Bio Data !!

25 October, 2020

 அனிதா

அனிதாவுக்கு வயது 60+ என்னா.......துவா? பிறக்கும் போது வைத்த பெயர் அறுபது வயதானாலும் அதே பெயர் தானே! வேணுமானால் பிள்ளைகள் பெயரைச் சொல்லி அம்மான்னு சேர்த்து சொல்லலாம். வேணாம் நாம அனிதான்னே வச்சுப்போம். 

அன்று அனிதா கொஞ்சம் கட்டுப்பாடில்லாமல் தான் சாப்பிட்டு விட்டாள். மதியம் சிக்கன் பிரியாணி. மாலை வீட்டில் செய்த ஒரு ஸ்வீட். இரவு இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்கள். அதுக்கப்பறம் தான் வந்தது வில்லங்கம். ஸ்வீட் செய்து மிச்சமிருந்த சுகர் சிரப்பைத் தொட்டு பிரட்டை சாப்பிட்டு வைத்தாள்.

இரவு நாலைந்து முறை பாத்ரூம் போக வேண்டி வந்ததுமே தன் சுகர் அளவு கூடி விட்டது எனத் தெரிந்து கொண்டாள். தினம் எழுந்ததும் சுமார் ஐம்பது பேருக்கு குட் மார்னிங் மெசேஜ் அனுப்புவாள். அனுப்பி விட்டு அன்று மறுபடியும் படுத்தாள். ஒரு அரை மணி நேரம் கழித்து எழுந்து தன் படுக்கையை சரி செய்ய நினைத்த போது இடது கை சிறிதளவு தன் கட்டுப்பாட்டில் இல்லாதது போல் பட்டது. நடக்கும் போது ஒரு சின்ன தடுமாற்றம். மெல்ல தன் மகளை எழுப்பி அனேகமாக டாக்டரிடம் செல்ல வேண்டி இருக்கும் எனச் சொன்னாள். 

பிபி செக் செய்த போது 180 எனக் காட்டியது. அன்று வியாழக்கிழமை என்பதும் தன் தந்தை பல வருடங்களுக்கு முன் இதே நிலைமையைச் சந்தித்ததும் நினைவுக்கு வந்து கொஞ்சம் ஆடித் தான் போனாள்.

டாக்டரிடம் ஃபோனில் தன் நிலைமையைச் சொன்னதும் ஃபோனை மகளிடம் கொடுக்கச் சொன்னார். மகள் கண்ணில் தண்ணீர் துளிர்க்க அந்த இடம் விட்டு நகர்ந்ததும் பதறினாள். பேசி வந்த மகளிடம் "சொல்லம்மா எனக்கு என்ன?" என்று கேட்டாள். ஒன்றுமில்லை என்றவளிடம் "தைரியமாக சொல். எனக்கு ஹார்ட் அட்டாக்கோ பிரெயின் அட்டாக்கோ சின்ன அளவில் வந்திருக்கிறது என சந்தேகப்படுகிறேன்" என்றாள். மகளும் "ஆமாம்மா சின்ன அளவில் பிரெயின் இன்ஞ்சுரி இருக்கலாம் என சந்தேகப்படுகிறார். CT Scan எடுக்கணும். மருத்துவமனை வரச் சொல்கிறார்"என்றாள். 

அனிதாவுக்கு அவள் தாய் நோய்வாய்பட்ட போது மருத்துவர் "ரொம்ப சீக்கிரமா கண்டு பிடிச்சிட்டீங்க. அதனால பராலிடிக் ஆகல" என்று சொன்னது நினைவு வந்தது. தானும் இரண்டு மாடி இறங்கிப் போனால் ஏதும் சிக்கலாகலாம் என்று நினைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கச் சொன்னாள். அதற்குள் ஒரு பதினைந்து முறையாவது வாந்தி எடுத்திருந்ததால் மிகப் பலவீனமாக இருந்தாள். 

மருத்துவமனையில் சுகர் பிபி மிக அதிகமாக இருந்ததாகவும் CT Scan , ECG சாதாரணமாக இருப்பதாகவும் சொல்லி மருத்துவமனையில் தங்க வைத்தார்கள். அவளுடைய தோழிகள் பலருடைய உதவியாலும் மகளுடைய அன்பான கவனிப்பாலும் நலமாகி வீட்டுக்கு வந்தாள். 

கண்ணாடியைக் கடக்கும் போது அதனுள்ளிருந்த உருவம் கேட்டது "அனிதான்னு பேரு இருந்தா வயசே ஆகாதுன்னு நினைச்சியா? உனக்கு வயசாகிட்டுது. கவனம்" 

ஆமா இந்த கதையில் அனிதா நான் தான். ஒரு கடினமான கால கட்டத்தை கடந்த வாரம் கடந்து வந்தேன். இப்பொழுது நலமாக இருக்கிறேன். கொரோனா காலத்தில் நோய் வாய் பட்டால் உயிர் பயம் வருகிறது. கவனமாக இருப்போம்.


20 October, 2020

 புத்தம் புது காலை

அமேசானில் வெளி வந்த படம். ஐந்து தனிக் கதைகளின் தொகுப்பாய் ஒரு படம். ஐந்து படங்கள். ஐந்து இயக்குனர்கள். ஐந்துக்கு மூணு ஓகே.

ஐந்து கதைகளுக்கு ஐந்து பெயர்கள். ஆனால் பெயர்கள் இங்கே அவசியமில்லை. முதல் கதை வயதான (ரொம்ப வயதெல்லாம் இல்லை ஜென்டில் மேன் ஒரு அறுபது தான்) ஒரு ஆணும் பெண்ணும் இளமையில் காதலர்கள் அவர்கள் சந்திக்க முடிவெடுத்து ஒருவர் வீட்டில் இருக்கும் போது 21 நாட்கள் லாக் டவுன் அறிவிப்பு. அதைத் தொடர்ந்த சில நிகழ்வுகள். பொதுவாக எங்கோ நடக்கும் ஒரு விஷயத்தை மீடியா ரசிக்கும் விதமாய் சொல்லும். அது பின் பலருக்கு நடக்கும். இது தானே நடைமுறை. அந்த விதத்தில் இப்பொழுது வயதானவர்களின் தனிமை இப்பொழுது சிந்திக்கப்படுகிறது. கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன் எனக்கு தெரிந்த விஷயம். ஆணுக்கு அறுபது வயது ஓய்வு பெற்று வந்த பணத்தை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுத்தார். மனைவியை இழந்தவர். பேப்பரில் திருமணத்துக்கு அறிவிப்பு கொடுத்து ஒரு விவாகரத்தாகி குழந்தை இல்லாத பெண்ணை திருமணம் முடித்து இன்று வரை சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் பென்ஷன் வாங்குகிறார்கள்.  சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

இரண்டாவது தான் முதல் தரமான படம். MS Baskar நடிப்பில் தூள் கிளப்பி இருக்கிறார். கைகளைப் பின்னால் கட்டிய படியே நடப்பதிலாகட்டும் தன் பேத்தியின் கம்பெனி மீட்டிங்களில் வாலன்டரியாக நுழைந்து பங்கேற்பதிலாகட்டும் பல வருடங்கள் பிரிந்து இருந்த தன் மகளின் குரலைக் கேட்டு நெகிழ்வதிலாகட்டும் பாஸ்கர் அவர்களின் முழுத் திறமையும் சினிமாத்துறையில் பயன்படுத்தப்படவில்லை என்பதே என் ஆதங்கம்

மூன்றாவது படம் எனக்கு என் அம்மாவை நினைவுபடுத்தியது. நாங்களும் மூன்று பெண்கள் தான். கடைசி தங்கை பிந்திப் பிறந்தவள். இங்கே கோமாவில் இருந்த தாய் மீண்டு வருகிறார்கள். என் தாய் பரிதவிக்க விட்டு பறந்து போனார்கள். சுஹாசினி அனுஹாசன் ஸ்ருதிஹாசன் மூவரும் சகோதரிகளாய் அசத்துகிறார்கள்.

நாலாவது ஆன்ட்ரியாவின் பள்ளிக் காதல். பள்ளித் தோழன் டாக்டர். ஒரு இக்கட்டான சூழலில் நண்பனின் வீட்டுக்கு வருகிறாள். நண்பன் வந்த கொஞ்ச நேரத்தில் அவன் மருத்துவம் பார்த்த நோயாளி ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆதலால் அவர் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தகவல். மருத்துவர் மாடியில் படுக்கப் போகும்  போது தன் செல்லை தன் தலகாணியில் பக்கத்திலேயே வைத்து தூங்குகிறார். மருத்துவரே இப்படி செய்யலாமா? சின்ன சின்ன ஓட்டைகளுடன் நிறைவு தராத கதை.

ஐந்தாவது கதையில் கார்த்திக் சுப்புராஜ் பயங்கர ஏமாற்றம் தருகிறார். 

இது படத்தைப் பற்றிய என் கருத்து. பார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். பார்க்காதவர்கள் பார்த்திட்டு சொல்லுங்கள்

13 October, 2020

 குடி குடும்பத்தைப் பிரிக்கும்.

என் இளமைக் காலத்தில் ஆண்கள் சிகரெட் பிடிப்பதும் குடிப்பதும் அதிகம் வழக்கத்தில் இல்லை. இருந்தாலும் யாருக்கும் தெரியாமல் மறைத்துச் செய்வார்கள். சிகரெட் குடிக்கும் போது ஒரு பெண் பேச வந்து விட்டால் கைகளை பின்னுக்கு மறைப்பார்கள். பேச்சு தொடர்ந்தால் மனதுக்குள் திட்டிக் கொண்டேனும் கீழே போட்டு மிதிப்பார்கள். பெண்களும் இந்த பழக்கமிருக்கும் ஆண்களை வெறுத்தார்கள். வேற வழியில்லாமல் கணவனுக்கு இருப்பது தெரிய வரும் போது திருத்த முயன்றார்கள். பலர் வெற்றியும் பெற்றார்கள்.

அடுத்த ஜெனரேஷன் எப்போவாவது குடித்தால் தப்பில்லை. விசேஷங்களில் குடித்தால் தப்பில்லை என விதிகளை மாற்றி எழுதிக் கொண்டார்கள். குடித்திருக்கும் கணவன் தன்னிடம் ஈகோ இல்லாமல் நடப்பதும் தன்னை தேவதை போல் நடத்துவதும் பிடித்துப் போய் இந்த சலுகைகளை கொடுத்துக் கொண்டார்கள். 

அதற்கும் அடுத்த ஜெனரேஷன் அதாவது தற்போதைய டீன் வயதினர் பெண்களும் குடித்தால் தப்பில்லை என விதிகளை திருத்தி எழுதிக் கொண்டார்கள். குடிப்பது பெண் சுதந்திரம் என்று பெருமை அடித்துக் கொள்கிறார்கள். 

நாம் ஆண் பெண் குழந்தைகளை மிகக் கவனமாக கவனிக்க வேண்டிய நேரம் பள்ளி இறுதி ஆண்டுகள். அப்போது தான் பார்ட்டிகளில் பாட்டில்கள் அறிமுகமாகும்.சிறுவனிலிருந்து ஆணாக மாறும் நேரமிது. அவனை ஆண்மை மிகுந்தவனாய் நினைக்க வைக்கும். தன் இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸிலிருந்து வெளி வர உதவுவது போல் மாயத் தோற்றம் காட்டும். தான் விரும்பும் பெண் தன்னை விரும்பாத  வலியைக் குறைப்பது போல் கோர முகம் காட்டும். இப்படிப் பழகிய பின் கல்லூரிக்கு வெளி யூர் போய் விட்டால் வசதியாகப் போய் விடும். நான்கு ஆண்டுகள் சில நேரம் இன்னும் கூடுதலாய் இரண்டாண்டுகள் முடித்து வரும்  போது நம்மால் குழந்தைகளை மீட்க முடியாமல் போய் விடும். அதற்குள் பார்ட்டிகளில் குடித்தது தினப்படி வழக்கமாகி இருக்கும்.

தான் குடிப்பதற்கான காரணங்களைத் தேடச் சொல்லும். தன்னையே நியாயப்படுத்திக் கொள்ளும். குடி முதலில் மூளையைத் தான் வசப்படுத்திக் கொள்ளும். பின் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் முழுத் திறனுடன் இருக்காது. சம்பாதிப்பதில் பெரும் பகுதி குடிக்கே செலவாகும். குடி குடியைக் கெடுக்கும் என்பதை குடும்பத்தைக் கெடுக்கும் என்று தெளிவாக எழுதுங்கள். குடும்பம் சீரழியும். விவாகரத்துகள் பெருகும். அடுத்த தலை முறையும் குடியை பழகும். பின் தலை முறை தலை முறையாய் தொடரும். 

பெண் பிள்ளைகள் குடிக்கத் தொடங்கினால் அடுத்த தலைமுறையே நோய்மைத் தலைமுறையாகும். ஆணும் பெண்ணும் சமமென்று சொன்னாலும் தாய்மை பெண்ணை ஆணை விட உயர்த்தியே வைத்திருக்கிறது. ஒரு பெண் குடிக்கின்ற புகைப்படமோ வீடியோவோ பகிரப்படுகின்ற பொழுது அதை மீண்டும் மீண்டும் பார்க்கின்ற பொழுது அந்த தவறின் தன்மை நீர்த்துப் போகிறது. பகிர்தலை நிறுத்துவோம். ஒரு ஆண் குடிப்பான் என்று தெரிந்தால் நாம் திருத்தி விடலாம் என நினைக்காமல் பெண்களாகிய நாம் திருமணம் செய்ய மறுப்போம். 

சிகரெட்,குடி, போதை இவை எல்லாம் சகோதரர்கள். ஒன்றை அனுமதித்தால் ஒவ்வொருவராய் உள் நுழைவார்கள். அடுத்து பொய் சொல்லுதல் என்னும் சகோதரன் உள் நுழைவான். அவனைத் தொடர்ந்து காமம் நுழையும். கள்ளத் தொடர்பு கொலையிலும் கொண்டு நிறுத்தும். சிகரெட்டை ஓரளவு குறைத்து விட்டோம்.  குடியினால் அரசாங்கத்துக்கு வரும் வருமானம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று சப்பைக்கட்டு கட்டாமல் டாஸ்மாக்குகளை இழுத்து மூடுங்கள். கஞ்சியை குடித்தாலும் கண்ணியமாய் குடிப்போம்.