05 October, 2026
இலக்கியப் பாதை
நான்
தயங்கித் தயங்கியே
ஓடத் தொடங்கினேன்.
எனக்கு முன்னே
பலரும்
ஓடிக் கொண்டிருந்தார்கள்.
என்னுடன்
ஓடத் தொடங்கியவரும்
என்னைத் தாண்டி விட்டனர்.
எனக்குப் பின்னே
வந்து கொண்டிருந்தவர்களும்
என்னைக் கடந்து
முன்னேறிக் கொண்டிருந்தனர்.
எங்கோ தொலைவில்
ஓடும் எண்ணம் கூட
இல்லாது நிற்பவரும்
என்னைக் கடந்து செல்லும்
வாய்ப்புண்டு.
நிற்காமல்
ஓடிக் கொண்டிருக்கிறேனே
அது போதும்.
எல்லையைத்
தொட்டு விடுவேன்.
30 September, 2026
ஓநாய குலச் சின்னம் 2
#ஓநாய் #குலச்சின்னம் 2
மங்கோலியர்க்கள் சம்பந்தப்பட்ட போர்த் தந்திரங்கள் எல்லாம் சேர்த்து பார்த்தால் அவை ஓநாய்களிடமிருந்து பயின்றவையாகத்தான் இருக்கும் எனக்கிறார் ஓநாய் குலச் சின்னம் நாவலின் ஆசிரியர்.
ஓநாய்கள், நாய்கள் எல்லாம் ஊளையிடும் போது வானத்தை நோக்கி தலையை உயர்த்துகிறதே. இவை இறைவனிடம் தன் குறைகளை முறையிடுகின்றனவோ என எனக்குத் தோணும்.
மங்கோலியர்கள் கெட்டியான பனியின் மீது பயணிக்க இரண்டு கம்பளித் துணிகளை எடுத்துக்கொண்டு ஒன்றில் இவர்கள் ஏறியதும் இரண்டாவதை முன்னால் போட்டு, பின் அதில் ஏறியதும் முதல் துணியை அதற்கு முன் போட்டு இப்படியாக அவர்கள் செல்வதுண்டு. கம்பளித்துணிப் படகுகளை ஓட்டிச் செல்வதைப் போல இருக்கும். அப்போது அவர்களுக்கு கீழ் இருந்த கெட்டிப் பனி நொறுங்கவும் மொறு மொறுக்கவும் செய்யும். மாயாஜால கம்பளத்தில் செல்வது போல அது தோற்றம் தரும் என்கிறார்.
ஒரு வித்தியாசமான தத்துவம் இதில் சொல்லப்பட்டிருக்கிறது புல்லும் மேய்ச்சல் நிலமும் தான் பெரிய உயிர். ஓநாய்களும் மனிதர்களும் சிறிய உயிர். புல்லைத் தின்னும் ஜீவன்கள் இறைச்சி உண்ணும் ஜீவன்களையும் விட மோசமானவை . எதிரிகளைக் கண்டால் மான்கள் ஓடித் தப்பிக்கும். ஆனால் புல் அதன் மீது எவரும் ஏறி மிதிக்கலாம் பிடுங்கலாம், உண்ணலாம் புல்லால் ஓட முடியாது.
பல கோணங்களிலும் நம்மை சிந்திக்க வைக்கும் இந்த நாவல்.
29 September, 2026
ஹபீபி தமிழ்த் திரைப்படம்
"ஹபீபி " திரைப்படம் தியேட்டரில் வெளியிடப்படும் போதே முக நூலில் நல்ல வரவேற்பு. நான் தற்போது சோனி லைவில் பார்த்தேன்.
இயக்குநர் : மீரா கதிரவன்.
முக்கிய நடிகர்கள் : கார்த்திக் ராஜா ( நடிகர் தனுஷின் அப்பா. ஏன் சார் இவ்வளவு நாள் நடிக்க வரல? ) மற்றும் பலரும் புதியவர்களே.
மகேஷ் முத்துசாமி அவர்களின் ஒளிப்பதிவு கண்ணுக்குக் குளிர்ச்சி.
கதையில் யூசுப்பின் மகளாக வரும் இஸ்மத் பானு "வெப்பம் குளிர் மழை" திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் எடுத்து திறம்படச் செய்தவள். திரையுலகம் குறிப்பிட்ட நிறம், உயரம் பருமனெல்லாம் பார்க்காமல் திறமை பார்த்து வாய்ப்பு கொடுக்கத் தொடங்கினால் நலம்.
ஒரு இஸ்லாமிய சமூகம் சார்ந்த கதை. குடும்பத்துக்காக வெளிநாடு போய் சம்பாதிப்பவர்கள் அவர்களில் அதிகம். களம் நெல்லைப் பகுதியைச் சார்ந்தது. எங்கள் பேச்சுத் தமிழில் அன்பும் நெருக்கமும் வழியும். தறி நெய்தல் இந்தப் பகுதி இஸ்லாமிய மக்களின் ஒரு வகை கைத்தொழில் . கதை நாயகனின் குடும்பமும் தறி நெய்பவர்கள் தான். ஏழ்மையான குடும்பம். அந்தப் பகுதியின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் வெளிநாடு சென்று சம்பாதிக்கத் தொடங்கியதும் அவர்கள் வீட்டுத் தறி செயல் நிறுத்துகிறது.
கதாநாயகனின் தந்தை யூசுப்பின் தம்பி வெளிநாடு் சென்று இவர்கள் குடும்பமும் முன்னேறத் தொடங்குகிறது. வெளிநாடு சென்று குடும்பம் முன்னேறுவதற்காக செய்யும் அந்தத் தம்பதிகளின் தியாகம் மிக அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது.
மனைவியை தனியே விட்டு வெளிநாடு செல்லும் கணவரின் வலியை பார்வையிலேயே உணர்த்திய சாச்சாவும் அவர் மனைவியும் கதைக்கு வலுவூட்டிய கதா பாத்திரங்கள்.
யூசுப்புக்கும் அவரது இந்து நண்பருக்கும் இடையேயான நட்பும் அற்புதமாக நெய்யப்பட்டு இருக்கிறது. இவ்வளவுக்கும் இடையே சொல்லப்பட்டு இருப்பது தான் யூசுப்பின் மகன் அபு தாகிரின் காதல் கதை.
பள்ளியில் மௌனமாகக் காதலிக்கும் அபு தன் நண்பனிடம் "அந்த புள்ளைக்கு என்னைப் பிடிக்குமான்னு தெரியல. ஆனா எனக்கு அந்தப் புள்ளைய பிடிக்கும்கிறத எப்படியாவது சொல்லிறணும்." என்பான். காதலைத் தெரிவிக்க ஆண்கள் எடுக்கும் அந்த மௌன முயற்சியே பெண் பிள்ளைகளை காதல் கொள்ளச் செய்து விடும்.
ஆனால் அபுவின் நண்பர்கள் காதல்ல உள்ள பிரச்னைகளைச் சொல்லி விட்டு விலகச் சொல்லும் போது " அந்த புள்ள தான் என்னைப் பாக்குது. நான் எங்கல அந்தப் புள்ளைய பார்க்கிறேன். " என்பான். இதுவும் ஆண்கள் தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்காமல் சமாளிக்கும் வித்தை தான். ஆணின் பார்வையில் கதை சொல்லப்பட்டிருந்தாலும் சாட வேண்டிய இடத்தையும் தவற விடவில்லை இயக்குநர்.
தனுஷ் அப்பா இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு யூசுப் கதாபாத்திரம் கன கச்சிதமான பொருத்தம். Tailor made character. ஒரு இஸ்லாமிய ஆணின் மென்னுணர்வுகளை அவ்வளவு அழகாக பிரதிபலிக்கிறார்.
தலை முறை தலை முறையாக பார்த்து வந்த தொழில் முடிவடையும் வேதனையை அந்தக் காட்சியில் கஸ்தூரி ராஜா அவர்கள் மிகச் சரியாக நமக்குள் கடத்துகிறார்.
முக்கியமா ஒண்ணு சொல்லணும்.
ஒரு கதாபாத்திரத்தின் பெயர் Rufina. எங்க அப்பா்என்னை அழைப்பது போலவே Rufi னு சொல்லும் போது படம் அவ்வளவு பிடித்து விட்டது. இது வரை யாரும் பார்க்காம விட்டிருந்தா பார்த்திடுங்க.
27 September, 2026
"ஓநாய் குலச் சின்னம்" ஜியாங் ரோங் எழுதி சி. மோகன் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது . அதிர்வு பதிப்பகம். விலை 250 ரூபாய். பக்கங்கள் 696.
நண்பர் தீன் இது நான் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒரு நாவல் என்று சொன்னதால் வாசிக்க தொடங்கினேன் . ஜென் என்பவர் ஒரு ஆட்டைப் போல கொஞ்சமும் துணிச்சல் அற்றவன். பில்ஜியிடம் அவன் பல வாழ்க்கைப் பாடங்களை கற்றுக் கொள்கிறான். முக்கியமாக ஓநாய்களின் போர்த் தந்திரங்கள் மூலம் படிப்பிக்கிறார். மேய்ச்சல் நிலத்தில் தங்கத் திட்டமிட்டால் ஓநாய்களை விடவும் வலிமை மிகுந்தவராக இருக்க வேண்டும் என்கிறார்.
ஓநாய்கள் மான்களை வேட்டையாடும் முறைமையை சொல்லிக் கொடுக்கும் போது நமது வாழ்க்கைக்கு வெளிச்சம் கிடைத்தது போல் இருக்கிறது.
வேட்டையாடும் ஓநாய்களை ஒரு இனம் தன் குலச் சின்னமாக வைத்திருக்கிறது. அதற்கான காரணம் மிகவும் சுவாரசியமானது. புல்வெளிகளை மான்கள் கூட்டம் கபளீகரம் செய்துவிடும். அந்த மான்களை ஓநாய்கள் வேட்டையாடுவதால் தான் மேய்ச்சல் நிலம் பிழைக்கிறதாம். அதனால் தான் ஓநாய்களுக்கு தெய்வ வழிபாடு. மங்கோலியர்களின் குலம் சின்னம் ஓநாய்.
மான்கள் வயிறு நிரம்ப புல் மேயும் வரை ஓநாய்கள் காத்துக் கிடக்குமாம். அதன்பின் விரட்டினால் ஓடத் தொடங்கும். மான்கள் ஓடிய படியே சிறுநீர் கழிக்க முடியாதவை. அதனால் அப்படி அடக்கி ஓடும் போது மான்களின் பின்னங்கால்களில் சதைப்பிடிப்பு ஏற்பட்டு இறுக்கமாகி ஓட முடியாமல் ஆகிவிடும். அந்த சமயம் "மஞ்சள் கடல்" என அழைக்கப்படும் மான்களை ஓநாய்கள் வேட்டையாடும் என்கிறார்.
மான்கள் தூங்கிக் கொண்டிருந்தால் கூட அதன் மூக்கம் காதுகளும் உஷராகவே இருக்கும் என்கிறார். இன்னும் ஓநாய்களை பற்றி நிறைய தெரிந்து கொள்வோம். தொடர்ந்து எழுதுகிறேன்.
26 September, 2026
#நிகழ்ச்சியை கலவரமில்லாமல் நடத்துவதெப்படி
ஒரு நிகழ்வு வெற்றி பெறுவது என்பது வெறும் ஏற்பாடுகளால் மட்டும் வருவது அன்று. அதற்கு அழைப்பவர்களுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. உதாரணமாக புத்தகக் கண்காட்சியில் பேச வருபவர் வாசிப்பில் ஆர்வமுள்ளவராய் இருத்தல் அவசியம்.
ஒரு திருமணத்தில் ஒவ்வொரு ஏற்பாட்டையும் பார்த்துப் பார்த்துச் செய்து பின் வந்த இடத்தில் ஏதாவது ரகளை செய்து அத்தனை பேர் கவனத்தையும் தன் பால் திருப்பி மொத்த ஏற்பாட்டின் சிறப்பையும் சிதறடிக்கும் வழக்கத்தைக் கொண்ட ஒருவரையும் அழைத்து விட்டால் நம்முடைய மொத்த முயற்சியும் பாழ்.
நாம் ஏற்பாடு செய்த கூட்டத்தில் தன் agenda வை நிறைவேற்றிக் கொள்பவர்களையும் அழைக்கக் கூடாது. நான் கலந்து கொண்ட ஒரு சிறு கூட்டத்தில் முன்னேற்பாடாக அமைப்பாளர் சொன்னது "யார் வேண்டுமானாலும் சில நிமிடங்கள் பேசலாம். ஆனால் அரசியல் பற்றி பேசக் கூடாது. தன்னை முன்னிலைப்படுத்தி தன் செயல்கள் பற்றி பெருமையாகப் பேசக் கூடாது. தனிப்பட்ட மனிதரையோ ஒரு குழுவையோ தாக்கித் தவறான வார்த்தைகளில் பேசக்கூடாது . " இப்படி ஒரு முன்னுரை கொடுத்து விட்டுப் பேச அனுமதித்தால் அதை மீறிப் பேசுபவர்களை அங்கேயே நிறுத்த முடியும். நிகழ்வும் வெற்றி பெறும்.
ஒரு நிகழ்ச்சிக்குப் பேசத் தேர்ந்தெடுக்கும் போது திறமையானவர்கள் பிரபலமானவர்கள் என்பதைக் கருத்தில் கொள்வதோடு , அதன் கருப் பொருளுக்கு சம்பந்தமான நபர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பேச வருபவர்களும் அதற்கு உடன்பாடு இல்லாதவர்களாக இருந்தால் பேசத் தான் வரவில்லை என்பதை நாசுக்காகச் சொல்லி மறுத்து விடலாம். மேடையில் வந்து நிகழ்ச்சிக்கு இழிவாய் உரை கொடுப்பதும் சரியல்ல. ஒரு நிகழ்ச்சிக்கு வந்து அதைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசாமல் மீதி எல்லா விஷயங்களையும் பேசிச் செல்வது உச்ச பச்ச அவமரியாதை.
ஒரு நிகழ்வை வெற்றிகரமாக எடுத்து நடத்துவது என்பது சுலபமான விஷயமல்ல. நடந்து முடிந்த பின்னும் திசை திரும்பி விட வாய்ப்புண்டு. வரும் விமர்சனங்களில் தனி மனித தாக்குதல் சார்ந்தவைகளை துச்சமென ஒதுக்கி ஆக்கபூர்வமானவைகளை கவனத்தில் கொண்டு முன்னேற வேண்டும்.
துணிந்து நிகழ்வுகளை முன்னின்று எடுத்து நடத்தும் பெண்களுக்கு சிறப்பு பாராட்டுகள்.
24 September, 2026
நூலின் பெயர் : நீலக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்.
ஆசிரியர் : நரசய்யா
வெளியீடு : தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
முதல் பதிப்பு : ஆகஸ்ட் 2023
கடலோடி நரசய்யா இளம் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாக அமையக் கூடிய எல்லாத் தகுதியும் உடையவர். டாக்டர் க.சுபாஷினி இந்த நூல் கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் வீடுகளில் அனைவரும் முடங் கிக் கிடந்த கால கட்டத்தில் ஸூம் இணையத் தொடர்பு வழியாகத் திரு நரசய்யா ஐந்து நாட்களாக வழங்கிய உரைகளின் எழுத்து வடிவம் என்கிறார்.
வரலாற்று ஆய்வறிஞர்களின் உரைகளிலிருந்து இவருடையது மாறுபட்டு ஆழமாக உணரக் கூடியதாக இருப்பதற்குக் காரணம் அவரது கடல் வழிப் பயணத்தின் வழியாகப் பெற்ற உலகளாவிய அனுபவங்கள் தான்.
கடலோடி நரசய்யாவுடனான சுபாஷினி அவர்களின் உரையாடல்கள் மூன்று முக்கிய விஷயங்களை மையப்படுத்தியதாக இருக்கும். பயணங்கள், நகரங்களின் வரலாறு , இருவரும் வாசித்து திறனாய்வு செய்த நூல்கள்.
திரு நரசய்யா பள்ளிக் காலங்களில் நன்றாகப் படிக்கும் மாணவர்களில் ஒருவர். இயல்பியல் பாடப் பிரிவில் திருச்சி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் பெற்றார். ஒருநாள் வகுப்பில் பட்டாளத்தில் சேர்வதற்கான சுற்றறிக்கையை வாசித்தனர். அந்தக் காலத்தில் ஏழை மாணவர்களே அதிகம் பட்டாளத்தில் சேருவார்கள். நரசய்யா தான் ஆயுதம் ஏந்திய படையில் கண்டிப்பாக சேர்ந்து காட்டுவேன் என்றார். பின்னாளில் அதையே ஒரு கதையாக எழுதி விகடனில் வெளி வந்தது.
இவரது பதினாறாவது வயதில் கடற் படை தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுப்பதில் நமது நாட்டுக்கும் வெளி நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை அழகாகச் சொல்கிறார். இந்திய அதிகாரிகள் ஒருவருக்கு எவ்வளவு தெரியவில்லை எனப் பார்க்கிறார்கள். ஆனால் வெளிநாட்டினரோ வெட்டப்படாத வைரத்தை எடுத்து பட்டை தீட்டுகிறார்கள் என்கிறார்.
இவர் விகடனுக்கு அனுப்பிய முதல் சிறுகதை "தேய்பிறை" இந்த பெயரின் ராசி கதை தேர்ந்தெடுக்கப் படாது என நண்பர் சொல்ல அது முத்திரைக் கதையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. முதல் கதையே முத்திரைக் கதையானது முதன் முதலில் திரு ஜெயகாந்தனுடையது. இரண்டாவது திரு நரசய்யா உடையது தான். மூன்றாவதாக திரு இந்திரா பார்த்தசாரதி உடையதாம்். திரு நரசய்யா அவர்கள் கதை தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டிலேயே செப்டம்பரில் இவருடையதும் அக்டோபரில் திரு இந்திரா பார்த்தசாரதி உடையதும் வெளியாகி இருக்கிறது. ஒரு மாத இடைவெளியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறார் திரு நரசய்யா அவர்கள்.
இவரது மகனும் கப்பலில் பணி புரிந்திருக்கிறார். "சென்னை செல்வம்" என்ற அந்தக் கப்பல் தான் ஆசிரியர பணி புரிந்த கடைசி கப்பலும், இவர் மகன் பணி புரிந்த முதல் கப்பலுமாகும்.
இத்தகைய பல அறிய தகவல்களையும் வாழும் வாழ்க்கை முறைகளையும் இந்த புத்தகம் நமக்கு அறிமுகம் செய்வது சிறப்பு.
22 September, 2026
கல்வெட்டில் தேவதாசி
"கல்வெட்டில் தேவதாசி" குமிழ் முனை அமைப்பு வைத்த போட்டியில் புத்தக விமர்சனத்துக்காக நான் எடுத்த புத்தகம். போட்டிக்கு நாவல், சிறுகதை, கட்டுரை , கவிதை போன்ற எந்தப் பிரிவில் வரும் புத்தகங்களையும் எடுத்துக் கொள்ளலாம். நான் கட்டுரைப் புத்தகமான இதைத் தேர்ந்தெடுத்தேன். இதை எனக்கு பரிசளித்த Arsha வுக்கு சிறப்பு நன்றி.
நான் கண்டிப்பா கலந்துக்கணுமான்னு தளர்வடைந்த போது ஊக்குவித்து எழுத வைத்த தோழி கி. இளம்பிறை அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று இதைப் பேச உதவியதே.
இதைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. கல்லூரியில் என் விடுதி அறைத் தோழியிடம் ஒரு நாள் கேட்டேன் " எல்லோரும் வீட்டுக்குப் போனாலும் ஏன் நீ மட்டும் போவதில்லை"
"போனால் என்னை எங்க அம்மா படுகுழியில் தள்ளி விடுவாங்க"
எனக்கு ரொம்ப ஆச்சர்யம். காக்கும் தெய்வங்களான அம்மாக்களில் படுகுழியில் தள்ளுபவர்களும் இருப்பார்களா?
ஆனால் அவள் சொன்னாள் "நாங்க தேவதாசி பரம்பரையைச் சேர்ந்தவங்க. நான் ரொம்ப போராடி படிக்க வந்திருக்கிறேன். கல்லூரிப் படிப்பை முடிச்சிட்டு ஒரு வேலையும் கிடைச்ச பின்ன தான் வீட்டுக்குப் போவேன்" அந்த வயதில் அப்படி ஒரு செய்தி எனக்குப் பெரும் அதிர்ச்சி. ஆனால் செய்தியின் கனம் அன்று புரியவில்லை. இன்று புரிகிறது.
இந்தப் புத்தகம் அந்த நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தது. மிகுந்த மனவலியோடு பெங்களூருக்கு செல்வதற்கு முந்தின நாள் போட்டிக்கு அனுப்பி விட்டுச் சென்றேன்.
போட்டியின் விதிப்படி கைகளால் எழுதி அனுப்ப வேண்டும். ஆறு பக்கங்கள் . விட்டுப் போன பழக்கத்தால் விரல்கள் கெஞ்சின. தாஜா பண்ணி எழுதி முடித்தேன். பரிசுக்கும் தேர்ந்தெடுக்கப் பட்டேன்.
வரும் அக்டோபர்2 ஆம் தேதி தூத்துக்குடி சென்று அதற்கான பரிசை வாங்க இருக்கிறேன்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முந்தின கதையெல்லாம் பேசுறத விட்டுட்டு இன்று பல பள்ளிக் குழந்தைகள் சீரழிக்கப்படுகிறார்கள். அதை முடிவுக்கு கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்று பேசுவோம். தவறு செய்த அயோக்கியர்கள் எப்படித் தண்டிக்கப்பட வேண்டும் என்று பேசுவோம்.
அன்றைய பெருந்தனக்காரர்களும், அரசர்களும் நோய் பற்றிய எந்த பயமும் இன்றி பல பெண்களோடு உறவு கொண்டார்கள் என்றால் காரணம் அந்தப் பெண்கள் வேறு எந்த ஆடவரோடும் தொடர்பில் இல்லை. பெண்களுக்கு எதிரான தீமையை அழிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அப்படி அழித்த ஒரு விஷயத்தைப் பெருமைப்படுத்தி பேசுவது என்பது அறிவீனம்.
அன்று அதற்குக் கொடுக்கப்பட்ட சாட்டையடி பதில் தான் இணைப்பில் உள்ளது. இன்றைய பிரச்னைகளைப் பேசுவோம் தீர்வு காணுவோம். பழங்கதை வேண்டாம்.
21 September, 2026
Nellai reads experience
பெங்களூரில் இருந்த போது ஒரு தோழி போனில் சொன்னார்கள். Nellai reads னு ஒண்ணு தொடங்குறாங்க. வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இணைகிறாங்க. எனக்கு உங்க நினைவு வந்தது. சேர்ந்துக்கிறீங்களான்னு கேட்டாங்க. விவரம் கேட்டப்போ. ஞாயிறு அதிகாலை ஆறரை மணிக்கு சரோஜினி பார்க்கில் சந்திக்கிறாங்க என்றார்கள். அப்போ வீட்டிலிருந்து ஆறுக்கு கிளம்பணும். சாத்தியப்படாதேன்னு விட்டுட்டேன்.
அது நேற்று நிறைவேறியது. பொருநை அரங்கத்தில் காலை பத்து மணிக்கு கூடுவதாகத் தெரிந்ததும் போனேன். சதக் அப்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் குரேஷி கான் முன்னெடுத்துச் செய்கிறார். வாசிப்பில் ஆர்வமுள்ளவர்கள் இத்தனை பேரா? அதுவும் இளைஞர்கள்......வாழ்வில் நம்பிக்கை ஏறுகிறது. நாம் அறியாமல் அங்கங்கே அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
பத்து மணிக்கு தொடங்கினோம். ஒன்றரை மணி நேரம் பொருநை அரங்கத்தில் வசதியான இடங்களில் அமர்ந்து அவரவர் கொண்டு வந்த புத்தகங்களை வாசிக்கத் தொடங்கினோம். அது கொஞ்ச நேரத்திலேயே நூலகமாகிப் போனது. கட்டுப்படுத்துவார் யாருமில்லாமலே அமைதியாக வாசிக்கத் தொடங்கினார்கள். எனக்குப் பெரிய ஆச்சர்யம். அந்ம இளங்காற்று சூழ்ந்த சூழலில் கண்கள் கிறங்காமல் ஒன்றரை மணி நேரம் வாசித்து முடித்தேன்.
அதன் பின் அவரவர் வாசித்த புத்தகங்களைப் பற்றி சுருக்கமாகப் பேசி முடித்தார்கள். இளைஞர்கள் அதிகம் ஆங்கில நாவல் வாசித்திருந்தார்கள். நானே நாற்பது வயது வரை ஆங்கிலம் மட்டுமே வாசித்து அதன் பின் தமிழின் இனிமையை அறிந்தவள் தானே.
ஒரு பெண் archiyalogy படிப்பதாகச் சொன்னாள். பணம் கொழிக்க சம்பாதிக்கப் படிப்பைத் தேடும் இந்த காலத்தில் , ஒரு பெண் தொல் பொருட்களைத் தேடி ஓடுகிறாள். ஆச்சர்யம்.
ஒரு மருத்துவரும் கலந்து கொண்டார். அவரும் இள வயதுக்காரரே. வாசிப்பிற்கான புதிய வகை சாதனத்தை அறிமுகப்படுத்தினார். ரூபாய் 6000 ஏ மதிப்பு கொண்ட ETK Link ( சரி தானா?) வைத்திருப்பதால் கிடைக்கும் ஐந்து பத்து நிமிடங்களெல்லாம் வாசிப்பேன் என்றார்.
ஒரு எட்டு வயதுப் பையன் சுதா மூர்த்தி அவர்கள் எழுதிய ஒரு புத்தகத்தைப் பற்றி பேசினான். இவர்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டது மிகச்சிறப்பு.
என் ஆதர்ஸ எழுத்தாளர் பெருமாள் முருகனின் "கூள மாதாரி" பற்றி ஒருவர் பேசினார்.
இறுதியில் அனைவரும் வாசித்த புத்தகங்களை புல்லிலமர்த்தி சுற்றி நின்று புகைப்படமெடுத்து ஆவணப்படுத்திக் கொண்டோம்.
மிகச் சிறந்த முன்னெடுப்பு
வாழ்த்துகள் குரேஷி கான்.
வாழ்க வளர்க!!!!
19 September, 2026
19.9.2023 நிகழ்வு
இன்று காலைச் செய்தியில் விஜய் ஆன்டனியின் மகள் தற்கொலை என்று பார்த்ததும் இதை எழுதத் தோன்றியது.
நமது இளமைப் பருவத்தில் டீன் ஏஜ் என்பது பொற்காலம். என்னைப் போல ஒரு சிலர் "காதல்" என்ற வேலியில் போற ஓணானை எடுத்து விட்டுக் கொள்பவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு பொற்காலம் தான்.
ஆனால் இன்று டீன் ஏஜ் என்பது போராட்டக் காலம். எத்தனை வகையான பிரச்னைகள். பெற்றவர்களாலேயே "பெட்" பண்ணி வளர்க்கப்பட்டு திடீரென ஒரு நாளில் உதவாக்கரை போல் உணர வைக்கப்படுபவர்கள்.
பள்ளி என்பது ஒரு அற்புத உணர்வைக் கொடுக்காமல் மதிப்பெண் என்னும் அச்சுறுத்தலைக் கொடுத்து கொண்டே இருப்பது.
பொதுவாகவே குறைந்து போன ஆரோக்கியம். அதனால் குறைந்து போன உற்சாகம்.
பேசவே முடியாத இன்னும் எத்தனை எத்தனையோ பிரச்னைகள்.
காதல் தான் எத்தனை விதமான நாடகங்களை நடத்தி விடுகிறது. ஒரு பக்க காதல். தான் விரும்பும் ஒருவர் பார்வை தன் பக்கம் திரும்பவே இல்லையே என்ற கவலை. அதை மீறி காதலிப்பவர்களில் இருவரில் ஒருவரின் தோழமையே தன் காதலை தட்டிப் பறிப்பதால் வரும் கவலை. இருவரும் நேர்மையாக காதலித்தாலும் பெற்றவர்களால் வரும் பிரச்னை. எத்தனை எத்தனை சிக்கல்கள். இவற்றோடு எப்படி வரும் பொற்காலம்.
பெற்றவர்களின் பொறுப்பு இப்போ கூடுதலாகி விட்டது. அன்று பிள்ளைகளை கண்டித்து வளர்ப்பதே சிறந்த வளர்ப்பாய் இருந்தது. இன்று கத்தி மேல் நடப்பது போல. கண்டிச்சது மாதிரியும் இருக்கணும் கண்டிக்காத மாதிரியும் இருக்கணும். "இருக்கு ஆனா இல்ல" ஸ்டைல்.
இந்த வயதில் தூக்கு முடிச்சை எப்படி போடுவது என்பதை எல்லாம் எப்படி தெரிந்து கொள்கிறார்கள். சொல்லிக் கொடுக்கத் தான் யூட்யூப் என்ற பேராசான் இருக்கிறானே!!
பிள்ளைகள் இப்படி முடிவெடுத்து முடிந்து போனால் பிறகு பெற்றவர்களுக்கு வாழ்க்கையில் என்ன இருக்கிறது. பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.
16 September, 2026
நம் வாழ்வில் அறிமுகமாகும் ஒவ்வொருவருக்கும் ஒரு பணி இருக்கும். ஒன்று நம்மால் அவருக்கோ அல்லது அவரால் நமக்கோ.
அந்தப் பணி முடியும் வரை நம்மோடு பயணிப்பார்கள். அந்த உறவு நம்மைப் பல ஆக்க பூர்வமான காரியங்களைச் செய்ய வைக்கும்.
அந்தப் பணி முடிந்ததும் அந்த உறவும் விலகி விடும். சில நேரங்களில் நாமே ஒரு கணக்குப் போட்டு ஒருவரை நெருங்கும் போது பிரபஞ்சம் நம்மோடு விளையாடிப் பார்க்கும்.
அந்த உறவை நம்மை விட்டுப் பிரித்து வைக்கும். சேர நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியையும் முறித்துப் போடும். பிரிவில் உருகித் தவிக்க வைக்கும். வெகு அபூர்வமாய் சிலருக்கு அந்த உறவை நிரந்தரமாய் பிரித்து விடும். வேறு சிலரை அவர்கள் பிரிவிற்கு மனதை தயார் செய்யும் நேரம் வரும் போது இணைத்து விடும். இதெல்லாம் பிரபஞ்சத்தின் கைங்கர்யம்.
13 September, 2026
நாவலின் பெயர் : ருத்ரா
ஆசிரியர் : வான்மதி ஹரி
விலை : ரூ 280
AVR publishing.
"ருத்ரா" நாவலின் மூலம் வான்மதி ஹரி என்ற எழுத்தாளர் எனக்கு அறிமுகமானார்.
ருத்ராவைப் பற்றிய அட்டைப் பட அறிமுகமே வாசிக்கத் தூண்டியது.
" அனலில் முக்குளித்த அக்னியவள்.
காரிகையின் கை கோர்த்து கயவர்களின் பிடியிலிருந்மு தப்பித்த கங்கையவள்.
ஆதவனின் அகம் சேர்ந்த ஆழியவள்
தன் குருதி தெறிக்க
அரக்கர்களை வதம் செய்ய
அவதாரம் எடுத்த ருத்ர சக்தியவள்"
இது தான் ருத்ரா என்று தன் பெயரை மாற்றிக் கொண்ட பவித்ரா பற்றிய அறிமுகம்.
தீரன் ஒரு விபத்தில் தாய் தந்தை இருவரையும் பறி கொடுத்த இளைஞன். காவல் துறை அதிகாரி.
ருத்ராவைப் பார்த்ததும் அவள் பின்புலம் எதைப் பற்றியும் ஆராயாமல் இவள் தான் தனக்கு உற்ற வாழ்க்கைத் துணை என முடிவெடுத்து மணக்கிறான்.
தீரனின் உயிர் நண்பன் அருண். உயிர் நண்பன் என்றால் உயிரையும் கொடுக்கத் துணிந்த நண்பன். அவனும் காவல் துறையைச் சேர்ந்தவன் தான்.
கதையின் ஆரம்பம் தீரன் , ருத்ரா இருவரின் காதல் வாழ்க்கையை அழகுற உரைக்கிறது. திடீரென்று கதை திசை மாறி பவித்ரா ருத்ராவாக ஏன் மாறினாள். எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து தப்பி வந்திருக்கிறாள் உலக அளவில் பெண்ணுடல் வியாபார சந்தையை துவம்சம் பண்ண எவ்விதம் உதவுகிறாள் என்று பரபரப்பாக பயணிக்கிறது.
புதிது புதிதாக புதுக் களங்களைக் கொண்டு கதை உருவாக்குபவர் பிறப்பது ஆரோக்கியத்தின் அறிகுறி தான்.
நான் ரொம்ப ரசித்த வாசித்த நாவல்.
10 September, 2026
OTT : Netflix
படம் பெயர் : Newton's 3rd law
இயக்குநர் : ராஜேஷ் கர்னா
மொழி தெலுங்கு. தமிழிலும் டப்பிங் உண்டு.
முக்கிய கதாபாத்திரங்கள்: சுமந்த், ஜெகதி பாபு, ட்ரிநாத் வர்மா, ரவி வர்மா, நேகா பத்தன் ஷெல்லி கிஷோர்.
கல்லூரியில நியூட்டனின் மூன்றாம் விதி படித்த ஞாபகம் இருக்குதா?
Every action has an equal and opposite reaction.
ஒவ்வொரு வினைக்கும் சமமான எதிர்வினை உண்டு.
அது தான் கதையின் ஒரு வரி.
கர்மா என்று சொல்கிறோம். அது நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்குமான வினையை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும் என்று வலியுறுத்துவது. ஒரு காலத்தில் தெய்வம் நின்று கொல்லும் என்றார்கள். இப்போ அப்படி இல்லை. நம் கண் எதிரே வினை புரிந்தவர்கள் அதன் பலனை அனுபவிப்பதை பார்க்கிறோம்.
இந்த கருத்துத் தான் படமெடுக்க வைத்திருக்கும். நன்றாக வாழ்ந்த குடும்பம் ஒன்று தங்கள் நகைக் கடை ஒன்று திருட்டுப் போனதால் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படுகிறது. குடும்பத் தலைவன் இந்த துயரத்தில் குடியில் மூழ்கி விடுகிறார். தாய் குடும்பப் பாரம் தூக்கிச் சுமக்க செவிலியாகப் பணிக்குச் செல்கிறாள். தங்கள் ஒரே மகனை எப்படியாவது படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்து விட வேண்டும் எனப் பாடுபட அவனோ தன் தாயையும் தந்தையையும் கடனில்லா சுபிட்ச வாழ்வு வாழ வைக்கத் தவறான பாதையை தேர்ந்தெடுக்கிறான்.
காவல் துறை அதிகாரியாக வரும் சுமந்த் கட்டுடலுடன் கூட திருத்தமான முகத்துடன் அந்தக் கதாபாத்திரத்தின் குணநலன் பிரதிபலிக்க தோதாக வருகிறார்.
மகனாக கல்லூரி மாணவனாக வரும் ட்ரிநாத் வர்மா இள வயதின் துடிப்பை , வேகத்தை, அன்பும் அராஜகமும் கலந்த அந்த வயதின் வெளிப்பாட்டை சிறப்புறக் காட்டுகிறார்.
யதார்த்தம் உணர்ந்து நடிக்கிறாரே ஷெல்லி கிஷோர் என்று தேடிப் பார்த்தால் "தங்க மீன்கள்" படத்தில் நடித்திருக்கிறார். 2006 இல் கேரளா அரசு தொலைக்காட்சி விருது வாங்கி இருக்கிறார்.
மகன் தேர்ந்தெடுத்த தவறான வழியில் குடும்ப நிலை உயர்ந்ததா?? தன் தாய் தந்தையை சந்தோஷமாக வைத்திருக்க முடிந்ததா ? படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். தவற விடக் கூடாத சிறந்த படம்.
த்ரில்லர் படங்கள் எடுப்பதில் மலையாளமும் தெலுங்கும் போட்டி போட்டு முன்னேறும் போது நாம் தமிழில் மட்டும் ஏன் இன்னும் பொட்டு வெடி வெடித்துக் கொண்டு இருக்கிறோம்.
08 September, 2026
நான் பொதுவாக அரசியல் பேசுவதில்லை. ஆனால் ஓரளவு அரசியல் தெரியும். என் தனிப்பட்ட கருத்தை நண்பர்களிடம் தனியாகப் பகிர்ந்து கொள்வேன்.
எந்தக் கட்சியின் கண் மூடித் தனமான தீவிர ஆதரவாளரும் இல்லை நான். கலைஞர் காலத்தில் அவர் பேசும் தமிழ் , வயதான காலத்திலும் அவருடையதான கடும் உழைப்பு பிடிக்கும். ஆனாலும் செல்வி ஜெ உடனான மோதலில் அவருடைய செயல்பாடு ரொம்ப அதிருப்தியைக் கொடுத்தது. எங்கள் வீட்டுக்குள்ளேயே எதிரெதிர் அணியாக நிறைய வாக்குவாதங்களைக் கொண்டு வந்தது.
ஆனால் திரு ஸ்டாலின் அவர்கள் முதல்வர் பதவியேற்ற பின் விமர்சனங்களுக்கு எதிர்வினை ஆற்றாமல் மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே குறியாக முன்னேறியது ரொம்பப் பிடித்திருந்தது . எவ்வளவோ நல்லது செய்தும் அவரது தொகுதியில் தோற்கடிக்கப் பட்டது மன உளைச்சலைத் தந்தது.
தற்போதைய சூழல் எல்லார் மேலும் அதிருப்தியைத் தருகிறது. பாவப்பட்ட பொது ஜனங்களுக்கு நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையைப் போக்குகிறது்
ஒரு சாரார் கூச்சலிடுவதும். அந்தச் சத்தத்தை மீறி பேசுபவர் பேசுவதும், தனது கை அசைவுகளாலேயே கூச்சலிடுபவர்களை மேலும் கூச்சலிட வைப்பதும் அயர்வைத் தருகிறது. ஒரு விதமான எதிர் மறை வைப்ரேஷன் பரவும். அது நல்லதில்லை. நாட்டுக்கும் தனிப்பட்ட மனிதர்களின் உடல் நலத்துக்கும்.
இது வரை நடந்ததைக் கூட அப்பாவி பொது ஜனம் அனுபவமின்மை என மறந்து போக வேண்டுமென்றால் ஒழுங்கைக் காக்க வேண்டியவர் கையறு நிலையில் அமர்ந்திருக்காமல் தலையிட வேண்டியது அத்தியாவசியம். வெளி நடப்பு என்பது நாகரீகமான முறையில் காட்டும் எதிர்ப்பு. பேசும் அத்தனை பேருமே கண்ணியம் காக்க வேண்டியது அத்தியாவசியம். அரசியல் மாற்றம் வேண்டும் என்று களமிறங்கிய 30+ 40+ காரர்களுக்கு ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடக் கூடாது.
இது தவிர்க்க முடியாமல் வந்த அரசியல் பதிவு தான்.
07 September, 2026
#நாவல் அறிமுகம் #கருணைநதி
நாவலின் பெயர் : கருணை நதி
ஆசிரியர் : மிதையா கானவி
பதிப்பகம் : புக் வைப்
விலை. : 180 ரூபாய்
நூலாசிரியர் போர்க்களத்தில் கோரமான யுத்தத்தை நேரில் கண்டு , களத்தில் காயமடைந்து, உயிர் தப்பிய நேரடி சாட்சியம் .
கதை இலங்கைப் போரின் போது மக்கள் பட்ட அவதிகளை சொல்கிறது. சொந்த வீடு விட்டு, நாடு விட்டு , தான் சேர்த்த அத்தனை செல்வங்களையும் இழந்து புலம்பெயர்வது பெரும் வலி. அதை விடக் கொடுமை போர் நடக்கும் இடங்களில் போராடிக் கொண்டே உயிர் வாழ்வது.
ஆனால் அந்தத் தளத்திலும் அழகான ஒரு காதலை சொல்லி இருக்கிறார் ஆசிரியர். திவா 17 5 2009 வரை வன்னியிலிருந்து பின் இடம் பெயர்ந்து வவுனியா புனர்வாழ்வு மையத்தில் தஞ்சமடைந்தவன்.
மையத்தில் அவர்களை மாடுகள் போல் அடைத்து வைத்திருந்ததாகவும் நம் நாட்டில் மாடுகளுக்கு கூட அதைவிட அதிக சுதந்திரம் இருந்ததாகவும் எரிச்சல் அடைகிறான். போரில் தப்பி வந்து முகாமில் இருந்த சிலர் நோய்வாய்ப்பட்டும் இறக்கிறார்கள். படுத்துறங்கவோ உடைமாற்றவோ தனியிடம் எவருக்குமில்லை. ஒவ்வொரு வேளை உணவுக்கும் வரிசையில் நின்று வாங்க வேண்டி இருந்தது. கொஞ்சம் சமயம் தப்பிச் சென்றாலும் உணவு இல்லாமல் தவிக்க வேண்டி வந்தது.
உணவு திண்டாட்டம் இப்படியானால் குடிப்பதற்கே தண்ணீர் தட்டுப்பாடான இடத்தில் குளிப்பது எப்படி . அத்தியாவசிய அடிப்படை தேவைகளுக்கே போராட்டம் . இதுதான் போரின் அவல நிலை.
அங்கே ஒழுங்காக வாரப்படாத தலைமுடி, செருப்பில்லாத கால்கள் அழுக்கான ஆடையோடு தான் ஒரு காலத்தில், ஒருதலையாகக் காதலித்த மருத்துவர் சங்கவியை பார்க்கிறார் திவா.
தன் நண்பன் கரன் மூலம் தன் உயிரோடு, பலரையும் காத்த அவள் இருப்பிடத்தை அறிந்து போரில் தான் தாக்கப்பட்டது, தனக்கு சங்கவி மருத்துவ உதவி செய்தது, காக்க முற்படும்போது அவளுடன் பணிபுரிந்த மருத்துவர் குண்டடிப்பட்டு இறந்தது எல்லாம் விளக்கமாக எழுதி கடிதம் போடுகிறான்.
போரின் வலிமிகு தருணங்களை வாசிக்க வாசிக்கப் பதை பதைத்து போகிறது நெஞ்சம் . ஆனால் அந்த கடிதம் சங்கவியின் மனநிலையை மாற்றி தன் அத்தியாவசிய கடமை என்ன என்று உணரச் செய்கிறது . கடிதம் எழுதியது யார் என்று காட்டிக் கொள்ளாமலேயே சங்கவியின் மருத்துவத் தொழிலுக்கு உதவி செய்கிறான் திவா.
ஒரு முறை காதலைச் சொல்லத் தயங்கி இழந்த தன் காதலியை மறுபடியும் இழந்து விடக்கூடாது என்று பயத்தால் வந்த தயக்கம் அவன் காதலைச் சொல்ல தடை போட்டுக்கொண்டே இருக்கிறது.
கடமையைக் காதலிக்கும் சங்கவியுடன் இடையில் வந்த தன் காதலை சொன்னாரா? இருவரும் இணைந்தார்களா? முகாமிலேயே இருந்தார்களா? புலம் பெயர்ந்து வசதியான வாழ்க்கை வாழ்ந்தார்களா? எனப் பலப்பல கேள்விகள் எழலாம். "கருணை நதி " அதற்கான பதிலைத் தரும் தவறவிடாமல் வாசிக்க வேண்டிய ஒரு நாவல்.
06 September, 2026
உள்ளம் நொறுங்காமலிருக்க
உடைத்துப் பேசுவோம் பாகம் ஒண்ணு.
பெண்கள் வேலைக்கு போகணும். அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேணும். பெண்கள் முன்னேறணும்னு பேசும் போதெல்லாம் சந்தோஷமாத் தான் இருக்குது. ஆனால் அந்தப் பெண்கள் மாதாந்தர நோவினால் படும் அவஸ்தைகளை நினைத்துப் பார்க்கிறோமா? இப்போ ஒரு சில பதிவுகளைப் பார்த்ததால் எனக்கும் எழுதத் தோன்றியது.
ஆரம்ப காலங்களில் பெண்கள் பழைய துணியைப் பயன்படுத்தினார்கள். அது எந்த அளவுக்கு சுகாதாரமாய் இருந்திருக்கும்னு இப்போ நினைச்சாலே நடுங்குது. (நாப்கின் கண்டு பிடிச்ச மகராசனை கை எடுத்து கும்பிடணும். ) அந்தத் துணியை நம்ம சொந்த வீடே ஆனாலும் மறைவாய் பிறர் கண்ணில் படாமல் அலசிக் காயப் போட அவ்வளவு சிரமப்படணும். பதிமூணு பதினாலு வயதில் தண்ணீரை ஊற்றி காலால் தேய்த்து அதன் பின் சோப்பு போட்டு துவைப்பது மனதைக் கல்லாக்கும் முதல் கட்டம். துவைத்தாலும் கறையின் வெளிவரி மறையாமல் தான் இருக்கும். காற்றடிக்கும் போது வரும் மெல்லிய நாற்றம் உள்ளூர கூச வைக்கும். சகோதரர்களோடு பிறந்த பிள்ளைகளை, பொதுவான கழிவறை கொண்ட காம்ப்பௌண்ட் வீடுகளில் வாழ்ந்த பெண் பிள்ளைகளின் நிலை நினைத்தால் கண்ணில் இரத்தமே வரும்.
அந்த அழுத்தமான துணி பட்டு தொடையின் உள் பக்கம் சில நேரம் ரணமாகிப் போகும். ஒரு சிலருக்கு அந்த நேரத்தில் தொடை ஒன்றோடொன்று உரசுவதால் தீப்பட்டது போல் எரியும்.
இந்தக் கஷ்டங்கள் தான் காரணமோ பல பெண் குழந்தைகள் தாம் பெரிய பொண் ஆகி விட்டோம் என்று அறிந்ததும் அழும். காரணம் கேட்டால் தெரியாது. இப்போ பரவாயில்லை. ஓரளவு விளம்பரங்கள் பார்த்து விஷய ஞானம் கொஞ்சம் இருக்குது. அதெல்லாம் தான் மாறிடுச்சே அப்புறம் ஏன் பதிவு?
இன்னும் பேச வேண்டிய விஷயங்கள் , அனுசரணையோடு பார்க்க வேண்டிய விஷயங்கள் ஏகமாய் இருக்குது. சில பெண் குழந்தைகளுக்கு முதல் முறை இரத்த கசிவு வந்த பிறகு சில மாதங்கள் வராது. அதன் பின் தொடர்ந்து வரத் தொடங்கும். ஆனால் ஒரு சிலருக்கு அப்போதே மாதா மாதம் வரத் தொடங்கி விடும். பன்னிரெண்டு வயது தொடங்கி ( இப்போது பத்து வயதுக் குழந்தைகளே மெச்சுவர்ட் ஆகி விடும் பரிதாபம்) கிட்டத்தட்ட நாற்பதாண்டுகள் விக்ரமாதித்தன் வேதாளத்தைச் சுமந்தது போல் இந்த துயரத்தைச் சுமக்க வேண்டும்.
ஆனால் சில குழந்தைகளுக்கு சில மாதங்கள் வராமலே இருந்து பின் அதிகமாக இரத்தப் போக்கு இருக்கும். எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு மாதம் தோறும் முதல் அல்லது இரண்டாம் நாள் கடுமையான வயிற்று வலி இருக்கும். மாதா மாதம் அன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்து வந்த பின் ஆசிரியர்களிடம் திட்டும் வாங்கிக் கட்டுவாள்.
சிலருக்கு முந்தின மாதம் வந்த தேதியில் இருந்து 28, 29, 30 இவற்றில் ஏதாவது ஒரு முறையில் மாதம் தோறும் வரும். அப்படி வந்தால் சிறப்பு. அப்படி இல்லாமல் தாறுமாறாக வந்தாலோ அதிகப்படியான அடி வயிற்று வலி வந்தாலோ தாமதிக்காமல் பெண் மருத்துவரை அணுகுங்கள். நீர்க்கட்டிப் பிரச்னைகளோ அல்லது வேறு ஏதாவது பிரச்னைகளோ இருந்தால் ஆரம்பத்திலேயே , அல்லது திருமணம் செய்து கொடுக்கும் முன்பாவது சரி செய்து விட வேண்டும். திருமணமாகி குழந்தை பிறக்காமல் தவிக்கும் பல பெண் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது.
மனித குலம் தழைக்க இந்த வேதனை கடக்கும் பெண்களுக்கு வீட்டிலோ சமுதாயத்திலோ சுய மரியாதையாவது தரப்படுமா என்றால் அதுவும் இல்லை.
ஏன் பெண் குழந்தைகளுக்கு மட்டும் தான் பிரச்னையா ஆண் குழந்தைகளுக்கு இல்லையா என்றால் அவர்களுக்கும் வேறு விதமான பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையும் பேசுவோம். பேசத் தோன்றும் போதெல்லாம் எழுதுகிறேன். நீங்களும் உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்.
02 September, 2026
நாவல் : பஃறுளி
ஆசிரியர் : நர்சிம்
மிளிர் பதிப்பகம் .
விலை ரூ 300
முதல் பதிப்பு : மே 2024
" குமரியில் இருந்து மதுரை நோக்கிப் பாய்ந்த நதி " னு சிலப்பதிகாரத்துல வரும் ஒரு நதியின் பெயர் தான் பஃறுளி. ஆம். அதாவது எல்லா நதிகளும் கடலை நோக்கிப் போகும் போது கடலிலிருந்து நகரத்தை நோக்கி ஒரு நதி ஓடி வந்தால் எத்தகைய விநோதமோ அதைப் போன்றது கதையின் கரு.
2007 இல் எழுதத் தொடங்கி இருக்கிறார் நர்சிம். சிறுகதை, நாவல் , கவிதை என மூன்று தளங்களிலும் எழுதக் கூடியவர்களுள் ஒருவர் இவர். மனித உறவுகளின் எழுத்தாளர் என்று எழுத்தாளர் பிரபஞ்சனால் பாராட்டப்பட்டவர் . இவர் எழுதிய "அய்யனார் கம்மா" என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு பெட்னா உட்பட பல விருதுகளை வென்று உள்ளது சிறுகதைகளிலேயே காதலை அழகுபடச் சொல்லும் ஆசிரியருக்கு பஃறுளி நாவல் ஒரு பெரும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது
ஆசிரியர் கோவலன் கண்ணகியை விட்டுச் சென்று மாதவியுடன் வாழ்ந்து பின் திரும்பி வந்தது போல கண்ணகி சென்றிருந்தால் என்ன ஆகி இருக்கும் என்ற சிந்தனையில் எழுந்தது இந்த கதை என்கிறார் ஆசிரியர் .
மாயக்கண்ணன், கோமதி இருவரும் புதிதாகத் திருமணமான இளம் தம்பதிகள். ஆசிரியர்கள். திருமணத்துக்கு பின் ஒரே பள்ளியில் பணிபுரிபவர்கள். அது மதுரைக்கு அருகில் உள்ள கிராமத்தில் உள்ள பள்ளி. மதுரைக்காரரான நர்ஸிமுக்கு மதுரை தமிழில் கொஞ்சி விளையாட ஏற்ற தளம்.
காதலுக்கு மட்டுமல்ல நட்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் மதுரை மக்கள் . நட்பும் அன்பும் விருந்தோம்பலும் அவர்கள் பேச்சிலேயே நடம் புரியும். மாயக்கண்ணனும் , அவர் தோழர்களும், முக்கிய உயிர்த்தோழனான தேவாவும் பேசும் இடங்கள் அவ்வளவு ரசிப்புக்குரியதாய் இருக்கும். கம்யூனிசத்தில் ஆர்வமுள்ள தோழர்களின் உரையாடலும் , கதை நடந்த காலத்தைக் குறிக்க தோழர் லீலாவதியின் மரணத்தை பேச்சின் நடுவில் கொண்டு வந்ததும் சிறப்பு.
அந்தப் பள்ளி வளர்ச்சியின் ஒவ்வொரு செல்லிலும் இருக்கும் எம் கே என்னும் மாயக்கண்ணன் தான் வரவேண்டிய உதவி தலைமை ஆசிரியர் பதவிக்கு மாதவன் என்பவர் வருகிறார் என்பதாலேயே எதிரியாக பாவிக்கிறார். மாதவன், தன் மனைவியிடம் முகம் மலர பேசும் பொழுது மாயக்கண்ணனுக்கு பெரும் வில்லனாகவே மாறிவிடுகிறார்.
கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் பணிபுரிவது ஒரு சில அனுகூலங்கள் இருந்தாலும் பல நேரங்களில் இடைஞ்சலாகத் தான் இருக்கும். பணி நேர செயல்பாடுகளின் தாக்கம் வீட்டிலும் தொடரும்.
நர்சிம்மின் கதைகளில் எப்பொழுதுமே நாம் தெரிந்து கொள்ள ஒரு புது விஷயம் இருக்கும். இரும்பு ஸ்டாண்டில் மாட்டை நிறுத்தி அசை விடாமல் வைத்து மருத்துவர் வைத்தியம் பார்க்கும் விஷயம் இந்த நாவலில் எனக்கு பதாய் இருந்தது.
" அடுத்து என்ன கேட்க போகிறாய் எனும் நோக்கில் நிமிர்ந்து நின்றது அவனை சலனமற்று இருக்கச் செய்தது." கோமதியை சந்தேக வார்த்தைகளால் கொல்லும் போது அவள் நேர் கொண்ட பார்வை அவனை மௌனமாக்குகிறது. பொதுவாக ஒருவர் மேல் சந்தேகம் வர பெரிதாக காரணம் ஒன்றும் இராது. அதை அலட்சியப்படுத்தினால் ஒன்றுமில்லாமல் போகக்கூடிய விஷயம் தான் நடந்திருக்கும். அதை பெரிதுபடுத்துவதாலேயே சில நேரங்களில் உண்மையாகி விடும் வாய்ப்புண்டு. மாதவனிடம் கோமதி இயல்பாக பேசுவது கூட மாயக்கண்ணனுக்கு விகல்பமாகத் தோன்றி அவன் மனதின் அமைதியை குறைக்கிறது . மொத்த வீட்டின் அமைதியையே அழிக்கிறது.
அன்பைக் காட்டுவது போல் அக்கரை இருப்பது போல் காட்டி பெண்ணைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் தந்திரம் தான் மாயக் கண்ணன் பயன்படுத்துவது.
"நம்மளப் பிடிக்காமப் போயிடுமோங்கிறத விட இன்னொருத்தர பிடிச்சிறக் கூடாதுன்ற பயம் தான மதி மருள வைக்கிது" // ஆண் மனதை பெண்களுக்கு புரிய வைக்கும் இது போன்ற வரிகள் பல உண்டு.
"நீயெல்லாம் ராஜா மாணிக்க இருந்தா மட்டும் போதாதுடா ராஜா மாணிக்க யோசனையும் பண்ணணும் . சிலத பத்தியெல்லாம் யோசனை கூட பண்ணக் கூடாது"
"தகரத்துல சேர் செஞ்சு பளபளன்னு இருக்கேன்னு சொல்லுறதா தேக்குல உட்கார்ந்தவன் போவியா"
அதே போல தன்னம்பிக்கை அற்ற ஆண்களுக்கு சரியான அறிவுரை சொல்லும் இது போன்ற வரிகளும் உண்டு.
"யாரும் யாரிடமும் தன்னை குற்றவாளியாகக் காட்டிக் கொள்ள தயாராக இல்லை எல்லோருக்கும் ஒரு நியாயம்" இன்றைய நடைமுறையில் மனித மனம் கொண்டுள்ள மாற்றத்தை எந்தத் தவறையும் ஏற்றுக் கொள்ளாத மன நிலையையும் நடுவே காட்டுகிறார்.
எம். கே ( மாயக் கண்ணன்) தன் நண்பனின் கல்யாண வேலையா சுத்தும் போது கோமதி அவளுக்குப் பிடிச்சதைச் செய்யலாம்னு சொல்ற லிஸ்ட்ல "நினைச்ச நேரம் கழிவறை போகலாம்' னு எப்படி சேர்த்தீங்க நர்சிம். காலை நேர அவசர வேளை(லை)யில் இந்தக் கழிவறைப் பிரச்னையால் உடல் நலம் குன்றிய பெண்கள் எத்தனை பேர் தெரியுமா. அதிகம் பேசப்படாத ஒரு பிரச்னையை மெல்லத் தொட்டு கடந்து விட்டீர்கள்.
யதார்த்தமான வாழ்க்கையைச் சொல்லி நகர்ந்து செல்லும் கதை. மதுரையின் கள்ளழகர் ஆற்றிலிறங்கும் வைபவத்தை நேரிலிருந்து பார்த்தது போல் உணர வைக்கும் கதை.
29 August, 2026
பௌர்ணமிப் பெண்ணின்
நிறை அழகிலும்
மயங்காது
மாமுனி போல்
இறுகி இருண்டு கிடந்த
நீள் நீர்ப்பரப்பின்
"சுனாமி" எனும்
கோரத் தாண்டவம்
என் ரசனையைச்
சிதைத்த நேரம் தான்
வந்தது ஒரு செய்தி
" நேபாளத்தில் பேரழிவு"
எங்கள் "இதய" தேசத்தின்
ஒரு பகுதியை
அரணாய்க் காத்த
வெண்பனி சூழ் இமயத்திலும்
உலக வெப்பமடைதலால்
அமைதியான
அதிரடித் தாக்குதல்.
பேரிரைச்சலோடு
நீர் கிளம்பி வரும் போது
மக்களோடு மாக்களையும்
கபளீகரம்.
இங்கே
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
எங்கே!!
இதயத்தின் வலியை
இடது கை உணர்த்துவது போல
இமயத்தின் வலியை
உலகுக்கு
உரக்க உரைத்திருக்கிறது
நேபாளம்.
உயிரைத் தவிர
அத்தனையும் அடித்துச் செல்வதை
பரிதவித்து பார்த்து
நிற்குது
ஒரு குடும்பம்.
ஒருவரை ஒருவர்
பற்றிக் கொண்டு
உயிரைக் காத்துக் கொண்ட
முதியவர் இருவர்.
நீரின் வேகத்திலும்
நீந்திக் கரை சேர்ந்த
பரிக்களின்
கூட்டம் ஒன்று.
விதி உள்ளோர்
பிழைத்துக் கொள்ளட்டும்
எனக் விழி மூடிக்
கிடந்தது பிரபஞ்சம்.
உடம்பானாலும்
உலகமே ஆனாலும்
கட்டுக்குள்
இருந்தால் மட்டுமே
அற்புதம்.
என்ன செய்யப்
போகிறோம் நாம்.
27 August, 2026
உடன்படிக்கைப் பேழை. இன்றைய ஹிந்து திசை நாளிதழில் என் எழுத்து
உடன்படிக்கை பேழை என்றொரு சொற்றொடர் வேதாகமத்தில் அடிக்கடி வரும். அது என்ன உடன்படிக்கை பேழை? தூய்மையான தங்கத்தால் மூடப்பட்ட ஒரு புனித மரப்பெட்டி. இஸ்ரவேலுடன் கடவுள் தொடர்பு கொண்ட ஒரு சாதனமாக நம்பப்பட்டது. சித்திம் மரத்தால் செய்யப்பட்டு உள்ளேயும் வெளியேயும் தங்கத்தால் பூசுவார்கள். இதன் மூடியை "கிருபாசனம்" என அழைப்பார்கள் . அந்த மூடியின் மேல் இரண்டு வான தூதர்கள் நிற்பது போன்ற அமைப்பு இருக்கும் .
அந்த உடன்படிக்கை பேழைக்குள் ஆண்டவர் மோசேயிடம் தந்த பத்துக் கட்டளைகள் எழுதிய இரண்டு கற்பலகைகள் , மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரம், துளிர்த்த ஆரோனின் கோல் ஆகியவை இருக்கும் . இது "சாட்சிப் பெட்டி " என்றும் அழைக்கப்படும்.
மோசேயின் பிறப்பு ஒரு சுவாரசியமான விஷயம் . எகிப்து மன்னர் ஒருவர் எபிரேய மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா இருவரிடமும் தன் நாட்டுல் பிறக்கும் குழந்தைகள் ஆண் மகவுகளாக இருந்தால் கொன்று விடுங்கள். பெண் குழந்தைகள் ஆனால் வாழ விடுங்கள் என்று கட்டளையிட்டிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் ஆண் குழந்தைகளைக் கொல்லாமல் தப்புவித்து மன்னர் விசாரித்த போது எபிரேய பெண்கள் வலிமையானவர்களாக இருப்பதால் நாங்கள் போகும் முன்னே குழந்தை பெற்று விடுகிறார்கள் என்றனர். எனவே மன்னர் தன் குடிமக்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் நைல் நதியில் வீசி விட வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பிறந்தால் வாழ விடலாம் என்றும் ஆணையிட்டார்.
அந்த சமயத்தில் லேவி குலப் பெண் ஒருத்தி அழகான ஆண்மகவை பெற்றாள். மூன்று மாதங்களாக மறைத்து வைத்துப் பின் முடியாத போது கோரைப் புல்லால் ஒரு பேழை செய்து அதன் மேல் நிலக்கீல் பூசி அதனுள் அக்குழந்தையை வைத்து நைல் நதியின் நாணலுக்கு இடையில் விட்டாள். குழந்தையின் சகோதரி மறைந்திருந்து பார்த்திருந்தாள்.
அப்போது பார்வோன் மன்னனின் மகள் நீராட வந்தாள். அந்த பேழையை எடுத்து அதனுள் ஒரு அழகான ஆண் குழந்தையைக் கண்டாள். அழும் குழந்தையைக் கண்ட அதன் சகோதரி இளவரசியிடம் சென்று " இந்த குழந்தையைப் பாலூட்டி வளர்க்க ஒரு செவிலியை நான் அழைத்து வரவா?" என கேட்கச் சம்மதம் கிடைத்ததும், குழந்தையின் தாயையே அழைத்து வந்தாள். குழந்தை வளர்ந்த பின் இளவரசியிடம் கொண்டு விட "நீரிலிருந்து கிடைத்த மகன்" என்பதால் "மோசே" எனப் பெயரிட்டு வளர்த்தாள்.
மோசே தன் இனத்தவன் ஆகிய எபிரேயனை எகிப்தியன் ஒருவன் அடிப்பதைப் பார்த்து சுற்றிலும் யாரும் இல்லை எனக் கண்டு அவனைக் கொன்று மணலுக்குள் புதைத்தார். தான் செய்தது வெளியே தெரிந்து விட்டது என்ற அச்சத்தில் , பார்வோன் மன்னன் தன்னை கொல்லத் தேடியதால் தப்பியோடி, மிதியான் நாட்டில் குடியேறி, சிப்போரா என்ற பெண்ணை மணந்தார். அந்த மிதியானில் சீனாய் மலையில், ஒரு எரியும் முட்புதரிலிருந்து ஆண்டவர் உரத்த குரலில் பத்து கட்டளைகளைக் கூறி, இரு கற்பலகைகளில் எழுதி, மோசே இடம் தந்தார்.
இந்தப் பத்து கட்டளைகளையும் முக்கியமான இரண்டு கட்டளைகளில் அடக்கலாம்.
(1) உன் முழு இதயத்தோடும் ஆன்மாவோடும் மனதோடும் உன் தேவனாகிய ஆண்டவரை அன்பு செய்வாயாக.
(2) உன்னை நேசிப்பது போல் உன் அண்டை வீட்டாரையும் அன்பு செய்வாயாக.
அத்தனை மதங்களும் போதிப்பது அன்பு ஒன்றைத் தானே. அன்பு செய்வோம்.
22 August, 2026
Cocktail 2
ஹிந்தி திரைப்படம் காக்டெயில் 2. இயக்குநர் : 2012 இல் காக்டெயில் என்ற படத்தை இயக்கிய ஹேமி அவர்கள்.
முக்கிய கதாபாத்திரங்கள் ஷாகித் கபூர், ராஷ்மிகா மன்டனா, க்ருத்தி சனான், மீமீ படம் பார்த்ததிலிருந்து க்ருத்தி சனானின் பெரிய ரசிகை ஆகி விட்டேன் நான். முகம் அவ்வளவு அழகாக உணர்வுகளை வெளிப்படுத்தும்.
ராஷ்மிகாவுக்கு ஒரு துள்ளல் முகம். அவர் முகம் காட்டும் புன்னகை ஒரு நேரம் அசட்டுத் தனத்தை பிரதிபலிக்கும். அடுத்த நொடி களங்கமற்ற தனத்தைக் காட்டும். அதனால் கதாநாயகன் ஷாகித் பெரிதாய் ஈர்க்கவில்லை என்றாலும் படம் பார்க்க நினைத்தேன்.
பள்ளிக் காலம் தொட்டே நண்பர்களாகி அதன் பின் காதலர்களாகி லிவ் இன்னில் வாழும் நாயகனும் நாயகியும் திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள். எந்த வித ஆட்சேபணையுமில்லாமல் திருமணம் வரை செல்கிறதே என யோசிக்கும் போது, தன் காதலன் வாய்ப்புக் கிடைத்தாலும் உத்தமனாக இருப்பானா என ஒரு உருப்படாத சந்தேகம் அவளுக்கு வருகிறது. வாய்ப்புக் கிடைத்தால் இரண்டாவதை அனுபவிக்கலாமே என எண்ணம் வரும் ஆணுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறாள்.
ஒரு பெண் காதலனுடன் போகும் போது அழகான பெண்ணை உடன் வைத்திருப்பதே ஆபத்து. அதில் என் காதலனுக்கு சோதனையை ஏற்படுத்தி அவன் மனச் சுத்தமுடையவன் தானா என உறுதிபடுத்திக் கொடு என அந்த அழகான பெண்ணிடமே பொறுப்பைக் கொடுத்தால் எவ்வளவு நாசம் விளையும்.
அது தான் கதைக்கான கரு. ஆனால் படத்தின் முடிவில் ரெண்டு பெண்களையும் இடதும் வலதுமாக அந்த காதலன் வாங்கும் போது ஆண்கள் மேல் இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும் .
எந்த ஒரு நட்பும் அறிமுகமானதும் ஒரு புத்துணர்ச்சி கொடுக்கும். ஆனால் இன்றைய சமூக ஊடகம் அந்த புத்துணர்ச்சி என்றும் இருக்கணும் என்பதை வலியுறுத்துகிறது. அது நடைமுறைக்கொவ்வாதது. இதைப் புரிந்து கொள்ளாததாலேயே பல உறவுப் பிளவுகள் நேர்கின்றன.
இன்றைய தலைமுறைக்கு நல்ல புரிதலை உண்டாக்கும் ஒரு படம். ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு வசனங்கள் உண்டு. வேகமாகத் தொடரப் பழகி விட்டால் படம் நன்றாகவே புரியும்.
என்ன ஒன்று ஆரம்பத்தில் படம் ஒரு அடலட்ஸ் ஒன்லி படமாகவே இருக்கிறது. சிசிலி என்னும் இடத்தை "நன்றாகச்" சுற்றிக் காட்டி இருக்கிறார்கள். ஆனால் போகப் போக படம் தன் போக்கை மாற்றிக் கொள்கிறது.
நல்ல ஒரு படம் பார்த்த உணர்வு.
18 August, 2026
#இடி தாங்கி
ஒரு பதிவு பார்த்தேன் அவர்கள் இருந்த அடுக்ககத்தின் மொட்டை மாடியில் இடி விழுந்து நெருப்பு பிடித்ததாகவும். ஒவ்வொரு வீடாக வந்து அவர்களை வெளியேற்றியதாகவும் சொன்னார்கள்.
எனக்கு நினைவடுக்குகளின் ஆழத்திலிருந்து ஒரு எண்ணம் கீறிக் கிளம்பியது. எங்க வீடு சர்ச்சுக்கு அருகில் தான். இப்போ இருக்குற அளவுக்கு பெரிய சர்ச் கிடையாது ஆனாலாம் கோபுரம் உயரமாக இருக்கும். அதன் உச்சியில் திரிசூலத்தின் அமைப்பில் ஒரு இரும்புத் தண்டு வைக்கப் பட்டிருக்கும். அதன் பெயர் இடிதாங்கி.
எங்க வீட்டு மொட்டை மாடியிலிருந்து பார்த்தா அந்த இடி தாங்கி நல்லாத் தெரியும். அப்போ எங்க அப்பா சொல்வாங்க. இடி ஒஇழுந்தா சுற்று வட்டாரத்துல ரொம்பத் தூரத்துக்கு பாதிப்பு இருக்கும். அதனால தான் உயரமான இடத்துல அந்த இடிதாங்கிய வைப்பாங்க. இடி விழுந்தா அந்த இரும்புக் கம்பி இடியின் சக்தியை இழுத்து மண்ணுக்குள் அனுப்பி விடும். பக்கத்தில உள்ள வீடுகளுக்கு எந்தப் பாதிப்பும் இராது. Shock obsorber னு இப்போ புரியுது. அப்போ நாம பாதுகாப்பா இருக்கிறோம்னு மட்டும் தான் தோணுச்சுது.
இப்போ பெருநகரங்களில் உயர உயரமா கட்டிடங்களைக் கட்டுறாங்களே அங்கே எல்லாம் இந்த இடி தாங்கிகள் வைக்கிறாங்களா? எங்கேயும் பார்த்த ஞாபகமே இல்லையே?
இடி தாங்கிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கீங்களா இப்போ அவை இருக்கின்றனவா? கமென்ட்டுல சொல்லுங்களேன்.
16 August, 2026
என் சிறு வயசுல தினம் காலையில இட்லி, தண்ணியா தேங்காய் சட்னி தான். தேங்காய் கூட ஓடிப் போய் பக்கத்துல உள்ள ரெட்டியார் கடையில சில்லு வாங்கி வந்து தான் சமையல் நடக்கும். நம்ம யோகம் போற நேரம் புதுத் தேங்காய் உடைக்கணும்னா உடைச்சு அப்படியே தண்ணியை நம்ம வாயில விடுவார். சின்ன பிள்ளைக்கு வாய் சின்னதா தானே இருக்கும். அது வாய்க்கு அந்தப் பக்கமும் இந்த பக்கமும் ஓடி சட்டையை எல்லாம் நனைக்கும்.
வித்தியாசமான பலகாரம்னா ஞாயிற்றுக் கிழமை தான். அப்போ எங்க வீட்டுல வேலை செய்து கொண்டிருந்தவள் வள்ளியம்மா தாட்டியமான ஆளு. வகை வகையா செஞ்சு கொடுப்பாங்க. அப்போ கூட பண்டிகை நாட்கள்ல மட்டும் பலகாரமா இட்லி சாப்பிட்ட குடும்பங்கள் பல இருந்தன.
அதுக்கும் கீழா வெங்காயத்தையோ பச்ச மிளகாயையோ கடிச்சுகிட்டு கஞ்சி குடிச்சுகிட்டு பள்ளி வந்ம பிள்ளைகளும் இருந்தாங்க.
ஆனால் இப்போ புரோட்டீன் எவ்வளவு இருக்கணும். கொழுப்பு சத்து எவ்வளவு இருக்கணு்னு பார்த்து பார்த்து சாப்பாடு கொடுக்கிறாங்க.
அதிலயும் good cholesterol
Bad cholesterol
Good colostral ல
Soluble cholesterol
Insoluble cholesterol
அடேங்கப்பா இப்படி பார்த்து பார்த்து கொடுக்கும் போது நல்ல ஆரோக்கியமான பிள்ளைகளா இருக்கணும்ல அது தான் இல்ல. "ச்" என்றால் சளி. "ம்" என்றால் காய்ச்சல்.
நாம ரொம்ப நொர்நாட்டியமா பார்க்கிறோமா இல்ல இப்படித்தான் இப்போ இருக்கணுமா?
ஒண்ணுமே புரியல உலகத்துல . என்னவோ நடக்குது மர்ம்மா இருக்குது.
ஒண்ணுமே புரியல உலகத்துல.
15 August, 2026
நாவல் : வீனஸ்
ஆசிரியர் : பா. கண்மணி
முதல் பதிப்பு டிசம்பர் 2025
விலை : ரூ 180
வீனஸ் ஒரு அல்ட்ரா மாடர்ன், ஆண் பெண் இருவருக்குமான அழகு நிலையத்தின் பெயர். அதன் உரிமையாளர் ரஞ்சனி.
"ஜெபரா மலர்க்கொத்தை வாங்கி அதன் செர்ரி பிங்க்கை நெஞ்சோடு மென்மையாய் அணைத்த ரஞ்சனி.....' கதைத் தொடக்கமே நம்மை அறிமுகமில்லாத ஒரு ஏரியாவுக்குள் கூட்டிச் செல்லப் போகிறது என மனசுக்குள் மணி அடித்துச் சொல்கிறது. அது தான் நடக்கிறது. பெங்களூரிலுள்ள ஒரு அழகு நிலையம் அதன் செயல்பாடுகள் அங்கு வருபவர்களின் மன நிலைகள் எல்லாம் நமக்குப் புதிதாக இருக்கிறது.
அங்கு வரும் ரித்விக் ஒரு கலைஞன். முன்னணி ஆடை வடிவமைப்பாளர். பட்டு லுங்கியை முன் புறம் கொசுவித் தைத்து உடுத்தி மேலே ஒரு ஷெர்வானி அணிந்திருக்கிறார். அவருடன் கட்டுடல் கொண்ட ஒரு இளைஞரும் வருகிறார். ரித்விக்கின் மகனை விட ஏழெட்டு வயது மூத்தவராய் இருக்கலாம். அவனை அவர் காதலோடு பார்த்துக் கொண்டிருந்தார் என்று வருகிறது. " அத்தனை பெரிய ஆளுமையின் அலைக்ழிப்பைக் கண்ட ரஞ்சனி வியந்தாள் " என வருகிறது. இது போல் சில இடங்கள் கூடுதலாய் சில வரிகள் வந்திருந்தால் அநாகரீகமாக ஆகி இருக்கும் என்ற அளவில் அளவாகக் கத்தரிக்கப்பட்டு இருக்கின்றன.
அழகு நிலையம் கதையின் களம் என்பதால் "எதைச் செய்ய வேண்டும் என்பது ்மட்டுமல்ல எதைச் செய்யக் கூடாது என்பதிலும் தோற்றப் பொலிவு அடங்கியிருக்கிறது " போன்ற அழகுக் குறிப்புகளும் கதையில் விரவிக் கிடக்கின்றன.
ஒரு தனித்த , வளர்ந்த மகளை வளர்க்கும் தாயின் சிரமங்களையும் சொல்லி இருக்கிறார். தான் நினைத்தது நடக்காத போது மகள் "அப்புறம் எதுக்கு என் கஸ்டடியை எடுத்துக்கிட்டீங்க" என சுள் ளென கேட்கும் போது இப்படித்தானே பல குழந்தைகளும் இருக்கின்றன எனத் தோன்றுகிறது.
ஒவ்வொரு பகுதியிலும் ஒரு கதா பாத்திரத்தை மையமாக வைத்து எழுதி இறுதியில் மெயின் கதையில் கொண்டு சேர்ப்பதை ஒரு உத்தியாகப் பயன்படு்தியது போல் தெரிகிறது. வித்தியாசமாக இருந்தது.
"தன் காரியதரிசியை சின்னப் பெண்ணாகவே தேர்ந்தெடுக்கும் வாகேசனுக்கு மனைவி சின்னப் பெண்ணாகத் தெரிவதில் மட்டும் பிரச்னை. " இது பல பெண்களுக்கும் இருக்கும் ஆதங்கம் தான். தன் மனைவி
என்னவெல்லாம் செய்யக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கிறார்களோ அதைச் செய்து வரும் பெண்ணை மனைவி உடனிருப்பதைக் கூட சட்டை செய்யாமல் வேடிக்கை பார்ப்பவர்கள் இருக்கத் தானே செய்கிறார்கள்.
இதைப் போல ஒரு பெண்ணின் ஆதங்கத்தைப் பல இடங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். "எவ்வளவு உயரத்தில் சென்றமர்ந்தாலும் பெண்ணைச் சுற்றி மொய்க்கும் ஈக்கள் வந்து விடும்" என்கிறார். உயர் பதவியில் இருக்கும் அந்தப் பெண்களின் முந்தானை விலகினால் கூட அந்த ஈக்கள் விட்டு வைக்காது என்கிறார்.
ஒரு வித்தியாசமான யோசனையையும் சொல்லி இருக்கிறார். "திருமணத்திற்குப் பிறகு ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தம்பதியரைச் சந்தித்து இந்த உறவைத் தொடர்வதில் உங்களுக்கு விருப்பமா எனக் கேட்க வேண்டுமாம். " சந்தியா எனும் கதாபாத்திரம் சொல்கிறது. இப்படிச் செய்தால் எத்தனை திருமணங்கள் தேறும். ஆனால் இருவருமே வாழ்க்கையை சரி வர நடத்திச் செல்லவும் வாய்ப்பிருக்கும்.
பெரு நகரத்தின் பல திசைகளையும் கண்ணோட்டங்களையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது இந்த நாவல். அதுவே இதன் ப்ளஸாகவும் மைனஸாகவும் இருக்கிறது. பல இடங்களில் கதையோடு ஒன்ற முடியாமல் எட்டி நிற்பது போல இருக்கிறது. ஆனால் வாசிப்பதற்கு சுவாரஸ்யமான ஒரு நாவல்.
13 August, 2026
#நூறு சாமி
திரைப்படம் : நூறு சாமி
இயக்குநர் : சசி
முக்கிய கதாபாத்திரங்கள் விஜய் ஆன்டனி , ஸ்வாசிகா, ( லப்பர் பந்து படத்தில் அடித்து ஆடியவர்) அஜய் திஷான், சக்தி, பாலாஜி சக்திவேல் , கருணாஸ் , லிஜோ மோள் மற்றும் பலர்.
OTT :zee5
" நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப் போல் ஆகிடுமா" என்ற பாடல் வரி படத்தின் பேரைக் கொடுத்திருக்குமோ?
இது ஒரு கதாநாயகியின் படம் தான். விஜய் ஆன்டனி கடைசி நாற்பது நிமிடங்கள் தான் வருகிறார். கதாநாயகிக்கு தாராளமாக இடமளித்திருக்கிறார்கள். என்னா ஒரு நடிப்பு!! இரு வளர்ந்த பையன்களின் ஒற்றைத் தாயாக ( single mother) கலக்கி இருக்கிறார்.
மலையாளப் படங்களை அடியொற்றி நிறைய இடங்களில் நமக்கு ஸ்பூன் feeding செய்யாமல் நம்மை உணர வைக்கிறார்கள். ஒரு கதாபாத்திரம் அடிக்கடி சிகரெட் குடிப்பதையும், செல்வி என்ற அந்த இளம் விதவையிடம் அத்து மீறிப் பேசுவதையும் காட்டி வந்து , ஒரு முக்கியமான இடத்தில் ஆளைக் காட்டாமல் அந்த சிகரெட் பிடத்த ஒற்றைக்கையை மட்டும் காட்டி நம்மை உணர வைக்கிறார்கள்.
கதை நாயகி செல்வியின் அண்ணனாக வரும் கருணாஸ் சமுதாய விருப்பத்தை மீறி நடக்கும் ஒரு பெண்ணிடம் கடுமை காட்டும் அண்ணனை கண் முன்னே கொண்டு நிறுத்துகுறைந்த.
அடாவடி மனிதனாக வரும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் . அவருக்கு ஒரு அடிப்பொடி. தான் கதைக்குள் வரும் சந்தர்ப்பங்களில் எல்லாம் நமக்குள் ஒரு மென் பதற்றத்தை உண்டாக்குகிறார்.
பாஸ்கராக வரும் அஜய் திஷான் தந்தையற்று வளரும் ஒரு தலைமகனின் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கிறார். தன் தாயை செல்வி , செல்வி என்று பெயர் சொல்லும் அழைக்கும் இரண்டாவது மகன் சக்தி ய்ட்யூபர் என்று நினைக்கிறேன். சரி தானா சொல்லுங்கள். அவனுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.
தனது வயதின் இருபதுகளிலேயே தன் கணவனை இழந்த ஒரு பெண் ஒரு கால கட்டத்தில் மறுமணம் புரிய நினைக்கிறாள். அப்போது கோபமாக மறுதலிக்கும் மூத்த மகன் தான் அவளது நாற்பதுகளில் முனைப்பெடுத்து திருமணம் செய்து வைக்க நினைக்கிறான். அந்த வாழாவெட்டி (?) மாப்பிள்ளை தான் விஜய் ஆன்டனி.
குறைந்த கால அளவே வந்தாலும் மனதில் ஆழப் பதிந்து விடுகிறார்.
படத்தோடு ஒன்றி வரும் பாடல்கள். இந்தக் காலத்தில் விவாகரத்தானவர்களே திருமணம் எளிதாகச் செய்யும் போது விதவை மறுமணம் ஒரு விஷயமா என நினைக்காதீர்கள். எங்கோ ஒரு கிராமத்தில் இன்னும் இது கடினமானதாக இருக்கலாம். ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் எழுந்த கதை தான் இது என்கிறார்கள்.
இயக்குநர் சசி பல வருடங்களுக்கு முன் எடுத்த "பூ " படம் நம் மனதில் பச்சக் என்று ஒட்டிக் கொண்டது போல இதுவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பார்க்காதவங்க பார்த்திடுங்க. ஒரு நல்ல feel கொடுக்கும் படம்.
04 August, 2026
# தாயின் வலி
என் தாயின்
வலி தெரிந்து
வளர்ந்ததால்
என்னை நம்பி
வந்தவர்களை
கண்ணின் மணி
போல் பார்த்தேன்.
நான் பெற்ற
மக்களை
உயிரினும் மேலாய்
வளர்த்தேன்.
எனக்கென
ஒரு தேவை
இல்லையென்றே
இருந்தேன்.
எதெல்லாம்
நான் இயல்பென்று
நினைத்தேனோ
அதெல்லாம்
அற்புதமென்றார்கள்.
நிர்மூலமாய்
ஆக்கிய போதெல்லாம்
ஃபீனிக்ஸ் பறவையாய்
எழுந்த என்னை
அதிசயமாய்
வியந்தார்கள்
என் அன்பு ஒன்றே
என்னைக் காப்பதை
அறியாமல்.
அன்பே செய்க
அதை இன்றே செய்க.
அதையும் நன்றே செய்க
28 July, 2026
#பஃறுளி
// அடுத்து என்ன கேட்கப் போகிறாய். அற்ப ஆணே கேள் எனும் நோக்கில் "நிமிர்ந்து" நின்றது அவனை சலனமற்று இருக்கச் செய்தது. //
என் பல்லாண்டு கால நண்பர் நர்சிம் எழுதிய "பஃறுளி" நாவலில் ஒரு வரி.
" அற்ப ஆண் " இது ஒரு சில வயது பேதமற்ற சந்தேகம் என்னும் தீரா நோய் பற்றிய ஒரு சிலரை மட்டுமே குறிக்கும். எத்தனையோ பெருந்தன்மையான நல்ல ஆண்கள் இருக்கிறார்கள். ஆனால் இப்படிப்பட்டவர்கள் ரொம்ப கொஞ்ச பேர் என்று ஒதுங்கிப் போக முடியாத அளவில் இருக்கிறார்கள். Exceptions are not rules என்பார்கள் . அந்ம அளவில் குறுகிய எண்ணிக்கையில் இருந்தால் நாம் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இராது.
இந்த "நிமிர்வு" க்குப் பின் கலங்கிப் பாரத்துத் தன் மார்பில் சாய்ந்த கணவனை அரவணைத்துக் கொள்கிறாள் கோமதி என்னும் கதை நாயகி.
அவ்வளவு தான் ஒரு சில பெண்களைத் தவிர மீதி எல்லோரையும் தாய்மை என்னும் அலை சூழ்ந்து அரவணைத்துக் கொள்ளும். அவள் கோபத்தைக் கொல்லும்.
பெண்ணின் உணர்வுகளை உணர்ந்து சொல்லும் மற்றுமொரு எழுத்தாளர்.
26 July, 2026
சரிதா ஜோ எழுதிய ஆகிருதி
"ஆகிருதி" புத்தக அறிமுகம்
சிறுகதை தொகுப்பு : ஆகிருதி ஆசிரியர் : சரிதா ஜோ.
பதிப்பாளர் : பாரதி புத்தகாலயம் .
விலை. : 220 ரூபாய் .
முதல் பதிப்பு : டிசம்பர் 2025
“ கதை சொல்லி முக்கிய கதாபாத்திரத்தின் தோளின் மேல் கை போட்டபடி நின்று கொண்டு செல்வது போல் கதைகள் அமைந்திருப்பதால் கதைக்கு அருகில் செல்வது எளிதாக இருக்கிறது” என்று அம்பை அம்மா அவர்கள் தன் வாழ்த்துரையில் சொல்லி இருக்கிறார்.
எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் “ எந்த மெனக்கடலும் இல்லாமல் வட்டார மொழியை கையாண்டு இருக்கிறார் ஆசிரியர்” என்கிறார். தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளும் வட்டார வழக்குக்கும் கிராமிய சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டவை. அதனாலையே நமக்கு புத்தகத்தோடு ஒன்ற முடிகிறது
சரிதா இதுவரை குழந்தைகளுக்கு இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார் .இவருடைய சிறுவர்களுக்கான புத்தகங்கள் ஆங்கிலம் குஜராத்தி மற்றும் ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
முதன்முறையாக பெரியவர்களுக்கான சிறுகதைகளை எழுதி தொகுத்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
“ ஆகிருதி” என்னும் முதல் கதை வட்டார வழக்கில் மிக அழகாக எழுதப்பட்டிருக்கிறது. மணப்பெண் கருப்பு என்றும் , வேறு பெண்ணை காட்டி ஏமாற்றி இந்தப் பெண்ணை திருமணம் செய்து விட்டீர்கள் என்றும் உருவக் கேலி செய்து தகராறு செய்யும் கணவனும், அதனால் வலி அனுபவிக்கும் பெண்ணும் தான் கதை மாந்தர்கள். துணிச்சலாக முடிவெடுக்கும் இந்தப் பெண் மூலம் ஒரு வழிகாட்டுதலை கதையில் சொல்லி இருக்கிறார்.
இரண்டாவது கதையான “ வாசிக்கப்படாத அத்தியாயத்தின் ரேகை” களில் சிவப்பு நிற செருப்பு போடும் சிலுக்காவை முன்னிறுத்துகிறார். ஒரு காலத்தில் ஆண்களில் பலரை ஈர்த்து வைத்திருந்த நடிகை சிலுக்கு, இந்த பேர் வைப்பதற்கு ஒரு காரணமாய் இருக்குமோ என்று எண்ணும்படி இந்த பாத்திரம் படைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு பெண் அழகாகவும், நாகரிகமாகவும் இருந்து விட்டால் பெண்கள் , தம் கணவன் அவளால் ஆகர்ஷிக்கப்பட்டு விடுவானோ என்னும் பயத்தில் முந்திக்கொண்டு அவளுக்கு “ பட்டம் “ கொடுத்து விடுவார்கள் .அப்படியானவள் தான் சிலுக்கா . ஆனால் குழந்தைகளை அவளுக்கும் , அவளை குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் அப்படிப்பட்ட சிலுக்காவுக்காக எழுதப்பட்ட கதை தான் இது.
“ வாக்கு” மூன்றாவது கதை . ஒரு குழந்தை பள்ளியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறது. நிகழ்ச்சிக்கு முந்தின தினம் எல்லாவித அலங்காரங்களோடு சோதனை முயற்சி செய்ய இருந்த போது தன் தங்க ஜிமிக்கியை வீட்டில் கழற்றி வைக்காமல் வந்தது தெரிகிறது. வேறு வழியில்லாமல் தன் பையில் வைத்து நிகழ்ச்சிக்குப் போட வேண்டிய பிளாஸ்டிக் கம்மலை போட்டுச் செல்ல வந்த பின் தான் தன் தங்க ஜிமிக்கி தொலைந்து போனதை அறிகிறாள்.
ஒரு பொருள் தொலைந்த உடன் அம்மாவிடம் ஓடி வந்து அழும் குழந்தைகள் ஒரு ரகம். தொலைந்ததையே மறைத்து சமாளிக்க முயலும் குழந்தைகள் ஒரு ரகம். இந்தக் கதையின் குழந்தை இரண்டாவது ரகம். தப்புக்கு மேல் தப்பாக செய்து தன் சித்தப்பாவையும் சேர்த்து திருடு போனதை மறைக்கப் பார்க்கிறது. குழந்தைகளுக்குத் தவறை உணர்த்தாமலும் சித்தப்பா ஏமாற்றியதன் காரணத்தை வலுவாகச் சொல்லாததும் இந்தக் கதையின் குறையாகத் தோன்றியது.
“ தாயாதி பாத்தியம்” நான்காவது கதை. ஆறு மகன்கள் இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற பெருந்தனக்காரர் பழனிச்சாமி. அவரும் அவர் மனைவி ராசம்மாளுமாகச் சேர்ந்து நாற்பது ஏக்கர் சொத்து சேர்த்திருந்தார்கள். ராசம்மா பாம்பு கடித்து இறந்த பிறகு மகன்களுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுத்து ஒவ்வொருவர் வீட்டிலும் மாறி மாறிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் பழனிச்சாமி.
வயது ஏறி மறதி நோய் வந்த நிலையிலும் ராசம்மாவை தேடும் அவர் பயணம் நின்ற பாடில்லை என்கிறார் ஆசிரியர். எதை மறந்தாலும் அவர் மறக்காதிருந்த பேத்தி சித்ரா தான் அவரைத் தேடி அழைத்து வருவாள். ஆலமரத்தின் கட்டையாக வெட்டி விடப்பட்ட விழுதுகள், மனிதாபிமானமற்ற உறவுகளுக்கு படிமமாக நன்கு பொருந்திப் போனது .அந்த விழுதுகளோட கதை முடிகிறது. எனக்கு இந்த தொகுப்பில் மிகவும் பிடித்த ஒரு கதை.
“கழுவாய்” ஜாதி, மதம் மாறி நடக்கும் திருமணங்களை ஏற்றுக் கொள்ளாத மக்களை அவர்கள் நம்பும் விடயங்கள் மூலமே மனம் மாற்றும் நேர் மறை சிந்தனை மிகு கதை.
“ஆலா” என்றொரு கதை. நித்யா தன் கிராமத்தில் இருக்கும் ஆல மரத்தை நெருங்கிய தோழியாக நினைத்து ஆலா என்றழைத்து வளர்ந்து வரும் போது கிராம வளர்ச்சிக்காக அந்த ஆல மரம் வெட்டுப்பட்டுக் கிடப்பது யானை ஒன்றை பாகம் பாகமாக வெட்டிக் கிடத்தியது போல் உள்ளது என்கிறார். அருமையான மனதைக் கீறும் படிமம். ஆல மரங்கள் பல கதைகளிலும் தன் விழுதுகளை அசைக்கின்றன.
“தாபந்தம்” கதைகளின் பெயர்களின் தேர்வில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டது தெரிகிறது. தன் அக்கா மகன் மாதவன் மேல் அளப்பரிய அன்பு கொண்ட கோவிந்தன் தன் அடி மனத்தில் உறைந்திருந்த ஜாதி வெறியால் எப்படி தன் மருமகனை தான் சாகும் வரை பார்க்காமல் பிரிகிறார் என்பதைச் சிவப்பு சாட்டையை சொடுக்கிச் சொல்லும் கதை. ஆகச் சிறந்த கதை
“ வீடிலிகள் ” இறுதிக் கதை. பெண்கள் அனேகமாக அனைவரும் தம்மோடு பொருத்திப் பார்க்கும் கதை. அதிலும் முக்கியமாக முளையில் கட்டிய மாடாக , கயிற்றின் நீளம் தரும் சுதந்திரம் ஒரு மாயையாகத் தோன்றுவது அனேகமாக அனைத்துப் பெண்களுக்குமாய் இருக்கும். தகப்பன், கணவன், மகன் என வேறுபாடு இல்லாமல் அத்தனை பேரும் ஆண் என்ற வலுவான பிடியைத் தளர விடுவதில்லை. என்று மாறும் பெண்களின் இந்த நிலை. தன் பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டுமே பெண்களுக்கு உரிமையானதாக இல்லை. முக்கியமான முடிவிகள் எடுக்கும் உரிமையை ஆண்கள் தன் கை வசமே வைத்திருக்கிறார்கள் என் பதைச் சொல்லும் கதை.
ஆகிருதி செழிப்பான மொழி வளத்தோடும், கதைக்கருவோடும் வெளி வந்திருக்கிறது.
ராஜ் கௌதமன் எழுதிய காலச் சுமை
ராஜ் கௌதமன் எழுதிய "காலச் சுமை"
ஒரு வருடம் முன் 13.11.2024 நிகழ்ந்த நிகழ்வின் நினைவு.
மனைவி முனைவர் பரிமளா
மகள் டாக்டர் நிவேதிதா கோபிநாத் எம்.டி. UK.
காரைக்காலின் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பதவி கிடைத்ததாகவும் உடனே புறப்பட்டு வரும் படியும் நல்லதம்பி என்பவர் சிலுவை ராஜ்க்கு கொடுக்கும் தந்தியில் துவங்குகிறது கதை. தனக்கு நடந்த இன்டர்வியூ நினைவுக்கு வருகிறது. சுவாலஜி படிச்சு நல்ல மதிப்பெண் வாங்கியும் ஏன் தமிழ் எம். ஏ எனக் கேட்கிறார் அதிகாரி. தமிழ் மீது உள்ள அடங்காத ஆர்வம் னு சொன்னா தனக்கே சிரிப்பு வந்தாலும் வரும் என்று இரண்டு பாடங்களும் பிடிக்கும். ஆனால் சவேரியார் கல்லூரியில் சுவாலஜி எம்.ஏ இல்லாததால் தமிழில் சேர்ந்தேன். எப்படி ஆனாலும் சவேரியார் கல்லூரியில் படிக்க வேண்டும் என்பது தான் முக்கியமான காரணம் என்கிறார். அது எஸ் ஸி கோட்டா. ஏழெட்டு பேர் தான் நேர்முகத் தேர்வுக்கு வந்திருக்கிறார்கள். அதில் சிலுவைக்கு அதிக மதிப்பெண். அதிகாரி தானும் ஒரு சவேரியன் தான் என்கிறார். வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை வருகிறது.
தந்திகொடுத்த நல்லதம்பி யார்?
"நல்லதம்பி துலுக்கப்பட்டி என்னும் ஊரின் ஸ்டேஷன் மாஸ்டர். பக்கத்து ஸ்டேஷன்ல ரயில் புறப்பட்டாச்சுன்னா அதை பத்திரமா தன் ஸ்டேஷன்ல இருந்து அனுப்பி வைக்கிற வரைக்கும் மனுசன் பம்பரமாச் சுற்றுவார். ரயில்வேயில மட்டும் எட்டு மணி நேரம் டூட்டின்னா அம்புட்டு நேரமும் டூட்டி பார்க்கிறவங்க அங்கிட்டு இங்கிட்டு நகர முடியாது. அது ஒரு தனி உலகம்.வர்ர உத்தரவை சரியா புரிஞ்சுக்கிடணும் முடிவெடுக்கணும். செயல்படணும்.
ஒரு சின்ன தவறு நடந்தாலும் போச்சு. மறுநாள் நாடு பூராவும் பேப்பர்ல போட்டோவோட செய்தி வரும். வேலை நீக்கம். ரயில்வே மந்திரி ராஜினாமா. "
இதை வாசித்ததும் எனக்கு ரயில்வேயில் பணி புரியும் நண்பர்கள் நினைவுக்கு வந்தார்கள். அவர்கள் பணிச் சுமையும்.
சிலுவை பாளையங்கோட்டை சென் சேவியர்ஸ் காலேஜில் படித்து ஆசிரியர் வேலைக்குத் தான் கலந்து கொண்ட நேர் முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு கதை செல்கிறது. பக்கத்து கல்லூரி johns பரிதாப நிலைமை. காரைக்கால் கலைக் கல்லூரி. பால் வடியும் முகம் சிலுவை ராஜுக்கு.
Ouche Rane தமிழில் வாசிச்சா அவுச்ச ராணி. நல்லா இருக்காது. ரோல் நம்பர் வாசித்துங்கடந்துடலாம்னு பார்க்கிறால். மாணவர்கள் கத்தி ரகளை பண்ணுறாங்க. எல்லோரையும் பேரை வாசிங்கன்னு. French spelling. For usha rani.rubber பாம்பு.
Deputy warden
மின்னல் கொடி கள்ளச் சாவி தயார்.
" பசங்க மொழிப் பாடத்துக்கு வருவதே ஜாலியா இருக்கத் தானாம். ஏம்னா இதுல நாற்பது மார்க் எடுத்தாலே போதும் . பாஸ் பண்ணினா போதும். தமிழ் மொழிப் பாடத்துல பாஸ் பண்ண வாத்தியாரே தேவையில்லை. பஜார் நோட்ஸ் போதும்." என்கிறார்.
காரைக்காலில் வேலை கிடைத்த சிலுவை அங்கேயே வேலை பார்க்கிற ஒரே காரணத்தாலேயே தன் இனத்தைச் சேர்ந்த பொன்னம்மாவை திருமணம் செய்கிறார். ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடி அமர்கிறார்கள். வீட்டு ஓனரம்மா நேரடியாக
" நீங்க என்ன வர்ணம் " கேட்கிறார்.
சிலுவை "நாங்க கிறிஸ்டியனுங்க" என்கிறார்.
அப்போ
" காரைக்கால் பெரிய கிராமம். அதனால இப்படி வர்ணத்தை முகத்துக்கு நேராகக் கேட்பது இயல்பாக இருக்கிறது. பெரு நகரம்னா சாதியப் பத்தின விசாரணை அமுக்கடியாக இருக்கும்.
"ஓஹோ! அவர் உங்க ரிலெடிவ்வா" ன்னு கேட்பாங்க. அது தானே நாகரீகம்"
இந்த புத்தகம் எழுதி இருபது வருடங்கள் இருக்கும். இப்போ நம் மனச்சாட்சியை நாம் கேட்டுக் கொள்வோம். வளர்ந்திருக்கிறோமா??
சிலுவை பாண்டிச்சேரியில் பணி புரியும் தன் இனத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தால் காரைக்காலுக்கு மாற்றல் வாங்கி வருவது சுலபம் என் நினைத்து பெற்றோரிடம் சொல்ல திருமணமும் நிச்சயமாகிறது. அந்த திருமண வீட்டில் மணப்பெண்ணின் தாய் வீட்டைச் சேர்த்தவர்களை நன்கு கவனித்து மாப்பிள்ளை வீட்டார் பசித்திருப்பார்களே என்பதைக் கூட சிந்தாக்காதவர்களாய் இருக்கிறார்கள். கோபத்தில் நிற்கப் போகும் திருமணம் கடைசியில் நடந்தே விடுகிறது. பெண்ணும் மாப்பிள்ளையும் புது வீட்டில் குடியேற கொண்டு சென்ற பொருட்கள் என் திருமணத்தை நினைவுபடுத்தியது.
சிலுவையிடம் ப்ளாட் ஒண்ணு சல்லிசா விலைக்கு வருது வாங்கிப் போடுங்கன்னு ஒருவர் சொல்லும் போது எனக்கு ஆறுக்கு மூணடி போதும் என நக்கலாகச் சொல்வார். பின்னர் வாடகைக்கு வீடு தேடும் அவலத்தின் போது தான் தான் செய்த தவறு புரியும். என்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பதை விதம் விதமாய் கேட்பார்கள். தான் ஆரம்பத்தில் இருந்த கிறிஸ்தவ மதம் என்பதைச் சொல்லி தப்பிப்பார். மதத்தில் ஒரு பிடிப்பு இல்லாமல் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தியது போல எனக்குத் தோன்றியது.
ஆடு, கோழி, மீன் என ஒவ்வொன் றையும் எப்படி வாங்குவது என விலாவரியாக சொல்லி இருப்பார். கதையின் சிறப்பே ஒவ்வொரு இடத்திலும் நம்மை நிறுத்தி பொருத்திப் பார்ப்பது தான். அதுவும் எனக்கு ரொம்பத் தோன்றியது.
தன் மனைவியை பிரசவத்துக்கு சேர்த்திருக்கும் போது பக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடச் செல்வார். ஹோட்டலில் சர்வர் "பொரிச்ச மீனுன்னா ஷீலா தான்" என்கிறார். சிலுவைக்கு செம்மீன் படக் கதாநாயகி ஞாபகத்துக்கு வருகிறாள். எங்க பக்கம் சீலா மீனுன்னு தான் சொல்வோம். ஆனால் சில இடங்களில் அதை ஷீலா மீனாக்கி விடுகிறார்கள்.பல இடங்களில் கதையோடு என்னால் ஒன்றிப் போக முடிந்ததற்குக் காரணம் திருமணமான ஆரம்ப காலங்களில் நானும் நாகர்கோயிலில் இருந்தது தான்.
குழந்தையை பார்க்க வந்த சிலுவையின் அப்பா குழந்தை கண் திறந்தே பார்க்காமலிருப்பதைப் பார்த்து கொஞ்சுவது போல " உங்கப்பனுக்கு இருக்கிற அதே பிடிவாதம். அவனுக்கு காரைக்கால்ல தான் கல்லறை என்பார். பச்ச பிள்ளையை கையில் வச்சுகிட்டு பேசுற பேச்சு. இப்படியும் சில மனிதர்கள்.
நாங்குநேரி அருகில் உள்ள நம்பி மலைக்கு நண்பர்களோடு சிலுவை போகும் போது தன் ஊருக்கு பக்கமுள்ள அத்தி ஓடையும் அங்குள்ள மரங்களும் ஞாபகத்துக்கு வரும்.
" அந்த பாரம்பரிய மரங்களைத் தனது இரண்டு கைகளாலும் அணைக்க முடியாமல் அணைத்து முத்தமிட்டு சிலுவை கிறங்குவதுண்டு. இயற்கையின் வசீகரத்துக்கு முன் நாம் பெண்களாகவோ குழந்தைகளாகவோ மாறி விடுகிறோம் என்று சிலுவை சொல்லுவான். அதாவது மென்மையாகி விடுகிறோம் என்பதைத் தான் இப்படிச் சொல்கிறார் என நினைக்கிறேன்.
சிலுவை குடும்பம் ஊர் வந்து சேர்ந்த அன்று எல்லோரும் சந்தோஷமாக சமைத்து உண்டு இருக்கிறார்கள். கொஞ்ச நேரத்திலேயே சிலுவை அவன் பெண்டாட்டி ஊரில் இடம் வாங்கி இருப்பது தெரிந்ததும் அவன் அம்மா தெரு மண்ணை வாரி எடுத்து வீசி " நீ நல்லாயிருப்பியா? விளங்க மாட்ட!" ன்னு கரிச்சுக் கொட்டுவதும் அதனாலோ என்னவோ ஒரு வருடம் கழித்து சிலுவையின் இளைய மகள் ஜுரத்தில் படுத்தவள் இறந்து போவதும் துயரம்.
நான் என் சிறு வயதில் இப்படி மண்ணை வாரித் தூற்றி பெற்ற பிள்ளைகளையே சாபமிடுவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதைத் தொடர்ந்த சிலுவையின் மகளின் இறப்பு அவரைக் குடும்பத்திலிருந்தே பிரித்திருக்கும்.
ரசித்த வரி.
"சிலுவை முதுகுக்குப் பின்னே அவன் சுயநலக்காரன், குடிகாரன் போல அவனைப் பற்றிய தீர்ப்புகள் குஷியாக பவனி வருவது அவனுக்குத் தெரியும். தான் அப்படிப்பட்ட ஆள் இல்லை என்று நிரூபிக்க அவசியமில்லை என்பது சிலுவையின் எண்ணம்"
நாம் படித்துக் கொள்ள வேண்டிய பாடம் இது.
சிலுவை வேலை செய்த இடத்தில் கோட்டாவில் அவர் துணைப் பேராசிரியராக வந்ததை பெரிசாச் சொல்லும் போது சிலுவையின் எண்ணமாக ஆசிரியர் சொல்வது நம்மை சிந்திக்க வைக்கிறது.
" பணம் , பெரிய இடத்து சிபாரிசு, செல்வாக்கு, உயர்ந்த சாதி உறவுகள், அரசியல் தொடர்பு இதெல்லாம் தான் மெரிட்"
உண்மை. மெரிட் என்பது தேர்வு மதிப்பெண் மட்டுமில்லாமல் இதெல்லாம் சேர்ந்தது தானே!!
காய்கறிக் கடையில் தாம் பேரம் பேசும் போது விலையைக் குறைக்காத சமயம் புரபசர் எப்படி ஏமாத்துவார் என்றும் அதைப் பெருமையாக தன் மனைவியிடம் சொல்லும் போது அவள் பாராட்டாமல் " ஒரு புரபசர் செய்யும் காரியமா இது" ன்னு திட்டுவான்னு சொல்வார். எளியவர்களிடம் பேரம் பேசுவதும் பெரிய மால்களில் கேட்டதைக் கொடுப்பதும் இன்று கூட நடந்து கொண்டு தானே இருக்கிறது.
புதைக்கப் போன இடத்துல திடீர்னு மழை ரொம்ப பெய்து மழைத் தண்ணீர் பட்டதுல மயக்கம் தெளிந்து குழிக்குள்ள இருந்து முண்டி வந்து அதனால் "குழிமுண்டாம் "னு பேர் எடுத்த கதையை சிலுவையின் சம்சாரம் சொல்ல ஊருக்கு ஊர் ஒரு குழிமுண்டான் கதை உலவுவது சிலுவைக்கு ஞாபகம் வருகிறது. நீங்க சொல்லுங்க. இப்படி இறந்ததா நினைச்சு புதைக்கப் போன இடத்துல பிழைத்து வந்தவர்கள் கதை ஏதும் உங்களுக்கு ஞாபகம் வருதா?
சிலுவையின் அப்பா ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். சிலுவையின் திருமணத்தின் போது அவன் மாமனார் வீட்டில் தன் குடும்பத்தை சரியாய் மதித்து நடத்தவில்லை என்பதால் சாகும் வரை அவர்கள் வீட்டுப்படி மிதிக்காதவர். சிலுவையின் மச்சினன் திருமணப் பத்திரிகையை ஒரு கவரில் போட்டு அவர்களுக்கே திருப்பி அனுப்பியவர். சிலுவையின் முதல் மகள் பிறந்ததைப் பார்க்க வந்த இடத்தில் உனக்கு சமாதி காரைக்கால்ல தான்னு " நகைச்சுவை" யாக சொன்னதாகச் சொன்னவர். இப்போ புரிஞ்சிருக்குமே. பார்ட்டி எப்படிப்பட்டவர்னு. இப்படி ஒரு ஆளை எல்லோரும் கடந்து தான் வந்திருப்போம்.
அவர் பல திசைகளிலும் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டிருப்பதால் காரைக்காலில் ஒரு பெரிய வீடு கட்டி எல்லோரும் ஒண்ணா இருக்கலாம் என்று சிலுவை சொன்னதும்
"ராஸ்கல் உன் தயவில நாங்க ஜீவிக்கணுமா? கஞ்சிக்கில்லாமச் செத்தாலும் சாவோமே தவிர ஒன்ன மாதிரி நன்றி கெட்ட பய கிட்ட வந்து கையேந்துவோம் என்று நினைத்தாயா? நீ என்னடா எங்களுக்கு வீடு கட்டறது? நான் கட்டப் போறேண்டா மெத்த வீடு" என்கிறார்.
இப்படி கொதிநிலையிலேயே இருக்கும் மனிதர்களுடன் காலம் கடத்துவது என்பது எந்நேரமும் கொதி கலனுக்குள் குடியிருப்பதைப் போன்றது.
" செத்துப் போயிடுவோமோங்கிற பயத்துல அன்னைக்கி கையெடுத்துக் கும்புட்டு கண்ணீர் வடிச்ச மனுசனுக்கு இப்போ பொழச்சுக்கிடலாம்கிற தெம்பு வந்ததும் ஆளப் பிடிக்க முடியல.
மாற மாட்டாங்க. கடைசி வரை மாறவே மாட்டாங்க.
கோயில்களில் கவர்ச்சியாக உடை அணிந்து நடனமாடுபவர்களைப் பற்றி எழுதுகிறார். ரொம்பவே ஆபாசமான நடனம். இப்படி ஒரு பக்கம் கவர்ச்சியையும் ஆபாசத்தையும் ஆதரித்துக் கொண்டு இன்னொரு பக்கம் தன் ஆண் நண்பருடன் ஒதுக்குப்புறமான இடத்துக்கு ஒரு பெண் தான் கற்பழிப்புக்கு காரணம் என்று பேசுகிறார்களே இந்ம முரண் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது.
சிலுவையின் நண்பர் மூர்த்தி புத்தக விற்பனை செய்பவர் குடிக்கு ஆட்பட்டு தொழில் நடத்த முடியாமல், கந்து வட்டிக் காரர்களிடம் கழுத்தைக் கொடுத்து மீள முடியாமல், அமிழ்ந்து போவதை வாசிக்கும் போது இது புத்தக வியாபாரத்துக்கு மட்டுமல்ல எந்த ஒரு தொழில் செய்தாலும் அதன் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தனி மனித ஒழுக்கம் மட்டுமே காரணமாக இருக்கும் என்று நம்மை சிந்திக்க வைக்கிறார்.
காரைக்கால் நாகூர் போன்ற இடங்களில் நடக்கும் தந்தூரி விழா பற்றி சொல்கிறார்.்சமீபத்தில் போய் வந்தோம். காரைக்கால் அம்மையாரைப் பற்றி ஆராய்ச்சி செய்து சிலுவை எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையில் கண்ணகி கதையும் காரைக்கால் அம்மையார் கதையும் ஒத்திருந்த்தை எழுதி இருந்தார். யாரும். ஒத்துக் கொள்ளவில்லை. சமண மதத்தை ்சேர்ந்த பெண்ணின் கதையுப் ஒரு சைவச் செட்டி பெண்ணின் கதையும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று எப்படி ஒத்து கொள்ள முடியும.
அந்த அந்த வயசுல அதைப் பற்றித் தானே பேச முடியும்னு சொல்லி இருப்பார். சின்ன பசங்க விளையாட்டை பற்றியும், விடலைப் பசங்க நடிகைகள் பற்றியும் வாலிபர்கள் வேலை கல்யாணம் பற்றியும், குடும்பஸ்தர்கள் சொத்து பத்து ணம்பளம் பிள்ளைகள் பற்றியும் வயதானவர்கள் நோய் நொடி மாத்திரை பற்றியும். சூப்பர்ல
பெரும்பாலானவர்கள் ஏன் கடவுள் நம்பிக்கை வைத்திருக்காங்கன்னா தாங்க முடியாத பிரச்னை வரும் போது காப்பாத்தும்னு ஏதோ ஒரு சக்தியை பிடிச்சுக்கிட்டாவது தப்பிச்சிடலாம்னு தான். பலருக்கு இந்த நம்பிக்கை இல்லாது பொகும் போது குடி போதைன்னு சிக்கி சீரழிந்து போகிறார்கள். பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த சிலுவை போராடி உயரத்துக்கு வந்தும் பழையபடி குடித்து தெருவில் கிடந்ததை வாசித்த போது உண்மையிலேயே என் வேதனை சொல்ல முடியாதது. ஆணோ பெண்ணோ ஏதோ ஒரு நட்பை இறுப்பற்றிக் கொண்டிருந்தால் ஒரு வேளை தப்பித்திருக்கலாமோ என்ற ஆதங்கம் எழுந்தது நிஜம்.
புத்தகம் வாசிப்பதில் ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம் வைத்திருப்பார்கள். என் கணவர் அணிந்துரை, என்னுரை எல்லாம் வாசித்த பிறகே கதைக்குள் நுழைவார்கள். நான் எந்த வித முன் தகவலும் இல்லாமல் தான் வாசிப்பேன். வாசித்த பின் அவற்றை வாசித்து எதை எல்லாம் கவனிக்காமல் விட்டிருக்கிறேன். எதிலெல்லாம் முரண்படுகிறேன் எனப் பார்ப்பேன்.
ஒவ்வொரு புதினமும் துவங்குவதற்கு ஒரு ஆரம்பப் புள்ளி இருக்கும். அதைச் சுற்றி சிலந்தி வலை பின்னுவது போல் கதை செல்லும். அந்த தொடக்கப்புள்ளி "மக்கத்தப்பாவுக்கு " எது என ஆசிரியரிடம் கேட்டேன். Galaxy பதிப்பகம் அப்துல் அகமது என்பவரைப் பற்றி 8000 இலிருந்து 12000 சொற்களுக்குள் நாவல் எழுத ஒரு போட்டி வைத்திருந்தார்களாம். அதில் கலந்து கொள்ள பெரிதாய் விருப்பம் இல்லாத நிலையில் இஸ்லாமியப் பின்னணியில் எழுதலாம் என்ற எண்ணமும், யூட்யூபில் ஒருவர் பிறர் உதவியோடு மக்கா சென்ற செய்தி வர அதுவும் சேர்ந்து மக்கத்தப்பா உருவானதாம்.
அணிந்துரையில் கோவில்பட்டி ராஜா சிவக்குமார் " பூரணம் என்பது என்ன? முழுமை என்பதன் முடிவு தான் என்ன? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். அப்போ முழுமை என்பது எப்படி முடிவு பெரும் என்று எனக்குள் எழுந்த கேள்விக்கு ஆசிரியர் தன் உரையில் பதில் கொடுத்திருக்கிறார். ராஜா சிவக்குமார் இந்தக் கேள்வியை கேட்ட போது விக்ரமாதித்யன் நம்பி " உன் கேள்விக்கான பதிலை நீ தேட வேண்டாம். அமைதியாக இரு. பதில் ஒரு நாள் உன் மடியில் வந்து அமரும் " என்றாராம். இந்த பதில் நம் எல்லா கேள்விக்கும் பொருந்தும்.
நான் வாழ்க்கையில் பல சிக்கல்களைக் கடந்த பின் படித்த பாடம் ஒரு பிரச்னைக்கு தீர்வை ,முயற்சிக்கிறோம் என்று தான் சிக்கலை இன்னும் சிக்கலுக்குள்ளாக்குகின்றோம். அதை அதன் போக்கில் விட்டு விட்டாலே தனக்கான தீர்வை அது தேடிக் கொண்டு விடும்.
மேலும் "நாவலின் உள்ளடக்கம், கலாச்சாரக் கூறுகள், பழக்க வழக்கங்கள், நுட்பமான விவரிப்புகள், கூறல் முறை, மற்றும் மொழி நாவலை செழுமைப்படுத்திகிறது என்கிறார். நானும் அதை வழி மொழிகிறேன்.
ஊxxx நடைக்கு ஒரு உதாரணம். " மனதிற்குள் தான் மனிதன் பூத்துக் ஙஊஊங,சே மகிழ்ந்து கொள்வான்"
மற்றுமொன்று " நல்ல வாழ்க்கை என்பது பணக்காரத்தனம் அல்ல. ஏழ்மையிலும் உவப்புடன் வாழ்வதே" பணம் தேவை தான். ஆனால் பணம் மட்டுமே சந்தோஷம் தந்து விடாது. சரி தானே
மக்கத்தப்பா கதை மியாக்கண்ணு ராவுத்தர் இல்லை நப்பி மியாக்கண்ணுவோடு தொடங்குகிறது. பாய் பின்னும் சூழல் தெரியுது. அப்துல் அவர் என்ன வேலை சொன்னாலும் செய்வார். காசு கொடுக்க வேண்டிய நேரத்தில் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி வீட்டுக்கு கிளம்பினாலும் அதை சட்டை செய்யாமல் வேலை செய்வார்.
அப்துலுக்கு ஒரே ஆசை மக்கத்துக்கு போய் காபா சுவத்துல முட்டிக்கிட்டு நிக்கணும். ரஸூலுல்லா சந்நிதிக்கு போய் சலாம் சொல்லணும். யார் என்ன வேலை சொன்னாலும் செய்வார். பதிலுக்கு என்ன வேணும் என்று கேட்டாலும் இதைத் தான் சொல்வார்.
அத்துலப்பாவை நேசிக்கும் இன்னொரு நபர் தாடி காசிம். அவரிடம் பேச அத்தனை பேரும் பயப்படுவார்கள். மற்ற பையன்களை சேர்த்துக் கொண்டு தொப்பி போடாமல் தொழப் போனவர்.
மூன்று தடவை பள்ளி மோதிலால்கள் போன போது அப்துல் தான் அந்த வேலையை ரொம்ப நறுவிசாகப் பார்ப்பார். நிரந்தரமாக பார்கிகச் சொன்னால் மறுத்து விடுவார். எல்லோரும் அமர்ந்து ஆடு புலி ஆட்டம் ஆடுவாங்க. அப்துல் ஜெயித்து விட்டால் என்ன வேணும் என்று கேட்டால் " எப்படியாவது மெக்காவுக்கு சென்று விட வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசை தான் என்பார்.
கதையில் ஒரு மீன் தொட்டி பற்றிய விவரணை வரூம். நான் நினைப்பதுண்டு ஓயாமல் வீசிக் கொண்டிருக்கும் அலைகளைப் போன்று இந்த மீன்கள் எப்படி நீந்திக் கொண்டே இருக்கின்றன. அக்கடான்னு சாஞ்சு உட்காரணும்னு தோணவே தோணாதா?
ஹவுலு மீனுக்கும் அப்துலுக்கும் இடைப்பட்ட உறவை எழுதும் போது மனித இனத்தை மட்டுமல்ல உயிரினங்களையே நேசிக்கும் ஆசிரியரின் அன்பு தெரிகிறது. மோட்டார் போட்ட உடனே ஹவுலு மீன்கள் துள்ளி எழும். அவற்றை ரசித்துப் பார்ப்பார். 12 தங்க மீன்களும் 8 ஷார்ப் மீன்களும் இருக்கும்.
அவர் ரசித்து விவரிக்கும் ஒவ்வொரு இடத்தையும் நான் சொல்லி நீங்க அனுபவிக்க முடியாது. வாங்கி வாசிக்கணும்.
ஆயிஷா அம்மா புருஷன் முத்தப்பா கர்நாடகாவில் பல சரக்கு கடையில் வேலை பார்த்தவர் திடீர்னு இறந்து போனதும் ஆயிஷாவை தங்கையாகவே தத்தெடுத்துக் கொள்கிறார். அவருக்கு சிரிக்க சிரிக்கப் பேசும் முத்தப்பாவையும் ரொம்ப பிடிக்கும். அவர் மக்காவில் பிறக்க வேண்டியவர். ஊருக்கு வந்து இறங்கி இருக்கிற மலாயிகத்து மார் அதாவது வானவர் என்பார். அவரை நக்கல் நையாண்டி பண்ணினா உணவு கிடைக்காது என்பார்.
வரிக்கு வரி ரசிக்கும் படி எழுதி இருக்கிறார். ஓட்டு மாவு தயாரிக்கும் முறை. வாய்வுப் பிடிப்பில் வலி வரும் போது அதற்கான மருந்து, ஊசி இலைகளையும், நொச்சி இலைகளையும் போட்டு இரவில் எரித்தால் கொசு வராது என கதை நெடுக நிறைய minute details கொடுத்திருக்கிறார்.
வெள்ளரிக்கா ஷாகுல் என்றொரு ஆர்வமூட்டும் கதாபாத்திரம். கொஞ்சம் வில்லங்கமான பேச்சு பேசுபவர். வெள்ளரிக்காவும் ராபியாவும் கணவன் மனைவி. இருவர் குணத்துக்கும் ஏணி வச்சாலும் எட்டாது.
காலையிலேயே டீக்கடையில் சாயா குடித்து மதரஸா கல்தூணில் சாய்ந்தபடி புறம் பேசும் சீனி சேட் அப்துலையும் விட்டு வைத்ததில்லை. இருந்தும் வாய்வுப் பிடிப்பில் உயிர் போய் விடுமோ என அச்சத்தில் புரண்டு அழும் போது அப்துலின் கை வைத்தியம் அவரைக் கொஞ்சம் மாற்றி விட்டது. ஆனாலும் பாம்புக்கு பால் வார்த்தாலும் கொத்தாமல் விடுமா? மறுபடியும் மாறிப் போனார் சீனி சேட்.
ஒற்றுமையான ஊர் இரண்டு பட்டு மியாக்கண்ணு இராவுத்தர் கனி ராவுத்தர் என்று கோஷ்டி பட்டு ஜமாத் யார் கையில் என பிரிந்து கிடந்த போது அப்துல் யாருக்கும் சிக்காமல் எங்காவது போய் இருக்க நினைக்கிறார்.
"பூனை எப்போதும் தன்னை மட்டும் கவனிக்க வேண்டும் என்று விரும்பும்" என்ற வரி என்னை சுமார் இருபதாண்டுகள் முன்னே அழைத்துச் சென்றது. என்னிடம் ஒரு பூனை கொஞ்சி விளையாடும். அதன் குட்டியை நான் தூக்கி கொஞ்சுவதை முறைத்துப் பார்த்தது. நாம் தான் அப்படி கற்பனை பண்ணிக்கிறோம்னு நினைச்சேன். ஆனா அதன் பின் அந்த பூனை எங்க வீட்டுக்கு வரவே இல்லை. அந்த குட்டிப் பூனை பதினைந்து வருடங்கள் எங்கள் வீட்டில் இருந்து இறந்தது.
நபிகள் நாயகத்துக்கு பூனை ரொம்ப பிடிக்கும் என்பதற்கு ஒரு அழகான கதை சொல்லி இருக்கிறறர்.
கருப்பு நிற Fortuner கார் துடைத்தல் .
கதை வாசித்து முடிக்கும் போது எனக்குத் தோன்றியது யாருக்கான உணவு என்பது அவரவர் பெயர் அரிசியில் எழுதி இருக்கும் என்பது போல ஹஜ் பயணம் யார் யாருக்கு சாத்தியப்படும் என்பதும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் என்பது தான்.
மக்கத்தப்பா நிறைய பேரைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக அதை விற்க வேண்டாம் என முடிவு செய்ததாகச் சொன்னார். இஸ்லாமிய மதத்தின் செழுமையை அறிந்து கொள்ள கண்டிப்பாக உதவும். நன்றி
20 July, 2026
#ப்ரீ மெனோபாஸ்
ப்ரீ மெனோபாஸ்
மெனோபாஸ் என்பது பெண்களுக்கு தீட்டு நிற்கும் காலம். அது எத்தனை வலி மிகுந்தது எனப் பேசி இருக்கிறோம். அதை இன்னும் உணராத ஆண்களும் சிலர் இருக்கின்றனர். என் மாமியார் எனக்குச் சொல்லிக் கொடுத்தது "நாற்பது வயசு ஆனதும் தினம் காலையில வெறும் வயித்துல கொஞ்சம் பொரிகடலை சாப்பிட்டிரு. தீட்டு நிற்பது ரொம்ப சிரமம் இல்லாம நடந்திரும்" இதற்கு மருத்துவ காரணங்கள் எனக்குத் தெரியாது. அவர்கள் அனுபவம் சொன்ன அறிவுரையை நான் கேட்டுக் கொண்டேன். மெனோபாஸை ரொம்ப smooth ஆகக்
கடந்தேன்.
இன்று சொல்ல வந்தது Pre Menopause என்னும் நாற்பது வயதுக் காரர்கள் சந்திக்கும் உடல் உபாதை மற்றும் மன உபாதை.
எனது நாற்பது வயதில் எனக்கு நடந்தது. காரணமே இல்லாமல் கால்கள் கனத்துப் போகும். எப்போழுதும் வேக நடை நடக்கும் நான் தளர்ந்து நடப்பதைப் பார்த்துப் பெண் தோழிகள் விசாரிப்பது கூட நடக்கும். இருமல் என்றால் சாதாரணமாகிப் போகும். ரொம்பக் காலம் முன்னால குழந்தைகளுக்கு "குத்திருமல்" னு கேள்விப்பட்டு இருக்கிறீங்களா அது போல தொடர்ச்சியாய் இருமல் வந்து உயிரை வாங்கும். நான் பணி புரிந்தது வாடிக்கையாளர் சேவை மையம் ஆதலால் இன்னும் பல தொல்லைகள்.
பணி நேரம் முழுவதும் பேசணும். ஏசி அறையில் தான் இருக்கணும். நாம இருமும் போது பதறிப் பார்ப்பவர்களிடம் இது அலர்ஜி இருமல் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு தொற்றாதுன்னு விளக்கணும். இன்னும் சொல்ல முடியாத பல சிரமங்கள் இருக்கும். ஆனால் பணியில் இருந்ததால் மன அளவில் பெரிய பாதிப்பு வந்தது போல் தெரியவில்லை ஒரு வேளை அறியாமல் கூட இருந்திருக்கலாம்.
இதுவே வீட்டில் இருக்கும் பெண்களானால் பயங்கர irrited mode,
காரணமில்லாமல் பிறர் மேல் எரிச்சல் , கோபம் என மனதளவிலும் பெரிய பாதிப்பு எழும்.
இப்போ முப்பது வயது வரை சுதந்திரமா இருக்கணும் அதன் பின் தான் குழந்தை பெத்துக்கணும் னு ஒரு சாரார் முடிவெடுக்கிறாங்க. அப்போ இந்த பெண்கள் நாற்பது வயதை நெருங்கும் போது குழந்தைகள் சிறுவர்களாய் இருப்பார்கள்.
என்னுடைய ப்ரீ மெனோபாஸ் சமயம் என் மகள்கள் வளர்ந்துட்டாங்க. அப்போ நான் டாக்டரை பார்த்தப்போ சமாளிக்க முடிந்தால் மாத்திரை எடுக்காமலே சமாளி என அறிவுறுத்தினார்கள். ஏனென்றால் அந்த சமயத்தில் வரும் harmonal imbalance க்கு மாத்திரை எடுத்தால்
வேற சில பிரச்னைகள் வரலாம்.
பெண்கள் இவ்வளவு கஷ்டங்களையும் கடந்து தான் மனித குலம் தழைக்க பங்கு பெறுகிறார்கள். இந்த சிரமங்களின் பின்னணி காரணங்களை அறியாத பெண்கள் கூட பலர் இருக்கலாம். அதனால் வீட்டுப் பெண்களை அனுசரித்து நடத்துவோம்.
18 July, 2026
# பயணக் கட்டுரை.
பயணங்கள் நம் மனதில் அடைந்து கிடக்கும் சோர்வெனும் ஒட்டடையை சுத்தம் செய்து மிச்ச வாழ்வை புத்துணர்வோடு கொண்டு செல்ல உதவும்.
பணியில் இருக்கும் வரை இதற்கெல்லாம் எங்களுக்கு நேரம் இருந்ததில்லை. மத்திய அரசு அலுவலகத்தில் நாலாண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா முழுவதும் சென்று வரும் தொகையைத் தந்து விடுவார்கள். அப்படி ஒரு வசதி இருந்தும் நாங்கள் சென்றதில்லை. என் கணவருக்குப் பயணங்கள் பிடிப்பதில்லை. நானோ அலுவலகமே கதி என்றிருந்தேன்.
ஓய்வு பெற்ற பின் இருவர் மனமுமே கொஞ்சம் மாற்றம் அடைந்தது. வருடத்துக்கு இரண்டு முறை எங்கேயாவது சுற்றுலாவாக போய் வருவது என முடிவெடுத்தோம். ஒரு முறை பெங்களூர் சென்று மகள் குடும்பத்துடன் கொஞ்ச காலம் கழிப்பது. ஒரு முறை விடுமுறைக்கு மகள் குடும்பம் எங்கள் வீட்டிற்கு வருவார்கள் ஆக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரொட்டீன் வாழ்க்கையில் இருந்து மாற்றம் கிடைக்கும். அது மனதை உற்சாகமாக வைத்திருக்கும் என்று முடிவு செய்தோம்.
நல்ல பலன் கிடைத்தது. ஆரம்பத்தில் எனக்காக வந்த என் கணவர் போகப் போக அவரே எங்கே போகலாம் என யோசிக்கத் தொடங்கினார். பலரும் ஆரம்பத்தில் இருந்தே செய்து வந்த காரியம் தான் நாங்கள் ஓய்வு பெற்ற பின் தொடங்கினோம். Better late than never.
சமீபத்தில் ஒரு ஐந்து நாள் பயணம் சென்று வந்தோம். அதைப் பற்றி ஒரு பயணக் கட்டுரை எழுதலாம் என நினைக்கிறேன். மக்கள் விருப்பம் பார்த்து போய் வரும் இடங்களைப் பற்றியும் அங்கு நேர்ந்த நிகழ்வுகள் பற்றியும். எழுதுகிறேன்.
இந்த முறை பார்த்த இடங்கள் சென்னை, பாண்டிச்சேரி, தரங்கம்பாடி,காரைக்கால் , நாகூர், வேளாங்கண்ணி. நான் பொதுவாகவே கடவுள் நம்பிக்கை உடையவள் ஆதலால் தேவாலயம் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பேன். இந்த முறை ஒரு வித்தியாசமாக வேற்று மதத்திலும் இருக்கும் நம் நண்பர்களுக்காக ஹிந்து, கிறிஸ்டின், முஸ்லிம் என மூன்று மத நண்பர்களும் பார்ப்பதற்கான மத வழிபாட்டு தலங்களை கவர் செய்தோம். வீடியோக்களை என் யூட்யூப் சானலில் பதிவேற்றவும் உதவியது.
இன்னுமொரு வழக்கம் உண்டு. யார் வீட்டில் தங்கி இருந்து இடங்கள் சுற்றி பார்க்க செல்கிறோமோ அந்த குடும்பம் மகிழ்வோடும் ஆரோக்கியத்தோடும் இன்னல்கள் இன்றி வாழ வேண்டுமென ப்ரார்த்தித்து நான் செல்லும் சர்ச்களில் பூஜைக்கு கொடுப்பேன்.
அது அப்படி ஒரு மன நிறைவைத் தரும்.
இந்த முன்னுரையோடு நாளை டேனிஷ் கோட்டை பற்றி எழுதுகிறேன். தங்கள் கருத்தை பகிருங்கள். விமர்சனங்கள் தானே எழுத்தின் தரத்தைக் கூட்டும். எதிர் நோக்கி இருக்கிறேன்.
**********
2 ஆம் நாள் டேனிஷ் கோட்டை.
பாண்டிச்சேரியிலிருந்து 135 கிமீ தூரத்தில் இருக்கும் இடம் காரைக்கால். பாண்டிச்சேரி, காரைக்கால், ஏனாம், மாகி நாலு இடங்கள் சேர்ந்து பிரெஞ்சு யூனியன் பிரதேசம். மாகி, ஏனாம் இரண்டு இடங்களையும் வரிசையில் வைத்திருக்கிறேன். பார்த்து விட வேண்டும்.
காரைக்கால் போகும் வழியில் தரங்கப்பாடி என்றொரு இடம் உண்டு. இது மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது. அங்கே டேனிஷ் கோட்டை இருக்கிறது. சிறிய அளவில் தான் இருக்கிறது. அந்த காலத்தில் கடல் வழி கப்பலில் வரும் தளவாடங்களை இங்கே சேகரித்து வைத்திருக்கிறார்கள். கடலை நோக்கிய வண்ணம் இரண்டு பழைய கால பீரங்கிகளை வைத்திருக்கிறார்கள். பழைய காலப் பொருட்கள் , இப்பொழுது கடல் மேலேறி வந்து வந்து கோட்டையை நெருங்கி விட்டது. ஆனால் மற்ற கடற்கரைகளைப் போல கல் வேலி கட்டி மறிக்காததால், தாய்மடியில் குழந்தை குதூகலிப்பதைப் போல நீரோடு விளையாட முடிகிறது.
இங்கு தான் இந்தியாவில் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் விவிலியம் அச்சிட்டதாகச் சொல்கிறார்கள்.
கோட்டைக்கு போகும் வழியில் ஒரு வாயில் இருக்கிறது. அது அந்த கால அரண்மனை வாயிலை நினைவுபடுத்துகிறது. 1718 இல் கட்டப்பட்ட ஒரு. சர்ச் இருக்கிறது. பழைய கட்டடங்களை அப்படியே பழைமையோடு பாதுகாக்க வேண்டும் என்று ஒரு சிலர் சொல்வார்கள். ஆனால் இந்த வழியில் உள்ள கட்டடங்கள் எல்லாம் பெயின்ட் செய்யப்பட்டு புதிதாக இருக்கின்றன. . அதனால் பழமை மாறியது போல் தான் தெரிகிறது. பதிக்கப்பட்ட வருடங்களை வைத்துத் நான் முந்நூறாண்டு பழமையானது எனத் தெரிகிறது.
முன்தன் முதலில் பெண்களுக்கான செகன்டி கிரேட் டிரெயினிங் பள்ளி இங்கு தான் வந்ததாகச் சொல்கிறார்கள். கோட்டைக்குள் செல்ல ஒருவருக்கு ஐந்து ரூபாய் மட்டுமே வசூலிக்கிறார்கள். காலை பத்து மணி முதல் மாலை 5.45 வரை உள்ளே இருக்கலாம்.
மற்ற எல்லா பீச்களிலும் இருப்பது போல தள்ளு வண்டிகளில் மாங்காய் பத்தை, ஐஸ், போன்ற தின்பண்டங்களும் கிடைப்பதால் குழந்தைகள் முதல் முதியவர் வரை ரசிக்கலாம்.
கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் நடமாடிய மக்கள் கால் வைத்த இடங்களில் நாமும் வைத்திருக்கிறோம் என்பதே பரவச உணர்வைத் தரும்.
வாசிப்பதைப் போலவே கண்களுக்கும் விருந்து அளிக்க chellanaikutti என்னும் என் யூட்யூப் சானலில் பார்க்கலாம். எழுத்துக்களை நான் கொடுத்திருப்பது போலவே கொடுத்தால் வந்து விடும்.
நாளை காரைக்கால் அம்மையார் ஆலயமும், நாகூர் தர்காவும் பற்றிய தகவல் கள் தருகிறேன்.
**""
3 ஆம் நாள் காரைக்கால் அம்மையார் ஆலயம் & நாகூர் தர்கா
பாண்டிச்சேரியிலிருந்து 135 கிமீ தொலைவில் காரைக்கால் இருக்கிறது. காரைக்கால் அம்மையாரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பதால் அவர்கள் பெயர் கொண்ட ஆலயத்தை பார்க்க முடிவு செய்தோம். சமீபத்தில் தான் கும்பாபிஷேகம் முடிந்து உள்ளதால் புதிதாக பெயின்ட் அடித்து பள பளவென்று இருந்தது கோயில். 63 நாயன்மாரில் மொத்தம் மூன்று பேர் பெண்கள். இவர் அவர்களுள் ஒருவர். பெரிய சிவ பக்தை.
இவரது இயற் பெயர் புனிதவதி. இவர் காரைக்காலில் கிபி 300 யிலிருந்து 500 க்குள் பிறந்திருக்கலாம் என்கிறார்கள். பேரழகும் தெய்வீக அம்சமும் கொண்டவர். இவர் கயிலை மலையில் கைகளால் "நடந்து" சென்று சிவபெருமானைக் காண விரும்பியதால் சிவனே இவரை "அம்மையே " என அழைத்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் முக்தி பெற்ற இடம் திருவாலங்காடு. இவர் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வொன்றின் நினைவாக காரைக்காலில் மாங்கனித் திருவிழா ஆண்டு தோறும் நடக்கிறது. வேற எங்கேயும் அம்மையாருக்கு கோயில் இருக்கிறதா என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
காரைக்காலில் வெளி நாட்டுப் பொருட்கள் கிடைக்கும் என ஆசைப்பட்டுத் தேடினேன். அவ்வளவு திருப்தியாக எதுவும் கிடைக்கவில்லை்
அடுத்த நாங்கள் சென்ற இடம் காரைக்காலில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள நாகூர். அங்கே உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா. இது நாகப்பட்டனம் மாவட்டத்தில் உள்ள ரொம்ப பிரபலமான ஒரு இடம். சுபி துறவி சையத் சாகுல் ஹமீது அவர்களின் கல்லறையின் மேல் கட்டப்பட்டது. இங்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. நம் நட்பில் இருக்கும் நண்பர்களுக்காக அங்கேயும் சென்று ஒரு வீடியோ எடுத்திடுவோம்னு போனோம்.
என்னுடைய "chellanaikutti" என்னும் யூட்யூப் சானலில் பாருங்கள்.
மிக உயரமான தர்கா.
நெருக்கமான தெருவுக்கு நடுவில் இருக்கிறது. உள்ளே போகு முன் கை கால் கழுவி உள்ளே வரச் சொல்கிறார்கள். நம் காலடிகளை கழற்றி விட ஒரு இடம் ஒதுக்கி இருக்கிறார்கள்.
மயில் பீலியால் தலையை வருடி நம் பெயர்களைக் கேட்டு சில மந்திரங்கள் சொல்கிறார்கள்.
பசித்தவர்களுக்கு உணவளிப்பதாகச் சொல்லி பண உதவி கேட்கிறார்கள். விரும்பினால் கொடுக்கலாம்.
அழகான கண்ணாடி அலங்காரங்களால் மேற்கூரை அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. பெண்கள் அனைவரும் வெளிப்புறம் அமர்ந்திருக்க கருவறை போன்ற ஒரு அறைக்குள் ஆண்கள் செல்கிறார்கள். இரண்டு அறைகள் சாத்தி வைக்கப்பட்டு உள்ளன. அதை அங்கே வருபவர்கள் தொட்டுக் கும்பிட்டு செல்வதைப் பார்த்த நான் விவரம் கேட்டேன் அது இருவரை அடக்கம் செய்த இடம் என்று சொன்னார்கள். ஆண்டு தோறும் சந்தனக் கூடு என்னும் திருவிழா நடக்கிறது.
பக்கத்திலேயே தான் திருநள்ளாறு இருக்கிறது. ஹிந்துக்கள் சனிப் பெயர்ச்சி சமயங்களில் தரிசிக்கும் ஆலயம்.
இதைத் தவிர ஏடுகளை எடுத்து நம் முன் ஜென்ம பலன்களை சொல்லும் வைத்தீஸ்வரன் கோவிலும் அருகிலேயே உள்ளது.
காரைக்காலில் இருந்து பாண்டி திரும்பும் வழியில் சாலையை நோக்கிய படி பிரம்புக் கடைகள் இருக்கின்றன. ஏகப்பட்ட பிரம்பு சாமான்கள் வைத்திருக்கிறார்கள். பார்க்கலாம் . வாங்கலாம்.
***
4 ஆம் நாள் பதிவாக இருந்தாலும் போனது முதல் நாளில். உறவினர் வீட்டுத் திருமணம் சென்னையில் ST. Thomas Mount இல். அவர்கள் CSI. அந்த சர்ச் மலை அடிவாரத்திலிருக்கிறது. மலை மேல் RC Church. நான் ஒரு வருடம் சென்னையில் டிரெயினிங்கில் இருக்கும் போது போயிருக்கிறேன். படி வழியாக ஏறி. இடம் கொஞ்சம் ஒதுக்குப் புறமாய் இருப்பதால் அங்கங்கே காதல் ஜோடிகள். இப்போ காலச் சூழ்நிலையால் கூடியிருக்கலாம். இல்லை மக்கள் நடமாட்டம் அதிகரித்து விட்டதால் குறைந்திருக்கலாம். தெரியவில்லை. நாங்கள் காரிலேயே மலை முகடு வரை சென்று விட்டதால் ஒரு பதினைந்து படிகள் மட்டும் ஏற வேண்டி இருந்தது.
கடந்த மாதம் தான் பஸிலிக்காவாக (திருத்தலமாக ) போப்பாண்டவரால் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சர்ச் இடித்துக் கட்டும் வேலையும் நடந்து கொண்டிருந்தது. மேலிருந்து நகரமும் வானூர்தி நிலையமும் பார்க்க கொள்ளை அழகாய் இருக்கும். அதுவும் இரவு நேரத்தில். மூன்று நிமிட வீடியோ என் chellanaikutti youtube channel இல் இணைத்திருக்கிறேன் பாருங்கள்.
அடுத்து ரிசப்ஷன் AVM Gardens vada palani. உள்ளே போகும் போதே மேலே உள்ள உலக உருண்டை என் பள்ளிப் பருவத்துக்கு அழைத்துச் சென்றது. அப்பா தெரிந்தவர் மூலம் ஷூட்டிங் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார்கள். எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் ஷூட்டிங் அலங்காரம் மட்டும். மஞ்சுளாவோடு படிகளில் ஏறி நடனம் ஆடுவார். அந்த இடம்.
இன்னொன்று ஜெய்சங்கர் நடித்த நூற்றுக்கு நூறு. அது ஷூட்டிங் பார்த்தோம். சலித்தோம். ஒரு வசனத்தை எத்தனை முறை ரீடேக். அப்பப்பா!!
இப்பொழுது முன் பாதியில் காவேரி மருத்துவமனை இயங்குகிறது. பின் பாதியில் தான் பஃபே. நல்ல வேளையாக மழை இல்லை.
புனித தேற்றரவு அன்னை ஆலயம் என்று ஒன்று காரைக்காலில் இருக்கிறது. கிட்டத்தட்ட 300 ஆண்டுகள் பழமையான சர்ச். இந்த ஆலயத்தின் பெயர் அதிகம் கேள்விப்படாதது. 1739 இல் ஒரு சின்ன ஆலயமாக தொடங்கி இருக்கிறது.
காரைக்காலில் லகட் ஹவுஸ், படகுத்துறை, பீச் என்று நேரம் கழிக்க இடங்கள் உள்ளன. வண்ணமடித்த படகுகள் வரிசையாய் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது வானவில் இறங்கி வந்து கடலில் நீந்துவது போல் இருந்தது.
அழகை ரசிப்பவர்கள் தூசியும் துரும்பும் கூட அழகு தான்.
ஐந்தாம் பதிவு நான் ராஜஸ்தானில் பயணித்த போது நடந்த திடுக்கிடும் நிகழ்வை சொல்லி நிறைவு செய்கிறேன்.
****
ஐந்தாம் நாள் பதிவு. ஆனால் இது ராஜஸ்தானில் என் பயண அனுபவம். நாலு வருடங்கள் பிட்ஸ் பிலானியில் என் மகள் ப்ரொபஸராக பணி புரிந்தாள். " உன்னால் தானம்மா இவ்வளவு பெரிய ஒரு இடத்தில் என் பாதம் பதிக்க முடிந்தது" என பெருமையாக சொல்லி இருக்கிறேன். விடுமுறைக்கு எங்காவது கூட்டிச் செல்வாள். அங்கே நான் , என் மகள், அவள் மகன் மூன்று பேர் தான்.
பேரன் சிறுவன். டெல்லி ஆக்ரா சுற்றிப் பார்க்க கிளம்பினோம். பிலானியில் ரயில் நிலையம் கிடையாது. அங்கிருந்து ரயில் நிலையம் செல்ல காரில் ஒரு மணி நேரம் ஆகும். அங்கே எல்லா சீதோஷ்ண நிலைகளும் உக்கிரமாகத் தான் இருக்கும்.
நாங்கள் போனது நல்ல பனிக் காலம்.நடு இரவில் தான் டிரெயின். நாங்கள் வீட்டிலிருந்து இரவு பதினொரு மணிக்கு மேல் புறப்படுகிறோம். வழக்கமாக வரும் டிரைவர் வர முடியவில்லை என்று வேறு ஒருவரை அனுப்பி இருக்கிறார்.அதனால் அவர் எப்படி ஓட்டுவாரென்பது தெரியாது.
போற வழியிலெல்லாம் பனி மூட்டம். பாதையே தெரியவில்லை. ஓட்டுநர் ஒரு குத்து மதிப்பா ஓட்டுறார். பாதைக்கு அஞ்சுவதா? பனிக்கு அஞ்சுவதா? புது ஓட்டுனருக்கு அஞ்சுவதா எனத் தெரியவில்லை. என் மகள் முன்னால் அமர்ந்து அவளுக்கு தெரிந்த ஹிந்தியில் ஓட்டுநருடன் உரையாடிக் கொண்டே வருகிறாள். பேரன் என் மடியில் உறங்குகிறான். நான் ஜெபமாலை உருட்டி ஜெபித்துக் கொண்டே.
பாதி தூரம் போன நிலையில் திடீரென்று ஒரு லாரி வேகமாக எங்களைக் கடந்தது. பின் வேகம் குறைத்து எங்களுக்கு முன்னாலேயே சென்றது. அதன் பின்னாடி உள்ள விளக்கு வெளிச்சத்தில் ஓட்டுநர் சுலபமாக ஓட்டி விட்டார். நான் சொல்வதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். சரியாக நாங்கள் இறங்க வேண்டிய இடத்தில் இடது புறமாக ஓரங் கட்டி லாரி நின்று விட்டது.
நன்றி சொல்லி உள்ளே ஓடினோம். அது சின்ன ஸ்டேஷன் என்பதால் கொஞ்ச நேரம் தான் நிற்கும். நாங்க புக் செய்திருந்தது ஏசி கம்ப்பார்ட்மென்ட்.
ஸ்வெட்டர் போட்டு தலைக்கு மப்ளர் போட்டு மூடி இருந்தாலும் பல் எல்லாம் டக் டகா டக டகாவென தந்தி அடித்துக் கொண்டிருக்கிறது.
டிரெயின் வந்து நின்றது. கம்பார்ட்மென்ட்டின் இருபுறமும் கதவுகள் இறுக்க மூடி இருக்கின்றன. தட்டுகிறோம். திறக்க மாட்டேன் என்கிறார்கள். ஓடி அடுத்த கதவைத் தட்டுகிறோம். அவர்களும் திறக்கவில்லை. மறுபடி முதல் கதவுக்கே வருகிறோம்.
அப்போது ஒரு குரல் ' மேடம் இதர் ஆவோ( இங்கே வாங்க) " டிடிஆர் கதவைத் தட்டிய சத்தம் கேட்டு கதவைத் திறந்து அழைத்திருக்கிறார். எங்களுக்கு ரயிலின் சத்தத்தில் கேட்கவில்லை. பின்னாலேயே ஓடி வந்து அழைத்தார். உள்ளே ஏறி அவருக்கு நன்றி சொல்லி , அமர்ந்து "அப்பாடா" என்றோம்.
நான் என் மகளிடம் கேட்டேன் " இவ்வளவு தடங்கல்ல "ஒரு" இடத்துல பிரச்னை ஆகி இருந்தாலும் நாம தொலைஞ்சோம். எப்படிம்மா தைர்யமா இருந்த?"
அவள் " அட போம்மா நீயே பயந்து கிட்டு இருக்கிற. இதுல நான் வேற பயத்தேன்னு தெரிஞ்சா அப்புறம் உன்னைச் சமாளிக்கிறது கஷ்டமா போயிடும். அதான் தைர்யமா இருந்த மாதிரி காட்டிக்கிட்டேன். வழக்கமா ஆகுற நேரத்துல ஒரு மணி நேரம் முன்னாடி கிளம்பினோம் ஆனா பனியினால டிரைவர் வண்டிய ஓட்ட முடியல. உருட்டுறார். டிரெயினை விட்டிருந்தா எங்கே போய் இடம் தேடி பஸ்சில போறது. ஸ்டேஷனுக்குள்ள போனதும் கார் போயிடுச்சு. டிரெயினுக்கு உள்ள ஏற முடியாம போயிருந்தா அடுத்து என்ன செய்றது" இவ்வளவும் யோசிச்சு கிட்டுத் தான் உன்னிடம் ஜோக் அடிச்சுகிட்டு இருந்தேன்னு சொன்னாள்.
என் தங்கமேன்னு மனசுக்குள் நெட்டி முறித்துக் கொண்டேன். எனக்கு மகன் இல்லாத குறையைத் தீர்ப்பவர்கள் என் இரண்டு பெண் குழந்தைகளும். எங்க அம்மா என்னைத் தைர்யமாக வளர்க்க , நான் என் பிள்ளைகளைத் தைர்யமாக வளர்த்து விட்டேன். இனி அவர்கள் பிள்ளைகளை அவர்கள் தைர்யமாக வளர்த்து விடுவார்கள். இப்படித் தானே நல்ல பண்புகள் தலை முறை தலை முறையாக கை மாற்றி விடப் படுகின்றன.
என் எழுத்தை ரசித்திருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்து ஒரு பயணக் கட்டுரையில் சந்திப்போம்.
வர்ர்ர்ரட்டா!!
*******
13 July, 2026
நாவல்: காதல் அசுரன் கிளைவ் ஆசிரியர் எம் எம் தீன்
படைப்பு பதிப்பகம்.
விலை. : 500 ரூபாய்.
முதற்பதிப்பு : டிசம்பர் 2024 .
கிளைவ் வாழ்க்கையில் இத்தனை காதலா?? என்று உங்களை அதிசயிக்க வைக்கும் என்ற ஆசிரியரின் முன்னுரையோடு முனைப்போடு வாசிப்பை தொடங்கினேன்.
ராபர்ட் கிளைவ் தன் 17 வது வயதில் இந்தியாவிற்கு வந்து, இந்தியாவைத் தன் நாட்டோடு இணைக்கத் துடித்த டூப்ளேயை தோற்கடித்து, ஆற்காடு கோட்டையை கைப்பற்றி " ஆற்காட்டு நவாப் " என்ற பெயரும் பெற்றார்.
கும்பினி பையன்களை மணக்க இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்த பதினொரு பெண்களில் ஒருவரான மார்க்கெட் மஸ்கரலினைக் காதலித்து திருமணம் செய்ததை சொல்லும் கதை.
தீனின் நாவல்கள் தொடங்கும் போது அட்டகாசமான இயற்கை வர்ணனைகளோடு தொடங்கும். போகப் போக அவர் கதைக்குள் போய் விடுவதாலோ, இல்லை நாம் கதைக்குள் மூழ்கி விடுவதாலேயோ அதை ரசிக்க தவறி விடுவோம்.
அதனாலேயே நான் நாவலின் முதல் அத்தியாயத்தை இரண்டு முறை வாசிப்பேன் " பொன் துகளாய் கிடக்கும் நீண்ட கடற்கரையை பார்த்தான்"
" கடலலை வெள்ளி நுரைக் கோடு தீட்டிக்கொண்டு கரையை நோக்கித் தாவி வந்து கொண்டிருந்தது"
" அவன் சிவப்பு தொப்பி தன் சிவந்த இறக்கையை விரித்த பறவையைப் போல பறந்து கீழ்த்தரை படிக்கட்டில் உட்கார்ந்தது.
" இந்த மணல் துகள்கள் சூரியனால் புடம் போடப்பட்ட தங்கப்பரல்கள் போல மினுங்கின. "
இவை எல்லாம் நாவலின் தொடக்கத்தில் என்னை ரசனைக்குள் ஆழ்த்திய வரிகள்.
கிளைவும் எட்மண்டும் நண்பர்கள். எட்மண்டு ஒரு பெண்ணின் சாயலோடு கிளைவுக்கு அறிவுரை சொல்வான். அவனுக்கு பெண்களை விட கிளைவை பிடித்திருந்தது.
எல்லா ராணுவ குழுக்களிலும் வயதானவர்களை அனுபவத்திற்காகவும், இளைஞர்களை வேகமான செயலுக்காகவும் இணைத்து இருப்பார்கள். இளைஞர்கள் கனவுப் போதையில் மிதக்க , வயதானவர்கள் பலான ஜோக்குகளோடு வலம் வருவார்கள்.
தன் அப்பாவும் சித்தப்பாவும் வழி அனுப்பி வைக்க கிளம்பி வந்த ஏழை கிளைவ் பல இன்னல்களுக்கு உள்ளாகிறார். அவன் வந்த கப்பலும் விபத்துக்குள்ளாகி ஒன்பது மாதங்கள் தாமதமாக, கையில் உள்ள பணமும் செலவழிந்து பரிதாபமாக நிற்பதை வாசிக்கும் போது இதிலிருந்து அவர் ஆற்காட்டு நவாப்பாக ஆனது வரையிலான அவர் வளர்ச்சியைப் படிக்க ஆர்வம் கூடுகிறது.
கிளைவ் லோப்மாஸ் இனப்பெண் ஒருத்தியை சந்திப்பதாக வருகிறது. அவள் அழகை வர்ணிக்கும் போது சமீபத்தில் கும்பமேளாவில் பாசிமணி விற்க வந்து, சோசியல் மீடியாவால் பிரபலமாக்கப்பட்ட மோனாலிசா என்ற பெண் நினைவுக்கு வந்தார்.
லோப்மாஸ் இனம் என்பது ஆங்கிலோ இந்தியர் போல, போர்ச்சுக்கீசியர் இந்தியர் கலந்ததால் உருவானது என்கிறார் ஆசிரியர்.
பெண்கள் க்ளைவின் அழகினாலும் கம்பீரத்தினாலும் மட்டுமல்ல அறிவினாலும் , துணிச்சலினாலும் கவரப்பட்டு இருப்பார்கள். ஒரு ஆங்கிலோ இந்தியப் பெண்ணிடம் " எல்லா நேரத்தையும் தனது ஆக்கிக் கொள்கிறவன் வெற்றி பெற்றுக் கொண்டே இருப்பான்" என்பார்.
இதற்கு ஒரு உதாரணம் எப்போதாவது தன் எதிர்ப்பாலினத்திடம் ஒரு ஈர்ப்பு வருகிற போது அவனோ அவளோ அதில் கரைந்து போய் காணாமல் போய் விடுகிறார்கள். அந்த நேசத்திற்காக எதையும் இழக்கவும் செய்யவும் துணிந்து விடுகிறார்கள் இது கதைக்கு இடையே ஆசிரியரின் கருத்து . பல காதல் வெற்றி பெறுவதற்கு இந்த உணர்வு இருவரிடமும் சமமாக இருப்பது தான் காரணம் ஆகிறது.
சினிமா பார்த்து சில சமயங்களில் கொடுத்த காசு இந்த ஒரு சீனுக்கு சரியா போச்சு என்று சொல்வோமே அதுபோல கிளைவ் ஜாகியூஸ் என்ற பெண்ணிடம் விடைபெறும் நிகழ்ச்சி வாசிக்கும் போது தோன்றியது என்ன ஒரு அழகான விடைபெறல். " உன்னை என் வளர்ப்புத் தாய் போல் பார்த்துக் கொள்வேன்" என்று கிளைவ் சொல்லுவார். வெறும் உடல் சார்ந்து மட்டுமின்றி ஒரு தாய் மீது காட்டும் அன்பும் அக்கறையும் ஒத்ததுதான் உண்மை காதல்.
ஒன்றிரண்டு உடைகளோடு கப்பல் ஏறிய கிளைவ் அந்த உடைகளும் கிழிந்த நிலையில் தன் சித்தப்பாவின் நண்பர் செய்த உதவியோடு வாழ்க்கையை தொடங்குகிறார் . அந்த எளிய நிலையிலிருந்து ஆற்காட்டு வீரரான வளர்ச்சி நமக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது .
கிளைவ் மாபெரும் வீரனாக இருந்தாலும் இடையிடையே கப்பலில் ஏறிய போது இருந்த ஏழ்மையை சொல்லும் போதும் நலிந்தவனுக்கும் நன்றாகி விடலாம் என்ற நம்பிக்கை வரும். இந்தியா வந்த போது தன் அப்பாவுக்கு நீண்ட கடிதங்கள் எழுதுகிறார். எதற்கும் பதில் வரவில்லை. பின் தன் சித்தப்பாவுக்கு எழுதுகிறார். பின் இரண்டு மாதம் கழித்து தன் ஒன்றுவிட்ட சகோதரனுக்கு எழுதுகிறார் . கடிதம் எழுதுவதற்கு பதில் வராத போதிலும் மிகுந்த மகிழ்ச்சியோடு எழுதுகிறார். எனக்கு இந்த கடிதத்தை படிக்காமலே கூட ஒரு வார்த்தை எழுதினால் போதும்
மனம் இதம் கொண்ட நட்பை உணர்த்திவிடும் என்று எழுதி இருக்கிறார் .
கடற்காற்று கப்பலை அலைக்கழிக்க பாய் மரங்களை விரித்து பலரும் அதன் மேல் ஏறி நிற்கிறார்கள் அவர்களுள் ராபின்யங் என்ற கைதியும் ஒருவன். கடற்காற்று அமைதியானதும் அவன் இரு கைகளையும் விரித்து ஆரவாரிக்கும் போது திடீரென்று மறுபடியும் அந்த கடல் காற்று அவனை அடித்து இழுத்து கடலில் போடுகிறது. நுரை பூக்களின் மேல் அவன் தலை தெரிந்தால் காப்பாற்றி விடலாம் என்ற நிலையில் தெரியாது போக அவனை அங்கேயே விட்டபடி கப்பல் நகர்ந்து விடும் இந்த நிகழ்வை தீன் எழுதினால் வாசிக்கும் போது நாமே கப்பலில் பயணித்த உணர்வு. ஆம் அச்சம் தரும் உணர்வு வரும்.
கொன்சால்வஸ் என்ற கேப்டன் கடலில் எப்படி திசை கண்டு பயணிக்கிறோம் என்று பள்ளிப் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பது போல சொல்லிக்கொடுப்பார் . நமக்கும் அது பாடமாகும். அந்த காலத்தில் கிராஸ் டாப் என்ற குழல் போன்ற கருவியையும் வானவெளி குறியீடுகளையும் வைத்துத்தான் கப்பலில் பயணத்திருக்கிறார்கள். சில சமயம் அவை தப்பாகி விடும் போது உலகைச் சுற்ற வேண்டி வரும்.
மலர்கள் இரவில் கண்களை மூடிக்கொண்டு பகலில் கண் விழிப்பது அங்கு நடக்கும் குடியையும் கும்மாளத்தையும் காணாமல் இருப்பதற்குத் தானோ என்று ஒரு இடத்தில் எழுதி இருப்பார் ஆசிரியர். எவ்வளவு அழகான கற்பனை. மலர்கள் மென்மையானவை அல்லவா? இதுபோல , கதைக்கு இடையே ஆசிரியர் நம்மோடு பேசிக் கொண்டே இருப்பார். கதை வாசிக்க தொடங்கிய கொஞ்சம் பக்கங்களிலேயே கிளைவுக்கும் எட்மண்டுக்கும் இடையிலான நட்பை பற்றிய என் சந்தேகத்தை கதை ஆசிரியருக்கு whatsapp மெசேஜ் செய்தேன். அதற்கு அவர் பதில் சொல்லவில்லை காரணம் என் சந்தேத்துக்கான விடை கதையின் கடைசி பக்கத்தில் இருந்தது. அது கிளைவ் மார்கரெட்டை விரும்பி திருமணம் செய்வதற்கான வித்தியாசமான காரணமாக இருந்தது. ஆம் காதல் அசுரன் தான் கிளைவ். நமக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் இந்த புத்தகம் .
நான் ரசித்தவற்றுள் ஒரு சில வரிகள் :
' காற்று மெழுகுவர்த்தியை ஆட்டுவது போல அவன் மனம் வேறொரு அசைதலை செய்து கொண்டே இருப்பதும் அவனுக்கு விளங்கியது" . அலை பாயும் மனதை காற்றுக்கு அலைக்கழியும மெழுகு திரியின் சுடருக்கு ஒப்பிட்டுசொன்னது ரசிக்க வைத்தது.
"அன்பாகப் பேசும் பெண்கள் , ஆண்களை புதிய உலகத்திற்கு அழைத்துப் போகிறார்கள் "
" கிளைவ் கிடு கிடுவென நடுக்கொடி மரத்தில் ஏறி பாய் மரத்தை விரித்துக் கட்டினான். கடல் அங்கிருத்து பார்க்க பொங்கி எழும் வட்டத் தொட்டி போல இருந்தது. வெண் மேகங்கள் விர்ரென்ற சத்தத்துடன் குளிர் காற்று போல போய்க் கொண்டிருந்தது."
"எல்லா பாய் மரங்களையும் விரித்து விடும் போது கப்பல் பூப் போல மலர்வதைப் பார்க்க அழகாக இருந்தது."
" மனிதன் மிகுந்த மகிழ்விலோ மிகுந்த வெறுமையிலோ இருக்கும்போது பேசுவதற்கு எதுவுமே இல்லாமல் போகிறான் "
"அர்ஜூன் லக்கி இல்ல? அவன்ட எல்லாமே இருக்குது.
ஹேய்! உன்னோட நான் இருக்கிறேன். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்குது."
திரைக்கு செல்லாமல் நேரே நம்மை OTT மூலம் வந்து சேர்ந்த TEST படத்தில் நயன்தாரா மாதவனிடம் சொல்லும் இந்த வசனம் எனக்கு ரொம்ப பிடிச்சது. கிடைத்து விட்டதாலேயே பலரிடம் மதிப்பிழந்த கதையைச் சொல்லிய வசனம்.
"டீச்சரம்மா சொன்னா நிறுத்திடணும். டீச்சரம்மா சொன்னா சாப்பிடணும். டீச்சரம்மா சொன்னா அப்பா ஆகிடணும்" கோபமாக மாதவன் தன் மனைவியிடம் பேசும் வசனம். ரம்ப யதார்த்தம்.
யாருங்க வசனமெழுதியது. அந்த புறங்கையில் ஒரு மெல்லிய முத்தம்.
போரடிச்ச படம். இதைப் போய் புகழ்றீங்கன்னு சொல்றவங்களுக்கு ஒரு சொல். நான் எல்லாரிடமிருந்தும் எல்லாவற்றிலிருந்தும் நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொள்ள விரும்பும் அன்னப் பறவை.
நயன்தாரா, மீரா ஜாஸ்மின், மாதவன், சித்தார்த் , காளி வெங்கட் எல்லோருமே தம் திறமையை மிக அழுத்தமாக திரைத்துறையில் பதித்தவர்கள். கதைக் கரு மிகவும் கனம் வாய்ந்தது. விளையாட்டில் கூட விளையாடும் பணம்.
ஆனால் ஏதோ ஒரு தவறு மக்களை திரைப்படத்தை ரசிக்க விடாமல் செய்திருக்கிறது. அது என்ன என்பதை கண்டு பிடிக்க இயக்குநர் முயற்சி செய்யணும். ஒரு வேளை மிகத் திறமை வாய்ந்த நடிகர்கள் ஆனதால் எதிர்பார்ப்பு அதிகமாக எகிறியது காரணமாய் இருக்குமோ. தெரியவில்லை.
எல்லா தந்தையருக்கும் தன் பிள்ளைகள் முன் தான் ஹீரோவாக திகழ வேண்டும் என்ற ஆவல் இருக்கும் . எத்தனை பேருக்கு வாய்க்கும். ஆனால் சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு இல்லாமல் நேர்மையாய் வாழ்ந்து பாருங்கள். காலத்துக்கும் நினைக்கும்.
# செலவும் சிக்கனமும்.
செலவையும் சிக்கனத்தையும் சரியான விகிதத்தில் கொண்டு செல்வது என்பது கயிற்றின் மேல் நடப்பதைப் போல சாகசம் நிறைந்தது.
கையில் கிடைத்ததை எல்லாம் செலவழித்து சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்வது ஒரு வகை. அது ஒரு நாள் வெளுத்து விடும். அது நமக்கு வேண்டாம்.
சிக்கனமாய் இருக்கிறேன் பேர்வழி என்று விளக்கணைத்ததும் உடை கழற்றி வைக்கும் சுருளிராசன் தத்துவமும் கதைக்குதவாது.
அப்போ எப்படி வாழணும்.
அதுவும் இன்று காய்கறி விற்கும் விலையில் நாம் அதிகம் வீணாக்கும், நாளை உதவும் என்று fridge இல் வைத்து குப்பைக்கு போவதை குறைப்பதே பெரிய சிக்கனம். மதியம் மிஞ்சும் காய்கறியை இரவு உணவில் ஆளுக்கு கொஞ்சம் எடுத்துக் கொண்டாலே fridge க்கு போகாது. இரவு செலவழியாது என்று தோன்றினால் மாலையே வீட்டு வேலைக்கு உதவியாய் வருபவர்களிடம் கொடுத்து விடலாம். யாரோ ஒருவருக்கு உதவி விடும்.
EB bill எத்தனை ஆயிரம் வந்தாலும் கட்டுவதற்கு நமக்கு திராணி இருக்கலாம். ஆனால் அதற்காக கரண்ட்டையோ தண்ணீரையோ வீணாக்குவது நாம் நாட்டுக்கு செய்யும் துரோகம். ஆளுக்கு ஒரு அறையில் இருந்து கொள்ளலாம் அதற்குரிய வசதி இன்று நமக்கு இருக்கிறது. ஆனால் ஆளே இல்லாத அறையிலும் லைட் டும் காற்றாடியும் இயங்குவது கண்டிப்பாக தவிர்க்க வேண்டியது. சின்ன பிள்ளைகள் அணைக்காமல் சென்றால் நாம் அணைக்க கூடாது. அவர்களை அழைத்து அணைக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் அவர்கள் அந்த நல்ல பழக்கத்தை பழகுவார்கள்.
ஒருவருக்காக ஒரு காரில் செல்வது ஆடம்பரம் என்கிறார்கள். ஆனால் அது சில சமயங்களில் தவிர்க்க முடியாதது. ஆனால் நான் ஒரு பழக்கத்தை வைத்திருக்கிறேன். கூடிய வரையில் நான் செல்லும் வழியில் தெரிந்தவர்கள் பஸ்சுக்கு நின்றால் நான் அழைத்து செல்வேன். சில நேரங்களில் நான் செல்ல வேண்டிய பாதை தவிர்த்து அவர்களுக்காக மாற்று வழியிலும் செல்வதுண்டு. முக்கியமான என் வயதுடையவர்களைக் கண்டால் கண்டிப்பாக உதவுவேன்.
இன்னும் யோசித்தால் பல வழிகளில் சிக்கன நடவடிக்கை தொடங்கலாம். நம்மிடம் தான் இருக்கிறதே என்று அலட்சியமாக இருந்தால் பணம் ஒரு நொடியில் நம்மை தலை குப்புற தள்ளி விடும்.
சிக்கனமாய் இல்லாமல் செலவழிப்பது எவ்வளவு தவறோ அதே அளவு செலவழிக்காமல் சேர்த்துக் கொண்டே இருப்பதும் தவறு.
இரண்டுக்கும் நடுவில் சரியாக பாலன்ஸ் செய்து வாழ்க்கையை வளமோடு வாழ்வோம்
12 July, 2026
இதெல்லாம் சின்ன வயதில் மனதில் பதிந்த விஷயங்கள். அப்போ எங்க அப்பாயி எங்களோட தான் இருந்தாங்க. சித்து உருவமாக. தங்க நிறத்தில் இருப்பாங்க. தலை முடி சுருட்டையாக தோள் அளவு தான் இருக்கும். அதைத் தூக்கி கோடாலி முடிச்சு போட்டிருப்பாங்க. வீட்டில் எப்போதும் சட்டை இல்லாமல் சேலை அணிந்து முந்தானையைச் சுத்தி மார்புக்கு மேல் மறைத்து சொருகி இருப்பாங்க. காதின் பாம்படங்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் தோளுக்கு சேதி சொல்லும். கழுத்தில் கைகளில் சுருங்கி இருக்கும் தோலை அழுத்திப் பிடித்து விட்டால் அது நேராக கொஞ்ச நேரம் ஆகும். அது எனக்கு பிடித்த விளையாட்டு. அத்தனை நகங்களும் வளைந்து கிளியின் அலகு போல தோற்றம் அளிக்கும்.
வாசலில் நுழைந்ததும் உள்ள அறையில் ஜன்னலை ஒட்டி போடப்பட்ட பெஞ்சில் அமர்ந்து வெளியில் போவார் வருவோரை வேடிக்கை பார்ப்பது தான் பொழுது போக்கு.
ஏண்டி இவளே என்பதுடன் பெயரைச் சேர்த்துத் தான் யாருடனும் பேச்சு தொடங்கும். பெரிய பெரிய பற்கள் எந்நேரமும் போட்டிருக்கும் வெற்றிலையால் காவி படிந்து சிரிக்கும் போது ஒரு வெள்ளந்தித் தனத்தை வெளிப்படுத்தும்.
திடீர்னு பையப் பைய மாடியேறிப் போவார்கள். அந்த சமயம் நானும் கூட ஏறினால் எங்க அம்மா " வேண்டாம் இங்கேயே இரு." எனத் தடுத்து விடுவார்கள். அந்த நேரம் அனேகமாக மதியம் மூன்று மணியாகத் தான் இருக்கும். மாடிக்கு ஏன் போகிறார்கள் என்பது எனக்கு ஆர்வம் கிளப்பும் விடை தெரியாக் கேள்வியாகவே இருந்தது. ஒரு நாள் யாருமில்லாத சமயம் மெல்ல ஏறி விட்டேன். அதற்குப் பிறகு பயந்து போய் போவதில்லை.
சுவற்றில் மாட்டி இருந்த இயேசு நாதரின் படத்தின் முன் முழந்தாளிருந்து, ஒரு சின்ன சாட்டையால் தன்னை அடித்த படி செபம் செய்து கொண்டு இருந்தார்கள். ஒவ்வொரு முறை சாட்டை காற்றில் வீறிடும் போதும் விசுக் விசுக் என சத்தமிட்டது. கண்கள் மூடிய படி குரலில் மெல்லிய அழுகை கலந்து அவர்கள் செபித்தது மறுபடியும் மாடி ஏறிப் பார்க்கும் துணிவைத் தகர்த்து விட்டது.
21 பெண்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளிவந்துள்ள " மான் குட்டிகளும் பருந்துகளும்" புத்தகத்தைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். எனது மாயக் கண்ணன் என்ற சிறுகதையும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
முதல் கதை புதிய மாதவி எழுதிய "நினைவு நாள்"
சில ஆண்கள் காடு மலை எல்லாம் சுற்றித் திரிந்து தகவல் சேகரித்து எழுதுவது தான் சிறந்த எழுத்துன்னு நினைக்கிறாங்க. அறிவுக்கு இணையா உணர்வுகளும் முக்கியமானவை தான்.
உணர்வுப் பாதிப்பை உண்டாக்கும் கதைகளை பெண்களால் தான் சிறப்பாக எழுத முடியும். அதற்கொரு உதாரணம் இந்த சிறுகதை நினைவு நாள்.
மனைவி இறந்த கணேஷும் கணவனை இழந்த மீனாவும் மறுமணம் புரிந்து கொள்கிறார்கள். எதைப் பேசினாலும் தன் இறந்து போன மனைவியிடமே வந்து பேச்சை முடிப்பது தான் "மனைவி மீதி இவ்வளவு அன்பா" என்று வியந்து திருமணம் புரிய வைத்தது.
ஆனால் மீனாவுக்கு திருமணத்துக்குப் பின் அதுவே மன உழைச்சலைத் தந்தது.கணேஷின் மனைவி உமா இறந்த ஆண்டு நினைவு நாள் அன்று வீட்டை அதகள் படுத்தி விடுவான். அதை மிக அழகாக விவரித்திருக்கிறார்.
ஆனால் சாலை விபத்தில் இறந்து போன மீனாவின் கணவன் ரமேஷின் இறந்த நாள் சத்தமில்லாமல் கடந்து போகும். இந்த ஆர்ப்பாட்டம் மீனா செய்திருந்தால் கணேஷ் அதை எப்படி எதிர்கொண்டிருப்பான். இதை சிந்திக்க வைக்கத் தான் பெண்ணெழுத்து தேவையாய் இருக்கிறது.
கணேஷ் பேசிக் கொண்டிருந்தான். உமா கேட்டுக் கொண்டிருந்தாள் . மீனா மௌனமாக இருந்தாள் அவள் மௌனத்தை ரமேஷுடன் இரவுகளும் கேட்டுக் கொண்டிருந்தன என அழகாக முடித்திருந்தார்.
என்னை உடைத்துப் போட்ட ஒரு வரி உண்டு " தலையணையை எடுத்து வயிற்றோடு வைத்துச் சேர்த்துக் கட்டிக் கொண்டு கால்கள் இரண்டையும் மடக்கிப் பனிக்குடம் உடைக்கப் போகும் குழந்தையைப் போல படுத்திருந்தாள்"
இது தான் அந்த வரி.
அகிலாவின் " காயம்" என்ற சிறுகதை. ஒவ்வொரு பெண்ணுக்குமே சிறு வயதில் நடந்த நிகழ்வால் , யாரிடமும் சொல்ல முடியாமல் போய் , அழுத்தமான காயமாய் மனநில் பதிந்த விஷயம் ஏதாவதொன்று இருக்கும். அது இல்லாத பெண் பாக்கியசாலி. ஆரோக்கியமான குடும்ப வாழ்வைப் பெற்றிருப்பாள். அத்தகைய ஒரு பெண்ணின் கதை தான் காயம். ஊட்டி போகும் வழியிலுள்ள கேத்தியின் இளங்காலைப் பொழுதின் வர்ணனையோடு கதை தொடங்குகிறது. அங்கே யூக்கலிப்டஸின் மணம் எல்லா வீடுகளிலும் இருப்பதற்கான காரணமாக இவர் சொல்லப்படுவது அனேகமாக உண்மையாகவும் இருக்கலாம். "கண்கள் ஒரு நல்ல பேச்சு கடத்தி. வெகு சகஜமாக பாலம் போட்டு விடலாம். கண்களைத் தவிர்ப்பவர்களை பேச முற்படாதவர்களாக சங்கோஷப்படுபவர்களாக கொள்ளலாம்" என்கிறார். மன நலம் சார்ந்த மிகச் சரியான உண்மை. திருமணத்துக்கு முன்பே கருவுற்றதால் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கூறுகையில் "ரொம்ப ஸ்டைலா டிரஸ் பண்ணிக்கும். திமிரா பேசும். அப்புறம் எவன் பார்த்துகிட்டு சும்மா இருப்பான் " என்று அங்கிருந்த ஒரு பெண் சொல்வதாக எழுதி தற்கொலைக்கான காரணத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறார். இதே போல தன் இள வயதில் நடந்து நேர் மறை முடிவெடுத்த ஒரு பெண்ணுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை சுவாரஸ்யமாகச் சொல்லி கதையை நகர்த்திய தருணத்தில் "அப்படியும் இருக்கலாமென நினைத்தேன்" என்று எழுதி அதிர்ச்சி தருகிறார். சிறு குழந்தைகளை சிறு வயது தானே என்று எண்ணி அலட்சியமாக நடத்தாதீர்கள். அது அவர்களின் உள் மன ஆறாதக் காயமாக இருந்து வளர்ந்த பின் குடும்ப வாழ்க்கையைக் கூட பாதிக்கும் வாய்ப்புண்டு் .
ஆசிரியர் இளம்பிறை எழுதிய
"பூரணக் குட்டி" மற்றுமொரு கதை. வட்டார மொழி இவர்களுக்கு நன்றாக கை வருகிறது. பூரணக் குட்டி பெயர் காரணம் பதற வைக்கும். கழிப்பறை வீட்டில் இல்லாததால் மலம் கழிக்கப் போன வயற் காட்டிலேயே இவளை பெற்றெடுத்திருப்பார்கள் பூரணக் குட்டியின் தாய். இன்று கூட வீட்டில் கழிப்பறை இல்லாமல் பெண் போன இடத்தில் கற்பு அழிக்கப்பட்டு கொலையும் செய்யப்படும் செய்தி கேள்விப்படுகிறோம். இந்த கதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக வந்திருந்தால் ஒரு முத்திரை கதையாக ஆகி இருக்க வாய்ப்புண்டு.
தனலட்சுமி பாஸ்கரன் எழுதிய யாசகம் ஒரு கதை கோவில் வாசலில் பூ விற்கும் பெண்ணிடம் அங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகளைப் பற்றி ஞானசுந்தரி விசாரிக்கிறாள் கேட்டு முடித்ததும் இறைவனிடம் தனக்காக வேண்டாமல் அவர்களுக்காக யாசகம் கேட்கிறாள். வாசகம் கேட்ட கையோடு அந்தப் பகுதி கவுன்சிலருக்கு ஒரு விண்ணப்பமும் எழுதி இருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியது
இந்த சிறுகதை தொகுப்பில் நான் எழுதிய மாயக்கண்ணன் என்ற சிறுகதையும் உண்டு . பொதுவாகவே ஆண்கள் எளிதில் சில விஷயங்களை நம்பி விடுவார்கள் ஆனால் பெண்கள் நுண்ணறிவோடு வரக்கூடிய ஆபத்தையும் யோசித்து இயங்குவார்கள் இந்த கதையில் அப்படி ஒரு அவசர தனத்தில் தனக்கு சீட்டு விளையாடும் இடத்தில் அறிமுகமான ஒருவனை தன் தங்கைக்கு திருமணம் முடித்துக் கொடுத்து அது எவ்வளவு பெரிய சிக்கலில் போய் நின்றது என்பதை சிறுகதையாக சொல்லி இருக்கிறேன்.
21 பெண்களின் சிறுகதைகளை 25 நாட்களில் தொகுத்து ஒரு தொகுப்பாக வர பெரும் முயற்சி செய்த ஜோஸ்வின் பாவா அவர்களின் சிறுகதை பாப(வ)நாசம் அதாவது பாபநாசம் எடுத்துக்கலாம் பாபநாசம்னு எடுத்துக்கலாம் ஒரு பள்ளி ஆசிரியர் தன் மாணவர்களை அழைத்துக்கொண்டு தாமிரபரணி நதியை சுத்தம் செய்யும் பணிக்கு செல்கிறார்கள் பனிம வயது பிள்ளைகளை பத்திரமாக அழைத்துச் சென்று கொண்டு விடுவது என்பது பெரும் பணி ஒரு சின்ன சிக்கல் கடந்து பத்திரமாக அழைத்து வந்து சேர்த்தாலும் பணியை விட்டு நீக்கப்பட்டதாக அந்தப் பெண்மணிக்கு கடிதம் வருகிறது பல இடங்களில் சம்பளம் வந்தால் போதும் மெனக்கடல் வேண்டாம் என சிலர் முடிவெடுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது பொறுப்பெடுத்தால் தானே பிழைகள் ஏற்பட என்று ஒரு பாதுகாப்பு ஜோனிலேயே தன் பனிக்காலத்தை முடித்து விடுவார்கள் ஒரு பெண் ஆசிரியரின் பரிதாப நிலையை சொல்லும் கதை
அர்ஷா எழுதிய "அதிகாரத்தின் களிமண் பொம்மைகள்" சூர்ய பிரகாஷ் தலைமைச் செயல் அதிகாரி. கம்பீர ஆண். தன்னை அழகாக வெளிப்படுத்தக் கூடியவர்.வாசிப்பு பழக்கமுடையவர். கணினியில் நவீன செயல்பாடுகள் நன்கு அறிந்தவர். அவர் அலுவலகத்தில் புதிதாக பணிக்குச் சேர்ந்த தமிழரசு கணவனால் நிராகரிக்கப்பட்டவர். அலுவலகங்களில் பெண்ணை தன் வயப்படுத்த ஆண்கள் பயன்படுத்தும் உத்திகளை சிறப்பாகக் கையாள்வதில் வல்லவர் சூர்ய பிரகாஷ். ஆனால் தமிழரசி அவர் பெண்களை எடைபோட்டு வைத்திருப்பதிலிருந்து எப்படி மாறுபட்டவள் என்பதை தெளிந்த நீரோடை போலச் சொல்லும் கதை.
மொத்தத்தில் பல விருதுகள் வாங்கினவர்கள் முதல் தம் முதல் சிறுகதை எழுதியவர் வரை இந்தத் தொகுப்பில் இடம் பெற்றிருப்பது இதன் சிறப்பு. ஒரு சில வெளிநாட்டு பெண்களும் இடம் பெற்றிருப்பதால் அகில உலகத்தின் பெண்களின் உணர்வுகளைப் புரிந்த கொள்ள உதவும் ஒரு தொகுப்பாக இருக்கிறது.
தொகுப்பாசிரியர் ஜெ.பி ஜோஸ்ஃபின் பாபா
Swasam பதிப்பகம்.
தொடரபு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 8148066645
ஆனந்த விகடன் பிரசுரத்தில் வந்த ஜெயகாந்தன் கதைகள் என்ற புத்தகத்தை வாங்கினேன். 1960 , 1970 அவர் எழுதிய கதைகளின் தொகுப்பு. விகடனில் வந்தது போலவே அந்தந்த பக்கங்களின் நகைச்சுவைத் துணுக்குகளோடு. அதில் ஒரு நாவல் "ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன"
அதில் அலங்காரவல்லியம்மாள் என்றொரு கதாபாத்திரம். அவர் கணவன் ஆடலரசன். அவர்கள் வீட்டு அமைப்பு குடும்ப அமைப்பைத் தான் சித்தரிக்கிறார். பிள்ளைகள் சாப்பிடும் போது தாய் சொல்வதாக இப்படி வருகிறது. " சாப்பிடும் போது எதை அதிகம் சாப்பிடலாம். எதை அதிகம் சாப்பிடலாகாது. எந்தப் பொருள் வாய்வு குணம் மிகுந்தது. எது உஷ்ணம், பித்தம், சீதளம் எனப் பிரித்துப் பிரித்துச் சொல்லி அலங்கார வல்லியம்மாள் பரிமாறுவாள். கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்குப் பின் இன்றைய பிள்ளைகள் கையாளும் முறை இது.
என்ன ஒரு முற்போக்கு சிந்தனையோடு எழுதி இருக்கிறார்.
"காதலங்கிறது செக்ஸ் இல்ல. காதல் உயர்வானது. உடம்பின் மேல் தான் காதல்னா எல்லோருமே எல்லோரையுமே காதலிக்க முடியுமே. "
காதலின் உன்னத்த்தை இதை விட எளிதாக விளக்க முடியுமா?
11 July, 2026
ஒரு ஞாயிறு அன்று நடந்த நீயா நானாவில் கோபிநாத் ஒரு கேள்வி எழுப்பினார். "ஆண்களுக்கு ரிஸ்க் எடுப்பதில் ஒரு விருப்பம் இருப்பது போல் பெண்களுக்கு தனக்கு வலி ஏறபடுத்திக் கொள்வதில் ஒரு அடிக்ஷன் இருக்கிறதோ? " என்றார்.
ஏன் சாமி!
அப்படி இருந்தா குடிச்சுட்டு வந்து பெண்களை அடிக்கிற ஆண்கள் எத்தனை பேர் இருக்கிறாங்க. வலி கிடைப்பது ஒரு கஷ்டமா? அதற்கு டாட்டூ போட்டா வலியை அனுபவிக்கணும்.
ஆணானாலும் பெண்ணானாலும் அடுத்தவர் நம்மைப் பாரக்க வேண்டும் என்று ஒரு செயல் செய்தால் அது சரியில்லை.
அதுல ஒரு வேடிக்கைப் பார்த்தீங்களா? கருப்பாய் இருப்பவர்களுக்கு நாம் அழகாக இல்லையோ என்ற காம்ப்ளெக்ஸ்சை உண்டாக்குபவர்கள் தான் தன் பொன் நிற தோலின் மேல் கருப்பாய் டாட்டூ போட்டுக் கொள்கிறார்கள்.
நிறத்தில் என்ன இருக்கிறது என்ற பாடத்தை இதில் இருந்து கற்றுக் கொள்ளலாம்.
08 July, 2026
இவர் வாழ்ந்த காலம் 41 ஆண்டுகள் மட்டுமே. அந்தக் குறுகிய காலத்தில் எங்கள் குடும்பத்துக்கு இவர் போட்ட அடித்தளம் அபாரமானது.
அந்த அடித்தளத்தின் பலத்தில் தான் இன்று இந்த ஆலமரம் பரந்து விரிந்து இருக்கிறது. இவரது கொள்ளுப் பேரன் பேத்திகளை வெளிநாட்டிலும் இருத்தி இருக்கிறது. என்றும் உங்களை மறவேன் அப்பா.
இந்த ஆல மரம் இன்னும் இன்னும் ஆழமாக வேரூன்ற உங்கள் ஆசி நிலைத்திருக்கணும் அப்பா
03 July, 2026
Bynge இல் லாசரா அவர்கள் எழுதிய "உத்ராயணம்" என்னும் சிறுகதை வாசித்தேன். உடனே ஒரு உத்வேகம் எழுந்தது. அவருடைய எல்லா கதைகளையும் வாசித்து அத்தனை சொற்களையும் பொக்கிஷமாய் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எனக்கு ஒரு பாக்கியம் இருக்கிறது. வாசித்தவுடன் அவருடைய அருமை மகனுடன் ஒரு conversation வைத்துக் கொள்வேன். இதோ அண்ணன் சப்தரிஷியும் நானும் பேசிக் கொண்டது.
நான்: அண்ணன் இன்று லாசரா எழுதிய உத்ராயணம் வாசித்தேன். அதில் கண்ணன் னு குறிப்பிடுவது உங்களைத் தானா?
அண்ணன்: ஆமா. உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் தரேன். அதுவும் லாசராவின் கதைகளைச் சொல்லும் ரம்யா கண்டுபிடித்த சொன்ன விஷயம். அவர் எழுதும் கதைகளில் பாசிட்டிவ் காரெக்டர்களுக்கு அதிகம் தன் பிள்ளைகளின் பெயரையே பயன்படுத்தி இருக்கிறார். நெகடிவ் காரெக்டர்களுக்கு பெயர் இல்லாமல் அவன் அவள் என்றே எழுதி இருக்கிறார்.
நான்: இதை இனி கவனத்தில் இருத்தி வாசிக்கிறேன் அண்ணன்.
அண்ணன்: உங்களுக்கு இந்து தத்துவங்களில் ஆர்வமிருப்பதால் இன்னும் ஒரு விஷயம் சொல்கிறேன். எங்க அப்பா புருவம் திக்கா நீண்டு வளர்ந்து இருக்கும். அது போல் பீஷ்மரின் புருவமும் இரண்டு பக்கமும் நீண்டு வளர்ந்து தொங்கி போர் புரியும் போது தொந்தரவாய் இருக்குமாம். அதனால் இரு போர் வீரர்கள் இரண்டு புறமும் அம்பினால் புருவத்தை தூக்கிப் பிடித்து அவர் போர் செய்வதற்கு இடைஞ்சல் இல்லாமல் பார்த்துக் கொள்வார்களாம்.
நான்: interesting ஆன விஷயம் அண்ணன்.
இப்போ ஏன் இந்த விஷயத்தை அண்ணன் சொல்றார் உத்ராயணம் வாசிச்சு பாருங்க புரியும்.
இப்போ உத்ராயணம் கதையில் நான் ரசித்த வரிகள்:
"இது வரை ரெண்டு தடவை கிணற்றிலிருந்து மொண்டு மேலே கொட்டிக் கொண்டாச்சு. காஞ்சாச்சு. ஆனால் உடல் வாணலியாய் பொரிகிறது. இனி மேல் ஈரம் பட்டால் இந்த வயதுக்கு மார்பில் கொலுசு தான். ஒரு தினுசான மயக்கமா? மதிய உறக்கமா?"( மார்பில் சளி நிறைந்து இருமும் போது ஏற்படும் சத்தத்தை மார்பில் கொலுசு என்கிறார்)
" இது குறைக்கிற நாயுமல்ல. கடிக்கிற நாயுமல்ல. நாய்களில் ஊமை உண்டோ?" (அட ஆமால்ல! நாய்களின் முக்கிய அடையாளமே குறைப்பு தானே! வாய் பேச முடியாத குறைக்க முடியாத நாய்கள் உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?)
"நாங்கள் எங்கே பேசிக்கிறோம். எங்களைப் பிணைக்கும் மௌனச் சரடே எங்கள் பேச்சென்றால் நாங்கள் நிறையப் பேசுகிறோம்"
"இரவு வேளை கடலோரம் அலைகள் மோதி மீள்கையில் விட்டுச் செல்லும் நுறைத் துளிகள்.பொரியும் முத்துக் கொதிகள்"
கல்வித் தெய்வம் அவரோடு கை கோர்த்துக் கொண்டு வார்த்தைகளை வாரிக் கொட்டி இருக்கிறது. முத்துக்களாய் அவை கதைகள் எங்கும் ஜொலிக்கின்றன.
Subscribe to:
Posts (Atom)
