Bio Data !!

26 May, 2023

புத்தகத்தின் பெயர் : தரிசனம் ஆசிரியர் : லா.ச.ராமாமிர்தம். சந்தியா பதிப்பகம். விலை : ரூ . 120/- முதல் வெளியீடு 1952. சந்தியா பதிப்பகத்தில் முதல் பதிப்பு 2013. ஆசிரியர் லா.ச. ரா முதலில் ஆங்கிலத்தில் தான் எழுதத் தொடங்கியிருக்கிறார். ஆங்கில எழுத்துலகம் அந்த நாளில் ஒரு சில இந்தியர்களைத் தான் தொடர்ந்து எழுத அனுமதித்திருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட தொடர்ந்த வாய்ப்பு கிடைக்காததாலேயே நமக்கு தமிழில் ஒரு அற்புத எழுத்தாளர் கிடைத்திருக்கிரார். இவர் எழுத்துணர்வுகள் தமிழில் ரசிக்கப் பட்ட அளவு ஆங்கிலத்தில் ரசிக்கப் பட்டிருக்குமா? சந்தேகம் தான்.லா.ச.ராவுக்கு ஒவ்வொரு தலை முறையிலும் ரசிகர்கள் உண்டு. “ தரிசனம்” பத்திரிகைகளில் வந்த கட்டுரைகளும், வானொலியில் வந்த பேச்சுகள் அடங்கிய கட்டுரைகளுமாக ஒரு சிறு தொகுப்பு. அதன் முதல் கட்டுரையே சான்றோர் சிந்தனை என்ற பகுதியில் வந்த அவருடைய வானொலிப் பேச்சு“ அம்மா” என்ற தலைப்பிட்டது. அவரது எழுத்துக்கு எவ்வளவு ரசிகையோ அதே அளவுக்கு லா.ச.ராவின் அம்மாவுக்கும் நான் ரசிகை. அவர்களைப் பற்றி வாசித்திருக்கிறேன். எவ்வளவுக்கு எவ்வளவு ஆச்சாரம் பார்ப்பார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு மனிதாபிமானம் மிருந்தவர். அதனால் முதல் கட்டுரையை மிகவும் ஆவலோடு படிக்கத் தொடங்கினேன். தெய்வம் உண்டா இல்லையா என்பதைப் பர்றி சந்தேகங்களும் சர்ச்சைகளும் இருந்த்தாலும் தாயின் நிரந்தரம் பற்றி சந்தேகிப்பார் யாரும் இல்லை என்கிறார்.. சங்கரர் அம்பாளைக் கேட்கிறார். “ தாயே ஸ்திரியில் கெட்டவள் இருக்கலாம். ஆனால் தாயாரில் கெட்ட தாயார் என்று உண்டோ” பட்டினத்தாரின் இரங்கலைக் குறிப்பிடுகிறார். முன்னையிட்ட தீ முப்புரத்தில் பின்னையிட்ட தீ தென்னிலங்கையில் அன்னையிட்ட தீ அடிவயிற்றில் அன்னை பற்றிய கட்டுரையில் தொடங்கி அடுத்து தான் பிறந்த ஊரான லால்குடியை பற்றி எழுதுகிறார். நாட்டில் எந்த முடுக்கில் நீங்கள் ஒரு சப்தரிஷியை சந்திக்க நேர்ந்தாலும் அவர் பூர்விகம் சந்தேகமின்றி லால்குடியாய் இருக்கும் என்கிறார். “யாரும் என்னை பார்க்கவில்லை என்று நான் நினைத்துக்கொண்ட சமயம் சட்டென்று குனிந்து பூமியிலிருந்து ஒரு சிட்டிகை மண்ணை அள்ளி நிமிர்ந்து வாயுள் தூவிக் கொள்கிறேன்” என்று முடிக்கிறார். மெய் சிலிர்த்து போகிறது. சத்யப்ரஸாதினி என்ற பெயரில் ஒரு கட்டுரை. சான்றோர் சிந்தனை என்ற தலைப்பில் வானொலியில் பேசி இருக்கிறார். அதைப் புரிந்து கொள்ள மிகவும் கடினப்பட்டு ஒவ்வொரு பாராவையும் மூன்று முறை வாசித்தேன். ஏதோ கொஞ்சம் புரிந்தது. ஸத்யப்ரஸாதின்மை என்பதை ஸத்யத்தின் பிரஸாதமானவள் என்று அர்த்தம் பண்ணிக் கொண்டதாகச் சொல்கிறார். லா.ச.ரா எழுதுவதற்கு விஷயத்துக்கு என்றுமே நான் பஞ்சப்பட்டதில்லை என்கிறார். நான் மெதுவாக ஆனால் ஓயாமல் எழுதிக் கொண்டிருப்பவன் என்கிறார். ஒரு அருமையான கருத்தைச் சொல்லி இருக்கிறார்.. எழுதிப் பிரசுரமானவன் தான் எழுத்தாளன் இல்லை. எண்ணங்களுக்கு உரு கொடுக்கும் போது எண்ணத்தில் வெளியீட்டுக்கு பயன்படும் ஒரு மீடியம் ஒரு எழுத்து என்கிறார். எது அழகு. அவரவர் பூத்ததற்கு தக்கபடி என்கிறார். ஆழமான கருத்து எண்ணத்தை எழுத்தால் பூஜித்து சௌந்தர்ய உபாசகனாக இருக்க விரும்புகிறேன் என்கிறார். எனக்குத் தோன்றியதை நான் தெரிந்து கொண்டதை என் எழுத்தில் என்னால் சொல்ல முடிந்த வரை சொல்லி இருக்கிறேன் என்கிறார். எவ்வளவு எளிய மனம்!!! “ நான் புரியாத எழுத்தாளன் என்று பல இடங்களில் சொல்லப் படுகிறேன். என் மொழியின் நோக்கமே மௌனம் தான் என்கிறார். திரும்ப திரும்ப வாசித்து அவர் சொல்ல வருவதை பாதியாவது புரிந்து கொள்ள வேண்டும் என்ற தாகம் எழுகிறது. தியானத்தின் பாதையும் இது தானே என்கிறார். எண்ணங்களைப் படிப்படியாக அடக்கி ஒவ்வொன்றாய் விலக்கி ஒரே எண்ணமாய் முகப்படுத்தி இதுவன்றி தியானம் யாது என்கிறார். ஒரு ஸ்ரீலங்கன் அவரைப் பார்க்க வந்திருக்கிறார். அவர் நாட்டு நிலைமையை பற்றி இப்படி சொல்லி இருக்கிறார். “ மனைவி சமையல் செய்து கொண்டு இருப்பாள். திடீரென்று அபாயச் சங்கு ஊளையிடும். அடுப்பைத் தணிக்க்க் கூட நேரமிருக்காது. ஓடி ஒளிந்து கொள்வோம். ALL CLEAR ஒலித்து வெளி வந்து பார்த்தால் வாணலியில் பண்டம் தீய்ந்து போயிருக்கும். சில சமயங்களில் குண்டு விழாமலே அடுப்பிலிருந்து தீ இசை கேடாய்ப் பற்றிக் கொள்ளவும் வழி உண்டு. இது தான் மரணத்தின் அண்டை விட்டு உறவு” நாலு லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கி கட்டிய வீடு பால் காய்ச்சி ஆகிற்று. மறு நாள் குடி போக போனால் வீட்டைக் காணோமாம். ஒரு சுவர் கூட அடையாளத்துக் இல்லாமல் தரை மட்டமாகி இருந்ததாம். பதறிப் போனது நெஞ்சம். நான் ரசித்த வரிகள்: “ பாம்பு வயதாக ஆக உடல் குறுகி விஷம் கூடி மண்டையில் மாணிக்கம் அப்ப தான் உண்டாகிறது. பாம்பு மண்டையில் மாணிக்கம் சர்ச்சைக்குரிய விஷயமாய் இருக்கலாம். கட்டுக் கதையாய் தோன்றலாம். ஆனால் கதையில்லாமல் வாழ்க்கையே இல்லை . முடியாது.” “ வேண்டியும் தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று. எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம். தானாக நேர்வது தான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. ஒரு முறை ஒரே தடவை தான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை. அதற்கு மறு வளர்ச்சி கிடையாது. அந்த ஜ்வாலையின் குபீர். அது நித்யத்வத்தின் பொறி. அந்தப் பொறி நேரம் நானும் ஜ்வாலாமுகி” நம் வாசிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளவாவ
து இது போன்ற புத்தகங்களை கஷ்டப்பட்டாவது வாசித்து விட வேண்டும்.

18 May, 2023

புத்தகத்தின் பெயர் : கடல் நீர் நடுவே ஆசிரியர் : கடிகை அருள்ராஜ் பதிப்பகம் : டிஸ்கவரி புக் பாலஸ் விலை : ரூ 120/- எனக்கு பொதுவாகவே புத்தகங்கள் மேல் அதிக ஆர்வம். அது தான் தெரியுமேங்கிறீங்களா? புத்தக கண் காட்சி, கடைகள், ஆன் லைன் தவிரவும் பழைய புத்தகக் கடைகளிலும் தேடுவேன். அப்படிக் கிடைத்தது தான் இந்தப் புத்தகம். ஒரு மாணவனின் பி.காம் முதலாண்டுக்கான புத்தகம். மீன் பிடி தொழிலில் இருப்பவர் தான் கடிகை அருள் ராஜ். கடல் நடுவே இருக்கும் போது அவர்கள் சந்திக்கும் நாமறியாத அனுபவங்களை கதையாக்கி இருக்கிறார். கடலையும் அதன் தொழில் முறையையும் அனைத்துத் தரப்பு மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதி உள்ளார். புரியாத வார்த்தைகளுக்கு இறுதியில் அகராதியும் தந்துள்ளார். ஒவ்வொரு தொழிலிலும் ஆபத்து உண்டு. என்றாலும் ஆபத்தையே தொழிலாகக் கொண்டது மீன் பிடித் தொழில் என்கிறார். மீன் பிடிப்பவன் கடல் எல்லையின் ஊதியமில்லா பாதுகாவலன். அன்னிய சக்திகளின் கைகளைக் கட்டிப் போடும் இரும்புச் சங்கிலி. உலகம் உள்ள வரை மீன் பிடித் தொழிலும் அழியாமல் இருக்க வேண்டும் என்கிறார். இரண்டு கால கட்டமாக கதையை சொல்லி நகர்த்துகிறார். ஒன்று படகில் சென்று மீன் பிடிக்கும் காலம். மற்றொன்று டீசல் போட்டு செல்லும் எலக்டிரிக் படகின் காலம். பழைய காலத்தில் தாம் கொண்டு போகும் கஞ்சிக் கலயத்தின் நீரையே மிச்சம் பிடித்துக் குடித்துக் கொள்வார்கள். இந்தக் காலத்தில் 500 லிட்டர் சிந்டெக்ஸ் டாங்கெ செல்கிறது. மீன் பிடி வலை நகர்ந்து வருவதை இப்படி வர்ணிக்கிறார். ஒரு திமிங்கலம் வாயைத் திறந்த படி வரும் போது எப்படி சிறிய மீன்கள் எல்லாம் வாயினுள் சென்று விடுமோ அது போல வலையும் வாயை அகல விரித்த படி வருவதாகச் சொல்கிறார். சில நேரம் இவர்கள் பிடிக்கும் மீன்களுடன் கடல் பாம்புகளும் வந்து விடுவதுண்டு. அவற்றை கவனமாக எடுத்து கடலிலேயே வீசி விடுவார்கள். டால்பின்களை “கடல் பண்ணி” என்று அழைக்கின்றனர். ஒன்று மாட்டிக் கொண்டாலும் துணைப் பண்ணி அங்கு மிங்கும் உரசி கயிறை அறுத்து விடும். மீன் பிடிக்கும் முறையை இப்படி விளக்குகிறார். “ பல வகை நிறமுடைய பட்டு நூலை இணைத்து பந்து மட்டை தயாரிப்பார்கள். இது தண்ணீரின் மேற் பரப்பில் சிறிய மீன் ஓடுவது போல தோற்றமளிக்கும். மேற்பரப்பில் உலவும் மீன்கள் இரை என்று நினைத்து கடிக்கும் போது மாட்டிக் கொள்ளும் . இந்த மீன்களை இரையாக பயன்படுத்தி சுறா மீன்களைப் பிடிப்பார்கள் (இது அந்த கால முறை) கட்டு மரத்தின் முன் பகுதியை அணிய மரம் என்றும் பின் பகுதியை கட மரம் என்றும் நடுப் பகுதியை நடுமரம் என்றும் சொல்வார்களாம். கடல் நடுவே பார்த்த ஒரு பிரம்மாண்டமான சுறாவை இப்படி வர்ணிக்கிறார். “ உடம்பில் பெரிய பெரிய புள்ளிகள் இருந்தன. அந்த புள்ளிகளிலிருந்து பல நிறங்களும் மாறி மாறி ஒளிர்ந்தன. கண்களிலும் பல விதமான நிறங்கள் தெரிந்தன. அந்த கண்களால் சுழற்றி சுழற்றி அனைவரையும் பார்த்தது. “ ஆஹா!!!! கற்பனையே இனிக்கிறதே. கடலில் தெரியும் மேகத் தூணைப் பற்றி கூறுகிறார். சுழற் காற்று தண்ணீரை உறிஞ்சி எடுத்து மேலே வானை நோக்கிச் செல்லும் போது பார்ப்பதற்கு சுழலும் கரு மேகத் தூண் போலக் காட்சி அளிக்கும் என்கிறார். நடுக் கடலில் விழுந்து விடும் சேசடிமையை மீட்கும் காட்சி அவ்வளவு தெளிவாக எழுதப் பட்டிருக்கும். ஒரு திரில்லர் திரைப்படம் பார்த்த உணர்வு வரும். ஆபத்தையே தொழிலாகக் கொண்டது மீன் பிடித் தொழில் என்பது இதை வாசிக்கும் போது நன்கு விளங்கும். ஒரு உயிரைக் காப்பாற்ற அத்தனை பேரும் தம் உயிரையும் பணயம் வைத்து செல்வது மெய் சிலிர்க்க வைக்கும். காடு கடல் போன்ற வித்தியாசமான பரப்புகளில் வாழ்பவர்களின் வேரோடிய பிரச்னைகளை நாம் தெரிந்து கொள்ளவும் அவர்கள் மேல் இரக்கம் கொள்ளவும், அன்பு செய்யவும் இது போன்ற புத்தகங்கள் உதவும். வெறும் நிகழ்வுகளாக சொன்னால் ஆர்வம் குறையும் என்பதால் ஒரு கதை போலவும் கதை மாந்தர் தம் பழைய நினைவுகளை சொல்வது போல அந்தக் காலத்தில் இருந்த மீன் பிடி முறைகளையும் சொல்வது மிகவும் ரசனைக்குரியதாய் இருக்கிறது. படித்து பாருங்கள்!!!!
#நாவல் விமர்சனம் : நாவலின் பெயர் : கண் வரைந்த ஓவியம் ஆசிரியர் : தாமரை செந்தூர் பாண்டி பதிப்பகம் : சிவகாமி புத்தகாலயம். விலை : ரூ 100/- முதல் பதிப்பு : டிசம்பர் 1985 தாமரை செந்தூர் பாண்டி அவர்கள் எனது கல்லூரி காலங்களில் விகடனில் முதல் பரிசு வாங்கிய சிறுகதையின் ஆசிரியராக அறிமுகம். சமீபத்தில் ஒரு விழாவில் பொன்னீலன் அண்ணாச்சி நேரில் அறிமுகப் படுத்தினார். மிகவும் தன்னம்பிக்கை நிறைந்த மனிதர். அன்பாக பேசினார். இந்த நாவலும் 1982 ஆம் ஆண்டில் அமரர் சி.பா ஆதித்தனார் நினைவுப் போட்டியில் ரூ.ஐந்து ஆயிரம் பரிசு பெற்றது. வழக்கமாக வட்டார பின்னணியில் எழுதும் கதைகளிலிருந்து மாறுபட்டு பட்டணத்து கதா நாயகன் பற்றி எழுந்த கதை என்கிறார் ஆசிரியர். ஒரு நாவலில் நல்லவனைப் படைப்பதும் வில்லனைப் படைப்பதும் சமுதாயத்தில் பிரதிபலிக்கும். சினிமாவிலும் அப்படித்தான். தொடர்ந்து வரும் போது அது சிந்தனைக்குள் சிறகடிக்கும். அந்த வகையில் கதை நாயகன் குணசீலன் ஒரு ஆகச் சிறிந்த கதாபாத்திரம். தொடக்கத்தில் பள்ளி செல்லும் லீலாவைப் பின் தொடர்ந்து செல்லும் விசிலடிச்சான் குஞ்சாக காட்டப்படும் குணசீலன் மேல் அதற்கான காரணம் புரியும் போது மதிப்பு உயர்கிறது. குணசீலன் பெரும் பணக்காரன். நல்லவன். அவனுடைய எதிர் வீட்டில் தன் பெற்றோருடன் வசிக்கும் லீலா பேரழகி குணசீலனின் கண்களில். ஏன் சொல்கிறேன் என்றால் வெறும் புற அழகுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து ஆராதிப்பதில் எனக்கு உடன்பாடில்லை. இவர்களிடையே மெல்லக் கனிந்து வரும் காதலும் இணையப் போகும் நேரம் பிரிக்கும் பேரிடிகளும் கதையில் ஒரு அழகிய வலை போல் பின்னப்பட்டு இருக்கிறது. குணசீலனின் அன்பில் இருக்கும் அந்த அளவு தூய்மை லீலாவிடம் இல்லாதது போலவே எனக்கு தோன்றியது. தைர்யமாக நிற்க வேண்டிய ச்ந்தர்ப்பங்களில் பலவீனப் பட்டவளாகவே தோன்றுகிறாள். அப்படிபட்டவர்கள் மேல் வைக்கும் அன்பு விழலுக்கு இறைத்த நீராகவே போகும்.ஆரம்பத்தில் குணசீலன் பணக்காரன் என்று தெரிநநததும் காதலிக்கத் தொடங்குவதும், அவனுடைய உண்மையான அன்பைப் புரியாமல் தன்னைக் காப்பாற்ற எடுத்த முயற்சியில் அவன் பாதிக்கப் பட்டதும் அவனை விட்டு விலகுவதும் , அவளை திருமணம் முடித்தவன் தவிக்க விட்டு சென்ற காலத்தில் மறுபடியும் சந்தித்த குணசீலனோடு சேருவதுமாக அவளூடைய கதா பாத்திரம் சற்று சுய நலம் மிகுந்ததாகத் தான் காட்டப் பட்டிருக்கிறது. லீலாவின் அம்மா ஒரு மிகச் சிறந்த கதாபாத்திரம். கண்டிக்க வேண்டிய இடத்தில் மகளைக் கண்டிப்பதிலும் அன்பைப் பிறருக்குத் தெரிய காட்ட வேண்டிய இடத்தில் தெரிந்தும், மறைவாக அக்கரை காட்ட வேண்டிய இடத்தில் மறைத்தும் தாய்மை மிளிர நடமாடும் பெண்மணி. குணசீலனை வாழ வைக்கும் ரயிலே அவனுக்கு எமனாகவும் வருகிறது. கதா பாத்திரங்களோடு கை கோர்த்து கதை நெடுக வரும் ரயிலும் ஒரு கதாபாத்திரமே! மனிதர்களின் சுய நல மிக்க நடவடிக்கை பல இடங்களில் தோலுரித்து காட்டப்பட்டு இருக்கிறது. மிகவும் பிராக்டிகலாக முடிவு எடுக்கும் லீலா தன் கணவன் ஒரு குழந்தையையும் கொடுத்து வாழ வழியில்லாமல் விட்டுச் செல்லும் போது ஒரு முடிவு எடுக்கிறாள். அந்த வரிகள் கதையின் ஆரம்பத்திலேயே அந்த பாத்திரப் படைப்பை அடையாளம் காட்டி விடுகிறது. “கோழையாய் சாவதை விட கொடுமையாய் தன்னை விட்டுப் போனவனை பழி வாங்கி அவனுக்கு படையலிட்ட அமுதத்தில் விஷம் கலந்து ஏன் வாழ்ந்து காட்டக் கூடாது” பணத்துக்காக வேறொருவனின் உடல் பசியை தீர்க்க அவள் முடிவெடுக்கும் போது இப்படி வருகிறது. ஆனாலும் அவள் நல்லவளாகவே இருக்கிறாள். என்பதை டிக்கெட் எடுக்காமல் தான் ஏறிய ரயிலில் உட்கார இடம் இருந்தாலும் நின்று கொண்டே வருவதாகவும் ஒரு பெண்மணி வற்புறுத்தி அமரச் சொல்லும் போது அடுத்த நிறுத்தத்திலேயே இறங்கி வேறு பெட்டியில் ஏறுவது போலவும் சொல்லி அந்த பாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் ஆசிரியர். நான் மிகவும் ரசித்த வரிகள்: “ அடுப்பைப் பற்ற வைத்து உலை வைக்கும் பொழுது அவன், அவள் மனத்திரையில் கால் வைத்தான். அடுப்பில் தீ நாக்குகள் தகதகக்கும் பொழுது அதனுள் நின்று அவன் சீழ்க்கை அடித்தான்.” “ கொடுத்து கொடுத்தே கெட்டு போன இந்த மனிதனா கொடுங்கள் கொடுங்கள் என்று கை நீட்டுகிறான். 96 ஏ பக்கங்களில் நம் மனதை இளக வைத்த ஒரு நாவல். *******************************************************************************************************

03 May, 2023

புத்தகத்தின் பெயர் : ஹவுஸ் புல் ஆசிரியர் : ரா.கி.ரங்கராஜன். பதிப்பகம் : அல்லயன்ஸ் ஆசிரியர் 1500 க்கும் மேற்பட்ட கதைகளையும் 50 நாவல்களையும் ஏராளமான கட்டுரைகளையும் மொழி பெயர்ப்பு நாவல்களையும் எழுதி உள்ளார். எழுத்தாளர் சுஜாதா ரா.கி..ர பற்றி கூறியது “சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம் கொண்டவர்” இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வெளி வ்ந்தன. “ பல புனைவு பெயர்களில் எழுதினாலும் ஒவ்வொன்றுக்கும் நடையிலோ உருவத்திலோ கருத்திலோ தொடர்பு இல்லாத படி பார்த்துக் கொள்வார்” என்கிறார் கல்கி இவரைப் பற்றி.. ஹவுஸ் புல் ஆரம்பமே வித்தியாசமான கதை என்று சொல்லியது. முதல் அத்தியாயம் 4 என்று ஆரம்பிக்கிறது. அதிலிருந்து 4,3,2,1 என்று போகிறது. பைன்டிங் தவறோ என்று எண்ணம் வருகிறது. இல்லை அது வேண்டுமென்றே தரப்பட்டது என்று முன்னுரையில் சொல்கிறார். ராஜ நாராயணன் என்பவர் எழுதிய உயில் அவர் இறப்புக்குப் பின் அவர் குடும்ப நண்பர் கிருஷ்ணப்பாவால் குடும்ப உறுப்பினர் முன்னிலையில் வாசிக்கப் படுகிறது. அடுத்தடுத்த மாதங்களில் எழுதப்பட்ட வித்தியாசமான இரண்டு உயில்கள்.. முதல் உயில் வாசித்து ஒரு வார காலத்துக்குப் பின் இரண்டாவது உயில் வாசிக்கப் படுகிறது. முதல் உயில் அவர்கள் நடவடிக்கையை கண்காணிக்க எழுதப்பட்ட டிரையல் உயில். கதையில் ஒரு இடத்தில் இப்படி வருகிறது. “ மாதவிக்கு கல்யாணமாகி விட்டதா? பிரிக்கவே முடியாத மூன்று முடிச்சுகள் அவள் கழுத்தில் போடப்பட்டு விட்டனவா? இனி ஆசையுடன் நினைப்பதற்கு கூட உரிமையில்லாத தூய மலராகி விட்டாளா” திருமணமான பெண்ணை ஆசையுடன் நினைப்பது கூட தவறு என்றிருந்த அந்த காலம் இனி வருமா? இப்போ கதைக்கு வருவோம் ஒரு பணக்கார தந்தைக்கு மூன்று குழந்தைகள். தசரதன், மல்லி, காமேஸ்வரி. மூன்று பேருமே பணக்கார சூழலில் வளர்ந்ததால் பொறுப்பற்று இருக்கிறார்கள். தசரதன் ஒரு மருத்துவராக இருந்தாலும் தான் முதலில் கவனித்த ஒரு நோயாளி இறந்து போனதாலேயே மருத்துவ தொழில் செய்யவே அச்சமுற்று இருக்கிறார். மல்லி தான் துணிந்து முடிவெடுக்க வேண்டிய எந்த சூழ்நிலையிலும் கோழையாக தப்பித்தி ஓடுகிறார். காமேஸ்வரி தான் பிறந்த வீட்டின் வசதி கணவன் வீட்டில் இல்லாததாலேயே தன் பிறந்த வீட்டுக்கே அடிக்கடி வந்து விடுகிறார். மூன்று குழந்தைகளுக்குமே நல்ல குணமும் கெட்ட குணமும் இருப்பதாக காட்டுகிறார். யாரையுமே முழுமையான நல்லவனாகவோ கெட்டவனாகவோ காட்டினால் அது புனைவு என்று அப்பட்டமாகத் தெரிந்து விடும். இதில் மூவருடைய குண நலன்களையுமே நம்மால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. காமேஸ்வரியுன் கணவர் ஒரு தொழிற் சங்க தலைவர். அவர் ஏழைகளோடு ஏழைகளாக வாழ விரும்புகிறார். படோபடோபம் விரும்பும் காமேஸ்வரியால் அந்த அளவுக்கு இறங்க முடிவதில்லை. ஆனாலும் கணவனை அன்பு செய்வதால் கூட போய் வாழ விரும்பினாலும் அவன் செய்யும் தியாக காரியங்கள் எரிச்சல் மூட்டுவதால் பழைய படி தன் தந்தை வீட்டுக்கே வந்து விடுகிறார். இத்தகைய குழந்தைகள் திருந்தி நல் வழிக்கு வந்தால் மட்டுமே தன் சொத்ஹ்டு அவர்களைச் சேர வேண்டும் என்று உயில் எழுதி வைத்து இறந்து போகிறார் தந்தை. இவர்கள் மூவரும் கடந்து வரும் பாதையையும் இவர்களை அரவணைத்துச் செல்லும் அத்தைஅமிர்தம்மாளின் அன்பும் தான் கதையை நகர்த்துகிறது. அவர்கண் வீட்டிலேயே ஒரு ஓரமாய் அமர்த்து அங்கே நடப்பதை எல்லாம் பார்த்தது போல் இருக்கிறது கதை வாசித்து முடிக்கும் போது. நான் மிகவும் ரசித்த வரி. “ ஒவ்வொரு மனிதனுக்கும் நல்ல சுபாவமும் இருக்குது . கெட்ட சுபாவமும் இருக்குது. அதது அவனவனுக்கேத் தெரியும். இல்லைன்னாலும் மத்தவங்க எடுத்துச் சொல்லாம இருக்க மாட்டாங்க. நல்ல சுபாவம்னு சொல்றதை உடும்புப் பிடியாய் பிடிச்சுக்கணும் கெட்ட சுபாவம்னு சொல்றதை தலையை சுத்தி வீசி எறிஞ்சிடணும்.” ஒரு நல்ல அனுபவம் ரா.கி.ரங்கராஜனின் ஹவுஸ் புல்