Bio Data !!

28 September, 2020

 #கதை விமர்சனம்

தொடர்ந்து கல்யாணச் சாப்பாடும் பிரியாணியுமா சாப்பிட்டா ஒரு தக்காளி ரசமும் பருப்புத் துவையலும் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு தோணுமே அந்த மாதிரி நேரங்களில் நான் இலக்கியம் அதிகம் கலக்காத சாதாரண பெண்களுக்கான நாவலைப் படிப்பேன். அப்படிக் கிண்டிலில் படித்தது தான் துளசி சந்திரன் எழுதிய "எதிர் வீட்டுப் பெண்" நான் எழுதுவதெல்லாம் என் புரிதல்களே.  சில கருத்துக்கள் உங்களுக்கு முரண்படலாம். சொல்லுங்கள். அந்த திசையிலும் சிந்தித்து சரியென்றால் மாற்றிக் கொள்வேன். இப்ப கதை.....


ஆதித்யா ஜனனி அவர்கள் குழந்தை ஆதித்யாவின் அம்மா இவர்களால் ஆனந்தமான வீடு. ஜனனியும் அவள் மகளும் ஒரே பள்ளியில் ஆசிரியராகவும் மாணவியாகவும் இருப்பதால் பள்ளிக்கு பக்கத்தில் வீடு மாறிச் செல்கிறார்கள். அங்கே எதிர் வீட்டில் கணவனைப் பிரிந்த ரேவதி தன் இரு பெண் குழந்தைகளுடன் வசிக்கிறாள். 


அவரவர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நாளில் ஆதித்யாவுக்கு ஒரு கொரியர் வருகிறது. அவர்கள் வீட்டில் யாரும் இல்லாததால் ரேவதியிடம் கொடுக்கிறார்கள். அதை வாங்கலாமா எனக் கேட்பதற்காக கவரின் மேல் எழுதப்பட்ட ஆதித்யாவுக்கு போன் செய்கிறாள். அவள் குரல் கேட்டதும் படபடத்த ஆதித்யா வாங்கச் சொல்லி விட்டு அவள் எண்ணை செல்லில் சேமித்துக் கொள்கிறான். அங்கே விளைகிறது வினை.


மறுநாள் வாட்ஸ்அப்பில் நன்றி செய்தி. அதைத் தொடர்ந்து  சில பல forwarded messages. தனிமையில் இருக்கும் ரேவதியும் தடங்கலின்றி தொடர்பு கொள்ள ஆதித்யா கனவு உலகத்திலேயே இருக்கிறான். பெண்கள் நுண்ணறிவு படைத்தவர்கள் அவனிடம் ஏற்பட்ட மாறுபாட்டை அவனுடைய அம்மா ஜனனி இருவருமே கவனித்து விடுகிறார்கள். 


சந்தேகங்கள் தனித்தனியே தான் மூளையில் சேரும். பின் ஒன்றுடன் ஒன்று பொருத்திக் கொள்ளும். தாள முடியாத ஒரு சமயத்தில் ஜனனி அழுகையோடு தன் சந்தேகத்தை வெளிப்படுத்த அவன் அம்மாவும் தானும் பல நாட்களாக கவனித்து வருவதாக திட்டத் தொடங்குகிறார்கள். எதேச்சையாக மறு நாள் அவர்கள் வீட்டுக்கு வந்த ரேவதி ஆதித்யா தன் அண்ணனைப் போல் இருப்பதால் சகஜமாக பேசியதாகச் சொல்ல ஆதித்யாவின் கனவுக் கோட்டை ஜனனியின் சந்தேக கோட்டையையும் இழுத்துக் கொண்டு தவிடு பொடியாகிறது. சுபம்!!


இதில் நான் சிந்தித்தது.

(1) அலுவலகத்திலோ பிற இடங்களிலோ பெண்களுடன் பழக வாய்ப்பிருந்தாலும் நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் பெண்களைத் தான் சந்தேகிக்கிறோமோ?

(2) கணவனை இழந்தவளோ பிரிந்தவளோ இருந்தால் நம் சந்தேகம் வலுக்கிறதோ? 

(3)உடை மாற்றம் நடை பார்வையில் ஏற்படும் சிறு தயக்கங்களைக் கூட பெண் கவனித்து விட்டாலும் வெளிப்படையாக கேட்கும் வரை ஆண் தன் மனைவி கவனிக்கவில்லை என்றே நினைக்கிறானோ?

(4) உடனிருக்கும் கணவனின் வீட்டவர்கள் தவறு கண்ட இடத்தில் மனைவிக்கு சார்பாக பேச வேணடும். பேசுகிறார்களா? 

(5) ஒரு பெண்ணுக்கு ஆண் காதலனாக அப்பாவாக அண்ணனாக தம்பியாக மகனாக எப்படி வேண்டுமானாலும் தெரிவான். ஆனால் ஆணுக்கு ஆரம்பத்தில் பெண் தன்னை ரசிக்கும் காதலியாக மட்டுமே தெரிகிறாளோ? 

(6) இயல்பாகவே ஆண் மனம் சின்ன சின்ன சபலங்களுக்கு ஆட்படும். போடுற சண்டையை ஆரம்பத்திலேயே போட்டு முளையிலேயே கிள்ளி விட வேண்டுமோ? 


இந்த காலத்தில் மண வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கும் போது ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அபஸ்வரம் தட்டும் போது உடனே வெளிப்படுத்தி முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும் என்று சொல்லித் தரும் நல்ல ஒரு நாவல்."எதிர் வீட்டுப் பெண்"

17 September, 2020

 மாய ஏணி


ஆம் இதுவொரு மாய ஏணி. கீழே பதித்து மேலே சாய்க்கப்பட்ட மர ஏணி அல்ல இது மேலிருந்து கீழே தொங்கும் நூலேணி.  இதில் மேலே ஏற ஏற கீழே உள்ள படிகளை உருவினாலும் பாதகமில்லை. ஆம் நாம் ஓரங்களை பற்றி மேலே சென்று கொண்டே இருக்கலாம்.


வாழ்விலும் அது போலத்தான். நாம் பிறரை அறிமுகம் செய்து கொள்கிறோம் என நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்களால் நமக்கு நடக்க வேண்டிய ஒரு காரியத்துக்காகத் தான் அவர்களை பிரபஞ்சம் நமக்கு அறிமுகம் செய்கிறது. அந்த காரியம் முடிந்ததும் சில நேரங்களில் அவர்கள் நம்மை விட்டு ஒதுங்கி விடலாம் இந்த நூலேணியின் கீழ்ப்படிகள் சுருட்டப்பட்டது போல. சில நேரம் நம்மை அவர்கள் தொடர்ந்தும் வரலாம். அவர்களைக் கொண்டு நம் வாழ்வில் ஒரு படி முன்னேற அவர்கள் உதவுகிறார்கள். அவ்வளவு தான்.


இப்ப சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிலரை நன்றி மறந்தவர்கள். காரியத்துக்காக என்னை பயன்படுத்திக் கொண்டான் என பழிக்கிறோம். அது தேவையில்லை அல்லவா. அந்த செயல் அவர்களுக்கு நம்மால் ஆக வேண்டுமென்பது பிரபஞ்சத்தின் முடிவு. 


அதைப் போலவே பல துரோகங்கள், கோபங்கள் வருத்தங்கள் போன்றவற்றையும் நாம் சுமந்து கொண்டு மேலேற வேண்டியதில்லை. அது நம் வேகத்தைக் குறைக்கும். அவற்றை அங்கங்கேயே விட்டு வரப் பழகுவோம். இலகுவான மனதோடு மேலேறுவோம். 


ஒரு பிறந்த நாளில்  ஒருவரை Long Live என்று வாழ்த்துவது முன்னெப்போதையும் விட இப்போ வலிமை வாய்ந்தது. ஆம் இப்போ பலருக்கு கண் முன் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது கொரோனா. நம் அன்புக்குரியவர்களின் நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களின் மரணம் நம்மை  உலுக்கிக்  கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் Long Live என்னும் வாழ்த்தின் உன்னதம் பெரிது. 


மனதார பிறரை பாராட்டுவோம். வாழ்த்துவோம். சோகங்கள் துக்கங்களை உதறி முன்னேறுவோம். இது நம்மை காக்க வந்திருக்கும் மாய ஏணி. ஏறியவர்கள் மேலே மேலே ஏறிக் கொண்டே இருக்கலாம். அதற்கு வானமே எல்லை. இன்னும் ஏறாதவர்களே! என்ன தயக்கம். உடனே உங்கள் சோகங்கள் துக்கங்களை உதறித் தள்ளி ஏறத் தொடங்குங்கள். 


Ready steady Go

13 September, 2020

#எண்ணச் சிதறல்கள்

 ஒரு பெண் நெல்லையில் வீட்டுக்கே வந்து பார்லர் வேலை எல்லாம் செஞ்சு விடுவா. Mobile parlour. எப்ப நாம ஃப்ரீயோ அப்போ கூப்பிட்டா வந்திடுவா. ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பார்லர் நடத்துவதில் உள்ள பல சிக்கல்களை சொல்லி எனக்கு இது சௌகர்யமா இருக்கும்மா என்பாள். நமக்கும் சௌகர்யம். புறப்பட்டு செல்ல வேண்டாம்.


ஒரு முறை இப்படி அவள் வீட்டுக்கு வந்த போது அவளிடம் கொஞ்சம் பேச முடிந்தது.  

" தொழில் எப்படி இருக்குமா?"

பரவயில்ல மேம். ஆனா ஒரு சிலர் தான் ரொம்ப மோசமாக இருக்காங்க"

ஆம் நானும் நீங்க நினைச்ச மாதிரி தான் நினைச்சேன். 

ஆனால் பிரச்னை அதுவல்ல. திருமண அலங்காரத்துக்கு நான் போனால் உடனே பணம் வாங்க முடியாது. கவரிங் நகைகளை திருப்பிக் கொடுக்கும் போது பணம் தருகிறேன் என்பார்கள். பணமும் வராது. நகையும் வராது. எத்தனை போன் பண்ணினாலும் எடுக்க மாட்டார்கள். 


நகை இவர்கள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள் என்று நம்பி வேறு ஒருவருக்கு தருவதாக உத்தரவாதம் கொடுத்திருப்பேன். ரொம்ப கஷ்டமாயிடும். 


ஒருவர் பணமும் கொடுக்காமல் இந்த பெண் கேட்கும் போது " பாடி மசாஜ் பண்ணி விடுவீங்களா? " என்று கேட்டிருக்கிறார். இந்த பெண் தைரியமாக " என் கணவர் பண்ணுவார். அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறாள். 


இது பார்லர் நடத்தும் எல்லாருக்கும் நடப்பது தானே என்கிறீர்களா? நான் ஸ்பெஷலா எழுதறேன்னா பொண்ணு ஸ்பெஷலா இல்லாம இருக்குமா? இவள் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு இலவசமாக அலங்காரம் செய்து விடுகிறாள். இவ்வளவுக்கும் ரொம்ப வசதி படைத்தவளெல்லாம் இல்லை. "கல்யாணம்ங்கிற அந்த ஒரு நாள்ல தான் எல்லோருமே ஹீரோ ஹீரோயின் ஆகிறாங்க. அந்த பிள்ளைங்களுக்கும் ஆசை இருக்கும். வசதி இருக்காது. அதனால் எனக்கு வசதி படுறப்ப அவங்களுக்கு ஃப்ரீயா செஞ்சு விடுவேன். மனதுக்கு நிம்மதியா இருக்கும்" என்பாள். நல்ல மனசு ல்ல.


"வராத பணத்தை விட்டுடலாம் மேடம் ஆனால் நம்மை ஒருவர் ஏமாற்ற விடக் கூடாது. அதனால் எத்தனை முறை என்றாலும் போன் பண்ணி வாங்காம விட மாட்டேன்" என்பாள்.  


#மீள் தான். இன்று என்னமோ அந்த பெண் நினைவு வந்தது. இந்த கொரோனா காலத்தில் அந்த குடும்பம் என்ன செய்திருக்கும். கணவன் மனைவி இருவருமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாய் மொபைல் பார்லர் தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போ இயல்பு நிலை வந்திருக்கும்.

03 September, 2020

 கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக கிடையிலடைக்கப்பட்ட ஆடுகளாக இருந்தோம். எப்போ சுதந்திரமா திரிவோம்னு பொசமுட்டிக்கிட்டு வந்தோம். ஒரு சிலர் வீட்டுக்குள்ளேயே நல்ல உடை உடுத்தி இருப்பார்கள். ஆனால் அனேகம் பேரின் உடை லுங்கியும் நைட்டியுமாய் தான் இருந்தது. 


அதில் ஒரு சில இளசுகள் இந்த காலத்தை வீணாக்க வேண்டாமென முதல் பிள்ளையோ அடுத்த பிள்ளையோ பெற்றுக் கொள்ள தயாராகி விட்டார்கள். இதில் பிரபலங்களும் அடங்குவார்கள். சில பெருசுகள் வேறு வேலையில்லாமல் குத்துப் பழி வெட்டுப் பழியென சண்டை போட்டுக் கொண்டார்கள். சிலர் விவாகரத்திலும் போய் நின்றார்கள்.

சிலருக்கு இந்த தனிமை விவாகரத்து வரை போய் நின்றவர்களை உணர்ந்து இணைத்திருக்கிறது. சில விவாகரத்தானவர்களையும்!


பல நீலக் காலர் பணியாளர்களை ஆட்டிப் பார்த்திருக்கிறது. இவர்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாய் வாழ்க்கை நடத்தியவர்கள். தன் வருங்காலத்துக்கு சேமிக்க முடியாதவர்கள். திடீரென்று வேலை என்ற ஒன்று இல்லாமல் போனதும் குழந்தை குட்டிகளோடு நடுத் தெருவில் விடப்பட்டது போல் உணர்ந்தார்கள். சிலர் ஆட்டோக்களை காய்கறி கடைகளாக்கினார்கள். சிலர் அங்கங்கே கடன் வாங்கி சமாளித்தார்கள். ஒரு சிலர் செத்தும் போனார்கள். 


இப்படியான கால கட்டத்தில் நாம் இயல்பு வாழ்க்கை முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். எல்லா கதவுகளையும் திறந்து விட்டார்கள். சுதந்திரக் காற்றை அனுபவிக்க அல்ல. உள்ளே மூச்சு முட்டிப் போய் விடக் கூடாதேயென. 


நண்பர்களே!ஆபத்து இன்னும் நம்மை விட்டு முழுவதும் விலகாத சூழலில் நாம் கவனமாகவே இருக்க வேண்டி இருக்கிறது. எனக்கு தெரிந்து தவிர்க்க முடியாத, சில நேரங்களில் தவிர்த்திருக்கலாம் என்று கூட இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் விசேஷங்களில் கலந்து கொண்டு கொரோனாவை சிலர் பற்றிக் கொண்டுள்ளார்கள். ஒரு சிலர் இறந்தும் போய் இருக்கிறார்கள். அப்படி இறந்தவர்கள் இன்னும் ஐந்து பத்து ஆண்டுகள் நலமாய் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். எனது அவதானப்படி மற்ற கிருமிகளை பாக்டீரியாக்களை விட கொரோனா மிக சுலபமாக மிக நானோ வேகமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு  வந்து விடுகிறது. 


உங்கள் உயிர் இன்று உங்கள் கையில். ஏழு மலை ஏழு கடல் தாண்டிய கிளியின் கைகளிலல்ல. அத்தியாவசயமான நேரங்களில் அத்தியாவசியமான இடங்களுக்கு தக்க பாதுகாப்போடு செல்ல பழகுங்கள். இன்னும் கொஞ்ச காலம் தான். தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கும் வரை. கவனமாக இருங்கள். உயிர் விலை மதிப்பற்றது.


நலமோடு வளமோடு வாழ்வோம்!