Bio Data !!

29 December, 2010

தோற்றுப் போன காதல்(கிட்டியும், கிட்டாமலும்)

கிட்டாதாயின்
வெட்டென மற!
நன்றாய்த்தான்
சொல்லி வைத்தார்.
கிட்டாததாலன்றோ
தீரேன் என்கிறது
காதல் ஆசை.

கிட்டியதாலேயே
காதல் கசந்து
வாரேன் என்கிறது
காதலும் ஆசையும் !

காதல் நிலைக்க
காதலில் தோற்ப்போம்
வாரீர்!

தோற்றதாலேயே
காலம் கடந்து
வாழும் , காதல் வாழும்.
ஆதலினால்
காதலில் தோற்ப்பீர்!!

19 December, 2010

ஈசன்!

நெல்லையில் புதிப்பிக்கப்பட்ட 'ரத்னா' திரை அரங்கம் .
திரைப்படம் : ஈசன்.
திரை அரங்கத்தில் நுழைந்து  "கூட்டத்தைப்" பார்த்ததும் ஒரு 'திக்'.
இனிய ஞாயிறு வீணாய்ப் போகுமோ? 
படம் வந்து அதிக  நாள் ஆகலியே , கூட்டம் இன்னும் அதிகமா இருக்கணுமே என்று எண்ணிய படியே அரங்கத்தினுள் நுழைந்தேன். 

பாட்டுடனே படம் ஆரம்பம். இந்த மாதிரி பாட்டோட படம் ஆரம்பித்தாலே பிடிக்க மாட்டேங்குது. ஆனால் அந்த பாடல் நடைபெறும் பப் தான் படத்தின் 'கோர் ' என்பது போக போகத்தான் புரியுது.

தன் நண்பன் சமுத்திரக்கனியை காவல்துறை அதிகாரியாக்கி அழகு பார்த்திருக்கிறார் சசிகுமார்.  பொருத்தமான உடல் வாகு சமுத்திரக்கனிக்கு. காவல் அதிகாரிகள் ஜிம்முக்கு போய் கட்டுக்கோப்பாய் உடலை வைத்திருப்பது பார்க்க அழகாத்தான் இருக்கிறது. கமிஷனரிடம்"லவ் பண்ணி போட்ட டிரஸ் சார் இது" என சமுத்திரக்கனி சொன்னதும் "இந்தக் கரை வேட்டி போனா இன்னொரு கரை வேட்டி. சலாம் போட கத்துக்கோ. " என்கிறார். அதில் அரசியல் வாதிகளுக்கு சலாம் போட வேண்டிய காவல் துறையின் வேதனை இழையோடுகிறது. சமுத்திரக்கனி இன்னும் கொஞ்சம் மிடுக்கைக் காட்டி இருக்கலாம் என்பது என் எண்ணம்.  

படத்தின் முதல் பாதி 'நீதி போதனை கதைகள்' புத்தகம் படிப்பது போல்  இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்ச்சியும் செய்தித்தாளில் ஏற்கனவே பார்த்த செய்திகளை நினைவூட்டுவது போலவே இருக்கின்றன. இன்டர்வெல்லில் "இந்த அபிநயாப் பொண்ணுக்காக படம் பார்க்க வந்தேன்,பொன்னான நேரத்தை வீண் செய்திட்டேன் போலிருக்கே" என்றேன். இன்டர்வெல் வரை அபிநயாவைக் கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறார்கள். என் மகள் " தலை (சசிகுமாருக்கு அவள் கொடுத்த பெயர்) ஏமாத்த மாட்டார் பாப்போம் " என்றாள்.  என் அருகில் இருந்த பெண் " என்ன சொல்ல வர்றாங்கன்னே புரிய மாடேங்குதே" என்றாள். இப்படியாக இடைவேளை இனிதே வந்தது.

சும்மா சொல்லக் கூடாது இடைவேளைக்கு அப்பறம் அரங்கம் அமைதி காத்தது. ஈசனூர் - சிவகங்கை மாவட்டம் என்ற பின் குறிப்புடன் அழகழகான இயற்கைக் காட்சிகள். அம்மா இல்லாமல் இருந்தாலும் தந்தையின் அரவணைப்புடன் கூடிய அழகான குடும்பம். என்று தொடங்கி நகரத் தொடங்கிய கதை அழகு. 

நகர வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்கும் நண்பனிடம் " நகரத்தில உதவி கேட்டா ஒவ்வொருத்தரும் ஒதுங்கிக்கிறாங்க. ஒருத்தர் முகத்தில கூட சிரிப்பைக் காணோம்" என்று அபிநயாவின் அப்பாவாக வரும் (மலையாள இயக்குனர்) நபர்  கேட்க " இன்னம் கொஞ்ச நாளில உங்களுக்கு இதெல்லாம் பழகிடும். அப்பறம் உங்க முகத்திலையும் சிரிப்பை பார்க்க முடியாது" என்கிறார். பின்னால் வரப் போவதை முன்னாடியே உணர்த்திய வசனம். 

அபினவ் வருகிறார். நடித்திருக்கிறார். மிகச் சிறப்பாக சொல்லும் படி எதுவும் இல்லை.
அமைச்சராக வரும் A .L . அழகப்பன் அம்சமாக பாத்திரத்தில் பொருந்துகிறார். அவர் மனைவியாக வருபவர் துளசி தானே? 
அபிநயா தான் யார் என்று அறிமுகப் படுத்தும் கட்டத்தில் "Poornima, the silence speaker"
என்கிறார். தான் வாய் பேச முடியாதவள் என்று சொல்ல "மௌன மொழி பேசுபவள்" என்பது ரசிக்க வைத்தது. 
அபிநயாவின் தம்பியாக வரும் துஷ்யந்த் சரியான தேர்வு. 
சுப்ரமணியபுரத்தில் மைனராக வருபவர் அமைச்சரின் அந்தரங்க சேவகனாக தன் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார். 
பாடல்கள் ஜேம்ஸ் வசந்தன். இசைத்திருக்கிறார். கடற்கரையில்  ஆஜானுபாகுவான அந்த பெண்ணின் பாடலும் பாடல் சார்ந்த நடனமும் வித்தியாசமாக இருந்தது. 

உதவி செய்பவன் மேல் உடனடிக் காதல். இன்னும் எத்தனை நாளுக்குத் தான் இப்படி காட்ட போகிறார்களோ என்று வேதனையாக இருக்கிறது . எனக்கு ஒரு சந்தேகம். இப்படி காதலிக்க ஆரம்பித்த பின் இன்னொருவன்  வந்து உதவி செய்தால் என்ன செய்வார்கள் .

சசிகுமாரிடம்  ஒரு கேள்வி. 'சுப்ரமணிபுரத்தில்'  இருந்த வேகம் இதில் குறைகிறதே ஏன்?
முதல் பாதியில் நகைச்சுவையை அதிகரித்திருந்தால் கதை பாலன்ஸ் ஆகி இருக்குமே. வெற்றியை பற்றிய பயம் கவனத்தை சிதைத்து விட்டதா? இன்னும் சிறப்பான பல திரைப்படங்களை உங்களிடம் எதிர்பார்க்கிறோம் சசிகுமார். 

மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டவில்லை என்றாலும் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த திருப்தியைக் கொடுத்தது ஈசன்

14 December, 2010

உள்ளங்கையில் ஒரு ஓவியப் போட்டி !!


என்ன திடீர்னு உள்ளங்கை படம்னு பார்க்கிறீங்களா? எனக்கு மிகவும் பிடித்த ஓர் உறுப்பு உள்ளங்கை. அதில் ஓடும் வரிகள். அந்த வரிகளை வைத்து சின்ன வயதில் சொன்ன ஜோசியங்கள்.

"ஏய் !கைய காட்டுப்பா. ஒண்ணு, ரெண்டு, மூணு ...ஐயய்யோ !உனக்கு ஆறுபிள்ளைகள்". என்று கையின் ஓரங்களில் ஓடும் மெல்லிய வரிகளை எண்ணி சொல்வதும், "ச்சீய் ! போங்கப்பா" என்று அதற்கே வண்டி வண்டியாக வெட்கப்படுவதும்.சின்ன வயது செல்ல நினைவுகள்.

கல்லூரியில் "டீ! உனக்கு உள்ளங்கை மேட்டில் ஒரு பெருக்கல் குறி இருக்குது. உனக்கு காதல் திருமணம் தான்" என்று பதினைந்து வயது பையனைப் பார்த்தால் கூட வெட்கப்பட்டு ஓடும் ஒருத்தியை பார்த்து சொல்வதும், அவள் எதிர்பாரா விதமாக கல்லூரி  இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே காதல் திருமணம்  செய்ததும், அடுத்தவருக்கு தெரியாமல் தனது உள்ளங்கை மேட்டில் பெருக்கல் குறி இருக்கிறதா என்று சோதிப்பதுமாக கன்னி வயது காதல் நினைவுகள்.

நன்கு பேசிப் பழகிய நண்பன் திடும்மென நீட்டிய கையை  தயக்கத்தோடு குலுக்கியதும் அந்த உள்ளங்கையின் மென்மை நெடுநாள் வரை நினைவில் நின்றதும் , கை உயர்த்தி ஆசிர்வதிக்கும் சாமியார்களின் அந்தரங்கம் வீதிக்கு வரும் போது ஏமாற்றின் அடையாளமாய் உயர்ந்து நின்ற உள்ளங்கைகளே நெடு நாள் மறக்க முடியாமல் நினைவுக்கு வருவதும், பஞ்சின் மென்மையை தொடுதலில் உணரச் செய்யும் உள்ளங்கை பல உழைப்புகளை கடந்து வரும் போது காய்த்துப் போகுமே என திருமணமான புதிதில் பட்ட அதீத கவலையுமாய், நினைவில் பூவாய் விரியும் உள்ளங்கை.

கணப் பொழுதும் கணினியை விட்டு அகலாததால், சோர்வுற்று சூடேறிய கண்களின் மேல்  முழுவதுமாய்  குவிந்து, பசலை உற்ற பெண்ணை ஒரு தொடுகையில் குளிர்வூட்டும் தலைவனைப் போல குளிரச் செய்யும் உள்ளங்கைகள்.
தாமரையின் நிறமும், மென்மையும் வெட்குற்று தலை தாள வைக்கும் மழலையின் உள்ளங்கைகள்.

ஒரு விழாக் கால புறப்பாடு பிள்ளையார் சுழி போடுவது உள்ளங்கைகளின் மேல்  தீட்டும் "மெகந்தி" என்னும்   ஓவியப் போட்டியில் தான். இப்பொழுது சொல்லுங்கள் இந்த உள்ளங்கைகளின் மேல் நான் கொண்ட காதல் சரியானது தானா என்று.

05 December, 2010

அம்மாவுடன் ஒரு பேட்டி !!

என்ன! தலைப்பைப் பார்த்ததும் விர்ருனு வந்தீங்களா?
இது எங்க அம்மாப்பா,
எழுபத்தைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எங்கள் அன்னை,செசிலி ரஞ்சிதம் , என் ஆதர்சத் தலைவியுடன் ஒரு பேட்டி.
நான்: அம்மா ! பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள். எழுபத்தைந்தாம் வயதில் அடி எடுத்து   வைக்கிறீர்களா?
அம்மா : ஆமா , இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ.
நான்: அம்மா, உங்கள் குடும்பத்தைப் பற்றி, உங்கள் பள்ளி நாட்களை பற்றி சொல்லுங்க.
அம்மா: எங்க அப்பா நெல்லையில் St Xaviers கல்லூரியில் கணிதத்தில் மிகச் சிறந்த பேராசிரியர். கணிதத்தில் , மாநிலத்தில் முதலாவதாக வந்து தங்க மெடல் வாங்கினாங்க.  பெயர் சந்தியாகு பிள்ளை(மன்னிக்கவும் அந்த காலங்களில் ஜாதிப் பெயரும் ஓட்டிப் பிறந்த ரெட்டைப் பிள்ளைகள் போல் பெயரோடு இணைந்து கொள்கிறது.) கணிதத்தில் பல புத்தகங்கள் போட்டு இருக்கிறார்கள். அம்மாவுக்கு பிள்ளைகளை பார்ப்பதே பெரிய பணி. நாங்கள் பன்னிரண்டு பேர். நான் தான் மூத்த பெண். எனக்கும் கணிதத்தில் ஆர்வம் என்பதால் என் தந்தைக்கு மிகவும் பிடித்த பிள்ளை. காலையில் வாக்கிங் கூட்டிச் செல்வார்கள். அது தான் எனக்கு கணக்கு சொல்லித்தரும் நேரம். நடந்து கொண்டே அவர்கள் கணக்கை சொல்லித்தர நான் கற்பனையில் புரிந்து இடையே அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்.அது கவனம் திசை திரும்பாமல் கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தை அதிகரித்தது.
               
நான் படித்தது ST Ignatius  கான்வென்ட், கல்லூரி Sarah Tucker, மறுபடியும் B.ED படிக்க
ST Ignatius கே வந்தேன். B. Ed தொடங்கிய முதல் வருடம் (1957) படித்த பெருமை உண்டு
அப்போ  கணிதத்துக்கு ஆசிரியர் கிடைப்பது அரிது என்பதால் வீட்டுக்கே வந்து வேலைக்கு ஆர்டர் கொடுத்து கூட்டிச் செல்வார்கள். ( ம்ம்ம்ஹூம் )
மதர் அலெக்ஸ் ஹெட்மிஸ்ட்ரெஸ் ஆக இருந்த நேரம். ரொம்ப ஸ்ட்ரிக்ட்
நான் : அப்பா பற்றி சொல்லுங்களேன். முப்பத்தைந்து ஆண்டுகள் முன் இறந்து போன அவரைப் பற்றி கடந்த வருடம் ஒரு  பதிவு போட்டு இருந்தேன். 

அப்பாவோட மாணவர் ஒருவர் எனது பதிவில் கமெண்ட் போட்டு இருந்தார். சிலிர்த்துப் போனேன்.
அம்மா : He is a great man. ST. Xavier's college இல் Mr. Soosai Rathinam , (Physics) என்றால் மிகப் பிரபலம். மிகவும் அன்பான மனிதர். எங்கள் திருமணம் ஆகி பதினேழு வருடங்கள் என்னை உள்ளங்கையில் தான் தாங்கி இருந்தாங்க. பேராசிரியர் என்ற கர்வம் துளி கூட கிடையாது. நீங்கள் சின்ன பிள்ளைகளாய் இருந்த போது, அப்போல்லாம் கல்லூரியில் வகுப்பு எடுக்கும் நேரம் தவிர மீதி நேரம்  வீட்டில் இருந்து கொள்ளலாம். வேலைக்கு ஒரு சிறுமி இருந்தாலும், வகுப்பு இல்லாத நேரம் எல்லாம் வீட்டில் குழந்தைகளோடு தான் இருப்பாங்க. வாழும் விதிகளில் இருந்து சிறிது கூட விலகாத மனிதர். (இத்தனை ஆண்டுகள் ஆன பின்னும் எங்கள் கண்களில் கண்ணீர் துளிர்க்கிறது.) அப்போ அப்பாவுக்கு 41; எனக்கு 38; ஆழ்ந்த ரசிப்போடு தன்னோடி ஈர்த்துக் கொண்ட திரைப்படம் திடீரென முடிந்தது போல் ஒரு டிசம்பர் 18 இல் மண்ணுலகை விட்டு மறைந்து விரைந்து   போனாங்க.
நான்: உங்கள் மேல் என் பிரமிப்பு கூடியது அதன் பின் தான். எப்படி அப்போவோட இறப்பை எதிர் கொண்டீங்க.
அம்மா: காந்திமதி ஸ்கூலில் ஆசிரியையாக பணி புரிந்து கொண்டு இருந்தேன்.
நான்: அங்கே உங்கள் எழுத்துக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்ததே!
அம்மா: ஆமாம். அப்போ திருமதி அம்மணி சுப்ரமணியம் தான் தலைமை ஆசிரியையாக இருந்தார்கள். ஒரு தாயைப் போல் ஆசிரியர்களை அவர்கள் நடத்துவார்கள். திறமைகளை ஊக்குவிப்பார்கள். ஆசிரியர்களின் குடும்பத்தோடு ஒரு குடும்ப நண்பரைப் போல பழகுவார்கள். அப்பா இறந்த நேரம் அவர்களும், சக ஆசிரியர்களும் எனக்கு மன ஆறுதலையும், தைரியத்தையும் அளித்தார்கள். திடீர்னு கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. அது வரை என் கணவன் தான் உலகம் என்று இருந்தேன். திடீரென மூன்று பெண் பிள்ளைகளுடன் தனியாய்ப் போனேன்.
அப்பா இருக்கும் வரை பி.எட் படிப்பே போதும் என்று இருந்தேன். அந்த இழப்பை மறக்க படிக்க ஆரம்பித்தேன். முதலில் M.Ed படித்தேன் .அதில் பல்கலைகழக  அளவில் முதலாவதாக வந்து தங்க மெடல்  வாங்கினேன். கணிதத்தில் M.Sc படிப்பதற்கு துணிச்சல் இல்லாததால் M.A (English ) முடித்தேன். அதில் வாங்கிய மதிப்பெண்கள் கொடுத்த தைரியத்தில் அடுத்து M.Sc (Maths)  என மூன்று மாஸ்டர் டிகிரிகள் வாங்கினேன். கல்வி கொடுத்த தைரியத்திலும், உறவுகளும் நண்பர்களும் கொடுத்த ஆதரவிலும் மூன்று பெண் குழந்தைகளுக்கும் உயர்ந்த கல்வி, உயர்ந்த பணி, உயர்ந்த இடத்தில் திருமணமும் செய்து கொடுக்க முடிந்தது.
நான்: ஆமாம் அம்மா . அப்பா இல்லை என்பது வலியாய் இருந்ததே ஒழிய எந்த சூழ்நிலையிலும் அந்த இழப்பை நாங்கள் உணராத படி தான் வளர்த்தீர்கள். இத்தனை ஆண்டு காலங்களில் நீங்கள் மிகச் சிறந்ததாய் உணர்ந்த தருணம் ஏது?
அம்மா : என் பேத்தியின் மகனை நான் கைகளில் ஏந்திய தருணம். நான்காவது தலைமுறை காணும் பாக்கியம் தந்த இறைவனுக்கு நன்றி. ஒரு இழப்பை தந்த இறைவன் பேரன், பேத்திகள் என நிறைவைத் தந்திருக்கிறார்.
எனது அறுபது வயதில் "இத்தனை ஆண்டுகள் எங்களுக்காக வாழ்ந்து விட்டீர்கள். உங்களுக்காக இதையாவது செய்யுங்கள்"என்று என் பிள்ளைகள் ரோம், ஜெருசலேம் போன்ற நாடுகளுக்கு தெரிந்தவர் குடும்பத்துடன் திருப்பயணம் அனுப்பி வைத்தார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மற்றும் ஒரு வெளி நாட்டு பயணம் இவை மிகவும் மகிழ்ச்சியாய் என்னை உணர செய்த நேரங்கள். 
நான்: நீங்கள் மிக மோசமாக உணர்ந்த தருணம் ஏது?
அம்மா: அப்பா இருக்கும் வரை தம்பதி சமேதராய் எங்களை பெருமைப் படுத்திய சமூகம் நான் கணவனை இழந்ததால், என்னை ஒரு சகுனத் தடையாய் பார்த்த நிமிடங்கள் என்னை மிக மோசமாய்ப் பாதித்தன.
நான்: இந்தப் பதிவின் மூலம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?

அம்மா: சமூகத்துக்கு ஒரு வேண்டுகோள். துணையை இழந்து துடித்துக் கொண்டு இருப்பவர்களை, உங்கள் துரதிர்ஷ்டப் பார்வையால் இன்னும் குத்திக் கிளறாதீர்கள்.
இளம் வயதில் இணையை இழந்த பெண்களே! வாழ்வு ஒரு இருட்டான குகை போல் தெரியும். ஆனால் உள்ளே போகப் போக கண்கள் பழகி வெளிச்சமும், வழியும் தெரியும். எந்த நேரத்திலும் தன்னம்பிக்கையையும் , தைரியத்தையும்  மட்டும் இழக்காதீர்கள். இறைவனை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். வெற்றி கிட்டுவது நிச்சயம்.