Bio Data !!

27 February, 2011

என் செல்லச் சீமானே !

சந்தனம் பூசி என்னை குளிர்விக்கும் செல்வம்,

ஓராண்டு முன்பு வளைகாப்பு நடத்தி வீட்டுக்கு அழைத்துச் செல்லலாம் என்றிருக்கும் பொழுது என் மூத்த மகள் "அம்மா நான் இங்கேயே இருந்துக்கிறேன். டெலிவரி ஆனதும் ஊருக்கு வரேனே " என்றாள். சின்ன சின்ன சில்லறை சிக்கல்களில் இருந்து அவளைக் காப்பாற்றி கடத்தி கொண்டு வந்திருந்ததால் அவள் கணவரும் "அவள் இங்கேயே இருக்கட்டும் நான் பார்த்துக்கிறேன் " என்றார். அனுபவம் இல்லாததால் இப்படிச் சொல்கிறார்களே என்று இருந்தாலும்  அங்கு மதுரையில் ஆரம்பத்தில் இருந்து  அவளைக் கவனித்த வைத்தியர் பிரசவம் பார்த்தால்  நலமாய் இருக்குமே என்ற எண்ணத்தில் என் மனதை என் மகளிடம் விட்டு நெல்லை வந்து சேர்ந்தேன்.

மதுரையில் உள்ள நண்பர்களிடம் உறவுகளிடம் அவளை ஒப்படைத்து ,குறித்த தேதிக்கு பத்து நாள் இருக்கும் போது வந்து விடுகிறேன் அதற்கு முன் வலி வந்து விட்டால் , நான் வரும் வரை அவளுடன் இருங்கள் என்ற வேண்டுகோளுடன் ஊர் வந்து சேர்ந்தேன். அது ஒரு நரக காலம். அவளை நான் வயிற்றில் சுமந்த அந்த நாள் நினைவுக்கு வந்தது. "இன்று போய் நாளை வா" படம் பார்த்து வயிறு குலுங்க சிரித்து வந்து படுத்த நள்ளிரவில்  வலி எடுத்து கணவர் மட்டுமே துணையாய், நடந்து சென்று பத்தே நிமிடங்களில் என் கைகளில் ஏந்திய என் மகள். அன்று எனக்கிருந்த துணிச்சல் இன்று எங்கே? 

நடு இரவில் உறக்கம் கலைந்து, இருட்டில் துழாவி அலைபேசியை எடுத்து ஒரு மெசேஜ் அனுப்புவேன் " உன் உறக்கம் கலையும் பொழுதில் ஒரு பதில் அனுப்பு மகளே! என் மனம் நிம்மதி அடையும் " என் தவிப்பு புரிந்து சில நேரம் நடு இரவில் அவளிடம் இருந்து அழைப்பு வரும் " அம்மா , பயப்படாதே நான் தைரியமாகத்தான் இருக்கிறேன். நிம்மதியாத் தூங்கு" அவள் தைரியம் என்னால் குலைந்து விடக் கூடாது என்பதற்காகவே நான் தைரியமாய் இருப்பது போல் நடிப்பேன். இல்லாத எதிர் மறை விஷயங்கள் தான் மனதை நிறைக்கும். 

இந்த வேதனை நீடிக்க விடாமல் என் பேரன் விரைந்து வந்தான். வலி எடுத்து அவளை மருத்துவ மனைக்கு என் உறவுகள் அழைத்து சென்ற செய்தி கேட்டு உடனே நான் புறப்பட, அட ! மதுரைக்கும் நெல்லைக்கும் இடையே இவ்வளவு தூரமா? இருந்தும் காத்திருந்தான் என் செல்வம். பிறந்த அந்த பச்சிளம் சிசுவை என் மருமகனை நோக்கி மருத்துவர் நீட்ட, அவர் என்னிடம் தரச் சொல்லி கை காட்டினார். கைகளில் ஏந்தும் பொழுது ஒரு நடுக்கம். "இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாட்டி" என்று அந்த சிசு என் காதில் முணுமுணுப்பது போல் இருந்தது. 

அந்த செல்ல பேரனுக்கு ஓராண்டு முடிந்து விட்டது. என் தலையில் இன்னுமோர் சிறகு செருகப் பட்டது. 
வாழிய பல்லாண்டு என் செல்லச் சீமானே !

02 February, 2011

என் மகள் இனி அவர் மனைவி !!

சில பத்து ஆண்டுகளுக்கு முன் உங்களை அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன்.
வரத் தயாராய் இருப்பவர்கள் என் புகை வண்டியில் ஏறிக்  கொள்ளலாம். 
எல்லோரும் தனக்கு முன் இருப்பவரின் இடுப்பை இறுக்கமாக பிடித்துக் கொள்ளவும் இல்லை என்றால் வண்டி போய்க் கொண்டிருக்கும் போது சில பெட்டிகள் கழண்டு கொள்ளலாம்.போலாமா? 
குச் குச் .......... ஊ ஊ ஊ .....
நாம் வர வேண்டிய இடம் வந்து விட்டது. வரும் போது எங்கும் நிற்காமல், எதையும் பார்க்காமல் வந்து விட்டதால் திரும்பிச் செல்லும் போது ஒவ்வொரு முக்கிய இடங்களிலும் நின்று பார்த்து செல்வோம், சரியா?
நாம் இப்பொழுது நிற்கும் இடம் என் மகள் பிறந்த வருடம்,மாதம், நாள்,நேரம் 
நான் காதல் திருமணம் செய்து இருந்ததால் என் கணவரை என் தாய் அங்கீகரிக்காமல் இருந்தார். எனவே ஒரே ஊருக்குள்ளேயே தனி வீடு எடுத்து நானும் என் கணவரும் இருந்தோம். செக்கர் வானம் பகலவனை பிரசவிக்க தொடங்கிய நேரம் எனக்கு வலி எடுக்கத் தொடங்கியதால் என் கணவர் என்னை மெதுவாகக் நடத்திச் சென்று என் தாயின் வீட்டில் விட்டு வாசலோடு விடை பெற்றார். நாங்கள் செல்ல வேண்டிய மருத்துவமனைக்கு முன்னமேயே சென்றார். சில ஆயத்த ஏற்பாடுகளை செய்த பின் நானும் என் தாயும் மருத்துவமனை சென்றோம். நான் பொதுவாகவே என் வலிகளை, வேதனைகளை வெளிப்படுத்த மாட்டேன். இன்னும் நேரமாகும் என்ற எண்ணத்தில் என் கணவர் வீட்டுக்கு செல்ல, என் தாய் அருகில் உள்ள பொது தொலைபேசியில் இருந்து வீட்டுக்கு தகவல் சொல்ல செல்ல, அங்கே வந்த மருத்துவர்," இன்னும் கொஞ்ச நேரத்தில பிரசவம் ஆகிடும். உங்க கூட வந்தவங்களை எங்கே?" என்றார். 
"இந்தா இப்போ வந்திடுவாங்க" என்றேன்.
கோபப் பட்ட மருத்துவர் லேபர் வார்டுக்கு என்னை அனுப்பிய படி, ஏதோ அவசர வேலையாக மாடியில் இருந்த தன் வீட்டுக்கு செல்ல லேபர் வார்டில் இருந்த நர்ஸ் ஏதோ நினைவில் அறைக் கதவை தாளிட்டு விட்டார். மாடிக்கு சென்ற மருத்துவர் சில நொடிகளில் வந்து, கதவு தாளிட்டு இருப்பதைப் பார்த்து பதட்டத்தோடு பட பட வென கதவை தட்ட, அங்கே என் மகள் தன் உச்சந்தலையை மெல்ல காட்டத் தொடங்க , அனுபவம் மிகுந்த அந்த நர்ஸ், தான் செய்து விட்ட தவறுக்கு மருத்துவரிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளப்போவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பொறுமையாக என் மகள் வெளி உலகுக்கு வர வழி காட்டி என் வலியை போக்கினாள்.
என்ன சாதரணமா சொல்லுறேன்னு நினைக்கிறீங்களா? எனக்கே இப்போ அதை நினைச்சா பயம்மா இருக்கு. இளங் கன்று பயம் அறியாதே! 
சரி புறப்படலாமா? குச் குச் ....... ஊ ஊ .....
ஆறு மாதங்கள் நானும் கணவரும் மாறி மாறி விடுப்பு எடுத்து பார்த்த பின், அவளை பார்த்துக் கொள்ள யாரும் சரியாக அமையாததால், கோவையில் இருந்த என் மாமியாரின் வீட்டில் அவளை விட்டு, வாரம் ஒரு முறை நாகர்கோவிலில் இருந்து நானும் கேரளாவின் காசர்கோடில் இருந்து என் கணவரும் அவளைக் காண கோவை வருவோம். விடிந்தும் விடியாத நேரத்தில் போய் சேரும் என்னை பரக்க பரக்க பார்த்த படி என் மடியில் முக்கால் தூக்கத்தோடு என் மடியில் அமரும் மகள் நான் இருக்கும் இரண்டு நாளும் (அப்போ சனி, ஞாயிறு விடுமுறை) என்னை விட்டு ஒரு நொடி கூட விலக மாட்டாள்.  நான் கிளம்ப வேண்டிய நேரம் என் மாமனார் நான் செல்ல வேண்டிய திசைக்கு எதிர் திசையில் அவளை எடுத்து செல்ல, திடீரென திரும்பிய அவள், என் பின்புறத்தை வைத்தே நான் செல்வதை புரிந்து கொண்டு வீலென்று அழத் தொடங்க, கண்களில் முட்டிப் பெருகும் கண்ணீரோடு திரும்பிப் பார்க்காமல் வேகு வேகுவென நடை போடுவேன். அடுத்த வாரமும் இதே நிகழ்வு தொடரும்.
குச் குச் .... ஊ ஊ .....
கேரளாவில் இருந்த என் கணவருக்கு ஈரோடுக்கு பணி மாற்றல் ஆக, நாகர்கோவிலில் இருந்து நானும் மூன்று வயது ஆன என் பெரிய மகளும் , கோவையில் இருந்து என் கணவர் குடும்பத்துடன் என் சின்ன மகளும் ஆக எல்லோருமாக  ஈரோட்டில் வந்து செட்டில் ஆனோம்.  கலைமகள் கல்வி நிறுவனம் என் இரு பெண்களை வார்த்து எடுத்ததில் பெரும் பங்கு பெற்றது .படிப்பு, தவிரவும் நடனம் பாடல் என அவர்களின் திறமைக்கு நல்ல அடித்தளம். அது ஒரு பொற்காலம். 
குச் குச் .... ஊ ஊ ....
சொந்த ஊருக்கே போய் விடலாம் என நானும், என் கணவரும் மாற்றல் வாங்கி நெல்லை வந்து சேர்ந்தோம் இரு மகள்களுடன்.  பள்ளி, கல்லூரி என தன் கவனம் முழுவதும் படிப்பில் செலுத்தி, எனது அபிரிமிதமான அன்பு அவளை நேர் பாதையில் செலுத்த, தன்னை சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொள்வதால் அவள் பாதையில் இருந்த முட்களையும், சிறு கற்களையும் கூட நான் நகர்த்தி விட இது வரை அவள் வந்தது ராஜ பயணம். 
குச் குச் .... 
திருமண வயதை நெருங்கியதும் அன்பும், அழகும் நிறைந்த என் மகளுக்கு பொருத்தமான ஆண் மகனைத் தேடி முடிவு செய்தோம். அன்பும், அக்கறையும் நிறைந்த குடும்பத்தை சேர்ந்தவர். இதோ நாளும் நெருங்கி விட்டது. 
வரும் திங்கள் (7 .2 .2011 ) தைத் திங்கள் 24  ஆம் நாள் உத்திரட்டாதி நட்சத்திரமும்,சித்தயோகமும்  கூடிய சுபயோக சுபநாளில் காலை 9 .00 மணிக்கு மேல்    10 .30  மணிக்குள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் பாளை தூய சவேரியார் பேராலயத்தில்  திருமணம் நடக்க இருக்கிறது, அனைவரும் வருக!     
அதனைத் தொடர்ந்து திருவனந்தபுரம் சாலையில் உள்ள  S .A . ராஜா கல்யாண மண்டபத்தில் நிகழும் வரவேற்பிற்கும், தங்கள் தங்கள் சுற்றமும் , நட்பும் சூழ வந்திருந்து மணமக்களை வாழ்த்தியருள வேண்டுகிறேன். 
என்ன வர வேண்டிய இடம் வந்தும் இன்னும் இறங்காம இருக்கீங்க? 
என் மகள் இனி அவர் மனைவி !!