க/பெ ரணசிங்கம்
இது zee 5இல் OTT யில் வெளியான படம். கணவர் பெயர் ரணசிங்கம்.அப்போ மனைவி பெயர் ? அரிய நாச்சி. ரணசிங்கமாக விஜய்சேதுபதியும் அரியநாச்சியாக ஐஸ்வர்யா ராஜேஷும் கலக்கி இருக்கும் ஒரு படம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் 80 களில் நடிக்க வந்திருந்தால் மிகப் பெரிய உயரத்துக்கு போயிருக்க வேண்டிய ஒரு பெண். நடிப்பு இந்த பெண்ணுக்கு மூச்சு விடுவதைப் போல இயல்பாக வருகிறது.
இவர்கள் இருவருக்குமிடையே இழையோடும் காதல் மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. அதையும் அழகாக எடிட் செய்து பரிசுப் பொருளின் மேல் அங்கங்கே ஜொலிக்கும் ஜிகினாத் தாள் போலவும் பாயாசத்தில் மிதக்கும் முந்திரிப் படகு போலவும் தந்த எடிட்டரை சிறப்பாக பாராட்ட வேண்டும்.
வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவன் இறந்த செய்தி அறிந்த அவன் உடலைப் பெற ஒரு பெண் தனியாகப் போராடுவதே கதை. அரசு அலுவலகங்களின் நடைமுறை மெத்தனத்தை மிக இயல்பாக காட்டி இருக்கிறார்கள்.
இடுப்பில் குழந்தையை சுமந்த படி டெல்லி ரோடுகளில் நடக்கும் ஒரு பாவப்பட்ட பெண்ணுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே பிரதமர் வரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அத்தகைய வாய்ப்பு கிடைத்தும் அவள் கணவனின் உடலை அவளால் பெற முடிந்ததா?
வேல ராமமூர்த்தி கிராமியத் தந்தை பாத்திரத்துக்கு அளவெடுத்து தைத்தது போலிருக்கிறார். கிராம பூசாரியாக வரும் தவசி ஒரு சில மாதங்களிலேயே புற்று நோயால் மெலிந்து பரிதாபமாக இறந்து போனது வேதனையான விஷயம்.
கலெக்டராக வரும் பாண்டே சிறப்பாக நடித்திருக்கிறார். லேசாக தலையை ஆட்டியபடியே விஜய் சேதுபதியின் அப்பாவாக வரும் "பூ ராமும்" மனதில் பதியும்படி வந்திருக்கிறார். நாயகன் நாயகி தவிரவும் மற்ற கதாபாத்திரங்களும் ஒவ்வொருவரும் மனதில் பதியும்படி உருவாக்கி இருப்பது டைரக்டரின் திறமையை பறை சாற்றுகிறது.
மொத்தத்தில் ஒரு மிகச் சிறந்த படம் பார்த்த திருப்தி கிடைத்தது.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!