Bio Data !!

23 December, 2022

புத்தகத்தின் பெயர் : புஷ்பப் பல்லக்கு ஆசிரியர் : கல்கி வானதி பதிப்பகம் இது ஒரு சிறு கதை தொகுப்பு. அமரர் கல்கி அவர்களின் நூற்றாண்டை ஒட்டி அவரது நினைவு நாளில் சிறப்பு வெளியீடாக பிரசுரிக்கப் பட்டது. இதில் உள்ள கதைகள் இதற்கு முன் வேறு எந்த தொகுதியிலும் வெளி வராத கதைகள். அதை விட சிறப்பு கல்கி இதழ் தொடங்கப் படுவதற்கு முன்னாலேயே பிற பத்திரிகைகளில் வெளியாகி கல்கியில் மறு பிரசுரம் ஆனவை. அது மட்டுமல்லாமல் “சித்திரக் கொத்து “ என்னும் தலைப்பில் அமரர் கல்கி 1930 இல் எழுதிய நகைச்சுவை கட்டுரை ஒன்றும் சேர்க்கப் பட்டுள்ளது. இதில் மொத்தம் எட்டு சிறு கதைகளும் ஒரு நகைச்சுவை கட்டுரையும் உள்ளன. முதல் கதை “அருணாச்சலத்தின் அலுவல்” ஆரம்பமே அமர்க்களமாக இருக்கின்றது. “ இது ஒரு கதை என்ற செய்தியை ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இல்லை என்றால் சம்பவம் உண்மை என்று நம்பி நீங்கள் ஆசாமியை தேடி புறப்பட்டு விடலாம். அதை என் நண்பன் அருணாச்சலம் ஒரு வேளை விரும்ப மாட்டான்” இந்த கதை 1932 இல் எழுதப் பட்டு கலைமகளில் பிரசுரமாகி இருக்கிறது. சிறப்பு என்னவென்றால் அந்த காலத்திலேயே வீட்டுக் கணவர்களை[ House Husband} பற்றி கதை எழுதி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் வீட்டு வேலைகளையும் குழந்தையையும் பார்த்துக் கொள்ளும் கணவனுக்கு மனைவி பணம் கொடுப்பதைப் போல தன் மனைவி வீட்டு வேலைகளை செய்வதற்கு பணம் கேட்டு விட்டால் என்ன செய்வது என்று கவலைப் படுகிறார். எனக்கு இங்கே கமலஹாசன் வீட்டில் வேலை செய்யும் மனைவிகளுக்கு மாதா மாதம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்று பேசியது நினைவுக்கு வந்தது. கிட்டத்தட்ட 90 வருடங்களுக்கு முன் அதை சிந்தித்திருக்கிறார். எத்தகைய அறிவு!!! இரண்டாவது கதை “ புஷ்பப் பல்லக்கு” அது தான் புத்தகத்தின் தலைப்பும். இந்த கதையின் சிறப்பு கதை மாந்தர்களின் பெயர்கள். உதாரணத்துக்கு ஒரு சில பெயர்களை சொல்கிறேன். தீராத்துயரமய்யங்கார், விகாரம் பிள்ளை, லஞ்ச நாத சாஸ்திரி. பெயர்களே கதா பாத்திரங்களின் குணங்களை சொல்வது போல் இருக்கிறது. இந்த கதை 1934 இல் ஆனந்த விகடனில் வந்திருக்கிறது. மூன்றாவது கதை “ குலசேகரன் அதிர்ஷ்டம் “ கிராமத்திலிருந்து பட்டணத்துக்கு செல்லும் ஒரு அல்ட்டாப் பேர்வழி வழி நெடுக ரயிலில் செய்யும் அலப்பரைகளும் பட்டணத்தில் ஒரு நவ நாகரிக பெண்ணிடம் மயங்கி ஏமாறுவதும் ஒவ்வொரு கடையிலும் தன்னிடம் இருக்கும் நூறு ரூபாய்க்கு சில்லரை இருக்கிறதா எனக் கேட்பதும்,கடைசியில் ரயிலில் தன் பெட்டியை நூறு ரூபாயோடு பறி கொடுத்ததுமாக முடித்தாலும் இறுதியில் வாசகர் மகிழும் வண்ணம் மகன் ஏமாந்து விடுவான் என தாய் கிளம்பு முன்னமேயே பணத்தை எடுத்து விட்டதால் அது பத்திரமாக அரிசிப் பானையில் இருந்ததாக சொல்லி இருக்கிறார். இது 1935 இல் ஆனத்த விகடனில் வந்திருக்கிறது. சிறு கதை எழுத தொடங்குபவர்கள் இந்த தொகுப்பை வாசிக்கலாம். எப்படி எழுத வேண்டும் என்று ஒரு யோசனை கிடைக்கும். நான்காவது “ பரிசல் துறை” என்னும் ஒர் அருமையான காதல் கதை. இது 1937 இல் ஆனந்த விகடனில் பிரசுரமானது. கள்ளங் கபட மில்லாத காதலை எழுத்தில் பார்க்க அவ்வளவு அழ்காக இருக்கிறது. ஐந்தாவது கதை “ ஸூசீலா எம். ஏ “ எனக்கு இந்த கதை அவ்வளவு ரசிக்கவில்லை. கதாநாயகி சுசிலா திருநெல்வேலியைச் சேர்ந்தவள். பாக சாஸ்திரம் சம்பந்தமான ஆராய்ச்சிகள் செய்து பட்டம் பெறுகிறாள் . அதன் பின் உணவே எப்படி வெறுத்துப் போகிறது என்பது பற்றிய கதை. 1938 இல் ஆனந்த விகடனில் பிரசுரமாய் இருக்கிறது. ஆறாவது கதை “ பித்தளை ஒட்டியாணம்” இந்த கதையில் அவருடைய எழுத்தில் கண் சிமிட்டிய நகைச்சுவை ரசிக்க வைத்தது. “ அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் ஒரே வைரமாய் வைத்து இழைத்துக் கொண்டு வந்திருந்தார்கள். ஒரு பத்து லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்வதற்குப் போதுமான வைரம் அவர்கள் மேல் இருந்தது.” { எப்படி இருக்கு கதை!} இந்த ஒரு வரி தான் நகைச்சுவை.சபலத்தில் பணக் கையாடல் செய்யும் கணவனும் அவனுடைய நேர்மையான மனைவியால் எப்படி காப்பாற்றப்படுகிறான் என்பதும் தான் கதை. இது 1940 இல் ஆனந்த விகடனில் பிரசுரிக்கப் பட்டது. இன்னும் இரண்டு கதைகள் “ மாஸ்டர் மெதுவடை’ “ கொள்ளிடத்து முதலை” மேலும் “ சித்திரக் கொத்து” என்னும் நகைச்சுவைக் கட்டுரை. நான் மிகவும் ரசித்து வாசித்த கதைத் தொகுப்பு. அந்த காலத்தில் எவ்வளவு நல்ல கருத்துகளை கதைகள் மூலம் சொல்லி இருக்கிறார்கள். ஒரு முப்பது வருடம் முன்னால் பிறந்திருக்கலாமோ?

19 December, 2022

புத்தகத்தின் பெயர் : தேரியாயணம். ஆசிரியர் : கண்ண குமார விஸ்வரூபன். பாவை பதிப்பகம். விலை : ரூ 270/- ஆசிரியரின் இயற்பெயர் ஆறுமுகப் பெருமாள். கண்ண குமார விஸ்வரூபன் என்ற அழகான புனை பெயரில் எழுதுகிறார். இவர் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத்தை சேர்ந்தவர். இந்த மண் ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதை சார்ந்து ஐவகை கலாசாரங்கள் உள்ளன. அந்தந்த மண் சார்ந்த ஐவகை இலக்கியங்களும் உள்ளன. இந்த ஐவகையும் சாராத ஒரு வித நில வகை தான் தேரி நிலம்” பாலையென்றும் சொல்ல முடியாத பசுஞ்சோலை என்றும் சொல்ல முடியாத புது வகை நிலப் பகுதி. தனியாக குறிப்பிடப்படாத இந்த வகை இலக்கியத்தை “தேரி இலக்கியம்” என்று பெயர் சூட்டியது மரியாதைக்குரிய பொது உடைமை போராளி தோழர் நல்ல கண்ணு என்கிறார் ஆசிரியர்.. மூன்று சிறு கதை தொகுப்புகளுக்குப் பின் நான்காவதாக இந்த நாவலை வெளியிட்டிருக்கிறார். முனைவர் நா. இராமசந்திரன் முன்னுரை எழுதி உள்ளார். நிகழ் காண்டம் என்று ஐந்து அத்தியாயங்கள். அதன் பின் பூர்வ காண்டம் என்று பத்து அத்தியாயங்கள். நிகழ் காண்டத்தின் ஆறாவது அத்தியாயம் அதைத் தொடர்கிறது. இரண்டு காண்டங்களின் அத்தியாயங்களில் வித்தியாசம் காட்ட நிகழ் காண்டத்தின் அத்தியாயங்களை எண்ணிலும் பூர்வ காண்டத்தின் அத்தியாயங்களை ரோமன் எண்ணிலும் குறிப்பிடுகிறார். சுப்பம்மாள் என்னும் வயதான பெண்ணை நமக்கு அறிமுகப்படுத்தும் போதே அந்த மண்ணின் வாழ்க்கை முறையையும் சொல்லி விடுகிறார். “ கறுத்த சேலை. தாலி அறுத்தவள் கட்டும் சேலை. மேலுடம்பில் ரவிக்கையில்லை. நுள்ளிப் பிடித்து அறுத்தெடுத்தாலும் அவளுடம்பில் அரைக்கிலோ கறியாவது தேறுமா என்ற ஐயமே” மண்ணின் வறுமைக்கு அவளொரு உதாரணமாய் இருக்கிறாள். அவள் கணவன் பலவேசம். எல்லா வித எதிர் மறை குணங்களும் உடையவன். அவள் வாசல் தேடி வந்த மகள் மாரி. அவள் பெற்றெடுத்த பிள்ளைகள் சடையன், கோசலை. தென் மேற்கு பருவக் காற்றால் இந்த மணல் பகுதிகள் மேடாவதும் பள்ளமாவதும் அடிக்கடி நிகழும். தேரிக்காட்டின் சில பகுதிகள் காற்றின் தன்மைக்கு ஏற்ப பெரிய மணல் மேடாகி இடம் மாறியது போல் தோற்றமளிக்கும். அதனாலேயே தனியாக ஒருவர் சென்றால் வழி தப்பி தொலைந்து போகக் கூடும் என்று எல்லோரும் சேர்ந்தாற் போல் தேரிக்காட்டுப் பகுதிக்கு செல்வதும் அங்குள்ள உடை மரங்களின் மெல்லிய பகுதிகளை வெட்டிச் சேர்த்து கட்டி ஒன்று போல வெளியேறுவதும் வந்து அந்த சுள்ளிகளை விற்று பணம் பெற்று அன்றாட செலவுகளை பார்ப்பதும் தான் வாழ்க்கை முறை. ஓலை இணுக்குகளை கொண்டு செருப்பு முனைந்து அதைப் போட்டுக் கொண்டு தான் காட்டுக்குள் உள்ள சுடு மணலில் நடப்பார்கள். சில நேரம் அந்த இணுக்குகளில் ஓட்டை விழுந்து கால் பொத்துப் போவதும் உண்டு. பூர்வ காண்டத்தில் சுப்பம்மாளின் திருமண வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்கள் தேரிக் காட்டின் மணலை விட சுடும் அவள் வாழ்க்கைப் பாதை வருகின்றன. ஒரு இடத்தில் “ மல்லாந்த நிலையில் கண் மூடிக் கிடந்த {இறந்து போய் கிடந்த} ஊமைப் பெண்ணின் மார் மீது தனது பிஞ்சுக் கையால் அடித்த படி குழந்தை அழுது கொண்டிருந்தது என்று எழுதி இருக்கிறார். எனக்கு இரா. பார்த்திபன் அவர்களின் “ இரவின் நிழல் “ படத்தில் இதை ஒத்த ஒரு காட்சி நினைவுக்கு வந்தது. படத்தின் அழுத்தமான காட்சிகளில் அதுவும் ஒன்று. அந்த ஊமைப் பெண்ணின் சடலத்துக்கு தமது வறுமை நிலையிலும் அந்த தேரிக்காட்டு மக்கள் எந்த ஒரு சடங்கையும் விட்டுக் கொடுத்து விடாமல் செய்யும் போது அங்கே மனிதம் மிளிர்ந்தது. அதை முன்னெடுத்துச் செல்லும் சுடலையாண்டி கிழவரும் கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரம். ஒரு அதிமுக்கியமான வாழ்க்கை தத்துவத்தை கதையின் ஊடாக சொல்கிறார். பொஞ்சாதியால் மதிக்கப் படாவிட்டால் புருசனுக்கு நிம்மதியிருக்காது. நிம்மதியற்ற மனிதனால் வாழ்வில் எதிர் நீச்சல் போட்டுக் கெலிக்கவே முடியாது. என்கிறார். எனக்கு இன்றைய குழந்தைகளில் பலரின் வாழ்க்கை பெரும் தோல்வியாய் முடிவதற்கு இது ஒரு முக்கிய காரணமாய் தோன்றியது. தான் காதலிக்கும் ராஜ பாண்டி தன் தங்கைக்கு திருமணம் முடித்த பின் தான் தன்னை கை பிடிக்க முடியும் என்பது புரிந்து மாரி தன் தம்பிக்கும் தங்கைக்கும் திருமணம் முடிக்க ஊக்குவித்து அவர்கள் திருமணம் முடித்து பிள்ளைகளும் பெற்ற பின்னும் சந்தோஷமாக காத்திருக்கிறாள். மாரி ஒரு உயர்ந்த கதாபாத்திரம். ஒரு திருடனைப் போல அரசு அதிகாரிகளுக்கு பயந்து பயந்து விறகு வெட்டி விற்று தம் வயிற்றைக் கழுவி சுட்டுப் பொசுக்கும் வெயிலிலும் இளங் காதல் வளர்த்து மனிதம் காத்த மானம் காத்த மக்களின் வாழ்வியலைத் தெரிந்து கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாக எனக்குத் தோன்றுகிறது. பல இடங்கள் என்னை கண் கலங்க வைத்தது உண்மை. அழகு தமிழில் இவர் எழுதி உள்ளதற்கு சில உதாரணங்கள்:  “ ஆனை கிடைத்த சேனை போல அனைவரும் தட தடவென எழுந்து தேரியுள் பெய்யும் மழை நீர் வெளியேறி வரும் ஓடையான அந்தத் தேரியோடையின் கரையோரமாய் தெற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்”  “ அவளுக்குள்ளிருந்த பொஞ்சாதி கொஞ்சங் கொஞ்சமாய் பொசுங்கிக் கொண்டிருந்தாள். அருந்தியாகத் தாயானவள் தலை நிமிர்வாய் பேரெழுச்சியாய் எழுந்து கொண்டிருந்தாள்.”  “ வயிறு நெறயச் சோறு கெடைக்கித நாளு நல்ல நாளு. வயிறு காஞ்சு பட்டினியோடப் படுக்கப் போற நாளு கெட்ட நாளுங்கி தத்தரித்திர நெலயில கலியாணத்துக்கு எங்க நல்ல நாளு பாக்க”

08 December, 2022

அவன் # கதை திறனாய்வு.

புத்தகத்தின் பெயர் : அவன் ஆசிரியர் : ரா.கி. ரங்கராஜன் பூம்பாவை பதிப்பகம். விலை : ரூ 260/- ரா.கி.ரங்கராஜன் கதையின் முன்னுரையில் இவ்வாறு சொல்கிறார். “ நான் கிருஷ்ண தேவராயன் “ என்று நான் எழுதிய சரித்திர கதையில் சக்கரவர்த்தி சொல்வதாக கதை நான் நான் நான் என்று வரும். அதிலிருந்து மாறுபட்டு எழுதுவதற்காக என்னை பற்றி எழுதிய கதையில் அவன் அவன் அவன் என்று எழுதி இருக்கிறேன். இது தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கை கதை. இலக்கிய வரலாறு இல்லை"என்கிறார். . ஒரு முறை கடும் ஆஸ்துமா தொல்லையில் மாட்டிக் கொண்டு இவருக்கு பல்ஸ் கிடு கிடு வென்று விழுந்து கொண்டு இருந்திருக்கிறது. மருத்துவ மனைக்கு கொண்டு போயிருந்திருக்கிறார்கள். அப்போது இவருக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்வு நினைவுக்கு வருகிறது. அன்று இவர் மாமனாரை ரொம்ப ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்று தரையில் கிடத்தி பதிவு செய்ய போகும் போது வந்து பார்த்த நர்ஸ் “ He is alreagy dead” என்கிறார்கள்..அசந்தர்ப்ப வசமாக அவருக்கு வந்த மரண நினைவு நம்மை ஒரு உலுக்கு உலுக்குகிறது. இவருக்கு ஒன்பது வயது இருக்கும் போது இவர் செய்த ஏதோ ஒரு சிறு தவறுக்காக கோமணத்தோடு வாசல் திண்ணையில் இவருடைய அப்பா அமர்த்தி வைத்ததாகவும் தெருவில் போவோரும் வருவோவும் பெருந்தன்மையாக பார்க்காமலே போனதாகவும் எழுதி இருக்கிறார். [இதை வாசிக்கும் போது எனக்கு அந்த கால தண்டனைகள் நினைவுக்கு வந்தன. கண்களில் மிளகாய் பொடி தூவுவது வீட்டு வாசலில் முழங்கால் போட்டு கைகளை விரித்து வைப்பது , பழைய சாமான்கள் இருக்கும் அறையில் தனியாக படுக்க வைப்பது { கால்களின் மேல் ஊறும் கரப்பான் பூச்சிகளை பார்த்து குழந்தகள் அலறும்{, புளியங் கம்பால் விளாறுவது இவை நான் கேள்விப்பட்ட, பார்த்த ,அனுபவித்த ,“சில” தண்டனைகள். நாகர்கோயிலில் நான் ஒரு பள்ளியை கடந்து பணிக்கு செல்வேன். அது ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளி. மாணவர்களை அடிக்கும் அடிக்கு அவர்கள் கத்தும் சத்தம் காதை பிளக்கும். பெண் விடுதலைக்கு பெரியார், சட்ட நுணுக்கங்களுக்கு அம்பேத்கார். இந்த தகவல் நமக்கு தெரிந்தது. குழந்தைகளை அடிக்க கூடாது என்ற இன்றைய நிலைப்பாட்டை முன்னெடுத்தவர் யார்? அவருக்கு கோடி நமஸ்காரம்.] எஸ். ஜே என்ற புனை பெயரில் இவர் நண்பன் ஜானகிராமன் சுதேச மித்திரனுக்கு ஒரு கதை எழுதி அனுப்புகிறார். பிரசுரமாகிறது. சன்மானம் ஏழரை ரூபாய். ரசீது போல் அச்சடித்த சிறு காகிதத்தில் தொகையும் பெயரும் குறிப்பிட்டிருக்கும். அந்தக் காகிதத்தை உல்ளூர் சுதேச மித்திரன் விற்பனையாளரிடம் கொண்டு காட்டினால் ஏழரை ரூபாய் பணம் தருவார்களாம். எழுத்தாளராகி விடுவார் என்று எதிர்பார்த்த ஜானகிராமன் கணித ஆசிரியராகி கல்வித்துறை அதிகாரியாக, திருப்பி அனுப்பப் பட்ட கதைகளை எழுதிய ஆசிரியர் எழுத்தாளராகி விட்டார். “ இளம் தென்றல்” என்றொரு கையெழுத்து பத்திரிகை தயாரித்து அதற்கு ஒரு ஆண்டு மலரும் தயாரித்து அதில் கு.ப.ராஜகோபாலன், ந. பிச்சமூர்த்தி இருவரது வாழ்த்து செய்தியும் எம். வி வெங்கட்ராம் அவர்களின் ஒரு சிறுகதையும் வரச் செய்திருக்கிறார்கள். மூவருமே அந்நாளில் கும்பகோணத்தில் பிரபலமான எழுத்தாளர்கள். உலகத்தை சுவாரஸ்யமாக்குபவை உண்மைகளல்ல வதந்திகள் தான் என்கிறார். உண்மை வெறும் நிலம் வதந்தி அதில் முளைக்கும் ரோஜா. நிலம் நிலைத்து நிற்கும். ரோஜா ரெண்டு நாளில் வதங்கி விடும். இருந்தாலும் வெற்று நிலம் வெற்று நிலம் தான். ரோஜா ரோஜா தான் “ ஏன்கிறார் ஆசிரியர். { எனக்கு இதில் உடன்பாடில்லை. வதந்திகள் சில நேரம் உயிரையும் எடுத்து விடலாம்} சுதந்திர போராட்ட காலத்தில் நடந்த இன்னுமொரு முக்கிய நிகழ்ச்சியையும் குறிப்பிடுகிறார். காந்தியும் ராஜாஜியும் ரயிலில் தமிழ் நாட்டுக்கு வருகிறார்கள். இவர்களை பார்க்க ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம். டெல்லிக்கு போன காந்தி “ தமிழ் நாட்டில் வழி நெடுகிலும் பெரும் மக்கள் கூட்டம் ராஜாஜியைப் பார்க்கத் தான் வந்தார்கள். அவருக்கு எதிராக காங்கிரஸ் கமிட்டியில் ஒரு குழு வேலை செய்கிறதே” என்று “ ஹரிஜன் “ என்ற பத்திரிகையில் எழுதி விட்டார். அதன் பின் ராஜாஜி ஆதரவு கோஷ்டி எதிர்ப்பு கோஷ்டி என காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்தது என ஆசிரியர் எழுதி இருக்கிறார். கடவுள் அவருக்கு பல விஷயங்களை கொடுக்கவில்லை என்றாலும் நல்ல சிநேகிதர்களின் நட்பை கொடுத்திருப்பதாக சொல்லி இருக்கிறார். அவரும் எதுவும் எதிர்பாராத அவரிடமிருந்தும் எதுவும் எதிர்பாராத நல்ல நட்பு அது என்கிறார். ஜா.ரா.சுந்தரேசன் வேலையிலிருந்து விலகுவதென்று முடிவெடுத்து குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி யிடம் சொன்னதும் அவர் ஏன் என்று கேட்க “ முப்பது வருஷம் உங்களுக்காக வாழ்ந்து விட்டேன். பத்து வருஷம் எனக்காக வாழலாம் என்று பார்க்கிறேன் என்று சொன்னாராம்.{ நாம் எல்லோருமே எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம் இது] விகடனில் நடந்த ஒரு குறுக்கெழுத்துப் போட்டியைப் பற்றி சொல்கிறார். அதன் விடை சீலிட்ட கவரில் இந்தியன் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு இருக்கிறது. என்கிறார்.. பாமர மக்களுக்கு ஆசை காட்டுவது தப்பு என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி உட்படச் சிலர் எதிர்த்ததால் விகடன் நிறுத்திக் கொண்டதாம். [ இங்கு ஒரு கவரை எப்படி வங்கியில் டெபாசிட் செய்ய முடியும் என்ற என் சந்தேகத்துக்கு யாராவ்து விடை சொல்லுங்கள். மற்றவர்களும் தெரிந்து கொள்வார்கள்] ஆர். நாராயணன் என்பவரை பற்றி எழுதுகிறார். இவர் லயோலா கல்லூரியில் மாணவர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார். ஒரு முறை மாணவர் சங்கக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்த போது “ பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைக்கு எதிர்ப்பு காட்டும் வகையில் இந்த சங்கத்தைக் கலைக்கிறேன்” என்று கூறி எழுந்து போனாராம். அவரைப் பின்னாளில் அழைத்து வந்து எஸ்.ஏ.பி குமுதத்தில் தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டாராம். ஒரு முறை டி.வி.எஸ் பஸ்ஸில் திருநெல்வேலி லாட்ஜ் க்கு திரும்பிய பின் பார்க்கும் போது ஆசிரியரின் காமிராவின் வியூ பைன்டர் என்னும் விரல் நீளக் கருவியைக் காணவில்லை. மறு நாள் டி.வி.எஸ் பஸ் நிலையத்துக்கு சென்று மானேஜரைப் பார்த்துக் கேட்கிறார்கள். எத்தனை மணி பஸ் என்று விசாரித்து ஊழியரை அழைத்துக் கேட்கும் போது ஒரு கைக்குட்டை, ஒரு பென்சில், ஒரு கண்ணாடிப் புட்டி, மட்டுமே இருந்ததாக சொல்கிறார். பயணிகள் விட்டுச் செல்லும் பொருட்களை எடுத்து பத்திரப்படுத்தி வைக்கும் பழக்கம் அன்று இருந்திருக்கிறது. பின்னாளில் டி.வி.எஸ் சை அரசு எடுத்துக் கொண்டதாம், ஆசிரியர் “சக்தி” காரியாலயத்தில் பணி புரிந்த போது பக்கத்தில் ஒரு சிறிய தெருவில் திரு வி. க வின் “சாது அச்சுக்கூடம்” இருந்திருக்கிறது. அதனுள் போய் பார்த்து வந்த போது ஒரு தவ சிரேஷ்டரின் பர்ணசாலைக்குள் நுழைந்து விட்டு வந்தது மாதிரி இருந்தது என்கிறார். எந்தப் பத்திரிகையில் எந்தப் புதிய அம்சத்ததைப் பார்த்தாலும் அதன் மூலத்துக்கு மூலத்துக்கு மூலத்தை ஆராய்ந்தால் அது கல்கி செய்ததாகத் தான் இருக்கும் என்கிறார்.கல்கி அவர்களின் அமர ஊர்வலம் போகும் போதத கொஞ்ச தூரத்துக்கு ஒருவராக பல அபிமானிகள் மாற்றி மாற்றி தோள் கொடுத்து பெருமை பெற்றார்களாம். அந்த சில நிமிடப் பெருமிதம் இன்றைக்கும் என் மனசிலும் தோளிலும் தங்கி இருக்கிறது. எழுதுவதில் சோர்வோ அலுப்போ ஏற்படும் போது தோளைத் தொட்டுக் கொள்கிறேன் தாயத்துக் கட்டிக் கொண்ட மாதிரி ஒரு தெம்பு உற்பத்தியாகிறது என் கிறார் ஆசிரியர். எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் ஏன் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக் கொள்ள விரும்புப்பவர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகமிது.

05 December, 2022

மெல்ல விலகும் பனித்திரை. # புத்தக விமர்சனம்.

புத்தகத்தின் பெயர் : மெல்ல விலகும் பனித்திரை. ஆசிரியர் : லிவிங் ஸ்மைல் வித்யா பதிப்பகம் : பாரதி புத்தகாலயம். விலை : ரூ 50/- பாலியல் சிறுபான்மையினர் பற்றிய பதிவுகள் வரலாற்றில் மிகக் குறைவு. அதனாலேயே அவர்கள் பற்றிய புரிதலும் குறைவு. தமிழ் சங்க இலக்கியம் பாலியல் சிறுபான்மையினருக்கு சாதகமாக இல்லை. ஆரம்பத்தில் அலி, ஒம்போது உஸ்ஸு என கிண்டலாக அழைக்கப்பட்டு வந்தவர்களுக்கு திரு நங்கை என கௌரவமான பெயர் கொடுத்தவர் கலைஞர். இவர்கள் உடலால் ஒரு பாலினத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் மனதால் வேறு பாலினத்தை உணர்ந்து அதன் படியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புபவர்கள். நன்னூல் இவர்களை பெண் பேடு ஆண் பேடு எனக் குறிக்கிறது. ஆரம்ப காலங்களில் திரு நங்கைகள் பற்றி எழுதப்பட்ட கதைகளில் முக்கியமானவை கி. ரா வின் “ கோமதி” சு. சமுத்திரத்தின் “ வாடாமல்லி” போன்றவை. இந்த தொகுப்பு திரு நங்கைகள் குறித்த புரிதலை அடுத்த தளத்திற்கு கொண்டு சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. இதில் “ இப்படியும்” என்ற கதை எழுதிய சுதா என்பவர் மட்டும் ஒரு திரு நங்கை. கதை இப்படி செல்கிறது. கடந்த இரண்டு மாதமாக பாபு சரியாகவே வேலை செய்வதில்லை என்று திட்டினார் சைக்கிள் கடை ஓனர் கஜேந்திரன். அதற்கு காரணம் மளிகை கடை ஓனரும் பாபுவின் கனவுக் கண்ணனுமான கதிர். திடீரென்று ஒரு நாள் கதிர் பாபுவிடம் பேச படபடத்துப் போனான் பாபு. தனியாகப் பேசணும்னு பெசன்ட் நகர் பீச் வரச் சொல்கிறான் கதிர். “ பாபு நீ கல்யாணம் பண்ணிப்பியா?” “யாரை?” “ ஒரு பெண்ணை” “நானே ஒரு பெண்ணா வாழறேன். எனக்கு ஒரு பெண்ணை கல்யாணம் பண்ணினா பாவம் சார்” கொஞ்ச நாளில் கதிர் வந்து தன் கல்யாண பத்திர்கை கொடுக்கிறான். மனம் முழுக்க வலியோடு ஒரு பரிசுப் பொருளும் வாங்கிக் கொண்டு திருமணத்துக்கு செல்கிறான் பாபு. அங்கே நாம் எதிர்பாராத திருப்பத்தோடு முடிகிறது கதை. அடுத்து கி. ரா வின் “ கோமதி” மிகவும் விரிவான கதை. ஒரு திரு நங்கையின் மன அவஸ்தையை மிகத் தெளிவாக சொல்லி இருப்பார். இரா. நடராசன் எழுதிய “ மதி எனும் ஒரு மனிதனின் மரணம் குறித்த கதை.. பிறந்த அன்று அன்றலர்ந்த ரோஜா போல இருந்த மதி பின் இரண்டும் கெட்டானாய் வளர்ந்த பின் வீதி ஆட்கள் அத்துணை பேரையும் கேலி செய்யவும் வேலை வாங்கவும் அனுமதித்த அப்பா. பல தலைப்புகளில் ஆசிரியர் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் அலசி இருக்கிறார். கவின்மலர் எழுதிய நீளும் கனவு” இதில் நான் மிகவும் ரசித்த வரி “ பெண்கள் அழலாம். பெண்கள் அழுது தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பெண்ணே இல்லை.” இன்னுமொரு வரி “ செந்தில் இது நாள் வரை வெளியே தெரியாமல் பொத்திக் காப்பாற்றிய பெண்மை உள்ளுக்குள் உறங்கிப் போக உலகம் அவனைப் பார்த்த ஆண்மையும் மறைந்து போக ஜேம்ஸின் மனிதம் விழித்துக் கொண்டு செந்திலை அரவணைக்க பால் பேதமர்ற இரு உடல்கள் தழுவிக் கொண்டன.” இது போல் இன்னும் நாலு கதைகளும் உள்ளன. உணர்வுகள் பிறழ்ந்து போவது யார் செய்த தவறுமில்லை. புரிந்து கொள்வோம். இப்போதைய முன்னேற்றம் பெற்றவர்களில் ஒரு சிலர் விரட்டி அடிக்காமல் அரவணைப்பதால் படித்து மிக உயர்ந்த பதவிகளுக்கு கூட வருகிறார்கள் திரு நங்கைகள். சமுதாயம் புரிந்து கொண்டால் அவர்கள் விபச்சாரம் புரிவதும் தீய நடவடிக்கைகளில் இறங்குவதும் வெகுவாய் குறைந்து போகும் குறையணும். குறைப்போம். பிக் பாஸ் சீஸன் 6 இல் பங்கேற்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஷிவின் மிகுந்த நம்பிக்கை தரும் ஒரு திரு நங்கையாக விளங்கி வருகிறார்.

01 December, 2022

புத்தகத்தின் பெயர் : அரிய நாச்சி ஆசிரியர் : வேல ராமமூர்த்தி பதிப்பகம் : டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் விலை : ரூபாய் 150/- அரிய நாச்சி ஒரு ஆப்ப நாட்டு பெண் தெய்வம். அவள் வழி வந்தவர்கள் என்று நாம் சாதாரணமாக சொல்வதை அவர் “ இவளின் தொப்புள் கொடி பெருக்கம்” நானூத்தி சொச்சம் திசைகளில் வேர் பாய்ச்சி படர்ந்து கிடக்கிறது.” என்கிறார். இந்த அழகான சொல்லாடலை நான் மிகவும் ரசித்தேன். ஆசிரியர் சொல்கிறார் “ நான் ரத்தம் பற்றியே எழுதுகிறேன் என்பார்கள். என் கதைகளில் எழுத்துக்களாக வழிவது அரிய நாச்சியின் ரத்தமே.” என்று. அங்கே அரிய நாச்சி என்பது ஒரு கதாபாத்திரத்தின் பெயராக எனக்குத் தோன்றவில்லை. மற்றவர்கள் பஜார்களில் கையில் லெதர் பேக்குகளில் பணமோ பத்திரமோ இருக்கும் போது தன் இன மக்கள் இமை கொட்டாமல் இருக்கும் சூரிக் கத்திகளை சுமந்து செல்கிறார்களே என்ற அவர் ஆதங்கம் எழுத்துக்களில் தெரிக்கிறது. மனுசத்தனத்துக்கும் மிருகத்தனத்துக்கும் இடைப்பட்ட மூர்க்கத்தனத்தை பதிவு செய்கிறார். தன் இனம் சார்ந்த வெள்ளந்தி மனிதர்களையும் வெள்ளையத்தேவன் சர்க்கரைத் தேவனாக அடையாளம் காட்டுகிறார். கதை ஆரம்பமே ஜெயில் வாசலின் விவரணையுடன் தான் தொடங்குகிறது. கதையின் ஊடாகவே தன் இன மனிதர்களின் மனப் போக்கினை “ ஜெயில் கட்டினது யாருக்கு நமக்குத்தானே” “ நமக்கு எதிரா எவனும் சாட்சி சொல்ல மாட்டான் ங்கிற குருட்டுத் தைரியத்தில்” என்ற வரிகளின் மூலம் தொட்டுச் செல்கிறார். இந்த சூழலில் தான் கதை நாயகி அரிய நாச்சி நிறை சூலியாக அங்கே எண்ட்ரி கொடுக்கிறார். ஜெயிலில் இருக்கும் தன் தந்தை வெள்ளையத் தேவனைப் பார்ப்பதற்காக வந்த போது கடைசிக் கைதியாய் வந்து நிற்கிறார்.. வெள்ளையத் தேவனின் அந்தப் பொறுமையும் நிதானமும் சூழ்நிலை எந்த ஒரு மனிதனையும் கொலைகாரன் ஆக்கக் கூடியது என்பதை நிரூபித்தது. வெள்ளையத் தேவனின் தங்கை வள்ளி அத்தை. அவள் வாழ்வரசியும் இல்லை. விதவையும் இல்லை. நிச்சயம் செய்த கையோடு மாப்பிள்ளை இறந்து போக இருபத்து ஐந்து வருசமா கன்னி கழியாமல் காலம் கழித்தவள். அரிய நாச்சியின் தம்பி பாண்டி ‘ தம்பி மனைவி குமராயி. பாண்டியின் தங்கை மாயழகி. இவளை இளவட்டங்கள் “ பார்த்த பார்வையிலேயே போட்டுத் தள்ளும் கரு நாகம்” என்பார்கள். மாயழகியை தன் கணவனின் தம்பி சோலைக்கு மணமுடித்து தனக்கு உதவியாக வைத்துக் கொள்ளணும் என்பது அரிய நாச்சிக்கு ஆசை. மொத்த பெண் வழிச் சொத்தும் ஒரே குடும்பத்துக்குப் போய் விடக் கூடாது தன் தம்பி கருப்பையாவுக்கு மணமுடிக்க வேண்டும் என்பது குமராயி ஆசை. குமராயியின் தாய் செல்லம்மாவை “ மூச்சுக்கு முன்னூறு தரம் கோபப்படுறதும் நீ தான். குழையறதும் நீ தான். ஒரு குடியான குடும்பத்து பொம்பளைக்கு இந்த குணம் ஆகாதுடி. கொலைப் பழியில கொண்டு போய் விட்டிரும்” என்று சொல்ல வைத்து கதையின் போக்கை கோடிட்டு காட்டி விடுகிறார் ஆசிரியர். நன்னடத்தைக்காக வெள்ளையத் தேவன் உரிய காலத்துக்கு முன்னதாகவே விடுதலை பெற்று வரும் போது வீடு எப்படி இருந்தது. அது வரை என்னன்ன நடந்தது என்பது கண்டிப்பாக விரு விருப்பாக சொல்லிச் செல்லும் கதை. இதை படிக்கும் அத்தனை பேரும் அன்று ஒரு நாளாவது நம் கோபம் குறைக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். ஆரம்பத்தில் நின்று நிதானமாக ஒவ்வொரு கதாபாத்திரமாக சொல்லி வந்தவர் விறு விறுப்பு கூடக் கூட அரிய நாச்சியின் வீட்டில் இருக்கும் போதே சிறையில் கைதிகள் வெள்ளையத் தேவனிடம் காட்டும் அன்பைச் சொல்கிறார். திடீரென்று குமராயி பாண்டியை ஆட்டுவிப்பதாகச் சொல்கிறார். ஆசிரியரின் எழுத்து நடை வேகத்துக்கு நாம் பின் தொடர வேண்டும் இல்லையின்றால் வழி தப்பி விடுவோம். வாசிக்கும் அனைவருக்கு, இதே வேகம் சாத்தியமா என்று தோன்றியது. தவற விடக் கூடாத புத்தகம்.

25 October, 2022

 படத்தின் பெயர் : ஒரு தெக்கன் தள்ளு கேஸ்

மொழி : மலையாளம்.

இயக்குநர் : ஸ்ரீஜித்

முக்கிய கதாபாத்திரத்தில் : பிஜு மேனன், பத்மப்ரியா, நிமிஷா, ரோஷன் மாத்யூ.

படம் நெட் ப்ளிக்ஸில்.

ஏ.ஆர் இந்துகோபாலன் அவர்கள் எழுதிய "அம்மணி பிள்ளை வீட்டு கேஸ்"  என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம்.

ஒரு அழகான கடலோர கிராமம். அங்கு மீன் பிடித்தல் முக்கிய தொழில். ஓங்கி உயர்ந்த ஒரு கலங்கரை விளக்கம்.  அதில் பணி புரியும் அம்மிணி அண்ணன் தான் கதாநாயகன். அம்மிணியாக பிஜு.  அழகன். கதாபாத்திரத்துக்கு கச்சிதமானவன். நெடிதுயர்ந்த கலங்கரை விளக்கத்தில் பணி புரிவதால் அந்த கிராமத்தில் அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்க முடியாது. 

அவர் மனைவி பத்ம ப்ரியா. கடலின் ஆழத்துக்கு நிகர் நிற்கும்  கண்கள். அதில் காதலும் பாசமும் போட்டி போட்டு வழிகின்றன் அம்மிணியின் உறவுப் பெண் வசந்தி(நிமிஷா) அவளைக் காதலிப்பவன் பொடியன் (ரோஷன்) இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து விட்ட அம்மிணி  அடிக்க விரட்டும் போது பொடியனும் அவன் நண்பர்களும் அவரை நன்கு அடித்து விடுகிறார்கள்.

 ஒவ்வொருவராய் ஊருக்கு முன்  அடித்து பழி தீர்ப்பது தான் கதை. டொப் டொப் னு பொட்டு வெடி சுட்டு பழி வாங்குவதை விட இது மிகவும் நன்றாக இருக்கிறது.  அதை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார்கள். 

இரண்டு மணி நேரம் ஒரு கிராமத்நில் இருந்து வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது. 

பார்க்கலாம்.

20 October, 2022

 டிரெயின்ல தள்ளி விட்டானே அந்த சத்யா பொண்ணோட அம்மா பேசுற ஒரு வீடியோ பார்த்தேன். பரிதாபம். அந்த அம்மாஒரு நோயாளி. ஒரே சமயத்தில் கணவனையும் இழந்து மகளையும் இழந்து பரிதவிக்கிறார்கள். இந்த மீடியா காரங்க ஆளு மாத்தி ஆளு போய் மைக்க நீட்டறாங்க. அந்த அம்மா ஒன்றிரண்டு கேள்விகள் மண்டையில நச்னு அடிச்ச மாதிரி கேட்டாங்க.

1 என் மகள் இறந்து போயிட்டானு ஆளு மாத்தி ஆளு என்னை வந்து கேட்கிறீங்களே அந்த பையன் வீட்டில் இருப்பவர்களிடம் இப்படிப் பண்ணிட்டானே நியாயமான்னு யாராவது போய் கேட்டீங்களா? அந்த குடும்பத்து ஆட்களை வெளி உலகத்துக்கு ஏன் காட்டலைங்கிற அந்த தாயின் கேள்வி நியாயமாத் தான் தெரியுது.

2. என் மகளைப் பற்றி தப்புத் தப்பா போட்டு பார்வையாளர்களை அதிகரிச்சு சம்பாதிக்கிறீங்களே அப்படியாவது கிடைக்கிற அந்த பணம் உங்களுக்கு அவசியமா? 

3. என் பெண் அந்த பையன் தொந்தரவு பண்றதா சொன்னதும் போலீஸ்ல புகார் கொடுத்தேன். அவன் குடும்பத்து ஆட்கள் புகாரை வாபஸ் வாங்கி விடுங்கள் அவனை வெளி நாடு அனுப்பிடுறோம்னு கெஞ்சி கேட்டுக் கொண்டதால்  வாபஸ் வாங்கினேன். வாங்காதிருந்தால் அவன் இந்நேரம் உள்ளே இருந்திருப்பான் என் மகள் உயிரோடு இருந்திருப்பாளே?! அப்போ இரக்கப்பட்டதல்லவா தப்பாக போய் விட்டது. 

இது ஒரு முறையல்ல. சித்ரா இறந்த போதும் இதே தான் நடந்தது. இன்னும் ஒரு பெண் இறந்தாலும் இதே தான் நடக்கும். 

இறந்தவர்களின் குடும்பத்து ஆட்களை நிம்மதியாக துக்கம் அனுஷ்டிக்க விட வேண்டாமா? இறப்பே பெரும் சோகம். அதை மேலும் குத்திக் கிளற வேண்டாமே!

19 October, 2022

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் :

புத்தகத்தின் பெயர் : பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள். ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம். விலை ரூ 135/- சத்யஜித் ரே வங்காளத்தின் மிகப் பிரபலமான திரை இயக்குனர். இவர் எடுத்த படங்களில் ஆகச் சிறந்த படம் “ பதேர் பாஞ்சாலி” இதைப் பற்றிய தன் கருத்துகளை எஸ் ரா அவர்கள் பகிர்ந்து கொண்ட புத்தகம் தான் இது. இந்த புத்தகம் வெளி வந்தது 2006 இல். அப்போது சொல்லி இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக தினம் ஒரு சினிமா பார்த்து விடுகிறேன். ( இன்றும் தொடர்கிறதா சார் இந்த பழக்கம்?) பதினைந்து வருடங்களாக உலக திரைப்பட விழாக்களுக்குத் தவறாமல் சென்று வந்திருக்கிறார். சினிமாவைத் தெரிந்து கொள்ள எடுத்த முயற்சி தான் புத்தகமாக வெளி வந்து இருக்கிறது. ஒரு திரைப்படத்தை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லித் தருகிறது. ஒவ்வொரு திரைப்படம் பற்றியும் ஒவ்வொரு புத்தகம் எழுத வேண்டும் என்பது இவர் ஆசை. அந்த வரிசையில் இது முதல் புத்தகம் என்கிறார்.இந்த புத்தகம் வந்து இப்போது இன்னும் பதினாறு ஆண்டுகள் ஆகி விட்டன. திரைப்படங்கள் பற்றி அவர் எழுதிய வேறு புத்தகங்கள் இருக்கின்றனவா படித்தவர்கள் சொல்லுங்கள். வாசிக்க விருப்பம் உண்டு. பதேர் பாஞ்சாலி என்பதற்கு "சாலையின் பாடல்" என்று பொருள். பதேர் பாஞ்சாலி வந்த புதிதில் சத்யஜித் ரே இந்தியாவின் வறுமையை விற்று பணம் சம்பாதித்து விட்டார் என்ற அவச் சொல் எழுந்தது. ஆனால் அதற்கு ரே பதிலளிக்க மறுத்து விட்டார். அது வரை மனதில் இருந்த ஆங்கில படங்களின் சாகசங்கள் குதிரை மேல் இரட்டை துப்பாக்கியோடு வரும் நாயகர்களை ரசித்தவை. அனைத்தையும் ஒரேயொரு ராட்சத அலை வந்து அடித்து இழுத்துச் சென்றது போல் இருந்தது பதேர் பாஞ்சாலி பார்த்து முடித்ததும்.என்கிறார் ஆசிரியர். பதேர் பாஞ்சாலி கதையின் போக்கினை இரண்டு கதாபாத்திரங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று துர்கா இன்னொன்று பாட்டி இந்திரா. துர்கா பால்யம் மாறாத சிறுமி. பாட்டி சாவின் அருகாமையில். இந்த இரண்டு முனைகளுக்கும் இடையில் தான் கதையின் மைய நிகழ்வுகள். பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் விபூதி பூஷண். கதை அப்புவை சுற்றியே நகர்கிறது. ஆனால் திரைப்படம் அப்புவின் அக்கா துர்காவின் விருப்பப்படி நடப்பதாக வருகிறது. //கலை வடிவங்கள் ஒவ்வொன்றும் அதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கின்றன. ஒரு வடிவத்தை இன்னொரு கலை வடிவத்தோடு ஒப்பிட்டுப் பேசவே இயலாது// இதை வாசித்ததும் எனக்கு பொன்னியின் செல்வன் பாகம் 1 பார்த்திட்டு பலரும் படம் கதையைப் போலவே இல்லை என்று எழுதியது ஞாபகம் வந்தது. ஒரு வேளை எஸ். ரா இப்போ இணைய தளத்தில் தீவிரமாக செயல் பட்டுக் கொண்டிருந்தால் பதில் கொடுத்திருப்பாரோ! பதேர் பாஞ்சாலி படத்தின் தயாரிப்பாளராக மேற்கு வங்க அரசின் பொதுப்பணித்துறை இருந்திருக்கிறது. ஆனால் அரசு பிரிண்ட்டை முறையாக பாதுகாக்காமல் விட்டு விட்டது. இதை அறிந்த மெர்சண்ட் ஐவரி, ரேயின் படங்களின் நெகடிவ்களை தான் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்தார். ரேயின் ஆறு படங்களின் உரிமையை பெற்றார். துர்திர்ஷ்டவசமாக அந்த ஆறு படங்களின் நெகடிவ்களும் தீக்கிரையாகின. காட்சிகளின் கரையிலிருந்த படியே என்ற தலைப்பில் மிகச் சிறப்பான ஒரு பகுதி. வெகு ஜன சினிமாவில் காட்சிப் படிமங்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்கிறார். ஆனால் கலைப் படங்கள் கதையின் மையத்தை ஒரு குறியீடாக மாற்றி கதையின் ஊடாகவே வெளிப்படுத்தும். அதற்கு உதாரணமாக அடூர் கோபால கிருஷ்ணனின் “எலிப்பத்தாய”த்தை சொல்கிறார். சத்யஜித் ரே தனக்கு உள்ள ஒரு பழக்கத்தை ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். ஏதாவது ஒரு நாவல் திரைப்படமாகப் போவதாக செய்தி வந்தாலே அதற்கு இவர் திரைக்கதை எழுதி விடுவாராம். பிறகு படம் வெளியான பிறகு இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பார்ப்பாராம். இந்த பயிற்சி தான் இவரை திரைக்கதை ஆசிரியராக்கியது என்கிறார்.. திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுத முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த டிப்ஸ் என நான் நினைக்கிறேன். ஒரு முக்கிய விஷயம். படத்தின் இசையமைப்பாளர் பிரபல சிதார் மேதை ரவி சங்கர்.இந்த புத்தகம் வாசித்து முடித்ததும் பதேர் பாஞ்சாலி என்னும் வங்கப் படம் பார்க்கும் ஆர்வம் வந்தது. தேடினேன். யூட்யூபில் இருக்கிறது சப் டைட்டிலுடன்.. உங்கள் குழந்தைகள் பேரக் குழந்தைகளுக்கும் காட்டுங்கள். அப்பொழுது நாம் எவ்வளவு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரியும். வாழ்வின் அருமை தெரியும்.

18 October, 2022

 சில பெண்களுக்கு ஒரு பழக்கமுண்டு நான் கவனித்திருக்கிறேன். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை வந்தால் எப்போதுமே குற்றத்தை மனைவி பக்கமே சுமத்துவது.

 (உ.ம்)  ஆக ஒரு பெண் ரொம்ப அமைதியா யாரிடமும் அதிகம் பேசாதவளாக இருந்தால் அவள் கணவன் செய்யும் தவறுகளுக்கு காரணம். "பொண்ணுன்னா கலகலப்பா இருக்கணும். இப்படி உம்மணாமூஞ்சி மாதிரி இருந்தா இப்படி தப்பெல்லாம் நடக்கத் தான் செய்யும் " னு சொல்வாங்க. 

இதுவே பெண் கலகலப்பா பேசுறவளா இருந்தா அதை ஒரு குற்றமா சொல்வாங்க. மொத்தத்தில ஆண் செய்யும் தவறுகளுக்கு பெண் மட்டுமே காரணம் எனக் கொண்டு வருவாங்க.இதைச் சொல்வது அனேகமா பெண்கள் தான்.

 ஆண்களும் மனிதர்கள் தானே. தவறு செய்வது இயல்பு தானே!  இதில் ஒரு சைக்காலஜி கவனிக்கணும். அவங்க சொல்ல வர்ரது என்னன்னா "அந்த இடத்தில் நான் இருந்திருந்தா இந்த தப்பு நடந்திருக்காதுன்னு தன்னை உயர்வு படுத்தறதுக்காக பெண்ணை குற்றப்படுத்துறாங்க. 

அதை சம்பந்தப்பட்டவங்களிடமே சொல்றாங்க. இது எது வரை நடக்கும்னா சொல்பவர் வீட்டில் ஒரு பிரச்னை வந்து அது கை மீறிப் போய் தன்னால் சமாளிக்க முடியாமல் போகும் வரை நடக்கும். முதல்ல அடுத்தவர் வீட்டுப் பிரச்னையில் கருத்து சொல்வதை விடணும். அப்படியே சொன்னாலும் அது நேர்மையான கருத்தாய் இருக்கணும். என்ன நாஞ் சொல்றது?

13 October, 2022

 Netflix இல் "The Holiday " னு ஒரு அற்புதமான படம் பார்த்தேன். டைரக்‌ஷன் : Nancy Meyars. 

ஒரு பெண் இயக்குநர் என்பதால் பெண்ணின் உணர்வுகளை மிக நன்றாக காட்டி இருக்கிறார். 

வாழ்வில் ஏமாற்றத்தை சந்தித்த இரண்டு பெண்கள். ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லிக் கொண்டே இன்னொரு பெண்ணை மணக்கத் தயாராகும் ஒருவன். ஒரு பார்ட்டியில் தன் காதலனின் திருமண செய்தி கேட்டு அதிர்ந்து போகிறாள். அதற்கு கொஞ்ச நேரம் முன்பு கூட அவளிடம் தன் காதலை சொல்லி போனவன். அவள் பெயர் ஐரிஸ். நமக்கு ரொம்ப அறிமுகமான டைட்டானிக் பட ஹீரோயின் கேத் வின்ஸ்லட் தான் ஐரிஸாக நடிக்கிறார்.

மற்றொரு பெண் தன் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அவனுடன் சண்டை இட்டு வீட்டை விட்டு விரட்டுகிறாள். அவள் பெயர் அமென்டா. ஐரிஸ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். அமென்டா பெரும் பணக்காரி. 

துயரத்தில் இருக்கும் இருவரும் கிறிஸ்மஸ் விடுமுறையை வேறு இடத்தில் கழிக்க முடிவு செய்து இன்டர்நெட் மூலம் சந்தித்து அவர்கள் வீடுகளை ஸ்வாப் செய்து கொள்கிறார்கள். அதாவது இரண்டு வாரம் ஒருவர் வீட்டில் அடுத்தவர் இருப்பது. 

அமென்டாவை ஐரிஸின் சகோதரன் சந்திக்கிறான். அன்பு செய்கிறான். ஐரிஸ் வீட்டின் பக்கத்தில் ஒரு முதியவர் பல ஆண்டுகளுக்கு முன் பிரபல இயக்குநர். முதுமையின் கோளாறுகளால் தனிமையில் வாடுபவர். அவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. 

இறுதியில் படம் சுபமாக முடிகிறது. ஆங்கில படங்களில் பெண்கள் அழுது அவ்வளவாக பார்த்ததில்லை. இந்த படத்தில் பெண்ணோடு சேர்ந்து ஆணும் கண் வேர்க்கிறான்.

 பின்னணியில் பனி படர்ந்த காட்சிகள் கண்ணுக்கு வெகு குளுமை. 

ஐரிஸ் அமென்டாவுடனும் தன் அண்ணனுடனும் பேசும் போது ஒருவரை ஒருவர் ஹோல்ட் செய்து அடுத்தவருடன் பேசுகிறார். அதான் கான் கால் போடலாமே என நினைத்து வந்தால் ஒரு கடையில் படங்களின் CD பார்க்கிறார்கள். அதில் ஒன்று JAWS படம். சரி தான் எப்ப வந்த படம்னு போய் பார்த்தால் 2006 இல் வெளியான படம்.

பெண்கள் உலகில் எல்லா பகுதியிலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் போலிருக்கிறது. அதீத காதல் அது முறியும் போது அதீத வெறுப்பு. இரண்டுக்கும் நடுவில் உணர்வை நிறுத்த தெரிந்தால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.

26 September, 2022

 "அதுவும் நானும்" 

இந்த தலைப்பைப் பார்த்ததும் எனக்கு ஞாபகம் வந்தது எங்க அப்பாவோட கைக்கடிகாரம்.  வட்டமா எண்கள் பெரிது பெரிதாய் பட்டையாய் தங்க  ஸ்டிராப் இணைத்த  கைக்கடிகாரம். அப்பாவுக்கு நகைகள் மேல் கொஞ்சம் ஆசை அதிகம் தான். அப்போ தெரியல. இப்போ நினைச்சு பார்த்தா அப்படித் தான் தோணுது. கழுத்தில் பெரிய தங்க சங்கிலி போட்டிருப்பார். அதன் டாலர் இப்போதுள்ள பத்து ரூபா நாணயத்தை விட கொஞ்சம் பெரிதாய். இன்னும் சரியாய் சொன்னால் ஒரு மஞ்சள் சரிகைத் தாளை இரண்டாய் பிளந்தால் உள்ளே சாக்லெட் இருக்குமே அது போல் இருக்கும். அது சரியாய் வந்து அவர் தொப்புளை மறைக்கும். சின்ன பெண் குழந்தைகளுக்கு அருணா கயிற்றில் ஒரு வெள்ளி இலை போட்டிருப்பாங்களே அது போல.

 விரல்கள் இரண்டில் பெரிதாய் மோதிரம் போட்டிருப்பார். ஒரு மோதிரம் பெரிய சங்கு வடிவில் மேலே ப்ளூ எனாமலில் ரத்தினம் என்ற பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். இப்பொழுது என்  கையில் இல்லை. எப்பவாவது படம் போடுறேன்.  இன்னொரு மோதிரம் டைமண்ட் ஷேப்பில் டார்க் ப்ளூ கல் வைத்து சுற்றி வெள்ளை கல் பதித்திருக்கும்.

 இந்த மூணு பொருளுமே அம்மாவிடம் அப்பா ஞாபகமாய் எனக்கு வேணும்னு வாங்கி வைத்திருந்தேன். வாட்ச் மட்டும் ஸ்டிராப் இல்லாமல். எவ்வளவு ரசித்து ரசித்து நகைகளை செய்திருக்கிறாங்க. செய்யுமிடம் கூட நல்லா ஞாபகம் இருக்குது. சிவன் கோவில் அருகிலுள்ள தேருக்கு எதிரே போகும் தெருவில் ஒரு ஆசாரி இருந்தார். அங்கே போவோம். ஆமா சின்ன பிள்ளையா இருந்தாலும் என்னையும் கூட்டிட்டு போவாங்க. லேசா தான் ஞாபகம் இருக்கு. ஒரு பெரிய மண் பாத்திரத்தில் தவிடு மாதிரி ஏதோ போட்டு சூடு பண்ணி அதில் தங்கத்தை உருக்கி செம்பு சேர்ப்பாங்க. அதன் பின் நாங்க வீட்டுக்கு வந்திடுவோம். கேட்ட நகைகளை  செஞ்சு வீட்டுக்கு வந்து கொடுத்திடுவார். 

அதே பழக்கத்துக்கு நானும் பெரிய மகள் திருமணம் வரை ஆசாரி மூலம் தான் நகைகள் செய்தேன். சின்ன மகளுக்கு வரும் போது 916 வந்திட்டுது. அதில் பெரிய மகளுக்கு ரொம்ப ஆதங்கம். பின் அவள் நகைகளையும் 916 ஆக மாற்றிக் கொடுத்தேன். 

மெயின் கதைக்கு வருவோம். அந்த தங்க ஸ்டிராப் போட்ட வாட்ச் ஒரு முறை அப்பா மார்க்கெட்டில் காய் வாங்கும் போது தவறி விழுந்து எடுத்தவர்கள் வாட்ச் ரொம்ப பழசா இருந்ததால தங்கம்னு தெரியாம திருப்பிக் கொடுத்தது ஒரு கிளைக் கதை.அதற்கு செல்  கிடையாது. சின்ன திருக்கு தான். எப்போ திருகினாலும் ஓடும்.  அந்த ஸ்டிராப் இல்லாத வாட்ச்சை என் நகைகளோட வைத்திருந்தேன். ஒரு சென்டிமென்டல் அட்டாச்மென்ட். எப்படி தொலைந்தது. நகைகளை எடுக்காமல் அந்த பழைய வாட்ச்சை யார் எடுத்தார்கள். அது புரியாத புதிர். காணாமலே போயிட்டுது.

 அப்பாவுடைய ரெண்டு மோதிரங்களையும் ரெண்டு பேரன்கள் வளர்ந்ததும் கொடுக்கணும்னு வச்சிருக்கிறேன். பெரிய பணக்கார வீட்டில மட்டும் தான் பரம்பரை நகை இருக்கணுமா? நாமளும் வச்சிருப்போமே! 😀

 நேற்று ஒரு அற்புதமான அனுபவம். "வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் " குழுவில் எழுத்தாளர் வைத்தீஸ்வரன் அவர்களின்  பிறந்த நாளை முன்னிட்டு நடந்த நிகழ்வில் மாலன் அவர்கள் வைத்தீஸ்வரன் அவர்களின் கதைகளைப் பற்றி  பேசினார். வாய்ப்பு கிடைத்தது கலந்து கொண்டேன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மிகப் பயனுள்ளதாக கழிந்தது.

இவரைப் பற்றி தெரிந்து கொள்ள கூகிளில் தேடிய போது இவருடைய மிக அருமையான கவிதை ஒன்று கையிலகப்பட்டது.
இதோ!!
"கிணற்றில் விழுந்த நிலவைக் கீழிறங்கித் தூக்கிவிடு.
நனைந்த அவள் உடலை நழுவாமல் தூக்கிவிடு.
மணக்கும் அவள் உடலை மணல் மீது தோயவிடு.
நடுக்கும் ஒளியுடலை நாணல்கொண்டு போர்த்திவிடு.”

எத்தனையோ புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். பலராலும் புகழப்பட்ட ஆசிரியர்களின் புத்தகங்களே  முன்னுரிமை பெறுகின்றன. நன்றாக எழுதும் ஆனால் மிகப் பெரிய கவனிப்பு பெறாத எத்தனை எழுத்துகள் நம் கண் தப்பி இருக்கின்றனவோ எனத் தோன்றியது நிஜம். எனது லிஸ்ட்டில் இவருடைய புத்தகங்களை இணைத்து விட்டேன். அவமானமாக இருக்கிறது கிட்டத்தட்ட அவர் வயது தொண்ணூறை நெருங்கும் வரை  ஒருவரை இவ்வளவு காலம் அறிந்து கொள்ளாமல் இருந்து விட்டோமே என. 

இனி மாலன் அவர்களின் உரையிலிருந்து:
தமிழர்கள் வாங்கி வந்த வரம் எத்தனை திறமைகள் இருந்தாலும் ஒரு சின்ன சிமிழுக்குள் அடைப்பது. ஒருவர் பல திறமைகள் கொண்டவராய் இருந்தாலும் அவற்றுள் ஒன்றில் அவரை முன்னிலைப்படுத்தி விடுவதால் மற்றவை தெரியாமல் போய் விடுகின்றன என்றார். வைத்தீஸ்வரன்  அவர்கள் தொல்லியல் படிப்பை பரோடாவில் படித்தார். கவிதைகள்  அதிகம் எழுதி உள்ள  வைத்தீஸ்வரனின் சிறு கதைத் தொகுப்பு கால்  முளைத்த மனம் . 12 சிறு கதைகள். "ஒரு கொத்துப் புல்" 26 சிறு கதைகளின் தொகுப்பு.
கிட்டத்தட்ட 50 கதைகள் எழுதி இருக்கிறார்
ஏறத்தாழ 15 ஆவது வயதில்  எழுத தொடங்கினார்.  கவிதைகள் எழுத தொடங்கி தாமதமாகத் தான் கதைகள் எழுத தொடங்கினார்.

.எழுத்தாளர்களின் மனதில் பொதுவாக காலம் உறைந்து விடும். இதற்கு விதி விலக்கு வைத்தீஸ்வரன் என்றார். சுதந்திர போராட்ட காலத்தில் இருந்த பல எழுத்தாளர்கள் அதைப் பற்றி எழுதாமல் இருந்த  காலத்திலும் இவர் "கொடியின் துயரம்" என்ற சிறுகதை சுதந்திர போராட்டத்தைப் பற்றி எழுதி உள்ளார். சுதந்திரம் வந்த போது வைத்தீஸ்வரனுக்கு 12 வயது.

 (நேற்றைய தொடர்ச்சி. படிக்கலைன்னா அதை வாசிச்சிட்டு இதை வாசிங்க)

 "கசங்கிய காகிதம் "என்னும் ஒரு அருமையான கதையை விவரித்தார் மாலன்.  இவர் எழுதியதில் ஆகச் சிறந்த கதை "மலைகள்"  என்றார்.இது சுற்றுச்சூழலைப் பற்றிய கதை. கவிதையை விட்டு வெளியே வர முடியவில்லை என்பதை காட்டும் கதை. கதையின் பல வரிகள் நான்காக மடக்கி எழுதினால் மிகச் சிறந்த புதுக் கவிதை ஆகி இருக்கும் என்றார். அவர் எழுதிய காலத்தில் மரபுக் கவிதைகள் உயர்ந்தோங்கி நின்றன.  அதிகம் பேசப்படாத ஆனால் பேசப்பட வேண்டிய கதைகள் வைத்தீஸ்வரன் அவர்களின்  கதைகள் என்றார். 

மாலன் அவர்களிடமோ வைத்தீஸ்வரன் அவர்களிடமோ நம்  எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று சொன்ன போது வாய்ப்பை தவற விடாமல் நான் மாலன் அவர்களிடம் பேசினேன். என் எழுத்தை அங்கீகரித்த முதல் மனிதர் அல்லவா. அவர் இந்தியா டுடேயின் ஆசிரியராக இருந்த போது கிரிக்கெட் பற்றி நான் எழுதிய கடிதம் 100₹ பரிசு பெற்ற விவரத்தை சொன்னேன். அதன் பிறகு தான் நான் ஏதோ கிறுக்கிக் கொண்டிருப்பதாக நினைத்த என் கணவர் உருப்படியாக நான் ஏதோ எழுதுகிறேன் என்று ஏற்றுக் கொண்டார் என்றேன். சிரித்தார். மற்றொரு விஷயத்தை சொன்னார். பெண்களுக்கு அரசியல் விளையாட்டு போன்றவை தெரியாது என்று எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தமிழ் இந்தியா டுடே மூலம் பெண்கள் அவர்கள் உலக அறிவை வளர்த்துக் கொண்டார்கள் என்றார். உண்மை தான். 

அதன் பின் திரு. வைத்தீஸ்வரன் அவர்கள்  முழுமையாக கற்பனையாக எனக்கு எழுத வராது.வாழ்வில் நான் சந்தித்த பார்த்த விஷயங்களைக் கருவாகக் கொண்டு தான் கதை எழுதுவேன் என்றார். இந்த நிகழ்வை பிறந்த நாள் பரிசாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.சார்வாகன் அவர்கள் இவரிடம் "வந்து பார்த்திடுங்க. அடுத்த வாரம் இருக்க மாட்டேன் என்றாராம். போய் பார்த்து வந்திருக்கிறார். மறு வாரம் சொன்னது போலவே அவர் இறைவனடி சேர்ந்து விட்டார். பார்த்த போது சொல்லி இருந்தாராம் " என் மனைவி இறந்தது,  கூடவே இருந்தாலும் எனக்குத்  தெரியாது. உறங்குகிறார்கள் என்று நினைத்து இருந்திருக்கிறார்.  இரண்டு பேரும் டாக்டர். ஒரு அவையில் பேசிக் கொண்டிருத்தவர்க்கு போன் மூலம் தான் இறந்த செய்தி சொல்லப்பட்டதாம்.   இதை கதையாக எழுதினாராம் வைத்தீஸ்வரன் அவர்கள். ஆனால் முடிவை இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தபடி மாற்றி எழுதினாராம். 

நானும் இதே போல் ஒரு செய்தி கேள்விப்பட்டு இருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள ஒருவர் காலையில் மனைவி தூங்குகிறாள் என நினைத்து பேப்பர் படித்து வாக்கிங் போய் வந்து ரொம்ப நேரம் கழித்து தான் மனைவி இறந்த விஷயமே தெரிந்ததாம். 

வழக்கத்துக்கு மாறாய் எது நடந்தாலும் அதை உத்தேசமாய் எடுத்துக் கொள்ளாமல் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு வேளை  காப்பாற்ற கூட முடியலாம். 

வாழ்க இணையம். வாழ்க "வாசிப்போம் தபிழ் இலக்கியம் வளர்ப்போம்" குழு

19 September, 2022

புத்தகத்தின் பெயர் : 18 ஆவது அட்சக்கோடு ஆசிரியர் : அசோகமித்திரன் பதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் விலை : 90/- ஆசிரியர் தன் முன்னுரையில் எழுதி இருக்கிறார். “ பிரபலமில்லாதிருப்பதின் ஒரு நன்மை பிரபலம் அடையாத நிலையே கவசமாகச் செயல்படும்” ஆரம்பமே என்னை சிந்திக்க வைத்தது. ஒருவர் பிரபலமாகாத வரையிலும் அவரை பற்றிய எந்த ஒரு எதிர்மறை செய்தியும் பெரிதாக வருவதில்லை. பிரபலமடைந்ததும் எத்தனையோ வருஷத்துக்கு முந்திய செய்திகள் எல்லாம் புற்றீசல் போல் புறப்பட்டு வரும். அப்படி பார்த்தால் ஆசிரியர் சொல்வது சரி தான் போல் இருக்கிறது. இந்த புத்தகம் ஹிந்தி மொழி பெயர்ப்புக்கு போன போது பத்தாண்டுகள் புறக்கணிப்பில் இருந்து பின் ஒருவர் துணிந்து வெளிக்கொணர்ந்தாராம். ஆனால் அது நூலுருவம் பெற்ற நாளில் கொலை செய்யப்பட்டு இருந்தாராம். சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடும் அழகில் ஆரம்பிக்கிறது கதை. “ ஒரு முறை தரையில் விழுந்து பிடித்தாலும் அவுட். இரு முறை தத்தி வந்து பிடித்தால் மூன்று முறை குதித்து குதித்து வந்தால் கூட அவுட். என்று வைத்துக் கொள்வோம் என்கிறார்கள்.எந்த ஒரு சட்ட திட்டமும் இல்லாத குழந்தை விளையாட்டு. அந்த காலத்திய உடையை இப்படி வர்ணிக்கிறார். ஹிந்து முஸ்லிம் பையன்கள் நிஜார் அல்லது பைஜாமா பேண்ட் மீது சட்டையை தொங்க விட்டுக் கொள்வார்கள். சட்டைக்காரப் பையன் கள் சட்டையை இடுப்பில் நிஜார் அல்லது பேன்ட்டில் சொருகிக் கொள்வார்கள். தமிழர்களில் பெரியவர்கள் முழுக்கைச் சட்டையை உள்ளே சொருகிக் கொண்டு கச்சம் வைத்த வேஷ்டி கோட், தொப்பியில் இருப்பார்கள். வேஷ்டியில் முழுக்கை ஷர்ட் இன் பண்ணி எங்க அப்பா போட்டோ ஒண்ணு நான் பார்த்திருக்கிறேன். இப்போ தான் புரியுது இது அந்தக் கால ஸ்டைல் போலிருக்கிறது. பிச்சைக்காரர்கள் கூட ஒரு இடம் விட்டு ஒரு இடம் சென்றால் சங்கடப்பட வேண்டி இருக்கும். இந்த ரெப்யூஜிஸ் எதை நம்பி இங்கு வந்திருக்கிறார்கள் என்கிறார். அங்கே நமக்கு நாடு விட்டு நாடு அகதிகளாக வருபவர்களின் மனநிலை நன்கு புரிகிறது. சந்திரசேகரன் படிக்கும் கல்லூரியில் இருந்து சில மாணவர்கள் கலந்து கொண்ட ஒரு கலவரத்தைப் பற்றி விவரிக்கிறார். எனக்கு பாளையில் லூர்துநாதன் என்ற மாணவர் இறந்த சமயம் நடந்த கலவரம் நினைவில் கிளம்பியது. இந்திய நாட்டுக்குள்ளேயே இரண்டு விதமான நாணயங்கள் இருந்திருக்கின்றன. இந்திய நாணயம் ஹைதராபாத் ஹாலி நாணயம். “ அவள் விவரமணிந்த கண்கள் உடையவள். விவரமறிந்த கண்கள் ஏனோ அழகைக் குறைத்து விடுகின்றன.”´இதை வாசித்ததும் என்னுள் ஒரு கோபம் எழுந்தது. ஏன் எளிதாக ஏமாற்ற முடியாது என்பதாலா? ஹைதராபாத் சமஸ்தானத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே போர் மூளூம் அபாயம். இதை வாசிக்கும் போது பிரகாஷ் ராஜின் சொல்லாததும் உண்மை புத்தகத்தில் அவர் மகள் “ பம்பாயில் ஏன் வெடிகுண்டு போட்டார்கள். அங்கேயும் பார்டர் வாரா? அது இந்தியாவுக்குள்ளே தானே இருக்கிறது. “ என்று கேட்டது நினைவுக்கு வருகிறது. இந்தியாவுக்கும் ஹைதராபாத்துக்கும் இடையேயான போர் நடக்கும் போது இந்திய கவர்னர் ஜெனரலாக சக்கரவர்த்தி ராஜ கோபாலாச்சாரி இருந்திருக்கிறார். அவரும் கே. எம். முன்ஷியும் இந்தியா ஒன்றாக இணைவதற்கு உதவி இருக்கிறார்கள். நான் ரசித்த வரி1 : “ உலகமே அவன் காலடியிலிருந்து கிளம்பி எல்லாத் திசைகளிலும் சரிந்து வழிந்து போவது போலிருந்தது. ஒரு மிகப் பெரிய பலூன் மீது வரைந்த சித்திரம் போல……” நான் ரசித்த வரி2: இருட்டு ஒரு திரவம் என்று தோன்றியது. திரவமாகக் காற்றில் மிதக்கக் கூடியது என்று தோன்றியது. “ ஹ கதையின் முடிவு என்றென்றும் நம் மனதில் அழியாமல் நிற்கும் துயர சம்பவம். . இத்தகைய புத்தகங்களை வாசித்து நம் கடந்த காலங்களை புதிப்பித்துக் கொள்ள வேண்டும்.

04 July, 2022

படத்தின் பெயர் : ஸ்மைல் ப்ளீஸ் ( மராத்தி படம்) பார்த்தது நெட் ப்ளிக்ஸ்சில் இசை ரோஹன் ரோஹன் முக்கிய கதாபாத்திரத்தில் முக்தா பார்வே ;’ லலித் பிராபகர்’ பிரசாத் ஓக் இயக்குனர் : விக்ரம் பத்னீஸ் நான் மிகவும் உணர்ந்து பார்த்த படம். சில ஆண்டுகளுக்கு முன் எங்க அம்மா வயதாகி அனுபவித்த டிமென்ஷியா வை அடி நாதமாக கொண்ட படம். ஆனால் அந்த வியாதி ஒரு டீன் வயதுப் பெண்ணின் அம்மாவுக்கு வந்தால் என்ன நடக்கும் என்று சொல்லும் படம். நந்தினி ஜோஷி படத்தின் நாயகி ஒரு போட்டோகிராபர். ஒரு கம்பெனியில் பணி புரிகிறார். கணவன் சினிமாத்துறையில் இருக்கிறார். இருவருக்கும் ந்ல்ல புரிதல் இல்லை. இவர்களுக்கு டீன் வயதில் ஒரு பெண் குழந்தை. தாய் தந்தை இருவரும் அவரவர் துறையில் ஆழ்ந்திருக்க பெண் குழந்தைக்கு அதிருப்தி. இந்த நிலையில் நந்தினிக்கு மறதி அடிக்கடி நேர்வதை கண்டு பிடித்து தன் தோழி மருத்துவரை சந்திக்க அவர்கள் சில பரிசோதனை செய்து டிமென்ஷியா என்னும் மறதி நோயின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதை கண்டு பிடிக்கிறார். ஆரம்பத்தில் அதைப் புரிந்து கொள்ளாமல் அதிருப்தியா இருந்த குடும்பத்தார் மெல்ல மெல்ல புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அதற்குள் தான் எத்தனை விபரீதங்கள். ஒரு நல்லவன் அதிர்ஷ்ட வசமாக அவர்கள் வீட்டில் தங்க ஒரு நல்ல நண்பனாக நந்தினிக்கு ஆதரவாக இருக்கிறான். மற்றவர்கள் பெயர்களை மாற்றி மாற்றி அழைப்பது, எங்கே போகிறோம் என்பதே தெரியாமல் போய் விடுவது. சாப்பிட்டதே மறந்து போய் மறுபடியும் உணவு கேட்பது சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது என நோயின் தாக்கத்தை மிக அழகாக காட்டி இருக்கிறார். முக்தா பார்வே. நோயின் கூறை புரிந்து நம் வீட்டில் இப்படிப் பட்டவர்கள் இருந்தால் நாம் கருணையோடு நடத்த இந்த படம் நிச்சயம் உதவும். என் தாய் பாதிப்பில் இருந்த போது மருத்துவர் சொன்ன சில விஷயங்கள் விடுபட்டு இருந்தன. தனியாகவே விடக் கூடாது. அடுப்பு பக்கம் போக விடக் கூடாது. (அடுப்பை அணைக்காமல் வந்து விடலாம். ஆபத்து) அவர்கள் சாப்பிட வேண்டிய மாத்திரைகள் அவர்கள் கைக்கெட்டும் படி வைக்கக் கூடாது. (அதிகமாக போட்டுக் கொள்ள வாய்ப்புண்டு) இந்த விஷயங்களையும் உணர்த்தும் படி காட்சிகள் வைத்திருக்கலாம் என்று தோன்றியது. மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய மற்றுமொரு படம்.

29 May, 2022

 நான் பல விஷயங்களை நான் வாசித்தவற்றை நான் பார்த்தவற்றை என் பேரனுடனான என் சந்தோஷங்களை இன்னும் எனக்கே எனக்கான சில விஷயங்களைத் தவிர அனைத்தையும் உங்களுடன் தான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

நீங்கள் என்ன சொல்வீர்கள் என்ற அச்சமோ என்னைத் தீர்ப்பிடுவீர்கள் என்ற பயமோ இல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் அந்த நெருப்பாற்றையும் கடந்து தான் பயணித்திருக்கிறேன். 

சரி சரி விஷயத்துக்கு வாரேன். திரு நங்கைகள் நாம் புரிந்து கொள்ளாத கதாபாத்திரங்களாகவே நம் வாழ்வில் இருந்திருக்கிறார்கள். எனக்கும் அப்படியே. அண்மையில் தான் ஜெர்மனி வாழ் திருநங்கை ஒருவரின் யூட்யூப் சானல் பார்க்க நேர்ந்தது. அந்த பதிவு அவரின் அறிவை ஒளியூட்டிக் காட்டியது. 

அதிலிருந்து அவரது ஒவ்வொரு பதிவையும் தவறாமல் பார்க்கிறேன். வழக்கமாக டீன் ஏஜ் என்பது சந்தோஷங்கள் நிறைந்தது. என்னைப் போல் காதல் என்னும் சாகரத்தில் வலியப் போய் குதித்து வலிகளை இழுத்துக் கொண்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் அது வஸந்த காலம்.

ஆனால்  அந்த வயதில் தான் அனேக திருநங்கையர் தாம் திருநங்கை என்பதை உணரத் தொடங்குகிறார்கள். அந்த குத்தீட்டி அவர்களைக் குற்றுயிரும் கொலை உயிருமாக ஆக்குகிறது. அனேகம் பேர் குடும்பத்தை பிரிகிறார்கள். குடும்பம் ஆதரவளிக்க மறுக்கிறது. ஆனால் நான் பார்த்த இவரோ தாயின் முழு அரவணைப்பில் வளர்ந்து படித்து உயர் நிலைக்கு வந்திருக்கிறார். மெடிக்கல் துறையில் பணி புரியும் இவர் இந்த கொரோனா காலத்தில் சமுதாயத்துக்கு தன் பங்கினையும் அளித்திருக்கிறார்.

அவர் இன்று யூட்யூபில் சொன்ன ஒரு விஷயம் தான் இந்த பதிவின் நோக்கம். " உங்கள் குழந்தை திரு நங்கை என்று அறிந்த நொடி உதறித் தள்ள நினைக்காதீர்கள். நோயிலும் போரிலும் விபத்திலும் குழந்தைகளைப் பறி கொடுத்து அவர்களின் போட்டோக்களோடு பேசிக் கொண்டிருக்கும் பெற்றவர்களைப் பாருங்கள். உங்களுக்கு உயிரும் சதையுமாய் ஒரு குழந்தை இருக்கிறது. பிறர் என்ன சொல்வார்களோ என்ற கவலையில் அந்த குழந்தைகளை உதறித் தள்ளாதீர்கள். அது அவர்கள் தவறல்ல. "

பெற்ற அவர்களே உதறும் போது தான் வாழ வழி அறியாமல் பல தவறான வழியைத் தேடுகிறார்கள். ஏற்கனவே படைப்பின் மேல் கோபத்தோடு தான் இருப்பார்கள். குடும்பம் ஆதரித்து வளர்த்து அவர்களுக்கான திறமையில் அவர்கள் ஜொலிக்க அனுமதிக்க வேண்டும். எல்லோரும் இணைந்து வாழ்வதற்கானது தான் இந்த பூமி. அதை ஒரு சிலருக்கு மறுத்து சாவை நோக்கி அவர்களை நகர்த்தக் கூடாது. 

காலையில் அந்த வீடியோ பார்த்ததில் இருந்து மனம் கனத்துப் போய் கிடக்கிறது. பதிவின் மூலம் பாரத்தை இறக்கப் பார்க்கிறேன். ஏதோ ஒருவர் இருவர் இந்த பதிவைப் பார்த்து  திருநங்கைகள் மீதான தன் பார்வையை மாற்றிக் கொண்டால் நல்லது தானே. 

இதைப் போய் ஏன் எழுதிக்கிட்டு என்று நினைக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள்.

18 February, 2022

 பெயர். : மாயம்

பெருமாள் முருகனின் சிறு கதைத் தொகுப்பு. 

பதிப்பகம் : காலச்சுவடு

விலை : ₹200

இருபது சிறு கதைகளின் தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முத்துப்  பரல். அனேகமாக எல்லா கதை நாயகர்களின் பெயரையும் முருகேசு என்றே வைத்திருக்கிறார். முருகேசு அப்பாவியாய், அதகளம் பண்ணுபவனாய், காதலனாய், கணவனாய், அப்பாவியாய் , அயோக்கியனாய் எல்லாமாய் வருகிறான். 

கடைக்குட்டி : கடைசி வரி வெடி குண்டு.

நுங்கு : நூறு நாள் வேலைத் திட்டத்துக்கு "ஏறி வேலை" என்று சொல்வதுண்டு என்கிறார். அரசாங்க வேலை அலுவலகத்தினாலாலும் ஏரியேயானாலும் ஒரு வித மெத்தனத்தோடு இருப்பதை சாடுகிறார்.

போதும் : இந்த கதையைப் படித்ததும் எனக்குத் தோன்றியது "காதலைச் சொல்லவும் முன் எடுத்துச் செல்லவும் முடியாத ஒருவனுக்கு காதலிக்க தகுதியில்லை. அவர்கள் தான் காதல் தேர்வில் தோற்கிறார்கள்.

வீராப்பு: விளையாட்டு வினையாகும் என்பதைச் சொன்ன கதை. " வேலை பார்த்து உன் சம்பளத்தைச் சேர்த்து வை. ஓரளவு சேர்த்ததும் மீதியை நான் போட்டு உன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன். " என்ற அப்பாவின் வளர்ப்பு அருமை.

ஆட்டம் : ஏரோப்ளேன் கரம் என்னும் ஒரு வித தாய விளையாட்டை இந்தக் கதையில் நமக்கு நினைவுபடுத்துகிறார். தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். அப்பாவும் மகனும் கொரோனா காலத்தில் இந்த விளையாட்டை விளையாடி ஜெயித்தவர் ஆர்ப்பாட்டமாய் சிரிக்கும் போது அந்த காலத்துக்கே போனது போல் இருக்கிறது. 

இந்த கதையில் நான் மிகவும் ரசித்த வரி . " குற்றம் சாட்டுபவரையும் குற்றம் சாட்டப்பட்டவரையும் சமமாகப் பாவித்து ஒவ்வொரு வாக்கியத்தில் இருவருக்கும் பாதகமில்லாமல் நடந்து கொள்ளும் வித்தை அம்மாக்களின் தனித்திறன்" 

தொடை : பஸ் பயணம் பல காதல்களைப் பார்த்திருக்கும். இதுவும் அது போல் ஒரு அழகான காதல் கதை.

அருவி : இந்த கதையில் வரும் "நீரோலம்" என்னும் வார்த்தைவரப் போகும் துயரத்தை முன்னுணர்த்துவதாய் இருந்தது. குறிப்பிடப்பட்ட "அருவி" எனக்கு பல ஆண்டுகளுக்கு முன் கொல்லி மலையில் பார்த்த அருவியை நினைவூட்டியது. 

நாய் : காதல் என்பதில் பெண்களுக்கு என்ன வித தெளிவு வேண்டும் என்பதை அழுத்திச் சொல்லும் கதை.

கருவாடு : பகைமையை பல ஆண்டுகள் தேவையில்லாமல்மனதில் சுமந்து வருகிறோம்.அது ஒரு எளிய முயற்சியில் மணல் வீடாய் சரிந்து போகும் என்பதைச் சொல்லும் கதை. 

பந்தயம் : ஆண் நட்பினிடையே பணம் கொடுக்கல் வாங்கல் வெகு சகஜம். பெரும்பாலும் நட்பு முறிவதும் பணத்தாலோ பெண்ணாலோ தானே?  இந்த கதையில் நண்பர்கள் நட்பு முறிந்ததா? தெரியவில்லை.

தொழில் : தொழில் போட்டி பலருக்கு இடையே வந்திருக்கும். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையே கூட வருமா? வரும் என்று சொல்லும் கதை.

பரிகாரம் : அழுத்தமான அழ வைக்கும் கதை.

மாயம்: போட்டி என்பது இருவருக்கும் தெரிந்து வருவது தான். அப்படி ஒருவனுக்குத் தெரியாமலே நடக்கும் போட்டியும் அதனால் நேரும் விபரீதமும் தான் கதை. இந்த கதை தான் புத்தகத்தின் பெயரும் கூட. 

என்ன?? இருபது கதைகள் வரலையேன்னு பார்க்கிறீங்களா? சில கதைகள் என்னன்னே தெரியாம நீங்க வாசிப்பதற்காக. உங்கள் வாரிசுகளின் வாசிப்பை மெருகேற்ற நினைத்தால் இந்த புத்தகத்தை பரிசளிக்கலாம்.


07 February, 2022

 நேற்று ஒரு அருமையான திறனாய்வு "வாருங்கள் படிப்போம்" குழுவில். 

புத்தகத்தின் பெயர் :நேற்று ஒரு அருமையான திறனாய்வு "வாருங்கள் படிப்போம்" குழுவில். 

புத்தகத்தின் பெயர் : How to avoid a climate disaster.

எழுதியவர் : பில் கேட்ஸ்.

திறனாய்வு செய்தவர் : எழிலரசன்.

இவர் ஒரு மூத்த பத்திரிகையாளர்.

Climate disaster என்பது கடல்  மாதிரியான விஷயம். பலரும் கால நிலை மாற்றம் என்பது நமக்கு சம்பந்தமில்லாத விஷயம் என்று நினைக்கிறார்கள். இந்த புத்தகத்தை வாசித்த பின் தான் எனக்கு பல கதவுகள் திறந்தன என்கிறார் எழிலரசன்.்

பூமி வெப்பமடைவதை எளிய உதாரணத்தோடு விளக்கி இருப்பதாக சொன்னார். வெயிலில் ஒரு காரை நிறுத்தி இருக்கிறோம். உள்ளே நன்கு சூடாகி விட்டது. வந்ததும்  ஜன்னல் கதவுகளை திறந்து விட்டால் தான் வெப்பம் வெளியேறுகிறது. அது போலவே பூமியை சுற்றி கார்பன் டை ஆக்ஸைடு, மீதேன், நைட்ரஜன் போன்றவை  படலமாக 

மூடி இருக்கும் போது பூமியில் உள்ள வெப்பம் வெளியேறாமல் பூமி உஷ்ணமடைகிறது. ( நான் இது வரை வெளியில் இருந்து வெப்பம் பூமியைத் தாக்குவது அதிகரிப்பது தான் global warming என நினைத்திருந்தேன்) இதனால் சரி செய்ய முடியாத பாதிப்புகள் நேரலாம் என்கிறார் ஆசிரியர்.

இப்போதும் நிகழும் பல காரியங்களை நாம் பூமி வெப்பமடைவதோடு இணைக்காமல் தனித்தனியாக பார்க்கிறோம். அது தவறு என்கிறார். Extreme whether events க்கு இது தான் காரணம் என்கிறார். அதிக வெப்பமும் அதிக குளிரும் பொதுவாகவே கிருமிகள் வாழ ஏற்ற சூழல். இப்போ ஏதாவது மணி அடிக்கிறதா? ஆம் புதுப்புது நோய்கள் கூட உருவாகலாம் என்கிறார்.  Sun stroke இறப்புகள் அதிகரிக்கலாம். இதில் பாதிப்படைவது வெயிலில் உழைக்கும் எளிய மக்களாக இருப்பார்கள்.

வாகனங்கள் மட்டுமல்லாது சிமென்ட் தொழிற்சாலை எவர்சில்வர் தொழிற்சாலை போன்றவை வெளியிடும் கார்பனும் பெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றன என்கிறார். 

Green premium என்றொரு பதத்தை ஆசிரியர் பயன்படுத்தி இருக்கிறார். இதைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டு தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.்வெப்பத்தை. கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து பயனில்லை அதிரடியாக பூஜ்யத்துக்கு கொண்டு வர வேண்டும் என்கிறார்.

தனி மனிதன் பயன்படுத்தும் வாகனங்கள் வெளியிடும் கார்பனை விட ஆகாய விமானங்கள், கப்பல்கள் போன்றவை வெளியிடும் அளவு மிக அதிகம். அவை குறைக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

பூமி வெப்பமடைந்ததற்கு வளர்ச்சி அடைந்த நாடுகளே பெரும் காரணம் என்பதால் அதை தடுக்க செய்யும் ஆராய்ச்சிகளுக்கு அவையே அதிக பணம் வழங்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார் பில் கேட்ஸ்.

இந்த திறனாய்வு இந்த புத்தகத்தை உடனே வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது நிஜம்.


10 January, 2022

புத்தகத்தின் பெயர் : தட்டப்பாறை. நூலாசிரியர் : முஹம்மது யூசுப் பதிப்பகம் : யாவரும் பப்ளிஷர்ஸ் விலை : ரூ 650/- முன்னுரையில் இந்த வரி ஆரம்பமே என்னை ஈர்த்தது. " எல்லோரும் வாசிக்கும் புத்தகங்களை மட்டுமே நீங்களும் வாசித்தால் எல்லோரும் சிந்திப்பது போல மட்டுமே உங்களாலும் சிந்திக்க இயலும்." ஹாருகி முரகாமி. நாம தான் எல்லோரிலிருந்தும் வேறு பட்டவர்கள்னு நினைப்பவர்களாச்சே. உற்சாகமாக வாசிக்கத் தொடங்கினேன். இது ஒரு வகை டாக்குஃபிகேஷன் வகை நாவல் என்கிறார்.இது நமக்கு புது வகை என்பதால் அங்கங்கே கொஞ்சம் வேகம் குறைகிறது.ஆனால் அந்த இடங்களில் எல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நம் உணர்வுகளை சொல்ல வைத்து விடுகிறார். உலகெங்கிலும் உள்ள இலங்கையைச் சார்ந்த மலை வாழ் இந்தியத் தமிழர்களுக்கும் தமிழ் சொந்தங்களுக்கும் இந்த நூலை சமர்ப்பணம் செய்கிறார். தேவ சகாயம் கதை நாயகன். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தவர். அவருக்கும் கிறிஸ்டியானுக்கும் இடைப்பட்ட நட்பை அழகாக சொல்கிறார். "தன்னருகில் இருக்கும் மற்றவனுக்கு தன்னை விட பெரும் துயரம் என்றதும் கிடைக்கும் மன சமாதானத்தில் ஒருவன் தன்னை மீட்டெடுப்பான் எனும் பொது நியதி அவர்கள் இருவருக்கும் இடையில் நட்பு உண்டாகக் காரணமாக இருந்தது என்கிறார். ஜெசிபா தேவசகாயத்தை காதலித்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்து அற்பாயிசில் இறந்தும் போகிறாள். அவள் இறப்பிற்கு தேவசகாயம் முக்கிய காரணம் என்று நினைக்கும் ஜெசிபாவின் குடும்பத்தார் பெண் குழந்தையை அவரிடம் கொடுக்க மறுத்து எடுத்துச் செல்கின்றனர். அந்த பெண் குழந்தைக்காகவே வாழ்ந்து முடிக்கிறார் தேவசகாயம். " நீங்க என்ன ஆளுங்க " என்னும் கேள்வி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருந்தன என்கிறார்.அது தென் தமிழகத்தின் சாபக் கேடு. நெல்லைக்கு பழைய பெயர் " வேணு வனம்" என்கிறார். எவ்வளவு அழகான பெயர். இந்த மண்ணே மூங்கில் காட்டுக்கான அடையாளம் தான் என்கிறார். தீவிர கம்யூனிஸ்ட் சகாவு இருளன். பிரான்சிலிருந்து டாக்குமெண்டரி எடுக்க வந்த டேனியல். இரு சக்கர வாகனம் பழுது நீக்கும் கடற்கரை சௌம்யா, செல்வி அபி என பல சுவையான கதாபாத்திரங்கள். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து தன்னை முழுமையாக நம்பாத ஒரு சமூகத்தில் வாழும் அவதியை உணரும் படி எழுதி இருக்கிறார். நான் மிகவும் ரசித்த சில வரிகள்: "மர்மத்தின் அந்திம ஆதாரம் காடுகள் எனில் பூமி எனும் முத்தச்சியின் நுறையீரல் இந்த மழைக் காடுகள் தான்." " சில காலைப் பொழுதுகள் எந்த ரகசியத்தை சுமந்த படி வருகின்றன என காலத்திற்கு மட்டுமே தெரியும் என்பதால் தான் மனித வாழ்வு இன்னும் சுவாரஸ்யமாக உள்ளது" " நான் செத்தா எல்லா மிருகங்களும் தின்னு மிருகங்கள் மூலமா காடு முழுக்க நான் சுத்தணும் அது தான் என் ஆசை" " 30 வருட வீட்டுச் சிறையில் இருந்து கிடைத்த விடுதலையில் பறவைக்கு பதினான்கு றெக்கைகள் முளைத்திருந்தன. அது ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் பறக்க விரும்பியது. அத்தனை வேட்கை அதன் கால்களில்." " தேயிலைத் தோட்டம் எங்கும் உடைந்த சிறு சிறு துண்டுகளாக கலவரக் கதைகள் கிடந்தன. எங்கோ பார்த்தது போல் உள்ளதே என்று அருகில் சென்று உன் பெயரென்ன என்று கேட்டால் நிலம் அழுது விடும் சூழல் இருந்ததால்...." சில இடங்கள் கடக்க கடினமாய் இருந்தது உண்மை. ஆனால் அங்கே முரகாமி தான் வந்து நம்மை நகர்த்திச் செல்கிறார்.