Bio Data !!

25 October, 2022

 படத்தின் பெயர் : ஒரு தெக்கன் தள்ளு கேஸ்

மொழி : மலையாளம்.

இயக்குநர் : ஸ்ரீஜித்

முக்கிய கதாபாத்திரத்தில் : பிஜு மேனன், பத்மப்ரியா, நிமிஷா, ரோஷன் மாத்யூ.

படம் நெட் ப்ளிக்ஸில்.

ஏ.ஆர் இந்துகோபாலன் அவர்கள் எழுதிய "அம்மணி பிள்ளை வீட்டு கேஸ்"  என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படம்.

ஒரு அழகான கடலோர கிராமம். அங்கு மீன் பிடித்தல் முக்கிய தொழில். ஓங்கி உயர்ந்த ஒரு கலங்கரை விளக்கம்.  அதில் பணி புரியும் அம்மிணி அண்ணன் தான் கதாநாயகன். அம்மிணியாக பிஜு.  அழகன். கதாபாத்திரத்துக்கு கச்சிதமானவன். நெடிதுயர்ந்த கலங்கரை விளக்கத்தில் பணி புரிவதால் அந்த கிராமத்தில் அவருக்குத் தெரியாமல் எதுவுமே நடக்க முடியாது. 

அவர் மனைவி பத்ம ப்ரியா. கடலின் ஆழத்துக்கு நிகர் நிற்கும்  கண்கள். அதில் காதலும் பாசமும் போட்டி போட்டு வழிகின்றன் அம்மிணியின் உறவுப் பெண் வசந்தி(நிமிஷா) அவளைக் காதலிப்பவன் பொடியன் (ரோஷன்) இருவரும் நெருக்கமாக இருப்பதை பார்த்து விட்ட அம்மிணி  அடிக்க விரட்டும் போது பொடியனும் அவன் நண்பர்களும் அவரை நன்கு அடித்து விடுகிறார்கள்.

 ஒவ்வொருவராய் ஊருக்கு முன்  அடித்து பழி தீர்ப்பது தான் கதை. டொப் டொப் னு பொட்டு வெடி சுட்டு பழி வாங்குவதை விட இது மிகவும் நன்றாக இருக்கிறது.  அதை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றிருக்கிறார்கள். 

இரண்டு மணி நேரம் ஒரு கிராமத்நில் இருந்து வந்ததைப் போன்ற உணர்வு வருகிறது. 

பார்க்கலாம்.

20 October, 2022

 டிரெயின்ல தள்ளி விட்டானே அந்த சத்யா பொண்ணோட அம்மா பேசுற ஒரு வீடியோ பார்த்தேன். பரிதாபம். அந்த அம்மாஒரு நோயாளி. ஒரே சமயத்தில் கணவனையும் இழந்து மகளையும் இழந்து பரிதவிக்கிறார்கள். இந்த மீடியா காரங்க ஆளு மாத்தி ஆளு போய் மைக்க நீட்டறாங்க. அந்த அம்மா ஒன்றிரண்டு கேள்விகள் மண்டையில நச்னு அடிச்ச மாதிரி கேட்டாங்க.

1 என் மகள் இறந்து போயிட்டானு ஆளு மாத்தி ஆளு என்னை வந்து கேட்கிறீங்களே அந்த பையன் வீட்டில் இருப்பவர்களிடம் இப்படிப் பண்ணிட்டானே நியாயமான்னு யாராவது போய் கேட்டீங்களா? அந்த குடும்பத்து ஆட்களை வெளி உலகத்துக்கு ஏன் காட்டலைங்கிற அந்த தாயின் கேள்வி நியாயமாத் தான் தெரியுது.

2. என் மகளைப் பற்றி தப்புத் தப்பா போட்டு பார்வையாளர்களை அதிகரிச்சு சம்பாதிக்கிறீங்களே அப்படியாவது கிடைக்கிற அந்த பணம் உங்களுக்கு அவசியமா? 

3. என் பெண் அந்த பையன் தொந்தரவு பண்றதா சொன்னதும் போலீஸ்ல புகார் கொடுத்தேன். அவன் குடும்பத்து ஆட்கள் புகாரை வாபஸ் வாங்கி விடுங்கள் அவனை வெளி நாடு அனுப்பிடுறோம்னு கெஞ்சி கேட்டுக் கொண்டதால்  வாபஸ் வாங்கினேன். வாங்காதிருந்தால் அவன் இந்நேரம் உள்ளே இருந்திருப்பான் என் மகள் உயிரோடு இருந்திருப்பாளே?! அப்போ இரக்கப்பட்டதல்லவா தப்பாக போய் விட்டது. 

இது ஒரு முறையல்ல. சித்ரா இறந்த போதும் இதே தான் நடந்தது. இன்னும் ஒரு பெண் இறந்தாலும் இதே தான் நடக்கும். 

இறந்தவர்களின் குடும்பத்து ஆட்களை நிம்மதியாக துக்கம் அனுஷ்டிக்க விட வேண்டாமா? இறப்பே பெரும் சோகம். அதை மேலும் குத்திக் கிளற வேண்டாமே!

19 October, 2022

பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் :

புத்தகத்தின் பெயர் : பதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள். ஆசிரியர் : எஸ். ராமகிருஷ்ணன். உயிர்மை பதிப்பகம். விலை ரூ 135/- சத்யஜித் ரே வங்காளத்தின் மிகப் பிரபலமான திரை இயக்குனர். இவர் எடுத்த படங்களில் ஆகச் சிறந்த படம் “ பதேர் பாஞ்சாலி” இதைப் பற்றிய தன் கருத்துகளை எஸ் ரா அவர்கள் பகிர்ந்து கொண்ட புத்தகம் தான் இது. இந்த புத்தகம் வெளி வந்தது 2006 இல். அப்போது சொல்லி இருக்கிறார். கடந்த ஐந்து வருடங்களாக தினம் ஒரு சினிமா பார்த்து விடுகிறேன். ( இன்றும் தொடர்கிறதா சார் இந்த பழக்கம்?) பதினைந்து வருடங்களாக உலக திரைப்பட விழாக்களுக்குத் தவறாமல் சென்று வந்திருக்கிறார். சினிமாவைத் தெரிந்து கொள்ள எடுத்த முயற்சி தான் புத்தகமாக வெளி வந்து இருக்கிறது. ஒரு திரைப்படத்தை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லித் தருகிறது. ஒவ்வொரு திரைப்படம் பற்றியும் ஒவ்வொரு புத்தகம் எழுத வேண்டும் என்பது இவர் ஆசை. அந்த வரிசையில் இது முதல் புத்தகம் என்கிறார்.இந்த புத்தகம் வந்து இப்போது இன்னும் பதினாறு ஆண்டுகள் ஆகி விட்டன. திரைப்படங்கள் பற்றி அவர் எழுதிய வேறு புத்தகங்கள் இருக்கின்றனவா படித்தவர்கள் சொல்லுங்கள். வாசிக்க விருப்பம் உண்டு. பதேர் பாஞ்சாலி என்பதற்கு "சாலையின் பாடல்" என்று பொருள். பதேர் பாஞ்சாலி வந்த புதிதில் சத்யஜித் ரே இந்தியாவின் வறுமையை விற்று பணம் சம்பாதித்து விட்டார் என்ற அவச் சொல் எழுந்தது. ஆனால் அதற்கு ரே பதிலளிக்க மறுத்து விட்டார். அது வரை மனதில் இருந்த ஆங்கில படங்களின் சாகசங்கள் குதிரை மேல் இரட்டை துப்பாக்கியோடு வரும் நாயகர்களை ரசித்தவை. அனைத்தையும் ஒரேயொரு ராட்சத அலை வந்து அடித்து இழுத்துச் சென்றது போல் இருந்தது பதேர் பாஞ்சாலி பார்த்து முடித்ததும்.என்கிறார் ஆசிரியர். பதேர் பாஞ்சாலி கதையின் போக்கினை இரண்டு கதாபாத்திரங்கள் தீர்மானிக்கின்றன. ஒன்று துர்கா இன்னொன்று பாட்டி இந்திரா. துர்கா பால்யம் மாறாத சிறுமி. பாட்டி சாவின் அருகாமையில். இந்த இரண்டு முனைகளுக்கும் இடையில் தான் கதையின் மைய நிகழ்வுகள். பதேர் பாஞ்சாலி கதையை எழுதியவர் விபூதி பூஷண். கதை அப்புவை சுற்றியே நகர்கிறது. ஆனால் திரைப்படம் அப்புவின் அக்கா துர்காவின் விருப்பப்படி நடப்பதாக வருகிறது. //கலை வடிவங்கள் ஒவ்வொன்றும் அதற்கான தனித்துவத்தைக் கொண்டிருக்கின்றன. ஒரு வடிவத்தை இன்னொரு கலை வடிவத்தோடு ஒப்பிட்டுப் பேசவே இயலாது// இதை வாசித்ததும் எனக்கு பொன்னியின் செல்வன் பாகம் 1 பார்த்திட்டு பலரும் படம் கதையைப் போலவே இல்லை என்று எழுதியது ஞாபகம் வந்தது. ஒரு வேளை எஸ். ரா இப்போ இணைய தளத்தில் தீவிரமாக செயல் பட்டுக் கொண்டிருந்தால் பதில் கொடுத்திருப்பாரோ! பதேர் பாஞ்சாலி படத்தின் தயாரிப்பாளராக மேற்கு வங்க அரசின் பொதுப்பணித்துறை இருந்திருக்கிறது. ஆனால் அரசு பிரிண்ட்டை முறையாக பாதுகாக்காமல் விட்டு விட்டது. இதை அறிந்த மெர்சண்ட் ஐவரி, ரேயின் படங்களின் நெகடிவ்களை தான் வாங்கிக் கொள்ள ஏற்பாடு செய்தார். ரேயின் ஆறு படங்களின் உரிமையை பெற்றார். துர்திர்ஷ்டவசமாக அந்த ஆறு படங்களின் நெகடிவ்களும் தீக்கிரையாகின. காட்சிகளின் கரையிலிருந்த படியே என்ற தலைப்பில் மிகச் சிறப்பான ஒரு பகுதி. வெகு ஜன சினிமாவில் காட்சிப் படிமங்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்கிறார். ஆனால் கலைப் படங்கள் கதையின் மையத்தை ஒரு குறியீடாக மாற்றி கதையின் ஊடாகவே வெளிப்படுத்தும். அதற்கு உதாரணமாக அடூர் கோபால கிருஷ்ணனின் “எலிப்பத்தாய”த்தை சொல்கிறார். சத்யஜித் ரே தனக்கு உள்ள ஒரு பழக்கத்தை ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். ஏதாவது ஒரு நாவல் திரைப்படமாகப் போவதாக செய்தி வந்தாலே அதற்கு இவர் திரைக்கதை எழுதி விடுவாராம். பிறகு படம் வெளியான பிறகு இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை ஆராய்ந்து பார்ப்பாராம். இந்த பயிற்சி தான் இவரை திரைக்கதை ஆசிரியராக்கியது என்கிறார்.. திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுத முயற்சிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த டிப்ஸ் என நான் நினைக்கிறேன். ஒரு முக்கிய விஷயம். படத்தின் இசையமைப்பாளர் பிரபல சிதார் மேதை ரவி சங்கர்.இந்த புத்தகம் வாசித்து முடித்ததும் பதேர் பாஞ்சாலி என்னும் வங்கப் படம் பார்க்கும் ஆர்வம் வந்தது. தேடினேன். யூட்யூபில் இருக்கிறது சப் டைட்டிலுடன்.. உங்கள் குழந்தைகள் பேரக் குழந்தைகளுக்கும் காட்டுங்கள். அப்பொழுது நாம் எவ்வளவு வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது புரியும். வாழ்வின் அருமை தெரியும்.

18 October, 2022

 சில பெண்களுக்கு ஒரு பழக்கமுண்டு நான் கவனித்திருக்கிறேன். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை வந்தால் எப்போதுமே குற்றத்தை மனைவி பக்கமே சுமத்துவது.

 (உ.ம்)  ஆக ஒரு பெண் ரொம்ப அமைதியா யாரிடமும் அதிகம் பேசாதவளாக இருந்தால் அவள் கணவன் செய்யும் தவறுகளுக்கு காரணம். "பொண்ணுன்னா கலகலப்பா இருக்கணும். இப்படி உம்மணாமூஞ்சி மாதிரி இருந்தா இப்படி தப்பெல்லாம் நடக்கத் தான் செய்யும் " னு சொல்வாங்க. 

இதுவே பெண் கலகலப்பா பேசுறவளா இருந்தா அதை ஒரு குற்றமா சொல்வாங்க. மொத்தத்தில ஆண் செய்யும் தவறுகளுக்கு பெண் மட்டுமே காரணம் எனக் கொண்டு வருவாங்க.இதைச் சொல்வது அனேகமா பெண்கள் தான்.

 ஆண்களும் மனிதர்கள் தானே. தவறு செய்வது இயல்பு தானே!  இதில் ஒரு சைக்காலஜி கவனிக்கணும். அவங்க சொல்ல வர்ரது என்னன்னா "அந்த இடத்தில் நான் இருந்திருந்தா இந்த தப்பு நடந்திருக்காதுன்னு தன்னை உயர்வு படுத்தறதுக்காக பெண்ணை குற்றப்படுத்துறாங்க. 

அதை சம்பந்தப்பட்டவங்களிடமே சொல்றாங்க. இது எது வரை நடக்கும்னா சொல்பவர் வீட்டில் ஒரு பிரச்னை வந்து அது கை மீறிப் போய் தன்னால் சமாளிக்க முடியாமல் போகும் வரை நடக்கும். முதல்ல அடுத்தவர் வீட்டுப் பிரச்னையில் கருத்து சொல்வதை விடணும். அப்படியே சொன்னாலும் அது நேர்மையான கருத்தாய் இருக்கணும். என்ன நாஞ் சொல்றது?

13 October, 2022

 Netflix இல் "The Holiday " னு ஒரு அற்புதமான படம் பார்த்தேன். டைரக்‌ஷன் : Nancy Meyars. 

ஒரு பெண் இயக்குநர் என்பதால் பெண்ணின் உணர்வுகளை மிக நன்றாக காட்டி இருக்கிறார். 

வாழ்வில் ஏமாற்றத்தை சந்தித்த இரண்டு பெண்கள். ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லிக் கொண்டே இன்னொரு பெண்ணை மணக்கத் தயாராகும் ஒருவன். ஒரு பார்ட்டியில் தன் காதலனின் திருமண செய்தி கேட்டு அதிர்ந்து போகிறாள். அதற்கு கொஞ்ச நேரம் முன்பு கூட அவளிடம் தன் காதலை சொல்லி போனவன். அவள் பெயர் ஐரிஸ். நமக்கு ரொம்ப அறிமுகமான டைட்டானிக் பட ஹீரோயின் கேத் வின்ஸ்லட் தான் ஐரிஸாக நடிக்கிறார்.

மற்றொரு பெண் தன் கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு அவனுடன் சண்டை இட்டு வீட்டை விட்டு விரட்டுகிறாள். அவள் பெயர் அமென்டா. ஐரிஸ் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். அமென்டா பெரும் பணக்காரி. 

துயரத்தில் இருக்கும் இருவரும் கிறிஸ்மஸ் விடுமுறையை வேறு இடத்தில் கழிக்க முடிவு செய்து இன்டர்நெட் மூலம் சந்தித்து அவர்கள் வீடுகளை ஸ்வாப் செய்து கொள்கிறார்கள். அதாவது இரண்டு வாரம் ஒருவர் வீட்டில் அடுத்தவர் இருப்பது. 

அமென்டாவை ஐரிஸின் சகோதரன் சந்திக்கிறான். அன்பு செய்கிறான். ஐரிஸ் வீட்டின் பக்கத்தில் ஒரு முதியவர் பல ஆண்டுகளுக்கு முன் பிரபல இயக்குநர். முதுமையின் கோளாறுகளால் தனிமையில் வாடுபவர். அவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்படுகிறது. 

இறுதியில் படம் சுபமாக முடிகிறது. ஆங்கில படங்களில் பெண்கள் அழுது அவ்வளவாக பார்த்ததில்லை. இந்த படத்தில் பெண்ணோடு சேர்ந்து ஆணும் கண் வேர்க்கிறான்.

 பின்னணியில் பனி படர்ந்த காட்சிகள் கண்ணுக்கு வெகு குளுமை. 

ஐரிஸ் அமென்டாவுடனும் தன் அண்ணனுடனும் பேசும் போது ஒருவரை ஒருவர் ஹோல்ட் செய்து அடுத்தவருடன் பேசுகிறார். அதான் கான் கால் போடலாமே என நினைத்து வந்தால் ஒரு கடையில் படங்களின் CD பார்க்கிறார்கள். அதில் ஒன்று JAWS படம். சரி தான் எப்ப வந்த படம்னு போய் பார்த்தால் 2006 இல் வெளியான படம்.

பெண்கள் உலகில் எல்லா பகுதியிலும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள் போலிருக்கிறது. அதீத காதல் அது முறியும் போது அதீத வெறுப்பு. இரண்டுக்கும் நடுவில் உணர்வை நிறுத்த தெரிந்தால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.