Bio Data !!

26 December, 2020

 கோண தாத்தா

சிறுகதை எழுதியவர் குதிரை சுதாகர்.

ஒரு சிறுகதை மூலம் இவ்வளவு வலி கொடுக்க முடியுமா? முடிகிறது.


சாமான்ய மக்களோடு இருக்கும் போது மனசு வெகுஇயல்பாய் இருக்கிறது என்கிறார் ஆசிரியர்.உண்மை அவர்கள் வாழ்க்கை நாடக பூச்சு இல்லாத நடைமுறை வாழ்க்கை.

எனக்கு வாழ்க்கையை அதன் போக்கில் விடலாம் எனத் தோன்றும். அவரோடது போராட்டக் குணம் என்கிறார். வாழ்க்கை எப்போதும் இப்படியான எதிரெதிர் துருவங்களைத் தானே இணைக்கிறது. 

சொந்த தாத்தாவாக இல்லாமலிருந்தாலும் எல்லாமுமாக இருந்திருக்கிறார் கோண தாத்தா. தாத்தாவின் பூர்வீகம் யாருக்கும் தெரியாது.விந்தி விந்தி உடம்பைக் கோணி கோணி நடப்பதால் இந்த பெயர் வந்து சேர்ந்தது. என்னைப் பார்த்ததும் கண்ணால் மனசு கசிந்து சிரிப்பார் என்கிறார் ஆசிரியர்.

வெற்றி பெற்ற விளையாட்டு வீரன் தன் நாட்டுக் கொடியை இரு கைகளாலும் உயரத் தூக்கிப் பிடித்த படி மைதானத்தை வலம் வருவது போல அவர் குளித்து தன் வேட்டியை பிடித்து காய வைத்து வருவது இருக்கும் என்கிறார். என்ன அழகான உருவகம். 

மாரி என்னும் ஐஸ் விற்கும் காரெக்டர் ஒன்றைப் பற்றி சொல்கிறார்.மாரி ஐஸ் விற்று வந்ததும்  தாத்தா உட்பட குழந்தைகள் பெட்டிக்குள் துளாவி கிடைத்த துண்டுகளை எடுப்பதை சொல்லி இருக்கிறார். தாத்தா அடித்து பிடித்து எடுத்து வரும் துண்டைக. கீழே போட்டு இவனை அதன் மீதேறி நிற்கச் சொல்வார்.

எருமை கோவிந்தன் என்றொரு காரெக்டர். நன்றாகக் குடித்திருந்தவன் தாத்தாவை எட்டி உதைக்க தண்ணீரில் சுருண்டு விழுந்தார். அப்பா தலை வருடி முதுகு தடவி கொடுக்கத் தெரியாமல் அய்யனார் சிலை மாதிரி கம்பீரமாக வாழ்ந்தாலும் வாழ்க்கையை வாழச் சொல்லிக் கொடுத்தவர் தாத்தா தான். கண் பார்த்துத் தான் பேச வேண்டும் என்றும் மனுஷனுக்கும் மிருகத்துக்கும் நடந்தால் தான் கலப்புத் திருமணம் என்றும் வாழ்வின் நெறி முறைகளைச் சொல்லிக் கொடுத்தவர். ஒரு மாட்டு வண்டியில் தலை சாய்த்து நுறை தள்ளித் தாத்தா இறந்து கிடந்தார். தண்ணீரைக் குடம் குடமாய் தலையில் ஊற்றி புது வேஷ்டி கட்ட முற்படும் போது ஒருவன் நக்கலாக "கோண ஆம்பளையும் இல்ல பொம்பளயும் இல்லடா" என்றான். போவோர் வருவோர் அந்த பிறந்த மேனியை வேடிக்கை பார்த்து சிரித்தபடி நகர்ந்தனர். 

எல்லா ரகசியங்களையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து அவமானங்களைப் புதைத்து பிணமாக கோணிக் கோணிச் சென் று கொண்டருந்தார் கோண தாத்தா. 

என் 25 வயதில் இப்படி ஒரு குழந்தையை நான் பார்த்ததும் அது பதின்ம வயது வந்து அதன் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்துத் தான் ஆணா பெண்ணா என்று நிர்ணயித்து ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று வலியோடு அதன் தாய் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

13 December, 2020

 உன்னை முதன் முதலாக பார்த்த போது என்ன நினைத்தேன்?

யாரை? யாரை இல்லைங்க எதை?

எனக்கு பிபி இருக்குதுன்னு தெரிஞ்சுகிட்ட அந்த நேரம்?

எல்லோரும் கதை கேட்க தயாராகிட்டீங்களா?

ம்ம்ம்

என்னிடம் அப்போ ஸ்கூட்டி ப்ளஸ் (லைட் ரோஸ் நிறம் தான் இளம் பெண்கள் விரும்புவார்கள்னு கூடுதல் 500ரூபாய் வச்சிருக்கும் போது எனக்கு இந்த ரத்த சிவப்பு தான் பிடித்ததுனு எடுத்தேன். என்ன ஒண்ணு சிவப்பு கலர் சாரி ப்ளவுஸ்ல போனா தீயணைப்புப் படை ஒண்ணு வருவது போல் இருக்கும். மத்தபடி ஓகே)

அலுவலகத்தில் ஷெட்டில் நிறுத்தினதும் லேசா தலை சுற்றி விழப் போனேன். தட்டி விட கல்லு கூட இல்லையேன்னு நினைச்சவ டாக்டரிடம் தானே போயிருக்கணும். நேரா வேலை செய்ய போயிட்டேன். அப்போ நான் இருந்த செக்‌ஷன் ப்ராட்பேன்ட் சம்பந்தமானது. கொடுக்க ஆரம்பித்த புதிது. இப்போ நினைச்சு பார்த்தா எவ்வளவு ரிஸ்க் எடுத்திருக்கோம்னு புரியுது.

சாவகாசமா மாலை வீட்டுக்கு போற வழியில டாக்டரை பார்த்தேன். விஷயத்தை சொன்னதும் பிபி செக் பண்ணினவங்க "நீங்க பிபிக்கு என்ன மாத்திரை எடுக்கிறீங்கன்னாங்க. " எனக்கு பிபி இல்லை டாக்டர் ன்னேன்.

அதை நீ சொல்லக் கூடாது ன்னவங்க படுக்க வச்சு நிக்க வச்சு எல்லாம் மறுபடி மறுபடி எடுத்தாங்க. "பிபி ரொம்ப அதிகமா இருக்கு. 220க்கு மேல. உன்னை வீட்டுக்கு அனுப்ப முடியாது. அட்மிட் ஆகுன்னாங்க. "

ஆத்தீ! "டாக்டர் எனக்கு எந்த சிம்ப்டமும் இல்லை. காலையில லேசா தலை சுத்திச்சு Now i am alright னு பழைய படத்தில மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி நான் சொல்ல அவங்க இவ்வளவு அதிகமா இருந்தும் நான் எப்படி வண்டி ஓட்டிக்கிட்டு வந்தேன்னு ஆச்சர்யப்பட்டு கிட்டு இருக்கும் போது நான் " டாக்டர் நீங்க மாத்திரை கொடுங்க. நான் வீட்டுக்கு போயிட்டு நாளைக் காலையில வந்து அட்மிட் ஆகிறேன்னு" சொல்லிட்டு அவங்க கொடுத்த 600₹ மாத்திரையையும் வாங்கிட்டு எஸ்கேப் ஆகிட்டேன்.

மறு நாள் காலை என் மகளை மதுரைக்கு அனுப்ப வண்ணாரப்பேட்டை க்கு போனேன். பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது ஒரு தெரிந்த அண்ணன் வந்தாங்க. அவங்கள்ட முந்தின நாள் நடந்த செய்தியை சொன்னேன். "நல்ல வேளை அவங்க கொடுத்த மாத்திரை சாப்பிட ஆரம்பிக்கல.  நீ ஹோமியோபதி அல்லது சித்தா பாரு. குறைச்சு கொண்டு வந்த பிறகு வேணா மறுபடி அலோபதி டாக்டர் பாரு. பிபி ரொம்ப அதிகமா இருக்கும் போது குறைக்க அலோபதி சாப்பிட்டா கிட்னி பாதிப்பு வருது" ன்னாங்க. 

நாம தான் டாக்டரை தவிர மீதி எல்லார் சொல்றதையும் கேட்கிற கூட்டத்தை சேர்ந்தவங்களாச்சே. மறு நாள் ஒரு ஹோமியோபதி மருத்துவரை பார்த்தேன். அவரிடம் ஆறு மாதங்கள் மருந்து சாப்பிட்டு ஓரளவு குறைந்த பிறகு  அலோபதி டாக்டர் பார்த்து அன்றிலிருந்து இன்று வரை குறைந்த அளவு பிபி மாத்திரையோடு வண்டி ஓடுகிறது. 

கொஞ்ச நாள் முன்ன சுகமில்லைன்னு எழுதி இருந்தேன் அப்போ பிபி 180தான்(!!!!) இருந்தது. அதற்கே ஆம்புலன்சில் மருத்துவமனை செல்லும் நிலை. அப்போ தான் முதன்முதலாக பிபி இருக்குன்னு கண்டுபிடிக்கும் போது 220க்கு எப்படி ஒரு அறிகுறியும் இல்லாமல் இருந்தேன்னு வியப்பா இருந்துச்சு. அது வா.......லி......ப வயசு. 

ஒரு சிலருக்கு ஆரம்பத்திலேயே நோய் அறிகுறி தெரிஞ்சிடும். சிலருக்கு அதிகமான பின் தான் தெரியும். சிலருக்கு உயிரைக் காப்பாற்ற நேரமில்லாமல் போயிடும். அதனால் உடல் நலம் பேணுவோம். முக்கியமாக பெண்கள். தன் உடல் நலம் பற்றி அக்கரை எடுப்பதே இல்லை. அதை மாற்றிக் கொள்வோம்.

07 December, 2020

 என் 

உடலும் உள்ளமும்

ஒரு ஜோடி

காதல் பறவைகள்

(லவ் பேர்ட்ஸ்)

ஒத்த நிறம்

கொண்டவை.

ஒன்றையொன்று

கொஞ்சிக் கொள்ளும்.

ஒன்றொ மற்றொன்று

புகழ்ந்து கொள்ளும்.

இளமை மாறாமல்

பார்த்துக் கொள்ளும்.

கோரமான நேரமொன்று

வந்த போது

உள்ளமொடுங்க

இணைப் பறவையும்

வாடி

உடலும் ஒடுங்கியது.

காதல் பறவைகளில்

ஒன்று மரித்து

ஒன்று மீள்தல் 

சாத்தியமோ?

உள்ளம் உரமிழக்க

உயிரிழக்க

உடலோ கண் நீர் வடித்து

உயிர் துரக்க தயாராய்.

உயிர் நீங்கிய உடலை

பிணமென்போம்.

உயிர் நீங்கிய உள்ளத்தின்

என்னவெனலாம்?



04 December, 2020

 வேங்கட வீரன்.

எழுதியவர் இலக்கியா சுப்ரமணியன்.

இது "காவியத் தலைவன்" என்ற போட்டிக்காக ஆசிரியர் எழுதிய முதல் வரலாற்று நாவலாம். முதல் நாவலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. தேர்ந்த எழுத்தாளரின் நடை வீச்சு. இது ஒரு கற்பனை கலந்த குறுங்காவியம் என்கிறார்.

வேங்கட வீரனை மிக அழகாக வர்ணிக்கிறார். "பொதிய மலையை ஒத்த அவன் புஜங்களில் நூலிலையில் கோர்த்த ருத்ராட்சமும் அவனது எழில் பொருந்திய கழுத்தில் கூரிய கருஞ்சிறுத்தையின் பற்களும் கைகளில் வளைந்து நெளிந்த கங்கணமும் பாதத்தில்  வட்ட வடிவ தண்டையும் அவனுடலோடு பிணைந்து கிடந்தது. "

கதை நாயகியை அதை விட அழகாக விவரிக்கிறார். "தங்கத்தையும் மஞ்சளையும் உரலில் இடித்து பசும் பாலில் குழைத்து கை தேர்ந்த சிற்பிகளை தேர்ந்தெடுத்து செதுக்கிய பொன்னிற சிற்பமொன்றின் பூவுடல் தன்னை உரசியதால் உண்டான மின்னல் தாக்குதலு " க்கு வேங்கட வீரன் ஆளானதாகச் சொல்கிறார். 

ஆதினியாள் அவள் தான் கதை நாயகி. அவளுக்கும் வேங்கட வீரனுக்கும் காதல் முகிழ்க்கும் இடமும் மிகவும் ரசனையோடு சொல்லப் பட்டிருக்கிறது. "தன்னை எதிர்த்த வீர்ர்களிடம் இருந்து தப்பித்த ஆதினியாள் அடுத்த அடி எடுத்து வைக்க பெண்ணவளின் காலானது சேற்றைக் குழைத்து பிறழ அதையுணர்ந்த வேங்கட வீரனின் கைகள் அவளைத் தாங்கிப் பிடித்தது. கொடியிடையை சுற்றி இறுக்கிப் பிடித்தவன் அவளைக் கீழே சரியாமல் தன்னோடு அணைத்திருக்க முதன் முதலில் ஆடவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தபாவையவளின் உடலைநாணம் பிய்த்துத் தின்றது. அவள் விழிகள் அகிலத்தை மறந்து ஆடவனின் விழிகளுக்குள் நுழைந்தது. " 

தன்னுடன் வந்தவன் வேங்கட வீரனல்ல வேங்கட அரசன் என ஆதினி அறியும் இடமும் மிகவும் அழகு. "சூரிய திலகத்தை நெற்றியில் அனலென ஏந்தி திரண்டு எழுந்து நிற்கும் இமயம் போன்ற இரு தோள்பட்டைகளிலும் பவளத்தை சூடி ஈசன் குடியிருக்கும் எருதின் திமில் போன்ற நெஞ்சம் நிமிர்த்தி........புல்லி நாட்டுடையன் சிம்ம சொப்பனமாய்  நடந்து வந்தான். எனக்கு மட்டும் மன்னன் என்று நினைத்திருந்தவன் இத்தேச மன்னா?" இப்படிச் செல்கிறது. 

அரசனிடம் தான் வந்த காரியம் சொல்லி தன் நாட்டு இளவரசியைக் காக்க வேண்டிய அவசியத்தையும் அவள் விரும்பும் சந்திர சீரனுடன் இளவரசியுன் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்றும் அரசரின் நண்பரான சந்திர சீரர் சொல்லியே தான் அரசரை சந்தித்ததாகவும் சொல்ல அரசன் தன் நண்பனின் உதவிக் குரலுக்கு உடன் இசைந்து சென்று காத்து பின் தன் மனதுக்கு இயைந்த ஆதினியாளுடன் இணைந்து கதை இனிதாக முடிகிறது. 

இலைகளை உரசிச் செல்லும் காற்றைப் போல நான் கதையை லேசாக தொட்டு மட்டும் தான் செல்கிறேன். தென்றலின் முழு சுகந்தத்தையும் அனுபவிக்க கிண்டிலில் "வேங்கட வீரனை" வாசியுங்கள். 


28 November, 2020

 க/பெ ரணசிங்கம்

இது zee 5இல் OTT யில் வெளியான படம். கணவர் பெயர் ரணசிங்கம்.அப்போ மனைவி பெயர் ? அரிய நாச்சி. ரணசிங்கமாக விஜய்சேதுபதியும் அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷும் கலக்கி இருக்கும் ஒரு படம். 

ஐஸ்வர்யா ராஜேஷ் 80 களில் நடிக்க வந்திருந்தால் மிகப் பெரிய உயரத்துக்கு போயிருக்க வேண்டிய ஒரு பெண். நடிப்பு இந்த பெண்ணுக்கு மூச்சு விடுவதைப் போல இயல்பாக வருகிறது. 

இவர்கள் இருவருக்குமிடையே இழையோடும் காதல் மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அதையும் அழகாக எடிட் செய்து பரிசுப் பொருளின் மேல் அங்கங்கே ஜொலிக்கும் ஜிகினாத் தாள் போலவும் பாயாசத்தில் மிதக்கும் முந்திரிப் படகு போலவும் தந்த எடிட்டரை சிறப்பாக பாராட்ட வேண்டும். 

வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவன் இறந்த செய்தி அறிந்த அவன் உடலைப் பெற ஒரு பெண் தனியாகப் போராடுவதே கதை. அரசு அலுவலகங்களின் நடைமுறை மெத்தனத்தை மிக இயல்பாக காட்டி இருக்கிறார்கள். 

இடுப்பில் குழந்தையை சுமந்த படி டெல்லி ரோடுகளில் நடக்கும் ஒரு பாவப்பட்ட பெண்ணுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே பிரதமர் வரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அத்தகைய வாய்ப்பு கிடைத்தும் அவள் கணவனின் உடலை அவளால் பெற முடிந்ததா? 

வேல ராமமூர்த்தி  கிராமியத் தந்தை பாத்திரத்துக்கு அளவெடுத்து தைத்தது போலிருக்கிறார். கிராம பூசாரியாக வரும் தவசி ஒரு சில மாதங்களிலேயே புற்று நோயால் மெலிந்து பரிதாபமாக இறந்து போனது வேதனையான விஷயம். 

கலெக்டராக வரும் பாண்டே சிறப்பாக நடித்திருக்கிறார். லேசாக தலையை ஆட்டியபடியே விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் "பூ ராமும்" மனதில் பதியும்படி வந்திருக்கிறார்.  நாயகன் நாயகி தவிரவும் மற்ற கதாபாத்திரங்களும் ஒவ்வொருவரும் மனதில் பதியும்படி உருவாக்கி இருப்பது டைரக்டரின் திறமையை பறை சாற்றுகிறது. 

மொத்தத்தில் ஒரு மிகச் சிறந்த படம் பார்த்த திருப்தி கிடைத்தது.

19 November, 2020

 ஜெயமோகனின் "வெண்கடல்" சிறுகதையிலிருந்து."பெண்ணடியாளுக்க வலியைக் கண்டா ஆணாய் பிறந்ததே பாவம்னு தோணிப் போயிரும்." என்றான் குமரேசன். "ஆணுக்கு அந்த மாதிரி வலி இல்லையா" என்றேன். "இல்லையே!இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக் கூதறயா இருந்திருக்குமா? ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே" என்றார் அப்பு அண்ணா. 

இதைப் படித்ததும் என் சிந்தனை. ஆண்களுக்கு சிறு வயதிலேயே வலி தாங்கும் மன வலிமை இருக்கிறது. என் பேரனுக்கு அப்போது எட்டு வயது இருக்கும். நாங்கள் ராஜஸ்தான் வந்த புதிது. குளிர் காலங்களில் காலை பதினோரு மணி போல பார்க்கில் விளையாட விட்டு நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் விளையாடிய பிள்ளை தரையிலமர்ந்து தன் முழங்காலில் முகத்தை புதைத்த படி இருக்கிறான். 

ஏதோ சந்தேகம் வர பக்கத்தில் போய் பார்த்தால் அழுது கொண்டிருக்கிறான். நெற்றியில் புருவத்துக்கு அருகே காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது. பதறிப் போனேன். இதுவே பெண் பிள்ளையாக இருந்தால் இரத்தம் கண்டதும் நடுங்கி பாட்டியிடம் ஓடி வந்திருக்கும்.

ஆனால் அதே குழந்தை வளர்ந்து பெண்ணானதும் எவ்வளவு வலி தாங்குகிறது. பூப்பெய்துவது சிலருக்கு பூப்போல முடிந்து விடும். சிலருக்கோ மாதா மாதம் ரண வேதனை. அருவருப்பு. தனது உடலே நாறிப் போனது போல் ஒரு உணர்வு. பக்கத்தில் இருப்பவர்களுக்கு அந்த நாற்றம் தெரிந்து விடுமோ என்னும் பதைபதைப்பு. 

அடுத்து திருமண உறவு. சுத்தமின்மையை பெரிதாய் எடுத்துக் கொள்ளாத பெண்ணாய் இருந்தால் பரவாயில்லை. அதுவே தூய்மை பேணும் பெண்ணாய் இருந்தால் இரவில் வியர்வை கசகசப்போடு தன் மனம் உடன்படாத நேரத்திலும் தன்னை நெருங்கும் கணவனை சந்தோஷப்படுத்த வேண்டிய வலி. ஈடுபாடு குறைந்ததை  கண்டு பிடித்து விட்டால் "வேற எவனையாவது நினைச்சுக்கிட்டு இருக்கியா" என்னும் கூர்வாள் பாயும். உன் வாடையும் நசநசப்பும் தான் தாங்க முடியலன்னு சொல்லவா முடியும்.

அடுத்து பிரசவம். சொல்லவே வேண்டாம். மறு ஜென்மம். இப்போ ஆப்பரேஷன் பண்ணி சுலபமா குழந்தையை எடுத்திடுறாங்கன்னு சொல்றாங்க. ஆனால் அதற்காக நடு முதுகில் போடப்படும் ஊசி நகரும் போதெல்லாம் உறுத்தும். 

குழந்தை பிறந்து பால் கொடுக்க இயலாமை ஒரு வலி என்றால் ஏதோ காரணங்களால் பால் இருந்தும் கொடுக்க முடியாமை பெருவலி. அதைத்தான் இந்த கதையில் சொல்லி இருக்கிறார். பால்கட்டை எடுக்க அட்டைகளை மாரில் வைத்து கட்டும் ஒரு முறையை சொல்லி இருக்கிறார். அவை வலி தெரியாமல் உறுஞ்சி விடும். பின் அந்த அட்டைகளை அழித்து விடச் சொல்லும் போது அப்பெண் சொல்கிறாள் "ஆற்றிலேயே விட்டிடுங்க. என்ன இருந்தாலும் அவை என் பாலைக் குடித்தவை"  இந்த வரியில் நொறுங்கிப் போனேன் நான். 

வயதாகி தீட்டு நின்றாலும் நிற்பதில்லை வலி சிலருக்கு. எத்தனை குழந்தைகளை தாங்கிய கருப்பை தளர்ந்து நெகிழ்ந்து வெளியே வந்து விடுகிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் கூச்சம். ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் சொல்லும் போது அதை வெட்டி நீக்க வேண்டிய அவசியம். முடியாத சமயத்தில் வெளியே சொல்ல முடியாத வேறொரு தீர்வும் இருக்கிறது. 

இப்பொழுது முதல் பாரா படியுங்கள். ஆசிரியர் சொன்னது எவ்வளவு சரியென்று தெரியும். பெண் எவ்வளவு வலியும் தாங்க கூடியவள் அவள் முடியவில்லை என்று சொன்னால் அது மனதின் வலியின் பிரதிபலிப்பு எனப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டின் பெண் முடியவில்லை என்று சொன்னால் சகித்துக் கொள்பவர்களின் சதவீதம் கூட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட பதிவு. 

நாங்கள் இருக்கிறோம் எனச் சிலர் சொல்வீர்கள். அந்த ஒரு சிலர் போதாது. அனைத்து பெண்களுக்குமே அந்த பராமரிப்பு கிடைக்க வேண்டும்.

03 November, 2020

 கனவுகள் ஆழ் மனத்தின் வெளிப்பாடு. நாம் எதை அதிகமாகச் சிந்திக்கிறோமோ அவை கனவுகளாக வெளிப்படும். எழுத்தாளர்கள் முழு நேரமும் தன் கதைகளை நினைவுகளில் ஊறப்போடுபவர்கள் தானே? இவர்கள் தன் கதைகளின் பாதிப்பால் கனவுகளால் கஷ்டப்பட்டிருப்பார்களா? இந்த சந்தேகம் எழுத்தாளர் இமையத்தின் 'செல்லாப் பணம்' திறனாய்வு ஸூம் கூட்டத்தில் எனக்கு வந்தது. 

"செல்லாப் பணம்" அவலங்களின் உச்சம். அன்று அவரிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன். "கதையை வாசித்த எங்களாலேயே கதையை விட்டு வெளிவர காலம் நிறைய எடுக்கிறதே? உங்களால் வெளியே வர முடிகிறதா? அதுவும் அடுத்த கதை எழுத தொடங்கு முன். " நான் கேட்காத கேள்விக்கு கூட்டத்திலேயே பதில் கிடைத்தது. அவர் திறனாய்வு செய்தவரை கதையின் ஒரு பகுதியை வாசிக்க சொன்னார். வாசிக்க வாசிக்கவே கண் கலங்கினார். அது அம்மா இறந்து போன தன் மகளைப் பார்த்து பேசுவது. புத்ர சோகம்! 

எனக்கு புரிந்தது. அவர்களால் வெளியே வர முடியாது. அவர்களைப் பொறுத்த வரை அவர்களது கதைகள் சக்கர வியூகங்கள். அர்ச்சுனன் மைந்தன் போல் உள்ளே போகத் தெரியும். வெளியேறத் தெரியாது. அப்படியானால் அவர்கள் கனவுகளால் பிரசவ வேதனையல்லவா அடைந்திருப்பார்கள். நானறிந்த சில எழுத்தாளர்களிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என நினைத்தேன்.

ஒரு பெண் எழுத்தாளரிடம் பேசினேன். அவர்கள் ரொமான்ஸ் திரில்லர் போன்ற வகைகளில் எழுதுபவர்கள். அவர்கள் சொன்னது "அனேகமாய் என் கதைகள் கற்பனை சார்ந்தே இருப்பதால் கதை எழுதும் போது அதன் பாதிப்பு இருக்கும். முடிந்ததும் வெளியே வந்து விடுவேன் " என்றார்கள். 

மற்றவர்களிடமும் கேட்க வேண்டும். முக்கியமாக ஜெமோவிடம்.அப்பப்பா! எத்தனையெத்தனை கதைக்களம்!


இது செல்லாத பணம் பற்றி நான் எழுதியது.

02 November, 2020

 தன்னைக் குடித்தவனை

தள்ளாட வைத்து

தான் நிலையாயிருக்கும்

அன்பெனும் மதுவால்

நிறைந்த மதுக்கிண்ணம்.

நான். 

இரவில்

உன் சுண்டு விரல்

நுனி கோர்த்து

உறங்கப் பிடிக்கும்.

அது உன்னோடான

கலவியை விட

ரொம்பவே பிடிக்கும்.

 மாலையில்

மெல்லிய மழைச்சாரலில்

அழகான தோட்டத்தில்

உன்னோடு சூடாய்

ஆம்

நாமும் தேநீரும் 

சூடாய் குடிக்கப் பிடிக்கும்.

மதிய நேர

உணவுக்குப் பின்னான

மெல்லுறக்கத்தில்

உன் அணைப்புக்குள்ளே

அசைய பிடிக்கும்.

இளங் காலை நேர

என் விழிப்பில்

உறங்கும் உன்னை

அசைத்தெழுப்பி

உலக அரசியல்

பேசப் பிடிக்கும்.

ஆனால்

மதுக்கிண்ணத்தை நீ

சிதறடித்ததால்

சிதறிய பாதரஸமாய்

அங்கங்கே

உருண்டு கிடக்கும்

என் அன்பு

என்னைப் பார்த்து

கெக்கலி கொட்டிச்

சிரிக்கிறது.

இந்த அன்பைச்

சேர்த்து கிண்ணத்தில்

நிறப்ப

இன்னொருவன் 

வருவானா?

வந்தாலும்

அவ்வன்பைப் பருக

முன் வருவானா? 

காத்திருக்கிறேன்.!!

25 October, 2020

 அனிதா

அனிதாவுக்கு வயது 60+ என்னா.......துவா? பிறக்கும் போது வைத்த பெயர் அறுபது வயதானாலும் அதே பெயர் தானே! வேணுமானால் பிள்ளைகள் பெயரைச் சொல்லி அம்மான்னு சேர்த்து சொல்லலாம். வேணாம் நாம அனிதான்னே வச்சுப்போம். 

அன்று அனிதா கொஞ்சம் கட்டுப்பாடில்லாமல் தான் சாப்பிட்டு விட்டாள். மதியம் சிக்கன் பிரியாணி. மாலை வீட்டில் செய்த ஒரு ஸ்வீட். இரவு இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்கள். அதுக்கப்பறம் தான் வந்தது வில்லங்கம். ஸ்வீட் செய்து மிச்சமிருந்த சுகர் சிரப்பைத் தொட்டு பிரட்டை சாப்பிட்டு வைத்தாள்.

இரவு நாலைந்து முறை பாத்ரூம் போக வேண்டி வந்ததுமே தன் சுகர் அளவு கூடி விட்டது எனத் தெரிந்து கொண்டாள். தினம் எழுந்ததும் சுமார் ஐம்பது பேருக்கு குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவாள். அனுப்பி விட்டு அன்று மறுபடியும் படுத்தாள். ஒரு அரை மணி நேரம் கழித்து எழுந்து தன் படுக்கையை சரி செய்ய நினைத்த போது இடது கை சிறிதளவு தன் கட்டுப்பாட்டில் இல்லாதது போல் பட்டது. நடக்கும் போது ஒரு சின்ன தடுமாற்றம். மெல்ல தன் மகளை எழுப்பி அனேகமாக டாக்டரிடம் செல்ல வேண்டி இருக்கும் எனச் சொன்னாள். 

பிபி செக் செய்த போது 180 எனக் காட்டியது. அன்று வியாழக்கிழமை என்பதும் தன் தந்தை பல வருடங்களுக்கு முன் இதே நிலைமையைச் சந்தித்ததும் நினைவுக்கு வந்து கொஞ்சம் ஆடித் தான் போனாள்.

டாக்டரிடம் ஃபோனில் தன் நிலைமையைச் சொன்னதும் ஃபோனை மகளிடம் கொடுக்கச் சொன்னார். மகள் கண்ணில் தண்ணீர் துளிர்க்க அந்த இடம் விட்டு நகர்ந்ததும் பதறினாள். பேசி வந்த மகளிடம் "சொல்லம்மா எனக்கு என்ன?" என்று கேட்டாள். ஒன்றுமில்லை என்றவளிடம் "தைரியமாக சொல். எனக்கு ஹார்ட் அட்டாக்கோ பிரெயின் அட்டாக்கோ சின்ன அளவில் வந்திருக்கிறது என சந்தேகப்படுகிறேன்" என்றாள். மகளும் "ஆமாம்மா சின்ன அளவில் பிரெயின் இன்ஞ்சுரி இருக்கலாம் என சந்தேகப்படுகிறார். CT Scan எடுக்கணும். மருத்துவமனை வரச் சொல்கிறார்"என்றாள். 

அனிதாவுக்கு அவள் தாய் நோய்வாய்பட்ட போது மருத்துவர் "ரொம்ப சீக்கிரமா கண்டு பிடிச்சிட்டீங்க. அதனால பராலிடிக் ஆகல" என்று சொன்னது நினைவு வந்தது. தானும் இரண்டு மாடி இறங்கிப் போனால் ஏதும் சிக்கலாகலாம் என்று நினைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கச் சொன்னாள். அதற்குள் ஒரு பதினைந்து முறையாவது வாந்தி எடுத்திருந்ததால் மிகப் பலவீனமாக இருந்தாள். 

மருத்துவமனையில் சுகர் பிபி மிக அதிகமாக இருந்ததாகவும் CT Scan , ECG சாதாரணமாக இருப்பதாகவும் சொல்லி மருத்துவமனையில் தங்க வைத்தார்கள். அவளுடைய தோழிகள் பலருடைய உதவியாலும் மகளுடைய அன்பான கவனிப்பாலும் நலமாகி வீட்டுக்கு வந்தாள். 

கண்ணாடியைக் கடக்கும் போது அதனுள்ளிருந்த உருவம் கேட்டது "அனிதான்னு பேரு இருந்தா வயசே ஆகாதுன்னு நினைச்சியா? உனக்கு வயசாகிட்டுது. கவனம்" 

ஆமா இந்த கதையில் அனிதா நான் தான். ஒரு கடினமான கால கட்டத்தை கடந்த வாரம் கடந்து வந்தேன். இப்பொழுது நலமாக இருக்கிறேன். கொரோனா காலத்தில் நோய் வாய் பட்டால் உயிர் பயம் வருகிறது. கவனமாக இருப்போம்.


20 October, 2020

 புத்தம் புது காலை

அமேசானில் வெளி வந்த படம். ஐந்து தனிக் கதைகளின் தொகுப்பாய் ஒரு படம். ஐந்து படங்கள். ஐந்து இயக்குனர்கள். ஐந்துக்கு மூணு ஓகே.

ஐந்து கதைகளுக்கு ஐந்து பெயர்கள். ஆனால் பெயர்கள் இங்கே அவசியமில்லை. முதல் கதை வயதான (ரொம்ப வயதெல்லாம் இல்லை ஜென்டில் மேன் ஒரு அறுபது தான்) ஒரு ஆணும் பெண்ணும் இளமையில் காதலர்கள் அவர்கள் சந்திக்க முடிவெடுத்து ஒருவர் வீட்டில் இருக்கும் போது 21 நாட்கள் லாக் டவுன் அறிவிப்பு. அதைத் தொடர்ந்த சில நிகழ்வுகள். பொதுவாக எங்கோ நடக்கும் ஒரு விஷயத்தை மீடியா ரசிக்கும் விதமாய் சொல்லும். அது பின் பலருக்கு நடக்கும். இது தானே நடைமுறை. அந்த விதத்தில் இப்பொழுது வயதானவர்களின் தனிமை இப்பொழுது சிந்திக்கப்படுகிறது. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு தெரிந்த விஷயம். ஆணுக்கு அறுபது வயது ஓய்வு பெற்று வந்த பணத்தை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தார். மனைவியை இழந்தவர். பேப்பரில் திருமணத்துக்கு அறிவிப்பு கொடுத்து ஒரு விவாகரத்தாகி குழந்தை இல்லாத பெண்ணை திருமணம் முடித்து இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் பென்ஷன் வாங்குகிறார்கள்.  சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

இரண்டாவது தான் முதல் தரமான படம். MS Baskar நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறார். கைகளைப் பின்னால் கட்டிய படியே நடப்பதிலாகட்டும் தன் பேத்தியின் கம்பெனி மீட்டிங்களில் வாலன்டரியாக நுழைந்து பங்கேற்பதிலாகட்டும் பல வருடங்கள் பிரிந்து இருந்த தன் மகளின் குரலைக் கேட்டு நெகிழ்வதிலாகட்டும் பாஸ்கர் அவர்களின் முழுத் திறமையும் சினிமாத்துறையில் பயன்படுத்தப்படவில்லை என்பதே என் ஆதங்கம்

மூன்றாவது படம் எனக்கு என் அம்மாவை நினைவுபடுத்தியது. நாங்களும் மூன்று பெண்கள் தான். கடைசி தங்கை பிந்திப் பிறந்தவள். இங்கே கோமாவில் இருந்த தாய் மீண்டு வருகிறார்கள். என் தாய் பரிதவிக்க விட்டு பறந்து போனார்கள். சுஹாசினி அனுஹாசன் ஸ்ருதிஹாசன் மூவரும் சகோதரிகளாய் அசத்துகிறார்கள்.

நாலாவது ஆன்ட்ரியாவின் பள்ளிக் காதல். பள்ளித் தோழன் டாக்டர். ஒரு இக்கட்டான சூழலில் நண்பனின் வீட்டுக்கு வருகிறாள். நண்பன் வந்த கொஞ்ச நேரத்தில் அவன் மருத்துவம் பார்த்த நோயாளி ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆதலால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல். மருத்துவர் மாடியில் படுக்கப் போகும்  போது தன் செல்லை தன் தலகாணியில் பக்கத்திலேயே வைத்து தூங்குகிறார். மருத்துவரே இப்படி செய்யலாமா? சின்ன சின்ன ஓட்டைகளுடன் நிறைவு தராத கதை.

ஐந்தாவது கதையில் கார்த்திக் சுப்புராஜ் பயங்கர ஏமாற்றம் தருகிறார். 

இது படத்தைப் பற்றிய என் கருத்து. பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். பார்க்காதவர்கள் பார்த்திட்டு சொல்லுங்கள்

13 October, 2020

 குடி குடும்பத்தைப் பிரிக்கும்.

என் இளமைக் காலத்தில் ஆண்கள் சிகரெட் பிடிப்பதும் குடிப்பதும் அதிகம் வழக்கத்தில் இல்லை. இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் மறைத்துச் செய்வார்கள். சிகரெட் குடிக்கும் போது ஒரு பெண் பேச வந்து விட்டால் கைகளை பின்னுக்கு மறைப்பார்கள். பேச்சு தொடர்ந்தால் மனதுக்குள் திட்டிக் கொண்டேனும் கீழே போட்டு மிதிப்பார்கள். பெண்களும் இந்த பழக்கமிருக்கும் ஆண்களை வெறுத்தார்கள். வேற வழியில்லாமல் கணவனுக்கு இருப்பது தெரிய வரும் போது திருத்த முயன்றார்கள். பலர் வெற்றியும் பெற்றார்கள்.

அடுத்த ஜெனரேஷன் எப்போவாவது குடித்தால் தப்பில்லை. விசேஷங்களில் குடித்தால் தப்பில்லை என விதிகளை மாற்றி எழுதிக் கொண்டார்கள். குடித்திருக்கும் கணவன் தன்னிடம் ஈகோ இல்லாமல் நடப்பதும் தன்னை தேவதை போல் நடத்துவதும் பிடித்துப் போய் இந்த சலுகைகளை கொடுத்துக் கொண்டார்கள். 

அதற்கும் அடுத்த ஜெனரேஷன் அதாவது தற்போதைய டீன் வயதினர் பெண்களும் குடித்தால் தப்பில்லை என விதிகளை திருத்தி எழுதிக் கொண்டார்கள். குடிப்பது பெண் சுதந்திரம் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்கள். 

நாம் ஆண் பெண் குழந்தைகளை மிகக் கவனமாக கவனிக்க வேண்டிய நேரம் பள்ளி இறுதி ஆண்டுகள். அப்போது தான் பார்ட்டிகளில் பாட்டில்கள் அறிமுகமாகும்.சிறுவனிலிருந்து ஆணாக மாறும் நேரமிது. அவனை ஆண்மை மிகுந்தவனாய் நினைக்க வைக்கும். தன் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸிலிருந்து வெளி வர உதவுவது போல் மாயத் தோற்றம் காட்டும். தான் விரும்பும் பெண் தன்னை விரும்பாத  வலியைக் குறைப்பது போல் கோர முகம் காட்டும். இப்படிப் பழகிய பின் கல்லூரிக்கு வெளி யூர் போய் விட்டால் வசதியாகப் போய் விடும். நான்கு ஆண்டுகள் சில நேரம் இன்னும் கூடுதலாய் இரண்டாண்டுகள் முடித்து வரும்  போது நம்மால் குழந்தைகளை மீட்க முடியாமல் போய் விடும். அதற்குள் பார்ட்டிகளில் குடித்தது தினப்படி வழக்கமாகி இருக்கும்.

தான் குடிப்பதற்கான காரணங்களைத் தேடச் சொல்லும். தன்னையே நியாயப்படுத்திக் கொள்ளும். குடி முதலில் மூளையைத் தான் வசப்படுத்திக் கொள்ளும். பின் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் முழுத் திறனுடன் இருக்காது. சம்பாதிப்பதில் பெரும் பகுதி குடிக்கே செலவாகும். குடி குடியைக் கெடுக்கும் என்பதை குடும்பத்தைக் கெடுக்கும் என்று தெளிவாக எழுதுங்கள். குடும்பம் சீரழியும். விவாகரத்துகள் பெருகும். அடுத்த தலை முறையும் குடியை பழகும். பின் தலை முறை தலை முறையாய் தொடரும். 

பெண் பிள்ளைகள் குடிக்கத் தொடங்கினால் அடுத்த தலைமுறையே நோய்மைத் தலைமுறையாகும். ஆணும் பெண்ணும் சமமென்று சொன்னாலும் தாய்மை பெண்ணை ஆணை விட உயர்த்தியே வைத்திருக்கிறது. ஒரு பெண் குடிக்கின்ற புகைப்படமோ வீடியோவோ பகிரப்படுகின்ற பொழுது அதை மீண்டும் மீண்டும் பார்க்கின்ற பொழுது அந்த தவறின் தன்மை நீர்த்துப் போகிறது. பகிர்தலை நிறுத்துவோம். ஒரு ஆண் குடிப்பான் என்று தெரிந்தால் நாம் திருத்தி விடலாம் என நினைக்காமல் பெண்களாகிய நாம் திருமணம் செய்ய மறுப்போம். 

சிகரெட்,குடி, போதை இவை எல்லாம் சகோதரர்கள். ஒன்றை அனுமதித்தால் ஒவ்வொருவராய் உள் நுழைவார்கள். அடுத்து பொய் சொல்லுதல் என்னும் சகோதரன் உள் நுழைவான். அவனைத் தொடர்ந்து காமம் நுழையும். கள்ளத் தொடர்பு கொலையிலும் கொண்டு நிறுத்தும். சிகரெட்டை ஓரளவு குறைத்து விட்டோம்.  குடியினால் அரசாங்கத்துக்கு வரும் வருமானம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சப்பைக்கட்டு கட்டாமல் டாஸ்மாக்குகளை இழுத்து மூடுங்கள். கஞ்சியை குடித்தாலும் கண்ணியமாய் குடிப்போம்.

28 September, 2020

 #கதை விமர்சனம்

தொடர்ந்து கல்யாணச் சாப்பாடும் பிரியாணியுமா சாப்பிட்டா ஒரு தக்காளி ரசமும் பருப்புத் துவையலும் சாப்பிட்டா நல்லா இருக்கும்னு தோணுமே அந்த மாதிரி நேரங்களில் நான் இலக்கியம் அதிகம் கலக்காத சாதாரண பெண்களுக்கான நாவலைப் படிப்பேன். அப்படிக் கிண்டிலில் படித்தது தான் துளசி சந்திரன் எழுதிய "எதிர் வீட்டுப் பெண்" நான் எழுதுவதெல்லாம் என் புரிதல்களே.  சில கருத்துக்கள் உங்களுக்கு முரண்படலாம். சொல்லுங்கள். அந்த திசையிலும் சிந்தித்து சரியென்றால் மாற்றிக் கொள்வேன். இப்ப கதை.....


ஆதித்யா ஜனனி அவர்கள் குழந்தை ஆதித்யாவின் அம்மா இவர்களால் ஆனந்தமான வீடு. ஜனனியும் அவள் மகளும் ஒரே பள்ளியில் ஆசிரியராகவும் மாணவியாகவும் இருப்பதால் பள்ளிக்கு பக்கத்தில் வீடு மாறிச் செல்கிறார்கள். அங்கே எதிர் வீட்டில் கணவனைப் பிரிந்த ரேவதி தன் இரு பெண் குழந்தைகளுடன் வசிக்கிறாள். 


அவரவர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நாளில் ஆதித்யாவுக்கு ஒரு கொரியர் வருகிறது. அவர்கள் வீட்டில் யாரும் இல்லாததால் ரேவதியிடம் கொடுக்கிறார்கள். அதை வாங்கலாமா எனக் கேட்பதற்காக கவரின் மேல் எழுதப்பட்ட ஆதித்யாவுக்கு போன் செய்கிறாள். அவள் குரல் கேட்டதும் படபடத்த ஆதித்யா வாங்கச் சொல்லி விட்டு அவள் எண்ணை செல்லில் சேமித்துக் கொள்கிறான். அங்கே விளைகிறது வினை.


மறுநாள் வாட்ஸ்அப்பில் நன்றி செய்தி. அதைத் தொடர்ந்து  சில பல forwarded messages. தனிமையில் இருக்கும் ரேவதியும் தடங்கலின்றி தொடர்பு கொள்ள ஆதித்யா கனவு உலகத்திலேயே இருக்கிறான். பெண்கள் நுண்ணறிவு படைத்தவர்கள் அவனிடம் ஏற்பட்ட மாறுபாட்டை அவனுடைய அம்மா ஜனனி இருவருமே கவனித்து விடுகிறார்கள். 


சந்தேகங்கள் தனித்தனியே தான் மூளையில் சேரும். பின் ஒன்றுடன் ஒன்று பொருத்திக் கொள்ளும். தாள முடியாத ஒரு சமயத்தில் ஜனனி அழுகையோடு தன் சந்தேகத்தை வெளிப்படுத்த அவன் அம்மாவும் தானும் பல நாட்களாக கவனித்து வருவதாக திட்டத் தொடங்குகிறார்கள். எதேச்சையாக மறு நாள் அவர்கள் வீட்டுக்கு வந்த ரேவதி ஆதித்யா தன் அண்ணனைப் போல் இருப்பதால் சகஜமாக பேசியதாகச் சொல்ல ஆதித்யாவின் கனவுக் கோட்டை ஜனனியின் சந்தேக கோட்டையையும் இழுத்துக் கொண்டு தவிடு பொடியாகிறது. சுபம்!!


இதில் நான் சிந்தித்தது.

(1) அலுவலகத்திலோ பிற இடங்களிலோ பெண்களுடன் பழக வாய்ப்பிருந்தாலும் நம் வீட்டுக்கு அருகில் இருக்கும் பெண்களைத் தான் சந்தேகிக்கிறோமோ?

(2) கணவனை இழந்தவளோ பிரிந்தவளோ இருந்தால் நம் சந்தேகம் வலுக்கிறதோ? 

(3)உடை மாற்றம் நடை பார்வையில் ஏற்படும் சிறு தயக்கங்களைக் கூட பெண் கவனித்து விட்டாலும் வெளிப்படையாக கேட்கும் வரை ஆண் தன் மனைவி கவனிக்கவில்லை என்றே நினைக்கிறானோ?

(4) உடனிருக்கும் கணவனின் வீட்டவர்கள் தவறு கண்ட இடத்தில் மனைவிக்கு சார்பாக பேச வேணடும். பேசுகிறார்களா? 

(5) ஒரு பெண்ணுக்கு ஆண் காதலனாக அப்பாவாக அண்ணனாக தம்பியாக மகனாக எப்படி வேண்டுமானாலும் தெரிவான். ஆனால் ஆணுக்கு ஆரம்பத்தில் பெண் தன்னை ரசிக்கும் காதலியாக மட்டுமே தெரிகிறாளோ? 

(6) இயல்பாகவே ஆண் மனம் சின்ன சின்ன சபலங்களுக்கு ஆட்படும். போடுற சண்டையை ஆரம்பத்திலேயே போட்டு முளையிலேயே கிள்ளி விட வேண்டுமோ? 


இந்த காலத்தில் மண வாழ்க்கை பெரும் போராட்டமாக இருக்கும் போது ஒருவர் மேல் ஒருவர் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அபஸ்வரம் தட்டும் போது உடனே வெளிப்படுத்தி முற்றுப் புள்ளி வைத்து விட வேண்டும் என்று சொல்லித் தரும் நல்ல ஒரு நாவல்."எதிர் வீட்டுப் பெண்"

17 September, 2020

 மாய ஏணி


ஆம் இதுவொரு மாய ஏணி. கீழே பதித்து மேலே சாய்க்கப்பட்ட மர ஏணி அல்ல இது மேலிருந்து கீழே தொங்கும் நூலேணி.  இதில் மேலே ஏற ஏற கீழே உள்ள படிகளை உருவினாலும் பாதகமில்லை. ஆம் நாம் ஓரங்களை பற்றி மேலே சென்று கொண்டே இருக்கலாம்.


வாழ்விலும் அது போலத்தான். நாம் பிறரை அறிமுகம் செய்து கொள்கிறோம் என நினைக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. அவர்களால் நமக்கு நடக்க வேண்டிய ஒரு காரியத்துக்காகத் தான் அவர்களை பிரபஞ்சம் நமக்கு அறிமுகம் செய்கிறது. அந்த காரியம் முடிந்ததும் சில நேரங்களில் அவர்கள் நம்மை விட்டு ஒதுங்கி விடலாம் இந்த நூலேணியின் கீழ்ப்படிகள் சுருட்டப்பட்டது போல. சில நேரம் நம்மை அவர்கள் தொடர்ந்தும் வரலாம். அவர்களைக் கொண்டு நம் வாழ்வில் ஒரு படி முன்னேற அவர்கள் உதவுகிறார்கள். அவ்வளவு தான்.


இப்ப சிந்தித்துப் பாருங்கள். ஒரு சிலரை நன்றி மறந்தவர்கள். காரியத்துக்காக என்னை பயன்படுத்திக் கொண்டான் என பழிக்கிறோம். அது தேவையில்லை அல்லவா. அந்த செயல் அவர்களுக்கு நம்மால் ஆக வேண்டுமென்பது பிரபஞ்சத்தின் முடிவு. 


அதைப் போலவே பல துரோகங்கள், கோபங்கள் வருத்தங்கள் போன்றவற்றையும் நாம் சுமந்து கொண்டு மேலேற வேண்டியதில்லை. அது நம் வேகத்தைக் குறைக்கும். அவற்றை அங்கங்கேயே விட்டு வரப் பழகுவோம். இலகுவான மனதோடு மேலேறுவோம். 


ஒரு பிறந்த நாளில்  ஒருவரை Long Live என்று வாழ்த்துவது முன்னெப்போதையும் விட இப்போ வலிமை வாய்ந்தது. ஆம் இப்போ பலருக்கு கண் முன் கண்ணாம்பூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது கொரோனா. நம் அன்புக்குரியவர்களின் நெருங்கிய வட்டத்திலுள்ளவர்களின் மரணம் நம்மை  உலுக்கிக்  கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் Long Live என்னும் வாழ்த்தின் உன்னதம் பெரிது. 


மனதார பிறரை பாராட்டுவோம். வாழ்த்துவோம். சோகங்கள் துக்கங்களை உதறி முன்னேறுவோம். இது நம்மை காக்க வந்திருக்கும் மாய ஏணி. ஏறியவர்கள் மேலே மேலே ஏறிக் கொண்டே இருக்கலாம். அதற்கு வானமே எல்லை. இன்னும் ஏறாதவர்களே! என்ன தயக்கம். உடனே உங்கள் சோகங்கள் துக்கங்களை உதறித் தள்ளி ஏறத் தொடங்குங்கள். 


Ready steady Go

13 September, 2020

#எண்ணச் சிதறல்கள்

 ஒரு பெண் நெல்லையில் வீட்டுக்கே வந்து பார்லர் வேலை எல்லாம் செஞ்சு விடுவா. Mobile parlour. எப்ப நாம ஃப்ரீயோ அப்போ கூப்பிட்டா வந்திடுவா. ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பார்லர் நடத்துவதில் உள்ள பல சிக்கல்களை சொல்லி எனக்கு இது சௌகர்யமா இருக்கும்மா என்பாள். நமக்கும் சௌகர்யம். புறப்பட்டு செல்ல வேண்டாம்.


ஒரு முறை இப்படி அவள் வீட்டுக்கு வந்த போது அவளிடம் கொஞ்சம் பேச முடிந்தது.  

" தொழில் எப்படி இருக்குமா?"

பரவயில்ல மேம். ஆனா ஒரு சிலர் தான் ரொம்ப மோசமாக இருக்காங்க"

ஆம் நானும் நீங்க நினைச்ச மாதிரி தான் நினைச்சேன். 

ஆனால் பிரச்னை அதுவல்ல. திருமண அலங்காரத்துக்கு நான் போனால் உடனே பணம் வாங்க முடியாது. கவரிங் நகைகளை திருப்பிக் கொடுக்கும் போது பணம் தருகிறேன் என்பார்கள். பணமும் வராது. நகையும் வராது. எத்தனை போன் பண்ணினாலும் எடுக்க மாட்டார்கள். 


நகை இவர்கள் திருப்பிக் கொடுத்து விடுவார்கள் என்று நம்பி வேறு ஒருவருக்கு தருவதாக உத்தரவாதம் கொடுத்திருப்பேன். ரொம்ப கஷ்டமாயிடும். 


ஒருவர் பணமும் கொடுக்காமல் இந்த பெண் கேட்கும் போது " பாடி மசாஜ் பண்ணி விடுவீங்களா? " என்று கேட்டிருக்கிறார். இந்த பெண் தைரியமாக " என் கணவர் பண்ணுவார். அனுப்பி வைக்கிறேன்" என்று சொல்லி இருக்கிறாள். 


இது பார்லர் நடத்தும் எல்லாருக்கும் நடப்பது தானே என்கிறீர்களா? நான் ஸ்பெஷலா எழுதறேன்னா பொண்ணு ஸ்பெஷலா இல்லாம இருக்குமா? இவள் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு இலவசமாக அலங்காரம் செய்து விடுகிறாள். இவ்வளவுக்கும் ரொம்ப வசதி படைத்தவளெல்லாம் இல்லை. "கல்யாணம்ங்கிற அந்த ஒரு நாள்ல தான் எல்லோருமே ஹீரோ ஹீரோயின் ஆகிறாங்க. அந்த பிள்ளைங்களுக்கும் ஆசை இருக்கும். வசதி இருக்காது. அதனால் எனக்கு வசதி படுறப்ப அவங்களுக்கு ஃப்ரீயா செஞ்சு விடுவேன். மனதுக்கு நிம்மதியா இருக்கும்" என்பாள். நல்ல மனசு ல்ல.


"வராத பணத்தை விட்டுடலாம் மேடம் ஆனால் நம்மை ஒருவர் ஏமாற்ற விடக் கூடாது. அதனால் எத்தனை முறை என்றாலும் போன் பண்ணி வாங்காம விட மாட்டேன்" என்பாள்.  


#மீள் தான். இன்று என்னமோ அந்த பெண் நினைவு வந்தது. இந்த கொரோனா காலத்தில் அந்த குடும்பம் என்ன செய்திருக்கும். கணவன் மனைவி இருவருமே ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாய் மொபைல் பார்லர் தான் நடத்திக் கொண்டிருந்தார்கள். இப்போ இயல்பு நிலை வந்திருக்கும்.

03 September, 2020

 கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக கிடையிலடைக்கப்பட்ட ஆடுகளாக இருந்தோம். எப்போ சுதந்திரமா திரிவோம்னு பொசமுட்டிக்கிட்டு வந்தோம். ஒரு சிலர் வீட்டுக்குள்ளேயே நல்ல உடை உடுத்தி இருப்பார்கள். ஆனால் அனேகம் பேரின் உடை லுங்கியும் நைட்டியுமாய் தான் இருந்தது. 


அதில் ஒரு சில இளசுகள் இந்த காலத்தை வீணாக்க வேண்டாமென முதல் பிள்ளையோ அடுத்த பிள்ளையோ பெற்றுக் கொள்ள தயாராகி விட்டார்கள். இதில் பிரபலங்களும் அடங்குவார்கள். சில பெருசுகள் வேறு வேலையில்லாமல் குத்துப் பழி வெட்டுப் பழியென சண்டை போட்டுக் கொண்டார்கள். சிலர் விவாகரத்திலும் போய் நின்றார்கள்.

சிலருக்கு இந்த தனிமை விவாகரத்து வரை போய் நின்றவர்களை உணர்ந்து இணைத்திருக்கிறது. சில விவாகரத்தானவர்களையும்!


பல நீலக் காலர் பணியாளர்களை ஆட்டிப் பார்த்திருக்கிறது. இவர்கள் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாய் வாழ்க்கை நடத்தியவர்கள். தன் வருங்காலத்துக்கு சேமிக்க முடியாதவர்கள். திடீரென்று வேலை என்ற ஒன்று இல்லாமல் போனதும் குழந்தை குட்டிகளோடு நடுத் தெருவில் விடப்பட்டது போல் உணர்ந்தார்கள். சிலர் ஆட்டோக்களை காய்கறி கடைகளாக்கினார்கள். சிலர் அங்கங்கே கடன் வாங்கி சமாளித்தார்கள். ஒரு சிலர் செத்தும் போனார்கள். 


இப்படியான கால கட்டத்தில் நாம் இயல்பு வாழ்க்கை முறைக்கு மாற வேண்டிய கட்டாயத்திலுள்ளோம். எல்லா கதவுகளையும் திறந்து விட்டார்கள். சுதந்திரக் காற்றை அனுபவிக்க அல்ல. உள்ளே மூச்சு முட்டிப் போய் விடக் கூடாதேயென. 


நண்பர்களே!ஆபத்து இன்னும் நம்மை விட்டு முழுவதும் விலகாத சூழலில் நாம் கவனமாகவே இருக்க வேண்டி இருக்கிறது. எனக்கு தெரிந்து தவிர்க்க முடியாத, சில நேரங்களில் தவிர்த்திருக்கலாம் என்று கூட இருக்கக் கூடிய சந்தர்ப்பங்களில் விசேஷங்களில் கலந்து கொண்டு கொரோனாவை சிலர் பற்றிக் கொண்டுள்ளார்கள். ஒரு சிலர் இறந்தும் போய் இருக்கிறார்கள். அப்படி இறந்தவர்கள் இன்னும் ஐந்து பத்து ஆண்டுகள் நலமாய் வாழ்ந்திருக்க வேண்டியவர்கள். எனது அவதானப்படி மற்ற கிருமிகளை பாக்டீரியாக்களை விட கொரோனா மிக சுலபமாக மிக நானோ வேகமாக ஒருவரிடமிருந்து மற்றவருக்கு  வந்து விடுகிறது. 


உங்கள் உயிர் இன்று உங்கள் கையில். ஏழு மலை ஏழு கடல் தாண்டிய கிளியின் கைகளிலல்ல. அத்தியாவசயமான நேரங்களில் அத்தியாவசியமான இடங்களுக்கு தக்க பாதுகாப்போடு செல்ல பழகுங்கள். இன்னும் கொஞ்ச காலம் தான். தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கும் வரை. கவனமாக இருங்கள். உயிர் விலை மதிப்பற்றது.


நலமோடு வளமோடு வாழ்வோம்!

31 August, 2020

கொரோனாவுக்கு ஒரு கடிதம்.
அனுப்புநர்
வேற யாரு
நாந்தேன்.

பெறுநர்
கொரோனா
கொள்ளை நோய் பட்டி
உலகம்.

அன்புள்ள கொரோனா

நீ நலமாத்தான் இருப்ப. கேட்க வேண்டாம். ஆனால் நாங்க நல்லாவே இல்லை. எங்கேயோ சைனாவில இந்த வியாதி வந்தப்போ "பாம்பையும் பல்லியையும் தின்னான்க. அவஸ்தப்படட்டும்னு ஜாலியா இருந்தோம். இப்படி உலகம் முழுவதும் டூர் அடிப்பேன்னு தெரியாம போச்சு. வச்சு செய்றியே கொரோனா.

ஒரு நாளைக்கு ஐம்பது அறுபது தடவை கையைக் கழுவி கை ரேகையெல்லாம் அழிஞ்சு போச்சு தெரியுமா? கொரோனா ல இருந்து தப்பிக்க முடியுமானு ஜோசியக்காரன்ட போய் கேட்டா கையப் பார்த்திட்டு ரேகையெல்லாம் எங்கேன்னு கேட்கிறான்.

மாஸ்க்கை போட்டே சுத்தி சுத்தி இப்ப எதிரே யாராவது மாஸ்க் போடாம வந்தா அடையாளமே தெரியிறதில்லை தெரியுமா? முன்னால ஒரு காலத்தில சேலைக்கு சம்பந்தமில்லாத ப்ளவுஸை போட்டு யார் கேட்டாலும் "இப்ப இது தாங்க ஃபேஷன்னு டபாய்ச்சுகிட்டு இருந்தேன். இப்போ " என்ன டிரஸ்சுக்கும் மாஸ்க்குக்கும் சம்பந்தமே இல்லை" கிறாங்க. என்ன பதில் சொன்னாலும் ஏமாற மாட்டேங்கிறாங்க. தெரியுமா?

இதில சிலர் "என்ன ஸ்கை ப்ளூ டிரஸ்சுக்கு நேவி ப்ளூ மாஸ்க் போட்டிருக்கன்னு கேட்டு கொல்றாங்க. உன்னை பாம்புன்னு நினைச்சு பயப்படுறதா பழுதுன்னு நினைச்சு தாண்டுறதான்னு ஒரே குழப்பமா இருக்கு.

விளக்கு ஏத்தி மணி அடிச்சு டான்ஸ் ஆடி பாட்டுப் பாடி எல்லாம் பார்த்தாச்சு. நீ எதுக்கும் ஏமாறுற மாதிரி தெரியல. நாலு மக்களை பார்த்து நாளு பல ஆச்சு. (எல்லாம் தெரியும் தெரியும் னு உன் மைன்ட் வாய்ஸ் கேட்குது.)

26870 பேர் இருக்கிற மத்யமர்ல அத்தனை பேரையும் விட்டுப்புட்டு உனக்கு கடிதம் எழுதுறேன். முதல்ல போட மாட்டேன்னு சொன்னவங்க கூட கொரோனாவை எதுக்கு பகைச்சுகிட்டுனு நினைச்சாங்களோ என்னமோ போடச் சொல்லிட்டாங்க.

நேற்று உன் மேல உள்ள கொள்ள காதல்ல எழுதினதைப் போல இப்போ எழுத முடியல. இருந்தாலும் என் காதலைப் புரிஞ்சுகிட்டு
கோ  ஃபாஸ்ட் கொரோனா
வேகம் போ(ங்க) கொரோனா
பேக ஹோகு கொரோனா
வேகம் போய்க்கோ கொரோனா
வேகங்க வெள்ளான்டி கொரோனா
ஜல்தி ஜாவோ கொரோனா.

இப்படிக்கு





 இப்படிப்பட்டவர்களும் இருப்பதால் தான் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது உலகம்.


Avesh Vhichker . இவர் 25 வயது IT professional. அவர் ஒரு நாள் மாலை ஆறு மணிக்கு ஜிம்மிலிருந்து திரும்பும் போது தன் அபார்ட்மென்ட்டின் தூண்களில் லேசான விரிசல் தெரிகிறது. உறுத்துகிறது. அது ஒரு ஐந்து மாடிக் கட்டடம். ஆனால் சீரியஸா நினைக்காம வீட்டுக்கு போயிட்டார். 


அவர் அமர்ந்து டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த இடத்துக்கு பக்கத்தில் பிரிட்ஜ் இருந்திருக்கிறது. திடீரென்று அந்த பிரிட்ஜில் சின்ன அசைவு தெரிந்திருக்கிறது. அம்மாவிடம் ஏதும் வித்தியாசம் தெரிந்ததா எனக் கேட்டிருக்கிறார். அவர்கள் உணரவில்லை.


ஆனால் இவருக்கு தான் மாலையில் பார்த்த தூணின் விரிசல் ஞாபகம் வந்ததும் ஏதோ விபரீதம் நடக்க போகிறது என உணர்ந்து அவசரமாய் வீட்டிலுள்ளவர்களை அழைத்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார். இறங்கும் போது ஒவ்வொரு வீடாக தட்டி விஷயம் சொல்லி அனைவரையும் வெளியே வரச் சொல்லி 20பேருக்கு மேலாக காப்பாற்றி இருக்கிறார்.


அவர் பயந்தது போலவே கொஞ்ச நேரத்தில் மொத்த கட்டடமும் மண்ணோடு மண்ணாய். சுமார் 16 பேர் இறந்து போனார்கள். அந்த வீடுகளின் மொத்த எதிர்காலமும் மண்ணுக்குள் புதைந்தது. 


ஒரு எலக்ட்ரீஷியன் Naveed Duste அந்த கட்டடத்துக்கு வேலை செய்ய வந்தவர் தனக்குத் தெரிந்த குடும்பம் அங்கே இருப்பது ஞாபகம் வர போய் காப்பாற்றி இருக்கிறார். திரும்பி வரும் போது அவர் இரு கால்களிலும் அடிபட்டு மருத்துவமனையில் கவலைக்கிடமாய்.


மற்றுமொரு தெய்வம் Kishore Lokhande. இவர் அங்கே இடிந்து கிடந்த கட்டட பாகங்களை நீக்கும் பணியில் இருந்தார். அவர் தான் அதற்கிடையே சிக்கிக் கொண்டிருந்த மனிதர்களை/மனித உடல்களை மீட்க உதவி உள்ளார். 24வயது இளைஞன். 36மணி நேரம் தொடர்சியாக அந்த JCB மெஷினில் அமர்ந்து உழைத்திருக்கிறார். மெஷினில் ஏறிய 26மணி நேரங்களுக்குப் பின் தான் முதன் முறையாக கீழே இறங்கி இருக்கிறார்.  நாலைந்து முறை இயற்கையின் அழைப்புக்கு இறங்கியது தவிர மீதி நேரமெல்லாம் மெஷினிலேயே. இவரது உதவியால் ஒரு நாலு வயதுக் குழந்தை உயிரோடு மீட்கப்பட்டிருக்கிறது.


மறு நாள் அங்கு குடி இருந்தவர்கள் அந்த கட்டட சிக்கல்களுக்கு நடுவே தன் வீட்டில் வைத்திருந்த பாஸ்போர்ட், ஆதார், பாங்க் பாஸ்புக் இன்னும் எத்தனை விலை உயர்ந்த பொருட்கள் நம் வீடுகளில் வைத்திருப்போம். அதில் ஏதாவது கிடைக்காதா என குப்பையைக் கிளரும் கோழிகளாய் சுற்றி வந்தது பரிதாபமாய் இருந்திருக்கிறது. ஒரு நிமிடத்தில் போட்டிருக்கும் உடைகள் தவிர வேறெதுவும் இல்லாதவர்களாகிப் போனார்கள்.


இது நடந்த அபார்ட்மென்ட்டின் பெயர் "Tarique Garden" New Mumbai. இந்த தெய்வங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள். இவர்களால் தான் இன்னும் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது.

07 August, 2020

 "Gently falls the bakula"

This book was written by Sudha Murthy. Yes she is wife of Infosys N.S. Narayana Murthy. This is the first book I am reading of this author. Wonderful love story.

"When you are mine your loan is also mine. It comes as a package. I cannot say I want only my husband. His joys and difficulties are also acceptable to me" 

இவ்வளவு அருமையான பெண் தான் மனைவியாக வருகிறாள். பள்ளியில் மிகச் சிறப்பாக படிக்கும் மாணவன் மாணவி  ஸ்ரீகாந்தும் ஸ்ரீமதியும் காதலித்து மணமுடிக்கிறார்கள். அவனை மணமுடிக்க முடிவு செய்யும் போதே அவனுடைய கடன்களையும் சேர்த்தே தான் ஏற்றுக் கொண்டதாக சொல்கிறாள்.

"He thought she was like the lady who carries a torch and removes all the obstacles on the road to success for her husband. He had taken her for granted. He had a rare diamond in his hand but he was searching for a worthless glass of achievement."

ஆணின் இந்த taken for granted மனநிலை தொடரும் போது தான் ஒரு பெண் தன் மனநிலையை மாற்றிக் கொள்கிறாள்.

"Shri asked a simple question . Which is more important. The kalinga war which your emperor Ashoka fought or present day terrorism which we have to stop"

அவள் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி. அவன் இரண்டாவது. தன் ஆர்வத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சரித்திரம் எடுத்து படிக்கிறாள். அவன் கம்ப்யூட்டர் படித்த பெரிய வேலைக்கு போகிறான். அது தெரிந்தும் அவள் ஆர்வத்தை தாழ்வாக பேசுகிறான். யார் என்று தெரியாத ஒருவனைத் திருமணம் செய்து இது நடக்கும் போது பெண் மனம் அடிபடுவதில்லை. 

Business has taught him to insult a person. Yoy don't need to attack him or her directly. One can do that instead by attacking what that person admires or respects. In company's language it is "Track report"

ஆனால் அவள் அதைப் புரிந்து கொள்கிறாள். "If you can't understand my silence then you will not understand my words" என்று சொல்கிறாள். என் மௌனத்தை புரிந்து கொள்ளாத உன்னால் நான் அதை வெளிப்படுத்தினாலும் என் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாது என்கிறாள்.

Nothing is free in life. In achieving your position you have lost your shrimathi. 

அவள் புத்திசாலியாகவும் பணிவு கொண்டவளாகவும் இருந்ததினாலேயே அவன அவளை அலட்சியப்படுத்தி விட்டான். அவள் கோபமாகவும் தனக்கு வேண்டியதை அழுத்தமாக கேட்டுப் பெருபவளாகவும் இருந்தால் அவன் இவ்வளவு அலட்சியப்படுத்தி இருக்க மாட்டான். 

முடிவு ரொம்ப யதார்த்தமாக இருக்கிறது. இன்றைய திருமணங்கள் பலவும் ஏன் தோல்வி அடைகின்றன என்பதன் காரணம் வெகு தெளிவாக புரிகிறது. கண்டிப்பாக வாசியுங்கள். நல்ல ஒரு எழுத்தாளர் அறிமுகமானதில் மகிழ்ச்சி.



06 July, 2020

கிண்டிலில் வெங்கட் நாகராஜ் என்பவர் எழுதிய "ஏழு சகோதரிகள் (பாகம் 1) வாசித்தேன். வட கிழக்கு மாநிலங்கள் ஏழை ஏழு சகோதரிகளாக உருவகப்படுத்தி இருக்கிறார்.  முதல் பாகத்தில் மணிப்பூரையும் நாகாலாந்தையும் பற்றி சொல்லி இருக்கிறார்.

முதல் சகோதரி மணிப்பூர். மணிப்பூரில் பிஷ்ணுபூர் மாவட்டத்தில் பதினைந்தாம் நூற்றாண்டு கோயில் ஒன்று இருக்கிறது. செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட முதல் கோயிலாம்.

மணிப்பூர் ராஜாவையும் மக்களையும் அவமதிக்கும் விதமாக பீர் திகேந்திர ஜீத் சிங் மற்றும் தளபதி தங்கல் ஆகியோரை தூக்கிலிட்ட இடத்தில் ஆங்கிலேயர்கள் 8000 பெண்களை விதவைக் கோலத்தில் நிற்க வைத்து தூக்கிலிட்டார்களாம்.
அந்த இடத்தில் உயிரிழந்த தியாகிகளுக்காக ஒரு ஸ்தூபி எழுப்பி இருக்கிறார்களாம். மூன்று தூண்கள் கீழிருந்து மேல் நோக்கிச் சென்று மேலே சேர்கிறதாம். அங்கே மணிப்பூர் நகரச் சின்னமான டிராகன்கள் மூன்று வைத்திருக்கிறார்கள்களாம்.

இரண்டாவது சகோதரி நாகாலாந்து. இங்கே நாகாலாந்து பழங்குடி மக்கள் தவிர பல பீஹாரிகளும் உத்திரப் பிரதேச மக்களும் இருக்கிறார்கள். கூலி வேலை செய்பவர்கள். ஒரு நீண்ட குச்சியில் இரண்டு பக்கமும் தகர டின்னில் தண்ணீர் கொண்டு வரும் வேலையும் செய்கிறார்கள். தண்ணீருக்கு இங்கே பஞ்சம்.

தலைநகரமான கொஹிமாவில் 16 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும்  மிகப் பெரிய மரச்சிலுவை அமைத்த சமயத்தில் ஆசியப் பகுதியிலேயே பெரிதாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
நாகாலாந்து மக்களும் சீனர்களைப் போலவே வாத்து வெள்ளெலி புழுக்கள் நத்தை தேனீக்கள் எதையும் விடுவதில்லையாம். எல்லாம் உண்கிறார்களாம்.

ஏழு சகோதரி மாநிலங்களில் எல்லா மாநிலங்களிலுமே பெண்கள் தான் வேலை செய்கிறார்கள். வேலை செய்யும் ஆண்களைப் பார்ப்பது கடினமாக இருக்கின்றது. பெண்கள் தான் இங்கே குடும்பத்தினை தாங்குகின்ற தூண்கள். வீட்டு வேலைகளையும் முடித்து விட்டு கைக் குழந்தைகளை முதுகில் கட்டிக்கொண்டு கடைகளுக்கு வியாபாரம் செய்ய வந்து விடுகிறார்கள்.

நாகாலாந்து மக்களுக்கு ஒரு பழக்கம் இருந்ததாம். தன் எதிரிகளைக் கொன்று மண்டை ஓடுகளை சேகரித்து வருவார்களாம். ஒவ்வொரு முறை தலையைக் கொய்ததும் தன் உடலில் பச்சை குத்திக்  கொள்வார்களாம். அது அவர்கள் வீரத்துக்கு அடையாளமாக இருக்குமாம்.

மற்ற சகோதரிகளையும் அறிந்து கொள்ள ஆவலாய் காத்திருக்கிறேன்





17 June, 2020

"பாறை இடுக்குகளில் வளர்வது தாவரமல்ல தன்னம்பிக்கை"  அதி காலை நேர வாசிப்புகளில் இப்படி சில விதை நெல் கிடைக்கும். மற்ற நேரங்களிலும் இருக்குமாய் தான் இருக்கும். நம் கண்களில் படுவதில்லை.

இந்த தன்னம்பிக்கை தான் இன்று அதிக நாள் பயன்படுத்தப்படாத சுரப்பி போல பழுதடைந்து கிடக்கிறது. ஒரு இருபதாண்டுகளுக்கு முன் கூட நடக்க கஷ்டமான ஒரு காரியத்தை சேலன்ஜ் ஆக எடுத்துக் கொண்டு நடத்தி முடிக்கும் பழக்கம் நம்மிடையே இருந்தது. பல காதல் திருமணங்கள் காதலை விட எதிர்ப்பு கூடக் கூட இருகி நடந்ததாகவே இருந்திருக்கின்றன.

"காதல் போயின் சாதல்" என்பது மறைந்து "காதல் போயின் காதல் போயின் இன்னுமொரு காதல்" என வந்தது மரணத்தை நிறுத்திய வழியில் வேண்டுமானால் நல்லதாய் இருந்திருக்கலாமே ஒழிய முயற்சியை பின்னடையச் செய்து விட்டது.

இன்று அது இன்னும் கொஞ்சம் அதிகரித்து நம் இயல்பான வாழ்க்கை முறை சிறிது மாறினாலே "எல்லாம் முடிஞ்சு போச்சு " என ஒப்பாரி வைக்கிறது. ஆதி மனிதனின் போராட்டத்தை நினைத்துப் பார்த்தால் நாம் எவ்வளவு வளர்ந்து வந்து நிற்கிறோம் என்பது தெரியும்.

அதற்குள் கடைசி மனிதனைப் பற்றி அங்கங்கே கற்பனைகள். ஒரு எழுபது வயது உள்ளவரைக் கேட்டுப் பாருங்கள் இது வரை எத்தனை உலக அழிவு செய்திகளைக் கடந்து வந்திருக்கிறார் என.இயேசுநாதரின் இரு விரல்கள் உயர்ந்திருப்பதை வைத்து உலகம் இரண்டாயிரம் ஆண்டில் அழிந்து விடும் என்றார்கள்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என் கல்லூரித்  தோழியிடம் சொன்னது " அப்போ என் பிள்ளைக்கு இருபது  வயதை நெருங்குமே. நான் என்ன செய்வேன்" இதைச் சொல்லும் போது எனக்கு திருமணமே ஆகவில்லை. இன்று அந்த மகள் நாற்பதை நெருங்கிய வயதில் தன் பிள்ளையின் வயதை எண்ணி கலங்குகிறாள். இது தான் வாழ்க்கை. இன்னும் பல ஆண்டுகள் கழித்து  என் பேரன் தன் பிள்ளையை நினைத்து கலங்குவான்.

சில டீன் ஏஜ் பிள்ளைகள் தன் பெற்றோர் இருவரும் கொரோனாவில் இறந்து போனால் நாம் என்ன ஆவோம் என கலங்குகிறார்களாம். நோயை விட நோய் வந்து விடுமோ என்ற பயம் தான் மிகப் பெரிய வியாதி.  பயம் தவிர்ப்போம். வருவதை தவிர்க்க திராணியற்ற ஒரு கட்டத்தில்,  இருப்பதை கொண்டாடுவது தானே புத்திசாலித்தனம்.

இப்பொழுது முதல் வரியையே மீண்டும் சொல்கிறேன்.
"பாறை இடுக்குகளில் வளர்வது தாவரமல்ல தன்னம்பிக்கை"

நம்பிக்கையோடு ஒவ்வொரு நாளும் கடப்போம். நம் அத்தனை பேரின் ஒட்டு மொத்த நம்பிக்கை இந்த உலகை மீண்டும் பூத்துக் குலுங்கச் செய்யும்.

15 June, 2020

மன அழுத்தம்.
கொஞ்சம்  நீளமான பதிவு தான். தவறாமல் படியுங்கள். இப்பொழுதோ எப்பொழுதோ உதவலாம்.

இந்த தலைப்பில் கொஞ்ச நாளாவே எழுதவா வேணாவான்னு யோசிச்சுகிட்டே இருந்தேன். சுஷாந்த்தின் மரணம் ரொம்பவே அசைத்து விட்டது. அங்கங்கே நாட்டாமைகளின் தீர்ப்பு வேறு.

நான் இயல்பில் தைரியமான பெண் தான். ஆண்களுடன் ஒற்றை பெண்ணாக யூனியன் மீட்டிங்கில் இருப்பதெல்லாம் கஷ்டமாவே தோணினதில்லை. அலுவலக மீட்டிங்குகளில் எப்பொழுதும் முதல் வரிசை தான். ஒரு கருத்தை எடுத்துச் சொல்ல பிறர் தயங்கினாலும் நான் குரல் கொடுப்பேன்.

எனக்கு பயம் என்றால் என்ன என்று காட்டியது டிப்ரஷன். எனக்கு காலில் ஒரு தோல் பிரச்னை இருந்தது. அதாவது பித்த வெடிப்பு போல் மேல் பாதத்தில். அலுவலகப் பணிகளில் ஸ்ட்ரெஸ் கூடும் போது அது அதிகரிக்கும். வலி உயிர் போகும். காலையில் இயல்பாக அலுவலகம் செல்வேன். இரவு வீடு திரும்பும் போது ஒரு மனவலிமையோடு காரை ஓட்டிக் கொண்டு வந்து விடுவேன்.  ஆனால் சுவரைப் பிடித்த படி தான் நடக்க முடியும்.

அப்பொழுது ஒரு மருத்துவர் ஸ்ட்ரெஸ்சுக்கு மருந்து கொடுத்தார். விடாமல் தினமும் மருந்து எடுக்க வேண்டும் என்று சொல்லித் தான் கொடுத்தார். அந்த மாத்திரை எடுத்தால் தூக்க கலக்கமாக இருக்கும். சில நாள் வேலை அதிகமாக இருக்கும் போது எடுக்க மாட்டேன். மீதி நாள் எடுப்பேன். இப்படி மாற்றி மாற்றி எடுத்ததில் டிப்ரஷனை நானே வலிய வரவழைத்துக் கொண்டேன்.

உடை உடுத்துவதில் எனக்கு அதிக ஆர்வம். திடீரென எனக்கு உடைகளைக் கண்டாலே வெறுப்பானது. எதற்கு இத்தனை எடுத்து வைத்திருக்கிறோம் என்று என் மேலேயே கோபம் வந்தது. புத்தகங்கள் படிப்பது உயிர் மூச்சு. ஆனால் ஒரு பக்கம் கூட தொடர்ச்சியாக படிக்க முடியாமல் போனது. இவை ஆரம்ப கால சிம்ப்டம்ஸ். என் தோழி இதைச் சொல்லும் போதே நமக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் திடீர்னு பிடிக்காம போனால் அது டிப்ரஷனின் சிம்ப்டம் ஆச்சே என்றாள். நான் அதை பெரிதாய் எடுத்துக் கொள்ளவில்லை.

நாளாக நாளாக நான் அது வரை அறிந்திராத பயம் என்னை ஆட்டியது. காலையில் எழுந்ததுமே மனதுக்குள் ஒரு படபடப்பு. எந்த வேலையிலும் ஈடுபாடு இன்மை. மீட்டிங்குகளில் கடைசி வரிசை. எனது கருத்துகளை அழுத்தம் திருத்தமாக எடுத்து வைப்பவள் குழப்பவாதி ஆனேன். இப்ப இந்த வேலை செய்யலாம்னு சொல்றீங்களா செய்யக் கூடாதுன்னு சொல்றீங்களான்னு மேலதிகாரி ஒரு முறை கேட்டார். அந்த அளவுக்கு பட்டி மன்றம் நடத்தி இருக்கிறேன்.

யோசித்து பார்த்தேன். நாம் இனி வேலையில் இருப்பது சரியில்லை என முடிவெடுத்தேன். அப்போது வரைக்கும் மாத்திரைகளை எடுப்பதும் விடுப்பதும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது காரணம் அது தான் என்று அறியாமலே. பல நல்ல உள்ளங்கள் நல்ல ஒரு வேலைக்காரியை இழக்க விரும்பாமல் லாங் லீவில் போய் சரி செய்து கூட வரச் சொன்னார்கள். எனக்கு ஓய்வு பெற  நான்கு ஆண்டுகள் இருந்தன. ஆனால் போதும் என்று முடிவெடுத்து ஓய்வு பெற்றேன். கடைசி நாள் அன்று கூட நான்  விண்ணப்பத்தை வாபஸ் பெற்று விடுவேன் என்று எதிர்பார்த்தார்கள். அந்த அளவுக்கு நான் வொர்க்கஹாலிக்.

ஆனால் ஒன்று ஒருவருக்கு டிப்ரஷன் வந்து விட்டால் எவ்வளவு பெரிய தைரியசாலியாக இருந்தாலும் தானே தனியாய் அதிலிருந்து வெளியேற முடியாது. ஆரம்ப காலங்களில் வேணுமானால் பிரார்த்தனை , கவுன்சிலிங், யோகா போன்றவை உதவலாம். குடும்பத்தினரின் ஆதரவு இருந்ததால் என்னால் வெளியேற முடிந்தது. என் மகள் சொல்வாள் " அம்மா நம் குடும்பத்தினரின் ஆணி வேர் நீ. நீ இவ்வளவு கலங்கி எங்களிடம் பேசினால் எங்கள் ஒருவராலும் வேலை செய்ய முடியவில்லை. தைரியமா இரும்மா" என்பாள்.

நரக நேரமது. ஆனால் சும்மா சொல்லக் கூடாது. என் கணவர். அவ்வளவு ஆதரவு. கடைசியில் ரிடயர்ட்மென்ட்டுக்கு ஒரு மாதம் முன்பு லீவு எடுத்து இருந்தேன். கிட்டத்தட்ட 35ஆண்டுகள் உடம்பு சரியில்லை என்று கூட ஒரு நாளும் சமைக்காமல் இருந்ததில்லை. ஆனால் அந்த ஒரு மாதமும் ஹோட்டல் சாப்பாடு தான். வி.ஆர்.எஸ் ஃபார்ம் நிரப்ப கான்சன்டிரேஷனே கிடைக்க மாட்டேங்குது. அழுதேன். இனம் புரியாத பயம்.

ஒரு வெளியூர் தோழியிடம் இந்த நிலைமைப் பற்றி சொன்னேன். அவள் என் மகளிடம் உடனே போனில் பேசி இருக்கிறாள். "எனக்கு உங்க அம்மாவை சிறு பிள்ளையிலிருந்து தெரியும். அவள் இயல்பு இது இல்லை. உடனடியாக டாக்டரிடம் கூட்டுச் செல்லுங்கள்" என்று அவள் மகளைப் பற்றி சொல்லி இருக்கிறார். மகள் தஞ்சையில் மன நல மருத்துவர்.

டிரீட்மென்ட் எடுத்துக் கொண்டேன். சிலர் மன நலத்துக்கு எடுத்துக் கொள்ளும் மருந்துகள் வாழ்நாள் முழுதும் அவசியப்படும் என்பார்கள். இல்லை இரண்டு ஆண்டுகளில் நிறுத்தி விட்டார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரே விஷயம்  மருந்துகளின் வீரியத்தை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டி கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து நிறுத்தினார்கள்.

1  மன நல பாதிப்பு பல காரணங்களால் வரலாம். அதைப் பைத்தியம் என்று முடிவு பண்ணுவதும் விமர்சிப்பதும் மஹா தவறு. மூளை ஒரு எலக்ட்ரானிக் டிவைஸ் போல. யாருக்கும் எந்த நேரமும் அதன் செயல்பாடு சிக்கலுக்குள்ளாகலாம்.

2 எவ்வளவு தைரியம் மிகுந்தவராய் இருந்தாலும் குடும்பத்தினர் உதவினால் ஒழிய அவர்கள் அதிலிருந்து வெளியே வர முடியாது.

3 மருத்துவர்  தரும் மருந்துகளை  நாமாக அதிகப்படுத்துவதோ குறைப்பதோ கூடாது.

4 இந்த பாதிப்பு பயத்தை உண்டாக்குவது போல அதிக கோபத்தையும் உண்டாக்கலாம். இந்த நேரங்களில் இவர்கள் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தமில்லை.

5 கொண்டாட்டங்கள் அற்ற வாழ்க்கை, வேலை பறிப்பு, பழகி இராத வறுமை, தவறான மருந்து , பரம்பரை ஜீன் என மன உளைச்சல் வர காரணம் எதுவாகவும் இருக்கலாம். ஏதென்று ஆராயாமல் உடன் இருப்பவர்கள் உதவிக்கரம் நீட்டுங்கள். மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.

இவை எல்லாம் ஒரு பாதிக்கப்பட்டவரே சொல்லும் போது நம்பிக்கை வரும். அதனால் சொல்ல முடிவெடுத்தேன்.

இப்பொழுது தான் உலகமே உள்ளங்கையில் இருக்கிறதே . அத்தனை பேருமே உடன் இருப்பவர் தான். உயிர்கள் அத்தனை மலிவானவையல்ல. எத்தனையோ கண்டு பிடித்தாலும் இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் இருப்பது உயிரைப் படைப்பது ஒன்று தான்.

நம்பிக்கையோடிருந்து பிறருக்கு நம்பிக்கை ஊட்டுவோம்.

11 June, 2020


 "ஊதா நிற உப்பு பொம்மைகள்" எழுதியவர் கார்த்திகேயன் செங்கமலை. புத்கத்தின் பெயரே கவித்துவமாய் இருக்கிறதல்லவா? 

இதில் இரண்டு கதைகள். ஒன்று " ஊதா நிற உப்பு பொம்மைகள்" மிகச் சிறப்பான கதை. குடும்ப பாரம் உள் நாட்டில் பணி புரிந்து குறைக்க முடியாது என்பதால் வெளி நாட்டில் சென்று பணி புரியும் ஒருவன் காலின் மேல் ஒரு வண்டி ஏறி விடுகிறது. வண்டியின் சொந்தக்காரன் இழப்பீடு மருத்துவ செலவும் கொடுத்தும் அது இவனை வந்து சேரவில்லை. இடைத்தரகரான ஒரு மலையாளி அதை ஸ்வாகா பண்ண நினைக்கும் போது அங்குள்ள ஒருவரின் துணையோடு அதை பெறுகிறான். வெளிநாட்டில் உழைத்தது போதும் எனத் திரும்பி வரும் போது இவனைப் போலவே வேறொருவன் நம்பிக்கையோடு விமானம் ஏறுகிறான். 


இரண்டாவது " பச்சை நிற முத்துக்கள்" குமரப்பன் ஒரு டெல்டா மாவட்ட தென்னை விவசாயி. இரண்டு ஏக்கர் நிலத்தில் 90 தென்னை மரங்களை வைத்து வரும் வருமானத்தில் தன் மகனை பொறியியல் படிக்க வைத்து மென் பொருள் நிறுவனத்தில் வேலையிலும் அமர்த்தி விட்டார்.

கஜா புயலின் தாக்கத்தால் மொத்தமும் பறி போனதில் மனம் உடைந்து மகன் வீட்டில் வந்து இருக்கிறார். செம்பியன் தன் குடும்பத்தோடு இவர் தென்னந் தோப்பில் ஒரு குடிசையில் தங்கி வேலைகளைப் பார்த்து வருகிறான். செம்பியன் மகள் அறிவுக்கரசி. குமரப்பனுக்கு தென்னை அழிந்ததை விட அறிவுக்கரசி மீது தென்னை விழுந்து அவள் தலை நசுங்கி இறந்ததைத் தான் தாங்க முடியவில்லை. 

செம்பியன் தான் சேர்த்து வைத்திருந்த 2இலட்சம் பணத்தை குமரப்பனிடம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவச் சொல்கிறான். 

குமரப்பன் மகன் கதிரவன் தன் கைப்பேசியில் தான் உருவாக்கிய செயலியைத் திறந்து கஜா புயலுக்கு இது வரை வந்த நன்கொடை எவ்வளவு எனப் பார்ப்பதாக கதை முடிகிறது.

15 May, 2020

 இந்த நிகழ்வில் நான் என்பது எங்க அம்மா!!

காலை ஐந்து மணிக்கே எழுந்து ஒரு சின்ன பக்கெட்டில் நீரெடுத்து வழக்கம் போல் வாசல் தெளித்து திரும்பும் போது தலை சுற்றி அப்படியே படிகளில் விழுகிறேன். கோலம் போடவில்லையே என்ற எண்ணம் வருகிறது. படியிலேயே இப்படி விழுந்து கிடக்கிறோமே எழுந்து உள்ளே போக வேண்டுமே என்று தோன்றுகிறது. அசைய முடியவில்லை. உள்ளே என் மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள். அப்படியே கிடக்கிறேன்.

கொஞ்ச நேரத்தில் எங்கள் எதிர் வீட்டுப் பெண் வருகிறாள். "அய்யோ டீச்சர்" என்ற படி உள்ளே போய் என் மகளை எழுப்பி அழைத்து வருகிறாள். "வாசல் தெளிச்ச உடனே கதவை மூடிருவாங்களே ரொம்ப நேரமா கதவு திறந்து கிடக்குதேன்னு வந்தேன்" என்று அவள் சொல்வது கேட்கிறது. பதில் சொல்ல முடியவில்லை.

அவசர அவசரமாய் சில போன் கால்கள் செய்கிறாள் என் மகள். அவள் பதற்றம் என்னை மேலும் பதற வைக்கிறது. என் பிள்ளுகளுக்கு ஒரு தொல்லையும் கொடுக்க கூடாது என்றல்லவா இத்தனை நாளுமிருந்தேன்.  ஏற்கனவே மூன்றாண்டுகளுக்கு முன் இதே போல உடம்பு முடியாமல் போனதால டிரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்த  டாக்டரிடம் அழைத்துப் போனார்கள்.

ஒரு நாளில் நினைவு வந்தது. பிள்ளைகள் எல்லோரும் இருந்தார்கள். அத்தனை பேரும் வேலையை விட்டுட்டு வந்து நிற்கிறார்களே என்று இருந்தது. சொல்ல முடியவில்லை. மறு நாள் ஆக்ஸிடண்ட் ஆன ஒரு பையனை ICUவில் என் பக்கத்து பெட்டில் போட்டார்கள். இளைஞன். தலையிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. பாவம் பிள்ள னு மனசுக்குள் கருணை பொங்கியது.

அப்போ ஒரு நர்ஸ் வந்து என் பெண்ணிடம் "அக்கா!அம்மாவை சேரில் வைத்து கொஞ்ச நேரம் வெளியே வச்சிருங்க. அந்த பையனுக்கு ஆப்பரேஷன் பண்ணனும். அதுக்கு தலையை மொட்டை அடிக்கணும். அம்மா பார்க்காம இருந்தா நல்லது. " னு சொன்னாள்.

நர்ஸ் உதவியோட என்னை சேரில் உட்கார வைத்து நகர்த்தி கொண்டு போய் வாசல் பக்கம் வைத்தாள் என் மகள். வாசலில் இருந்த கண்ணாடியில் என் உருவம் தெரிந்தது. லேசாக ஒரு புறம் போயிருந்த வாயை நேராக்க முயன்றேன். முடியவில்லை. அதை கையால் சரி செய்ய முயன்றேன். கை அசைக்க முடியவில்லை. "அய்யோ! எனக்கு பக்க வாதமா? அதனால் தான் சேரில் என்னால் தானாக உட்கார முடியவில்லைய? கடைசி வரை நடமாட்டத்திலேயே இருக்க வேண்டும் என நினைத்தேனே! என் பிள்ளைகளுக்கு பாரமாய் இருக்கப் போகிறேனா? "

என் உடலில் தீ வைத்தது போல் சூடு பரவுகிறது. உடல் அனலாய் கொதிக்க தொடங்குகிறது. என்னை அழைத்து போய் கட்டிலில் படுக்க வைக்கிறார்கள். கண்களை இறுக்க மூடிக் கொள்கிறேன். அதன் பின் ஓரிரு முறை மட்டுமே கண்களைத் திறக்கிறேன். என்னைச் சுற்றி எப்போதும் யாராவது இருந்து கொண்டே இருக்கிறார்கள். எனக்கு மிகவும் பிடித்த பேத்திகள் பாட்டி பாட்டி என்கிறார்கள். அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு எப்பொழுதும் போல் "பெஸ்ட் ஆஃப் லக்" சொல்ல மனம் துடிக்கிறது. என் பேத்திகளின் தோழிகள் எனக்கு வைத்திருக்கும் பெயரே "பெஸ்ட் ஆஃப் லக் பாட்டி"

கொஞ்சம் தள்ளி என் கொள்ளுப் பேரன்கள். அவர்களைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சத் தோன்றுகிறது. கட்டிலை விட்டு கையை அசைக்க முடியவில்லை. கண்களை மூடிக் கொள்கிறேன். கண்களின் ஓரமாக கண்ணீர் வழிகிறது. யாரோ துடைக்கிறார்கள். என் மனதுக்குள் போராட்டமாக இருக்கிறது. என் விழிகளில் வழியும் கண்ணீரைக் கூட துடைக்க முடியவில்லையே மற்ற காரியங்களை எப்படி செய்யப் போகிறேன்.  என் பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கப் போகிறேனா? கூடாது. என் கண்களை இறுக்க மூடிக் கொள்கிறேன். எத்தனை நாட்கள் அப்படி இருந்தேன் எனத் தெரியாது. "பத்து நாட்களா இப்படியே தான் இருக்காங்கன்னு யாரோ சொல்வது கேட்கிறது. பத்து நாட்கள் இப்படியே இருந்து விட்டேனா? அப்ப இப்படியே தொடர்ந்திட வேண்டியது தான். இனி நான் இருந்து என்ன பயன். மண்ணுக்கும் பெண்களுக்கும் பாரமாய்.

திடீரென்று எனக்கு மூச்சு விட சிரமமாய் இருக்கிறது. எல்லோரும் பரபரப்பாய் அங்கும் இங்கும் போவது தெரிகிறது. எனக்கு இருக்கும் ஒரே ஒரு அன்பு பேரனின் திருமணம் பார்க்காம போகிறேனே. இன்னும் ஒரு பேத்தி இருக்கிறாளே. அவள் திருமணத்தை கண் குளிர பார்க்கணுமே. அவர்கள் பெற்றுத் தரும் குழந்தைகளை தொட்டுண் தூக்கணுமே. சிந்தனை ஓடிக் கொண்டிருக்கும் போதே என் பெரிய மகள் என் தலையை தடவிய படி சொல்வது கேட்கிறது. "அம்மா கவலைப்படாதீங்க. நீங்க இருந்து செய்ய வேண்டிய எல்லாம் நான் பார்த்துக் கொள்வேன்." என் மனசு கொஞ்சம் ஆசுவாசப்படுகிறது.

அப்பொழுது  "பாட் டி" இது என் பேரனின் குரலல்லவா? வெளிநாட்டில் இருந்தானே வந்து விட்டானா? பார்க்க முயல்கிறேன். கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் அவன் ஏதோ பேசுகிறான் கேட்கிறது. என் மகள் " ஃபோனை சரியா பிடிங்க" என்பது கேட்கிறது. ஓ! ஃபோனில் பேசுகிறானா? என் விழியின் கருமணிகள் வேக வேகளாக அங்குமிங்கும் அசைகின்றன. சில நொடிகளில் நின்று விட்டது.

ஓ! நான் இறந்து விட்டேன். என் வாரிசுகளை பார்க்க முடியாது. ஆனாலும் அவர்களுக்கு பாரமாய் இல்லாமல் நான் நினைத்தது போலவே இறந்து விட்டேன். எல்லோரும் கதறுவார்கள். தகப்பன் இல்லாது நான் வளர்த்த பிள்ளைகள் அனாதைகளாகிப் போகும். அருகில் இருக்க முடியாத என் பேரன் துடித்துப் போவான். பரவாயில்லை.

இப்போழுது எனக்கு அசைய முடிகிறது. உடலில் பாரமில்லை. என்னை அழகாக பட்டுடுத்தி கிடத்தி இருக்கிறார்கள். அத்தனை பேரும் அழுது கொண்டிருக்கிறார்கள். எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் ஆகிப் போன என் கணவனை பார்த்து விடுவேன். என் குடும்பத்தை ஆல மரமாய் நான் வளர்த்து விட்ட அழகைப் பார்த்து அவர் பெருமிதமாய் பூரிப்பார். நான் அவர் தோள்களில் சாய்ந்து கொள்வேன். அவர் மறக்காமல் என் மூக்கை அழுந்தப் பற்றிய படி கிண்டலாய் சிரிப்பார்.

வரு