Bio Data !!

19 April, 2010

உடன் பிறவா சகோதரிகள்.

நமது உடலின் உள் உறுப்புகளில் அதிக எடை உள்ள உறுப்பு எது தெரியுமா? கல்லீரல் அதன் எடை ஒன்றரை கிலோ. இறைவனின் படைப்பில் நான் மிகவும் ஆச்சரியப்படுவது என்ன வென்றால் 'the arrangement of internal organs of our body' பாதுகாப்பாக இருக்க வேண்டிய உறுப்புகளை மிக மிக பாதுகாப்பாக வைத்துள்ள அவரின் நேர்த்தி.

பௌர்ணமி நிலவின் ஒளியில் நட்சத்திரங்கள் மறைவதைப் போல இதயமும், நுரையீரலும் பெறும் முக்கியத்துவத்தை கல்லீரல் பெறத் தவறி விட்டது.

கல்லீரல் தன் வருத்தத்தை சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க.

ஒரு சின்ன கீறலின் மூலம் வெளியேறும் ரத்தம் கூட உறையலேன்னா உங்க உயிருக்கே ஆபத்து. அது உறையிரதால தான் ரத்தம் வர்றதே நிக்குது. ரத்தத்தை உறைய வைக்கிறதே நாம தானுங்கோ

இதயத்துக்கு வர்ற ரத்தத்தின் அளவு திடீர்னு உயர்ந்திட்டுன்னா நான் பலூன் மாதிரி ஊதி, ஏற்கனவே நான் மெத்து மெத்துன்னு இருப்பேனா, அந்த ரத்தத்தை உறுஞ்சி மெதுவா தேவையான அளவ மட்டும் இதயத்துக்கு கொடுப்பேன்.

ஆனா உங்கள்ள பலருக்கு காக்டெயில் தினசரி மெனுவில் ஒரு பகுதி ஆகி விட்டது. ஒரு முதலாளி தொழிலாளியின் உழைப்பை உறுஞ்சுவது போல் ஆல்கஹால் என் உழைப்பை உறுஞ்சி உறுஞ்சி ஒரு கட்டத்தில என்னை பிளாட் ஆக்கிடுது.

மஞ்சக் காமாலை வந்ததும் பதறி அடிச்சு டாக்டர்ட்ட ஓடுறீங்க. அது ஒரு வியாதின்றத விட எனக்கு கோளாறு தொடங்கிடுச்சு னு உங்களுக்கு நான் காட்டுற அறிகுறி தான் அது. கான்செர் என் 80% பகுதியை அழிச்சிட்டாக் கூட நான் பயப்படறதில்ல. எனக்கு இறைவன் கொடுத்து இருக்கிற ஒரு வரம் என்னனா பீனிக்ஸ் போல நான் அழிய அழிய முழு உருவத்தை அடைஞ்சிடுவேன். ஆனா நோயின் தீவிரத்தை பொறுத்து எனது மிருதுத் தன்மை கடினப் பட்டு கடினப் பட்டு போகும் போது நீங்களே நினைச்சாலும் என்னைக் காப்பாற்ற முடியாது. அப்பறம் யார் நினைச்சாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது.

எப்படி அமைதியா ஆர்ப்பாட்டம் இல்லாம வேலை பார்க்கிறவங்கள உங்கள்ள அங்கீகரிக்க மாட்டாங்களோ அது போல இரைச்சலற்று இருக்கிற என்னையும் யாரும் மதிக்கிறதே இல்லேங்க .

எனக்கு ஒரு தங்கச்சி இருக்குதுங்க. அதும் பேரு கணயம் உங்களை எப்போவாவது பெரிய நாய் ஏதாவது தொரத்தி இருக்குதா. இல்லைனா அடுத்த தடவை தொரத்தும் போது பாருங்க. அதோட நாக்கு மாதிரி தான் அழகா இருப்பா என் தங்கச்சி. குட்டியா 85gm எடையில இருந்தாலும் ஒரு நாளைக்கு 900 gm இன்சுலின் உற்பத்தி செய்வா. அவள் வேலை செய்றதில்ல ஏதாவது தடங்கல் வந்தா அவ்வளவு தான் உங்களுக்கு சர்க்கரை வியாதி தான்.

எங்க குடும்பத்தில நிறைய பேர் இருக்கிறதாலையும் எல்லோரும் ரொம்ப ஒட்டி நெருக்கமா இருக்கிறதாலேயும் எங்கள்ள யாருக்காவது நீங்க செய்யற அறுவை வைத்தியம் கொஞ்சம் அஜாக்கிரதையா இருந்தாலும் அடுத்தவங்களை பாதிச்சிடும்.

கணயத்துக்கு ஏதாவது ஆச்சுனா உங்களுக்கு கடுமையா வயிறு வலிக்கும். ஆனா அதுக்கும் மற்ற வயிற்று வலிக்கும் ரொம்ப வித்தியாசம் தெரியாது. அது தான் கஷ்டம். ஆனா ஒண்ணு மட்டும் சொல்லித் தாரேன் தொடர்ந்து வயிற்றோட்டம், எடை இழப்பு, மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் இருந்ததுன்னா உடனே டாக்டர் பார்த்திடுங்க.

எவ்வளவு வியாதிகள் வருது, காரண காரியம் தெரியாமலே. ஆனா நாங்க பாதிக்கப் படுறதுக்கு முக்கிய காரணம் 'குடி' தாங்க.

தெரிஞ்சே அந்தத் தப்பை பண்ணலாமா? நல்லதில்லீங்க. இப்போல்லாம் சின்ன புள்ளைங்க கூட பழகிடுறாங்க. விட்டுடுங்க.

குடி குடியை மட்டும் கெடுக்கிறதில்லீங்க .
கூடவே கல்லீரலையும் கணயத்தையும் கூட

15 April, 2010

அங்காடித் தெரு - என் மொழியில்

வசந்த பாலன் 'வெயிலின்' மூலம் கவர வைத்தவர், அங்காடித் தெரு என்னும் அழகான படத்தின் மூலம் 'பச்சக்' என்று ஒட்டிக் கொண்டார்.

ஒரு தீபாவளிக்கு முன் தினம் என் தோழி தி.நகர் பார்க்கலாம் வான்னு அழைத்துச் சென்றாள். ரயில்வே நிலையத்தில் நின்றே அந்தக் கூட்டத்தைப் பார்த்து விட்டு அப்படியே ரயில் ஏறி விட்டேன். 'இப்படியே கீழே இறங்கினால் போதும் கூட்டமே தள்ளிட்டு போயிடும். எந்தக் கடைக்கு போகணுமோ அங்கே திரும்பினால் கடைக்குள்ள போயிடலாம்னு' ஜோக் வேற அடிக்கிறா.

shopping ங்கறது அனுபவிச்சு செய்ய வேண்டிய ஒன்று. அதை இவ்வளவு நெருக்கடியில் எப்படி அனுபவிக்கிறீர்கள் சென்னை வாசிகளே?

இப்போ main track வந்திடுவோம்.

சாதாரணக் கதை நாயகன் மகேஷ். நம்மில் பலர் இந்த வகையில் வருபவர்கள் தான். அதனால் சுலபமாக நாயகனோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. Proximity . தனக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களோடு உறவு தொடங்கும். அதில் அழுத்தம் இருந்தால் அது காதலாகும். இங்கும் அதே போல் சுற்றி இருக்கும் சிக்கல்களால் காதல் அழுத்தமாகிறது.

காதலிக்கும் பெண் கொடுக்கும் கடிதத்தால் மாட்டிக்கொள்ளும் போது வேலை போய் விடுமோ என்ற அச்சத்தில் அவளை மாட்டி விடுவதும், அந்த அவமான அதிர்ச்சி தாங்காமல் மிரண்ட கண்களுடன் புலம்பிக் கொண்டே கண்ணாடி உடைத்து மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்யும் பெண் மனதை விட்டு நீங்க பல நாள் ஆகும் நிச்சயம்.

supervisor ஆக வரும் இயக்குனர் A. வெங்கடேஷ் அண்ணாச்சியின் மிரட்டலுக்கு பணிவதும் பணியாளர்களை மிரட்டுவதும், பெண் பணியாளர்களிடம் அத்து மீறுவதும் ஆக நடிப்பில் மிரட்டி இருக்கிறார். அந்தக் கண்ணாடி அவருக்கு கூடுதல் மிரட்சி.

ஒரு பெண் பெரியவள் ஆனதும் பெற்றவர்களுக்கே ஒரு நிமிடம் மிரட்சி ஏற்படும். அதிலும் நிராதரவாக உள்ள நிலையில் தன் தங்கை பெரியவளான விஷயம் தெரிந்ததும் தெருவில் நின்று அஞ்சலி புலம்புவது அக்மார்க் வகை. அங்கு மகேஷ் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் காட்டி இருக்கலாமோன்னு தோணுது.

K. பாலச்சந்தரின் படங்களில் தான் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட நினைவில் பதிவார்கள். அதே முக்கியத்துவம் இந்தப் படத்திலும். ஆனால் அதுவே சில இடங்களில் சரியாக ஒட்டப்படாத கவர் போல் பிரிந்து நிற்கிறது. தன் குழந்தை தன்னைப் போலவே குள்ளனாக பிறந்து விட்டதே என்று அழுது செல்லும் மனிதனும் அதைத் தொடர்ந்த காட்சிகளும் கதையோடு ஒட்டாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.

வெயில் படத்தில் நாயகனும் நாயகியும் operator அறையில் மாட்டிக் கொள்வதைப் போலவே இங்கும் ஒரு நிகழ்வு. ஆனால் எங்கு மாட்டுவார்கள் என்று நாம் எதிர்பார்ப்போமோ அங்கு தப்ப வைத்து அண்ணாச்சியிடம் மாட்டுவது போல் காட்டி இருக்கிறார்கள். சினேகாவின் CD கொண்டு வரச் சொல்கிறார் அண்ணாச்சி. அதில் கடையை அடைத்த பிறகு வரும் ஆடல் பாடல் வருவது ஒரு உறுத்தல். 'அழகழகா விதவிதமா ரகம்ரகமா' வரும் பாடல்களுக்காக அதை மன்னித்து மறந்து விடலாம்.

சிறப்பான ஒளிப்பதிவு . தன் திறமையை காட்டுவதற்காக தி.நகரில் அங்கங்கே காமரா பொருத்தி தான் எடுத்த காட்சிகளை 'இது தான் எனக்கு வேண்டியது' என்று இயக்குனர் அதை அப்படியே படத்தில் சேர்த்து விட்டதாக ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் கூறி இருந்தார். அது படத்தின் இயல்புக்கு இன்னும் ஊட்டம் சேர்த்து விட்டது

சின்ன சின்ன குறைகள் தவிர்த்து தான் காதலித்த பெண்ணை இரு கால்களும் இழந்த நிலையிலும் ஏற்றுக் கொண்ட துணிச்சலுக்கும் அங்காடித் தெருவிலேயே ஒரு அங்கமாய்ப் போய் தம் வாழ்க்கையை தொடங்கும் நம்பிக்கைக்கும் தட்டிக் கொடுக்கலாம்.

செந்தில் முருகன் ஸ்டோர்ஸ் ஒரு தீ விபத்தில் அழிவது போலவும் அதில் அண்ணாச்சியும் சுப்பர்வைசரும் 'மட்டும்' மாட்டிக் கொள்வது போலவும் காட்டி இருந்தால் அநியாயத்துக்கு ஒரு அழிவு உண்டு என்று கதையோடு தன்னை ஒன்றிப் பார்த்தவர்கள் சந்தோஷப் பட்டிருப்பார்கள்.

அங்காடித் தெரு டீமுக்கு ஒரு சபாஷ்.

10 April, 2010

வாடிக்கையாளர் சேவை மையம்.

இன்று வாடிக்கையாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் காலம். நான் சொல்வது பல ஆண்டுகளுக்கு முன்.

அப்போ எங்க department இல் கம்ப்யூட்டர் கொண்டு வந்த புதிது. நான் ஈரோடில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எங்க GM கணினியில் ஈடுபாடு கொண்டு வருவதற்காக ஒரு கணினி கிளப் ஏற்படுத்தி மாதம் இரு முறை கணினி பற்றி தானே சொல்லித் தருவார். நாங்கள் இருபது பேர். அதில் பத்தொன்பது பேர் ஆண்கள். நான் பொதுவாகவே எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம் உள்ளவள் ஆதலால் தனிப் பெண்ணாக இருந்தாலும் போய் வந்தேன். ஆனால் நெல்லை மாறுதல் கிடைத்து வந்ததும் அதன் பயனாக முதன் முதலாக தொடங்கப் போகும் 'வாடிக்கையாளர் சேவை மையத்தில்' பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது.

அது அலுவலக பணியாளர்களின் மன நிலை மாறத் தொடங்கிய முதல் புள்ளி. அரசாங்க அலுவலகம் என்பது எப்படி இருக்கும் என்பதில் இருந்து மாறுபட்ட அலுவல் அறை. wall paper இல் ஓடை ஓடும். அந்த ஓடை நீரில் அடித்து வரும் மரக் கட்டை தத்ரூபமாக இருக்கும். AC செய்யப்பட்ட அறையும் இளையராஜாவின் மெல்லிய இசையும் அங்கு பணிபுரிவதே ஒரு கௌரவத்தைக் கொடுக்கும்.

எனது அதிகாரி என்னிடம் கேட்ட பொழுது, என்னுடன் பணி புரிபவர்கள் 'நீங்கள் ஒத்துக் கொண்டால் இதை உதாரணமாகக் காட்டி மற்ற பெண்களையும் பின்னாட்களில் அங்கு பணி புரியச் சொல்லக் கூடும் ' என்று தடுத்ததையும், நெல்லை நீங்கள் நினைப்பது போல் இல்லை ரொம்ப பிரச்சினைகள் வரக் கூடிய இடம் என்று அச்சுறுத்தியதையும் மீறி, நான் அப்போது படித்துக் கொண்டிருந்த MA (PSY) மேல் நம்பிக்கை வைத்து, ' அலுவலகக் கோப்புகளுடன் பணி புரிவதை விட ஜீவனுள்ள சந்தாதாரர்களுடன் பணி புரிய விரும்புகிறேன், I can manage, sir' என்று சொல்லி பணியில் அமர்ந்தேன்.

அது சுலபமான பணி என்று சொல்ல முடியாது. ஐந்து ஆண்டுகளாக கொடுக்கப் படாமல் இருந்த தொலைபேசி இணைப்புகள் கொடுக்கத் தொடங்கிய நேரம். ஒரு சின்ன விதி மீறல் களேபரத்தைக் கொண்டு வந்து விடும். தொடக்கத்தில் சின்ன சத்தம் எழும்பியதும் அடுத்த அறையில் இருக்கும் அலுவலக பணியாளர்கள் உதவிக்கு கூடி விடுவார்கள். ஆனால் அன்று செய்த பணியின் மன நிறைவு அதன் பின் வந்ததில்லை. இன்று தொழிலில் சிறந்து விளங்கும் பலர் அன்று வாலிபர்களாய் தொழில் தொடங்கிய புதிதில் தொலை பேசி விண்ணப்பிக்க வந்திருக்கிறார்கள். அன்று காட்டிய பணிவும், பண்பும் காரணமாக இன்று வரை நினைவில் வைத்திருக்கிறார்கள்.

வாடிக்கையாளர் சேவையில் நான் கற்றுக் கொண்ட சில விஷயங்கள் யாருக்கேனும் பயன்படலாம். அதைப் பகிர்ந்து கொள்ளலாமேன்னு நினைத்தேன்.

'வாடிக்கையாளர் சேவை மையம்' என்பது மற்றுமோர் அலுவலக பகுதி அல்ல என்பதை உணர வேண்டும். வந்தவர்களை அமரச் சொன்னாலே பாதி வேலை முடிந்து விட்டது. அவர் தனது பிரச்சினையை சொல்ல தொடங்கிய உடனே நாம் பேசத் தொடங்கி விடாமல் அவர்கள் சொல்ல வந்ததைக் கேட்டு விட்டால் கால் பகுதி முடிந்து விட்டது. இன்னும் கால் பகுதி தான் அவர்கள் பிரச்சினைக்கு நாம் தரும் தீர்வு. ஆனால் தீர்வு தரும் பகுதி நல்ல படியாக முடிந்தால் தான் மீதமுள்ள முக்கால் பகுதி வொர்க் அவுட் ஆகும்.

எல்லா சந்தாதாரர்களுக்கும் ஒரே விதமான அப்ரோச் சரி இல்லை.

நமது செயலுக்கு ஒரே விதமான எதிர் வினை எதிர்பார்ப்பதும் சரி இல்லை.

நடந்த தவறு நமது இல்லையே என நினைக்காமல் மொத்த அலுவலக சார்பாக,
அலுவலகத்தின் தவறுக்கு நாம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கூடிய வரை சந்தாதாரர்களின் குறையைத் தீர்க்க நாமே தொடர்பு கொள்ள
வேண்டுமே ஒழிய அவர்களை அங்கும் இங்கும் அலைக்கழிப்பது சரி இல்லை.

சில உடனடியாக தீர்க்க முடியாத சிக்கல்களுக்கு அவர்களை அனுப்பி விட்டாலும் டைரியில் குறித்துக் கொண்டு, நாமே தொடர்பு கொண்டு சரியாகி விட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும.

கூடிய வரை எல்லா அலுவலகப் பணியாளர்களிடமும் அதிகாரிகளிடமும் நல்ல rapport வைத்து இருப்பது நமது பணியை சுளுவாக்கும்.

குடும்பத்தின் குழப்பங்களை அறையின் வாசலில் கழற்றி விடும் செருப்போடு விட்டு விட வேண்டும்.

சந்தாதாரர்கள் தான் நமது மிகச் சிறந்த மார்க்கெட்டிங் ஏஜென்ட் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நமது பொருள் தரம் நிறைந்ததாய் இருந்தால் அவர்களே பலரிடம் சொல்லுவார்கள். பொருளின் தரமோ நமது பணியின் தரமோ குறைந்தால் அதையும் அவர்களே பலரிடம் சொல்லுவார்கள்.

பிறருக்கு உதவி செய்யும் இடத்தில் பணி கிடைப்பது அரிது. அதை முழுமையாக உபயோகிப்போம்.

நன்றி: கேபிள் சங்கர்ஜி

அவரது செல்போன் பற்றிய பதிவு தான் இதை எழுதத் தூண்டியது.



07 April, 2010

தொலைபேசி திருமணம் !

பிரபல வெளி நாட்டு கிரிக்கெட் வீரருக்கும், டென்னிஸ் வீராங்கனைக்கும் திருமணம் என்ற அறிவிப்பு வருகிறது. உடனே ஒரு பெண் அந்த விளையாட்டு வீரர் ஏற்கனவே என்னைத் திருமணம் முடித்திருப்பதால் என்னை விவாகரத்து செய்த பின் அந்த திருமணம் நடக்க வேண்டும் என்று கோர்ட்டுக்கு செல்கிறார். அது பொய்யான செய்தி நாங்கள் தொலைபேசித் திருமணம் செய்யவில்லை என்று அடித்துக் கூறுகிறார் வீரர்.

இந்த இடத்தில் அது என்ன தொலைபேசித் திருமணம்? வெளி நாட்டில் பணி புரிந்து தன் திருமணத்துக்கே (!) வர முடியாத சந்தர்ப்பத்தில் உதவிக்கு வருகிறது இந்த தொலைபேசி திருமணம். எப்படியும் குடும்பம் நடத்த நேரில் தான் வரவேண்டும். தொலைபேசியில் இயலாதது அது. அப்படி இருக்க நேரில் வரும்போது திருமணம் செய்து கொள்ள வேண்டியது தானே?


'என்னுடன் திருமணம் முடித்ததற்கும் ஹைதராபாதில் வாழ்ந்ததற்கும் என்னிடம் சாட்சி இருக்கிறது ' என்று அந்தப் பெண் விடாப் பிடியாய் நின்றதும் இறங்கி இருக்கிறது 'சமூகம்' ( எதற்ககெல்லாம் தான் சாட்சி தயார் செய்வது. )


தான் திருமணம் செய்ததை ஒத்துக் கொண்டு விவாகரத்து செய்த பின் சானியாவை மணம் முடிக்கிறேன் என்று சம்மதித்துள்ளார். மிகப் பெரிய இடம் என்றதும் பதறி விரைவில் மணம் முடித்து விடுகிறோம். அதன் பின் எத்தனை சிக்கல்கள். எத்தனை வேதனைகள்.

திருமணம் என்று வரும்போது பணத்துக்கு இரண்டாம் இடம் தருவோம்

எங்கள் நெல்லையில் நடந்த ஒரு செய்தி.
நண்பர்களுடன் கன்யாகுமரி பார்த்து விட்டு அன்று மாலையே வந்து விடுவதாக சொல்லிச் சென்ற பெண் மாலையாகியும் வரவில்லை. பெற்றவர்கள் சென்று பல இடங்களிலும் தேடி வீட்டுக்கு வந்து தந்தை, தாய் , ஒரு teenage மகன் மூவரும் தற்கொலை செய்து விட்டார்கள், காவல் துறைக்கு ஒரு கடிதத்துடன். தங்கள் சொத்தை தேடிச் சென்ற அந்த மகளுக்கு மாற்றி விடும் படி.
அந்தப் பெண்ணைப் பற்றிய எதோ ஒரு செய்தி அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகிறது. குடும்பம் குடும்பமாக சாவது இப்போது அதிகரித்துள்ளது. விரும்பத்தகாத வகையில் ஏதும் நடந்தால் அவளை ஒதுக்கி வையுங்கள். காலம் காயத்தை ஆற்றும் போது அவளுடன் சேர்ந்து விடலாம். அதை விடுத்து அவளை காலமெல்லாம் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் இந்த செயல் தேவை தானா?

கர்ப்பவாய் கான்சருக்கான மருந்தை , ஒரு அந்நிய நாட்டுடன் இணைந்த கம்பெனி ஏழைப் பெண்களுக்கு கொடுத்து பரிசோதித்ததில் நூற்று இருபது பேர் பாதகமான விளைவுகளுக்கு உள்ளாகி உள்ளனர். நான்கு பெண்கள் சாவைச் சந்தித்துள்ளனர். பெண்ணே உன் போராட்டம் வறுமையோடு மட்டும் அல்ல.

தொடர்ந்து பெண்களைப் பாதிக்கும் செய்தியாக பார்த்ததால் இந்த பதிவு. உங்கள் பலவீனங்களை பாம்புச் சட்டையாய் உரித்து புது உயிர் கொள்ளுங்கள் பெண்களே.

01 April, 2010

சந்தேகக் கேடு - பாகம் 4

கொஞ்ச நேரத்தில் நிதானமானாள். இவனை சரி செய்து இவனோடு வாழ்வது என்பது முடியாத காரியம் என்று முடிவுக்கு வந்தாள். இவன் சராசரி மனிதன் அல்ல. 'கல்லானாலும் கணவன் ' என்பதெல்லாம் கதைக்கு உதவாது. எப்படியாவது அம்மா அப்பாவிடம் போய் சேர்ந்து விட வேண்டும்.

இப்பொழுது அவளுக்கு கண்ணீர் இரண்டு கண்களையும் நிறைத்தது. இந்த அறையைப் பூட்டி சாவியை எப்பொழுதும் கையில் வைத்துக் கொண்டே இருப்பான். சுற்றிப் பார்த்தாள். பழைய சாமான்களுக்கு மத்தியில் ஒரு பெட்டி. அதை இழுத்து ventilator க்கு கீழே போட்டுட்டா எப்படியாவது தகவல் சொல்லிடலாம்.

சின்ன சலனத்தால் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்த கரப்பான் பூச்சிகள் செட்டில் ஆகி விட்டன. அதிக யோசனைகள் அவளை அதிக சோர்வுக்கு உள்ளாக்கி இருந்தன. அவன் நாளை வேலைக்கு போகும் வரை தனக்கு வேலை இல்லை என நினைத்தவள் அப்படியே சுவரோரமாக சாய்ந்தாள்.

தன்னை ஒத்த பையன்களை விட தான் அதிக புத்திசாலியாக இருப்பதால் தான் , தன் ஆசிரியரிடம் நேசம் வந்ததாக நினைத்துக் கொண்ட முட்டாள்தனம் நினைவுக்கு வந்தது.தன் உள்ளங்கையால் நெற்றியில் அடித்தபடி சுவரில் சாய்ந்தாள்.

விடிந்தது. அவன் அலுவலகம் புறப்படும் சின்ன சின்ன சத்தங்கள் கவியை எழுப்பின. வழக்கம் போல் தலை முடியை கைகளால் ஒதுக்கி முகத்தை துடைக்க சேலை முந்தானையை தேடும் போது தான் தன் கோலத்தை பார்த்தாள். தன் பாவாடையை தளர்த்தி உயர்த்தி நெஞ்சை மறைத்து கட்டினாள்.
எத்தனை பெண்கள் ஆற்றில் குளித்து இப்படி போகிறார்கள். அவளுக்கு இப்பொழுது கொஞ்சம் படபடப்புக் குறைந்தது போல் இருந்தது.

' ஹாய், டார்லிங் '

நவீனின் குரல் வெளியில் இருந்து கேட்டது. 'நான் உன்னை சாயங்காலம் வந்து பார்க்கிறேன். நல்ல முடிவு எடுத்து வை. ஒரு நாள் பட்டினி கிடந்தா செத்து போயிற மாட்டே.' அவன் செருப்புச் சத்தமும், கதவைப் பூட்டும் சத்தமும் மெல்லத் தேய்ந்தது.

திடீரென்று திரும்பி வந்தாலும் வருவான். கொஞ்சம் நேரம் அப்படியே இருந்தாள்.தன் எச்சிலை முழுங்கி தொண்டையை நனைத்துக் கொண்டாள்.
மெல்ல எழுந்தாள். லேசாக தள்ளாடியது. அப்படியே சுவரைப் பிடித்துக் கொஞ்ச நேரம் நின்றாள்.

தகரப் பெட்டியை மெல்ல இழுத்தாள், தன்னைக் காக்கப் போகும் கடவுள் அங்கே கண் உறங்கிக் கொண்டிருப்பதை அறியாமல். மெல்லப் பெட்டி மேல் ஏறி ventilator வழியாக கத்தினாள். 'ஹெல்ப் , யாராவது உதவி பண்ணுங்க, ஹெல்ப்'
அவள் கதறல் யாருக்கும் எட்டவில்லை.

அந்தப் பெட்டியில் எதாவது பழைய பேப்பர் இருந்தா எழுதிப் போடலாம்னு நினைச்சு திறந்தாள். பழைய பெட்டியில் எழுதப்பட்ட பேப்பர், எழுதப்படாத பேப்பர், சில போட்டோஸ் என அழகாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது. கண்டிப்பாக எதாவது பென் கிடைக்கும் எனத் தேடினாள். அங்கே தான் கிடைத்தது அவளை அதிர வைத்த போட்டோ. நவீன் ஒரு பெண்ணை அணைத்தபடி. 'இது தான் முதல் தாரமா இருக்குமோ? ' மொத்த போட்டோஸ் பார்க்கும் ஆர்வத்துடன்
பார்த்தாள். பதறினாள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு பெண்ணுடன். எல்லோருடனும் மிக மிக நெருக்கமாக.

தன்னை அவன் நேற்று திட்டியது நினைவுக்கு வந்தது. 'அயோக்கியனே, நீ இப்படி இருந்து கொண்டு தானா என்னை ஒரு தேவடியாளைப் போல் திட்டினாய். நீ நல்லா இருப்பியா? எப்படி ஒரு நல்லவன் போல் நாடகம் ஆடி விட்டான். இவன் புத்திசாலி, போலீசிடம் மாட்டினால் கூட தப்பி விடுவான். ஆண்டவா நீ தான் என் அழுகைக்கு பதில் சொல்ல வேண்டும், 'புலம்பினாள்

இந்த திருமணம் நடக்குமுன் கவி அழுததே இல்லை. ஆனால் இப்போல்லாம் அடிக்கடி கண்ணில் நீர் கட்டிக் கொள்கிறது.
கண்களைத் துடைத்து எழுந்தாள். பேப்பரைக் கிழித்து 'நான் ஆபத்தில் இருக்கிறேன். போலிசுக்கு தெரியப்படுத்தவும்' னு எழுதி பெட்டியில் பேப்பர் கலைந்து விடாமல் இருக்க வைத்திருந்த வழுவழுப்பான கல்லில் சுற்றி பெட்டியின் மேல் நின்று காத்திருந்தாள். பேச்சுக் குரல் கேட்டதும் அந்த சின்ன இடைவெளி வழியாக பலம் கொண்ட மட்டும் வீசினாள். கூடவே'காப்பாத்துங்க' னு கத்தினாள்.

அவளைக் காக்க கடவுள் முடிவெடுத்த பின் எல்லாம் சுபமாகவே நடந்தது. வடைக்காரர் கூட்டம் குறைந்து இருக்கிறது என்று ஒதுங்குவதற்காக வந்தவர், எதோ சத்தம் கேட்க நிமிர்ந்தார். கல் வேகமாக நெற்றியில் வந்து விழுந்தது. நெற்றியைத் தடவிக் கொண்டே பார்க்கும் போது தான் அவருக்கு உறைத்தது 'அடடா, இது வாத்தியார் வீட்டு பின் பக்கமில்ல , இங்கே தான் அந்தப் பிள்ளையை அடைச்சு வச்சு இருக்கானா' னு நினைத்தபடி 'கண்ணு பயப்படாதே, நான் போலிசை கூட்டிட்டு வந்திர்றேன்.' கத்தினார்.

அவர் குரல் கேட்ட கவி 'அண்ணே, காப்பாத்துங்க அண்ணே, எனக்கு பயம்மா இருக்கு' என்றாள்.

வடைக்காரர் ஸ்டேஷன் நோக்கி ஓடினார். அங்கிருந்த SI கவியின் பெற்றோர் புகார் கொடுத்தது நினைவுக்கு வர சூழ்நிலையின் தீவிரத்தை உடனே புரிந்து கொண்டார். அப்போதே வாங்கி வைத்து இருந்த நவீனின் செல் நம்பரில் அழைத்தார். 'நவீன், உங்களை ஒரு விஷயத்துக்காக விசாரிக்க வேண்டி இருக்கிறது. உடனே புறப்பட்டு வரீங்களா?' என்றார்.

'என்ன விஷயம் சார்'

'அதை நேர்ல தான் சொல்லணும், எல்லாம் நல்ல விஷயம் தான், சீக்கிரம் வாங்க'என்று காலைக் கட் செய்தார்.

என்ன விஷயமாக இருக்கும் என்ற சிந்தனையோடு விரைந்து வந்து சேர்ந்தான்.
'என்ன நவீன், ஜீப்ல ஏறுங்க, வீட்டுக்கு போகலாம்.'
'என்ன விஷயம் சார்'
'அதான் சொன்னேனே நல்ல விஷயம் தான்னு , ஏறுங்க ம்ம் '

வீட்டு வாசலில் வடைக்காரரின் அடுப்பு தக தக வென எரிந்து கொண்டு இருந்தது. அவரை முறைத்த படியே கதவைத் திறந்தான்.
'உட்காருங்க சார், காபி கொண்டு வரேன்.'
'உங்க மனைவிய எங்கே நவீன்'
'ஊருக்கு போய் இருக்கிறா'
'வாங்க முதல்ல உங்க வீட்டை சுத்தி பார்க்கலாம்.'
ஒவ்வொரு அறையாகப் பார்த்து விட்டு கவியை அடைத்து இருந்த அறைக்கு வந்தார். 'இது என்ன அறை?'
'பழைய சாமான் போட்டு வைத்திருக்கிறோம்.'

'திறங்க' நவீனுக்கு உதறல் எடுத்தது. விஷயம் தெரிந்து தான் வந்திருக்கிறாரோ?
முதுகில் அழுத்தமாக கை வைத்து 'ம்ம்ம்' என்றார்.
திறந்தான். அங்கே நீரில் நனைந்த குருவிக் குஞ்சைப் போல் நடுங்கிக் கொண்டிருந்தாள் கவி.
'what is this mister'
'சார், அது வந்து....' என்று இழுத்தவன் இன்ஸ்பெக்டர் கண் போகும் திசையில் பார்த்தான். கலைந்த பேப்பர்களும் சிதறிய போட்டோகளும்.

நிலைமையின் தீவிரம் புரிந்து ஓடத் தொடங்கினான். தன் வீட்டின் நிலைப்படி தரையை விட கொஞ்சம் உயரமாக இருப்பதை மறந்து, ஓடி, தடுக்கி, வடைக்காரர் அடுப்பின் மேல் விழுந்தான். எண்ணை சட்டியும் அடுப்புமாக அவன் மேல் சரிய
அவனும் சேர்ந்து தக தக வென எரியத் தொடங்கினான்.

திகைத்து நின்ற கவியின் கண்களில் நெருப்பு ஜ்வாலை, அவன் ஓட, ஓட அங்கும் ஓடிக் கொண்டிருந்தது. ஜ்வாலையின் நடுவே கண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது.