Bio Data !!

09 February, 2021

 #வாழ்க்கை பயணம்

ஆசையைத் துற! 

பற்றற்று இரு!!


பெண்களுக்கு பொதுவாகவே புடவை நகை மேல் பெரிய ஈர்ப்பு இருக்கும். அதிலும் புடவை என்பது தன்னளவில் முடியும் என்பதால் புடவை வாங்கிச் சேர்ப்பதில் ஆர்வமில்லாத பெண்கள் ரொம்ப அரிது. வசதி உள்ளவர்கள் வாங்கிக் குவிப்பார்கள். வசதி இல்லாதவர்கள் தவணை முறையிலாவது நல்ல நாள் பெரிய நாளுக்கு கட்ட வாங்கி வைப்பார்கள். 


என் அம்மாவிலிருந்து ஆரம்பிக்கிறேன். எங்க அப்பா இருக்கும் வரை மிக நன்றாக அவர்கள் உடுத்தி பார்த்திருக்கிறேன். அப்பா இறந்தது கிறிஸ்மசுக்கு ஒரு வாரம் இருக்கும் போது டிசம்பர் 18 ஆம் தேதி. அந்த கிறிஸ்மஸ்சுக்கு  அம்மாவுக்கு எடுத்து வைத்திருந்த பட்டுப் புடவை நன்றாக நினைவிருக்கிறது. பசுஞ் சாணத்தின் நிறத்தில் செல்ஃப் பார்டர். அவர்கள் திருமணப் புடவையும் தகதகவென நினைவில் மின்னுகிறது. உடம்பு முழுவதும் தங்க நிறத்தில் முழுவதும் ஜரிகையாய். அப்பா இறந்து ரொம்ப வருடங்கள் கழித்து கட்டப்படாமலே இருந்த அந்த புடவையை நான் ஒரு நாள் கட்டவா எனக் கேட்டேன். (இப்பொழுது நினைத்தால் அபத்தமாக இருக்கிறது) அம்மா மறுத்து விட்டார்கள். வேற எந்த புடவையையும் எடுத்து கட்டு. இது வேண்டாமென. நாங்கள் பெண்கள் மூணு பேரும் ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும்  எடுத்துக் கொடுப்போம். ரொம்ப சந்தோஷமா வாங்கிக் கொள்வார்கள். ஆனால் வேறொரு சந்தர்ப்பத்தில் அதை விட அதிக விலை போட்டு எங்களுக்கு எடுத்துக் கொடுத்து விடுவார்கள். அந்த புடவைகளை பீரோவில் மிக நேர்த்தியாக அடுக்கி வைத்திருப்பார்கள். எத்தனை இருந்தாலும் வீட்டில் பழையதையே கட்டி இருப்பதைப் பார்த்து ரொம்ப அழுத்திச் சொல்லி அதை மாற்றினோம். மிகுந்த முயற்சிக்குப் பின் வீட்டில் இருக்கும் போதும் நல்ல புடவை கட்ட வைத்தோம். இறந்த பிறகு அம்மாவின் அத்தனை புடவைகளையும் தானமாக கொடுத்தோம். 


என் தங்கைக்கு ஒரு பழக்கம் உண்டு. மொத்தம் இருபது புடவைகளே வைத்திருப்பாள். அதற்கு மேல் வாங்கும் போது இருப்பதை யாருக்காவது கொடுத்து விடுவாள். அவள் உடுத்தும் அத்தனை புடவைகளும் புதுக் கருக்கு மாறாமல் இருக்கும். ஆனால் நன்கு விலை உயர்ந்த புடவைகள் மட்டுமே வாங்குவாள். 


இதில் நான் அவளுக்கு நேர் எதிர் ரகம். ஏகப்பட்டது வாங்கி சேர்த்து வைத்திருப்பேன். திருமணம் ஆன புதிதில் நான் ஒரு வீம்பில் வீட்டிலிருந்து நாலே நாலு புடவைகளை மட்டும் எடுத்து போயிருந்தேன். போய் கொஞ்ச நாளிலேயே ரொம்ப சிரமமாக இருக்க எங்க தாய் மாமா மூலம் இன்னும் கொஞ்சம் சேலைகளை அம்மாவிடமிருந்து வாங்கி வரச் சொல்ல அம்மா நெத்தியடியாக சொல்லி அனுப்பி விட்டார்கள். "போகும் போது என்ன தேவையோ எல்லாம் எடுத்திட்டு போன்னு சொன்னேன். வீம்புல நாலை மட்டும் எடுத்திட்டு போச்சு. வாழ்க்கை என்னனு படிக்கட்டும் "னு சொல்லி தர மறுத்து விட்டார்கள். அதன் பிறகு என் கணவர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வாங்கிக் கொடுத்தார். திருமணத்துக்கு முன்பாக நான் மிக நன்றாக உடை உடுத்தி அவர் பார்த்திருப்பதால் ஒரு குற்ற உணர்ச்சியோடு அந்த குறையை நிறை செய்தார். 


ஆரம்ப காலங்களில் வாங்கிய ஒவ்வொரு புடவையும் ஒரு உணர்வுக் குவியலால் நெய்ததாக இருக்கும். எனக்கு அவர் முதன் முதல் வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவையும் நன்றாக நினைவிருக்கிறது. மாம்பழ மஞ்சளில் அரக்கு பார்டர். பார்டர் முழுவதும் பொடியாக கட்டம். 


அலுவலகம் செல்லும் வரை தேவையாகத் தோன்றிய அதிக உடைகள் இப்பொழுது பாரமாகத் தெரிகிறது. இன்று எனக்கு அம்மாவுக்கு வந்த அதே விரக்தி நிலை வந்திருக்கிறது. ஏன் இத்தனை வாங்கி சேர்த்து வைத்திருக்கிறோம். தேவைக்கு மட்டும் வைத்து கொண்டு மீதிஎல்லாவற்றையும் இல்லாதவர்களுக்கு கொடுத்து விடும் மன நிலை வந்து விட்டது. 


ஓரளவு நம் தேவைகள் நிறைவேறி விட்டாலே வயது அதிகமாகும் போது இந்த ஆசையைத் துறக்கும் மன நிலை வந்து விடும் போலிருக்கிறது. 

கூட்டிக் கழித்துப் பார்த்தால் என் தங்கை செய்வது தான் சரியென்று படுகிறது. பீரோ பீரோவா சேர்த்து வைக்கவும் வேண்டாம். ஒரு இக்கட்டான நேரத்தில் தூக்கிக் கொடுக்கவும் வேண்டாம். எப்போதுமே Less luggage more comfort  தானே.

 இது புடவைக்கு மட்டுமல்ல நாம் சுமந்து கொண்டிருக்கும் கோபங்கள் வைராக்கியங்கள் ஆதங்கங்களுக்கும் தான்.  அப்பப்போ சுமைகளை இறக்கி விட வேண்டும்.

என்ன நான் சொல்றது? சரி தானே?

 #வாழ்க்கை பயணம்

ஒரு தோழி எழுதிய டிரெயின் அனுபவம் இந்த பதிவை எழுதத் தூண்டியது.


1984இல் நான் என் இரண்டாவது மகளைக் கருவில் தாங்கினேன். அப்பொழுது என் கணவர் கேரளாவிலுள்ள காசர்கோடில் பணி புரிந்தார். அந்த சமயம் எழுத்தாளர் ஜெயமோகன் அங்கே ஆப்பரேட்டராக பணி புரிந்தார் என நினைக்கிறேன். 

நான்  மூத்த மகளுடனும் வயிற்றில் சிசுவோடும் தனியாக இருக்க முடியாது என்பதால் எங்கள் வீட்டை நாகர்கோவிலிலிருந்து பாளையங்கோட்டைக்கு மாற்றினோம். அப்போ அம்மா என்னை ஏற்றுக் கொண்டிருந்தார்களே ஒழிய என் கணவரை ஏற்கவில்லை. அதனால் அம்மா வீட்டுக்கு பக்கத்திலேயே ஒரு வீடு. என் கணவர் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வருவார். வரும் போது மட்டும் அந்த வீடு. மற்ற நேரங்களில் அம்மா வீட்டில் அவர்களோடு சேர்ந்து இருப்போம்.


 பாளையில் வீட்டிலிருந்து மார்க்கெட்டுக்கு நடந்து பஸ் பிடித்து ஜங்ஷன் போய் அங்கிருந்து சீசன் டிக்கெட்டில் டிரெயினில் தினம் நாகர்கோயில் போய் பணி புரிந்து வந்தேன். நாகர்கோயிலில் ஸ்டேஷனிலிருந்து ஆஃபீஸ் இருக்கிற இடம் அரை மணி நேரம் நடக்கணும். அப்போ அதற்கு டவுன் பஸ் இல்லை. நாள் ஒன்றுக்கு மூன்று மூன்று ஆறு மணி நேரப் பயணம் வயிற்றில் குழந்தையுடன். 


அக்டோபர் 31, 1984  அன்னை இந்திராவை சுட்டு கொன்றார்கள் என்ற தகவல் மதியம் கிடைத்தது. நாங்கள் பல துறைகளிலும் பணி புரிபவர்கள் ஒரு குரூப்பாகத் தான் வருவோம். அவர்கள் ஒருவருக்கொருவர் தகவல் பரிமாறிக் கொண்டார்கள். மாலை ஒரு வேளை டிரெயின் நிறுத்தப்படலாம் அதனால் மதிய டிரெயினிலேயே எல்லோரும் போய் விடுவோம் என. அப்பொழுது எனக்கு ஏழு மாதம். ஆட்டோவில் ஸ்டேஷன் நோக்கி விரைகிறேன். கலவரம் தொடங்கி விட்டது. வழி மறிக்கிறார்கள். ஆட்டோகாரர் " புள்ளைத்தாச்சியை கூட்டிட்டு போறேன். வழி விடுங்கப்பான்னு"கெஞ்சுறார். நான் கோழிக்குஞ்சைப் போல் நடுங்கி ஒடுங்கி இருக்கிறேன். ஒருவன் தலையை ஆட்டோவில் நுழைத்து பார்க்கிறான். " ஆமா புள்ளதாச்சி தாம்ப்பா" என போக சம்மதிக்கிறான். 


ஸ்டேஷனில் இறங்கி ஆட்டோ டிரைவரை கை எடுத்து கும்பிட்டபடி டிரெயினை நோக்கி ஓடுகிறேன். நவம்பர் 1 நெல்லை நாகர்கோவிலுக்கு  டிரெயின் விட்டு முதலாண்டு நிறைவு  நாள். அதனால் அதை டிரெயின் டே எனக் கொண்டாட தோவாளையில் நிறைய பூக்கள் ஆர்டர் செய்திருந்தோம். நாங்கள் இருந்த கம்ப்பார்ட்மென்ட்டில் ஏற்றி விட்டார்கள். வழக்கமாக கலகலப்பும் குதூகலமுமாக பயணிப்போம். அன்று அத்தனை பேர் முகங்களிலும் சோகம். ஒரு பெரிய ஆளுமையை இழந்த வருத்தம். நெல்லையில் போய் இறங்கும் போது அங்கே பஸ்ஸை நிறுத்தி விட்டார்கள். பஸ் ஸ்டான்ட் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஒரு கூடை நிறைய பூக்கள். வேறு வழியில்லாமல் பஸ் ஸ்டான்டிலேயே ஒரு இடத்தில் அந்த கூடையை வைத்தோம். ஆளுக்கு ஒரு பக்கமாக போக வேண்டும்.


 முத்து என்பவர் ஒரு பாங்க் ஊழியர். திருமணமாகாத இளைஞன். அவரிடம் என்னை ஒப்படைத்தார்கள். எங்கள் வீட்டில் கொண்டு விட்டு விடும்படி. ஜங்ஷனிலிருந்து பாளை கிட்டத்தட்ட 5கிமீ இருக்கும். நடந்தேன் வயிற்றில் பிள்ளையை சுமந்தபடி. (இப்போ எங்கே போனது அந்த மன உறுதியும் தைரியமும்??? அப்போ வயது 25. )  எங்கள் வீட்டில் கொண்டு என்னை ஒப்படைத்த பின் தான் நண்பர் முத்து நிம்மதியாக மூச்சு விட்டிருப்பார். இன்று அந்த நண்பர் எங்கிருக்கிறார். தெரியவில்லை. ஆனால் என் நினைவில் மனதில் அழியாமல் இருக்கிறார். 


இவள் தான் அன்று என் வயிற்றில் இருந்த மகள். இன்று இரு பிள்ளைகளின் தான். காலம் தான் ரெக்கை கட்டிக் கொண்டு எவ்வளவு வேகமாக பறக்கிறது.