரிப்பார்கள். இவர்கள் எங்கே மற்றவர்கள் சொல்லி விடுவார்களோ என்று தன குறைகளை தானே முந்தி சொல்பவர்கள். ஆனால் பிறர் ஏதாவது சொல்லி விட்டால் சுருங்கி விடுவார்கள். இன்னும் சிலர் நமட்டு சிரிப்பாய் சிரிப்பார்கள். அதன் அர்த்தம் அவரவர் வசதிக்கேற்ப. இன்னும் சிலர் மட்டுமே உள்ளத்திலிருந்து சிரிக்கிறார்கள்

நம் உள்ளத்தின் ஜன்னல்களான  அழுகையையும், சிரிப்பையும் விரியத் திறந்து வைப்போம்.  அதைப் போலவே பிறர் அழும்போதோ  சிரிக்கும் போதோ விமர்சிக்காமல் இருப்போமே. நீங்களே முயற்சி செய்து பார்த்து சொல்லுங்களேன் அழகை அதிகரிக்க இதுவும் ஒரு வழி  தான என்று.