Bio Data !!

30 June, 2010

கவிஞர் கலாப்ரியா உடன் கலக்கல் பேட்டி



கவிஞர் கலாப் ரியா  உடன் ஒரு பேட்டி., அந்த கலக்கல் கசாட்டாவை  ருசித்து பாருங்கள். 


வணக்கம் சார் , நல்லா இருக்கீங்களா? 

                                நல்லா இருக்கேன். உங்க கதை "மரண நிமிடங்கள் " படித்தேன், மனப்               போராட்டங்கள், எண்ண  ஓட்டங்களை நன்றாகவே கையாளுகிறீர்கள்


நன்றி சார்,
உங்களை பேட்டி எடுத்து ஒரு பதிவு போடணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை.  சில கேள்விகள் கேட்கலாமா?
                                     அழகா ....



முதன் முதல் உங்களுக்கு எழுத்து    திறமை இருப்பதை எப்பொழுது கண்டு பிடித்தீர்கள் ?
                                         பதினெட்டு  வயது கட்டிளங்காளையாயிருந்த போது. ( எதிர் காற்றடித்தால் மட்டும் சைக்கிளை தள்ளிக் கொண்டு போவேன்). 


கவிதை எழுதத் தொடங்கியது எப்படி ?
                                              கான மயிலாட கண்ட வான் கோழி மாதிரி வண்ணதாசன் அவர்களைப் பார்த்து எழுதத் தொடங்கினேன்.


உங்கள் எழுத்துலக குரு என்று திரு வண்ணதாசன் அவர்களை சொல்லலாமா?
                                        ஆமாம் கண்டிப்பாக , அவருடைய அண்ணன் திரு கணபதி அவர்கள் தான் எங்கள் எல்லோருக்கும் குரு.


திரு வண்ணதாசன் அவர்களின் தந்தை ஒரு எழுத்துலக ஜாம்பவான் ஆச்சே அவரிடமும் பாடம் கற்றிருக்கின்றீர்களா? 
                                                   இல்லை அவர்களை தூர இருந்து பார்த்தது தான், சூரியனைப் பார்ப்பதுபோல. அவர் கம்யூனிச சித்தாந்தவாதி. ஆனல் அவர் கருத்துக்களை எங்கள் மீது திணிக்க மாட்டார்    அவரும் சரி வண்ணதாசனும் சரி பாராட்டுக்கள் மூலமே பிறரை வளர்த்து எடுப்பவர்கள். 


உங்கள் கவிதைகள் என்னென்ன விருதுகள்  பெற்றிருக்கின்றன  ?
                                   திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, வைரமுத்து சமூக இலக்கியப் பேரவை விருது,கவிதைக்கணம் விருது, தேவமகள் இலக்கிய் விருது,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை வழங்கும், வி,ஆர்.எஸ். கிருஷ்ணய்யர் விருது,
                                     கவிதைக்கு தானே கலைமாமணி விருது பெற்றேன். கட்டுரை தற் செயல் தான். கதைகள் பத்து தேறும்   


கலை மாமணி விருது பெற்ற போது உங்கள் உணர்வு எப்படி இருந்தது? 
                                ரொம்ப மகிழ்ச்சியாய் இருந்தது. பொதுவாய் விருதுகள் பற்றி பெரிய ஆர்வம் இருந்ததில்லை. 


உங்கள் ஆரம்ப கால கவிதை ஒன்று சொல்லுங்களேன்
"அழகாய்  இல்லாததால்
அவள் எனக்கு 
தங்கையாகி விட்டாள்  "
                                           அதிகம்  பேர் திட்டவும் பாராட்டவும் செய்ததால் பிரபலமான கவிதை எழுபது களில் வெளி வந்தது.
"கிடைக்காத அழகுகளுக்காய் 
கேரம் போர்டின் 
சிகப்புக் காயாய்
அலைக்கழியும் நான்...... "
என்று வரும் கவிதை "


ரொம்ப நல்லா இருக்குது சார், அந்த தங்கை கவிதை எனக்கு நல்லா நினைவு இருக்கிறது.
பதிவு உலகத்தை உங்களுக்கு அறிமுகப் படுத்தியது யார் ?

                              அந்திமழை.காம் நண்பர்.திரு இளங்கோவன் மற்றும் அவரது துணைவியார் சரஸ்வதி. என் பெண், தரணி எனக்கென ஒரு வலைப்பூ உருவாக்கித் தந்தாள். அதில் எழுதிப் பார்த்தேன். உரை நடை கொஞ்சம் கை வந்தது.


பதிவுலகின் சுஜாதா விருது வாங்கியது பற்றி உங்கள் கருத்து ?
                             முதல் உரை நடை முயற்சிக்கு விருது கிடைத்தது நம்ப முடியாத சந்தோஷம் தந்தது..சுஜாதா இருந்திருந்தால் கண்டிப்பாக இதைக் கொண்டாடுவார் என்று..எழுதும்போதே நினைத்துக் கொண்டிருந்தேன்..அது உண்மையானது போல் இருந்தது.


உங்கள் பதிவுகளில் படம் வரைவது நீங்கள் தானா ?
                             இல்லை. அது பிரபல ஓவியர் மருது  வரைவது. குங்குமம் இதழில் வருகிறது. அனுமதி பெற்று பயன்படுத்துகின்றேன். வண்ணதாசன் மிக நன்றாக வரைவார். 


உங்கள் படைப்புகள் சாகித்திய அகடமிக்கு பரிந்துரை செய்யப் பட்டிருக்கின்றனவா ?

                                   பல முறை , சாகித்திய அகடமியின் கடைசி ரவுண்டில் யாராவது தட்டிச் செல்வார்கள்.இதெல்லாம் கேள்விப்பட்டது
                                  வைர முத்து என் கவிதைகளின் ஆத்மார்த்த ரசிகர்,ஒரு முறை , ஒரு அரங்கில் சொன்னார் ' கலாப் ரியா கவிஞர்களின் கவிஞர்" என்று , (கேட்க சுகமாயிருந்தது, ஆனால் சற்று லஜ்ஜையாகவும் இருந்தது)


இப்போ எதுவும் எழுதிக் கொண்டு இருக்கிறீர்களா ?
                                 மூன்றாவது கவிதை தொகுப்பு வரப் போகிறது. என் எல்லாக் கவிதைகளையும்,  கவிதைகள் பற்றி வந்த விமர்சனங்கள் , ஆய்வுகள் எல்லாம் சேர்ந்து ஒரு தொகுப்பாக வரும். 


விரைவில் சாகித்ய அகடமி விருது பெற வாழ்த்துக்கள். நீங்கள் விருது பெற வேணும். மீண்டும் உங்களை ஒரு பேட்டி எடுத்து நான் ஒரு பதிவு போட வேணும் மீண்டும் வாழ்த்துக்கள் 
                                      நன்றி
பின் குறிப்பு : பேட்டியில் ஒரு சின்ன தவறு செய்து விட்டேன். இள வயதில் ஐயா எழுதிய கவிதையை கேட்டுப் பெற்ற நான் இன்றைய நாளில் எழுதிய கவிதையை பெற மறந்து விட்டேன். தவறைத் திருத்தி அண்மையில் எழுதிய ஒரு கவிதை இதோ கொடுத்து விட்டேன். நல்லா இருக்கா பாருங்க .


நாடகாசிரியன் மரணம்

தத்தம்
பாத்திரங்களின்
உரையாடல்களைப்
பிரித்துப் பெற்றுக்கொண்ட
ஆண் பெண் இருபாலரும்
அனேகமாய்
மனனம்
செய்து விட்டனர்
எனினும் மனசுக்குள்அவ்வப்போதுசொல்லிப் பார்த்துக்
கொண்டிருக்கிறார்கள்

வாகனம்
ஓட்டும் போது

மின் கட்டணம் கட்டும்
நீண்ட வரிசையில்

விளக்கணைத்து
தட்டுத் தடுமாறி
படுக்கை சேர்ந்து
அரைத்தூக்க மனைவியை
எழுப்பும் போது

சல்லாபிக்கும் போது

பயணச்சீட்டுக் கேட்டு
நடத்துனர்
பக்கத்தில் வரும் வரையில்
நெருங்கும்
மாதவிடாய்க்கான
தினத்தைக்
கணக்கிடும் போது

மற்றும் ஆசிரியனுக்கான
இரங்கல் கூட்டத்தில்.மௌனம் அனுஷ்டிக்கும் போது


                                -கலாப்ரியா





27 June, 2010

மரண நிமிடங்கள் !!

அது ஒரு அரசு அலுவலகம். அதற்கே உரிய இலக்கணத்தோடு,  தொழில் பக்தியோடு உள்ளவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்க,  அந்த எண்ணமே இல்லாதவர்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அலுவல்கள் நடந்து கொண்டு தான் இருந்தன. மேலதிகாரி தனக்கு வந்த தபால்களில் அந்த குறிப்பிட்ட தபாலைப் பார்த்ததும்  முகத்தில் புன்னகையோடு அழைப்பு மணியை தட்டினார். வந்த ஊழியரிடம்

"ராஜன் சார் இருந்தாக் கூப்பிடுங்க" என்றார்.
உள்ளே வந்த ராஜன் தனது ஐம்பத்தைந்து வயதுக்கு அதிக பணிவோடு இருந்தார்.
"உட்காருங்க ராஜன்"
"இருக்கட்டும் சார், "
" சும்மா உட்காருங்க. இது பணி சம்பந்தமானது இல்லை."

நாற்காலியின் நுனியில் அமர்ந்தார். இந்த பணிவு இந்தக் கால இளைஞர்களிடம் காண முடிவதில்லை. ஆனால் அதுவும் அழகு தான். வித்யா கர்வம்.

"இந்த ஆண்டுக்கான அரசின் விருது உங்களுக்கு கிடைச்சிருக்கு. ஏற்கனவே தெரியும் இருந்தாலும் தபால்லா வந்திடட்டுமேனு சொல்லாம இருந்தேன். வாழ்த்துக்கள். உங்க உழைப்பு கௌரவப் படுத்தப் பட்டிருக்கு. எனக்கு ரொம்ப சந்தோஷம் ராஜன்." தனக்கு கீழ் பணி புரியும் பணியாளர்கள் மிகுந்த உழைப்பைக் கொடுக்கும் போது அதை கௌரவிக்கும் விதமாக அதிகாரிகள் கொஞ்சமேனும் மெனக்கெட்டால் தான் இந்த மாதிரி விருதுகள் கிடைக்கும். அந்த விதத்தில் ராஜன் அதிர்ஷ்டசாலி.

ராஜனின் முகம் அன்றலர்ந்த பூப் போல மலர்ந்திருந்தது. "ரொம்ப நன்றி சார், இந்த மாதிரி விருதுகளை எதிர்பார்த்து வேலை செய்றதில்லைனாக் கூட கிடைக்கும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது. உங்க முயற்சிக்கு ரொம்ப நன்றி."

தனது சீட்டிற்கு  வந்த கொஞ்ச நேரத்தில் செய்தி கசிந்து ஒவ்வொருவராக வந்து வாழ்த்து சொல்ல ஆரம்பித்தார்கள். சிலரது வாழ்த்து மனதிலிருந்து வந்தது. சிலர் பிறர் சொல்வதற்காக தானும் சொன்னார்கள். சிலர் தங்களது ஆற்றாமையை புன்னகையால் திரையிட்டு மூடி வாழ்த்தினார்கள். அப்பாவி ராஜன் அத்தனையையும் ஒன்றாகவே புரிந்து கொண்டார். சில நல்ல உள்ளங்களுக்கு பிறரது வஞ்சகங்கள் புரிவதில்லை.

மாலை வீட்டிற்கு  போனதும் அவரது இரண்டு மகன்களும் அவரது கை பற்றி குலுக்கினார்கள் . தொலை பேசியில் முன்னமே தகவல் சொல்லி இருந்தார். நேரம் போவது தெரியாமல் இதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள்.
"அப்பா இது வரை நீங்க கஷ்டப் பட்டு உழைச்சது போதும். VRS கொடுத்துடுங்க. இந்த விருது பெற்ற நிறைவிலேயே விலகிட்டா  தான் நல்லது. என்  பிள்ளையுடன்  உங்க மீதி நேரத்தை போக்குங்கள்" என்றனர். . அவருக்கும் அது ஆசையாகத்தான் இருந்தது.

தனக்காக எதுவும் செலவு செய்யாமல் கஷ்டப் பட்டு உழைத்து குடும்பம் நல்ல நிலைக்கு வந்து விட்டது. மூத்தவன் திருமணம் முடிந்து விட்டது. நல்ல வசதியில் இருக்கிறான்.  இளையவன் வேலைக்கு போக ஆரம்பித்து விட்டான். இப்போலாம் ஆரம்பத்திலேயே எவ்வளவு  சம்பளம் கொடுக்கிறார்கள். ராஜன் ஆரம்பத்தில்  வாங்கிய சம்பளம் நானூறு ரூபாய். அப்போ விலை வாசி குறைவுன்னு சொன்னாக் கூட சொந்த வசதிகளுக்காக செலவு பண்ண போதியதில்லை. கைக்கும் வயிற்றுக்குமாய் சரியாய் இருக்கும். இப்போ நன்றாக சம்பாதிக்கிறார்கள் நன்றாக செலவு செய்கிறார்கள். பிள்ளைகள் சொல்வது சரி தான் VRS வாங்கிட்டு  நிம்மதியா இருந்திட வேண்டியது தான்.

"நீ என்னம்மா சொல்றே. நம்ம ரெண்டு பேருக்கும் பென்ஷன் போதாதா?"
அருகில் இருந்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சின்ன சின்ன வேலைகள் செய்து கொண்டிருந்த மனைவியிடம் கேட்டார்.

" நீங்க யோசித்து செய்யுங்க. ஆனால் நல்லா இருக்கிற காலத்தில உழைச்சுக்கலாமே? காசு பணம் சேர்த்தா பிற் காலத்தில யாருக்கும் பாரமாகாம இருக்கலாம். ஒரு யோசனை தான். நீங்க முடிவு செய்துக்கோங்க " என்றாள்.

இரவு முழுவதும் சிந்தனையிலே இருந்தார். உடம்பு ரொம்ப பலவீனம் ஆனது போல் இருந்தது. சுகர் பிரஷர் னு எதுவும் கிடையாது. பள்ளிக் காலங்களில் பார்க் மதில் சுவர்களில் நண்பர்களுடன் அரட்டை அடித்தது நினைவு வந்தது. இப்போ கூட பாளை லூர்து நாதன் சிலை பக்கம் வயதானவர்கள் கூடுகிறார்கள். அங்கே போனா தான் தான் இளைஞனாக  இருப்போம் என்று நினைத்துக் கொண்டார். இப்போவே வேலையை  விட்டு விட ஆசையாக இருந்தது. அந்த ஆசையிலே உறங்கிப் போனார்.

மறு நாள் அலுவலகம் சென்றதும் மேலதிகாரியை சென்று பார்த்தார். " சார், இந்த விருது விழாவெல்லாம் முடிஞ்சதும் பணி ஓய்வு பெற்றிடலாம்னு இருக்கேன்." என்றார்.

"என்ன சொல்றீங்க ராஜன், விருது கொடுக்கிறது, நல்லா பணி செய்றவங்களை ஊக்கப் படுத்துறதுக்கு தான். நீங்க என்ன இப்படி முடிவு எடுக்குறீங்க. சரி, உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?"
"ரெண்டு பசங்க, மூத்தவனுக்கு   கல்யாணம் பண்ணியாச்சு. ரெண்டாவது பையன் வேலைக்கு போய்ட்டான். இன்னும் ரெண்டு வருஷத்தில முடிக்கணும்."

"பணத்தோட தேவை இல்லைன்னு சொல்றீங்க, நம்ம சுய மரியாதை உள் காயம் வாங்காம இருக்கிறதுக்காகவது வேலை செய்யணும். உங்கள் உடல் நிலை எப்படி இருக்குது."
"கடவுள் புண்ணியத்தில ஒரு நோயும் இல்லாம நல்லாத்தான் இருக்கேன்."

" அப்போ இந்த முடிவு ஏன்? இன்னும் ரெண்டு மாசம் இருக்குதே. அப்போ பார்த்துக்கலாம். அது வரை நல்லா யோசித்து முடிவு எடுங்க."
 தனது இடத்துக்கு வந்த ராஜனுக்கு வேலை செய்யவே ஓடவில்லை. எப்போ இதுக்கெல்லாம் முடிவு வரும்னு அலுப்பா இருந்தது. மகன் சொன்ன மூன்றெழுத்து ஒற்றைச் சொல் அவரை முழுவதும் மாற்றி விட்டது.

பணி ஓய்வு பெரும் நாளை ஆவலுடன் எதிர்நோக்க ஆரம்பித்து விட்டார்.
(இன்னும் வரும்)

22 June, 2010

அல்வா தின்னக் கூலி

கேபிள் சங்கர் ஜி  தன் பதிவில் செல் போன் கம்பெனியாளர்கள் வாடிக்கையாளர்களை மதித்து நடந்து கொள்வதில்லை என்று எழுதியதைப் பார்த்ததும் எனக்குள் கொசுவத்தி சுத்தி  நானும் ஒரு பதிவு போட்டேன் " வாடிக்கையாளர் சேவை மையம்" என்று.
அது எழுதிய கை முகூர்த்தம் (சொன்னது நடந்தா வாய் முகூர்த்தம்; எழுதியது நடந்தால் கை முகூர்த்தம் தானே) நான் பணி மாற்றம் செய்யப் பட்டேன். ஆனால் எனக்கு பிடித்த வாடிக்கையாளர் சேவை மையம் (பொறுப்பு )  நான்கு இடங்களில் நான்கு மையங்கள். நான்கையும் நன்கு செயல் படுவதை கவனிக்கும் பொறுப்பு எனக்கு. சுவைக்க அல்வா வும் கொடுத்து அது தின்னக் கூலியும்  கொடுக்கிறார்கள்.

சிலர் என்னிடம் கேட்டார்கள் "இப்பொழுது மிக முக்கியமாக உள்ள பிராட் பாண்டில் இருந்து மாறி விட்டீர்களே வருத்தமாக இல்லையா ?"
" இல்லவே இல்லை. நான் பணி புரியும் இடம் எதுவாக இருந்தாலும் அது எனக்கு முக்கியமான இடம் தான். கோப்புகளுடனும் இயந்திரங்களுடனும் இயங்கிக் கொண்டு இருந்த நான் உயிருள்ள மனிதர்களுடன் இயங்கப் போகிறேன் .  அது ஒரு விதமான புத்துணர்வைத் தான் தருகிறது. "

பொறுப்பை எடுத்ததும் ஒரு அனுபவம். இன்று அலுவலகத்துக்கு ஒரு இளைஞன் ஒரு பெரிய புத்தகக் கட்டோடு வந்தான். இந்த மாதம் வந்த தொலைபேசி பில்லில் அதிகமாக பிடித்து விட்டார்களோ என்று சந்தேகம். பில் செய்யும் சிஸ்டத்தில் ஒரு மாற்றம் செய்வதால் அந்த சந்தேகம். அந்த புத்தகக் கட்டை என் முன் விரித்தான். தொலை பேசி பில்கள் அழகாக அடுக்கப் பட்டு புத்தக வடிவில். " இங்க பாருங்க மேடம், 1993 இல் தொலை பேசி வாங்கினோம் முதல் பில்லில் இருந்து இன்று வரை நான் சேர்த்து வைத்து இருக்கிறேன். ஒரு தடவையும் பில் கட்ட தாமதம் ஆனது கிடையாது. "

 எனக்கு பிரமிப்பு. அவனைப் பாராட்ட வேண்டும் என்று விருப்பம். எப்படி எடுத்துக் கொள்வானோ? நான் சொல்லும் ஒவ்வொரு பதிலுக்கும் மாற்றுக் கேள்வி கேட்டான். அந்த கண்கள் " என்னை ஏமாற்ற முடியாது? என்றன.

இறுதியில் போன மாதம் பாக்கி என்று சொல்லி இருந்தாலும் அடுத்த கட்டத்திலேயே அந்த தொகை வரவு எடுக்கப் பட்டதைக் காட்டி, இரண்டு பில்களிலும் அடுத்தடுத்த மாதங்கள் வந்து இருப்பதை விளக்கி இன்னும் அவனது சந்தேகங்கள் அனைத்தையும்  விளக்கிய உடன் திருப்தியானவனாக "சந்தேகத்தை தெளிவு படுத்தி விடுவது நல்லது தானே. அதான் வந்தேன்." என்றான். எனக்கு ஏனோ சிவசு வாத்தியார் நினைவுக்கு வந்தார்.

இளைய வயதில் அவனது முதிர்ந்த நடவடிக்கை எனக்கு சந்தோஷத்தை தந்தது.  இந்த பணி எனக்கு பல அனுபவங்களையும் உங்களுக்கு பல பதிவுகளையும் தரும் என்று நம்புகிறேன்.

காத்திருங்கள்.

15 June, 2010

இப்படியும் சில மனிதர்கள் !!

நான் சந்தித்த, வித்தியாசமான மனிதர்களைப் பற்றி   அப்பப்போ  பகிர்ந்துக்கலாம்னு இருக்கிறேன்.
இதை எழுதலாம்னு நினைக்கிறப்போ எனக்கு முதல்ல நினைவு வந்தது சுபாஷினி. எனக்கு பிடித்த பத்து பெண்களிலேயே எழுதி இருக்கணும் ஆனா அதை அவங்க விரும்ப மாட்டாங்களோனு விட்டேன். ஒரே சண்டை. எப்படி என்னை விடலாம்னு.
எனக்கு ஹலோ எப் .எம் மில் பேசுற பழக்கம் உண்டு. "நிலா முற்றம்" எனக்கு பிடித்த நிகழ்ச்சி. (இப்போ ஏனோ இல்லை) பேசுவதற்கும் தோதான நேரம். பதிவுலகம் வரும் முன் என்  எண்ணங்களை பகிர்ந்து கொள்ள ஒரு வடிகால்.
ஒரு நாள் எப்.எம் மில் பேசிய சுபாஷினியின் குரல் என்னை ஈர்த்தது. ஒரு அழுத்தத்துடன் தன் எண்ணங்களை பதிய வைத்த குரல். ரசித்ததுடன் மறந்து விட்டேன்.
அன்று ஒரு நாள் எனது இல்ல தொலைபேசியில் அதே குரல். எங்கேயோ கேட்ட குரலாக இருக்கிறதே என் ஒரு நொடி நினைத்து "சுபாஷினி" என்றேன்.
"நான் சுபாஷினி தான் பேசுறேன். நீங்க பேசுறதை அடிக்கடி கேட்டு இருக்கிறேன். உங்க வாய்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் (அட!) நண்பர் ஒருவர் தான் உங்க எண்ணைக் கொடுத்தார். அதுவும் ரொம்ப கட்டாயத்துக்கு அப்பறம். ....."
அதன் பின் இருவரில் யார் நிலா முற்றத்தில் பேசினாலும் அடுத்தவர் பாராட்டுவதும், மாறு பட்ட கருத்துக்களை சொல்வதும் வழக்கமானது.அநேகமாக தினமும் பேசிக் கொள்வோம். எனக்கு கல்லூரி காலத்துக்குப் பின் எனக்கு கிடைத்த மிக நல்ல தோழி. 
ஒரு நாள் இதே போல் பேசிக் கொண்டு இருக்கும் போது மிகச் சாதாரணமாக " எனக்கு சில காலங்களுக்கு முன் கண் பார்வை போய் விட்டது" னு சொன்னாங்க. எனக்கு அதிர்ச்சியில் இதயம் ஒரு நிமிடம் நின்று துடிக்க ஆரம்பித்தது. 
"என்ன சொல்றீங்க" னு தயங்கி தயங்கி கேட்டேன்.
" ஆமாப்பா, என்னோட ரெண்டாவது பையன் பிறந்து கொஞ்ச காலத்துக்கு பிறகு திடீர்னு கண் பார்வை மங்க ஆரம்பித்தது. இப்போ முழுவதுமாய் போயிடுச்சு. " னாங்க.
எனக்கு பேச வார்த்தைகள் இல்லை. சுதாரித்துக் கொண்ட நான் பேச்சின் போக்கை சட்டென மாற்றி "இன்னைக்கு  எதுவும் ஸ்பெஷல் ப்ரோக்ராம் 'பார்த்தீங்களா'?" என்றேன்.
உபயோகமான பல தொலைக்காட்சி நிகழ்சிகளை "கேட்டு" என்னிடம் அவர்கள் பகிர்ந்து கொள்ளும் வழக்கம் உண்டு. 
எனது யோசனை பலித்தது. இறுக்கமான சூழல் மாறி இயல்பான நிலைக்கு இருவரும் வந்தோம். எப்படி பார்வை போனது, எப்படி சமாளிக்க கற்றுக் கொண்டார்கள் என்று மற்றொரு சாவதானமான பொழுதில் கேட்டுக் கொண்டேன். கண் பார்வை இன்மை என்பதே ஒரு சோகம் என்றால் அதை வளர்ந்த நிலையில் இழப்பது என்பது கொடுமையிலும் கொடுமை. ஆனால் அந்த சோகச் சொட்டு துளியும் இல்லாமல் உற்சாகமாக தன் சம்பந்தப் பட்ட காரியங்களை சுயமாக சமாளித்து, குடும்பத் தலைவியாய் ஒரு குறையும் இல்லாமல் திறம்படச் செய்யும் ஒரு பெண்மணி. 
வலைப்பூவில் நான் எழுதும் கதைகளுக்கு முதல் வாசகி. ஆம். எனது கதைகள் நிகழ்வுகளை கண் முன் கொண்டு நிறுத்துகிறது னு சிலர் பின்னூட்டம் இடுவது உண்டு. அதன் ரகசியம் இது தான். நான் எழுதியதும் சுபாஷினி இடம் தான் முதலில் வாசித்துக் காண்பிப்பேன். அவர்கள் புரியத் தயங்கும் சில இடங்களுக்கு இன்னும் கொஞ்சம் மெருகு கூட்டுவேன். அதில் அவர்களுக்கும் ஒரு சந்தோஷம்." உங்கள் வலைப்பூவில் என் பங்கும் இருக்கிறதே " என்று பூரிப்புடன் சொல்வார்கள். 
தான் சிந்தித்து வைத்த கவிதைகளை நாங்கள் பேசும் போது சுபாஷினி சொல்வது வழக்கம் உங்கள் கவிதைகளை நீங்களே உச்சரித்து ரெகார்ட் செய்து கொள்ளுங்கள் என்று நான் சொல்வதுண்டு. 
தான் இழந்த சந்தோஷங்களை இன்று வரை பேச்சில் குறிப்பிட்டதில்லை. வருத்தமான தருணங்களை வருணித்ததே இல்லை. துன்பக் கடலில் இருந்து வெளியேற அவர்களுக்கு ஒரு சின்ன துரும்பு போதும். 
மொத்தத்தில் நான் அறிந்த ஜான்சி ராணி. இப்படியும் சில மனிதர்கள். 
ஒரு விஷயத்தை மறந்திட்டேனே. சிகரமும், இமயமும் சேர்ந்து நடித்த 'ரெட்டைச் சுழியின்' சில பகுதிகள் இவர்கள் வீட்டில் எடுக்கப் பட்டது தான். 

13 June, 2010

சிவசு வாத்தியார் - நிறைவு பாகம்

(அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்கு  மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.)

பள்ளிக்குச் சென்றதும் மகன் அவரைக் கண்டு ஓடி வந்தான். " அப்பா , எங்களுக்கு ஒரு புது சார் வந்து இருக்காங்க. அவர் உங்கள்ட தான் படிச்சாராம். உங்களை ரொம்ப புகழ்ராருப்பா.எனக்கு ரொம்ப பெருமையா இருந்தது. வாங்கப்பா அவரை பார்க்கலாம். "
மகன் பெருமையாக ஓடி சென்று அழைத்து வந்தான். வந்தது ஐயாவின் பழைய மாணவன். "இன்று வரை தன் வாழ்வின் எந்த அடியும் அவரை நினைத்து தான் எடுப்பதாகவும் எந்த இடத்திலும் தவறியதில்லை என்றும், தன்னைப் போல் அவருடைய பல மாணவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஒவ்வொரு ஆசிரியர் தினத்தன்றும் தான் எடுக்கும் வகுப்பு மாணவர்களிடம் அவரை குறிப்பிடத் தவறியதில்லை" என்றும் பேசிக் கொண்டே சென்றார். 

ஆசிரியர் ஒரு வித மயக்க நிலைக்கு போய் விட்டார். தான் எடுக்கும் எந்த முடிவும் தன்னை மட்டும் பாதிப்பதில்லை இன்னும் எத்தனை பேரை?ஓய்வு பெரும் வரை யாவது.  வெளி உலகுக்காக இந்த வாழ்க்கை வாழ்ந்து தான் ஆக வேண்டும். முடிவு எடுத்த பின் மகளை அவசர அவசர மாகப் பார்த்து விட்டு ஊர் போய் சேர்ந்தார். அதன் பின் இருவரும் நடை பிணமாகத் தான் வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். 

அவரது மனம் சஞ்சலப் படுவதை புரிந்து கொண்ட சந்துரு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன் படுத்திக் கொண்டான். அவளைப் பற்றி பிறர் மூலம் பல விஷயங்களை அறிந்து கொண்டு அவளே தன்னிடம் சொன்னது போல் சிவசு ஐயாவைப் பார்க்கும் போதெல்லாம் சொன்னான். தன் மனைவியிடம் வெளிப்படையாக பேசி இருந்தால்  சுலபத்தில் சரி செய்யக் கூடிய விஷயத்தை இடியாப்பச் சிக்கலாக்கினார். அவளிடம் பேசுவதையே முற்றிலுமாக குறைத்துக் கொண்டார். 

சியாமளாவின் நிலையோ பரிதாபமாக இருந்தது. பள்ளி விழாவன்று சொன்ன சொல்லுக்காகத்தான் இந்த தண்டனை என்று நினைத்துக் கொண்டாள். அங்கே மேலும் மேலும் அக்னி சேர்ந்து கொண்டே இருப்பதை அவள் அறியாமலே போனாள். அவரது வைராக்கியம் அவள் அறிந்த ஒன்று என்பதால் அவரிடம் பேசிப் பார்க்கும் தைரியம் இல்லாமல் போனது. திரௌபதியின் ஒற்றைச் சிரிப்பு ஒரு இதிகாசத்தையே உருவாக்கியது. இவளது ஒற்றை சொல் இவள் வாழ்வையே பறித்தது. 

 சிவசு வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இதற்கு மேல் பிறருக்காக வாழ வேண்டிய அவசியம் இல்லை. இந்த பாரம் நெஞ்சில் கருங்கல்லாய் இறங்குகிறது. ஒரு வக்கீலைப் பார்த்து தன் பிரச்சினையை பட்டும் படாமலும் சொல்லி விட்டார்." இப்படியே மிச்ச நாளையும் போக்கி விடலாமே . இந்த வயதில் விவாகரத்து தேவையா" என்ற அவரின் கேள்விக்கு " நான் மட்டும் இந்த வாத்தியார் தொழில் பார்க்காமல் இருந்தால் என்றோ அவளை விட்டு பிரிந்து இருப்பேன். அவளாவது சந்தோஷமாய் இருந்திருப்பாள். என்னைக் கட்டிய பாவத்துக்கு இவ்வளவு நாள் என்னோட இருந்தது போதும். மிச்ச நாளாவது அவள் விருப்பப்படி இருக்கட்டும். சந்துரு சொன்னதெல்லாம் வைச்சு பார்த்தா எந்த வயசிலும் அவளை ஏத்துக்கிடுவான் போலத் தான் தெரியுது. நீங்க ஆக வேண்டியதைப் பாருங்களேன்" என்று பரிதாபமாகச் சொன்னதும் வக்கீலும் சம்மதித்து விட்டார்.

சியாமளா வக்கீலிடம் இருந்து வந்த நோட்டீஸ் ஐப் பார்த்து பதறிப் போனாள். ஐயா பேசாமல் இருந்தாலும் மிச்ச நாட்களை அவரைப் பார்த்துக் கொண்டே ஓட்டி விடலாம் என்று இருந்தாள். இது பேரிடி. வருடங்கள் பல கடந்ததால் அவளால் அவரிடம் பேச முடிய வில்லை. தயங்கி தயங்கி அவர் அருகில் போய் பேசுவதற்கு நின்றாலும் அழுகை தான் நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது. அவரோ அதற்குள் இடத்தை காலி செய்து விட்டு இருந்தார். இப்படிப்பட்டவர்கள் தன்னைப் போல் வைராக்கியம் யாருக்கு உண்டு என்ற வெட்டி ஜம்பத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டு மீதி அனைத்தையும் இழக்கிறார்கள். சியாமளா இந்த பிரச்சினையை யாரிடமும்  கொண்டு செல்வதாய்  இல்லை. நேராக குடும்ப வழக்கு நடக்கும் இடத்திற்கே சென்று என்ன ஆனாலும் தான் அவரை பிரிவதாக இல்லை என்றும் ஆயுள் முடியும் வரை அவருடனே வாழ விரும்புவதாகவும் அழுத்தம் திருத்தமாக சொல்லி விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். 

அவள் எடுத்த முடிவை பற்றி அறியாமல்கொளுத்தும் வெயிலுக்கு விரித்து பிடித்த குடையும், கால் தடுக்காமல் வேட்டியின் ஒரு முனையை வலது கையின் இரு விரல்களால் தூக்கிப் பிடித்த படி மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தார் சிவசு  வாத்தியார்.அவரது நிலை கண்டு கோபித்து சிவந்தது போல் எழுந்து நிற்கிறது கோர்ட் கட்டடம் " நீங்கள் நினைப்பது போல் எனக்கும் சந்துருவுக்கும் எதுவும் இல்லை நான் உங்களுடனே வாழ விரும்புகிறேன் " என்று அவள் சொல்லி விட மாட்டாளா என்று மனதின் ஒரு ஓரம் அவருக்கு முனங்கிக் கொண்டு தான் இருந்தது. 


(முற்றும்)


(இதனால் யாவருக்கும் சொல்ல விரும்புவது: சிக்கல் கணவன் மனைவிக்கு இடையே ஆனாலும் நட்புக்கிடையே ஆனாலும் வெளிப்படையாய் பேசுவது பல இழப்புகளை தவிர்க்கும். பதிவர் ஒருவரின் விருப்பத்திற்காக மனச் சிக்கலை கொண்டு ஒரு கதை எழுதிப் பார்த்தேன். வெற்றி பெற்றேனா தெரியவில்லை. ஒரு நல்ல செய்தியை சொன்ன நிறைவிருக்கிறது. முடித்து விட்டேன் நாடோடி, நன்றி ) 



06 June, 2010

சிவசு வாத்தியார் - பாகம் மூன்று.


(இத்தனை ஆண்டுகளாக தன்னை ஒரு ஜடப் பொருளாக நடத்திய ஆத்திரத்தை அடக்க முடியாதவளாக இதற்க்கு மட்டும் எங்கிருந்து வந்தது உரிமை என்று கோபப் பட்டவளாக முகத்தை நேருக்கு நேர் பார்த்த படி சொன்னாள்" நானும் அவரும் காதலித்தோம். அவரை மணந்திருந்தால் அந்த மேடையில் இருக்க வேண்டியவள் தான் உங்களை மணந்து இப்படி அல்லாடிக் கொண்டு இருக்கிறேன். ஒரு பிச்சை எடுப்பவளுக்கு கிடைக்கும் சந்தோஷம் கூட இல்லாமல் அவளை விட கேவலமானவளாக இருந்து கொண்டு இருக்கிறேன். ..." இன்னும் என்னன்னவோ பொரிந்து தள்ளினாள். கண்களில் தண்ணீர் நிற்காமல் ஓடிக் கொண்டு இருந்தது.

இதை சிறிதும் எதிர்ப்பார்க்காத ஆசிரியர் அதிர்ச்சியில் உறைந்து நின்றார்....)

அன்று இரவு அதிர்ச்சியிலும் , கலக்கத்திலும் கடந்தது.
அடுத்து வந்த இரு நாட்களும் ஒரு வித அழுத்தமான அமைதியில் அடர்ந்து இருந்தது.

சிவசு ஐயா பல விதமான குழப்பத்தில் இருந்தார். "இத்தனை ஆண்டுகள் இருவரும் தொடர்பில் இருந்திருப்பார்களோ? இல்லையென்றால் அவளுடைய என்றுமில்லாத அலங்காரத்திற்கு வேறு அர்த்தம் தெரியவில்லையே? இவளை விவாகரத்து செய்து விட வேண்டியது தான். பிள்ளைகள் இருவரும் மதுரையில் தான் படிக்கிறார்கள். இவளில்லாமல் அவர்களை சமாளித்து விட முடியாதா? " என பல விதமான எண்ணச் சூழல்களில் சிக்கிச் சுழன்று கொண்டு இருந்தார்.

சியாமளா வேறு விதமான சிந்தனையில் சிக்கிக் கொண்டு இருந்தாள். அந்த நிமிட கோபத்திலும், வெறுமையிலும், அவனைப் பார்த்த சந்தோஷத்திலும் சொல்லி  விட்டாளே ஒழிய வேறு எந்த விதமான அந்தரங்க ஆசையும் அவளிடம் இல்லை. தன் மனம் அவனிடம் செல்வதைக் கூட, தன் கணவனிடம் உண்டான அன்பை அதிகரித்துக் கொண்டு தான் தடுக்க வேண்டும் என முடிவெடுத்தாள். ஆனால் அவரது இறுக்கம் அவளுக்கு மூச்சு முட்டியது. . எந்த சூழ்நிலையிலும் யாரிடமும் தானாக சென்று பேசி சுமுகம் ஆக்கிக் கொள்ளும் திறமை படைத்தவள் தான். ஆனால் நெருங்கி இருக்க வேண்டிய சிவசு ஐயாவிடம் அவளால் நெருங்க முடியவில்லை. இயல்பான நேரங்களில் பேச முடிகிறதே தவிர இறுக்கமான நேரங்களில் அவரது மௌனம் அவர்களுக்கிடையே ஒரு அரணாய் நின்று விடுகிறது.

அன்று இரவு அவர் படுத்ததும் மெல்ல பக்கத்தில் போய் அவர் காலை பிடித்து விட போனாள். விருட்டென்று இரு கால்களையும் சுருக்கிக் கொண்டவர் போர்வையை இழுத்து தலை வரை மூடினார். " என்னை மன்னிச்சிருங்க, ஏதோ ஒரு வேகத்தில சொல்லிட்டேன். மற்றபடி நான் வாழ்ற வாழ்க்கையில சந்தோஷமாத்தான் இருக்கேன். " இன்னும் எவ்வளவோ பேச நினைத்தாலும் அழுகையும் துக்கமும் சேர்ந்து தொண்டையை அடைக்க வெறும் தரையில் தலையணையை தூக்கி போட்டு படுத்து கொஞ்ச நேரத்தில் தூங்கியும் போனாள்.

அடுத்து வந்த நாட்களில் அவர் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது போல் இருந்தாலும் இயல்பு நிலைக்கு வரவில்லை. அவரது தேவைகளை ஒற்றை வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் பொறுமை காத்துக் கொண்டு இருந்தாள். அவர்களுக்கிடையே தாம்பத்தியம் சரியாக இருந்திருந்தால் எவ்வளவு பெரிய பிரச்னையும் பனி போல் விலகி இருக்கும். அதற்க்கு வழி இல்லாமல் இருந்தது.

கொஞ்ச நாள் சியாமா தன்னை எதிர்பார்க்க வேண்டும் என்று தவிர்த்து ஒரு வாரம் கழித்து சந்துரு அவர்கள் வீட்டிற்க்கு புறப்பட்டான்.அதிகம் பேர் கண்ணில் படாமல் தப்பலாம் என்று மதியம் மூன்று மணியைத் தேர்ந்தெடுத்தான். டிரைவரிடம் அவர்கள் வீடு எங்கே இருக்கிறது என்று ஏற்கனவே கேட்டு வைத்து இருந்தான். வீட்டிற்க்கு கொஞ்சம் தள்ளி உள்ள சந்தில் காரை பார்க் செய்து வந்து கதவில் மெல்ல தட்டினான்.
கதவைத் திறந்த சியாமா அதிர்ச்சி ஆகி சுதாரித்துக் கொண்டு " வாங்க" என்றாள்.

' ரொம்ப வருஷங்களுக்கு பின்ன ஸ்கூல் இல உன்னைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷம் ஆகிட்டேன். ஷ்யாம். என்னால உன்னை மறக்க முடியல. நீயும் நிச்சயம் அப்படித்தான் இருந்திருப்ப. அது உன் பார்வையிலே தெரிஞ்சது. என்னடா, ஒண்ணுமே பேசாம இருக்கிற? ' அவசரம் பிடித்தவன் அவள் என்ன நினைக்கிறாள் என்பதே தெரிந்து கொள்ளாமல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற முடிவோடு பேசிக்கொண்டிருந்தான்.

அவன் இப்படி நேரிடையாக விஷயத்துக்கு வந்ததும் அவனை முகத்தில் அடித்தாற் போல் விரட்டுவதா இல்லை மென்மையாக புரிய வைத்து அனுப்புவதா என்ற குழப்பத்தில் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

'என்ன ஷ்யாம் என்னைப் பார்த்த சந்தோஷத்தில உனக்கு பேச்சே வரல்ல போல் இருக்குது. இப்போ நீ மட்டும் ம்ம்ம் னு சொல்லு ஐயா, என்ன கேட்டாலும் கொடுத்து உன்னை என்னோட கூட்டிட்டு போய்டுறேன். '

சேறு எனக் கண்டு விட்டோம் என்றால் தன் மீது தெறித்து விடாமல் ஒதுங்கிச் செல்வது தான் புத்திசாலித்தனம். மீறிக் கோபத்தில் அதனை உதைத்தால் அசிங்கப் படப் போவது தான் தான் என்பதை புரிந்தவளாய் சரம் சரமாய் வார்த்தைகளை கோர்த்து அவனை அழுத்தமாகப் பார்த்த படி சொன்னாள். " அவுக இல்லாத நேரத்தில நீங்க இங்க வரது எனக்கு பிடிக்கல. அதுவும் இந்த மாதிரி பேசுறது சுத்தமா பிடிக்கல. " என்றாள். அப்போது தான் தன்னை அவள் அமரக் கூட சொல்லவில்லை என்பது உரைத்தது.
"இல்ல ஷ்யாம், " என்று இழுத்தான். அவள் இறுக்கமான முகத்துடன் வாசலைப் பார்ப்பதைப் பார்த்து முகம் தொங்கிப் போக வெளியேறினான்.

பள்ளியில் மனம் ஒரு நிலைப் படாமல், சிவசு ஐயா வீட்டுக்கு போய் ஒரு தூக்கம் போட்டால் நல்ல இருக்கும் போல் தோன்ற அரை நாள் விடுப்பு சொல்லி வந்து கொண்டு இருந்தார். அவரை தூரத்தில் பார்த்ததுமே மனதுக்குள் ஒரு திருட்டுத்தனம் எட்டிப் பார்க்க தனது தொங்கிப் போய் இருந்த முகத்தை இஸ்திரி செய்தது போல் மாற்றிக் கொண்டு முக மலர்ச்சியுடனும் துள்ளல் நடையுடனும் அவரைப் பார்க்காதது போல் சென்று காரில் ஏறி புறப்பட்டான் சந்துரு .

அதிர்ந்து போனார் சிவசு. ' இவன் எங்க இங்கே வந்தான். அவன் சிரிப்பும் நடையும் ஏதோ விபரீதத்தை சொல்கிறதே. குடும்பத்தை நடுத் தெருவுக்கு கொண்டு வந்திடுவா போல் இருக்கே. ' என்று பதறியவர் அதற்க்கு மேல் வீட்டிற்க்கு போக பிடிக்காமல் பஸ் ஏறி மதுரைக்கு பிள்ளைகளைப் பார்க்க சென்றார்.' இவளை தீர்த்து விட்டுற வேண்டியது தான்' என்ற தீர்மானத்தோடு சீட்டில் சாய்ந்தவாறே கண் அயர்ந்தார்.

(இன்னும் வரும் )