Bio Data !!

22 February, 2023

நாவலின் பெயர் : தளிர் ஆசிரியர். : நஸீமா ரசாக் மெட்ராஸ் பேப்பர் பதிப்பகம். விலை : ரூ 310/- ஆசிரியரின் உலகம் குழந்தைகளால் சூழப்பட்டது. அடுத்த தலைமுறைக்கு படிப்பும் சத்தான ஆரோக்கியமான உணவும் கொடுப்பது போலவே உணர்வுகளும் எண்ணங்களும் செழுமையாக ஆக்கப்பட வேண்டும் என்கிறார் ஆசிரியர். இந்த புத்தகம் குழந்தைகளின் உலகுக்கு நம்மையும் அழைத்துச் செல்லும் என்று நம்புவதாக சொல்கிறார் . அழைத்துச் செல்கிறது. கதை தொடங்கும் போது துபாயின் சான்ட் சின்றோமோடு தொடங்குகிறது. அதை ராஜஸ்தானில் அனுபவித்தவள் என்ற வகையில் ஆரம்பமே என்னை விறுவிறுப்பாக உட்கிரகித்துக் கொண்டது. அங்கே வார விடுமுறை வெள்ளி . அன்று கூலி வேலைக்கு நாடு விட்டு நாடு வந்திருக்கும் பலரும் சில இடங்களில் கூடுவார்கள் . காசு செலவு செய்து வேறு எங்கும் செல்ல முடியாததால் பஸ் ஸ்டாண்ட் பக்கமிருக்கும் புல்வெளிகளில், சாலைகளுக்கு நடுவில் இருக்கும் புல்வெளிகளில் நிறைந்து விடுவார்கள் என்கிறார். தன் குடும்பம் முன்னேற தம் வாழ்வை பலியாக்கும் ஒரு குழு நம் கண் முன் வருகிறது. பல நாடுகளிலும் இருக்கும் கல்லூரி தோழிகள் ஸ்கைப்பில் இணைந்து பேசுகிறார்கள். தங்கள் குழந்தைகளோடு அவர்கள் சந்திக்கும் முரண்பாடுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். நல்ல ஐடியாவாக தோன்றுகிறது கல்லூரி தோழிகளிடம் நம் பிள்ளைகளின் குறைகளைப் பற்றி பேசுவதில் ஈகோ இருக்காது . பர்வீன் கதையின் நாயகி அவள் வீட்டு வேலைகளை சிறப்பாக செய்து, தனது தோழிகளுடன் தொடர்பில் இருந்து, இளம் குழந்தைகளுக்கு கவுன்சிலிங்கும் கொடுக்கிறார் ஒவ்வொரு பெண்ணும் நாம் பர்வீன் போல இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் கதாபாத்திரம் . குளிர் மாதங்களில் அமீரகம் நோக்கி புலம் பெயர்ந்து வரும் பறவைகள் பற்றிய விவரிப்பு வரும்போது நமக்கும் ஒரு சரணாலயத்தில் இருக்கும் உணர்வு வருகிறது. கடலில் குளிப்பதில் இருக்கும் புத்துணர்ச்சி பாலைவன மணலிலும் இருக்கிறது என்கிறார்கள் . "சில நேரங்களில் பெற்றோர்களின் தவிப்பு கடுமையான கண்காணிப்பாக மாறும் போது அது பிள்ளைகளுக்கு வேதனையை தந்து விடுகிறது" உண்மைதான் சமூக வலைதளங்களில் குழந்தைகளை சூறையாடும் கயவர்களும் இருப்பதால் இது அவசியம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும் கதையில் 124 வது மாடியில் இருப்பதாக வந்தது இத்தனை உயரம் ஆடிகள் எப்படி கட்டுறாங்க என்ற ஆச்சரியமும் துருக்கியில் நடந்த நிகழ்ச்சியின் ஞாபகமும் ஒருசேர எழுந்தது அந்தக் கட்டடத்தில் மொத்தம் 142 மாடிகள் என்கிறார் . கதை முடியும் வரை நம்மையும் துபாயிலேயே இருத்தி வைத்துக் கொள்கிறார் ஆசிரியர். தாய்மை ததும்பும் கதை வாசிப்பதற்கு இதமாகத் தான் இருக்கிறது.

07 February, 2023

புத்தகத்தின் பெயர் : ஐந்து நெருப்பு ஆசிரியர் : ஜெய மோகன். விஷ்ணுபுரம் பதிப்பகம். விலை : ரூ 280/- ஆசிரியர் தனது பன்னிரண்டாவது வயதில் இருந்து எழுதி வருகிறார். இவர் எழுதிய “ரப்பர்” என்னும் நாவல் அமரர் அகிலன் விருது பெற்றது. இன்னும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் நூறாண்டு நவீனத் தமிழிலக்கியத்தின் மாபெரும் இலக்கிய முயற்சி என்று பாராட்டப் பட்டது. மஹாபாரதத்தை “வெண்முரசு” என்ற பெயரில் உலகின் பெரிய இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக எழுதி இருக்கிறார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார். இது ஒரு சிறு கதைத் தொகுப்பு. இதைப் பற்றி ஆசிரியரே சொல்வது. “ தன்னை சமூக உறுப்பினன் என்று உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னைத் தனி மனிதனாக உணர்கிறது. தன் நலத்தை தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறி செல்கிறது. அவ்வண்ணம் மீறிச் செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திய நிறைவு அது. குற்றத்தின் தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை” மொத்தம் பத்து சிறுகதைகளின் தொகுப்பு. இதில் தலைப்புக்குரிய “ஐந்து நெருப்பு என்னும் கதையை வாசிக்கும் போது கண்ணுக்கு முன் பார்ப்பது போலவே இருந்தது. பொதுவாகவே சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் கண் முன் நிகழ்வது போலவே இருக்கும். ஆனால் இதில் இன்னும் சிறப்பு ஏதோ தெரிகிறதே என்று பார்த்தால் இந்த கதையை அடிப்படையாக வைத்துத் தான் சிம்பு நடித்த “ வெந்து தணிந்தது காடு” என்னும் படத்தை எடுத்திருக்கிறார்கள். அந்த திரைப்படத்தின் திரைக்கதை ஜெயமோகன் அவர்கள் தான். அதில் எரியும் முள்ளுக் காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் இளைஞன் வீட்டுக்கு வந்து படுக்க முடியாமல் தவிக்கும் போது அவன் தங்கை ஒவ்வொரு முள்ளாக எடுத்து மஞ்சள் தடவும் போது கண்ணீர் வரும். அத்தனை கதைகளிலும் காவல்காரர்களின் பங்கு உண்டு. “பிறசண்டு” என்னு,ம் முதல் கதையில் வயதானவர் ஒருவர் இரவில் எழுந்து வரும் போது உள்ளே மாடிப்படியில் அமர்ந்திருக்கும் திருடன் அவர் வீட்டு மனிதர் என்று நினைத்து கேட்கும் கேள்விக்கும் அமைதியாக பதில் சொல்வதும் பின் மாட்டிக் கொண்ட பிறகு காவல் நிலையத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கு,ம் சம்பாஷணையும் நகைச்சுவை நிறைந்தது. சுக்ரன் என்னும் கதையில் “ அழகப்பன் ஜெயிலு விட்டு வந்ததுமே டிபி வந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலே செத்தான். அப்பல்லாம் ஜெயிலுக்கு போனாலே டிபி வந்திரும்” என்று வருகிறது. இன்று அது மாறி இருக்கும் என்று நம்புகிறேன். நான் ரசித்தது. பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் மனிதர்களின் பெயர்களையும் நினைவு வைத்து காவல் அதிகாரிகளுக்கு குற்றவாளிகளை பிடிக்க உதவும் ஒரு முதிய ஓய்வு பெற்ற காவலர் சொல்வது” பேருகளை ஒரு தடவைக்கு பத்து தடவை சொல்லிக்கிடுவேன். அப்டியே மனசிலே பதிஞ்சிரும். நான் இதெல்லாம் பெயரா நினைச்சுக்கிடுறதில்லை. அப்டியே முகங்களா உயிருள்ள ஆட்களா, நான் நேரிலே பழகினவங்களா நினைச்சுக்கிடுவேன்” ஒரு கதையை வாசிக்கும் போது கூட தொடக்கத்தில் வரும் பெயர்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு நாம் சந்தித்த நபரோடு தொடர்பு படுத்தி கொண்டால் கதையோடு ஒன்ற உதவும்.. இழை என்றொரு கதை. சர்க்கஸில் பணி புரிபவர்களைக் களமாகக் கொண்ட கதை. சஸ்பென்ஸ் கடைசி வரை அழகாக நகர்த்தப் பட்டு இருக்கிறது. விருந்து என்ற கதையில் தூக்குத் தண்டனைக் கைதி சாமிநாத ஆசாரியிடம் அவர் சாகு முன் நாமும் ரெண்டு வார்த்தை பேசி விட வேண்டும என்ற ஆசை எழுவதை தவிர்க்க முடியாது. ஏழாம் கடல் என்ற கதையில் பிள்ளைவாளுக்கும் வியாகப்பனுக்கும் உள்ள நட்பு வித்தியாசமானது. ஆனால் கதை முடிவின் காரணம் விளங்கவில்லை. பிள்ளைவாள் கிடைத்த முத்தை பற்றிய விஷயத்தை ஏன் நண்பனிடம் சொல்லவே இல்லை. இது தவிர “ ஏழாவது” “அறமென்ப”” “கூர்” “ பேசாதவர்கள்” என நான்கு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதமான கதைக்கரு. ஆசிரியரிடம் ஆயிரமாயிரம் கதைக் கருக்கள் இருக்குமென்று தோன்றுகிறது.

03 February, 2023

“ராங்கி” என்றொரு தமிழ்படம் நெட்ப்ளிக்ஸில் பார்த்தேன். படத்தின் ஹீரோ த்ரிஷா. ஆம் படத்தின் முக்கிய கதாபாத்திரம் த்ரிஷா தான். ஏ.ஆர்.முருகதாஸின் கதைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் : M. சரவணன். சோஷியல் மீடியாவின் ஆபத்தை அப்பட்டமாக சொல்லும் படம். ஆனால் சோஷியல் மீடியாவில் இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கும் இருக்கும் ஆபத்தை சொல்லும் படம். ஆன்லைன் மீடியாவில் ரிப்போர்ட்டராக பணி புரியும் தையல் நாயகி.யாக த்ரிஷா கலக்கி இருக்கிறார். அவள் அண்ணன் மகள் சுஷ்மிதா பள்ளி மாணவி. அவளுக்கு முக நூல் கணக்கு கிடையாது. ஆனால் அவள் உடன் படிக்கும் மாணவி தான் அழகாக இல்லாததால் தனக்கு நண்பர்கள் அதிகம் முக நூலில் இல்லை என சுஷ்மிதாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி ஒரு கணக்கு தொடங்கி தன்னுடன் சாட் செய்பவர்களுடன் அத்து மீறி நடந்து கொள்கிறாள். சாட் செய்யும் நண்பர்களில் ஒருவன் அவளுடைய ஆடை இல்லா முகம் இல்லா படத்தை அவள் தந்தைக்கு அனுப்ப தனது மகள் படம் என்ற அச்சத்தில் அந்த விபரீத விஷயம் த்ரிஷா வுக்கு தெரிவிக்கப் படுகிறது. அந்த காரியத்தை மிகவும் துணிச்சலாக கையாள்கிறார் தையல் நாயகி. ஒரு நிலையில் “ நான் லோக்கல்ல ஒரு பிரச்னையை உன்னிடம் கொண்டு வந்தால் அதை இன் டர்நேஷனல் பிரச்னையாக்கி விட்டாயே என்று அண்ணன் ஆதங்கப் படுகிறார். முக நூலின் ஆபத்தை மிக அழுத்தமாகவும் அதிலும் முக்கியமாக பெண்கள் எத்தகைய மன தைரியத்துடன் கையாள வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். பெண்களின் பிரச்னையையும் உலக அரசியலையும் அழகாக கொண்டு இணைத்திருக்கிறார்கள். வித்தியாசமான முயற்சி. த்ரிஷா கதா நாயகி. கதாநாயகன் படத்தில் இல்லை. இடையிடையே இப்படிப் பட்ட துணிச்சலான முயற்சியும் தேவையாகத் தான் இருக்கிறது. த்ரிஷா நடிப்பில் முதிர்ச்சியும் சண்டைக் காட்சிகளில் சுறுசுறுப்பையும் காட்டி இருக்கிறார். வறண்ட பாலைவனத்தில் தீவிரவாதக் கும்பலோடு இருக்கும் ஆலிம் மனத்தில் முகிழ்க்கும் மென் காதலும் அது அவனுக்கு கொடுக்கும் பரவசமும் அழகாக காட்டப் பட்டு இருக்கிறது. பெண்களை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தும் நியாயமற்ற முறை மாற வேண்டும். அதற்கு இது போல் பல படங்கள் வர வேண்டும்.

02 February, 2023

நான் உறுப்பினராக இருக்கும் “வாருங்கள் படிப்போம்” குழுவிலிருந்து ஒரு ஸூம் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார்கள். இப்பொழுது ஊரெல்லாம், உலகமெல்லாம் உரக்க ஒலித்துக் கொண்டிருக்கும் CHATGPT ஐப் பற்றி அதில் அதிக அளவில் முதலீடு செய்திருக்கும் மைக்ரோ சாப்ட்டின் இயக்குனர் மனோஜ் சிசில் விளக்கம் அளித்தார். எங்கள் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். தற்போது கூகுளில் நமக்குத் தேவையான தகவல்களை search engine மூலம் கண்டு பிடித்துக் கொள்கிறோம். இது இன்னும் பல செயல்களை செய்து விடுகிறது. உதாரணமாக ஒரு மாணவனுக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரை வேண்டுமென்றால் அது கட்டுரையாகவே தயாரித்துக் கொடுத்து விடுகிறது. இன்னும் தகவல்களை அதிகப்படுத்த வேண்டும் என்றால் அதற்கேற்ற கேள்விகளைக் கேட்டு மெருகேற்றிக் கொள்ளலாம். இது பரிசோதனை முயற்சியில் தான் இருக்கிறது. சிக்கல்கள் வர வர சரி செய்து மெருகேற்றிக் கொள்ளும். இந்த இடத்தில் எல்லோருக்கும் ஏற்பட்ட பொதுவான சந்தேகத்தை நண்பர் ஒளிவண்ணன் கேட்டார். ஒரு வகுப்பின் எல்லா மாணவர்களும் இதை பயன்படுத்தி ஒரு கட்டுரை தயாரித்து ஆசிரியரிடம் கொடுத்தால் எல்லாம் ஒரே மாதிரி இருக்குமே. அது மாணவர்களை மதிப்பிட எப்படி உதவும் என்றார். அதற்கு நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்றார் போல் கட்டுரையும் வேறுபடும் என்றார். பதிப்பக துறையில் இதன் பயன்பாடு அதிகம். பிழை திருத்தம் இதன் மூலம் செய்து விடலாம். பிழையில்லாமலும் வேகமாகவும் செய்து முடிக்கும். உலகின் பல நாடுகளின் மொழிகளில் மொழி பெயர்க்கலாம். அது மிகவும் உதவும். பிற நாடுகளின் சிறந்த நாவல்களை தமிழில் மொழி பெயர்த்து படிக்கலாம். தமிழின் சிறந்த படைப்புகளை பிற மொழிகளுக்கு சுலபமாக கொண்டு செல்லலாம்.. இப்பொழுது பயன்பாட்டில் speech to text என்ற ஒன்று இருக்கிறது. ஆனால் அதில் வருவதை பிழை திருத்துவது மிகப் பெரிய வேலையாக இருக்கிறது. ஆனால் CHATGPT யில் ஒரு மொழியின் பல உச்சரிப்புகளையும் சரியாக புரிந்து கொள்ளும் வகையில் வசதி செய்து தரப் பட்டிருக்கிறது என்றார். எனக்கு ஏற்பட்ட ஒரு சந்தேகத்தைக் கேட்டேன். இப்பொழுதே நம் மூளையின் செயல் திறத்தில் மிக குறைந்த பகுதியையே பயன் படுத்துகிறோம் என்கிறார்களே. அதிலும் இப்படி ரெடிமேடாக கேட்பதையெல்லாம் கொடுத்து விட்டால் மூளையின் திறன் இன்னும் குறைந்து விடாதா? என்றேன். ஒரு இயந்திரம் மனிதனின் எண்ணங்களை மேம்படுத்த தான் பயன்படுமே ஒழிய மனிதனுக்கு மாற்றாக முடியாது என்றார். டெக்னாலஜி வளர்ச்சி என்பதை நிறுத்த முடியாது. அதோடு சேர்ந்து நாமும் நம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு தான் நஷ்டம் ஏற்படும் என்றார். அதற்கு உதாரணமாக புகைப்பட பிலிம் நிறுவனமான கோடக் முழுமையாக அழிவை சந்தித்ததை சொன்னார். எனக்கு கணினி வந்த புதிதில் எங்கள் துறையில் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் படிக்க மனமில்லாமல் தெரிந்து கொள்ளாமல் இருந்த போது அவர்கள் சந்தித்த சிரமங்கள் நினைவுக்கு வந்தது. அந்த சமயத்தில் படிப்பறிவில்லாதவர்கள் (illiterates) போல கணினி படிப்பறிவில்லாதவர்களூம் (computer illiterates)இருந்தார்கள்.. இருபது ஆண்டுகளில் எல்லா வேலைகளுக்கும் கணினி அறிவு கட்டாய தேவை என்றாகி விட்டது. எந்த ஒரு வளர்ச்சியிலும் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும். அன்னப் பறவை போல நமக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள நாம் , முக்கியமாக வளரும் தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும். அதை வீட்டில் இருக்கும் பெரியவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.. ஒரு புது விஷயத்தைத் தெரிந்து கொண்ட திருப்தி ஏற்பட்டது.

01 February, 2023

நாவலின் பெயர் : சஞ்சாரம் ஆசிரியர் : எஸ். ராம கிருஷ்ணன் தேசாந்திரி பதிப்பகம். விலை : ரூ 340/- எஸ். ரா மல்லாங்கிணறு கிரமத்தில் பிறந்து வளர்ந்து முழு நேர எழுத்தாளராக சென்னையில் வந்து குடியேறுகிறார். பல சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள், திரைப்பட நூல்கள், எழுதி உள்ளார். குழந்தைகள் நூல்கள், உலக இலக்கிய பேருரைகள் வரலாறு, நாடகத் தொகுப்பு, நேர் காணல் தொகுப்பு, மொழி பெயர்ப்பு நூலகளென இவர் எழுத்து விரிந்து கொண்டே செல்கிறது. இந்த நாவல் நாதஸ்வரக் கலைஞர்கள் பற்றியது. சஞ்சாரம் என்ற பெயருக்குப் பொருத்தமாய் கதை மாந்தர்கள் ஒவ்வொறு ஊராய் செல்வது பற்றிய கதை. அந்தந்த ஊர்களின் பெயரே அந்தந்த அத்தியாயத்தின் தலைப்புகளாக வைத்துள்ளார். ஒவ்வொறு அத்தியாயத்தினையும் க்ன்ணி போல் இணைத்து கதையை நகர்த்திச் செல்கிறார். புது விதமான நடையாக இருக்கிறது. ரத்தினம் , பக்கிரி இன்னும் இருவருடன் ஒரு கோயில் திரு விழாவுக்கு நாதஸ்வரம் வாசிக்கப் போகிறார்கள். அங்கே ஒரு தகராறு உண்டாகி ரத்தினம் , பக்கிரி இருவரையும் மரத்தில் கட்டி வைக்கிறார்கள். பூசாரி யாருக்கும் தெரியாமல் கட்டவிழ்த்து விட பக்கிரி கோபத்தில் கோவில் பந்தலுக்குத் தீ வைக்க இருவரும் தப்பிக்கிறார்கள். கண்ணுசாமி என்றொரு நாயனக்காரர். ஊர் எதிர்ப்பை மீறி செருப்பு தைக்கும் கருப்பையாவிற்கு நாதஸ்வரம் வாசிக்க சொல்லித் தருகிறார். பக்க வாத்தியக் காரர்கள் உடன் வாசிக்க மறுத்து விடுகிறார்கள்.. எந்த கோயிலுக்குள்ளும் அனுமதி இல்லை. த்ன்னால் இப்படி ஆகி விட்டதே என்று கருப்பையா தூக்கிட்டுச் சாகிறார். கொஞ்ச நாளிலேயே கண்ணுசாமி காலரா வந்து இறந்து போகிறார். அருமையான கதா பாத்திரங்கள். சாமிநாத பிள்ளை என்ற ஒரு கலைஞருக்கு கொடுக்கப்படும் மரியாதையை விவரிப்பதைப் பார்க்கும் போது மலைப்பாய் இருக்கிறது. அந்தக் காலத்தில் கலை எவ்வளவு மதிக்கப்பட்டு இருக்கிறது. எவ்வளவு கம்பீரம் காத்திருக்கிறார்கள் கலைஞர்கள். மக்களும் இன்றைப் போல் அலைபேசியில் மூழ்காமல் ரசித்திருக்கிறார்கள். . எவ்வளவு கம்பீரம் காத்திருக்கிறார்கள் கலைஞர்கள். கலைஞர்களைக் கவுரவித்து கையில் இருப்பதை எல்லாம் அள்ளிக் கொடுத்த ஜமீன்ககளின் பரிதாப நிலையும் அப்போது கூட குறையாத அவர்கள் கம்பீர நடையையும் அழகாக சொல்லி இருக்கிறார். இடையிடையே பல சிறு கதைகளைச் சொல்கிறார். கரிசல் காட்டில் மழையின்றி போனதற்கு ஒரு கதை சொல்லப் படுகிறது. கரிசல் நிலத்து மக்களுக்கு கோபம் அதிகம். ஆனால் அது மனதுக்குள் உறைந்து போகாது. ஒரு காலத்தில் கரிசல் காட்டு ஆண்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்களாம். ஆனால் இப்போது ஆழ் துளை கிணறு போட்டு வீட்டுக்கு வீடு தண்ணீர் வந்து விட்டதால் அது மாறி விட்டது என்கிறார். அவர்கள் இருட்டுக்கு பழகிய கண்களைக் கொண்டவர்கள். அதனால் பயமற்றவர்கள் என்கிறார். கரிசல் மண்ணில் வீசும் ஒரு வகைக் காற்றுக்குப் பெயர் “வலியன்”. இந்த பெயர் வரக் காரணம் வலி மிகுந்தது. வலியன் என்றொரு ஆட்டுக்காரன். தன் ஆடுகளை ஒரு இடத்தில் விட்டு விட்டு தண்ணீர் தேடிச் செல்கிறார்ன். வந்து பார்த்தால் மொத்த ஆட்டையும் காணோம். அவன் தூக்கிட்டு மரித்துப் போகிறான். வேகமாக வீசும் காற்று ஆடுகளைத் தேடி அலையும் வலியனைப் போல் இருப்பதால் அந்த பெயர் என்கிறார். கில்ஜி மாலிக்கபூர் இருவரின் ரகசிய வாழ்வு ஒரு கதையாக சொல்லப் படுகிறது. வட இந்தியாவில் ஏன் நாதஸ்வரம் வாசிக்கப் படுவதில்லை என்பதற்கு ஒரு கதை. தன்னாசி என்ற கண் தெரியாத பையனுக்கும் சரஸ்வதி என்னும் பெண்ணுக்கும் இடையேயான குழந்தை நட்பு அவ்வளவு அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் பின்னாளில் தன்னாசி ஒரு கொடூர சைக்கோ போல் நடக்கத் தொடங்கி விடுவார். நான் ரசித்த வரிகளைச் சொல்லாமல் பதிவு நிறைவு பெறாது. “ கல் அடுப்பில் எரிந்து கொண்டிருந்த நெருப்பு பால் குடிக்கும் குட்டி ஆடு போல பாத்திரத்தை முட்டுவதும், அடுப்பை விட்டு தலையை வெளியே எட்டிப் பார்த்து அடங்குவதுமாய் இருந்தது” “ விசித்திரமான மனிதர்கள் வலியூட்டும் நினைவுகள் மறக்க முடியாத பயம் இவை தான் நினைவில் எஞ்சி இருக்கின்றன” வாசிக்க வேண்டியவை என்று ஒரு வரிசை வைத்திருந்தால் அதில் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “சஞ்சாரத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.