chella நாய்க்குட்டி
12 October, 2026
#பிறழ் நாவல்
நாவல் :பிறழ்
ஆசிரியர் : நிஜந்தன்
எதிர் வெளியீடு
விலை : 150 ரூபாய்
முதல் பதிப்பு : டிசம்பர் 2025
ஆசிரியர் நிஜந்தன் ஆரம்பத்தில் மார்க்சிய கோட்பாடுகள் சார்ந்த அல் புனைவுகளை மட்டுமே வாசித்தவர் . பின் ரஷ்ய இலக்கியங்கள் , சுந்தர ராமசாமி எழுதிய ஒரு புளிய மரத்தின் கதை வழியாக தீவிர இலக்கிய வாசகர் ஆகியிருக்கிறார் . பிறழ் இவரது முதல் நாவல் .
மனச்சிதைவு சார்ந்த நாவல் . மனச் சிதைவு என்பது தொலைத்ததை மீண்டும் பெற மனம் எடுத்துக் கொள்ளும் ஒரு பிரயத்தனம். ஒரே நேரத்தில் இருவராக வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவனின் கதை.
அணிந்துரையில் திரு கோபி கிருஷ்ணன் முதல் நிலையில் அவன் முடிவு எடுக்கவே மாட்டான். பிறரைச் சார்ந்தே இருப்பான் என்கிறார். மன பாதிப்பின் முதல் அறிகுறியே முடிவெடுக்க முடியாமை தான். மனதை ஒரு நிலைப்படுத்த முடியாது . இன்னொரு நிலையில் தன்னை தலைமைப் பண்பு நிறைந்தவனாக நினைப்பான். இந்த நாவலில் ஒழுங்கையோ காரணங்களையோ தேடாதீர்கள் என்று முன் அறிவிக்கிறார் .
கதை தன்மையில் சொல்லப்பட்டு இருக்கிறது. தனக்கு "குட்டையன்" என்று ஒரு பட்டப் பெயர் இருப்பதாக சொல்கிறான் . கதை ஆரம்பமே தற்கொலை முயற்சி. தடங்கல்.
பள்ளியில் அவன் பீடி பிடித்து மாட்டிக்கொள்ள அம்மாவை வந்து பார்க்கச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர். பள்ளி சென்று திரும்பிய அம்மாவின் கோபத்தால் அம்மா உடனான நெருக்கம் குறைகிறது. அம்மாவின் கன்னத்தில் கைவைத்துப் படுக்கும் உரிமை பறிபோகிறது. இதெல்லாம் பின்னால் நடக்கும் நிகழ்வுகளை அவன் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நெருக்கம் இன்மைக்காக சொல்லப்படுகிறது.
பக்கத்து வீட்டில் பவானி அக்கா டியூஷன் எடுக்கிறார் . அங்கே சேருகிறான். ஆனால் தனியாய் இருக்கும் நேரங்களில் பவானி அக்காவின் பார்வை டியூஷன் வந்திருக்க வேண்டாமோ என நினைக்க வைக்கும். கொஞ்ச நாளிலேயே அக்கா வீடு மாறிப் போய்விட அங்கே போகும் ஒரு குறுக்குச் சந்தில் "கவட்டிக் காலன்" என அழைக்கப்படும் ஒருவனால் வன்மையாக பயன்படுத்தப்படுகிறான்.
அதை பவானியக்காவிடம் சொல்ல துரதிர்ஷ்ட வசமாக அவளாலும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளப் படுகிறான்.
இங்கே இரண்டு விஷயங்களை நாம் நினைவு கூற வேண்டும் (1) பெண் குழந்தைகளை மட்டும் பொத்தி பொத்தி வளர்த்து ஆண் குழந்தைகளுக்கு இப்படி ஒரு அகால நிகழ்வுக்கு வாய்ப்பு இருக்கிறது என்பதையே அறிந்து கொள்ளாமல் இருப்பது.
(2) ஒரு குழந்தைக்கு தாயோ தந்தையோ எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி எதையும் பகிர்ந்து கொள்ளலாம் எனும் தைரியத்தை கொடுப்பது .
இதில் சிறுவனின் தவறு எள்ளளவும் இல்லை என்றாலும் அவன் குற்ற உணர்வில் தவிக்கிறான் . அதனால் ஏற்பட்ட மனப்பிறழ்வும் அதன் முடிவும் தான் கதை.
அன்பு உள்ளங்களே !! குழந்தைகளை ஆணானாலும் பெண்ணானாலும் எவ்வளவு கவனத்தோடு பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உணர்த்தும் நாவல் . தவறவிடாமல் படிக்க வேண்டிய ஒன்று.
10 October, 2026
ராம பிரசாதம்
இந்த வாரக் குமுதத்தில் (14.10.2026) அண்ணன் சப்தரிஷி லாசரா அவர்களின் "ராம பிரசாதம்" என்ற சிறுகதை.
ராம பிரசாதம் ஒரு எழுத்தாளர். அவரின் நூறாண்டு தொடர்பான போஸ்டர் திருவண்ணாமலையில் ஒட்டப்பட்டு இருக்கிறது. அவர் எழுதிய "கண் கொடுத்தவன்" நாவல் வெளியிடுபவர் ராம் பாபா. பெற்றுக் கொள்பவர் ராம பிரசாதம்.
சமீபத்தில் வண்ணதாசன் அவர்களின் அகவை 81 விழாவில் "நான் ஒரு முதிர்ந்த பறவையாக கிளையில் அமர்ந்து சின்னஞ்சிறு பறவைகள் பறப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார். அது போல நூறாண்டு கடந்த ஒரு எழுத்தாளனின் புத்தக வெளியீட்டில் அவரே கலந்து கொள்வது எவ்வளவு பெரிய பாக்கியம். நான் பாக்கியம் என்று சொன்னது எழுத்தாளருக்கல்ல.
விருதுகளை " வாங்கி விட்ட" என்று சொல்லிப் பின் திருத்தி "பெற்று விட்ட" என்கிறார் ஆசிரியர். இப்படிச் சின்ன சின்ன நுணுக்கங்கள் கதை நெடுக.
ஒரு எழுத்தாளனுக்கு வெறும் வாசகனாக மட்டுமல்லாது ஒரு மகனைப் போல அக்கரை எடுத்துக் கொள்ளும் வாசகன் கிடைப்பது ஒரு வரம். அந்த வரம் தான் ராம பிரசாதம் கதைக் கரு.
அண்ணன் சப்தரிஷி அடிக்கடி சிறுகதை எழுத வேண்டுமென்பது என் வேண்டுகோள். அவர் தந்தையிடமிருந்து அவ்வளவு விஷயங்கள் அவர் பெற்று இருக்கிறார். அவற்றை சிறு கதைகள. மூலம் நமக்குக் கடத்த வேண்டும்.்
08 October, 2026
படத்தின் பெயர். : Chennai love story
OTT : Sony Liv
தெலுகு படம் தமிழ் டப்பிங்குடன்
இயக்குநர் : ரவி நம்பூரி
முக்கிய நடிகர்கள் : கிரண் அபாவரம், கௌரி ப்ரியா.
மூன்று வருடமாகக் ஒரு பெண்ணைக் காதலித்த ஒருவன் அவளுடன் திருமணம் நெருங்கி வரும் போது தன்னுடன் பணி புரியும் ஒரு பெண்ணைப் பிடித்திருப்பதாகச் சொல்லி திருமணத்தன்று எஸ்கேப் ஆகி விடுகிறான். மறு நாள் திருமணம். அன்று இரவே மணக் கோலத்தில் அவனை ரயில் நிலையத்தில் சென்று மடக்கி அந்தப் பெண் கேட்கும் போது ரொம்ப சுலபமாகத் தான் இந்தத் திருமணத்துக்கு சம்மதிக்க முடியாது என ரயில் ஏறிச் சென்று விடுகிறான்.
மனம் முறிந்து போன பெண்ணை அவள் உறவு இளையவர்கள் சென்னைக்கு ஒரு மாறுதலுக்காக அழைத்து
வருகிறார்கள். அங்கே ஸ்டீவன் ஷங்கர் என்ற ஒரு இளைஞன் அறிமுகமாகிறான். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ஷங்கர் என்ற இரண்டு இயக்குநர்கள் ரொம்பப் பிடித்தவர்கள் என்பதால் இந்தப் பெயர்.
அவன் தான் கதாநாயகன். நல்ல சிரித்த முகம். திரைத்துறைக்கு முயற்சிப்பவன் அந்தப் பெண்ணுக்கும் அவள் நண்பர்களுக்கும் அறிமுகம் ஆகிறான்.
படத்தில் ஒரு வசனம் " கோடிக்கணக்கான மக்கள். அவர்களுக்கு கோடிக்கணக்கான பிரச்னைகள். அதை வச்சு ஒரு லட்சம் கதைகள் எழுதலாம்." உண்மை தான். ஆனால் ஒரு கதைக்கு கரு கிடைப்பதற்குள் தாவு தீர்ந்து போய் விடுகிறது.
"ஒரே இடத்துல உட்கார்ந்திருந்தா கால் கூட மரத்துப் போயிடும். மனசும் அப்படித் தாங்க. கொஞ்சம் நகர்ந்து வாங்க ( காதல் தோல்வியிலிருந்து) அழகான வசனம்ல. முறிந்து போன உறவிலேயே நின்று கொண்டிருக்கக் கூடாது நகர்ந்து வரணும் என உரைக்கும் வசனம்.
இடைவேளை வரை அழகான காதல் கதையாகச் சென்றது பாதிக்கு மேல் திசை மாறி விடுகிறது. இது வரை மனிதர்களின் காதலைப் பார்த்த நமக்கு ஆவியுடனான காதல் ஒரு வித்தியாசம் தான்.
பாதி வரை வந்ததும் கதை நாம் எதிர்பார்க்காத புது திசையில் பயணிக்கிறது. மனிதர்களுக்குத் தான் பொஸஸிவ்நெஸ் என்ற வியாதி உண்டென்றால் ஆவிகளுக்குமா? ஆமா யார் இங்கே ஆவியானார்கள்? ரொம்ப லாஜிக் எல்லாம் யோசித்து இப்படி எல்லாம் நடக்குமா எனக் கேள்வி கேட்காமல் படத்தை ரசித்தால் பிடிக்கும்.
முடிவு அவர்கள் முடித்த இடத்திற்கு கொஞ்சம் முன்னமேயே கதாநாயகி வில்லன்களிடம் மாட்டிக் கொண்ட போதே அவன் தான் எவ்வளவு அன்பு செய்கிற பெண்ணானாலும் தன்னால் உதவ முடியாது என முடிவெடுத்து படமும் முடிந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.
நான் 5 க்கு 3 star கொடுப்பேன்.
05 October, 2026
எழுத்தாளர் ஆன்டோ ரூபன் "குமிழ் முனை விருது விழாவில்" பேசினார்.
"The happiest man in the world" என்ற புத்தகத்தைப் பரிந்துரைத்தார். அது நாஜி படைகளிடம் மாட்டிக் கொண்ட ஒருவன் தன் பரிதவிப்பை வேதனையை எழுதிய புத்தகம் என்றார்.
அவர் மேலும் சொன்னது
" புனைவு, அல் புனைவு என்ற இரு வகை எழுத்துகளில் அல் புனைவு எழுதுவது கடினமானது. பெரும் உழைப்பு தேவைப்படுவது . ஆனால் வலுவானது என்றார். பூடகமாக எழுதுவது சமூக அவலங்களை ஓரளவு அறுக்கலாம். ஆனால் documentaton தான் முழுதுமாக அறுக்கும்."
இது சரி தான் நாம் சமூக ஊடகங்களில் தவறுகளை எதிர்க்கும் போது பட்டும் படாமலும் எழுதினால் சம்பந்தப்பட்டவர்களும் கண்டும் காணாமல் போய் விடுவார்கள்.
"அல் புனைவு எழுதும் போது இரண்டுவகை நேர்காணல்கள் அவசியம் என்றார்.
1) சம்பந்தப்படவரிடம் ஒரு நேர்காணல். 2) அந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட நிபுணரிடம் ஒரு நேர்காணல். "
நன்கு படிக்காத ஒரு மாணவனை தனக்கு தகவல் கொடுப்பவனாக வைத்துக் கொண்டதாக ஒரு ஆசிரியர் சொன்னது எனக்கு அவ்வளவாக மனது ஒப்பவில்லை. எனது வழக்கமே நல்லதை எடுத்து அல்லதை நீக்குதல். அதனால் அவர் பேசியதில் உள்ள நல்ல விஷயங்களை நான் எடுத்துக் கொண்டேன்.
இலக்கியப் பாதை
நான்
தயங்கித் தயங்கியே
ஓடத் தொடங்கினேன்.
எனக்கு முன்னே
பலரும்
ஓடிக் கொண்டிருந்தார்கள்.
என்னுடன்
ஓடத் தொடங்கியவரும்
என்னைத் தாண்டி விட்டனர்.
எனக்குப் பின்னே
வந்து கொண்டிருந்தவர்களும்
என்னைக் கடந்து
முன்னேறிக் கொண்டிருந்தனர்.
எங்கோ தொலைவில்
ஓடும் எண்ணம் கூட
இல்லாது நிற்பவரும்
என்னைக் கடந்து செல்லும்
வாய்ப்புண்டு.
நிற்காமல்
ஓடிக் கொண்டிருக்கிறேனே
அது போதும்.
எல்லையைத்
தொட்டு விடுவேன்.
Subscribe to:
Posts (Atom)
