Bio Data !!

28 November, 2010

எம் எல் என் - Multi Level Marketting

விகடனில் MLN (Multi level marketting)  பற்றிய ஒரு பகுதியைப் பார்த்ததும் எழுதத் தோன்றிய பதிவு இது.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பம். கணவன் மிக நல்ல மனிதன். அமைதியானவன். அதிக ஆசைகள் இல்லாதவன். அதிர்ந்து பேச அறியாதவன்.
மனைவி ஆடம்பரமும் அலங்காரமும் நிறைந்த வாழ்க்கையை விரும்புபவள். வேலைக்கு சென்று தன் கணவனின் வருமானத்திற்கு கூடுதல் ஊட்டம் அளிப்பதை விட்டு , கணவனை தன் அதிக பட்ச செலவுகளுக்காக அதிகம் பணம் சேர்க்க தூண்டியவள்.
திருமணம் ஆன பொழுதில் இருந்தே அரசு வேலையில் இருந்த அவனுக்கு, அதைத் தவிர ஏதேனும் செய்ய வேண்டிய நிலைமை இருந்தது. சீட்டு பிடிப்பது போன்ற இதர வேலைகளில் சம்பாதிக்கத் தொடங்கினான். இரவு, நேரம் கழித்து வீட்டுக்கு திரும்பினான். பணம் வேண்டும் என்று ஆசை கொண்ட மனைவி நேரத்தோடு வீட்டுக்கு வர வேண்டும் என்றும் விரும்பினாள். அதனால் தினப்படி சண்டை.

சம்பாதிக்கும் அவன் தன் மனைவிக்கு இவ்வளவு ஏன் அடி பணிந்து போனான் என்பதே விளங்கிக் கொள்ள முடிந்ததில்லை. (இப்படி பல கணவர்கள் இருக்கிறார்கள்) அவள் தேவைகளை ஈடு கட்ட ஒவ்வொரு கட்டமாக முன்னேறி(!?!) இறுதியில் அவன் வந்து சேர்ந்த இடம்  இந்த MLN.

அவன்  இந்த  மாதிரி தேடலிலேயே இருந்ததால் இத்தகைய ஏமாற்று வேலைகள் நமக்கெல்லாம் தெரியும் முன்னமேயே அவனுக்கு அறிமுகம் ஆகி விடும். நான் பல முறை அவனிடம் சொல்லி இருக்கிறேன். "உழைத்து சம்பாதிப்பதை தவிர வேறு எதுவும் தங்காது" என்று. என்னைப் பொறுத்த வரை லாட்டரி போன்ற விஷயங்கள் இது வரை முயன்றதில்லை. ஒரே ஒரு முறை குழந்தைகள் நலனுக்காக நடத்திய லாட்டரி வாங்கி இருக்கிறேன். ஆனால் அவன், இரு சம்பளக் காரர்களுக்கு எங்கள் கஷ்டம் சொல்லிப் புரிவதில்லை என்று சிரித்தபடி சென்று விடுவான்.

நான் எப்பொழுதும் அவன் விவரிக்கும் விஷயங்களுக்கு எதிர் பதில் கொடுத்துக் கொண்டே இருப்பேன் என்பதால், இந்த MLN விஷயத்தை சொல்லாமலே விட்டு விட்டான்.MLN நடத்தியது அவன் மனைவியின் பெயரில்.பணம் டெபாசிட் செய்யும் முறை. ஆறு மாதத்தில் இரு மடங்காகும். வேகமான இந்த உலகத்தில் முன்னைப் போல ஐந்து ஆண்டுகள் காத்திருக்க யாருக்கும் பொறுமை இருப்பதில்லை. உடனடித்தேவை கான்செர் கிருமிகள் போல் வேகமாக பலுகிப் பெருகும் பணம். அது ஆளைக் கொல்லும் பணம் என்று உணர்வதில்லை.

முதல் கொஞ்ச நாட்கள் ஒழுங்காக பணம் கிடைத்ததில் பலர் சேர ஆரம்பிக்க ஒரு சுப யோக சுப தினத்தில் அவன் சேகரித்துக் கொடுத்த இருபத்தி ஐந்து லட்சம் ரூபாயுடன் ஒருவன் ஓடி விட்டான். பணம் கிடைக்கவில்லை என்றதும் ஒவ்வொருவராக நெருக்கடி கொடுக்க ஆரம்பிக்க வேறு வழி அறியாமல், இது யாராலும் உதவி செய்ய முடியாத பெரிய தொகை என்று நினைத்து, வட்டிக்கு கடன் கொடுக்கும் ஒருவனிடத்தில் வகையாக மாட்டிக் கொண்டான்.

வாங்கிய கடனுக்கு மாதா மாதம் அவன் சம்பளம் முழுவதையும் வட்டியாக கொடுக்க வேண்டிய நிலை. முதல் மாதம் கொடுத்தான் மறு மாதம் மனைவி குழந்தைகளை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தான். தினம் காலையும் மாலையும் அலை பேசியில் பேசியவன், அழைக்க அழைக்க பதில் தராமல் இருந்ததும் கிளம்பி வந்தனர் அவன் மனைவியும் குழந்தைகளும். வீட்டுக்குள் இறந்து கிடந்தான். சர்க்கரை நோயாளியான அவனுக்கு மரணம் மாரடைப்பால் வந்ததா? மரணத்தை மோகித்து தழுவிக் கொண்டானா?   ஒருவருக்கும் தெரியாமலே ஒரு சகாப்தம் முடிந்தது.
யார் குற்றவாளி  ? 
- கணவனின் வரவுக்குள் செலவுகளை அடக்கத் தெரியாத மனைவியா?
- மனம் போல் வாழ்ந்த மனைவியை அடக்கத் தெரியாத கணவனா?
- எப்படி கொடுக்க முடியும் என்று யோசிக்காமல் நமக்கு பணம் வந்து விடும் என்று நம்பும்
  பொது ஜனமா?
- உயிர் பலி வாங்கும் இது போன்ற திட்டங்களை அனுமதிக்கும் அரசாங்கமா?
யார் குற்றவாளி  ? நீங்க தான் கொஞ்சம் சொல்லுங்களேன்

22 November, 2010

'ஷங்'கும் 'சிங்'கும் - நிறைவு பாகம்

 பகதூரை படம் பிடித்து முடித்த பின் அவன் முன் நாட்களில் தாடியுடன் இருந்தானோ? இல்லையோ ? என ஐயம் வர அருகில் இருந்த சலூனுக்கு அழைத்து சென்று சலூன்காரர் முகம் சுளித்தாலும் நயமாக பேசி, "தாடிய எடுத்து விடப்பா. நான் செய்ற ஒரு நல்ல காரியத்தில உனக்கும் பங்கு இருக்கட்டும்" முரண்டு பிடித்த பகதூரை பல கதைகள் பேசி மயக்கி ஒரு வழியாக 'சுந்தரன்' ஆக்கி விட்டார்கள்.
அந்த நிலையிலும் ஒரு போட்டோ பிடித்து மறு நாள் டேட்டா கார்ட் மூலம் கணினியில் ஏற்றி மெயிலிலும் அனுப்பி விட்டான்.

மறுநாள் கணினியில் அமர்வதற்கே கொஞ்சம் உதறலாக தான் இருந்தது. கண்களை மூடி ஒரு நிமிடம் இறைவனை நினைத்தான். "ஒரு நல்ல ஆரம்பம் மட்டுமே ஒரு செயலை சிறந்ததாக்காது. ஒரு நல்ல முடிவும் வேண்டும். தெய்வமே ! பகதூரை அவன் குடும்பத்தோடு சென்று சேர்த்திடு. " பிரார்த்தித்து மெயிலை திறந்தான். அவன் எதிர்பார்த்த பதில் கண்ணை சிமிட்டியது.
"நீங்கள் அனுப்பிய புகைப்படம் சம்பந்தப்பட்ட குடும்பத்தாரிடம் காட்டப்பட்டது. உங்கள் செயல் மிகவும் பாராட்டுக்கு உரியது. தாடியுடன் இருந்த புகைப்படம் மட்டும் அனுப்பி இருந்தால் அடையாளம் காண சிரமம் ஏற்பட்டிருக்கும் . அவர்களின் சந்தோஷம் உங்களுக்கு வாழ்த்தாய் சென்று சேரட்டும். பகதூரின் தந்தை மைந்தனை பிரிந்த  துக்கத்தில் மரணப் படுக்கையில் இருக்கிறார். உடனே புறப்பட்டு வரவும். வந்து சேரும் நேரம் அறிவித்தால் என்னுடைய ஆட்கள் ரயில் நிலையம் வந்து உங்களை அழைத்து செல்வார்கள். "   
"என்ன சார், ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போல் இருக்கு. G .M  உங்களை உடனே வந்து பார்க்க சொன்னார். " பியூன் நடராஜன் வந்து சொன்னான்.
"என்ன விஷயம் நடராஜன்? "
"தெரியல சார், ஒரு fax வந்தது. அதை பார்த்ததும் உங்களை கூட்டிட்டு வரச் சொன்னார். "
வேகமாக சென்று உதவியாளரிடம் தனது வரவை சொல்லி அனுப்பி காத்து இருந்தான்.
"சார், உங்களை உள்ளே வரச் சொன்னாங்க"
"குட் மார்னிங் சார், "
தனது இருக்கையில் இருந்து எழுந்து ஷங்கரின் கைகளைப் பிடித்து பலமாக குலுக்கினார். G .M   "ஷங்கர் உங்கள் முயற்சியைப் பற்றி இப்பொழுது தான் தகவல் வந்தது. சுயநலம் மிகுந்து விட்ட உலகத்தில் அறியாத ஒருவனுக்காக இவ்வளவு சிரமங்கள் எடுத்து வெற்றியும் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்! எப்போ புறப்படுறீங்க ஹாசியாபாத்துக்கு. "
"டிக்கெட் கிடைக்குமான்னு தெரியல சார் கிடைச்சிட்டா உடனே புறப்பட வேண்டியது தான் "
"டோன்ட் வொரி.நீங்க இவ்வளவு சிரமம் எடுக்கிறப்போ கொஞ்சம் உதவி நாங்க செய்யலைன்ன எப்படி.ரயில்வே துறையில பேசி அதெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. " என்று சொல்லி ஷங்கர்  சந்திக்க வேண்டிய அதிகாரியின் பெயரையும் தொலைபேசி எண்ணையும் கொடுத்தார்.
"ரொம்ப நன்றி சார்."
அதன் பின் அவசரமாக வீட்டுக்கு சென்று பகதூரை இறுக்கி அணைத்த படி "பகதூர், போலாமா உங்க ஊருக்கு. உங்க குடும்பத்து ஆட்களை கண்டு பிடிச்சாச்சு. " என்றான். புரிந்து கொண்ட பகதூர் லேசாக குனிந்து ஷங்கரின் முகத்தை இரு கைகளிலும் ஏந்தி தன் கைகளை மீட்டுதன்னுடைய முகத்தில் மூடி இருந்தவன் மெல்ல  குலுங்கத் தொடங்கினான். தொடர்ந்து ஒரு மிருகத்தின் அழுகைக் குரல் போல் அவனிடம் இருந்து புறப்பட்டது.
"உண்மையாவாடா சொல்றே. ?" என்றபடி உள்ளில் இருந்து வந்த ஷங்கரின் அம்மா "என் செல்லமே! புள்ளைய பிரிஞ்சு அந்த தாய் எவ்வளவு வேதனைப் படுறாளோனு எத்தனையோ நாள் கவலைப் பட்டு இருக்கேன். உன்னைப் பெத்ததில பெருமைப் படுறேண்டா. "என்று உச்சி முகர்ந்தாள்.
மறு நாள் புறப்பட்டு ரெண்டு பேரும் ரயில் ஏறினார்கள். வாட்ட சாட்டமாக இருக்கும் ஒருவன் குழந்தைத்தனமாய் மிரண்டு பார்ப்பதையும். சிற்றுருவம் கொண்ட ஒருவன் தந்தையின் பாசத்தோடு அவன் கை பிடித்து அழைத்து வருவதையும். அங்கிருந்தவர்கள் விநோதமாய் பார்த்தார்கள். தானோ ஹிந்தி தெரியாதவன். தன் அருகில் இருக்கும் ஹிந்தி தெரிந்தவனோ  மன நிலை பிறழ்ந்தவன். ஒரு வித கலக்கத்தோடு பயணம் செய்தான்.
இரண்டு நாள் ரயில் பயணம் மிரட்சி தருவதாய் தான் இருந்தது. இருண்ட குகைப்பகுதியை கடக்கும் போது மிரண்டு பகதூர் அலற, அந்த அலறலில் பயந்த கம்பார்ட் மென்டே அலற, ஷங்கரை அங்கிருந்தவர்கள் ஒரு எதிரியைப் போல பார்க்க, எப்படியோ வந்து சேர்ந்தார்கள். ரயில் நிலையத்தில் "ஷங்கர் பகதூர்" என்று எழுதிய அட்டையை பிடித்தபடி நின்றிருந்த இருவரை அணுகி தெளிவு படுத்திக் கொண்டதும் அந்த இருவரும் மெளனமாக காருக்கு அழைத்து சென்றார்கள். தன் இனத்தை விட்டு பிரிந்த பறவை மீண்டு சென்று சேர்ந்ததும் சந்தோஷக் கூக்குரல் இடுமே அதைப் போல் பகதூர் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தான்.

அவன் அமைதி ஆகி விட்டதைப் பார்த்ததும் வீடு நெருங்கி இருக்குமோ என 
நினைத்தான். ஒரு வீட்டின் முன் நிறைய ஆண்கள் கூடி அமர்ந்திருந்தார்கள். திடீரென வேகம் பிடித்த பகதூர் அந்த வீட்டை நோக்கி ஓடினான். அமர்ந்திருந்த ஆண்கள் பரபரப்பாக எழுந்தார்கள். பகதூர் வீட்டிற்க்குள் நுழைந்ததும் கூட்டாய் ஒரு அழுகை புறப்பட்டது. அது வரை பிரிந்திருந்த பகதூரை பார்ப்பதற்கு தான் கூடி இருக்கிறார்கள் என்று நினைத்திருந்த ஷங்கர் அருகில் நின்றவரிடம் "வீட்டில எல்லோரும் ...." என விசாரிக்கத் தொடங்கி அவர் புரியாமல் விழிப்பதைப் பார்த்ததும் விறு விறு வென வீட்டினுள் சென்றான்.

அங்கே கட்டிலில் பகதூரின் தந்தை இறந்து கிடந்தார். சில மணி துளிகள் பொறுத்திருந்தால் மகனை பார்த்திருப்பார். அவர் இறந்ததை அறியாத பகதூர் அருகில் படுத்து அவரைக் கட்டிக் கொண்டிருந்தான். அருகில் ஒரு குழந்தை மிரண்டு போய் நின்றது. அந்தக் கண்கள் ரயில் ஏறியதும் மிரண்டு விழித்த பகதூரை நினைவு படுத்தியது. அவனது குழந்தையாகத்தான் இருக்க வேண்டும். அப்படியெனில் அருகில் கண்களில் நீர் வழிய, மார்வாடிப் பெண்கள் போல் தலையில் முக்காடிட்ட பெண் அவன் மனைவி ஆகத்தான் இருக்க வேண்டும்.
"பாவிப் பெண்ணே ! நீ எப்படி உன் கணவனை பிரிந்தும் ஊர் வந்து சேர்ந்தாய். கவனமாய் இருந்திருக்க வேண்டாமா? எப்படியோ உன் கணவனை உன்னிடம் சேர்த்து விட்டேன். இனியேனும் பத்திரமாக பார்த்துக்கொள் " என மனதுக்குள் நினைத்தபடி, 
பகதூரின் தந்தை தனயனைக் காணாமலே போய் சேர்ந்த துக்கமும், ஒரு நல்ல நண்பனை விட்டுப் பிரியும்  துக்கமும் சேர்ந்து பாரமாய் அழுத்த தன்னை அழைத்து வந்தவர்களுடன் சேர்ந்து ஆட்சியாளரின் அலுவலகம் நோக்கி தளர்ந்து போய் நடக்கத் தொடங்கினான். 
ஒரு வினோத ஒலியுடன் ஓடி வந்த பகதூர் ஷங்கரை இறுக்கிக் கட்டிக் கொண்டான். 
அவன் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வடிந்து கொண்டு இருந்தது.  



15 November, 2010

'ஷங்'கும் 'சிங்'கும் - பாகம் ரெண்டு

கண்ணீர் வழிய படுத்துக் கிடந்த அந்த பெரிய உருவம், ஷங்கரை தூங்க விடவில்லை.
தன் இலக்கிய வேலைகளுக்கும், தான் செய்ய நினைக்கும் சேவைகளுக்கும் தோதுப்படாது என்றே ஷங்கர் மணம் முடிக்கவில்லை. பகதூர் பற்றி தான் கொடுத்து இருக்கும் தகவல்களுக்கு ஏதேனும் இடத்தில் இருந்து பதில் வந்து விட்டால் உடனே அவனைக் கூட்டிக் கொண்டு வட மாநிலம் செல்லத் தயாராகத் தான் இருந்தான். பதில் வர வேண்டுமே?  இல்லாத பட்சத்தில் அடுத்து தான் எடுத்து வைக்க வேண்டிய அடி என்ன?  லேசான கலங்கிய எண்ணங்களும் தூக்கமுமாய் தொடங்கி ஆழ்ந்து உறங்கிப் போனான். 

மறு நாள் ஏதும் பேசாமலே ஏக்கம் நிறைந்த கண்களோடு தன்னைப் பார்த்த பகதூரின் முதுகில் ஆதரவாக தட்டிய படியே பணிக்கு கிளம்பினான். அலுவலகம் வந்ததும் தன் நண்பரும், இந்த மாதிரியான விஷயங்களில் தனக்கு குருவும், ஆன தன் அதிகாரியிடம் சென்று
"சார், மெயில் செக் பண்ணிக்கவா? " என்றபடி கணினியின் முன் அமர்ந்தான்."எல்லாம் முடிந்த பிறகு பகதூரிடம் சொல்லி இருக்கணும். நேற்று மெயில் பண்ணி இருக்கிற விஷயத்தை சொன்னதும் அழுதுட்டான் சார், அந்த பெரிய, கருப்பு திராட்சை போன்ற  கண்களில் இருந்து கண்ணீர் விழுந்ததும் நான் ஆடிப் போய்ட்டேன் ரொம்ப நேரம் தூங்க முடியல."என்ற படி மெயிலைத் திறந்தவன், "வாவ்" என்றான்.
இரு ஆட்சியாளர்களிடம் இருந்து மெயில் வந்து இருந்தது. "தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். முயற்சி செய்கிறோம். " என்ற உட் கருத்தோடு ஹிந்தியில் வந்திருந்தது. மூன்றாவது ஆட்சியாளரிடம் இருந்து பதில் இல்லை.
வீட்டுக்கு வந்த ஷங்கரும் தான் எடுக்கும் முயற்சிகளை மறந்தது போல் மறைத்தபடி செயல்படத்  தொடங்கினான். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஓடிய நிலையில் மூன்றாவது ஆட்சியாளரிடம் இருந்து ஒரு செய்தி . "நீங்கள் சொல்லிய தகவலின் படி கீழ் மட்ட அதிகாரிகள் வரை தெரியப் படுத்தி விசாரிக்க வேண்டி இருந்ததால் கொஞ்சம் கால தாமதம் ஆகி விட்டது. அதே சூழ்நிலையிலும், அதே உருவ அமைப்பிலும் தவற விட்டா ஒருவரைப் பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது. அவரை ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தால் உறுதி செய்ய உதவியாக இருக்கும்"

ஷங்கருக்கு இந்த மெயிலை பார்த்ததும் லேசாக படபடத்தது. தனது முயற்சி பலித்து விடும் போலிருக்கிறதே ! மெயிலை மறு முறை வாசித்து பார்த்தான்.சொல்லலாம்  என்றால் அதிகாரி வெளியே போய் இருந்தார். எழுந்தான் யாரிடமாவது இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. அது மட்டும் அல்ல பகிர்ந்து கொண்டால் தான் உற்சாக மிகுதியில் தான் கண்டு கொள்ளாமல் விட்ட ஏதேனும் விஷயத்தை குறிப்பிடுவார்கள்.  

மெல்ல காரிடாரில் நடந்தான் எதிரே அலுவலகத் தோழி சந்தியா வந்து கொண்டு இருந்தாள்  . "காலை வணக்கம் சந்தியா?"
"வணக்கம்" வழக்கமான சந்தியா அவன்  உணர்வுகளை துல்லியமாக புரிந்து கொள்ளக் கூடியவள். இன்று என்ன வெறும் 'வணக்கம்'.ஏதேனும் விஷயம் இருக்கும்.  தான் சொல்ல வந்தது அதை விட முக்கியம் குறைந்ததாய் இருக்கலாம்
"ஏதும் சிறப்பான செய்தி உண்டா ?"
"உங்களை பார்க்கத்தான் வந்தேன். நீங்களே எதிரே வந்துட்டீங்க "
"சொல்லு சந்தியா? "
"எங்க வீட்டு பக்கத்தில ஒரு பீடி கடை இருக்கு. சின்ன சின்ன பெண்கள், வசதி இல்லாதவர்கள் பீடி சுற்றி கொண்டு வந்து கொடுக்கிறார்கள்.அங்கு பணி புரிபவன் கொஞ்சம் சல்லித்தனம் பண்றான். குடுக்க வேண்டிய தொகையை குறைத்துக் கொடுக்கிறான். மறுபடி கேட்டு வரும் பெண்களிடம் சில்மிஷம் செய்து ,பின் தான் பணம் கொடுக்கிறான். இதுக்கு ஒரு முடிவு கட்டணும் சார், தனக்கு ஒத்து வராதவர்களின் பீடிக் கட்டு சரியாக இருக்கிறது என்று சொல்லும் முன் அவர்களை நோகடிக்கிறான். பாவம் கஷ்டப்பட்ட பெண்கள். வேற வழி இல்லாம வாசல் உட்கார்ந்து புலம்பறப்போ  அம்மா கேட்டு சொன்னாங்க" 
"கண்டிப்பா உதவி செய்யலாம் சந்தியா. பீடிக் கடை உரிமையாளரை போய் பார்க்கும் போது யாராவது  ஒண்ணு  ரெண்டு பேர் வந்து சொல்வாங்க தானே ?"
"நிச்சயமா  வருவாங்க சார்"
அதன் பின் அவனுக்கு தன் விஷயத்தை சொல்ல தோன்றவில்லை  அன்றைய அலுவல்களை முடித்து வீடு திரும்பினான்.  
ஏதோ சாதனை செய்த நிறைவு இன்று முழுவதும்.  எல்லோரிடமும் மிகவும் அன்பாக பேசத் தோன்றியது.  தன் வீடு இருக்கும் தெருவில் திரும்பியதும் பன்னீர்  பூக்களின் வாசனை அவனை ஈர்த்தது  வெண் பட்டுக் கம்பளம் விரித்தது போல் மரத்தின் அடிவாரம் முழுவதும் பன்னீர் பூக்கள் பல திசைகளிலும் படுத்துக் கிடந்தன அதன் வாசனையை நன்கு இழுத்து  நுரையீரல் முழுவதும் நிறைத்துக் கொண்டான்.  மனதின் பரவசம் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது.   மனது நிதானப் பட்டது.  என்ன ஆனாலும் பகதூரை அவன் குடும்பத்தில் கொண்டு சேர்க்கும் வரை இதைப் பற்றி அவனிடம் மூச்சு விடக் கூடாது என்று நினைத்தபடியே வீடு வந்து சேர்ந்தான்.
"பகதூர் ஜம்னு குளிச்சிட்டு வா பார்க்கலாம் ஒரு போட்டோ எடுப்போம். "
கொஞ்ச நாட்களாகவே அவனிடம் மலர்ச்சியும் இல்லை,  மறுதலிப்பும் இல்லை. இயந்திரம் போல் சொன்னதை செய்து கொண்டு இருந்தான் 
தான் வைத்திருக்கும் டிஜிட்டல் காமெராவை அம்மாவிடம் கொடுத்து  எப்படி இயக்குவது என்று சொல்லிக் கொடுத்தவன் "அம்மா மூணு போட்டோ எடுக்கணும்.  நானும் பகதூரும் சேர்ந்து ஒண்ணு, என்னை தனியா ஒண்ணு, பகதூரை தனியா ஒண்ணு. சரியா பகதூர்" என்றான். எங்கே அவனை மட்டும் தனியே படம் பிடிக்க வேண்டும் என்றால் முரண்டு பிடித்து விடுவானோ என்று தன்னையும் கூட்டு  சேர்த்துக் கொண்டான். 

நாளை கணினியில் ஏத்தி மெயிலில் வட மாநில ஆட்சியாளருக்கு அனுப்பி விட வேண்டும் என்று முடிவு செய்தான் பகதூரிடம் பேசப் பயமாக இருந்தது  தான் ஏதாவது உளறி விடுவோம் என்று ஜெயமோகன் அவர்களின் "காடு" நாவலை  கையில் எடுத்த படி படுக்கையில் சாய்ந்தான். 
பகதூர் அவனுக்கு ஒதுக்கி இருந்த,வீட்டின் வெளிப்புறம் அமைந்திருந்த, அறையில் தன் உடமைகளை கட்டிப் பிடித்த படி உறங்கப் போனான்.
(இன்னும் வரும்)

07 November, 2010

'ஷங்'கும் 'சிங்'கும்

ஷங்கரும் பகதூர் சிங்கும் நல்ல நண்பர்கள்.
ஷங்கரின் வயது முப்பத்தைந்து. அரசு ஊழியன். இலக்கியத்தில் ஆர்வம் உடையவன். கவிதைகள் எழுதுவான். ஒரு நாளின் அதிக பொழுது வீட்டுக்கு வெளியிலேயே செலவழிப்பான். வீட்டுக்கு வந்த பின்னும் அவன் வீட்டு வாசலில் படுத்துக் கிடக்கும் பகதூர் சிங்கிடம் ஒரு மணி நேரம் பேசிய பின் தான் வீட்டுக்குள் நுழைவான்.சில நாட்களில் அதிகப் பசியின் காரணமாக் நேராக சாப்பிட வந்தாலும் அதன் பின்  ஒரு மணி நேரம் அவர்கள் பேச்சு தொடரும். அவர்களின் உரையாடல் மிகவும் வேடிக்கையானது. ஷங்கருக்கு தமிழும் ஆங்கிலமும் தெரியும். பகதூருக்கோ ஹிந்தி மட்டும் தான் தெரியும். ஆனாலும் இருவரும் மற்றவர் சொல்ல வருவதை புரிந்து கொள்வார்கள்.

பகதூர் சிங். வட மாநிலத்தில் இருந்து தல யாத்திரை வந்த ஒரு குழுவில் இருந்து வழி தவறியவன். கொஞ்சம் மன நிலை சரியில்லாதவன். அதனாலும் மொழிக் குழப்பத்தாலும் அவன் தன் கூட்டத்திடம் சென்று சேர முடியாமல் போனது. திருச்செந்தூரில் இருந்து கால் போன போக்கில் நடந்து நெல்லை வந்து பெருமாள்புரத்தில் ரயில் தண்டவாளம் ஓரமாக நடந்து கொண்டு  இருந்தவனை, ஷங்கர் தான் தன் வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான். பகதூர் வாட்ட சாட்டமாக இருப்பான்.அவனது கோதுமை நிறத்துக்கு செம்பட்டை தாடி ஒரு தனி அழகைக் கொடுக்கும். ஒரே உடையை அதிக நாட்களுக்கு மாற்றாமல் போட்டு இருப்பதால் அவனிடம் இருந்து எழும் லேசான அழுக்கு வாடையும், திடீரென கையில் கிடைக்கும் கல்லை அருகில் இருப்பவர் மீது வீசுவதும்  சிறு குழந்தைகளை அவனைக் கண்டதும் கூச்சலிட்டபடி ஓட வைக்கும் . அது அவனை பைத்தியக்காரன் என்னும் கூட்டத்தில் உறுப்பினராக்கி இருந்தது.

பகதூர் வாசல் படியில் சாய்ந்தபடியே நேர் எதிரே இருக்கும் டிவியில் தெரிவதை எல்லாம் புரிவது போல் பார்த்துக் கொண்டு இருப்பான். நாளெல்லாம் வீட்டில் தனியே இருக்கும் ஷங்கரின் அம்மாவுக்கு நல்ல ஒரு துணை. எப்போதாவது ஹிந்தி நிகழ்ச்சிக்கு சானல் மாறும் போது அவன் கண்களில் தோன்றும் ஒளி அபாரமானது.

ஒரு நாள், ஷங்கரின் வண்டிச் சத்தம் கேட்டதும், வினோத ஒலி எழுப்பினான். "என்ன பகதூர் உன் நண்பன் வந்தாச்சா?" என்றபடி ஷங்கரின் அம்மா இரவு உணவுக்கு குழம்பை சூடு பண்ண எழுந்தார்கள்.
"ம்ம் ம்ம் "என்ற படி  அவசரமாக எழுந்து வாசலில் வந்து நின்றான். ஐந்து நிமிடம் கழித்து வந்த ஷங்கர் "ஹேய், பகதூர் இன்னைக்காவது குளிச்சியா? " என்றான்.
"ஹாங் " என்றபடி வண்டியை ஷங்கரிடம் இருந்து வாங்கி உள்ளே கொண்டு வந்து நிறுத்தினான்.
"எப்போவாவது குளிச்சாலே இவ்வளவு அழகா இருக்கியே? தினமும் குளிச்சா இங்கேயே ஒரு பொண்ணு பார்த்து ஒனக்கு கல்யாணமும் பண்ணி வைச்சிறலாம்.  இல்லம்மா? "
"போடா உனக்கு எப்போ பார்த்தாலும் அவனைச் சீண்டிக்கிட்டே இருக்கணும். அவன் குடும்பத்தை கண்டு பிடிச்சு அவனை சேர்த்து வைக்கிற வழியைப்பாருன்னு சொல்றேன்.ஏதாவது முயற்சி செய்றியா?"
"இன்னைக்கு நல்ல செய்தி கொண்டு வந்திருக்கேன். பகதூர் அடிக்கடி ஒரு வட இந்தியக் கிராமத்தோட பேர சொல்வானே? அது எந்த மாநிலம் எந்த தாலுகானு கிட்டத்தட்ட நெட்ல தேடி நெருங்கியாச்சு. எல்லா ஆட்சியாளருக்கும் ஒரு மெயில் ஐடி இருக்கும். அப்படி சந்தேகப் படுற ரெண்டு மூணு ஆட்சியாளருக்கு மெயில் பண்ணி இருக்கேன். பார்ப்போம்.
என்ன பகதூர், உங்க ஊருக்கு போறியா?"
இது வரை அம்மாவும் மகனும் பேசும் போது மாறி மாறி அவர்கள் முகத்தை பார்த்துக் கொண்டு இருந்தவன் இந்த கேள்விக்கு எந்த பதிலும் சொல்ல வில்லை.
"ஏன் உன் நண்பனை விட்டுட்டு போக பிடிக்கலியா? அப்படினா இங்கேயே எங்களோடேயே  இருந்திடு" பெரிய தட்டில் நிறைய சாதம் போட்டு, நடுவில் குழி  பறித்து, குழி நிறைத்து குழம்பு ஊற்றி, ஓரமாக எண்ணையில் முறுகலாக பொறித்த உருளைக் கிழங்கும் அப்பளமும் வைத்து இருவரிடமும் ஆளுக்கொன்றாய் நீட்டினாள்.

ரெண்டு கால்களையும் குத்துக் காலிட்டு தட்டை காலின் மேல் வைத்த படி பெரிய பெரிய கவளமாக உருட்டி வாயினுள் திணித்தான். உடை மாற்றி ஒரு காக்கைக் குளியல் போட்டு வந்த ஷங்கரும் ஒரு தட்டை எடுத்த படி நாற்காலியில் அமர்ந்து உண்ணத் தொடங்கினான்.
"என்ன பகதூர், அம்மா கேட்டதுக்கு பதிலே சொல்லல. எங்களோடேயே இருந்திடு. என்ன சொல்ற ? "
"அவன் எங்கே இப்போ பேசப் போறான். தட்டுக் காலியாகணும் முதல்ல. அப்பறம் தான் மீதி எல்லாம்."
நொடியில் தட்டு காலியானதும் செம்பில் இருந்த நீரை குடித்தான். அவன் தண்ணீர் குடிப்பதே ஒரு கலையாக இருக்கும். செம்பை வாயின் அருகில் வைத்து குடிக்க மாட்டான். நல்ல நீளமான கைகள் அவனுக்கு. செம்பை நன்றாக உயர்த்தி வாயில் நீரை ஊற்றுவான். சிந்தாமல் சிதறாமல் நீர் ஒரு அருவி விழுவதைப் போல் நேராக அவன் வாயில் இறங்கும். நீர் இறங்க இறங்க அவன் தொண்டையின் கடின பகுதி மெல்லிய ரோஸ் நிறத்தில் மேலும் கீழும் ஏறி  இறங்கும். குடித்து முடிக்கும் போது செம்பில் இருந்து மிஞ்சிய நீர் 'புல்லுக்கும் அங்கே பொசியுமாம்' என்பது போல் முடி நிறைந்த அவன் நெஞ்சு பகுதியில் இறங்கி நனைக்கும்.

உண்டு முடித்த ஷங்கர் வெளியே ஒரு நாற்காலியை எடுத்து போட்ட படி அமர்ந்து ரெண்டு கைகளையும் நீட்டி நெட்டி முறித்தான். நண்பனுடன் ஒரு மணி நேரம் செலவழிக்க அவன் தயாராகி விட்டான். பகதூர் என்றும் இல்லா வழக்கமாக அப்படியே சாய்ந்து படுத்து விட்டான். 
"ஹேய்! பகதூர் இது என்ன புது பழக்கம். சாப்பிட்ட உடன் அப்படியே சாயறது? என்றான் ஷங்கர். பதிலில்லை.
"பகதூர்" மறு குரலுக்கும் பதில்  இல்லாமல்  இருந்தது "என்ன இவனுக்கு உடம்பு சரியில்லையா?" என்று முணுமுணுத்த படி எழுந்து நெற்றியில் கை வைக்கும் போது ஒரு பெரிய சொட்டுக் கண்ணீர் பகதூரின் நீண்ட கண்களில் இருந்து கீழே விழக் கண்டான். 
"அம்மா, இவன் அழறான்மா  " என்று குரல் கொடுத்தான்.
"நான் நினைச்சேன்டா. அவன் மனசுக்குள்ள குடும்பம், மனைவி, குழந்தைகள் னு ஏக்கம் இருக்கத்தானே செய்யும். நீ அவன் கிராமத்தை கண்டு பிடிச்சிட்டதா சொன்னதும் ஊர் ஞாயபகம் வந்திருக்கும். சரி, சரி நீ போய் படு நாளைக்கு சரியா இடுவான்" என்று அம்மா சொன்னதும்
"இவனை சீக்கிரம் கொண்டு சேர்க்கணும் போலிருக்கே" என்று சொல்லியபடியே ஷங்கர் படுக்க சென்றான். 
(இன்னும் வரும் )

04 November, 2010

HAPPY DEEPAVALI !!

அனைவருக்கும் தீபாவளி  திருநாள் நல்வாழ்த்துக்கள் !!

01 November, 2010

எண்ணச் சிதறல்கள் !

எல்லோருக்கும் ஒரு நவம்பர் வணக்கம்.
ரொம்ப சந்தோஷமாத் தான் ஐம்பதாவது பதிவு தாண்டினேன்.
திடும்னு கணினி மூச்சை நிறுத்திடுச்சு. சரி தட்டிக் கொட்டி சரி பண்ணிடலாம்னு பார்த்தா கதைக்கு ஆகல. கணினிக்கான வைத்தியரை வைத்து சரி பண்ணிடலாம்னு நினைச்சேன். அவரோ சினிமா வைத்தியரைப் போல கண் கலங்காத குறையா "ஐ ஆம் வெரி சாரி " னுட்டார். கணினி மரணித்த விஷயத்தை சொன்னதும் நண்பர் ஒருவர் ஆழ்ந்த அனுதாபங்களை அனுப்பினார். "உங்கள் கதைகளின் சோகம் தாங்காமல் மூச்சை நிறுத்திக் கொண்டிருக்கும் " என்றார். நானும் ஜாலியா எழுதணும்னு தான் பார்க்கிறேன். முடியலியே.

எனக்கும் கூட பதினைந்து நாட்கள் பதிவுலகம் பக்கம் வராமல் பச்சை தண்ணி கூட பல்லில பட மாட்டேன்னுடுச்சு. இப்போ மறுபடி கால் பதித்ததும் தான் அப்பாடான்னு இருக்கு. டச் விட்டுப் போனதில எழுதக் கூட வரமாட்டேனுது.

கொஞ்ச நாளாவே செய்திகள் பக்கம் போகவே பயம்மா இருக்கு. பெங்களூரில் கொலை செய்யப்பட்ட நெல்லை பெண். உறவுப் பையன் விரும்பியும் அவள் கிடைக்காத காரணத்தால் எந்த பாவமும் செய்யாத அந்தப் பெண் பலியாகிறாள். இந்த செய்தியைப் பார்த்த அநேகம் பேர் சொல்லிய வார்த்தைகள் " அய்யோ பாவம், பொண்ணு அவ்வளவு அழகா இருக்கு. " இங்கே மனிதர்களின் சைக்காலஜி எனக்குப் புரிவதில்லை. அழகான பெண் கொலை செய்யப் பட்டால் அதிகம் பாவப் படுகிறார்களே ஏன்?

ஒரு சின்ன செய்தி, BSNL வாடிக்கையாளர்களுக்கு, நவம்பர் 1 லிருந்து நவம்பர் 12  வரை ஈசி சார்ஜ் செய்யும் Rs 55, Rs 110, Rs 220, Rs 550 ஆகிய தொகைகளுக்கு full talktime . புதிதாக கொடுக்கப்பட்ட "என் நண்பன் சூப்பர்" என்னும் ப்ளானில் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள ஏதாவது ஒரு landline  க்கு முழுவதும் இலவசமாக பேசும் வசதி உள்ளது. அருகில் உள்ள வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகவும்.

'எந்திரன்' படம் பற்றி இப்போ பேசினால் நல்லா இருக்காது. இருந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் என்னைப் போன்றவர்கள் அவரின் வேகத்தையும் ஸ்டைலையும் பிரமித்து பார்த்தது போல் இத்தனை ஆண்டுகள் கழித்தும் இளைஞர்கள் ரசிப்பதை பார்க்கும் போது அழகு என்பது இளமையிலும், வெளித்தோற்றத்திலும் இல்லை என்பது ஆணித் தரமாக புரிகிறது.

இப்போதைக்கு இது போதும். வர்ர்ரட்ட்டா !