Bio Data !!

27 December, 2023

Amazon ல "கிடா" னு ஒரு படம் பார்த்தேன். இதன் இயக்குநர் ரா. வெங்கட். பூ ராம் முக்கியமான கதா பாத்திரத்தில் நடித்திருக்கிறார். காளி வெங்கட்டும், பேரனாக வரும் சிறுவனும் பாட்டியாக வருபவரும் நடிப்பில் அசத்தி இருக்கிறார்கள். அதுவும் முக்கியமாக பேரன் விரும்பும் உடையை தன் பணத்தில் வாங்கி கடையை விட்டு வெளியே வரும் போது பாட்டி நடக்கும் கம்பீர நடை!! சான்சே இல்லை. கறி வெட்டுபவராக வந்து படம் முழுவதும் கலக்கி இருக்கிறார் காளி வெங்கட். முந்நூறு ரூபாய் குறைவாக இருந்தாலும் இருக்கும் பணத்துக்கே உடையை கொடுக்கும் கடைக்காரர், பாட்டி கேட்டு வரும் பணத்தை மறு கேள்வி கேட்காமல் எடுத்துக் கொடுக்கும் மனிதர், அதோடு தன் கை பணத்தையும் சேர்த்துக் கொடுக்கும் அவர் அம்மா, என்று பலரும் நல்லவர்களாக இருந்து நம் மனதை மயிலிறகால் வருடுகிறார்கள். நான் முந்தி "எறும்பு" னு ஒரு படம் பார்த்தேன். OTT ல் படம் பார்க்க விரும்பும் என் பெண் தோழிகளுக்காக ஒரு வாட்ஸ் அப் குரூப் வைத்திருக்கிறேன். அதில் எல்லோரும் அவரவர் விருப்ப படத்தை குறிப்பிடுவார்கள். அதில் ஒரு தோழி "எறும்பு" படத்தை பார்த்திட்டு "நீ சொல்லலைன்னா இந்த படம் பார்த்திருக்க மாட்டேன். பெயர் ஈர்க்கவில்லை" என்றாள். அது போல ஏழ்மையின் வலி சொல்லும் இந்த படமும் பெயர் பெரிதாய் ஈர்க்காமல் இருக்கலாம். ஆனால் மிகச் சிறப்பான படம். பெத்த பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாததே வலின்னா, பேரப் பிள்ளைகள், அதுவும் பெற்றோர் இல்லாத பேரப் பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாதது பெரும் வலி. அதை அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள். படம் முழுக்க பெண்கள் எவ்வளவு அறிவுபூர்வமாக நடந்து கொள்கிறார்கள் என்பது வலிந்து சொல்லப் பட்டு இருக்கிறது. முக்கியமாக கிராமங்களில் ஏழ்மையில் வாழும் பெண்கள் குடும்பத்துக்கு எப்படி ஒரு தூணாய் விளங்குகிறார்கள் என்பதையும், அதை அவர்கள் கணவர்கள் எவ்வளவு பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் மிக அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர். மனதை மிருதுவாக்கும் மிக நல்ல படம்.

23 December, 2023

அன்று Water water everywhere. Not a drop to drink. என்று எழுதியவர் இதே போல் ஒரு வெள்ளத்தை சந்தித்திருப்பாரோ? சுற்றிலும் நீர் மலையாய் உயர்ந்து நிற்க , நீர் அருந்தி மூணு நாட்கள் ஆனதாக ஒருவர் சொல்கிறார். என்ன கொடுமை. 48 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்மசுக்கு புதுத் துணியெல்லாம் எடுத்த நிலையில் எங்க அப்பா தவறிப் போன நிகழ்வு இப்போ ஞாபகத்துக்கு வருது. அதே டிசம்பர் 18. வெள்ளப் பெருக்கு. எத்தனை குடும்பங்களில் மரணம் நிகழ்ந்து துயரத்துக்கு உள்ளாக்கி இருக்கிறதோ. எத்தனை ஏழைப்பட்ட குடும்பங்களில், குழந்தைகள் பண்டிகை கொண்டாட குதூகலமாய் வாங்கி வைத்த பொருட்கள் தண்ணீரோடு போனதோ. சின்ன சின்ன வீடுகளில் கூட, குருவி போல் சேர்த்து , வீட்டுக்கு தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கி வைத்திருக்க , அத்தனையும் தண்ணீருக்குள் நீச்சல் பயின்று கொண்டிருந்த கொடுமை. மதம் தாண்டி மனிதம் விஸ்வரூபமெடுத்து உதவிக் கொண்டு இருக்கிறது. பலருக்கு ஆரம்பத்தில் இருந்து வாழ்க்கையை தொடங்க வேண்டிய அவலம். இந்த நேரத்தில் அரசியல் கலக்க கூடாது. நாம் கவனமாய் இருக்க வேண்டிய கால கட்டம் மிக அருகில் வந்து விட்டது. ஒரு வரலாற்றுப் பேரழிவு நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த செய்தியை செய்தித் தாளில் நினைவூட்டியது. அதனால் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் எனத் தைர்யமாக இருக்க முடியாத நிலையில் இருக்கிறோம். . அந்த, கால இடைவெளி சுருங்கும் என்கிறார்கள் நிபுணர்கள். பல காலமாக குளோபல் வார்மிங் பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் நாம் அதை பெரிதாகவே எடுக்கவில்லை. இத்தகைய இயற்கை அழிவுகளில் க்ளோபல் வார்மிங்கின் பங்கும் ஓரளவு உண்டு என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்ப்பதும், குறை சொல்வதும் கதைக்கு உதவாது. நம்மைச் சுற்றி உள்ள இடத்தை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். நமக்கு பாதகமான காரியங்கள் நடக்கும் போது, யாரோ கேட்பார்கள் என்று இருக்காமல் தடுக்க வேண்டும். இன்றைய தலைமுறை அன்றாட பாடுகளை மட்டும் பார்த்தால் போதும் என்ற மன நிலையில் இருக்கிறார்கள். அது தவறு. எதிர்காலத்தில் நடக்க இருப்பதையும் யோசிக்க வேண்டும் என்று தெளிவுக்கு வந்திருப்பார்களா? மனம் மழை தவிர வேற எதையும் யோசிக்காததாய் இருக்கிறது. ஆனால் நாம் எந்த துயரத்திலும் தேங்கி நிற்பவர்கள் இல்லை. மீண்டு விடுவோம். இப்போதும்

21 December, 2023

ஊறும் காய். ஊறிய காய் ஊறுகாய்

ஊறுகாய் எனக்கு திடீரென்று அந்த நாளில் ஊறுகாய் போட்டது ஞாபகம் வந்தது. நல்ல பெரிய பெரிய எலுமிச்சம் பழமாய் மார்க்கெட்டில் பொறுக்கி எடுத்து வந்து அதை மேல் பக்கமிருந்து நாலாய் கீறி கீழே பிளந்து விடாமல் பக்குவமாய் பிடித்து கல் உப்பை அது கொள்ளுமளவு அடைத்து பெரிய பீங்கான் ஜாடியில் அதை அடுக்கி வைப்போம். இரண்டு நாள் வைத்தால் கல் உப்பு இளகி நீராய் இறங்கி இருக்கும். அதன் பின் தினம் இரு முறை அந்த பீங்கான் ஜாடியை குலுக்கி விடணும். எலுமிச்சம் பழம் நன்கு ஊறிய பிறகு எண்ணெயில் கடுகு உளுந்து தாளித்து வற்றல் தூள் பெருங்காயத் தூள் வறுத்த வெந்தயத் தூள் எல்லாம் போட்டு அதில் எலுமிச்சம் பழங்களை துண்டுகளாக நறுக்கிப் போட்டு கிளறி எடுத்து வைக்கணும். ஜாடிக்கு மேல் ஒரு துணியைப் போட்டு கட்டி மூடி வைப்போம். கை படாமல் எடுப்போம். நல்லா ஈரம் இல்லாமல் துடைத்த கரண்டி போட்டு எடுக்கணும். எவ்வளவு பக்குவம்? ஆமா இப்ப எதுக்கு இந்த ஊறுகாய் கதைங்கிறீங்களா? காரணம் இருக்கு சார் இருக்கு. நான் என் கணவரிடம் கேட்டேன் "நாம அந்த காலத்தில தினம் ஊறுகாய் சாப்பிட்டிருக்கோம். ஒன்றும் பண்ணதில்லை. ஆனா இப்போ ஆ ஊ ன்னு உப்பைக் குறை பிபி ஏறும் எண்ணையைக் குறை கொலஸ்டிரால் கூடும்னு கண்டிஷன் போடுறாங்களே! அந்த காலத்தில ஊறுகாய்ல சேர்த்த உப்புக்கும் எண்ணைக்கும் ஏன் எதுவுமே செய்யல." அவர் சொன்னார் ' அன்றைய உடல் உழைப்பு இன்று இல்லை" உண்மை தான் இன்றைய குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப நாம் படும் பாடு என்னவென்று நமக்குத் தான் தெரியும். காம்பாக்ட்டா டீவிக்கு முன்னால செட்டில் ஆகிடுறாங்க. அசைக்க முடியல. இளைஞர்களும் நண்பர்களுடன் ஊரெல்லாம் சுற்றி படுக்கத் தான் வீட்டுக்கு வந்தார்கள் முன்பு. இப்போ அவர்களும் டீவியின் முன்னமர்ந்து பார்ப்பது மட்டுமல்லாமல் ஸ்நாக்ஸ் இடைவிடாத கொரிப்பு. பெரியவர்களுக்கும் நாளெல்லாம் இருந்த சமையல் வேலை ஒரு மணி நேரத்துக்குள் முடிந்து விடுகிறது. அதன் பின் அவர்களும் டீவியின் முன் தஞ்சம். இப்படி நம் வாழ்க்கை முறை மாறியதால் தான் நோய் அதிகமாகி விட்டதோ என்று யோசித்தால் இன்னொன்றும் தோன்றுகிறது. முன்பு பிபி பணக்காரர்களின் நோயாக கருதப்பட்டது. கையில் நாய் ஒன்றை பிடித்தபடி வாக்கிங் போவது பணக்கார தோரணை. ஆனால் இன்று நகரில் கேடிசி நகர் ரஹ்மத் நகர் என்று நகர் தோறும் ஒரு பார்க். அங்கே அத்தனை மனிதர்கள் ஒரு கடமையைச் செய்வது போல் நடக்கிறார்கள். அன்று முற்றிய பின் தான் நோய் வெளியே தெரியும். அதனால் இந்த பிபி சுகர் கச்சடா எல்லாம் இருக்குனு தெரியாமலே எத்தனை பேர் இறந்து போனார்களோ? அதனால் இன்றுமே உப்பில் ஊறிய ஊறுகாய் போன்றதை தவிர்ப்பதே நல்லது. முடியவில்லை என்றால் அளவையாவது குறைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நம் துரதிர்ஷ்டம் அன்றைய கால கட்டத்தில் கிடைத்த மாசு மருவில்லாத சத்துக்கள் இப்போ கிடைக்கிறதில்லை. நன்கு கவனித்துப் பார்த்தால் நம் உடம்பு நம்மிடம் பேசும். ஏன் இதைக் கொடுத்து என்னைக் கஷ்டப்படுத்துறன்னு கேட்கும். அப்படிப்பட்ட விஷயங்களைத் தவிர்த்திட்டாலே போதும். நலமாய் வாழலாம். காலத்துக்கு ஏற்ப வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்வது புத்திசாலித்தனம்.

15 December, 2023

சில நட்புகள் (glass, handle with care) கண்ணாடி, கவனமாக கையாளுங்கள் என்ற எச்சரிக்கை கொடுப்பது போல் கவனிக்கப்பட வேண்டியதிருக்கும். அந்த நட்பு நம்மாலோ, பிறராலோ உடைந்து விடாமல் பொத்தி பாதுகாக்க வேண்டிய ஒன்றாய் இருக்கும். நட்பு நொறுங்கி விடாமல் இருக்க நாம் இழப்பது பலவாய் இருக்கும். Out of sight ; out of mind என்ற பொன் மொழி எல்லாம் அங்கே செல்லாது. எத்தனை காலம் கண்ணில் படாமல் இருந்தாலும் , தொடர்பின்றி இருந்தாலும், பட்டதும் பற்றிக் கொள்ளும் அந்த அன்புத் தீ. நான் "சில நட்புகள்" என்று சொன்னாலும் எல்லோருக்கும் அப்படிப்பட்ட நட்பு "ஒன்று" நிச்சயமாய் இருக்கும். அந்த அன்பு மனதின் காயங்கள் அத்தனையும் , அடித்துச் சென்று ஒற்றை பார்வையில், ஒரு சின்ன புன்னகையில் , அக்கரை கலந்த ஒரு சின்ன செயலில் பூ பூக்க வைக்கும். உற்று நோக்கினால் அது அனேகமாய் உங்கள் முதல் பிடிப்பாய் இருக்கும். அது தந்த வலி தான் உங்களுக்கு எதையும் தாங்கும் வலு கொடுத்திருக்கும். அத்தகைய அன்பை எக்காரணம் கொண்டும் இழந்து விடாதீர்கள். ஏனென்றால் அது தான் உங்களை வாழ வைக்கும் பிராண வாயு. இங்கே அதிசயமாய் பிராண வாயுவும் அந்த அன்பினாலேயே உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கும்.

11 December, 2023

நாவலின் பெயர் : மதுரை மகுடம். ஆசிரியர் : கலைமாமணி விக்கிரமன் யாழினி பதிப்பகம். விலை : ரூ 125/- முதல் பதிப்பு : 2018 ஏறத்தாழ 207 ஆண்டுகள் மதுரையை ஆண்ட நாயக்க அரசர்களுள் சொக்க நாத நாயக்கர் 23 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவர் மனைவி மங்கம்மாள் இவர்கள் பற்றிய கதை தான் இது. சொக்க நாதரின் இறுதிக் காலங்களில் நடந்த நிகழ்ச்சிகளோடு சில கற்பனை கதாபாத்திரங்கள் சேர்த்து எழுதப்பட்ட கதை. சொக்க நாதரின் மகன் பெயர் முத்து வீரப்பர். அவர் மனைவி முத்தம்மாள். வழக்கமான சரித்திர நாவல்களில் இருப்பது போல் வர்ணனையோ விஸ்தாரமாக போரை விவரிப்பதோ இல்லை.ஆனால் அரசாட்சியை பிடிக்கவும் கவிழ்க்கவும் நடந்த சூழ்ச்சிகள் உண்டு. மெல்லிய காதல் உண்டு. நீரோடையில் மெல்ல நகர்ந்து செல்லும் காகிதக் கப்பல் போல கதை நகரும். ஆனால் வாசிக்க சுவாரஸ்யமாகத் தான் இருந்த்து. மதுரையின் மகுடத்தைப் பறிக்க ஆளாளுக்கு போட்டி. பாண்டிய மன்னருக்கு ஆண் வாரிசு இல்லாததே ஆசைக்குக் காரணம். இருந்தும் மகுடம் எப்படி உரிய வம்சத்தைச் சென்று சேருகிறது என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறார். மங்கம்மாள் மிகுந்த பொறாமை கொண்டு முத்தம்மாளை வெறுக்கலானாள். தானே மதுரை மகுடத்தை அடைவது எப்படி என்று சிந்திக்கலானாள். அது வேறு கதை என்று முடித்ததால் பாகம் 2 வரும் என்று தோன்றியது. உறுதிப்படுத்தப் படவில்லை. அந்தக் கால அரசர்கள் தம் மனைவியரின் அறிவுச் சுடரை இரு கரம் குவித்துக் காத்தது பெருமையாகத் தான் இருக்கிறது.

19 November, 2023

நாவலின் பெயர் : அவர்கள் கிடக்கிறார்கள். ஆசிரியர் : ஜோதிர் லதா கிரிஜா முத்து சுந்தரி பதிப்பகம் விலை : ரூ 300 முதல் பதிப்பு : 2019 ரா.கி..ரங்கராஜன் அவர்களால் ஜோதிர் லதா அவர்கள் குழந்தை எழுத்தாளராக அறிமுகம் ஆனார். தமிழ்வாணன் , ஆர் வி, அழ. வள்ளியப்பா ஆகியவர்களால் ஊக்குவிக்கபட்டு 1968 ஆனந்த விகடனில் பெரியோர்களுக்கான எழுத்தாளராக அறிமுகப் படுத்தப் பட்டார். “ அவர்கள் கிடக்கிறார்கள்” மூன்று கதைகளின் தொகுப்பு. அதில் முதல் கதை தான் அவர்கள் கிடக்கிறார்கள். கதையின் தலைப்பினாலேயே வெற்று விமர்சனம் மட்டும் செய்யும் சமுதாயத்தை சாடும் கோபம் தெரிகிறது. தகப்பன் மட்டும் பணி புரிந்து தன் மூன்று குழந்தைகளை வளர்க்க வேண்டிய சூழலில் பொறுப்பற்ற தந்தையால் பாரம் சுமக்கும் தாய். ஜாதகக் கோளாரினாலும் ஏழ்மையினாலும் முப்பது வயது வரை திருமணம் ஆகாத ஒரு முதிர் கன்னி. அவளுக்கு முடித்துத் தான் தனது திருமணம் என்று இருக்கும் சூழலிலும் காதலித்து, சாகக் கிடக்கும் தன் காதலியின் தாய்க்காக வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் முடித்துக் கொண்ட அண்ணன். இவர்கள் இருவருக்கும் அடுத்து பிறந்திருந்தாலும் பொறுப்பாய் சிந்திக்கும் இளைய மகள் தேவகி. இவர்கலைக் கொண்ட குடும்பத்தின் மூலம் கதையைச் சொல்லி ஊடாக சமுதாய சீர்திருத்தக் கருத்துகளையும் தெளித்திருக்கிறார். பெண் பார்க்கும் படலம் எப்படி பெண்களின் உணர்வுகளைக் கொன்று ஜடமாக்குகிறது என்பதை அழகாக விவரித்திருக்கிறார்.முதன் முறை பெண் பார்க்க வரும் போது வேர்த்து விறுவிறுத்து வரும் பெண் மறுபடி மறுபடி அது வழக்கமாகும் போது எப்படி எந்த ஒரு உணர்வும் இல்லாமல் நடந்து கொள்கிறாள் என்று அழகாக சொல்கிறார். இத்தகைய நிகழ்வுகள் கதைகள் மூலம் ஆவணப்படுத்தப் பட வேண்டும். அப்போது தான் இளைய தலைமுறை தாம் எவ்வளவு முன்னேறிய நிலையில் இருக்கிறோம் என்பதை உணரும். படப்பிடிப்பு: இது இரண்டாவது கதை. ஒரு கிராமத்துக்குள் ஒரு சினிமா படப்பிடிப்பு யூனிட் வருகிறது. அதன் டைரக்டர் பாலா. அவனது வலது கை போன்ற எடுபிடி நட்டு. படம் எடு[ப்பதை வேடிக்கை பார்க்க வந்த பெண் வேலம்மா பாலாவைக் கவர்ந்து விடுகிறாள். ரசிக்கலாம். தன் படத்தில் நடிக்க வைக்க விரும்பலாம். ஆனால் பாலா அவளை அனுபவிக்க விரும்பி எடுக்கும் ஆபத்தான முயற்சிகள். அதன் விளைவு. வழக்கப்படி தப்பு செய்தவர் தைர்யமாக இருக்க பாதிக்கப்பட்ட பெண் தான் அசிங்கப்பட்டு விடுவோம் என மறைக்கிறாள். அவள் திருமணமாகி மறுபடி டைரக்டர் கண்ணில் பட்டு விடுகிறாள். சூடு கண்ட பூனையாய் இருந்தால் தானே பாலைக் குடிக்காது. இவன் மனிதன் அல்லவா. அடுத்தடுத்து நடக்கும் நிகழ்ச்சிகளை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார். ரகசியம் பரம ரகசியம் : இது மூன்றாவது கதை. :தன் மகளைக் காணோம் என்று தேடுகின்ற ஒரு தந்தையை இரயிலில் சந்திக்கிறார்கள் மணியனும் அவர் தங்கையும். அவர்கள் தொடங்கி உள்ள துப்பறியும் தொழிலின் முதல் கேசாக அதை எடுத்து கண்டு பிடிக்கிறார்கல்> நாம் எப்படி எல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதை கதையின் நடுவே சொல்கிறார் ஆசிரியர். கண்டு பிடித்தார்களா? கிடைத்த செய்தியில் வயதான தந்தை மகிழ்ந்தாரா? துடித்தாரா? கதை முழுவதும் ரகசியம் அழகாக காப்பாற்றப்பட்டு இருக்கிறது. ****************************************************************************

14 November, 2023

நண்பர் ஒருவர் பேசிய ஸூம் மீட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவர் ஒரு ராணுவ வீரர். விடுப்பில் வந்திருக்கிறார். அவர் ஆனந்தம் ஃபௌண்டேஷன் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் பேசினார். அவரது அனுபவங்கள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால் உங்களுக்காக இதோ!! "யாரெல்லாம் எல்லாம் கிடைத்து நிறைவான வாழ்க்கை வாழ்கிறீர்கள்" என்ற கேள்வியோடு தொடங்கினார். "எனக்கு இன்று கிடைப்பதெல்லாம் மிகவும் நிறைவாக இருக்கிறது ஏனென்றால் லடாக்ல பணி புரிந்த போது வீட்டுக்கு ஒரு போன் பண்ண நாலு மணி நேரம் காத்திருந்திருக்கிறேன். லடாக் ல இருந்து ஊருக்கு வரும் போது எப்போ வரவேன்னு உறுதியா சொல்ல முடியாது. வான நிலை மாற்றம். பணி புரியும் இடத்தில் உள்ள சூழல் இப்படி பல விஷயங்கள் சார்ந்தது நம் பயணம்" என்றார். ராஜஸ்தானின் பாலைவனப் பகுதியில் பணி புரியும் போது பாதை தவறி நாம் சென்று கொண்டிருக்கும் குழுவை விட்டுப் பிரிந்து விட்டால் அவர்களைக் கண்டு பிடித்து சேருவது மிக கடினம். இப்படி பல கஷ்டமான சூழலில் பணி புரிவதால் கிடைக்காத எதுவுமே எனக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. ஆனால் இன்றைய தலைமுறையோ சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கும் தற்கொலை தான் தீர்வு என்று முடிவெடுக்கிறார்கள்" என்றார். இவருக்கு அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லை் வயது நாற்பதுக்குள் தான். ஒரு துக்கமான சூழலை விவரித்தார். நண்பர்களோடு சேர்ந்து ஜாலி மூடில் பேசி சிரித்துக் கொண்டிருந்த போது நண்பர் ஒருவரின் தந்தை மூன்று நாள் முன்னதாக இறந்து விட்டதாக தகவல் வருகிறது. இறந்த துக்கத்தைக் காட்டிலும் தந்தை அங்கே இறந்திருந்த பொழுது நான் இங்கே சந்தோஷமாக சிரித்து விளையாடிக் கொண்டு இருந்திருக்கிறேனே என்று நண்பரின் கதறல் வாழ்நாளில் மறக்க முடியாதது என்றார். " H"abitual improvement ஐ பற்றி பேசினார். இதனால் முதலில் நான் என்னை உணர்வேன். அதன்பின் உலகம் என்னை தானாய் அறியும் என்றார். இது நமக்கான முக்கிய படிப்பினை. உலகம் புரிந்த பின் அடுத்த செயலில் இறங்குவோம் என்றிருந்தால் சரிப்படாது. "A" for apple சொல்லிக் கொடுக்காமல் ஒவ்வொரு எழுத்துக்கும் இப்படி நல்ல செயல்களைச் சொல்லிக் கொடுக்கலாம் என்றார். "E"arly to bed early from bed. இதை இன்று வரை கடைப்பிடித்து வருவதாக சொன்னார். விடியலில் எழுந்து விட்டால் எனக்குப் பின் எழும் அத்தனை பேரையும் நான் வெல்கிறேன் என்று வைரமுத்து சொல்லியதை மேற்கோள் காட்டினார். அப்படியானால் எழும் போதே பலரை வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. "லவ் டுடே. " இன்றை மட்டுமே நேசியுங்கள் "L"earning and listening. ஐந்து வயது மகனின் பேச்சையும் உன்னிப்பாய் கேட்பேன். அது கூட பல சந்தர்ப்பங்களில் உதவி இருக்கிறது என்றார். "S"ay sorry. And say thanks . அது நம் எதிரில் இருப்பவரிடம் நம்மைப் பற்றிய நேர்மறை சிந்தனைகளை வளர்க்கும் என்றார். "P"lanning and punctuality "D"edication காலம் என்பது பொன் போன்றது அல்ல. உயிர் போன்றது. பொன் போனால் திரும்ப பெற்று விடலாம். உயிர் அப்படி அல்ல. எதை எவர் கண் விடல் என்பது மட்டுமல்ல எந்த சமயம் விடுவது என்பதிலும் நாம் கவனமாய் இருக்கணும். ஒரு காரியம் அது தவறான காலத்தில் செய்யப்பட்டதாலேயே கூட தவறாகிப் போகும் என்றார். மொத்தத்தில் மிகச் சிறந்த உரையையும் இன்றைய மாணவர்களின் தெளிவான சிந்தனையை கேள்விகளிலும் கேட்க முடிந்தது. நன்றி வினோத்!!!
அஞ்சலி கோபாலனின் சிறப்புரை கேட்க வாய்க்கப்பெற்றது. விஷயம் கொஞ்சம் கடினமானது தான். ஜீரணித்துக் கொள்ளுங்கள். HIV யிலிருந்து தொடங்கினார்கள். ஆரம்பத்தில் AIDS ஆண்களுக்கு மட்டுமே வருகிறது என்றும் அவர்களது தவறான நடவடிக்கைகளே காரணம் என்றும் இருந்த காலங்களை விட அது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கூட வருகிறது என கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் தான் மருந்துகள் கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்ட தொடங்கினராம். நீங்கள் பிறரைப் பார்த்து எந்த வயதில் ரசிக்கத் தொடங்கினீர்கள் என்று கேட்டார். 10, 11, 14 என பல பதில்கள் வர 8யிலிருந்து 14 லுக்குள் என்றார். அப்படி நீங்கள் முதன் முதலில் ரசிக்க தொடங்கியவர் உங்கள் gender ஐ சேர்ந்த வரா எதிர் பாலினத்தவரா என நினைவிருக்கிறதா? என் றார். இல்லை. ஏனென்றால் அது அந்த வயதில் தவறு என கற்பிக்கப்படவில்லை. வளர்ந்த பிறகு ஒரே பாலினத்தில் வரும் ஈர்ப்பு சமுதாயத்தால் தவறு என்று கற்ப்பிக்கப்பட்ட காரணத்தால் அது மன உளைச்சலை தருகிறது. ஆனால் இந்தியா வில் அங்கீகரிக்க படாத சமயத்தில் கொலை செய்வது, கொள்ளை அடிப்பது போல ஒரு குற்ற செயலாகவே கருதப்பட்டது. இங்கு அவர் நடந்த ஒரு கதையை சொன்னார். இரண்டு ஆண்கள் ஒருவர் மேல் ஒருவருக்கு ஏற்ப்பட்ட ஈர்ப்பால் திருமணத்தில் இணைந்து முப்பது ஆண்டுகள் இருந்தனர். அரசல் புரசலாய் அவர்கள் குடும்பங்களுக்கும் தெரிந்திருந்தது. ஒருவர் நோய் வாய் பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்தவர் அவரருகில் வர மறுக்கப்படுகிறார். தன் இணை இறந்த பின்பு அந்த சடங்குகளிலும் அவரை கலந்து கொள்ள விடவில்லை. நடிகை மவுனிகா இயக்குனர் பாலு மகேந்திரா இறந்த சமயத்தில் "அவர் கன்னம் தொட்டு முத்தம் கொடுக்க அவர் குடும்பத்தினர் சம்மதிக்க வில்லை என ஒரு பேட்டியில் சொல்லி இருந்தது நினைவுக்கு வந்தது. இரண்டும் ஒரே விதமான சோகம் தான். அன்பில் பாலினம் ஏது? நான் நினைப்பதுண்டு இது சந்தர்ப்பம் , இயல்பு, சூழல் என பல காரணங்களால் ஏற்படும். இதற்கு சட்ட திருத்தம் தேவையா? இதற்கு போய் போராடுகிறார்களே என. ஆனால் இதை கேட்ட பின் என் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். கத்தி மேல் நடப்பது போன்ற ஒரு விஷயத்தை இயல்பாக பேசுவதும் மாணவர்கள் அதை விட இயல்பாக கேட்டுக் கொள்வதும் அவர்கள் துணிந்து கேட்ட சந்தேகங்களும் சந்தோஷம் தருவதாய் இருந்தது. விருப்பமற்ற தருணத்தில் தன் பாலினர் அணுகும் போது அதை எப்படி எதிர் கொள்வது என்பது ஒரு ஆக்க பூர்வமான கேள்விக்கு உதாரணம். முக நூலில் மெசெஞ்சரில் கூட இந்த மாதிரி தொல்லைகள் வருவதாக நண்பர்கள் குறிப்பிடுவதுண்டு. அதை மென்மையும் கடுமையும் கலந்த விதத்தில் மறுக்க வேண்டும். பஸ்களில் இரவுப் பயணங்களில் ஸ்லீப்பர் பஸ்களில் ஆண்கள் இந்த விதமான தொல்லைகளை சந்திக்கிறார்கள். காமம் இப்பொழுதெல்லாம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிறது. அது ஆண், பெண், குழந்தைகள், முதியவர் என யாரையும் விட்டு வைக்காமல் பஸ்பமாக்கி கொண்டு செல்கிறது. குழந்தை கள் தினமான இன்று ஆண் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுப்போம் என உறுதி எடுப்போம். இந்த உலகில் வாழும் உரிமை பெற்ற அவர்களின் வாழ்க்கைக்கு உத்தரவாதம் கொடுப்போம். இது நான் 2019 இல் எழுதிய பதிவு.

12 November, 2023

Bigg Bosd 7 poornima maya controvercy

பிக் பாஸ் பற்றி நான் ரிவ்யூ போடலைன்னாலும் தினமும் பார்ப்பேன். பலரும் இவ்வளவு நாளும் அது scripted programme. என்ன செய்யணும்னு எல்லாம் சொல்லிடுவாங்கன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. பல பங்கேற்பாளர்களே நான் scripted னு நினைச்சு போனேன் ஆனா அப்படி இல்லைன்னு சொன்னாலும். சொல்றவங்க அதை தொடர்ந்து கிட்டுத் தான் இருந்தாங்க. எனக்கு என்ன சந்தேகம்னா அப்போ அவர்கள் மாயா, பூர்ணிமா குரூப்பை ஏன் கழுவி ஊத்தறாங்க. அவர்களும் அவர்களுக்கு சொல்லப்பட்டதைத் தானே செஞ்சிருப்பாங்க. இப்படியும் இல்லாம அப்படியும் இல்லாம மாத்தி மாத்தி பேசுறதைத் தான் புரிஞ்சுக்கவே முடியல. எனக்கு ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வருது. ஒரு உறவுக்காரப் பெண் எங்க அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் ஆதங்க ப் படுவாங்க . எங்க வீட்டுக்கு வர மாட்டேங்கிறீங்க. எங்களை மதிக்க மாட்டேங்கிறீங்கன்னு. எங்க அம்மா விசேஷ வீடுகளுக்கு வரவே பயந்தாங்க. பார்த்ததும் முதல் அரை மணி நேரம் திட்டு வாங்கணுமேன்னு. நான் இதற்கு முடிவு கட்ட நினைத்தேன். ஒரு திருமண வீட்டில் இப்படியே ஆரம்பித்தாங்க. நான் கேட்டேன். "பெரியவங்க சின்னவங்களை வந்து பார்க்கணுமா? சின்னவங்க பெரியவங்களை வந்து பார்க்கணுமா??" நான் ஏதோ வில்லங்கமா கேட்கிறேன்னு அவங்க பதில் சொல்லல. நானே தொடர்ந்தேன். பெரியவங்க சின்னவங்களை வந்து பார்க்கணும்னா உங்க ஊர்லயே தனியா இருக்கிற என் தங்கையை நீங்க எத்தனை தடவ போய் பார்த்திருக்கிறீங்க. இல்ல சின்னவங்க தான் பெரியவங்களை போய் பார்க்கணும்னா நீங்க எத்தனை தடவை எங்க அம்மாவை வந்து பார்த்தி்ருக்கிறீங்க. ரெண்டுல ஒண்ணு தெளிவா இருங்க. பார்க்கிற நேரமெல்லாம் குறை சொல்வதையும், யாரா இருந்தாலும் எங்க வீட்டில வந்து எங்களைப் பார்க்கணும்னு எதிர்பார்க்கிறதையும் நிறுத்துங்கன்னு சொன்னேன். அதோட குறை சொல்வது முடிவுக்கு வந்தது. ஒண்ணு சொன்னாலும் நன்றாய் சொல்லி பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரணும். அதே தான் இங்கேயும் scripted னு நம்பினால் சந்தோஷமா சீரியல் பார்க்கிற மாதிரி பாருங்க. இல்லைன்னா உள்ளே இருப்பவர்கள் சாம்பிள் மனிதர்கள் என்று சந்தோஷமா பாருங்க. நான் காரியவாதியான விசித்ரா அர்ச்சனாவுடன் போடப்போகும் சண்டைக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். # Big Boss7

06 November, 2023

#திருமண கலாசார மாற்றங்கள். லட்சுமி ராஜரத்தினம், ஜோதிர் லதா கிரிஷா போன்ற பெண் எழுத்தாளர்கள் அவர்கள் காலங்களில் பெண்களின் திருமணம் நடப்பது எவ்வளவு சிரமமானது என்பதை கதைகளில் சொல்லி இருக்கிறார்கள். அது நல்லது. இல்லையென்றால் காலம் மாறிய பின் அப்படி ஒன்று இருந்தது என்பதே தெரியாமல் போய் விடும் அபாயம் உண்டு. அலங்காரம் செய்து, பெண் பார்க்க வருபவர் கால்களில் விழுந்து, நமஸ்கரிப்பது. அவர்கள் முடிவு சொல்லும் வரை அவரையே கணவனாக நினைத்து கனவு காண்பது, அது இல்லையென்றானதும் அடுத்தவர் . இது தொடர்கதையாக இருந்தது. அதுவும் ஒரு நாலைந்து பெண் குழந்தைகள் இருந்தால் நெட்டையோ குட்டையோ சம்மதிச்சிடு என்று மூத்த பெண் குழந்தைகளை வற்புறுத்துவது. மூத்த பெண் சம்பாதிப்பவளாக இருந்தால் " உனக்கு எப்படியும் மாப்பிள்ளை கிடைச்சிடும் என்று அவர்களை வைத்துக் கொண்டே இளையவர்களை திருமணம் செய்து கொடுத்து கடைசியில் உழைத்த பெண்ணை நிர்க்கதியாக விட்டு விடுவது. இது ஒரு காலம். அடுத்து, பெண்களில் பாதிக்கு மேல் உழைக்கத் தொடங்கி தனக்கு வேண்டாம் என்று நினைப்பவரை அழுத்தமாக மறுக்க முடிந்த காலம். குடும்ப முன்னேற்றத்துக்கு அவளால் உதவ முடிகிறது என்பதாலேயே அவளைக் கொஞ்சம் கூடுதலாய் மதிக்கத் தொடங்கினார்கள். அப்போதும் கூட நீ சம்பாதிப்பதில், உன் செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள உன்னை அனுமதிப்பதே, நான் உனக்கு காட்டும் பெரும் கருணை, என்று நடத்தியவர்களும் உண்டு. இந்த சமயத்தில் காதல் திருமணங்கள் கொஞ்சம் அதிகரிக்கத் தொடங்கின. . சம்பாதிக்கும் பெண் இருந்தால் குடும்பத்துக்கு நல்லது என தன்னுடன் பணி புரியும் பெண்ணையே பலர் காதலித்து மணந்தார்கள். தன் மகன் காதலிக்கும் பெண், வேற்று மதம் ஜாதி சார்ந்திருந்தாலும் அவள் சம்பாதிக்கிறாள் என்பதாலேயே அவளை ஏற்றுக் கொண்டவர்களும் இருந்தார்கள். இந்த காலத்திலும் காதலுக்கு எதிரிகள் சிலர் பெற்ற பிள்ளைகளையே கொன்று கொண்டும் இருந்தார்கள். அடுத்து ஒரு கால கட்டம். நன்றாக சம்பாதிக்க வேண்டும் என்பது கூட அவசியமில்லை என்னை சந்தோஷமாக வைத்துக் கொண்டால் போதும். நான் உனக்கும் சேர்த்து சம்பாதிக்கிறேன் என்று பெண்களின் மன நிலை மாறியது. அங்கே மாறத் தொடங்கியது ஆண்களின் மனம். தன் மனைவி தன் குழந்தைகளுக்காக உழைக்க வேண்டியது தனக்கு மட்டும் கடமையில்லை. தன் பொறுப்பு இல்லை. முடிந்தால் செய்வேன். இல்லையென்றால் மனைவி பார்த்துக் கொள்ள வேண்டியது தான் என்ற பொறுப்பற்ற மனநிலை வந்து விட்டது. அதுவே பல விவாகரத்துகளுக்கும் வழி வகுத்தது. என் மேல் அன்பு காட்டாத உன்னை, தவறுகள் செய்தும் உன்னை , சகித்து வாழ அவசியமில்லை என்று பெண்களின் மன நிலை மாறிப் போனது. இதனாலேயே பல குழந்தைகள் ஒற்றை பெற்றோருடன் வாழும் நிலை ஏற்பட்டது. இறப்பு என்பது தவிர்க்க முடியாதது. அது இல்லாமல் பெற்றோர் பிரியும் போது அதை குழந்தைகளால் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சகித்து சேர்ந்திருந்திருக்கலாமே என்பது தான் பெரும்பான்மையோருடைய எண்ணமாக இருக்கிறது. ஏனென்றால் சமூகத்தில் குழந்தைகள் சந்திக்கும் அழுத்தங்கள் அப்படிப்பட்டவை. இப்போ அதற்கும் அடுத்த நிலை. விவாகரத்தை தவிர்க்க நான் வாழ்ந்து பார்த்து விட்டு ஒத்து வந்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற மனநிலை. Living together. இது ரொம்ப ஆபத்தானது. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் பெண்கள் தான். ஏனென்றால் ஆண் தனக்கென உரிமைப்பட்ட ஒருத்தியிடம் மட்டுமே அதிகாரம் காட்டுவான். ஆணவமாய் நடந்து கொள்வான். எத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தாலும் திருமணமாகி கணவன் என்றானபின் அவன் நடவடிக்கை மாறித் தான் போகும். அது தனிப்பட்ட ஒருவரின் குண நலன், வளர்க்கப்பட்ட முறை சார்ந்தது. சிலர் லிவிங் டுகெதரில் குழந்தை பெற்றுக் கொள்ளாமலாவது இருக்கிறார்கள். சில முட்டாள்கள் எந்த பிடிமானமும் இல்லாமல் குழந்தையும் பெற்று அந்த குழந்தைகளையும் சிக்கலுக்கு உட்படுத்துகிறார்கள். ஒரு காலத்தில் பெண் குழந்தைகளுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாய் இருந்தது. இப்போ தலை கீழாகி ஆண் பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பது பிரம பிரயத்தனமாய் இருக்கிறது. சமுதாயத்தில் ஆணும் உயர்த்தியில்லை. பெண்ணும் உயர்த்தியில்லை. இருவரும் சமமே என்ற எண்ணம் வந்து பரஸ்பரம் புரிதல் இருந்தால் மட்டுமே நாம் பாரம்பரியமாக காத்து வரும் குடும்பம் என்ற அமைப்பு சிதையாமல் இருக்கும். அதற்கான முயற்சியை ஒவ்வொருவரும் எடுக்க வேண்டும். சிதைப்பது எளிது. மறு உருவாக்கம் மிகக் கடினம்.

05 November, 2023

புத்தகத்தின் பெயர் : அன்புள்ள அம்மாவுக்கு. ஆசிரியர் : லட்சுமி ராஜரத்தினம். இது மூன்று குறுங் கதைகளின் தொகுப்பு. சில நேரம் லைட் ரீடிங் தேவைப்படும். இது அந்த வகையைச் சார்ந்தது. முதல் கதை அன்புள்ள அம்மாவுக்கு. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தின் பாடுகளைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு இந்த புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு ஏழை அப்பாவுக்கு நான்கு பெண் குழந்தைகள். ஒவ்வொருவர் திருமணமும் ஒவ்வொரு விதமாய். பெற்ற தாய் தந்தையாகவே இருந்தாலும், பணம் தரும் பிள்ளைகளுக்கு இடையே வேறுபாடு காட்ட வைத்து விடுகிறது. அது தவிர்க்க முடியாமல் போய் விடுகிறது. தனக்குத் தருபவர்களை குளிர வைத்துக் கொண்டால் தானே, தருவது தடங்கலின்றி வரும். இது ஏழ்மை நடத்தும் நாடகம். கதையில் ஆரம்பத்திலிருந்தே பிறருக்காகவே வாழும் ப்ரீதா. சுய நலம் மிகுந்த குழந்தைகளை துணிச்சலாய் ஒதுக்கும் போதும் வாழ்க்கை அதே பிறர் நலம் தொடரவே வழி காட்டுகிறது. எனக்கு பிடித்த வரிகள்: "மரணம் எப்பொழுது, எப்படி, எங்கே நிகழ்கிறது என்பது யாருக்காவது தெரியுமா? மனித உடல் காற்றடித்த பலூனா? அப்படியானால் யார் அதை இப்படி ரகசியமாக பிடுங்கி காற்றை வெளியே அனுப்புகிறார்கள்" இரண்டாவது கதை : நெஞ்சம் எங்கே. இது இரண்டாவது கதை. மலையின் மேல் பணி புரியும் சுந்தரின் மனைவி பாலா, தன் முதல் குழந்தை ரவியை தன் பெற்றவர்களிடம் விட்டு விட்டு, குழந்தை சத்யாவுடன் , சுந்தருடன் வாழ வந்த இடத்தில் , சத்யாவைத் தொலைத்து விடுகிறாள். அதன் பின் சுந்தர் தன் வேலையை உதறி ஊருக்கே வந்து விடுகிறான். ரவி நல்ல உயரமான , அழகான ஆண் பிள்ளையாக வளர அவனைப் பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அவன் மேரியைக் காதலிக்க, சித்ராவை அவன் அப்பா மருமகளாக்க முடிவு செய்ய , காவல் அதிகாரி பணி கிடைத்த சோனாவும் ரவியை விரும்புகிறாள். ஒவ்வொருவருக்கும் ஒரு வழி பிறந்து ரவி யாரைத் திருமணம் செய்கிறான. என்பது தான் கதை. மூன்றாவது கதை : உனக்காக மட்டும். அது மட்டும் உங்களுக்காகவே. முதல் இரண்டு கதைகளும் நம் வாசிக்கும் ஆசையை தூண்டி இருக்கும். மூன்றாவது நீங்களே வாசித்துக் கொள்ளுங்கள்.

16 October, 2023

நாவலின் பெயர் : 23 ஆம் படி ஆசிரியர் : ரா.கி.. ரங்கராஜன் வீ.கே. புக்ஸ் இன்ட்டர்நேஷனல் முதல் பதிப்பு : 2012 விலை ரூ 100/- இந்த கதை மிகவும் விறுவிறுப்பானது. பத்து வருடங்களுக்கு முன் வெளி வந்த நாவல் ஆதலால் பலரும் படித்திருக்கலாம். ஆனால் எனக்கு இப்போது தான் வாசிக்க வாய்த்தது. தொல் பொருள் ஆராய்ச்சி செய்யும் டாக்டர் நாகலெச்சுமி முக்கிய கதா பாத்திரம். சிவ சங்கரன் என்னும் நண்பரின் அறிவுரைப்படி அந்த குழுவில் இணைகிறான் வேணு. புகைப்படக்காரரான கிருபாகரனின் மகள் மோனி மேல் காதல். ஆனால் மோனிக்கு வேணுவுக்குப் பிறகு அறிமுகமான கிஷோர் மேல் காதல். யார் யாருடன் இணைகிறார்கள் என்பது தான் கிளைக் கதை. தொல் பொருள் ஆராய்ச்சி தான் முக்கிய கதை. ஐந்து, ஆறாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்த களப்பிரர்கள் பற்றிய ஆராய்ச்சி. எனக்கு மிகவும் பிடித்த இடம் மட்டும் ஒரு சோற்றுப் பருக்கையாய்: “ அவனுக்கும் எதுவோ ஒன்று சிலிர்த்தது. நீண்ட நெடும் பாலைவனமாக இருந்த என் வாழ்க்கையில் ஒரே ஒரு ரோஜாவாக இந்த மோனி சிரித்தாள். அந்த ரோஜா என்னோடு வராது. அதைத் தாண்டி என் பயணம் இருக்கிறது. பிரிந்து போகு முன் என்னிடமிருக்கும் கடைசிக் குவளை நீரை அந்த ரோஜாவுக்கு ஊற்றி விட்டுப் போகிறேன். நான் போன பின்னரும் அது சிரித்துக் கொண்டே இருக்கட்டும். “ இது தான் உண்மைக் காதல். சேர முடியாத போது தான் காதலித்த பெண்ணின் முகத்தில் ஆஸிட் வீசும் இந்தக் கால காதலுக்கும் அந்த காதலுக்கும் எவ்வளவு வேறுபாடு. கதையின் சுவாரஸ்யத்துக்காக கனவில் வருவது நிஜத்தில் நடப்பது போல் சொல்லி இருந்தாலும் கதையின் வேகம் அபாரம்.

09 October, 2023

நாவலின் பெயர் : சிவப்பு அங்கி ஆசிரியர் : கோட்டயம் புஷ்பநாத் தமிழில் : சிவன் கலா நிலையம் பதிப்பகம். விலை : ரூ 210/- முதல் பதிப்பு : 1999 சிவப்பு அங்கி அணிந்து வரும் லூசிபர் பேயின் அட்டகாசங்கள் தான் கதை. இரட்டை பிள்ளைகளான பிரான்ஸிஸ் , பர்னாண்டஸ் இருவரில் பிரான்சிஸ் ஒரு பாதிரியார். பர்னாண்டஸ் ஒரு பெண் பித்தன். லூசிபர் பற்றிய புத்ட்தகம் முதலில் பிரான்சிஸ் கையில் கிடைத்தாலும் பர்னாண்டசுக்கே வாசிக்க வாய்க்கிறது. அதை வாசித்ததிலிருநநது உள்ளுக்குள்ளிருந்து ஒரு சாத்தான் வழிகாட்ட பர்னாண்டஸ் அதன் படி நடக்கிறான். நய வஞ்சகமாக தன் சகோதரன் பிராஅன்சிஸைக் கொன்று தான் பாதர் பிரான்சிஸாக நடிக்கத் தொடங்கி விடுகிறான். இந்த கதை வாசிக்கும் நாட்களில் OTTயில் மாவீரன் படம் பார்த்தேன்ன். அதிலும் கதா நாயகன் சத்யாவுக்கு ஒரு குரல் கேட்கும். இரண்டும் குரல்கள் தான். ஒன்று பிசாசின் குரல். மற்றொன்று சத்யாவை மாவீரனாக்க உதவும் குரல். ஏற்கனவே பெண்களின் விஷயத்தில் பலவீனனான பர்னாண்டஸை தன் திட்டத்துக்குப் பயன்படுத்துவது லூசிபருக்கு சுலபமான ஒன்றாக இருக்கிறது. பெண்ணை வசியம் செய்யும் திறமையைக் கொடுக்கிறது. ஆனால் பதிமூன்றாம் நாள் அநநத பெண்ணை தான் அனுபவித்து ரத்தம் குடித்துக் கொன்று விடுகிறது. ஆனால் இறப்பு இயல்பானதாக பிறருக்குத் தோன்றுகிறது. இப்படியே ஒவ்வொரு பெண்ணாக வசியம் செய்வது தான் கதை. கதா நாயகன் ஒரு பாதராக வருவதால் கதை சர்ச், கல்லறை, சிலுவை என கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களையே சுற்றி வருகிறது. ஒவ்வொரு நிகழ்வும் நம்மில் திகில் வளர்த்து விறுவிறுப்பாக செல்லும் நாவல். சர்ச் விஷயங்களைக் கவனித்துக் கொள்ள வின்செந்த் பாதரும் அவருக்கு உறு துணையாக வரும் ரவீநநதிரனும் தான் பைசாச வேலைகளுக்கு எதிராகப் போராடும் சக்திகள். இறுதியில் லூசிபர் பேய் வெற்றி கொண்டதா? தோற்றுப் போய் ஓடியதா?பர்னாண்டஸ் தான் பிரான்சிஸ் பாதரோட உருவத்தில் நடமாடிக் கொண்டிருந்தான் என்பதைக் கண்டு பிடித்தார்களா? அப்படி என்றால் பர்னாண்டசுக்கு தக்க தண்டனை கிடைத்ததா? அறிந்து கொள்ள "சிவப்பு அங்கி" நாவலைத் தேடி படியுங்கள்.
Disclaimer : நான் எழுதுவது புத்தகம் பற்றிய விமர்சனம் அல்ல. நான் அவ்வளவு பெரிய ஆளெல்லாம் கிடையாது. ஒரு புத்தகத்தை வாசிக்கும் போது அதில் நான் ரசிக்கும் விஷயங்களை என் நண்பர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வேன். வேறு எந்த சட்ட திட்டங்களுக்க்கும் கட்டுப்பட்டு நான் எழுதுவதில்லை. பதிவு எழுதும் போது என்னைப் போலவே வாசிப்பில் ஈர்ப்பு இருப்பவர்களை அது காந்தம் போல் இழுத்து வந்து என்னிடம் சேர்த்து விடும். அ்து பெரும் நிறைவு.

28 September, 2023

நாவலின் பெயர் : வடலிவிளை செம்புலிங்கம் ஆசிரியர் : கலைமாமணி தாமரை செந்தூர் பாண்டி சிவகாமி புத்தகாலயம் விலை ரூ 320/- கதை நாயகன் செம்புலிங்கம் பண்டார நாடாரின் இரண்டாவது மனைவியின் மகன். அவள் பேச முடியாதவள். மூத்த மனைவிக்கு குழந்தை இல்லாததால் செம்புலிங்கத்தை தன் மகன் போலவே வளர்க்கிறாள். இருவத்தோரடி ஆழமுள்ள கிணற்றை சவாலை ஏற்று அவன் தாண்டுவதை வாசிக்கும் போது நமக்கே அவனை பார்க்கணும் போலிருக்குது. " வில்லிலிருந்து புறப்பட்ட அம்பைப் பார்க்காதவர்கள் அந்தப் பாய்ச்சலைப் பார்த்து புரிந்திருப்பார்கள். நடுக் கிணற்றில் சட்டெனக் கிணற்றுக் குருவி ஒன்று உள்ளிருநநது மேலே பறந்ததைக் கண்ணுற்ற செம்புலிங்கம் அதையும் கையில் பிடித்த படியே பாய்ந்து கிணற்றைக் கடந்து ஒன்றரையடி தூரத்தில் வெளியே குதித்து நின்றான்." என்கிறார் ஆசிரியர். ஒரு திருட்டில் செம்புலிங்கத்தின் பெயர் சேர்க்கப்பட்டு இருப்பதாகக் கேள்விப்பட்டு மலை மீதுள்ள காட்டில் மறைந்திருக்கிறான். பன்ணையார், தன் மீது மிகுந்த அன்பு கொண்ட சுந்தரி என்ற பெண்ணிடம் அத்து மீறியதைக் கண்டித்திருக்கிறோமே என்பதை மறந்து அவரிடம் உதவிக்கு செல்வதை பயன்படுத்தி பண்ணையார் பழி வாங்கி விடுகிறார். அதன் பின் அவர் வற்புறுத்தலின் பேரில் போலீஸ் அவன் பெயரை இணைக்கிறது. சில நேரங்களில் பிரச்னையை தீர்க்க நாம் எடுக்கும் முயற்ச்சியே பிரச்னையை பெரிதாக்கி விடும் என்பதை நமக்கு உணர்த்தும் இடம். சந்தர்ப்ப சூழலால் திருடனாகி விட்டாலும் பெண்களிடம் மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தான். அவர்களை உடன் பிறந்தவர்களைப் போலவே நடத்துவான். கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் சில சமயங்களில் நடந்து கொள்வான். ஒரு இடத்தில் மோர் விற்ற இரு பெண்கள் கொஞ்சம் தெனாவெட்டாக பேசியததம் ஆவர்கல் காதுகளில் உள்ள பாம்படத்தைக் கழற்றி அவற்றில் ஒன்றால் அவர்களின் ஆளுக்கொரு காதினை இணைத்து பூட்டி ஊருக்குள் போகும்வரை பேசக் கூடாது என அனுப்பி விடுவான். ஒரு முறை வந்த வண்டிகளை கொள்ளை அடிக்க நிறுத்திய போது அவை ஒரு அனாதை இல்லத்துக்கு செல்வதாக அறிந்ததும் கொள்ளை அடிக்காதது மட்டுமல்ல உடன் போய் பத்திரமாக சேர்க்கிறான். வழியில் " நான் தான் செம்புலிங்கம்" என்று கூறிக்கொண்டு பொய்யாக வந்து கொள்ளை அடிக்க முயலும் சிலரிடமிருந்தும் காக்கிறார். ஒரு இரவில் செம்புலிங்கம் பசி மிகுந்து களக்காடு "சி" னா "த" னா என்பவர் தோட்டத்தில் இளநி வெட்டி குடித்து விட்டு படுத்திருக்கும் போது அவர் வந்து அன்பாய் பேசீ வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே பதினேழு வயதிலேயே கணவனை இழந்த அவர் தங்கை பார்வதியின் கண் வலைக்குள் மாட்டிக் கொள்கிறார் செம்புலிங்கம். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் உடல் வலைக்குள்ளும். செம்புலிங்கம் " ஜாதி என்னல ஜாதி" என்று மிராசுதார் ஒருவரிடம் கேட்பதாக ஒரு நிகழ்வு வருகிறது. சுதந்திரத்துக்கு முந்திய கால கட்டத்தை சேர்நநத செம்புலிங்கம் அன்்று கேட்ட கேள்விக்கு இன்று வரை விடை கிடைத்த பாடில்லை. இன்றும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம் " ஜாதி என்னல ஜாதி?" காருண்யா அம்மையார் ஒருவர் செம்புலிங்கத்தை அன்பு செலுத்தி திருத்த முயல்கிறார். அவருடைய பிள்ளைகளை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறார். காவல் அதிகாரியிடம் அவன் சரணடைந்தால் குறைந்த தண்டனையுடன் விடுவிக்க வேண்டும் என்று வாதாடுகிறார். கதையில் வரும் செம்புலிங்கம் ஒரு ஹிந்து. காசி ஒரு கிறிஸ்தவன். துரைவாப்பா ஒரு முஸ்லிம். பெயருக்கு பின் ஜாதியை நிலை நாட்டியே பழகிய அந்தக் காலத்திலேயே ஜாதி மத வேறுபாட்டை துறந்து எறிந்தவர்கள். அந்த காலத்தில் செம்புலிங்கத்தை " தென்னகத்து ரா்பின் கூட்" என்று அழைத்திருக்கிறார்கள். இந்த நூலுக்கு 1997 ஆம் ஆண்டுக்கான தினத்தந்தியின் உயரிய விருதான அமரர் சி.பா.ஆதித்தனார் விருது கிடைத்திருக்கிறது. ஒரு வித்தியாசமான மனிதரைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்த புத்தகத்தைப் படிக்கலாம்.

27 September, 2023

நிழல் இளவரசி ஒரு மொழி பெயர்ப்பு நாவல். நாம் காதல் இணையாக ஷாஜகானையும் மும்தாஜ் ஐயும் தான் அடையாளப்படுத்திக் கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்த கதை ஷாஜகானின் மகள் ஜஹனாராவும் நஜ்பத்கானும் கொண்ட காதலை ஊடுபாவாக கொண்டது. மும்தாஜ் இன்னொருவனின் மனைவி என்றதுமே அவர்கள் காதலின் தீவிரம் வலு இழக்கிறது. இருந்தும் தாஜ்மஹால் ஒரு வரலாற்று சின்னமாய் இருந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால் ஜஹனாரா தன் பாட்டி இருக்கும் இடம் சென்று அங்கு பெர்ஷிய நாட்டு கலை வடிவில் அமைக்கப்பட்ட சமாதியை பார்த்து அதை அடிப்படையாய் வைத்து தாஜ்மஹல் கட்டும் போது பல யோசனைகளை சொல்லியதாக படிக்கும் போது அவளது பங்கு சரித்திரத்தில் பெண் என்பதால் மறைக்கப்பட்டதோ என ஐயம் எழுகிறது. நஜ்பத்கான் மேல் ஆசை கொண்ட ஜஹனாராவின் தங்கை அவள் மேல் உள் ள நல்லெண்ணத்தை அழிப்பதற்காக தனது அக்காவிற்கும் அப்பாவிற்குமே தொடர்பு இருப்பதாக வதந்தி பரப்புவதை பார்க்கும் போது இன்று மட்டுமல்ல என்றுமே பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்று தோன்றுகிறது. நஜ்பத்கானுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் இருந்தாலும் ஜஹனாராவின் மேல் கொண்ட அன்பில் மிகவும் நேர்மையாய் இருப்பதும் அவள் அழைத்தால் மட்டுமே அவளைச் சென்று பார்ப்பதும் , யாருமறியாமல் பெற்றெடுத்த அவர்கள் மகனை தான் பொறுப்பெடுத்து வளர்ப்பதும், தந்தையின் விருப்பத்திற்கிணங்க திருமணமே செய்யாமல் அரச காரியங்களில் அவர் இறுதி காலம் வரை அவருடனே இருப்பதும், தன் மேல் மிகுந்த அன்பு காட்டும் ஔரங்கசீப்பின் போக்கு பிடிக்காத காரணத்தாலேயே அவன் எவ்வளவு வற்புறுத்தியும் அவனோடு போகாமல் இருக்கும் போதும் ஜஹனாரா மேல் நமக்கு அன்பு அதிகரிக்கிறது. எனக்கு மிகவும் பிடித்து படித்த ஒரு நாவல்

13 September, 2023

நாவலின் பெயர் : மரணங்கள் மலிந்த பூமி ஆசிரியர் : செங்கை ஆழியான் கவிதா வெளியீடு விலை ரூ 100/- முதல் பதிப்பு ஆகஸ்ட் 2005. பெயரைப் பார்த்ததும் எனக்கு உடனே நினைவுக்கு வந்தது நமக்கு பக்கத்து நாடான இலங்கை.ஆம். இலங்கை தான் கதைக் களம்.. இரண்டு பக்க நியாயங்களை சொல்லி வந்தாலும் கதை நெடுக இத்தனை பேரை பலி கொடுக்க நேரிட்டதே என்ற ஆதங்கம் ஒலிக்கிறது. யாழ்ப்பாண மாநகரத்தையும் வெளிக் கிராமங்களையும் பிரித்த படி நீண்டு செல்கின்ற பெர்லின் சுவர் இராணுவ வேலி யாழ்ப்பாணத்தின் சோகத்தைக் கதை கதையாக சொல்கிறது. காங்கேசன் துறையிலிருந்து வீடு வாசல்களை எல்லாம் ஒரே இரவில் இழந்து ஐந்தாறு வருடங்களுக்கு முன்னால் யாழ்ப்பாணத்துக்கு அகதிகளாக ஓடி வந்தவர்களை மறுபடியும் அத்தனையும் விட்டு விட்டு சாவகச் சேரிக்கு ஓட விடுகிறார்கள். அங்கிருந்து அடுத்து எங்கோ?? போகும் போது சுவாமிநாதன் அதிக விலை கொடுத்து வாங்கிய பியர் பாட்டிலை விட மனசில்லாமல் காருக்குள் எடுத்து வைக்கிறார். செல்லும் வழியில் கொண்டு வந்த தண்ணீர் தீர்ந்து வாட்டும் மரண விடாயில் குழந்தைகளுக்கு அந்த பியரைக் கொடுத்து தாகம் தீர்க்கிறார். கொடுமை?? பத்து மாதம் தன்னைக் கருவில் சுமந்த தாய்க் கிழவியை இராசையா தூக்கி வரும் போது “என்னை இப்படியே போட்டுட்டு ஓடிப் போடா” என்று கிழவி சொல்வது நெஞ்சை குறு வாள் கொண்டு குத்திக் கிழிக்கிறது. கதை நெடுக இலங்கைத் தமிழில் எழுதப்பட்டு இருப்பதால் முடிக்கும் போது நமக்கு அது மிகவும் பரிக்கயமான மொழியாகிறது. உயிரின் பெறுமானம் தெரிந்தவர்கள் ஆயிரக் கணக்கில் இரவோடிரவாக வெளி நாடுகளுக்கு ஓடி விட்டார்கள். தெரிந்தவர்களிலும் மண்ணின் மீதுள்ள பாசம் மிகுந்து அங்கே இருந்தவர்கள் வெளியேற்றப் பட்டார்கள். “ ஓடு என்றால் ஓடுவதற்கும் வா என்றால் வருவதற்கும் நாமென்ன மந்தைகளா. எங்கேயாவது மாறி மாறி இருப்போம்” என்று ஒரு குரல் வேகமாக ஒலிக்கிறது. ஆனாலும் வேறு வழியில்லை. யாழ்ப்பாணத்தை நான்கு லட்சம் மக்களுக்காகத் தன் மடியில் தேக்கி வைத்து நன்னீரை கிணறுகள் மூலம் பாலாகத் தருகிற மாதா. இந்த பூமியில் பூகம்பங்கள் எட்டியும் பார்ப்பதில்லை. பெருஞ் சூறாவளிகள் தாக்கிக் காவு கொண்ட வரலாறு இல்லை என்று தன் தாய் நாட்டின் மீது கொண்ட பாசத்தை வர்ணிக்கிறார் ஆசிரியர். மக்கள் கூட்டம் கூட்டமாய் இடம் பெயர்கிறார்கள். ஆடுகளும் நாய்களும் பூனைகளும் அலமந்து பார்க்கின்றன. யுத்த பூமியின் பரிதாபத்தை நன்கு உணர முடிகிறது. அங்கே இருப்பவர்கள் காலியாக இருக்கும் வீடுகளைக் கொள்ளையிடுகிறார்கள். வீதியெங்கும் அவலக் குரல்கள். அல்லல்பட்டு அவலமாக ஓடிக் கொண்டிருந்த மக்களிடம் தம் கை வரிசையைக் காட்டிய திருடர்களும் இருந்தனர். தான் விட்டு வந்த மாட்டையும் கன்றையும் கூட்டி வரச் சென்ற போது எதிரே ஒருவன் அதை தன் மாடு கன்று என கூட்டி வரும் அவலமும் நடந்தது. ஆரம்பத்தில் போரிட்டவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் மெச்சிக் கொண்டவர்கள் கூட பெரும் இடப் பெயர்வோடு தம் பேச்சுகளை மாற்றிக் கொண்டார்கள் என்கிறார் ஆசிரியர். என்னைக் குலை நடுங்க வைத்த ஒரு நிகழ்வும் வந்தது. “ வடக்கு வீதியில் ஏறியவர் கோயில் சுவருடன் குப்புறக் கிடக்கின்ற ஒரு சடலத்தையும் சுற்றி இரண்டு நாய்கள் நிற்பதையும் காகங்கள் வேலியில் அமர்ந்து அவதானிப்பதையும் கண்டார். நாய்கள் மெதுவாக உறுமிய போது சடலத்தின் ஒரு கரம் அதைத் துரத்தும் பாங்கில் அசைத்தது. உயிர் இருக்கிறது” என்கிறார். எத்தகைய நிலை. இந்த நாவலில் ரசித்த வரிகள் எழுத முடியாது. என்னை பாதித்த வரிகள் வேண்டுமானால் எழுதலாம். “ எங்கட எத்தனை பிள்ளைகள் வாழ்கிற வயதில துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டும் உடலில் குண்டுகளைக் கட்டிக் கொண்டும் இந்த நாட்டின் இன வாத வன்செயல்களுக்கு பாதையைத் திறந்து விட்டது. இந்த பூமியில் இருக்கின்ற எல்லாத் துப்பாக்கிகளும் வெடிக்காது போய் விட வேண்டும். ஷெ;ல்கள் குண்டுகள் கண்ணிகள் எல்லாம் அவற்றை செய்தவர்களோடு செயலிழந்து போகக் கடவது” புரட்சிக்காரி சுகந்தி , அவள் தோழி மாலதியின் மரணம் நம்மை உலுக்கி விடும். இனி ஒரு யுத்தம் வேண்டாம். ஒருவர் மற்றவரது உரிமைகளை மதிப்போம். சமாதானமாய் வாழ்வோம். அதை வீடுகள் தொடங்கி நாடுகள் வரை நீட்டிப்போம். புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது மனம் கனத்துப் போனது நிஜம். நாம் எத்தகைய நிலையில் பாதுகாப்பாய் இருக்கிறோம் என்றும் ஒரு எண்ணம் மின்னல் போல் வந்து போனது. *************************************************************************************************************************

07 August, 2023

புத்தகத்தின் பெயர் : போராட்ட வாழ்க்கை. ஆசிரியர் பூமி பாலகன் மலர்விழி பதிப்பகம். விலை ரூ 120/- முதல் பதிப்பு : 2013 நியாயமான காரணங்களுக்காக ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இணைந்து நடத்திய ஒரு போராட்டத்தை தொட்டு கற்பனை கலந்து இப் பெருங்கதை எழுகிறது. இது இத்தகைய போரட்டங்களில் கலந்து கொண்ட பலருக்கு கடந்த காலத்தை நினைவு படுத்தலாம். இப் புதினத்தின் கதாநாயகன் வேலுச்சாமியின் வாழ்க்கையே ஆசிரியரின் வாழ்க்கை. கொஞ்சம் கற்பனை கலந்தது. விண்ணும் மண்ணும் மாசடைந்து சுற்றுப்புறங்கள் எல்லம் நாசமாகிப் போயின. கல்வித் துறையும் பொல்லாதவர்கால் ந்ல்லவரல்லாதவர்களால் ஏனைய துறைகளைப் போல் கெட்டுப் போய் விட்டதே என்ற ஆதங்கம் நாவல் முழுக்க ஒலிக்கிறது. கதை தொடங்குவதே சென்னை மத்திய சிறைச் சாலையில் தான். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப் பட்டு இருக்கிறார்கள். போராட்டத்தின் முக்கிய புள்ளியான வேலுச் சாமியைப் பார்க்க கிராமத்திலிருந்து அவர் தாய் தங்கம்மாள் வந்ததை அறிந்து மனம் கலங்கிப் போகிறார். அவர் தாய் அது வரை கிராமத்தை விட்டு வெளியேவே வ்ராதவர். பணி நிரந்த்தரம் ஆகாத வேலுச்சாமி போராட்டத்தில் தீவிரமாக கலந்து கொண்டதால் ப்ல இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப் படுகிறார். தளராது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் மற்ற மாநிலங்களில் வாங்கும் ஊதியத்தை விட குறைவாக வாங்குவதைக் சுட்டிக் காட்டி ஒன்று திரட்டுகிறார். இது ஒரு அவலம். நிதி சம்மந்தமான போரட்டங்களுக்கு மட்டுமே மக்கள் அதிகம் கூடுகிறார்கள். சங்கங்களை வலுவிழக்கச் செய்ய போட்டி சங்கங்களை அரசே மறை முக ஆதரவு கொடுத்து உருவாக்குவதைப் பர்றி சொல்கிறார். சங்கங்களில் தீவிரப் பங்கெடுத்துக் கொண்ட ஊழியர்களுக்கு கதையோடு தம்மை பொருத்திப் பார்க்க முடியும். முதன்மைக் கல்வி இயக்குனரின் நேர்முக உதவியாளர் தங்க முத்துவைப் பற்றி சொல்லும் போது “ சிவந்த நிறமும் ஐந்தே முக்கால் அடி உயரமும் அவரின் செயல்பாடுகளுக்குத் துணை நின்றன. நினைத்ததைச் சாதித்துத் கொள்ளும் திறமை அவருக்கு இருந்தது” என்கிறார். நம் மக்களின் அழகுக்கும் கம்பீரத்துக்கும் மயங்கும் , அஞ்சும் குணத்தை இப்படி அடிக் கோடிட்டுக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது. பள்ளி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் கொடுக்கும் பாலியல் தொல்லை உயர் அதிகாரிகளின் எதேச்சாதிகாரப் போக்கில் பிறக்கும் அதிரடி உத்தரவுகள் அதனால் ஊழியர்கள் அனுபவிக்கும் வேதனைகள் என பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறார். உறுதியான கண்கள் அகன்ற மார்பு கடப்பாறை போன்ற நீண்ட கை கால்கள் அழகான முடி வெண்கலக் குரல், சிங்கம் போன்ற நடை கொண்ட வேலுச்சாமிக்கு கதையில் பெண் துணை இல்லை யென்றால் சுவாரஸ்யமேது . அந்தப் பஎண் துணை வேல் விழி என்ற ஆசிரியை. வேல் விழியும் அவளுடன் சில பெண் ஆசிரியைகளும் போராட்டத்தில் கலந்து சிறைக்கு செல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன் சிறையில் உடல் நிலை சரியில்லாமலும் மாரடைப்பாலும் உயிரிழந்த 27 ஆசிரியர்கள் தந்த நினைவில் உடல் நிலை சரியில்லாதவர்களை மறியல் செய்ய வேண்டாம் என்று சங்கமே ஒதுக்கி விடுகிறது. ஒரு சந்தர்ப்பத்தில் வேலுச்சாமி வேலையிலிருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அப்போது உடனிருப்பவர்கள் அவரோடு பேசினால் கூட தன் மீதும் பழி வாங்குதல் நடவடிக்கை எடுக்கப்பட்டு விடுமோ என் அஞ்சி ஒதுங்குகிறார்கள். நானும் இதே போல் ஒரு சந்தர்ப்பத்தில் அதிகாரியின் தவறான பேச்சைத் தட்டிக் கேட்ட போது அனுபவித்திருக்கிறேன். என்னிடம் பேசினாலே மதிப்பெண்ணில் கை வைத்து விடுவார்களோவெனும் அச்சத்தில் என்னிடமிருந்து ஒதுங்குவார்கள். அப்போதெல்லாம் துணை புத்தகங்களே! ஒரு போராட்டத்தின் உண்மை நிலவர்ம் தெரிந்து கொள்ள கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.

04 August, 2023

திரைப்படத்தின் பெயர் : எறும்பு இயக்குநர் : G. சுரேஷ் முக்கிய கதா பாத்திரங்கள் : சார்லி, சூசன் ஜார்ஜ், M.S. பாஸ்கர், ஜார்ஜ் மரியான் இசையமைத்தவர் : அருண்ராஜ் இந்த படத்தை அமேசானில் பார்த்தேன். படத்துன் பெயர் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் பார்ப்போமே என்று பார்த்தது நல்லதாகப் போயிற்று. இல்லை என்றால் ஒரு அருமையான படத்தை மிஸ் பண்ணி இருப்பேன். சிலிர்க்க வைக்கும் சண்டைக் காட்சிகள்இல்லை. கனிந்து உருகும் காதல் காட்சிகள் இல்லை. பார்த்து ரசிக்க வெளிநாட்டு காட்சிகள் இல்லை. ஆனால் படத்தில் அன்பு இருந்தது. மனிதம் தொலைத்த மனிதர்கள் வந்தாலும் குடும்பம் என்ற கட்டமைப்பின் உறுதியால் அதைக் கடந்து வந்த வலிமை தெரிந்தது. பொதுவாகவே பலரிடம் எல்லோரும் இப்போ வசதியாகிட்டாங்க என்னும் ஒரு எண்ணம் இருக்கிறது. இல்லை ஏழ்மை இன்னும் அங்கங்கே உயிரோடு தான் இருக்கிறது என்பதை உணர்த்திய படம். சார்லி ஒரு ஏழைத் தொழிலாளி. அவருக்கு இரண்டு பிள்ளைகள். ஆண் ஒன்று. பெண் ஒன்று. அவரது இரண்டாவது மனைவி சூசன் . அவளுக்கு ஒரு கைக்குழந்தை. மூத்த மனைவி இறந்தாளா பிரிந்தாளா அந்த விவரத்துக்குள் அதிகம் போகவில்லை. குடும்பம் கடும் பணச் சிக்கலில் இருக்கிறது. அம்மாவின் அன்பு கிடைக்காத தம்பிக்கு , அம்மாவாகவே மாறி அரணாய் காக்கும் அக்கா உறவு. வயதான காலத்திலும் குடும்ப சிக்கலைத் தீர்க்க தன் பங்கிற்கு உதவும் சார்லியின் அம்மா உறவு. கைக்குழந்தையோடு கணவனுக்கு உதவ கரும்புக் கொல்லைக்கு வேலைக்கு செல்லும் மனைவி உறவு. படத்திற்கு பக்க பலமாய் இருப்பவர் ஜார்ஜ் மரியான். படத்தில் இவர் பெயர் சிட்டு. ஆகச் சிறந்த நடிப்பு. படத்தின் கதாநாயகன் இவர் என்றே சொல்லலாம். தான் வரும் ஒவ்வொரு சீனிலும் அசத்தி விடுகிறார். குழந்தைகளோடு குழந்தைகளாக முயல் வேட்டைக்கு தயாராகும் போதாகட்டும். காணாமல் போன உண்டியலை உரியவரிடம் சேர்ப்பிக்கும் காட்சியிலாகட்டும். நடிப்பில் ஒளிர்கிறார். அவரை திரைத்துறை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எறும்பு போல் சேர்த்து குடும்ப கடனை அடைப்பதைக் காட்டும் கதையாதலால் "எறும்பு" என்று பெயர் வைத்திருப்பார்களோ? பாருங்கள். அன்பின் இன்னொரு பரிணாமத்தைப் பார்க்கலாம்.

03 August, 2023

ஆடிப்பெருக்கு. ***************** குற்றாலத்தில் குதூகலமாய் குளித்திருந்தோம் குச்சியோடு வந்தார்கள் காவலர்கள். ஆற்றங்கரையில் அருகமர்ந்து குளித்திருந்தோம். அழுக்கோடு அரிப்பும் வந்தது அதை விடுத்தோம். கடலாடி களித்திருந்தோம் ஆழிப்பேரலையில் அதிர்ந்து போனோம். நதிக்கரையில் நீராடி நாகரிகம் வளர்த்தோம் நதி சுருங்கி வரியானது நீர் தலைதெளித்து முடித்தோம் ******
புத்தகத்தின் பெயர் : கடம்ப வனத்துக் குயில் பாகம் 2 ஆசிரியர் உதயணன் யாழினி பதிப்பகம். விலை ரூ 352 [தொண்டி துறைமுகத்திலிருந்து கோஹினூர் வைரம் வெளி நாடு செல்லப் போகிறது என்று ஆருடம் சொல்லப்பட்டதால் மன்னர் தொண்டி துறைமுகத்துக்கு விரைகிறார். அங்கே என்ன நடந்தது என்பது பாகம் 2 இல்.] இது பாகம் 1 இல் நான் முடித்திருந்த வரிகள். இனி…….. விச்சி மலையிலிருந்து ஒரு ஒற்றன் அராபியன் வேடத்தில் தொண்டிக்கு கோஹினூர் வைரத்தோடு வருகிறான். அங்கு ஒரு மரக்கலத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருந்ததால் சீந்துவாரின்றி கிடந்தது. அராபியா என்ற ஒரு பெண்ணும் சல்லியன் என்னும் ஒரு சல்லிப் பயலும் அந்த மரக்கலத்தில் பயணம் செய்கிறார்கள். கோஹினூர் வைரத்தைத் தேடி கொங்கு மன்னர் ஒருவரும் மரக்கலத்தில் பயணிக்கிறார். இடை வழியில் தன் மரக்கலம் பாதிக்கப்பட்டதால் அங்கு வந்து சேருகிறால் கடம்பவனத்துக் குயில் என்னும் கொங்கு மன்னரின் அன்புக்குப் பாத்திரமானவள். அன்பு எப்படி பிறந்தது என்பதை மிக அழகாகச் சொல்கிறார் ஆசிரியர். “ காற்றும் காற்றும் கலப்பது போல நீரும் நீரும் கலப்பது போல மணமும் மணமும் கலப்பது போல மனமும் மனமும் கலக்கும் போது காதலாகிறது. “கப்பல் வெள்ளி” என்று ஒரு சொற்றொடர் எனக்கு புதிதாய் அறிமுகமானது. வானத்தில் உள்ள சப்தரிஷி மண்டலம் என்ற நட்சத்திரக் கூட்டத்துக்கு அவர்கள் வைத்த பெயராக கதையில் வருகிறது. அதைப் பார்த்து திசையை அறிந்து கொள்வார்களாம். மரக்கலம் தடம் மாறி ஒரு தீவுக்கு சென்று விடுகிறது. அந்த தீவின் பெயர் சகோத்ரா. அந்த தீவு வாசிகள் மனித மாமிசம் உண்பவர்கள். தீவுக்கு செல்லும் முன்னேயே பெரிய பெரிய பறவைகள் பறந்து வந்து தாக்கும். தீவுத் தலைவனின் வர்ணனையே பயங்கரமாக இருக்கும். மனித மானிசத்தை உண்ணும் முறையை பயங்கரமும் கொடுமையும் நிறைந்த ஒரு விஷயத்தைத் தீவு வாசி ஏதோ சைவ விருந்து உண்ணும் முறையைச் சொல்வது போல சொல்வார். சகோத்ரா தீவின் நடக்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் கற்பனை நிறைந்தவையாக இருந்தாலும் ஒரு வித படபடப்போடு நம்மை வாசிக்க வைக்கும். உண்மையிலேயே கனிபால் என்னும் மனித மாமிசம் தின்பவர்கள் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறோம். அதனால் அப்படிபட்டவர்கள் இருக்கும் இடத்தில் மாட்டிக் கொண்டதை உணர்வு பூர்வமாக உணர முடிகிறது. கோஹினூர் வைரம் இன்னும் உரியவர் கையில் போய் சேரவில்லை. நான் படித்து ரசித்தது: “ நகைக்கும் நங்கைக்கும் ஒரு எழுத்து தான் வித்தியாசம்.ஆகவே தான் நகைகள் நங்கையருக்கே பொருத்தமாக இருக்கின்றன. தங்கமும் வைரமும் தையலரை அலங்கரிக்கும் போது அழகாக ஜொலிக்கின்றன. “ என்றான் மன்னன். பாகம் 3 ம் தொடர்கிறது…….

06 July, 2023

எங்கள் இல்ல திருமணத்தில் ஒரு பெரிய தொகையை பறி கொடுத்திருக்கிறோம். அதை மிகக் கஷ்டப்பட்டு திருடியவனைப் பிடித்த பின் அந்த காவலர்களில் ஒருவர் என்னிடம் சொன்னது " உங்களுடைய ஒரு சின்ன அஜாக்கிரதை எத்தனை பேருடைய உழைப்பைப் பறித்திருக்கிறது பாருங்கள்" என்று. இன்று அது ஞாபகம் வரக் காரணம் நான் பார்த்த ஒரு வெப் சீரீஸ். # kerala crime files. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் முதல் மலையாள வெப் சீரீஸ். ஆண்கள் மட்டுமே இருக்கும் ஒரு அதிசய போஸ்டர். முக்கிய ரோலில் லால் மற்றும் அஜு வர்கீஸ். ஒரு பாலியல் தொழிலாளி கொலை செய்யப்படுகிறாள். கொன்றவனைக் கண்டுபிடிக்க மேலதிகாரிகளிடமிருந்தோ கட்சிகளிடமிருந்தோ அழுத்தம் இல்லை. ஆனாலும் காவல்துறை தன் குடும்பத்தை விட்டு விலகி ஆறே நாட்களுக்குள் கண்டு பிடிக்கிறது. ஒருவர் காவல் துறை உயரதிகாரி (லால்) அவர் மனைவியைப் பிரிந்து இருக்கிறார். ஒரு வளர்ந்த மகள். சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவளுக்கு தன் நேரத்தை பங்கிடுகிறார். மற்றொருவர் புதிதாய் திருமணம் ஆனவர். ஒருவரின் மனைவி பிரசவ நேரத்தை நெருங்கிய நிலையில். இப்படி இருக்கும் பலரும் தம் பொன்னான நேரத்தை ஒதுக்கி கொலை செய்தவனை பிடிக்க அலைகிறார்கள். இதில் ஒரு சமயம் கொலைகாரனை பிடிக்க கூடிய சந்தர்ப்பம் கை அருகில் வந்தும் அவர்களின் கவனக் குறைவினால் சந்தர்ப்பத்தை நழுவ விடுகிறார்கள். கதாநாயகன் அஜு வர்கீஸுக்கு ஒரு காவலருக்கான உயரமில்லை. அதை ஈடு கட்ட முகத்தில் இறுக்கமான உணர்வுகளை கொண்டு வருகிறார். அதற்கு எதிர் மறையாய் புது மனைவியிடம் பேசும் போது முகத்தில் காதல் குறும்பின் நர்த்தனம். இறுதியில் கொலை காரனை பிடித்தார்களா? அவன் என்ன காரணத்தால் கொலை செய்தான் என்பதை அறிய வெப் சீரீஸ் சை பாருங்கள்.
கவிதைப் புத்தகத்தின் பெயர் : மனதின் சிறகுகள் ஆசிரியர் : எம்.எஸ்.ஜெயலட்சுமி நிவேதிதா பதிப்பகம். விலை ரூ 150- முதல் பதிப்பு : 2023 ஆசிரியை ராஜபாளயம் நகரைச் சேர்ந்தவர். இது இவரது முதல் நூல். தமிழ் , தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம் அறிந்த மொழி ஆசிரியர். “தாய்மை” என்னும் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரை ஆற்றுவதுடன் கவுன்சிலிங்கும் செய்கிறார். மாணவர்கள் மத்தியில் நேர வங்கி, திறமை வங்கி, மனித நூலகம், மனிதம் போன்ற பல அருமையான வாழ்வியலை அறிமுகம் செய்திருக்கிறார். பால்ய வயதில் குறிஞ்சிச் செல்வர் திரு. கோதண்டம் திருமதி இராஜேஸ்வரி தம்பதிகள் அவர்கள் இல்லத்தில் நடத்திய திருக்குறள் வகுப்புகள் ஆரம்பித்து இன்று தனது நூல் வெளியாவது வரை முழுமையாக உறு துணை புரிவதாக நன்றியுடன் நெகிழ்கிறார். “பித்தம் தலைக்கேறி நீ பின் தொடர்ந்து வந்ததென்ன……” எனத் தொடங்கும் கவிதை என்னை வியக்க வைத்தது. சமுதாயக் கட்டுக்குள் வளர்ந்து வந்தாலும் மனித மனத்தின் ஆசையை காற்புள்ளியாய் சொல்லும் கவிதை. பிறிந்து வாழும் பெற்றோரின் குழந்தைகளை “ காற்றில் அல்லாடும் வாலறுந்த பட்டங்கள்” என்கிறார். ஆமாம் தானே? இவரது கவிதைகளில் காதல் துள்ளும் வரிகளுமுண்டு. “ வலிந்த காற்று ஆவேசமாய் மரங்களில் மோத ஆலிங்கனச் சிணுங்கலாய் ஓவென எழும் நட்டுவாங்கத்தில்……” (சிணுங்கலும் ஓவென எழும் சத்தமும் ஒன்றுக்கொன்று முரணாய் இருக்கிறது. ஆசிரியரின் மனதின் எண்ண ஓட்டம் என்ன என்று கேட்டு பார்க்கணும்) இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டி எழுச்சி கொடுக்கும் கவிதை ஒன்று. “ தோல்வி நிரந்தரமல்ல கலங்காதே. கால தாமதம் ஆவதெண்ணி வருந்தாதே. அது காலம் தரும் அவகாசம். இடைவெளியை உனதாக்கு. எழுந்து நட. எரிமலையும் அடங்கும். பாய்ந்து புறப்படு. பார் முழுதும் உன் காலடியில். சின்ன சின்ன ஹைக்கூ கவிதைகளும் இடைஇடையே பூக்கின்றன. “ முடிந்ததை மறந்து விடு. முடிந்ததைச் செய்து விடு.” “ஒற்றை இலக்கு மற்றதை விலக்கு.” அப்பாவை பற்றிய ஒரு கவிதை பெண் பிள்ளைகள் அத்தனை பேரையும் தம் தந்தையை நினைத்து ஏங்க வைக்கும். நான் மிகவும் ரசித்த வரி ஒன்று உண்டு. “ அழுதரற்றும் அத்தனை தந்தைகளின் அடி வயிற்றுத் தீ அணைப்பேன்” “ கல்லையும் கரைக்கும் கடலளவு தொல்லைகள். சுமக்கும் நம் சந்ததியினரை” வறுமையை வேருடன் பூமியினின்று கெல்லி எடுக்க சூளுரைப்போம்” போன்ற வரிகளில் ஆசிரியரின் சமுதாய அக்கறை தெரிகிறது. ஒரு கவிதை இப்படி தொடங்குகிறது. “ எல்லாப் பக்கமும் கிளை பரப்பி விண் தொட விளையும் விருட்சம் இது” ஆசிரியர் என் தோழி. நான் நன்கு அறிந்தவர்கள். இந்த வார்த்தைகள் அவர்களையே பிரதிபலிக்கிறது. புத்தகம் நெடுக அழகு தமிழ் வார்த்தைகளை ரசித்தேன். //பசுந்தோகை வருடல்களாய்// //திரவித்த திசுக்கள்// //விம்மல்கள் வேதனையாய் வேடுகட்டும்// // திகம்பரத் தீ நாக்கு// .இரண்டு விஷயங்கள் மனதில் பட்டன. நாம் சில விஷயங்களை சிலவற்றோடு தொடர்பு படுத்திக் கொள்வதாலும் இருக்கலாம். சிறகு விரித்த பெண்ணின் நிறத்துக்கு கருமையை தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றியது. கவிதைகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தலைப்பிட்டிருக்கலாம். அது வாசகரை கவிதையின் உள்ளிழுக்கும். மென் மேலும் நிறைய எழுத வேண்டும். விண் தொடும் விருட்சமாய் வளர வாழ்த்துக்கள்

09 June, 2023

நாவலின் பெயர் : கடம்ப வனத்துக் குயில் (பாகம் 1) ஆசிரியர் : உதயணன் யாழினி பதிப்பகம் விலை : 246/- ரூபாய் உதயணன் அவர்கள் சமூக நாவல்களைப் போலவே சரித்திர நாவல்களும் மிகவும் நன்றாக எழுதக் கூடியவர். இவர் சேரர் சோழர் பாண்டியர் பல்லவர் போன்ற பலரைப் பற்றி எழுதி இருந்தாலும் கொங்கு சேரர்களைப் பற்றி எழுதாத குறை இருந்திருக்கிறது. அக்குறை இந் நாவலின் மூலம் தீர்ந்தது என்கிறார். திருச்சி அருகேயுள்ள கரூர் அந்தக் காலத்தில் கருவூர் என்றழைக்கப் பட்டிருக்கிறது. அதை ஆண்டவர்கள் தான் கொங்கு சேரர்கள். இந்த கதையில் மன்னன் இளஞ்சேரல் இரும்பொறையை வர்ணிக்கும் அழகு ரம்யமாய் இருக்கும். வயது முப்பது. வயதுக்குரிய பருவத் தோற்றம். உடல் கட்டு துடிப்பு. தீட்சண்யமான கண்களில் ஒளி வீசியது. இயற்கை ஒளியோடு போட்டி போடுவது போல காது மடல்களில் அவன் அணிந்திருந்த வைரக் கடுக்கன் விண்மீனைப் போல ஜொலித்தது. மன்மதனைப் போல விளங்கினான் வேந்தன். பாலி என்னும் அசுர குலத் தலைவர் பயணிக்கும் குதிரையைப் பற்றி அஸ்வ சாஸ்திரம் சொல்லும் ஒரு அழகான கதை ஒன்று வருகிறது. அதில் நான் ரசித்தது “ மேலே அமர்வது புலவராக இருக்கலாம். புரவலனாக இருக்கலாம். ஆனால் குதிரை குதிரை தான். அதற்கு எல்லோரும் ஒன்று தான்” மயிலுக்கு போர்வை ஈன்ற பேகனின் கதை நமக்குத் தெரியும் . அந்த பேகன் பரத்தையர் வீதியில் பரத்தை ஒருத்தியை கானம் இசைக்கச் சொல்லி மயங்கிக் கிடந்தான். அந்த பரத்தையான கடம்ப வனத்துக் குயில் தான் கதையின் நாயகி. விச்சிக்கோ கதையில் வில்லன். அவன் கடம்ப வனத்துக் குயிலிடம் மாட்டிக் கொள்கிறான். அவள் இசைக்கத் தொடங்கிய உடன் பல்வேறு பாம்புகள் அவனை சூழ்ந்தன. நாகப் பாம்புகள் படமெடுக்க பிற பாம்புகள் ஊர்ந்தன. பாம்புகள் சூழ்ந்து கொண்டால் அரசன் அஞ்சுவது மட்டுமல்ல. அலறவும் செய்தான். கொங்கு நாட்டுக்கு சொந்தமான கோகினூர் வைரம் திருடப்படுகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இருந்தும் அதை திருடியவன் விச்சி மலை மன்னன். மிக அழகான உவமைகளை கதாபாத்திரங்கள் மூலம் சொல்கிறார். விச்சி மலை மன்னனை மன்னன் இரும்பொறை விட்டு விடும் போது அது பிடிக்காத கடம்ப வனக் குயில் இப்படிச் சொல்கிறாள். “ ஒரு கள்வனை ஒழுக்கம் கெட்டவனை கொலைகாரனை மன்னனாக இருப்பதற்கு அருகதையற்றவனை உயிரோடு விடுவது சகல தீமைகளுக்கும் வாய்ப்பளித்து விடும். நாம் கெட்டவனை அழிக்கும் போது பால் மரங்களை வெட்டுவது போல நடந்து கொள்கிறோம் அவை விரைவில் துளிர்த்து விடுகின்றன. என்ன அழகான உவமை. தீமை செய்பவனை அடியோடு அழிக்கணும். துளிர்க்க விடக் கூடாது. தொண்டி துறைமுகத்திலிருந்து கோஹினூர் வைரம் வெளி நாடு செல்லப் போகிறது என்று ஆருடம் சொல்லப்பட்டதால் மன்னர் தொண்டி துறைமுகத்துக்கு விரைகிறார். அங்கே என்ன நடந்தது என்பது பாகம் 2 இல். இதில் நான் படித்து ரசித்தது : இந்த ஓவியத்தில் இருக்கும் மலை தட்சிண மலை. இதைக் கடப்பது கடினம். என்றார்கள். ஓவியனின் கைகளுக்கு அடங்கிய மலை என் கால்களுக்கும் அடங்கும்” “ சாமர்த்தியங்கள் நற்காரியங்களுக்குப் பயன்படும் போது தான் பாராட்டப் படும். கள்வர்களீன் சாமர்த்தியம் இகழத் தக்கது.”

26 May, 2023

புத்தகத்தின் பெயர் : தரிசனம் ஆசிரியர் : லா.ச.ராமாமிர்தம். சந்தியா பதிப்பகம். விலை : ரூ . 120/- முதல் வெளியீடு 1952. சந்தியா பதிப்பகத்தில் முதல் பதிப்பு 2013. ஆசிரியர் லா.ச. ரா முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆங்கில எழுத்துலகம் அந்த நாளில் ஒரு சில இந்தியர்களைத் தான் தொடர்ந்து எழுத அனுமதித்திருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட தொடர்ந்த வாய்ப்பு கிடைக்காததாலேயே நமக்கு தமிழில் ஒரு அற்புத எழுத்தாளர் கிடைத்திருக்கிரார். இவர் எழுத்துணர்வுகள் தமிழில் ரசிக்கப் பட்ட அளவு ஆங்கிலத்தில் ரசிக்கப் பட்டிருக்குமா? சந்தேகம் தான்.லா.ச.ராவுக்கு ஒவ்வொரு தலை முறையிலும் ரசிகர்கள் உண்டு. “ தரிசனம்” பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளும், வானொலியில் வந்த பேச்சுகள் அடங்கிய கட்டுரைகளுமாக ஒரு சிறு தொகுப்பு. அதன் முதல் கட்டுரையே சான்றோர் சிந்தனை என்ற பகுதியில் வந்த அவருடைய வானொலிப் பேச்சு“ அம்மா” என்ற தலைப்பிட்டது. அவரது எழுத்துக்கு எவ்வளவு ரசிகையோ அதே அளவுக்கு லா.ச.ராவின் அம்மாவுக்கும் நான் ரசிகை. அவர்களைப் பற்றி வாசித்திருக்கிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு ஆச்சாரம் பார்ப்பார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மனிதாபிமானம் மிருந்தவர். அதனால் முதல் கட்டுரையை மிகவும் ஆவலோடு படிக்கத் தொடங்கினேன். தெய்வம் உண்டா இல்லையா என்பதைப் பர்றி சந்தேகங்களும் சர்ச்சைகளும் இருந்த்தாலும் தாயின் நிரந்தரம் பற்றி சந்தேகிப்பார் யாரும் இல்லை என்கிறார்.. சங்கரர் அம்பாளைக் கேட்கிறார். “ தாயே ஸ்திரியில் கெட்டவள் இருக்கலாம். ஆனால் தாயாரில் கெட்ட தாயார் என்று உண்டோ” பட்டினத்தாரின் இரங்கலைக் குறிப்பிடுகிறார். முன்னையிட்ட தீ முப்புரத்தில் பின்னையிட்ட தீ தென்னிலங்கையில் அன்னையிட்ட தீ அடிவயிற்றில் அன்னை பற்றிய கட்டுரையில் தொடங்கி அடுத்து தான் பிறந்த ஊரான லால்குடியை பற்றி எழுதுகிறார். நாட்டில் எந்த முடுக்கில் நீங்கள் ஒரு சப்தரிஷியை சந்திக்க நேர்ந்தாலும் அவர் பூர்விகம் சந்தேகமின்றி லால்குடியாய் இருக்கும் என்கிறார். “யாரும் என்னை பார்க்கவில்லை என்று நான் நினைத்துக்கொண்ட சமயம் சட்டென்று குனிந்து பூமியிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணை அள்ளி நிமிர்ந்து வாயுள் தூவிக் கொள்கிறேன்” என்று முடிக்கிறார். மெய் சிலிர்த்து போகிறது. சத்யப்ரஸாதினி என்ற பெயரில் ஒரு கட்டுரை. சான்றோர் சிந்தனை என்ற தலைப்பில் வானொலியில் பேசி இருக்கிறார். அதைப் புரிந்து கொள்ள மிகவும் கடினப்பட்டு ஒவ்வொரு பாராவையும் மூன்று முறை வாசித்தேன். ஏதோ கொஞ்சம் புரிந்தது. ஸத்யப்ரஸாதின்மை என்பதை ஸத்யத்தின் பிரஸாதமானவள் என்று அர்த்தம் பண்ணிக் கொண்டதாகச் சொல்கிறார். லா.ச.ரா எழுதுவதற்கு விஷயத்துக்கு என்றுமே நான் பஞ்சப்பட்டதில்லை என்கிறார். நான் மெதுவாக ஆனால் ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன் என்கிறார். ஒரு அருமையான கருத்தைச் சொல்லி இருக்கிறார்.. எழுதிப் பிரசுரமானவன் தான் எழுத்தாளன் இல்லை. எண்ணங்களுக்கு உரு கொடுக்கும் போது எண்ணத்தில் வெளியீட்டுக்கு பயன்படும் ஒரு மீடியம் ஒரு எழுத்து என்கிறார். எது அழகு. அவரவர் பூத்ததற்கு தக்கபடி என்கிறார். ஆழமான கருத்து எண்ணத்தை எழுத்தால் பூஜித்து சௌந்தர்ய உபாசகனாக இருக்க விரும்புகிறேன் என்கிறார். எனக்குத் தோன்றியதை நான் தெரிந்து கொண்டதை என் எழுத்தில் என்னால் சொல்ல முடிந்த வரை சொல்லி இருக்கிறேன் என்கிறார். எவ்வளவு எளிய மனம்!!! “ நான் புரியாத எழுத்தாளன் என்று பல இடங்களில் சொல்லப் படுகிறேன். என் மொழியின் நோக்கமே மௌனம் தான் என்கிறார். திரும்ப திரும்ப வாசித்து அவர் சொல்ல வருவதை பாதியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம் எழுகிறது. தியானத்தின் பாதையும் இது தானே என்கிறார். எண்ணங்களைப் படிப்படியாக அடக்கி ஒவ்வொன்றாய் விலக்கி ஒரே எண்ணமாய் முகப்படுத்தி இதுவன்றி தியானம் யாது என்கிறார். ஒரு ஸ்ரீலங்கன் அவரைப் பார்க்க வந்திருக்கிறார். அவர் நாட்டு நிலைமையை பற்றி இப்படி சொல்லி இருக்கிறார். “ மனைவி சமையல் செய்து கொண்டு இருப்பாள். திடீரென்று அபாயச் சங்கு ஊளையிடும். அடுப்பைத் தணிக்க்க் கூட நேரமிருக்காது. ஓடி ஒளிந்து கொள்வோம். ALL CLEAR ஒலித்து வெளி வந்து பார்த்தால் வாணலியில் பண்டம் தீய்ந்து போயிருக்கும். சில சமயங்களில் குண்டு விழாமலே அடுப்பிலிருந்து தீ இசை கேடாய்ப் பற்றிக் கொள்ளவும் வழி உண்டு. இது தான் மரணத்தின் அண்டை விட்டு உறவு” நாலு லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி கட்டிய வீடு பால் காய்ச்சி ஆகிற்று. மறு நாள் குடி போக போனால் வீட்டைக் காணோமாம். ஒரு சுவர் கூட அடையாளத்துக் இல்லாமல் தரை மட்டமாகி இருந்ததாம். பதறிப் போனது நெஞ்சம். நான் ரசித்த வரிகள்: “ பாம்பு வயதாக ஆக உடல் குறுகி விஷம் கூடி மண்டையில் மாணிக்கம் அப்ப தான் உண்டாகிறது. பாம்பு மண்டையில் மாணிக்கம் சர்ச்சைக்குரிய விஷயமாய் இருக்கலாம். கட்டுக் கதையாய் தோன்றலாம். ஆனால் கதையில்லாமல் வாழ்க்கையே இல்லை . முடியாது.” “ வேண்டியும் தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று. எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம். தானாக நேர்வது தான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. ஒரு முறை ஒரே தடவை தான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை. அதற்கு மறு வளர்ச்சி கிடையாது. அந்த ஜ்வாலையின் குபீர். அது நித்யத்வத்தின் பொறி. அந்தப் பொறி நேரம் நானும் ஜ்வாலாமுகி” நம் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளவாவ
து இது போன்ற புத்தகங்களை கஷ்டப்பட்டாவது வாசித்து விட வேண்டும்.

18 May, 2023

புத்தகத்தின் பெயர் : கடல் நீர் நடுவே ஆசிரியர் : கடிகை அருள்ராஜ் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பாலஸ் விலை : ரூ 120/- எனக்கு பொதுவாகவே புத்தகங்கள் மேல் அதிக ஆர்வம். அது தான் தெரியுமேங்கிறீங்களா? புத்தக கண் காட்சி, கடைகள், ஆன் லைன் தவிரவும் பழைய புத்தகக் கடைகளிலும் தேடுவேன். அப்படிக் கிடைத்தது தான் இந்தப் புத்தகம். ஒரு மாணவனின் பி.காம் முதலாண்டுக்கான புத்தகம். மீன் பிடி தொழிலில் இருப்பவர் தான் கடிகை அருள் ராஜ். கடல் நடுவே இருக்கும் போது அவர்கள் சந்திக்கும் நாமறியாத அனுபவங்களை கதையாக்கி இருக்கிறார். கடலையும் அதன் தொழில் முறையையும் அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி உள்ளார். புரியாத வார்த்தைகளுக்கு இறுதியில் அகராதியும் தந்துள்ளார். ஒவ்வொரு தொழிலிலும் ஆபத்து உண்டு. என்றாலும் ஆபத்தையே தொழிலாகக் கொண்டது மீன் பிடித் தொழில் என்கிறார். மீன் பிடிப்பவன் கடல் எல்லையின் ஊதியமில்லா பாதுகாவலன். அன்னிய சக்திகளின் கைகளைக் கட்டிப் போடும் இரும்புச் சங்கிலி. உலகம் உள்ள வரை மீன் பிடித் தொழிலும் அழியாமல் இருக்க வேண்டும் என்கிறார். இரண்டு கால கட்டமாக கதையை சொல்லி நகர்த்துகிறார். ஒன்று படகில் சென்று மீன் பிடிக்கும் காலம். மற்றொன்று டீசல் போட்டு செல்லும் எலக்டிரிக் படகின் காலம். பழைய காலத்தில் தாம் கொண்டு போகும் கஞ்சிக் கலயத்தின் நீரையே மிச்சம் பிடித்துக் குடித்துக் கொள்வார்கள். இந்தக் காலத்தில் 500 லிட்டர் சிந்டெக்ஸ் டாங்கெ செல்கிறது. மீன் பிடி வலை நகர்ந்து வருவதை இப்படி வர்ணிக்கிறார். ஒரு திமிங்கலம் வாயைத் திறந்த படி வரும் போது எப்படி சிறிய மீன்கள் எல்லாம் வாயினுள் சென்று விடுமோ அது போல வலையும் வாயை அகல விரித்த படி வருவதாகச் சொல்கிறார். சில நேரம் இவர்கள் பிடிக்கும் மீன்களுடன் கடல் பாம்புகளும் வந்து விடுவதுண்டு. அவற்றை கவனமாக எடுத்து கடலிலேயே வீசி விடுவார்கள். டால்பின்களை “கடல் பண்ணி” என்று அழைக்கின்றனர். ஒன்று மாட்டிக் கொண்டாலும் துணைப் பண்ணி அங்கு மிங்கும் உரசி கயிறை அறுத்து விடும். மீன் பிடிக்கும் முறையை இப்படி விளக்குகிறார். “ பல வகை நிறமுடைய பட்டு நூலை இணைத்து பந்து மட்டை தயாரிப்பார்கள். இது தண்ணீரின் மேற் பரப்பில் சிறிய மீன் ஓடுவது போல தோற்றமளிக்கும். மேற்பரப்பில் உலவும் மீன்கள் இரை என்று நினைத்து கடிக்கும் போது மாட்டிக் கொள்ளும் . இந்த மீன்களை இரையாக பயன்படுத்தி சுறா மீன்களைப் பிடிப்பார்கள் (இது அந்த கால முறை) கட்டு மரத்தின் முன் பகுதியை அணிய மரம் என்றும் பின் பகுதியை கட மரம் என்றும் நடுப் பகுதியை நடுமரம் என்றும் சொல்வார்களாம். கடல் நடுவே பார்த்த ஒரு பிரம்மாண்டமான சுறாவை இப்படி வர்ணிக்கிறார். “ உடம்பில் பெரிய பெரிய புள்ளிகள் இருந்தன. அந்த புள்ளிகளிலிருந்து பல நிறங்களும் மாறி மாறி ஒளிர்ந்தன. கண்களிலும் பல விதமான நிறங்கள் தெரிந்தன. அந்த கண்களால் சுழற்றி சுழற்றி அனைவரையும் பார்த்தது. “ ஆஹா!!!! கற்பனையே இனிக்கிறதே. கடலில் தெரியும் மேகத் தூணைப் பற்றி கூறுகிறார். சுழற் காற்று தண்ணீரை உறிஞ்சி எடுத்து மேலே வானை நோக்கிச் செல்லும் போது பார்ப்பதற்கு சுழலும் கரு மேகத் தூண் போலக் காட்சி அளிக்கும் என்கிறார். நடுக் கடலில் விழுந்து விடும் சேசடிமையை மீட்கும் காட்சி அவ்வளவு தெளிவாக எழுதப் பட்டிருக்கும். ஒரு திரில்லர் திரைப்படம் பார்த்த உணர்வு வரும். ஆபத்தையே தொழிலாகக் கொண்டது மீன் பிடித் தொழில் என்பது இதை வாசிக்கும் போது நன்கு விளங்கும். ஒரு உயிரைக் காப்பாற்ற அத்தனை பேரும் தம் உயிரையும் பணயம் வைத்து செல்வது மெய் சிலிர்க்க வைக்கும். காடு கடல் போன்ற வித்தியாசமான பரப்புகளில் வாழ்பவர்களின் வேரோடிய பிரச்னைகளை நாம் தெரிந்து கொள்ளவும் அவர்கள் மேல் இரக்கம் கொள்ளவும், அன்பு செய்யவும் இது போன்ற புத்தகங்கள் உதவும். வெறும் நிகழ்வுகளாக சொன்னால் ஆர்வம் குறையும் என்பதால் ஒரு கதை போலவும் கதை மாந்தர் தம் பழைய நினைவுகளை சொல்வது போல அந்தக் காலத்தில் இருந்த மீன் பிடி முறைகளையும் சொல்வது மிகவும் ரசனைக்குரியதாய் இருக்கிறது. படித்து பாருங்கள்!!!!
#நாவல் விமர்சனம் : நாவலின் பெயர் : கண் வரைந்த ஓவியம் ஆசிரியர் : தாமரை செந்தூர் பாண்டி பதிப்பகம் : சிவகாமி புத்தகாலயம். விலை : ரூ 100/- முதல் பதிப்பு : டிசம்பர் 1985 தாமரை செந்தூர் பாண்டி அவர்கள் எனது கல்லூரி காலங்களில் விகடனில் முதல் பரிசு வாங்கிய சிறுகதையின் ஆசிரியராக அறிமுகம். சமீபத்தில் ஒரு விழாவில் பொன்னீலன் அண்ணாச்சி நேரில் அறிமுகப் படுத்தினார். மிகவும் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர். அன்பாக பேசினார். இந்த நாவலும் 1982 ஆம் ஆண்டில் அமரர் சி.பா ஆதித்தனார் நினைவுப் போட்டியில் ரூ.ஐந்து ஆயிரம் பரிசு பெற்றது. வழக்கமாக வட்டார பின்னணியில் எழுதும் கதைகளிலிருந்து மாறுபட்டு பட்டணத்து கதா நாயகன் பற்றி எழுந்த கதை என்கிறார் ஆசிரியர். ஒரு நாவலில் நல்லவனைப் படைப்பதும் வில்லனைப் படைப்பதும் சமுதாயத்தில் பிரதிபலிக்கும். சினிமாவிலும் அப்படித்தான். தொடர்ந்து வரும் போது அது சிந்தனைக்குள் சிறகடிக்கும். அந்த வகையில் கதை நாயகன் குணசீலன் ஒரு ஆகச் சிறிந்த கதாபாத்திரம். தொடக்கத்தில் பள்ளி செல்லும் லீலாவைப் பின் தொடர்ந்து செல்லும் விசிலடிச்சான் குஞ்சாக காட்டப்படும் குணசீலன் மேல் அதற்கான காரணம் புரியும் போது மதிப்பு உயர்கிறது. குணசீலன் பெரும் பணக்காரன். நல்லவன். அவனுடைய எதிர் வீட்டில் தன் பெற்றோருடன் வசிக்கும் லீலா பேரழகி குணசீலனின் கண்களில். ஏன் சொல்கிறேன் என்றால் வெறும் புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆராதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இவர்களிடையே மெல்லக் கனிந்து வரும் காதலும் இணையப் போகும் நேரம் பிரிக்கும் பேரிடிகளும் கதையில் ஒரு அழகிய வலை போல் பின்னப்பட்டு இருக்கிறது. குணசீலனின் அன்பில் இருக்கும் அந்த அளவு தூய்மை லீலாவிடம் இல்லாதது போலவே எனக்கு தோன்றியது. தைர்யமாக நிற்க வேண்டிய ச்ந்தர்ப்பங்களில் பலவீனப் பட்டவளாகவே தோன்றுகிறாள். அப்படிபட்டவர்கள் மேல் வைக்கும் அன்பு விழலுக்கு இறைத்த நீராகவே போகும்.ஆரம்பத்தில் குணசீலன் பணக்காரன் என்று தெரிநநததும் காதலிக்கத் தொடங்குவதும், அவனுடைய உண்மையான அன்பைப் புரியாமல் தன்னைக் காப்பாற்ற எடுத்த முயற்சியில் அவன் பாதிக்கப் பட்டதும் அவனை விட்டு விலகுவதும் , அவளை திருமணம் முடித்தவன் தவிக்க விட்டு சென்ற காலத்தில் மறுபடியும் சந்தித்த குணசீலனோடு சேருவதுமாக அவளூடைய கதா பாத்திரம் சற்று சுய நலம் மிகுந்ததாகத் தான் காட்டப் பட்டிருக்கிறது. லீலாவின் அம்மா ஒரு மிகச் சிறந்த கதாபாத்திரம். கண்டிக்க வேண்டிய இடத்தில் மகளைக் கண்டிப்பதிலும் அன்பைப் பிறருக்குத் தெரிய காட்ட வேண்டிய இடத்தில் தெரிந்தும், மறைவாக அக்கரை காட்ட வேண்டிய இடத்தில் மறைத்தும் தாய்மை மிளிர நடமாடும் பெண்மணி. குணசீலனை வாழ வைக்கும் ரயிலே அவனுக்கு எமனாகவும் வருகிறது. கதா பாத்திரங்களோடு கை கோர்த்து கதை நெடுக வரும் ரயிலும் ஒரு கதாபாத்திரமே! மனிதர்களின் சுய நல மிக்க நடவடிக்கை பல இடங்களில் தோலுரித்து காட்டப்பட்டு இருக்கிறது. மிகவும் பிராக்டிகலாக முடிவு எடுக்கும் லீலா தன் கணவன் ஒரு குழந்தையையும் கொடுத்து வாழ வழியில்லாமல் விட்டுச் செல்லும் போது ஒரு முடிவு எடுக்கிறாள். அந்த வரிகள் கதையின் ஆரம்பத்திலேயே அந்த பாத்திரப் படைப்பை அடையாளம் காட்டி விடுகிறது. “கோழையாய் சாவதை விட கொடுமையாய் தன்னை விட்டுப் போனவனை பழி வாங்கி அவனுக்கு படையலிட்ட அமுதத்தில் விஷம் கலந்து ஏன் வாழ்ந்து காட்டக் கூடாது” பணத்துக்காக வேறொருவனின் உடல் பசியை தீர்க்க அவள் முடிவெடுக்கும் போது இப்படி வருகிறது. ஆனாலும் அவள் நல்லவளாகவே இருக்கிறாள். என்பதை டிக்கெட் எடுக்காமல் தான் ஏறிய ரயிலில் உட்கார இடம் இருந்தாலும் நின்று கொண்டே வருவதாகவும் ஒரு பெண்மணி வற்புறுத்தி அமரச் சொல்லும் போது அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி வேறு பெட்டியில் ஏறுவது போலவும் சொல்லி அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் ஆசிரியர். நான் மிகவும் ரசித்த வரிகள்: “ அடுப்பைப் பற்ற வைத்து உலை வைக்கும் பொழுது அவன், அவள் மனத்திரையில் கால் வைத்தான். அடுப்பில் தீ நாக்குகள் தகதகக்கும் பொழுது அதனுள் நின்று அவன் சீழ்க்கை அடித்தான்.” “ கொடுத்து கொடுத்தே கெட்டு போன இந்த மனிதனா கொடுங்கள் கொடுங்கள் என்று கை நீட்டுகிறான். 96 ஏ பக்கங்களில் நம் மனதை இளக வைத்த ஒரு நாவல். *******************************************************************************************************

03 May, 2023

புத்தகத்தின் பெயர் : ஹவுஸ் புல் ஆசிரியர் : ரா.கி.ரங்கராஜன். பதிப்பகம் : அல்லயன்ஸ் ஆசிரியர் 1500 க்கும் மேற்பட்ட கதைகளையும் 50 நாவல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் மொழி பெயர்ப்பு நாவல்களையும் எழுதி உள்ளார். எழுத்தாளர் சுஜாதா ரா.கி..ர பற்றி கூறியது “சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம் கொண்டவர்” இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளி வ்ந்தன. “ பல புனைவு பெயர்களில் எழுதினாலும் ஒவ்வொன்றுக்கும் நடையிலோ உருவத்திலோ கருத்திலோ தொடர்பு இல்லாத படி பார்த்துக் கொள்வார்” என்கிறார் கல்கி இவரைப் பற்றி.. ஹவுஸ் புல் ஆரம்பமே வித்தியாசமான கதை என்று சொல்லியது. முதல் அத்தியாயம் 4 என்று ஆரம்பிக்கிறது. அதிலிருந்து 4,3,2,1 என்று போகிறது. பைன்டிங் தவறோ என்று எண்ணம் வருகிறது. இல்லை அது வேண்டுமென்றே தரப்பட்டது என்று முன்னுரையில் சொல்கிறார். ராஜ நாராயணன் என்பவர் எழுதிய உயில் அவர் இறப்புக்குப் பின் அவர் குடும்ப நண்பர் கிருஷ்ணப்பாவால் குடும்ப உறுப்பினர் முன்னிலையில் வாசிக்கப் படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் எழுதப்பட்ட வித்தியாசமான இரண்டு உயில்கள்.. முதல் உயில் வாசித்து ஒரு வார காலத்துக்குப் பின் இரண்டாவது உயில் வாசிக்கப் படுகிறது. முதல் உயில் அவர்கள் நடவடிக்கையை கண்காணிக்க எழுதப்பட்ட டிரையல் உயில். கதையில் ஒரு இடத்தில் இப்படி வருகிறது. “ மாதவிக்கு கல்யாணமாகி விட்டதா? பிரிக்கவே முடியாத மூன்று முடிச்சுகள் அவள் கழுத்தில் போடப்பட்டு விட்டனவா? இனி ஆசையுடன் நினைப்பதற்கு கூட உரிமையில்லாத தூய மலராகி விட்டாளா” திருமணமான பெண்ணை ஆசையுடன் நினைப்பது கூட தவறு என்றிருந்த அந்த காலம் இனி வருமா? இப்போ கதைக்கு வருவோம் ஒரு பணக்கார தந்தைக்கு மூன்று குழந்தைகள். தசரதன், மல்லி, காமேஸ்வரி. மூன்று பேருமே பணக்கார சூழலில் வளர்ந்ததால் பொறுப்பற்று இருக்கிறார்கள். தசரதன் ஒரு மருத்துவராக இருந்தாலும் தான் முதலில் கவனித்த ஒரு நோயாளி இறந்து போனதாலேயே மருத்துவ தொழில் செய்யவே அச்சமுற்று இருக்கிறார். மல்லி தான் துணிந்து முடிவெடுக்க வேண்டிய எந்த சூழ்நிலையிலும் கோழையாக தப்பித்தி ஓடுகிறார். காமேஸ்வரி தான் பிறந்த வீட்டின் வசதி கணவன் வீட்டில் இல்லாததாலேயே தன் பிறந்த வீட்டுக்கே அடிக்கடி வந்து விடுகிறார். மூன்று குழந்தைகளுக்குமே நல்ல குணமும் கெட்ட குணமும் இருப்பதாக காட்டுகிறார். யாரையுமே முழுமையான நல்லவனாகவோ கெட்டவனாகவோ காட்டினால் அது புனைவு என்று அப்பட்டமாகத் தெரிந்து விடும். இதில் மூவருடைய குண நலன்களையுமே நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. காமேஸ்வரியுன் கணவர் ஒரு தொழிற் சங்க தலைவர். அவர் ஏழைகளோடு ஏழைகளாக வாழ விரும்புகிறார். படோபடோபம் விரும்பும் காமேஸ்வரியால் அந்த அளவுக்கு இறங்க முடிவதில்லை. ஆனாலும் கணவனை அன்பு செய்வதால் கூட போய் வாழ விரும்பினாலும் அவன் செய்யும் தியாக காரியங்கள் எரிச்சல் மூட்டுவதால் பழைய படி தன் தந்தை வீட்டுக்கே வந்து விடுகிறார். இத்தகைய குழந்தைகள் திருந்தி நல் வழிக்கு வந்தால் மட்டுமே தன் சொத்ஹ்டு அவர்களைச் சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்து இறந்து போகிறார் தந்தை. இவர்கள் மூவரும் கடந்து வரும் பாதையையும் இவர்களை அரவணைத்துச் செல்லும் அத்தைஅமிர்தம்மாளின் அன்பும் தான் கதையை நகர்த்துகிறது. அவர்கண் வீட்டிலேயே ஒரு ஓரமாய் அமர்த்து அங்கே நடப்பதை எல்லாம் பார்த்தது போல் இருக்கிறது கதை வாசித்து முடிக்கும் போது. நான் மிகவும் ரசித்த வரி. “ ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல சுபாவமும் இருக்குது . கெட்ட சுபாவமும் இருக்குது. அதது அவனவனுக்கேத் தெரியும். இல்லைன்னாலும் மத்தவங்க எடுத்துச் சொல்லாம இருக்க மாட்டாங்க. நல்ல சுபாவம்னு சொல்றதை உடும்புப் பிடியாய் பிடிச்சுக்கணும் கெட்ட சுபாவம்னு சொல்றதை தலையை சுத்தி வீசி எறிஞ்சிடணும்.” ஒரு நல்ல அனுபவம் ரா.கி.ரங்கராஜனின் ஹவுஸ் புல்

21 April, 2023

நாவலின் பெயர் : மலரும் சருகும் ஆசிரியர் : டி. செல்வராஜ் NCBH பதிப்பகம். விலை : ₹200 இவர் எழுதிய "தோல்" என்னும் நாவல் 2012 இல் சாகித்ய அகடமி விருது பெற்றது. தோல் பதனிடும் தொழிற்சாலையில் உழைப்பவர்களின் துன்பங்களைப் பற்றிய நாவல் . "மலரும் சருகும் " நாவலின் முதல் பதிப்பு 1966 இல் வெளி வந்திருக்கிறது. கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்கு முன். நல்ல வரவேற்பு இருப்பதால் இன்று வரை பதிப்பிக்கப்படுகிறது. இதை தலித் படைப்பிலக்கியத்துக்குள் கொண்டு வரவும் முடியவில்லை. நிராகரிக்கவும் முடியவில்லை என்கிறார் ஆசிரியர். அந்த காலத்தில் வலு மிகுந்தவர் வலுவற்றவர்களை எப்படி எல்லாம் ஏய்க்கிறார்கள் என்பதை கதை சொல்கிறது. ஏய்ப்பவர்களில் ஜாதி பாகுபாடு இல்லை. அதனால் ஆசிரியர் இப்படி சொல்லி இருக்கலாம் என நினைக்கிறேன். அந்த கால கதையாதலால் ஜாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது போல் தோன்றுகிறது. ஆனால் அன்று நடைமுறை அது தானே. ஒவ்வொரு பெயரோடும் அவரது ஜாதிப் பெயரும் இணைந்து வரும். அதனால் நம் மனதை அந்த காலத்தில் இறுத்தி வாசிக்க வேண்டும். இல்லையென்றால் நடக்கிம் நிகழ்வுகள் கண்டு மனம் கொந்தளிக்கும். " மறக்குடி வழியே பள்ளப்பய செருப்பைக் கழட்டாம போவானா" என்ற வரியில் வார்த்தைக்கு வார்த்தை அந்த காலத்தின் வன்மம் தெரிக்கிறது. அதே போல ஒரு குடும்பத்துக்குள் திருமண காரியத்துக்காக மதம் மாறிய ஈசாக் , தன் தந்தை இன்னும் ஆதி மதத்தில் இருந்தாலும் , அவர் நம்பிக்கைகளை மதிப்பதை பார்க்கும் போது அந்த கால நாகரீகம் உயர்வாகத் தோன்றுகிறது. மாடசாமிக் குடும்பன் தன்னைக் கடிந்து கொள்ளும் பேரனிடம் " மேல் குலத்தவங்களைக் கண்டதுமே என்னை அறியாமலேயே தலைத் துண்டு இடுப்புக்கு வந்திடுது கை இரண்டும் நெஞ்சிலே குவிஞ்சிடுது" என்கிறார். பேரன் மோசேயின் தைர்யத்தையும் தன்மான உணர்வையும் பார்த்து மாடசாமிக்கு பூரிப்பு பொங்குகிறது. வேலாண்டி என்னும் ஆடு மேய்க்கும் சிறுவனை பாத்திமா பீவி தன் இச்சைக்கு பயன்படுத்திக் கொள்வதை படிக்கும் போது நாம் அன்று முதல் இன்று வரை பெண் குழந்தைகள் அளவுக்கு ஆண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் இருக்கிறோமே என்னும் பதைப்பு ஏற்படுகிறது. கிழவனின் நிலத்தை அடமானம் வைத்து கொடுத்த பணத்தில் வேலாண்டி மகன் நகரத்தில் வித விதமாய் விலையுயர்ந்த உடை வாங்கி உடுத்தி வசந்தி என்னும் பெண்ணை மயக்க முயல்வதை வாசிக்கும் போது இத்தகைய பொறுப்பற்ற பிள்ளைகள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஊர்க்குடும்பன் வீட்டு விஷயம் ஒன்று பஞ்சாயத்துக்கு வருகிறது. அப்போது அவர் " என் வீட்டுக்குப் பெண் கொடுத்தவங்க விவகாரம். எம் பையனுக்கும் இதிலே பங்கு உண்டு. நான் தலையிட்டா குடும்பன் ஓரவஞ்சமா பேசுதாண்ணு பேர் வரும்" என்று சொல்லி ஒதுங்குகிறார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு பாடம் இது. அடிமைப் பட்டுக்கிடந்த எளிய சமுதாயம் ஒன்றின் சில குருத்துகள் எதிர்ப்பு குரல் கொடுக்கின்றன. வெற்றி பெற்றதாக காட்டப்படவில்லை எனினும் இன்றைய பல மாற்றங்களுக்கு தொடக்க புள்ளி இவை தானே. நம் நூலகத்தில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு புத்தகம்.

16 April, 2023

புத்தகத்தின் பெயர் : மூன்றாம் பிறை. தமிழில் : கே வி சைலஜா . இது மம்மூட்டி அவர்களின் வாழ்வு அனுபவம். வம்சி வெளியீடு . விலை 130 ரூபாய் கேரளாவில் வைக்கத்துக்கு பக்கத்தில், "செம்பு " என்ற கிராமத்தில் , இஸ்மாயில் , பாத்திமா தம்பதிகளின் மகனாகப் பிறந்தார் மம்முட்டி. சட்டக் கல்லூரியில் படித்தவர். மலையாளம்மலையாளம் , தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ,ஆங்கிலம் (அம்பேத்கார் பற்றிய படம்) போன்ற மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரது முதல் படம் "வில்காணுண்டு சொப்பனங்கள்" . தமிழில் "கனவுகள் விற்பனைக்கு இருக்கிறது" இவர் சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் பலமுறையும் பெற்று இருக்கிறார். இந்தியாவின் மிக உயரிய விருதாகிய "பத்மஸ்ரீ" பட்டம் பெற்றவர். தமிழ் படுத்திய கே.வி. ஷைலஜா கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். வம்சி புக்ஸ் என்ற பதிப்பகத்தை நடத்துகிறார். கணவர் பெயர் பவா செல்லதுரை. நாம் அனைவரும் அறிந்தவரே தான். மகன் வம்சி. மகள் மானசி. முகமது குட்டி என்று மம்மூட்டிக்கு வைக்கப்பட்ட பெயர் மம்முட்டியாக மாறி இருக்கிறது . அவருக்கு அந்த பெயர் பிடிக்காததால் அதை மறைத்து ஒமர் ஷரீஃப் என்று கல்லூரியில் சொல்லியிருந்திருக்கிறார் . அதை ஒரு மாணவன் கண்டுபிடித்து விட, அவரை அனைவரும் மம்மூட்டி என்று அழைக்க தொடங்கி இருக்கிறார்கள் அதில் இருந்து அவர் மம்முட்டியானார். அவரது மூன்றாவது படத்தில் நடிக்கும் போது பி.ஜி. விஸ்வாம்பரன் என்பவர் இவர் பெயரை சுஷில் என்று மாற்றி அடைப்புக் குறிக்குள் மம்முட்டி என்று போட்டிருந்திருக்கிறார். ஆனால் அடைப்புக் குறிக்குள் இருந்த பெயரே நிலைத்து விட்டது. ரொம்ப வெளிப்படையாக, பெண்களைப் பொருத்த வரை , மலையாளிகளின் மன நிலையை ஒத்துக் கொண்டு்ள்ளார். ஒரே மேடையில் அமிதாப் பச்சனோடு அமர்ந்திருந்த போது, அவர் வயதுக்கு ஏற்ப, பெண்களுக்கு எழுந்து மரியாதை செய்த போது தான் தன் மனநிலை இவருக்கு புரிந்திருக்கிறது. இதை நினைக்கும் போதெல்லாம் ஒரு குற்ற உணர்வு மேலிட தன்னைத் திருத்திக் கொள்ள முயல்வதாக வெளிப்படையாக ஒத்துக் கொண்டுள்ளார். ரதீஷ் என்ற நண்பனின் மரணம் பற்றி சொல்லும் போது "தவறுகளுக்குப் பிராயச் சித்தம் கேட்க ஒரு வாய்ப்பினைக் கூடத் தராமல் மரணம் ஏன் எங்கேயோ தாகத்துடன் காத்திருந்தது" என்று வருகிறது. நல்ல மொழி அழகு. இது மொழி பெயர்ப்பின் போது சேர்ந்த அழகா எனத் தெரியவில்லை. இப்படி ரசிக்கத் தக்க பல இடங்கள். அடுத்து புத்தகத்தின் தலைப்பான மூன்றாம் பிறை என்று ஒரு கட்டுரை. ஆசிரியர் ஷைலஜா தன் முன்னுரையில் சொல்லி இருக்கிறார் , இந்த தலைப்பை வைக்கும் முன் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் அனுமதி கேட்டதாகவும், அவர் அனுமதித்து "மூன்றாம் பிறையில் தான் நல்ல விஷயங்கள் செய்வார்கள். மூன்றாம் பிறை கண்ணுக்குத் தெரியாது சட்டென்று மறைந்துவிடும் . ஆனால் மிக முக்கியமானது" என்று சொன்னதாக எழுதி இருக்கிறார். இந்த கட்டுரை எனக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தது . முதிய தம்பதியர் இடையே ஏற்பட்ட விவாகரத்து வழக்கு பற்றிய ஒரு கட்டுரை. மனதை நெகிழ வைத்தது. விவாகரத்து என்ற விஷயத்தில், சம்பந்தப்பட்டவர் தவிர மற்றவர்கள் எவ்வளவு அதிகம் பங்கு எடுக்கிறார்கள் என்பதை உணர் வைத்த கட்டுரை. உயிர் காத்த ராணுவ வீரர் பற்றிய கட்டுரை ரட்சகன். வீட்டிலிருப்பவர்களுக்கு இனிமையான நினைவுகளாக மாற விருந்தினர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லும் "விருந்தினர்கள்" கட்டுரை. வேலைப் பளுவைக் காரணம் சொல்லி வாக்களிக்காமல் இருந்து ஜனநாயகத்தை குறை சொல்வது கோழி முட்டையை நன்றாக அடை காத்து அன்னப்பறவை பொரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கு ஒப்பானது என்று சொல்லும் "லஞ்சத்தின் வேர்" என்ற கட்டுரை. இப்படி பல சுவாரஸ்யமான கட்டுரைகள் நிறைந்த புத்தகம்.

22 February, 2023

நாவலின் பெயர் : தளிர் ஆசிரியர். : நஸீமா ரசாக் மெட்ராஸ் பேப்பர் பதிப்பகம். விலை : ரூ 310/- ஆசிரியரின் உலகம் குழந்தைகளால் சூழப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு படிப்பும் சத்தான ஆரோக்கியமான உணவும் கொடுப்பது போலவே உணர்வுகளும் எண்ணங்களும் செழுமையாக ஆக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். இந்த புத்தகம் குழந்தைகளின் உலகுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும் என்று நம்புவதாக சொல்கிறார் . அழைத்துச் செல்கிறது. கதை தொடங்கும் போது துபாயின் சான்ட் சின்றோமோடு தொடங்குகிறது. அதை ராஜஸ்தானில் அனுபவித்தவள் என்ற வகையில் ஆரம்பமே என்னை விறுவிறுப்பாக உட்கிரகித்துக் கொண்டது. அங்கே வார விடுமுறை வெள்ளி . அன்று கூலி வேலைக்கு நாடு விட்டு நாடு வந்திருக்கும் பலரும் சில இடங்களில் கூடுவார்கள் . காசு செலவு செய்து வேறு எங்கும் செல்ல முடியாததால் பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் புல்வெளிகளில், சாலைகளுக்கு நடுவில் இருக்கும் புல்வெளிகளில் நிறைந்து விடுவார்கள் என்கிறார். தன் குடும்பம் முன்னேற தம் வாழ்வை பலியாக்கும் ஒரு குழு நம் கண் முன் வருகிறது. பல நாடுகளிலும் இருக்கும் கல்லூரி தோழிகள் ஸ்கைப்பில் இணைந்து பேசுகிறார்கள். தங்கள் குழந்தைகளோடு அவர்கள் சந்திக்கும் முரண்பாடுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நல்ல ஐடியாவாக தோன்றுகிறது கல்லூரி தோழிகளிடம் நம் பிள்ளைகளின் குறைகளைப் பற்றி பேசுவதில் ஈகோ இருக்காது . பர்வீன் கதையின் நாயகி அவள் வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து, தனது தோழிகளுடன் தொடர்பில் இருந்து, இளம் குழந்தைகளுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கிறார் ஒவ்வொரு பெண்ணும் நாம் பர்வீன் போல இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் கதாபாத்திரம் . குளிர் மாதங்களில் அமீரகம் நோக்கி புலம் பெயர்ந்து வரும் பறவைகள் பற்றிய விவரிப்பு வரும்போது நமக்கும் ஒரு சரணாலயத்தில் இருக்கும் உணர்வு வருகிறது. கடலில் குளிப்பதில் இருக்கும் புத்துணர்ச்சி பாலைவன மணலிலும் இருக்கிறது என்கிறார்கள் . "சில நேரங்களில் பெற்றோர்களின் தவிப்பு கடுமையான கண்காணிப்பாக மாறும் போது அது பிள்ளைகளுக்கு வேதனையை தந்து விடுகிறது" உண்மைதான் சமூக வலைதளங்களில் குழந்தைகளை சூறையாடும் கயவர்களும் இருப்பதால் இது அவசியம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும் கதையில் 124 வது மாடியில் இருப்பதாக வந்தது இத்தனை உயரம் ஆடிகள் எப்படி கட்டுறாங்க என்ற ஆச்சரியமும் துருக்கியில் நடந்த நிகழ்ச்சியின் ஞாபகமும் ஒருசேர எழுந்தது அந்தக் கட்டடத்தில் மொத்தம் 142 மாடிகள் என்கிறார் . கதை முடியும் வரை நம்மையும் துபாயிலேயே இருத்தி வைத்துக் கொள்கிறார் ஆசிரியர். தாய்மை ததும்பும் கதை வாசிப்பதற்கு இதமாகத் தான் இருக்கிறது.

07 February, 2023

புத்தகத்தின் பெயர் : ஐந்து நெருப்பு ஆசிரியர் : ஜெய மோகன். விஷ்ணுபுரம் பதிப்பகம். விலை : ரூ 280/- ஆசிரியர் தனது பன்னிரண்டாவது வயதில் இருந்து எழுதி வருகிறார். இவர் எழுதிய “ரப்பர்” என்னும் நாவல் அமரர் அகிலன் விருது பெற்றது. இன்னும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் நூறாண்டு நவீனத் தமிழிலக்கியத்தின் மாபெரும் இலக்கிய முயற்சி என்று பாராட்டப் பட்டது. மஹாபாரதத்தை “வெண்முரசு” என்ற பெயரில் உலகின் பெரிய இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக எழுதி இருக்கிறார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இது ஒரு சிறு கதைத் தொகுப்பு. இதைப் பற்றி ஆசிரியரே சொல்வது. “ தன்னை சமூக உறுப்பினன் என்று உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னைத் தனி மனிதனாக உணர்கிறது. தன் நலத்தை தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறி செல்கிறது. அவ்வண்ணம் மீறிச் செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திய நிறைவு அது. குற்றத்தின் தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை” மொத்தம் பத்து சிறுகதைகளின் தொகுப்பு. இதில் தலைப்புக்குரிய “ஐந்து நெருப்பு என்னும் கதையை வாசிக்கும் போது கண்ணுக்கு முன் பார்ப்பது போலவே இருந்தது. பொதுவாகவே சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் கண் முன் நிகழ்வது போலவே இருக்கும். ஆனால் இதில் இன்னும் சிறப்பு ஏதோ தெரிகிறதே என்று பார்த்தால் இந்த கதையை அடிப்படையாக வைத்துத் தான் சிம்பு நடித்த “ வெந்து தணிந்தது காடு” என்னும் படத்தை எடுத்திருக்கிறார்கள். அந்த திரைப்படத்தின் திரைக்கதை ஜெயமோகன் அவர்கள் தான். அதில் எரியும் முள்ளுக் காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் இளைஞன் வீட்டுக்கு வந்து படுக்க முடியாமல் தவிக்கும் போது அவன் தங்கை ஒவ்வொரு முள்ளாக எடுத்து மஞ்சள் தடவும் போது கண்ணீர் வரும். அத்தனை கதைகளிலும் காவல்காரர்களின் பங்கு உண்டு. “பிறசண்டு” என்னு,ம் முதல் கதையில் வயதானவர் ஒருவர் இரவில் எழுந்து வரும் போது உள்ளே மாடிப்படியில் அமர்ந்திருக்கும் திருடன் அவர் வீட்டு மனிதர் என்று நினைத்து கேட்கும் கேள்விக்கும் அமைதியாக பதில் சொல்வதும் பின் மாட்டிக் கொண்ட பிறகு காவல் நிலையத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கு,ம் சம்பாஷணையும் நகைச்சுவை நிறைந்தது. சுக்ரன் என்னும் கதையில் “ அழகப்பன் ஜெயிலு விட்டு வந்ததுமே டிபி வந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலே செத்தான். அப்பல்லாம் ஜெயிலுக்கு போனாலே டிபி வந்திரும்” என்று வருகிறது. இன்று அது மாறி இருக்கும் என்று நம்புகிறேன். நான் ரசித்தது. பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் மனிதர்களின் பெயர்களையும் நினைவு வைத்து காவல் அதிகாரிகளுக்கு குற்றவாளிகளை பிடிக்க உதவும் ஒரு முதிய ஓய்வு பெற்ற காவலர் சொல்வது” பேருகளை ஒரு தடவைக்கு பத்து தடவை சொல்லிக்கிடுவேன். அப்டியே மனசிலே பதிஞ்சிரும். நான் இதெல்லாம் பெயரா நினைச்சுக்கிடுறதில்லை. அப்டியே முகங்களா உயிருள்ள ஆட்களா, நான் நேரிலே பழகினவங்களா நினைச்சுக்கிடுவேன்” ஒரு கதையை வாசிக்கும் போது கூட தொடக்கத்தில் வரும் பெயர்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு நாம் சந்தித்த நபரோடு தொடர்பு படுத்தி கொண்டால் கதையோடு ஒன்ற உதவும்.. இழை என்றொரு கதை. சர்க்கஸில் பணி புரிபவர்களைக் களமாகக் கொண்ட கதை. சஸ்பென்ஸ் கடைசி வரை அழகாக நகர்த்தப் பட்டு இருக்கிறது. விருந்து என்ற கதையில் தூக்குத் தண்டனைக் கைதி சாமிநாத ஆசாரியிடம் அவர் சாகு முன் நாமும் ரெண்டு வார்த்தை பேசி விட வேண்டும என்ற ஆசை எழுவதை தவிர்க்க முடியாது. ஏழாம் கடல் என்ற கதையில் பிள்ளைவாளுக்கும் வியாகப்பனுக்கும் உள்ள நட்பு வித்தியாசமானது. ஆனால் கதை முடிவின் காரணம் விளங்கவில்லை. பிள்ளைவாள் கிடைத்த முத்தை பற்றிய விஷயத்தை ஏன் நண்பனிடம் சொல்லவே இல்லை. இது தவிர “ ஏழாவது” “அறமென்ப”” “கூர்” “ பேசாதவர்கள்” என நான்கு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதமான கதைக்கரு. ஆசிரியரிடம் ஆயிரமாயிரம் கதைக் கருக்கள் இருக்குமென்று தோன்றுகிறது.

03 February, 2023

“ராங்கி” என்றொரு தமிழ்படம் நெட்ப்ளிக்ஸில் பார்த்தேன். படத்தின் ஹீரோ த்ரிஷா. ஆம் படத்தின் முக்கிய கதாபாத்திரம் த்ரிஷா தான். ஏ.ஆர்.முருகதாஸின் கதைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் : M. சரவணன். சோஷியல் மீடியாவின் ஆபத்தை அப்பட்டமாக சொல்லும் படம். ஆனால் சோஷியல் மீடியாவில் இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் ஆபத்தை சொல்லும் படம். ஆன்லைன் மீடியாவில் ரிப்போர்ட்டராக பணி புரியும் தையல் நாயகி.யாக த்ரிஷா கலக்கி இருக்கிறார். அவள் அண்ணன் மகள் சுஷ்மிதா பள்ளி மாணவி. அவளுக்கு முக நூல் கணக்கு கிடையாது. ஆனால் அவள் உடன் படிக்கும் மாணவி தான் அழகாக இல்லாததால் தனக்கு நண்பர்கள் அதிகம் முக நூலில் இல்லை என சுஷ்மிதாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி ஒரு கணக்கு தொடங்கி தன்னுடன் சாட் செய்பவர்களுடன் அத்து மீறி நடந்து கொள்கிறாள். சாட் செய்யும் நண்பர்களில் ஒருவன் அவளுடைய ஆடை இல்லா முகம் இல்லா படத்தை அவள் தந்தைக்கு அனுப்ப தனது மகள் படம் என்ற அச்சத்தில் அந்த விபரீத விஷயம் த்ரிஷா வுக்கு தெரிவிக்கப் படுகிறது. அந்த காரியத்தை மிகவும் துணிச்சலாக கையாள்கிறார் தையல் நாயகி. ஒரு நிலையில் “ நான் லோக்கல்ல ஒரு பிரச்னையை உன்னிடம் கொண்டு வந்தால் அதை இன் டர்நேஷனல் பிரச்னையாக்கி விட்டாயே என்று அண்ணன் ஆதங்கப் படுகிறார். முக நூலின் ஆபத்தை மிக அழுத்தமாகவும் அதிலும் முக்கியமாக பெண்கள் எத்தகைய மன தைரியத்துடன் கையாள வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். பெண்களின் பிரச்னையையும் உலக அரசியலையும் அழகாக கொண்டு இணைத்திருக்கிறார்கள். வித்தியாசமான முயற்சி. த்ரிஷா கதா நாயகி. கதாநாயகன் படத்தில் இல்லை. இடையிடையே இப்படிப் பட்ட துணிச்சலான முயற்சியும் தேவையாகத் தான் இருக்கிறது. த்ரிஷா நடிப்பில் முதிர்ச்சியும் சண்டைக் காட்சிகளில் சுறுசுறுப்பையும் காட்டி இருக்கிறார். வறண்ட பாலைவனத்தில் தீவிரவாதக் கும்பலோடு இருக்கும் ஆலிம் மனத்தில் முகிழ்க்கும் மென் காதலும் அது அவனுக்கு கொடுக்கும் பரவசமும் அழகாக காட்டப் பட்டு இருக்கிறது. பெண்களை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தும் நியாயமற்ற முறை மாற வேண்டும். அதற்கு இது போல் பல படங்கள் வர வேண்டும்.

02 February, 2023

நான் உறுப்பினராக இருக்கும் “வாருங்கள் படிப்போம்” குழுவிலிருந்து ஒரு ஸூம் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்பொழுது ஊரெல்லாம், உலகமெல்லாம் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கும் CHATGPT ஐப் பற்றி அதில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கும் மைக்ரோ சாப்ட்டின் இயக்குனர் மனோஜ் சிசில் விளக்கம் அளித்தார். எங்கள் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். தற்போது கூகுளில் நமக்குத் தேவையான தகவல்களை search engine மூலம் கண்டு பிடித்துக் கொள்கிறோம். இது இன்னும் பல செயல்களை செய்து விடுகிறது. உதாரணமாக ஒரு மாணவனுக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை வேண்டுமென்றால் அது கட்டுரையாகவே தயாரித்துக் கொடுத்து விடுகிறது. இன்னும் தகவல்களை அதிகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கேற்ற கேள்விகளைக் கேட்டு மெருகேற்றிக் கொள்ளலாம். இது பரிசோதனை முயற்சியில் தான் இருக்கிறது. சிக்கல்கள் வர வர சரி செய்து மெருகேற்றிக் கொள்ளும். இந்த இடத்தில் எல்லோருக்கும் ஏற்பட்ட பொதுவான சந்தேகத்தை நண்பர் ஒளிவண்ணன் கேட்டார். ஒரு வகுப்பின் எல்லா மாணவர்களும் இதை பயன்படுத்தி ஒரு கட்டுரை தயாரித்து ஆசிரியரிடம் கொடுத்தால் எல்லாம் ஒரே மாதிரி இருக்குமே. அது மாணவர்களை மதிப்பிட எப்படி உதவும் என்றார். அதற்கு நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றார் போல் கட்டுரையும் வேறுபடும் என்றார். பதிப்பக துறையில் இதன் பயன்பாடு அதிகம். பிழை திருத்தம் இதன் மூலம் செய்து விடலாம். பிழையில்லாமலும் வேகமாகவும் செய்து முடிக்கும். உலகின் பல நாடுகளின் மொழிகளில் மொழி பெயர்க்கலாம். அது மிகவும் உதவும். பிற நாடுகளின் சிறந்த நாவல்களை தமிழில் மொழி பெயர்த்து படிக்கலாம். தமிழின் சிறந்த படைப்புகளை பிற மொழிகளுக்கு சுலபமாக கொண்டு செல்லலாம்.. இப்பொழுது பயன்பாட்டில் speech to text என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அதில் வருவதை பிழை திருத்துவது மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. ஆனால் CHATGPT யில் ஒரு மொழியின் பல உச்சரிப்புகளையும் சரியாக புரிந்து கொள்ளும் வகையில் வசதி செய்து தரப் பட்டிருக்கிறது என்றார். எனக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். இப்பொழுதே நம் மூளையின் செயல் திறத்தில் மிக குறைந்த பகுதியையே பயன் படுத்துகிறோம் என்கிறார்களே. அதிலும் இப்படி ரெடிமேடாக கேட்பதையெல்லாம் கொடுத்து விட்டால் மூளையின் திறன் இன்னும் குறைந்து விடாதா? என்றேன். ஒரு இயந்திரம் மனிதனின் எண்ணங்களை மேம்படுத்த தான் பயன்படுமே ஒழிய மனிதனுக்கு மாற்றாக முடியாது என்றார். டெக்னாலஜி வளர்ச்சி என்பதை நிறுத்த முடியாது. அதோடு சேர்ந்து நாமும் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்றார். அதற்கு உதாரணமாக புகைப்பட பிலிம் நிறுவனமான கோடக் முழுமையாக அழிவை சந்தித்ததை சொன்னார். எனக்கு கணினி வந்த புதிதில் எங்கள் துறையில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் படிக்க மனமில்லாமல் தெரிந்து கொள்ளாமல் இருந்த போது அவர்கள் சந்தித்த சிரமங்கள் நினைவுக்கு வந்தது. அந்த சமயத்தில் படிப்பறிவில்லாதவர்கள் (illiterates) போல கணினி படிப்பறிவில்லாதவர்களூம் (computer illiterates)இருந்தார்கள்.. இருபது ஆண்டுகளில் எல்லா வேலைகளுக்கும் கணினி அறிவு கட்டாய தேவை என்றாகி விட்டது. எந்த ஒரு வளர்ச்சியிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். அன்னப் பறவை போல நமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள நாம் , முக்கியமாக வளரும் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். அதை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. ஒரு புது விஷயத்தைத் தெரிந்து கொண்ட திருப்தி ஏற்பட்டது.

01 February, 2023

நாவலின் பெயர் : சஞ்சாரம் ஆசிரியர் : எஸ். ராம கிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம். விலை : ரூ 340/- எஸ். ரா மல்லாங்கிணறு கிரமத்தில் பிறந்து வளர்ந்து முழு நேர எழுத்தாளராக சென்னையில் வந்து குடியேறுகிறார். பல சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள், திரைப்பட நூல்கள், எழுதி உள்ளார். குழந்தைகள் நூல்கள், உலக இலக்கிய பேருரைகள் வரலாறு, நாடகத் தொகுப்பு, நேர் காணல் தொகுப்பு, மொழி பெயர்ப்பு நூலகளென இவர் எழுத்து விரிந்து கொண்டே செல்கிறது. இந்த நாவல் நாதஸ்வரக் கலைஞர்கள் பற்றியது. சஞ்சாரம் என்ற பெயருக்குப் பொருத்தமாய் கதை மாந்தர்கள் ஒவ்வொறு ஊராய் செல்வது பற்றிய கதை. அந்தந்த ஊர்களின் பெயரே அந்தந்த அத்தியாயத்தின் தலைப்புகளாக வைத்துள்ளார். ஒவ்வொறு அத்தியாயத்தினையும் க்ன்ணி போல் இணைத்து கதையை நகர்த்திச் செல்கிறார். புது விதமான நடையாக இருக்கிறது. ரத்தினம் , பக்கிரி இன்னும் இருவருடன் ஒரு கோயில் திரு விழாவுக்கு நாதஸ்வரம் வாசிக்கப் போகிறார்கள். அங்கே ஒரு தகராறு உண்டாகி ரத்தினம் , பக்கிரி இருவரையும் மரத்தில் கட்டி வைக்கிறார்கள். பூசாரி யாருக்கும் தெரியாமல் கட்டவிழ்த்து விட பக்கிரி கோபத்தில் கோவில் பந்தலுக்குத் தீ வைக்க இருவரும் தப்பிக்கிறார்கள். கண்ணுசாமி என்றொரு நாயனக்காரர். ஊர் எதிர்ப்பை மீறி செருப்பு தைக்கும் கருப்பையாவிற்கு நாதஸ்வரம் வாசிக்க சொல்லித் தருகிறார். பக்க வாத்தியக் காரர்கள் உடன் வாசிக்க மறுத்து விடுகிறார்கள்.. எந்த கோயிலுக்குள்ளும் அனுமதி இல்லை. த்ன்னால் இப்படி ஆகி விட்டதே என்று கருப்பையா தூக்கிட்டுச் சாகிறார். கொஞ்ச நாளிலேயே கண்ணுசாமி காலரா வந்து இறந்து போகிறார். அருமையான கதா பாத்திரங்கள். சாமிநாத பிள்ளை என்ற ஒரு கலைஞருக்கு கொடுக்கப்படும் மரியாதையை விவரிப்பதைப் பார்க்கும் போது மலைப்பாய் இருக்கிறது. அந்தக் காலத்தில் கலை எவ்வளவு மதிக்கப்பட்டு இருக்கிறது. எவ்வளவு கம்பீரம் காத்திருக்கிறார்கள் கலைஞர்கள். மக்களும் இன்றைப் போல் அலைபேசியில் மூழ்காமல் ரசித்திருக்கிறார்கள். . எவ்வளவு கம்பீரம் காத்திருக்கிறார்கள் கலைஞர்கள். கலைஞர்களைக் கவுரவித்து கையில் இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுத்த ஜமீன்ககளின் பரிதாப நிலையும் அப்போது கூட குறையாத அவர்கள் கம்பீர நடையையும் அழகாக சொல்லி இருக்கிறார். இடையிடையே பல சிறு கதைகளைச் சொல்கிறார். கரிசல் காட்டில் மழையின்றி போனதற்கு ஒரு கதை சொல்லப் படுகிறது. கரிசல் நிலத்து மக்களுக்கு கோபம் அதிகம். ஆனால் அது மனதுக்குள் உறைந்து போகாது. ஒரு காலத்தில் கரிசல் காட்டு ஆண்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்களாம். ஆனால் இப்போது ஆழ் துளை கிணறு போட்டு வீட்டுக்கு வீடு தண்ணீர் வந்து விட்டதால் அது மாறி விட்டது என்கிறார். அவர்கள் இருட்டுக்கு பழகிய கண்களைக் கொண்டவர்கள். அதனால் பயமற்றவர்கள் என்கிறார். கரிசல் மண்ணில் வீசும் ஒரு வகைக் காற்றுக்குப் பெயர் “வலியன்”. இந்த பெயர் வரக் காரணம் வலி மிகுந்தது. வலியன் என்றொரு ஆட்டுக்காரன். தன் ஆடுகளை ஒரு இடத்தில் விட்டு விட்டு தண்ணீர் தேடிச் செல்கிறார்ன். வந்து பார்த்தால் மொத்த ஆட்டையும் காணோம். அவன் தூக்கிட்டு மரித்துப் போகிறான். வேகமாக வீசும் காற்று ஆடுகளைத் தேடி அலையும் வலியனைப் போல் இருப்பதால் அந்த பெயர் என்கிறார். கில்ஜி மாலிக்கபூர் இருவரின் ரகசிய வாழ்வு ஒரு கதையாக சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் ஏன் நாதஸ்வரம் வாசிக்கப் படுவதில்லை என்பதற்கு ஒரு கதை. தன்னாசி என்ற கண் தெரியாத பையனுக்கும் சரஸ்வதி என்னும் பெண்ணுக்கும் இடையேயான குழந்தை நட்பு அவ்வளவு அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் பின்னாளில் தன்னாசி ஒரு கொடூர சைக்கோ போல் நடக்கத் தொடங்கி விடுவார். நான் ரசித்த வரிகளைச் சொல்லாமல் பதிவு நிறைவு பெறாது. “ கல் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு பால் குடிக்கும் குட்டி ஆடு போல பாத்திரத்தை முட்டுவதும், அடுப்பை விட்டு தலையை வெளியே எட்டிப் பார்த்து அடங்குவதுமாய் இருந்தது” “ விசித்திரமான மனிதர்கள் வலியூட்டும் நினைவுகள் மறக்க முடியாத பயம் இவை தான் நினைவில் எஞ்சி இருக்கின்றன” வாசிக்க வேண்டியவை என்று ஒரு வரிசை வைத்திருந்தால் அதில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “சஞ்சாரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

20 January, 2023

புத்தகத்தின் பெயர் : வாதி ஆசிரியர் : நாராயணி கண்ணகி “எழுத்து” பிரசுரம் விலை : ரூ 320/- இந்த புத்தகம் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் தமிழரசி அறக்கட்டளை இலக்கிய விருது 2021 இன் மூன்றாம் பரிசு பெற்றது.. இந்த ஆசிரியர் எழுதியவற்றுள் நான் வாசிக்கும் முதல் நாவல். இப்பொழுதெல்லாம் இலக்கியத் தரம் வாய்ந்த புத்தகங்களை வாசித்து முடிக்கும் போதே மறுபடியும் முதலில் இருந்து வாசிக்கணும் என்ற எண்ணம் வருகிறது. கண்ணப்பன் என்பவர் தன் கதை சொல்லுவது போல் வருகிறது. அவரை அழைக்க க்யூ பிராஞ்ச் போலீஸ்காரன் சந்திரகுமார் வருகிறார். எதிரில் வரும் மாடுகள் மடியைச் சுமந்து கொண்டு அரக்கி அரக்கி நடப்பதைப் பார்க்கும் போது பால்மடி முதுகில் வரும் படி தயாரித்தாலாவது பரவாயில்லை எப்படியும் கன்று குட்டிகளுக்கு பால் கொடுக்கப் போவதில்லை என் நினைக்கிறார்.அந்த இளகிய மனசுக்காரர். “ ஞாபகம் தான் நாம் பிறந்ததிலிருந்து புலன்களெனும் ஆயுதம் தாங்கி வாழ்நாளெல்லாம் தொடரும் யுத்தங்கலிலிருந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் உத்தி” இந்த ஞாபகத்தின் வலு வயதானவர்களைக் கேட்டால் தான் தெரியும். சமயத்தில் ஒரு பெயர் நினைவுக்கு வராமல் அவர்கள் படும் பாடு. அதென்ன பெயர்களில் மட்டும் நினைவுபடுத்துதலில் அததனை தடுமாற்றம்..இதைக் கேட்ட போது என் நண்பரின் தந்தை சொன்னார் “ முதலில் மறக்கத் தொடங்குவது பெயர்களும் எண்களும் தான்”என்று. கண்ணப்பனின் சிறு வயது நினைவில் கதை தொடர்கிறது. நடராசண்ணன் தன்னோடு அவனை தான் செல்லும் இடத்துக்கெல்லாம் அழைத்துச் செல்கிறார். நடராசனின் தொழில் அங்கே வரும் கூட்ஸ் ரயில் மேடேறி மெல்ல போகும் போது பாய்ந்து ஏறி அதில் உள்ள அரிசி கோதுமை போன்றவற்றின் மூட்டைகளை கீழே தள்ளி தன் கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பங்களுக்கும் பகிர்ந்து கொடுப்பார். சோஷலிச “ வாதி.” கண்ணப்பனின் அம்மா ஒரு முறை சொல்லிக் கொடுக்கிறாள் “ யானை உடம்பை பார்க்காதடா பயந்திருவ. கண்ணப் பாரு. ஆளுங்க கண்ணு மாதிரியே இருக்கும். பாசத்தோட பார்க்கும்” இதை வாசிக்கும் போது எனக்குத் தோன்றியது. ஒரு பிரச்னை கண் முன்னே யானை போல் நிற்கும் போது அதன் அளவைப் பார்த்தால் பயந்து போவோம். பிரச்னையின் கண்ணான அதன் வேர்க்காலை தேடிப் பார்த்தால் அதன் தீர்வு தெரியும். கண்ணப்பனை டீ குடிக்க அழைத்துச் செல்லும் கடையின் சொந்தக்காரர் ராமசாமி. அவர் மனைவி தனம் அவ்வளவு அழகு. எப்போதும் சிரித்துப் பேசிக் கொண்டே இருப்பாள். தன் அழகுக்கு எந்த வகையிலும் ஈடில்லாத மாமாவிடமும் குழந்தைகளிடமும் பாசத்தைப் பொழிந்தாள். அதோடு கூட கண்ணப்பனிடமும். கதையின் முக்கிய கரு ஜமீந்தார்களின் அக்கிரமம். ஒரு பெண் குழந்தை பெரியவளானதும் ஜமீந்தார்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு பச்சைப் பிள்ளைகள் தான் கூடுதல் ஆனந்தம். இரவு கடந்து அந்த குழந்தை “ சீர் குலைந்து சீர் கொண்டு வருவாள். இரண்டு ஜரிகைப் புடவை, இரண்டு ரவிக்கை ஒரு ஜோடி தங்கத்தோடு ஒரு எட்டுக்கல் மூக்குத்தி வெள்ளிக் கால் கொலுசு கண்ணாடி வளையல்கள், சீப்பு குங்குமம் மஞ்சள் . காலம் பூராவும் பெண்ணின் குடும்பம் உழைத்ததற்கும் சிறுமி தன்னை இழப்பதற்குமான சீர்.{என்ன ஒரு கொடுமை. } நடராசனோடு சேர்ந்து இன்னும் சில நண்பர்களும் இதற்கு முடிவு கட்ட துணிகிறார்கள். அவர்களில் ஒருவர் பாலாமணி. திருமணம் செய்யாதவர். இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் பினாங்கிலிருந்து பர்மா அகதிகளாய் இந்தியா வந்து சேர்ந்தவர்கள் .பாலாமணி தன் செயல்களை தடுக்கும் தாயிடம் இவ்வாறு சொல்கிறார். “உனக்குப் புரியும். உலகப் போர பாத்திருக்க. கண்ணுக்கெதிர்ல ராணுவம். பீரங்கி துப்பாக்கி சாவு ரத்தம் ஜனங்க உடம்புலருந்து மரம் உலுக்கி காய்ங்க விழற மாதிரி காலு கையி கண்ணுமுட்ட தல ரோட்ல விழுந்து சிதறனதை பாத்து இருக்கே.உனக்குப் புரியும். நானே போராடலைன்னா வேற யார் போராடுவா. இவங்க இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தான் கொத்தடிமையாவே வதைபடுவாங்க” அநியாயம் அழிக்க அனைவரும் அமைதியாய் வாழ ஒரு சிலர் தியாகம் செய்யத்தான் வேண்டி இருக்கிறது. அப்படி ஒரு சிலர் எந்தக் காலத்திலும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். தான் எடுத்துக் கொண்ட கதை களத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் ஆசிரியர். நான் மிகவும் ரசித்த வரிகள்: “ ஒவ்வொறு மனுசனும் ஒரு சுடு காடுய்யா. வயித்தில எம்முட்டு பொணம் பொதைக்கிறோம். ஆடு, கோழி, பன்னி, மீனு முட்டன்னு வயித்துச் சுடுகாட்டுல எம்முட்டு பொதைக்கிறோம்” “மீனுங்க தூண்டி முள்ளுல புடுச்சா அதுங்களுக்கு தொண்ட வலிக்குமுன்னு வல போட்டுத் தான் புடிப்போம்” “ கடவுள் ஒவ்வொருவரின் வாழ்க்கையை எழுதும் போது ஒவ்வொரு வகையான மையினால் எழுதி விடுகிறார். போராளிகள் வாழ்க்கையை ரத்தத்தினாலும் ஏழைகளின் வாழ்க்கையை வியர்வையாலும் ஜமீந்தாரர்களின் வாழ்க்கையை தங்கத்தினாலும் தனம் கனகா டீச்சர் போன்ற பெண்களின் வாழ்க்கையைக் கண்ணீராலும் எழுதி விடுகிறார்”

13 January, 2023

நான் கிருஷ்ண தேவ ராயன் ஆசிரியர் ரா.கி. ரங்கராஜன்.

புத்தகத்தின் பெயர் : நான் கிருஷ்ணதேவராயன் ஆசிரியர் : ரா. கி. ரங்கராஜன் பூம்பாவை பதிப்பகம். விலை : ரூ 450/- நான் ஆசிரியருடைய :”அவன்” என்னும் நாவல் வாசித்தேன். அதன் முன்னுரையில் “கிருஷ்ணதேவ ராயன் கதையை சொல்லும் போது “ நான்” என்று எழுதியதால் என் கதையை சொல்லும் போது “அவன்” என்று சொல்கிறேன் என்று இந்த புத்தகத்தை குறிப்பிட்டிருந்தார். அப்பொழுதே இதை படிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டேன். பொதுவாக புத்தகங்களை நாம் தேடிப் போக வேண்டியதில்லை. அவை நல்ல வாசகனை தேடி வந்து சேர்ந்து விடும் என்று நினைப்பேன். அதைப் போலவே ஊர்ப்புற நூலகத்துக்கு நான் போனதும் என்னை கை தட்டி அழைத்தார் கிருஷ்ண தேவ ராயர். இந்த நாவலை எழுத ஆசிரியர் கடுமையாக உழைத்திருக்கிறார். கதையில் ஒரு இடத்தில் நட்சத்திரங்களின் நிலையை வைத்து அரசர் எதிரியை வீழ்த்துவது போல எழுதி இருக்கிறார். இதைப் படித்த ஒரு விஞ்ஞானி தான் எழுதும் புத்தகத்துக்கு இவரிடம் உதவி கேட்டாராம். இந்த புத்தகம் அரசரது அரசியல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவரது காதல் மனத்தையும் அரச வாழ்க்கையில் அது படும் அவஸ்தையையும் சொல்கிறது. சுஜாதா அவர்கள் தன் பாராட்டுரையில் தமிழில் தன்மை ஒருமையில் சரித்திர கதை இதற்கு முன் வந்ததில்லை என்கிறார். இலக்கிய ரசனை மிகுந்த திரு கமல ஹாசன் அவர்கள் தான், இப்படி ஒன்றை எழுதும் எண்ணத்தை விதைத்தவர் என்கிறார் ஆசிரியர். இவருடைய முன்னுரையை படிக்கும் போது அவர் எடுத்திருக்கும் பெரும் முயற்சி தெரிகிறது. கதையின் முதல் வரியே “ என் பெயர் கிருஷ்ணன். முன்னோர்களுக்கு மதிப்புக் கொடுப்பதற்காக தேவராயன் என்று சேர்த்துக் கொண்டிருக்கிறேன் “ என்று வருகிறது. எந்த வித படோபடோபமும் இல்லாத ஒரு எளிய பேரரசர் என்பது புரிந்து விடுகிறது. அதை உறுதிப்படுத்துவது போலவே பணியாளர்களிடம் சாதாரணமாக உரையாடுவது, குடி மக்களின் துயரம் கண்டு துவண்டு அதைத் தீர்க்க உடனடி முடிவெடுப்பது என பல சம்பவங்கள் வருகின்றன. நாவலை வாசித்து முடிக்கும் போது கிருஷ்ண தேவராயர் மேல் நாம் கொண்டிருந்த மதிப்பு இன்னும் உயரே போயிருப்பதை உணர முடியும். நடனப் பெண்மணி சின்னா தேவி மேல் பெருங் காதல் கொள்கிறார் அரசர். ஆனால் இரண்டு குடும்பங்களுக்கும் முன்னோர் காலத்தில் இருந்த முரண்பட்ட சம்பவத்தால் காதல் வளர்வது பெரும்பாடாய் இருக்கிறது. சின்னா தேவியின் அண்ணன் எதிராஜன் அவர்கள் காதல் தெரிந்த உடனேயே அவளைத் தனியே அழைத்துச் சென்று விடுகிறார். அன்றைய காலத்தின் அவல வழி முறைகள் பலவற்றை கதை நெடுக சொல்லி வருகிறார். அதில் ஒன்று அரண்மனை வளாகத்துக்குள் அரச குடும்பத்தவரை பல்லக்கிலோ அல்லது பணியாளர்கள் தம் தோளிலோ தூக்கிச் செல்வது.அவர்கள் பொதுவாக வாட்ட சாட்டமான நடு வயதுக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் அரசர் அந்தப்புரத்துக்கு போகும் போது ஆண்கள் வர முடியாது என்பதால் ஒரு பெண் அவரை தோளில் தூக்கிச் செல்ல நிற்பாள். உடனடியாக அதை கண்டித்து அவளைத் தன் அந்தரங்க சேவகியாக அமர்த்திக் கொள்கிறார். அவள் பெயர் காயத்ரி. கதையில் முக்கிய பங்கு வகிக்கும் கதாபாத்திரம்.. அவள் ஒரு முக்கிய கடமையை முடிக்க அரசரின் அன்பையும் இளகிய மனத்தையும் பயன்படுத்திக் கொள்கிறாள். அவளிடம் அரசர் ஒரு மென் மனத்துடன் இருப்பது அரசவையின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு பிடிக்கவில்லை.அரசருக்கும் காயத்ரியால் ஒரு காரியம் நடக்க வேண்டி இருக்கிறது. சின்னா தேவியின் இருப்பிடத்தை கண்டு பிடித்துச் சொல்வதாக வாக்குக் கொடுக்கிறாள். அதனாலேயே காயத்ரி அரசரிடம் நெருங்கி பழகுவதை தடுக்க மற்றவர்களால் முடியவில்லை. மற்றொரு வேதனையான வழி முறை ஒன்றையும் குறிப்பிடுகிறார். ஒரு பெண் கெட்டுப் போய் விட்டதாக சந்தேகம் வந்து விட்டால் அவள் ஜாதிக்காரரகள் அவளை ஜாதியை விட்டு விலக்கி வைத்து அதற்கு அடையாளமாக அவள் கையில் ஒரு பெருக்கல் குறி போல் சூடு வைத்து விடுகிறார்கள். காலம் காலமாக கெட்டுப் போவது பெண்ணாக மட்டுமே இருக்கிறாள் அவலம் தான். ஒரு சுவையான பழக்கத்தைப் பற்றியும் சொல்லி இருக்கிறார். ஒவ்வொறு அரசரும் புதிதாக முடியேற்றதும் அதற்கு முன் இருந்த அரசரின் வைர வைடூரியங்கள் இருக்கும் பெட்டியை மூடி பூட்டி விடுவார்கள். அதை அடுத்து வரும் அரசர் பயன்படுத்துவதில்லை. அவை தவிர்க்க முடியாத காலங்களில் மக்களுக்கு பயன்படும். அது போலவே அரசர் ஒரு நாள் உடுத்திய உடையை இன்னொரு முறை பயன்படுத்த மாட்டார். அதை சேர்த்து வைப்பார்களாம். ஏதாவது ஒரு முக்கியமான நபர் வரும் போது அவருக்கு அளிப்பார்களாம். அவர்களும் அரசர் ஒரு முறை உடுத்திய உடை என்பதால் சந்தோஷமாகவும் பெருமையாகவும் வாங்கி உடுத்திக் கொள்வார்களாம்.. அரசரின் அரசவையில் தெனாலி என்பவர் விகடகவியாகவும் விதூஷகனாகவும் இருந்தது நமக்கெல்லாம் தெரியும். அவர் பெயர் ராம கிருஷ்ண கவி என்பதும் அவர் “ பாண்டுரங்க மகாத்மியம்” என்னும் நூலை எழுதினார் என்பதும் எனக்கு புதிய செய்தி. அவர் “ நான் பண்டிதர்களின் மத்தியில் இருக்கும் போது அவர்களுக்குச் சமமாக நடந்து கொள்கிறேன். பாமரர்களுடன் இருக்கும் போது பாமரனாக இருக்கிறேன். வேடிக்கை கதைகள் சொல்கிறேன்” என்கிறார். தெனாலி மேல் நாம் கொண்ட பார்வையே வேறு விதமாக மாறி விடுகிறது. போருக்கு செல்லும் போது போர் வீரர்களின் மனைவி குழந்தைகள் உடன் செல்லும் வழக்கம் இருந்தது. அவர்களின் காப்பாறுவதற்காகவாவது கடுமையாக போரிடுவார்கள் என்பது காரணமாக இருந்தது. கிருஷ்ண தேவ ராயர் அதை மாற்றினார். போருக்கு செல்லும் போது வீரர்களின் குடும்பத்தார் உடன் வரக்கூடாது என்று கட்டளை இட்டார். எனக்கு விளையாட்டு வீரர்கள் வெளிநாடு செல்லும் போது மனைவி உடன் செல்லலாம் , கூடாது என்று இரண்டு கருத்து நிலவுவது நினைவுக்கு வந்தது. ஆண்கள் முக்கிய பணியிலிருக்கும் போது, அவர்கள் மனதுக்கு நெருக்கமானவர்கள் உடன் இருப்பது சாதகமா? பாதகமா? அரசர் சின்னாதேவியைக் கண்டடைந்தாரா? அவளை மணந்தாரா? அல்லது நாட்டின் நலன் கருதி வேறு பெண்ணை மணந்தாரா? அவருடன் இனிமையாக குடும்பம் நடத்தினாரா? தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கிறதா புத்தகதை தேடுங்கள். கண்டடைவீர்கள்.