Bio Data !!

28 November, 2020

 க/பெ ரணசிங்கம்

இது zee 5இல் OTT யில் வெளியான படம். கணவர் பெயர் ரணசிங்கம்.அப்போ மனைவி பெயர் ? அரிய நாச்சி. ரணசிங்கமாக விஜய்சேதுபதியும் அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷும் கலக்கி இருக்கும் ஒரு படம். 

ஐஸ்வர்யா ராஜேஷ் 80 களில் நடிக்க வந்திருந்தால் மிகப் பெரிய உயரத்துக்கு போயிருக்க வேண்டிய ஒரு பெண். நடிப்பு இந்த பெண்ணுக்கு மூச்சு விடுவதைப் போல இயல்பாக வருகிறது. 

இவர்கள் இருவருக்குமிடையே இழையோடும் காதல் மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அதையும் அழகாக எடிட் செய்து பரிசுப் பொருளின் மேல் அங்கங்கே ஜொலிக்கும் ஜிகினாத் தாள் போலவும் பாயாசத்தில் மிதக்கும் முந்திரிப் படகு போலவும் தந்த எடிட்டரை சிறப்பாக பாராட்ட வேண்டும். 

வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவன் இறந்த செய்தி அறிந்த அவன் உடலைப் பெற ஒரு பெண் தனியாகப் போராடுவதே கதை. அரசு அலுவலகங்களின் நடைமுறை மெத்தனத்தை மிக இயல்பாக காட்டி இருக்கிறார்கள். 

இடுப்பில் குழந்தையை சுமந்த படி டெல்லி ரோடுகளில் நடக்கும் ஒரு பாவப்பட்ட பெண்ணுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே பிரதமர் வரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அத்தகைய வாய்ப்பு கிடைத்தும் அவள் கணவனின் உடலை அவளால் பெற முடிந்ததா? 

வேல ராமமூர்த்தி  கிராமியத் தந்தை பாத்திரத்துக்கு அளவெடுத்து தைத்தது போலிருக்கிறார். கிராம பூசாரியாக வரும் தவசி ஒரு சில மாதங்களிலேயே புற்று நோயால் மெலிந்து பரிதாபமாக இறந்து போனது வேதனையான விஷயம். 

கலெக்டராக வரும் பாண்டே சிறப்பாக நடித்திருக்கிறார். லேசாக தலையை ஆட்டியபடியே விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் "பூ ராமும்" மனதில் பதியும்படி வந்திருக்கிறார்.  நாயகன் நாயகி தவிரவும் மற்ற கதாபாத்திரங்களும் ஒவ்வொருவரும் மனதில் பதியும்படி உருவாக்கி இருப்பது டைரக்டரின் திறமையை பறை சாற்றுகிறது. 

மொத்தத்தில் ஒரு மிகச் சிறந்த படம் பார்த்த திருப்தி கிடைத்தது.

19 November, 2020

 ஜெயமோகனின் "வெண்கடல்" சிறுகதையிலிருந்து."பெண்ணடியாளுக்க வலியைக் கண்டா ஆணாய் பிறந்ததே பாவம்னு தோணிப் போயிரும்." என்றான் குமரேசன். "ஆணுக்கு அந்த மாதிரி வலி இல்லையா" என்றேன். "இல்லையே!இருந்தா இந்த உலகம் இப்பிடி நாறக் கூதறயா இருந்திருக்குமா? ஒரு மரியாதியும் சினேகமும் எல்லாம் இருந்திருக்குமே" என்றார் அப்பு அண்ணா. 

இதைப் படித்ததும் என் சிந்தனை. ஆண்களுக்கு சிறு வயதிலேயே வலி தாங்கும் மன வலிமை இருக்கிறது. என் பேரனுக்கு அப்போது எட்டு வயது இருக்கும். நாங்கள் ராஜஸ்தான் வந்த புதிது. குளிர் காலங்களில் காலை பதினோரு மணி போல பார்க்கில் விளையாட விட்டு நான் புத்தகம் படித்துக் கொண்டிருப்பேன். ஒரு நாள் விளையாடிய பிள்ளை தரையிலமர்ந்து தன் முழங்காலில் முகத்தை புதைத்த படி இருக்கிறான். 

ஏதோ சந்தேகம் வர பக்கத்தில் போய் பார்த்தால் அழுது கொண்டிருக்கிறான். நெற்றியில் புருவத்துக்கு அருகே காயம் பட்டு ரத்தம் வந்து கொண்டிருக்கிறது. பதறிப் போனேன். இதுவே பெண் பிள்ளையாக இருந்தால் இரத்தம் கண்டதும் நடுங்கி பாட்டியிடம் ஓடி வந்திருக்கும்.

ஆனால் அதே குழந்தை வளர்ந்து பெண்ணானதும் எவ்வளவு வலி தாங்குகிறது. பூப்பெய்துவது சிலருக்கு பூப்போல முடிந்து விடும். சிலருக்கோ மாதா மாதம் ரண வேதனை. அருவருப்பு. தனது உடலே நாறிப் போனது போல் ஒரு உணர்வு. பக்கத்தில் இருப்பவர்களுக்கு அந்த நாற்றம் தெரிந்து விடுமோ என்னும் பதைபதைப்பு. 

அடுத்து திருமண உறவு. சுத்தமின்மையை பெரிதாய் எடுத்துக் கொள்ளாத பெண்ணாய் இருந்தால் பரவாயில்லை. அதுவே தூய்மை பேணும் பெண்ணாய் இருந்தால் இரவில் வியர்வை கசகசப்போடு தன் மனம் உடன்படாத நேரத்திலும் தன்னை நெருங்கும் கணவனை சந்தோஷப்படுத்த வேண்டிய வலி. ஈடுபாடு குறைந்ததை  கண்டு பிடித்து விட்டால் "வேற எவனையாவது நினைச்சுக்கிட்டு இருக்கியா" என்னும் கூர்வாள் பாயும். உன் வாடையும் நசநசப்பும் தான் தாங்க முடியலன்னு சொல்லவா முடியும்.

அடுத்து பிரசவம். சொல்லவே வேண்டாம். மறு ஜென்மம். இப்போ ஆப்பரேஷன் பண்ணி சுலபமா குழந்தையை எடுத்திடுறாங்கன்னு சொல்றாங்க. ஆனால் அதற்காக நடு முதுகில் போடப்படும் ஊசி நகரும் போதெல்லாம் உறுத்தும். 

குழந்தை பிறந்து பால் கொடுக்க இயலாமை ஒரு வலி என்றால் ஏதோ காரணங்களால் பால் இருந்தும் கொடுக்க முடியாமை பெருவலி. அதைத்தான் இந்த கதையில் சொல்லி இருக்கிறார். பால்கட்டை எடுக்க அட்டைகளை மாரில் வைத்து கட்டும் ஒரு முறையை சொல்லி இருக்கிறார். அவை வலி தெரியாமல் உறுஞ்சி விடும். பின் அந்த அட்டைகளை அழித்து விடச் சொல்லும் போது அப்பெண் சொல்கிறாள் "ஆற்றிலேயே விட்டிடுங்க. என்ன இருந்தாலும் அவை என் பாலைக் குடித்தவை"  இந்த வரியில் நொறுங்கிப் போனேன் நான். 

வயதாகி தீட்டு நின்றாலும் நிற்பதில்லை வலி சிலருக்கு. எத்தனை குழந்தைகளை தாங்கிய கருப்பை தளர்ந்து நெகிழ்ந்து வெளியே வந்து விடுகிறது. யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் கூச்சம். ஒரு தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் சொல்லும் போது அதை வெட்டி நீக்க வேண்டிய அவசியம். முடியாத சமயத்தில் வெளியே சொல்ல முடியாத வேறொரு தீர்வும் இருக்கிறது. 

இப்பொழுது முதல் பாரா படியுங்கள். ஆசிரியர் சொன்னது எவ்வளவு சரியென்று தெரியும். பெண் எவ்வளவு வலியும் தாங்க கூடியவள் அவள் முடியவில்லை என்று சொன்னால் அது மனதின் வலியின் பிரதிபலிப்பு எனப் புரிந்து கொள்ளுங்கள். வீட்டின் பெண் முடியவில்லை என்று சொன்னால் சகித்துக் கொள்பவர்களின் சதவீதம் கூட வேண்டும் என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட பதிவு. 

நாங்கள் இருக்கிறோம் எனச் சிலர் சொல்வீர்கள். அந்த ஒரு சிலர் போதாது. அனைத்து பெண்களுக்குமே அந்த பராமரிப்பு கிடைக்க வேண்டும்.

03 November, 2020

 கனவுகள் ஆழ் மனத்தின் வெளிப்பாடு. நாம் எதை அதிகமாகச் சிந்திக்கிறோமோ அவை கனவுகளாக வெளிப்படும். எழுத்தாளர்கள் முழு நேரமும் தன் கதைகளை நினைவுகளில் ஊறப்போடுபவர்கள் தானே? இவர்கள் தன் கதைகளின் பாதிப்பால் கனவுகளால் கஷ்டப்பட்டிருப்பார்களா? இந்த சந்தேகம் எழுத்தாளர் இமையத்தின் 'செல்லாப் பணம்' திறனாய்வு ஸூம் கூட்டத்தில் எனக்கு வந்தது. 

"செல்லாப் பணம்" அவலங்களின் உச்சம். அன்று அவரிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தேன். "கதையை வாசித்த எங்களாலேயே கதையை விட்டு வெளிவர காலம் நிறைய எடுக்கிறதே? உங்களால் வெளியே வர முடிகிறதா? அதுவும் அடுத்த கதை எழுத தொடங்கு முன். " நான் கேட்காத கேள்விக்கு கூட்டத்திலேயே பதில் கிடைத்தது. அவர் திறனாய்வு செய்தவரை கதையின் ஒரு பகுதியை வாசிக்க சொன்னார். வாசிக்க வாசிக்கவே கண் கலங்கினார். அது அம்மா இறந்து போன தன் மகளைப் பார்த்து பேசுவது. புத்ர சோகம்! 

எனக்கு புரிந்தது. அவர்களால் வெளியே வர முடியாது. அவர்களைப் பொறுத்த வரை அவர்களது கதைகள் சக்கர வியூகங்கள். அர்ச்சுனன் மைந்தன் போல் உள்ளே போகத் தெரியும். வெளியேறத் தெரியாது. அப்படியானால் அவர்கள் கனவுகளால் பிரசவ வேதனையல்லவா அடைந்திருப்பார்கள். நானறிந்த சில எழுத்தாளர்களிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என நினைத்தேன்.

ஒரு பெண் எழுத்தாளரிடம் பேசினேன். அவர்கள் ரொமான்ஸ் திரில்லர் போன்ற வகைகளில் எழுதுபவர்கள். அவர்கள் சொன்னது "அனேகமாய் என் கதைகள் கற்பனை சார்ந்தே இருப்பதால் கதை எழுதும் போது அதன் பாதிப்பு இருக்கும். முடிந்ததும் வெளியே வந்து விடுவேன் " என்றார்கள். 

மற்றவர்களிடமும் கேட்க வேண்டும். முக்கியமாக ஜெமோவிடம்.அப்பப்பா! எத்தனையெத்தனை கதைக்களம்!


இது செல்லாத பணம் பற்றி நான் எழுதியது.

02 November, 2020

 தன்னைக் குடித்தவனை

தள்ளாட வைத்து

தான் நிலையாயிருக்கும்

அன்பெனும் மதுவால்

நிறைந்த மதுக்கிண்ணம்.

நான். 

இரவில்

உன் சுண்டு விரல்

நுனி கோர்த்து

உறங்கப் பிடிக்கும்.

அது உன்னோடான

கலவியை விட

ரொம்பவே பிடிக்கும்.

 மாலையில்

மெல்லிய மழைச்சாரலில்

அழகான தோட்டத்தில்

உன்னோடு சூடாய்

ஆம்

நாமும் தேநீரும் 

சூடாய் குடிக்கப் பிடிக்கும்.

மதிய நேர

உணவுக்குப் பின்னான

மெல்லுறக்கத்தில்

உன் அணைப்புக்குள்ளே

அசைய பிடிக்கும்.

இளங் காலை நேர

என் விழிப்பில்

உறங்கும் உன்னை

அசைத்தெழுப்பி

உலக அரசியல்

பேசப் பிடிக்கும்.

ஆனால்

மதுக்கிண்ணத்தை நீ

சிதறடித்ததால்

சிதறிய பாதரஸமாய்

அங்கங்கே

உருண்டு கிடக்கும்

என் அன்பு

என்னைப் பார்த்து

கெக்கலி கொட்டிச்

சிரிக்கிறது.

இந்த அன்பைச்

சேர்த்து கிண்ணத்தில்

நிறப்ப

இன்னொருவன் 

வருவானா?

வந்தாலும்

அவ்வன்பைப் பருக

முன் வருவானா? 

காத்திருக்கிறேன்.!!