Bio Data !!

09 July, 2012

"மறு பக்கம் " புத்தக விமர்சனம்

"மறு பக்கம் " ஆசிரியர் பொன்னீலன் சாஹித்ய  அகடமி விருது பெற்றவர்.

ஆசிரியர் பற்றி சில வரிகள் :
"அண்ணாச்சி" எனக்கு 1980 இல் அறிமுகமானவர்.. அழகிய முகத்தில் "மீசை " என்னும் கிரீடம் அணிந்திருப்பவர். அந்த பெரிய முறுக்கு மீசைக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் குழந்தைத்தனம் தவழும் முகம்.. கலை இலக்கிய பெரு மன்றம் நடத்திய ஒரு பயிற்சி முகாமில் தான் அறிமுகம்.. உலகில் ஏழு பேர் ஒரே மாதிரி இருப்பார்கள் என்று .சொல்வார்கள். அப்படிப்பட்ட எழுவரில் என்னை போல் இருக்கும் மற்றொருவர் அண்ணாச்சியின் மூத்த மகள் அமுதா.. அதுவே அவருடன் என்னை இன்னும் இறுக்கி இணைத்தது.. 1972 இல் மறு பக்கம் நாவலுக்கான தகவல்களை தேடத் தொடங்கி .இருக்கிறார். இடையில் வேறு சில பணிகள் . கடந்த ஆண்டு புத்தகம் வெளியானது..

இனி நாவலை பற்றி :
18 , 19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த "தோள் சீலை " போராட்டத்தை பற்றி அறிந்த பொன்னீலன் அவர்கள் அதை பற்றிய தகவல்களை 1972 முதல் சேகரிக்க .தொடங்குகிறார் நாகர்கோயில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி நூலகம்,, சென்னை கன்னிமரா நூலகம் இவருக்கு பேருதவி செய்கின்றன. அதையும் 20 ஆம் நூற்றாண்டில் குமரி மாவட்ட உருவாக்கப் போராட்டத்தையும் இணைத்து "மறு பக்கம் " என்ற இந்த நாவலை எழுதி  வெளியிட்டுள்ளார்

1982 இல் நடந்த மண்டைக்காடு மதக் கலவரத்தை தனியாக பார்க்காமல் 18,19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த போராட்டங்களின் தொடர்ச்சியாக பார்க்கிறார்.. இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன் உள்ள காலத்திற்கும்  பிந்திய கால கட்ட நிகழ்சிகளுக்கும் இடையேயான ஊடாட்டம் ஆரம்பத்தில் எனக்கு கொஞ்சம் குழப்பமாக .இருந்தது அந்தந்த கால கட்டங்களின் கதா பாத்திரங்களின் பெயர்களை அழுத்தமாக பதித்துக் கொண்டதால் அவருடனேயே பயணிக்க முடிந்தது..

மண்டைக்காடு கலவரம் பற்றி ஆய்வு மேற்கொள்ள வரும் சேது  தன் தாயை பற்றியும் தகவல் அறிய ஆவலாய் இருக்கிறான். பள்ளி வாத்தியாரான தன் தந்தை பள்ளி மாணவியான தன் தாயை மணந்து கொண்டதால் அதைப்பற்றி வெளிப்படையாக யாரிடமும் விசாரிக்க முடியாமல் திணறுகிறான். தன் தாயைப் போன்ற ஜாடையுடைய ஒரு பெண்ணை பின் தொடர்ந்து விசாரிக்கும் போது  அவர் தான் தன்  சித்தி என்பதை யாருடைய உதவியும் இல்லாமல் கண்டு பிடிக்கும் இடம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.

கலவரத்துக்கு பயந்து மக்கள் கடலுக்குள் சாடும் பொது கிறிஸ்துவத்தில் மோயீசன் செங்கடலை பிளந்து ஜனங்களை காப்பாற்றியதை குறிப்பிட்டு அரபிக்கடல் ஒரு வேளை அடி பணிய மறுத்து விட்டதோ என்கிறார். இப்படி சில இடங்களில் ஆசிரியர் தன் கடவுள் நம்பிக்கையின்மையை தொட்டுச் செல்கிறார்.

மீனவர்களுக்கும் நாடார்களுக்குமான இனக் கலவரம் அப்படியே திசை திருப்பப்பட்டு இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்குமான மதக் கலவரமாக மாற்றப்பட்டதை சுட்டிக் காட்டுகிறார். "கடலில்  தாழ்த்த " அழைத்து வருபவனை புத்திசாலித்தனமாக காப்பாற்றும் இடத்தில்  இரண்டு இனத்திலும் இளைஞர்கள் வேகத்துடனும் பெரியவர்கள் விவேகத்துடனும் வளைய வருவதை பார்க்க முடிகிறது.

வரலாற்று நிகழ்வுகளை  அழுத்தமாக பதிய வைத்த ஒரு நாவல் திடும்மென முடிந்தது போல் இருந்தது. இன மதக் கலவரத்துக்கு முடிவு ஏது அது தொடர்கதை தான் என்பதனால் இருக்கலாம். கொஞ்சம் பெரிய புத்தகம் தான் மிரண்டு விடாதீர்கள். வாசிக்க தொடங்கியதும் ஆசிரியரை அலைபேசியில் அழைத்தேன். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் இருப்பதாகவும் நாவலை  முடித்து விட்டு பேசும் படியும் கூறினார். விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன். பிரார்த்தனையில் ஆசிரியருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் . எனக்கு இருக்கிறதே!!