07 February, 2023
புத்தகத்தின் பெயர் : ஐந்து நெருப்பு
ஆசிரியர் : ஜெய மோகன்.
விஷ்ணுபுரம் பதிப்பகம்.
விலை : ரூ 280/-
ஆசிரியர் தனது பன்னிரண்டாவது வயதில் இருந்து எழுதி வருகிறார். இவர் எழுதிய “ரப்பர்” என்னும் நாவல் அமரர் அகிலன் விருது பெற்றது. இன்னும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய விஷ்ணுபுரம் நூறாண்டு நவீனத் தமிழிலக்கியத்தின் மாபெரும் இலக்கிய முயற்சி என்று பாராட்டப் பட்டது. மஹாபாரதத்தை “வெண்முரசு” என்ற பெயரில் உலகின் பெரிய இலக்கியப் படைப்புகளில் ஒன்றாக எழுதி இருக்கிறார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் என்ற அமைப்பையும் நடத்தி வருகிறார்.
இது ஒரு சிறு கதைத் தொகுப்பு. இதைப் பற்றி ஆசிரியரே சொல்வது. “ தன்னை சமூக உறுப்பினன் என்று உணர்பவனே மனிதன். ஆனால் அவனில் இன்னொரு பக்கம் தன்னைத் தனி மனிதனாக உணர்கிறது. தன் நலத்தை தன் மகிழ்ச்சியை நாடுகிறது. சமூகம் உருவாக்கிய நெறிகளை மீறி செல்கிறது. அவ்வண்ணம் மீறிச் செல்கையில் அது ஒரு மகிழ்வை அடைகிறது. தன்னை வெளிப்படுத்திய நிறைவு அது. குற்றத்தின் தண்டனையின் வெவ்வேறு தளங்களை தொட்டு பேசும் சிறுகதைகள் இவை”
மொத்தம் பத்து சிறுகதைகளின் தொகுப்பு. இதில் தலைப்புக்குரிய “ஐந்து நெருப்பு என்னும் கதையை வாசிக்கும் போது கண்ணுக்கு முன் பார்ப்பது போலவே இருந்தது. பொதுவாகவே சிறந்த எழுத்தாளர்களின் கதைகள் கண் முன் நிகழ்வது போலவே இருக்கும். ஆனால் இதில் இன்னும் சிறப்பு ஏதோ தெரிகிறதே என்று பார்த்தால் இந்த கதையை அடிப்படையாக வைத்துத் தான் சிம்பு நடித்த “ வெந்து தணிந்தது காடு” என்னும் படத்தை எடுத்திருக்கிறார்கள். அந்த திரைப்படத்தின் திரைக்கதை ஜெயமோகன் அவர்கள் தான். அதில் எரியும் முள்ளுக் காட்டுக்குள் மாட்டிக் கொள்ளும் இளைஞன் வீட்டுக்கு வந்து படுக்க முடியாமல் தவிக்கும் போது அவன் தங்கை ஒவ்வொரு முள்ளாக எடுத்து மஞ்சள் தடவும் போது கண்ணீர் வரும்.
அத்தனை கதைகளிலும் காவல்காரர்களின் பங்கு உண்டு. “பிறசண்டு” என்னு,ம் முதல் கதையில் வயதானவர் ஒருவர் இரவில் எழுந்து வரும் போது உள்ளே மாடிப்படியில் அமர்ந்திருக்கும் திருடன் அவர் வீட்டு மனிதர் என்று நினைத்து கேட்கும் கேள்விக்கும் அமைதியாக பதில் சொல்வதும் பின் மாட்டிக் கொண்ட பிறகு காவல் நிலையத்தில் அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கு,ம் சம்பாஷணையும் நகைச்சுவை நிறைந்தது.
சுக்ரன் என்னும் கதையில் “ அழகப்பன் ஜெயிலு விட்டு வந்ததுமே டிபி வந்து ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியிலே செத்தான். அப்பல்லாம் ஜெயிலுக்கு போனாலே டிபி வந்திரும்” என்று வருகிறது. இன்று அது மாறி இருக்கும் என்று நம்புகிறேன்.
நான் ரசித்தது. பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட நிகழ்வுகளையும் மனிதர்களின் பெயர்களையும் நினைவு வைத்து காவல் அதிகாரிகளுக்கு குற்றவாளிகளை பிடிக்க உதவும் ஒரு முதிய ஓய்வு பெற்ற காவலர் சொல்வது” பேருகளை ஒரு தடவைக்கு பத்து தடவை சொல்லிக்கிடுவேன். அப்டியே மனசிலே பதிஞ்சிரும். நான் இதெல்லாம் பெயரா நினைச்சுக்கிடுறதில்லை. அப்டியே முகங்களா உயிருள்ள ஆட்களா, நான் நேரிலே பழகினவங்களா நினைச்சுக்கிடுவேன்” ஒரு கதையை வாசிக்கும் போது கூட தொடக்கத்தில் வரும் பெயர்களை நன்கு மனதில் பதிய வைத்துக் கொண்டு நாம் சந்தித்த நபரோடு தொடர்பு படுத்தி கொண்டால் கதையோடு ஒன்ற உதவும்..
இழை என்றொரு கதை. சர்க்கஸில் பணி புரிபவர்களைக் களமாகக் கொண்ட கதை. சஸ்பென்ஸ் கடைசி வரை அழகாக நகர்த்தப் பட்டு இருக்கிறது.
விருந்து என்ற கதையில் தூக்குத் தண்டனைக் கைதி சாமிநாத ஆசாரியிடம் அவர் சாகு முன் நாமும் ரெண்டு வார்த்தை பேசி விட வேண்டும என்ற ஆசை எழுவதை தவிர்க்க முடியாது.
ஏழாம் கடல் என்ற கதையில் பிள்ளைவாளுக்கும் வியாகப்பனுக்கும் உள்ள நட்பு வித்தியாசமானது. ஆனால் கதை முடிவின் காரணம் விளங்கவில்லை. பிள்ளைவாள் கிடைத்த முத்தை பற்றிய விஷயத்தை ஏன் நண்பனிடம் சொல்லவே இல்லை.
இது தவிர “ ஏழாவது” “அறமென்ப”” “கூர்” “ பேசாதவர்கள்” என நான்கு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொறு விதமான கதைக்கரு. ஆசிரியரிடம் ஆயிரமாயிரம் கதைக் கருக்கள் இருக்குமென்று தோன்றுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!