Bio Data !!

27 December, 2023

Amazon ல "கிடா" னு ஒரு படம் பார்த்தேன். இதன் இயக்குநர் ரா. வெங்கட். பூ ராம் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். காளி வெங்கட்டும், பேரனாக வரும் சிறுவனும் பாட்டியாக வருபவரும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள். அதுவும் முக்கியமாக பேரன் விரும்பும் உடையை தன் பணத்தில் வாங்கி கடையை விட்டு வெளியே வரும் போது பாட்டி நடக்கும் கம்பீர நடை!! சான்சே இல்லை. கறி வெட்டுபவராக வந்து படம் முழுவதும் கலக்கி இருக்கிறார் காளி வெங்கட். முந்நூறு ரூபாய் குறைவாக இருந்தாலும் இருக்கும் பணத்துக்கே உடையை கொடுக்கும் கடைக்காரர், பாட்டி கேட்டு வரும் பணத்தை மறு கேள்வி கேட்காமல் எடுத்துக் கொடுக்கும் மனிதர், அதோடு தன் கை பணத்தையும் சேர்த்துக் கொடுக்கும் அவர் அம்மா, என்று பலரும் நல்லவர்களாக இருந்து நம் மனதை மயிலிறகால் வருடுகிறார்கள். நான் முந்தி "எறும்பு" னு ஒரு படம் பார்த்தேன். OTT ல் படம் பார்க்க விரும்பும் என் பெண் தோழிகளுக்காக ஒரு வாட்ஸ் அப் குரூப் வைத்திருக்கிறேன். அதில் எல்லோரும் அவரவர் விருப்ப படத்தை குறிப்பிடுவார்கள். அதில் ஒரு தோழி "எறும்பு" படத்தை பார்த்திட்டு "நீ சொல்லலைன்னா இந்த படம் பார்த்திருக்க மாட்டேன். பெயர் ஈர்க்கவில்லை" என்றாள். அது போல ஏழ்மையின் வலி சொல்லும் இந்த படமும் பெயர் பெரிதாய் ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால் மிகச் சிறப்பான படம். பெத்த பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாததே வலின்னா, பேரப் பிள்ளைகள், அதுவும் பெற்றோர் இல்லாத பேரப் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாதது பெரும் வலி. அதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள். படம் முழுக்க பெண்கள் எவ்வளவு அறிவுபூர்வமாக நடந்து கொள்கிறார்கள் என்பது வலிந்து சொல்லப் பட்டு இருக்கிறது. முக்கியமாக கிராமங்களில் ஏழ்மையில் வாழும் பெண்கள் குடும்பத்துக்கு எப்படி ஒரு தூணாய் விளங்குகிறார்கள் என்பதையும், அதை அவர்கள் கணவர்கள் எவ்வளவு பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். மனதை மிருதுவாக்கும் மிக நல்ல படம்.

23 December, 2023

அன்று Water water everywhere. Not a drop to drink. என்று எழுதியவர் இதே போல் ஒரு வெள்ளத்தை சந்தித்திருப்பாரோ? சுற்றிலும் நீர் மலையாய் உயர்ந்து நிற்க , நீர் அருந்தி மூணு நாட்கள் ஆனதாக ஒருவர் சொல்கிறார். என்ன கொடுமை. 48 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்மசுக்கு புதுத் துணியெல்லாம் எடுத்த நிலையில் எங்க அப்பா தவறிப் போன நிகழ்வு இப்போ ஞாபகத்துக்கு வருது. அதே டிசம்பர் 18. வெள்ளப் பெருக்கு. எத்தனை குடும்பங்களில் மரணம் நிகழ்ந்து துயரத்துக்கு உள்ளாக்கி இருக்கிறதோ. எத்தனை ஏழைப்பட்ட குடும்பங்களில், குழந்தைகள் பண்டிகை கொண்டாட குதூகலமாய் வாங்கி வைத்த பொருட்கள் தண்ணீரோடு போனதோ. சின்ன சின்ன வீடுகளில் கூட, குருவி போல் சேர்த்து , வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வைத்திருக்க , அத்தனையும் தண்ணீருக்குள் நீச்சல் பயின்று கொண்டிருந்த கொடுமை. மதம் தாண்டி மனிதம் விஸ்வரூபமெடுத்து உதவிக் கொண்டு இருக்கிறது. பலருக்கு ஆரம்பத்தில் இருந்து வாழ்க்கையை தொடங்க வேண்டிய அவலம். இந்த நேரத்தில் அரசியல் கலக்க கூடாது. நாம் கவனமாய் இருக்க வேண்டிய கால கட்டம் மிக அருகில் வந்து விட்டது. ஒரு வரலாற்றுப் பேரழிவு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த செய்தியை செய்தித் தாளில் நினைவூட்டியது. அதனால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் எனத் தைர்யமாக இருக்க முடியாத நிலையில் இருக்கிறோம். . அந்த, கால இடைவெளி சுருங்கும் என்கிறார்கள் நிபுணர்கள். பல காலமாக குளோபல் வார்மிங் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அதை பெரிதாகவே எடுக்கவில்லை. இத்தகைய இயற்கை அழிவுகளில் க்ளோபல் வார்மிங்கின் பங்கும் ஓரளவு உண்டு என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதும், குறை சொல்வதும் கதைக்கு உதவாது. நம்மைச் சுற்றி உள்ள இடத்தை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு பாதகமான காரியங்கள் நடக்கும் போது, யாரோ கேட்பார்கள் என்று இருக்காமல் தடுக்க வேண்டும். இன்றைய தலைமுறை அன்றாட பாடுகளை மட்டும் பார்த்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கிறார்கள். அது தவறு. எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் யோசிக்க வேண்டும் என்று தெளிவுக்கு வந்திருப்பார்களா? மனம் மழை தவிர வேற எதையும் யோசிக்காததாய் இருக்கிறது. ஆனால் நாம் எந்த துயரத்திலும் தேங்கி நிற்பவர்கள் இல்லை. மீண்டு விடுவோம். இப்போதும்

21 December, 2023

ஊறும் காய். ஊறிய காய் ஊறுகாய்

ஊறுகாய் எனக்கு திடீரென்று அந்த நாளில் ஊறுகாய் போட்டது ஞாபகம் வந்தது. நல்ல பெரிய பெரிய எலுமிச்சம் பழமாய் மார்க்கெட்டில் பொறுக்கி எடுத்து வந்து அதை மேல் பக்கமிருந்து நாலாய் கீறி கீழே பிளந்து விடாமல் பக்குவமாய் பிடித்து கல் உப்பை அது கொள்ளுமளவு அடைத்து பெரிய பீங்கான் ஜாடியில் அதை அடுக்கி வைப்போம். இரண்டு நாள் வைத்தால் கல் உப்பு இளகி நீராய் இறங்கி இருக்கும். அதன் பின் தினம் இரு முறை அந்த பீங்கான் ஜாடியை குலுக்கி விடணும். எலுமிச்சம் பழம் நன்கு ஊறிய பிறகு எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து வற்றல் தூள் பெருங்காயத் தூள் வறுத்த வெந்தயத் தூள் எல்லாம் போட்டு அதில் எலுமிச்சம் பழங்களை துண்டுகளாக நறுக்கிப் போட்டு கிளறி எடுத்து வைக்கணும். ஜாடிக்கு மேல் ஒரு துணியைப் போட்டு கட்டி மூடி வைப்போம். கை படாமல் எடுப்போம். நல்லா ஈரம் இல்லாமல் துடைத்த கரண்டி போட்டு எடுக்கணும். எவ்வளவு பக்குவம்? ஆமா இப்ப எதுக்கு இந்த ஊறுகாய் கதைங்கிறீங்களா? காரணம் இருக்கு சார் இருக்கு. நான் என் கணவரிடம் கேட்டேன் "நாம அந்த காலத்தில தினம் ஊறுகாய் சாப்பிட்டிருக்கோம். ஒன்றும் பண்ணதில்லை. ஆனா இப்போ ஆ ஊ ன்னு உப்பைக் குறை பிபி ஏறும் எண்ணையைக் குறை கொலஸ்டிரால் கூடும்னு கண்டிஷன் போடுறாங்களே! அந்த காலத்தில ஊறுகாய்ல சேர்த்த உப்புக்கும் எண்ணைக்கும் ஏன் எதுவுமே செய்யல." அவர் சொன்னார் ' அன்றைய உடல் உழைப்பு இன்று இல்லை" உண்மை தான் இன்றைய குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப நாம் படும் பாடு என்னவென்று நமக்குத் தான் தெரியும். காம்பாக்ட்டா டீவிக்கு முன்னால செட்டில் ஆகிடுறாங்க. அசைக்க முடியல. இளைஞர்களும் நண்பர்களுடன் ஊரெல்லாம் சுற்றி படுக்கத் தான் வீட்டுக்கு வந்தார்கள் முன்பு. இப்போ அவர்களும் டீவியின் முன்னமர்ந்து பார்ப்பது மட்டுமல்லாமல் ஸ்நாக்ஸ் இடைவிடாத கொரிப்பு. பெரியவர்களுக்கும் நாளெல்லாம் இருந்த சமையல் வேலை ஒரு மணி நேரத்துக்குள் முடிந்து விடுகிறது. அதன் பின் அவர்களும் டீவியின் முன் தஞ்சம். இப்படி நம் வாழ்க்கை முறை மாறியதால் தான் நோய் அதிகமாகி விட்டதோ என்று யோசித்தால் இன்னொன்றும் தோன்றுகிறது. முன்பு பிபி பணக்காரர்களின் நோயாக கருதப்பட்டது. கையில் நாய் ஒன்றை பிடித்தபடி வாக்கிங் போவது பணக்கார தோரணை. ஆனால் இன்று நகரில் கேடிசி நகர் ரஹ்மத் நகர் என்று நகர் தோறும் ஒரு பார்க். அங்கே அத்தனை மனிதர்கள் ஒரு கடமையைச் செய்வது போல் நடக்கிறார்கள். அன்று முற்றிய பின் தான் நோய் வெளியே தெரியும். அதனால் இந்த பிபி சுகர் கச்சடா எல்லாம் இருக்குனு தெரியாமலே எத்தனை பேர் இறந்து போனார்களோ? அதனால் இன்றுமே உப்பில் ஊறிய ஊறுகாய் போன்றதை தவிர்ப்பதே நல்லது. முடியவில்லை என்றால் அளவையாவது குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம் துரதிர்ஷ்டம் அன்றைய கால கட்டத்தில் கிடைத்த மாசு மருவில்லாத சத்துக்கள் இப்போ கிடைக்கிறதில்லை. நன்கு கவனித்துப் பார்த்தால் நம் உடம்பு நம்மிடம் பேசும். ஏன் இதைக் கொடுத்து என்னைக் கஷ்டப்படுத்துறன்னு கேட்கும். அப்படிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்திட்டாலே போதும். நலமாய் வாழலாம். காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம்.

15 December, 2023

சில நட்புகள் (glass, handle with care) கண்ணாடி, கவனமாக கையாளுங்கள் என்ற எச்சரிக்கை கொடுப்பது போல் கவனிக்கப்பட வேண்டியதிருக்கும். அந்த நட்பு நம்மாலோ, பிறராலோ உடைந்து விடாமல் பொத்தி பாதுகாக்க வேண்டிய ஒன்றாய் இருக்கும். நட்பு நொறுங்கி விடாமல் இருக்க நாம் இழப்பது பலவாய் இருக்கும். Out of sight ; out of mind என்ற பொன் மொழி எல்லாம் அங்கே செல்லாது. எத்தனை காலம் கண்ணில் படாமல் இருந்தாலும் , தொடர்பின்றி இருந்தாலும், பட்டதும் பற்றிக் கொள்ளும் அந்த அன்புத் தீ. நான் "சில நட்புகள்" என்று சொன்னாலும் எல்லோருக்கும் அப்படிப்பட்ட நட்பு "ஒன்று" நிச்சயமாய் இருக்கும். அந்த அன்பு மனதின் காயங்கள் அத்தனையும் , அடித்துச் சென்று ஒற்றை பார்வையில், ஒரு சின்ன புன்னகையில் , அக்கரை கலந்த ஒரு சின்ன செயலில் பூ பூக்க வைக்கும். உற்று நோக்கினால் அது அனேகமாய் உங்கள் முதல் பிடிப்பாய் இருக்கும். அது தந்த வலி தான் உங்களுக்கு எதையும் தாங்கும் வலு கொடுத்திருக்கும். அத்தகைய அன்பை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள். ஏனென்றால் அது தான் உங்களை வாழ வைக்கும் பிராண வாயு. இங்கே அதிசயமாய் பிராண வாயுவும் அந்த அன்பினாலேயே உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும்.

11 December, 2023

நாவலின் பெயர் : மதுரை மகுடம். ஆசிரியர் : கலைமாமணி விக்கிரமன் யாழினி பதிப்பகம். விலை : ரூ 125/- முதல் பதிப்பு : 2018 ஏறத்தாழ 207 ஆண்டுகள் மதுரையை ஆண்ட நாயக்க அரசர்களுள் சொக்க நாத நாயக்கர் 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவர் மனைவி மங்கம்மாள் இவர்கள் பற்றிய கதை தான் இது. சொக்க நாதரின் இறுதிக் காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளோடு சில கற்பனை கதாபாத்திரங்கள் சேர்த்து எழுதப்பட்ட கதை. சொக்க நாதரின் மகன் பெயர் முத்து வீரப்பர். அவர் மனைவி முத்தம்மாள். வழக்கமான சரித்திர நாவல்களில் இருப்பது போல் வர்ணனையோ விஸ்தாரமாக போரை விவரிப்பதோ இல்லை.ஆனால் அரசாட்சியை பிடிக்கவும் கவிழ்க்கவும் நடந்த சூழ்ச்சிகள் உண்டு. மெல்லிய காதல் உண்டு. நீரோடையில் மெல்ல நகர்ந்து செல்லும் காகிதக் கப்பல் போல கதை நகரும். ஆனால் வாசிக்க சுவாரஸ்யமாகத் தான் இருந்த்து. மதுரையின் மகுடத்தைப் பறிக்க ஆளாளுக்கு போட்டி. பாண்டிய மன்னருக்கு ஆண் வாரிசு இல்லாததே ஆசைக்குக் காரணம். இருந்தும் மகுடம் எப்படி உரிய வம்சத்தைச் சென்று சேருகிறது என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார். மங்கம்மாள் மிகுந்த பொறாமை கொண்டு முத்தம்மாளை வெறுக்கலானாள். தானே மதுரை மகுடத்தை அடைவது எப்படி என்று சிந்திக்கலானாள். அது வேறு கதை என்று முடித்ததால் பாகம் 2 வரும் என்று தோன்றியது. உறுதிப்படுத்தப் படவில்லை. அந்தக் கால அரசர்கள் தம் மனைவியரின் அறிவுச் சுடரை இரு கரம் குவித்துக் காத்தது பெருமையாகத் தான் இருக்கிறது.