Bio Data !!

06 July, 2023

எங்கள் இல்ல திருமணத்தில் ஒரு பெரிய தொகையை பறி கொடுத்திருக்கிறோம். அதை மிகக் கஷ்டப்பட்டு திருடியவனைப் பிடித்த பின் அந்த காவலர்களில் ஒருவர் என்னிடம் சொன்னது " உங்களுடைய ஒரு சின்ன அஜாக்கிரதை எத்தனை பேருடைய உழைப்பைப் பறித்திருக்கிறது பாருங்கள்" என்று. இன்று அது ஞாபகம் வரக் காரணம் நான் பார்த்த ஒரு வெப் சீரீஸ். # kerala crime files. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முதல் மலையாள வெப் சீரீஸ். ஆண்கள் மட்டுமே இருக்கும் ஒரு அதிசய போஸ்டர். முக்கிய ரோலில் லால் மற்றும் அஜு வர்கீஸ். ஒரு பாலியல் தொழிலாளி கொலை செய்யப்படுகிறாள். கொன்றவனைக் கண்டுபிடிக்க மேலதிகாரிகளிடமிருந்தோ கட்சிகளிடமிருந்தோ அழுத்தம் இல்லை. ஆனாலும் காவல்துறை தன் குடும்பத்தை விட்டு விலகி ஆறே நாட்களுக்குள் கண்டு பிடிக்கிறது. ஒருவர் காவல் துறை உயரதிகாரி (லால்) அவர் மனைவியைப் பிரிந்து இருக்கிறார். ஒரு வளர்ந்த மகள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவளுக்கு தன் நேரத்தை பங்கிடுகிறார். மற்றொருவர் புதிதாய் திருமணம் ஆனவர். ஒருவரின் மனைவி பிரசவ நேரத்தை நெருங்கிய நிலையில். இப்படி இருக்கும் பலரும் தம் பொன்னான நேரத்தை ஒதுக்கி கொலை செய்தவனை பிடிக்க அலைகிறார்கள். இதில் ஒரு சமயம் கொலைகாரனை பிடிக்க கூடிய சந்தர்ப்பம் கை அருகில் வந்தும் அவர்களின் கவனக் குறைவினால் சந்தர்ப்பத்தை நழுவ விடுகிறார்கள். கதாநாயகன் அஜு வர்கீஸுக்கு ஒரு காவலருக்கான உயரமில்லை. அதை ஈடு கட்ட முகத்தில் இறுக்கமான உணர்வுகளை கொண்டு வருகிறார். அதற்கு எதிர் மறையாய் புது மனைவியிடம் பேசும் போது முகத்தில் காதல் குறும்பின் நர்த்தனம். இறுதியில் கொலை காரனை பிடித்தார்களா? அவன் என்ன காரணத்தால் கொலை செய்தான் என்பதை அறிய வெப் சீரீஸ் சை பாருங்கள்.
கவிதைப் புத்தகத்தின் பெயர் : மனதின் சிறகுகள் ஆசிரியர் : எம்.எஸ்.ஜெயலட்சுமி நிவேதிதா பதிப்பகம். விலை ரூ 150- முதல் பதிப்பு : 2023 ஆசிரியை ராஜபாளயம் நகரைச் சேர்ந்தவர். இது இவரது முதல் நூல். தமிழ் , தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் அறிந்த மொழி ஆசிரியர். “தாய்மை” என்னும் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை ஆற்றுவதுடன் கவுன்சிலிங்கும் செய்கிறார். மாணவர்கள் மத்தியில் நேர வங்கி, திறமை வங்கி, மனித நூலகம், மனிதம் போன்ற பல அருமையான வாழ்வியலை அறிமுகம் செய்திருக்கிறார். பால்ய வயதில் குறிஞ்சிச் செல்வர் திரு. கோதண்டம் திருமதி இராஜேஸ்வரி தம்பதிகள் அவர்கள் இல்லத்தில் நடத்திய திருக்குறள் வகுப்புகள் ஆரம்பித்து இன்று தனது நூல் வெளியாவது வரை முழுமையாக உறு துணை புரிவதாக நன்றியுடன் நெகிழ்கிறார். “பித்தம் தலைக்கேறி நீ பின் தொடர்ந்து வந்ததென்ன……” எனத் தொடங்கும் கவிதை என்னை வியக்க வைத்தது. சமுதாயக் கட்டுக்குள் வளர்ந்து வந்தாலும் மனித மனத்தின் ஆசையை காற்புள்ளியாய் சொல்லும் கவிதை. பிறிந்து வாழும் பெற்றோரின் குழந்தைகளை “ காற்றில் அல்லாடும் வாலறுந்த பட்டங்கள்” என்கிறார். ஆமாம் தானே? இவரது கவிதைகளில் காதல் துள்ளும் வரிகளுமுண்டு. “ வலிந்த காற்று ஆவேசமாய் மரங்களில் மோத ஆலிங்கனச் சிணுங்கலாய் ஓவென எழும் நட்டுவாங்கத்தில்……” (சிணுங்கலும் ஓவென எழும் சத்தமும் ஒன்றுக்கொன்று முரணாய் இருக்கிறது. ஆசிரியரின் மனதின் எண்ண ஓட்டம் என்ன என்று கேட்டு பார்க்கணும்) இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டி எழுச்சி கொடுக்கும் கவிதை ஒன்று. “ தோல்வி நிரந்தரமல்ல கலங்காதே. கால தாமதம் ஆவதெண்ணி வருந்தாதே. அது காலம் தரும் அவகாசம். இடைவெளியை உனதாக்கு. எழுந்து நட. எரிமலையும் அடங்கும். பாய்ந்து புறப்படு. பார் முழுதும் உன் காலடியில். சின்ன சின்ன ஹைக்கூ கவிதைகளும் இடைஇடையே பூக்கின்றன. “ முடிந்ததை மறந்து விடு. முடிந்ததைச் செய்து விடு.” “ஒற்றை இலக்கு மற்றதை விலக்கு.” அப்பாவை பற்றிய ஒரு கவிதை பெண் பிள்ளைகள் அத்தனை பேரையும் தம் தந்தையை நினைத்து ஏங்க வைக்கும். நான் மிகவும் ரசித்த வரி ஒன்று உண்டு. “ அழுதரற்றும் அத்தனை தந்தைகளின் அடி வயிற்றுத் தீ அணைப்பேன்” “ கல்லையும் கரைக்கும் கடலளவு தொல்லைகள். சுமக்கும் நம் சந்ததியினரை” வறுமையை வேருடன் பூமியினின்று கெல்லி எடுக்க சூளுரைப்போம்” போன்ற வரிகளில் ஆசிரியரின் சமுதாய அக்கறை தெரிகிறது. ஒரு கவிதை இப்படி தொடங்குகிறது. “ எல்லாப் பக்கமும் கிளை பரப்பி விண் தொட விளையும் விருட்சம் இது” ஆசிரியர் என் தோழி. நான் நன்கு அறிந்தவர்கள். இந்த வார்த்தைகள் அவர்களையே பிரதிபலிக்கிறது. புத்தகம் நெடுக அழகு தமிழ் வார்த்தைகளை ரசித்தேன். //பசுந்தோகை வருடல்களாய்// //திரவித்த திசுக்கள்// //விம்மல்கள் வேதனையாய் வேடுகட்டும்// // திகம்பரத் தீ நாக்கு// .இரண்டு விஷயங்கள் மனதில் பட்டன. நாம் சில விஷயங்களை சிலவற்றோடு தொடர்பு படுத்திக் கொள்வதாலும் இருக்கலாம். சிறகு விரித்த பெண்ணின் நிறத்துக்கு கருமையை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைப்பிட்டிருக்கலாம். அது வாசகரை கவிதையின் உள்ளிழுக்கும். மென் மேலும் நிறைய எழுத வேண்டும். விண் தொடும் விருட்சமாய் வளர வாழ்த்துக்கள்