அதிர வைத்த மரணம்.
குழந்தைகள் முதல் முதியவர் வரை அத்தனை பேர் கையிலும் செல் இருக்கிறது. அன்று பாப்பாக்கள் சோறு உண்ண நிலவைக் காட்டினோம் . இன்று அந்ம நிலவைக் கூட செல்லில் காட்டுகிறோம். அதிலும் மற்ற எல்லாவற்றையும் விட அதற்குப் பிடித்தது ரீல்ஸ் தான்.
என்ன நடந்தாலும் கை , உதவ உயர்வதற்கு முன், படம் பிடிக்கத் தான் உயர்கிறது. முதலில் படம் பிடிப்பவர் தனக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்தாலும் சில வீடியோக்கள் காட்டுத் தீயை விட வேகமாகப் பரவுகின்றன.
அப்படிப் பரவிய ஒரு வீடியோ தான் ஒரு தாய் தவற விட்ட குழந்தையை மீட்ட வீடியோ.
எவ்வளவு நேரம் அந்த குழந்தை தனக்குக் கிடைத்த பிடியை பிடித்துக் கொண்டிருந்ததோ? அதற்கு ஆயுசு கெட்டி தான் காப்பாற்றப்பட்டு விட்டது. ஆனால் அதைக் காக்க வேண்டிய தாய் தற்கொலை செய்து இறந்து போனதாகச் செய்தி.
காரணம் : இந்த செய்திக்கு சோஷியல் மீடியாவில் வந்த எதிர்வினையாக இருக்கலாம். இல்லை வீட்டில் உள்ளவர்களின் எதிர்வினையாக இருக்கலாம். இல்லை தனக்குத் தானே இப்படிக் குழந்தையை விட்டு விட்டோமே காப்பாற்ற முடியாமல் போயிருந்தால் என்ன ஆகி இருக்கும் என திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து தன் மீதே ஏற்பட்ட கோபம் காரணமாக இருக்கலாம். எப்படியோ ஒரு உயிர் பறந்து விட்டது. இனி அந்த குழந்தை, பெற்ற தாய் இல்லாத குழந்தை.
பல செய்திகள் செல்லில் வேகமாய் பரவுகின்றன. அதற்கு கமென்ட் பண்ணும் போது நாகரீகமாகச் செய்வோம். நெருப்பை அள்ளிக் கொட்ட வேண்டாம். உடனே நாம் ஏதோ தவறே செய்யாத உத்தமர் வேடம் தரித்துக் கொள்ள வேண்டாம். நமது கமென்ட்டுகள் ஒரு உயிரை எடுக்கும் வலிமை வாய்ந்தது என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும். இந்ம இறப்பு செய்தி எனக்குச் சொன்னது இது தான்.