பக்கத்து காலி ப்ளாட்டில் அடிக்கும் வெயில் அப்படியே வீட்டுக்குள் கடத்தப்பட அதைக் குறைக்கும் எண்ணத்தோடு ஜன்னலை ஒட்டி வளர்க்கப்பட்ட வாதாம் மரம் இன்று வளர்ந்து படர்ந்து, குடை போல் விரிந்து பரப்பிய நிழலில், அடர் கருப்பு நிறத்தொரு பசு படுத்துக் கொண்டிருந்தது.
அது எழுந்து நின்ற போது தான் தெரிந்தது அது வயிற்றில் கன்றின் சுமை தாளாது தான் படுத்துக் கிடந்திருக்கிறது. வலியில் கால் மாற்றி கால் தடம் பதிக்கவில்லை. "அம்மா" என்றொரு அலறல் இல்லை. அமைதியாக நின்றிருந்தது.
கொஞ்ச நேரம் காத்து நின்று படுக்கச் சென்ற நான் விடிகாலை எழுந்ததும் அதைத் தேடிச் சென்றேன். மடியின் பாரம் இறக்கி, அங்கே மின்சாரத் துறையைச் சேர்ந்தவர்கள் வெட்டிப் போட்டிருந்த கிளைகளில் இருந்து இலை தழைகளை தின்று கொண்டு இருந்தது. கன்று கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தது.
இவ்வளவு பாரமா சுமந்து கொண்டிருந்தாய்?? ஒரு சிறு முனகல் கூட இல்லாமல் எப்படி பெற்றெடுத்தாய்?? இந்தப் பசுவுக்கு உடைமைக்காரர்கள் என்ன இப்படி தேடாமல் இருக்கிறார்கள் என பலவிதமாக வியந்து கொஞ்ச நேரத்துக்கு ஒரு முறை பார்த்து வந்தேன்.
அப்போது எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. என் பள்ளிக் காலங்களில் ஊருக்கு கொஞ்சம் ஒதுக்குப் புறமான இடத்தில் உள்ள மரத்தில் ஓலைப் பெட்டியில் கட்டி அங்கங்கே தொங்கிக் கொண்டிருக்கும். கன்று ஈனும் பசு வெளியே தள்ளும் கழிவுகள் தான் அது. அதைக் கவனிக்கவில்லை என்றால் பசு தின்று விடும். ஆபத்து . அதனால் அதை ஓலைப் பெட்டியில் வைத்து ஒதுக்குப் புறமாய் உள்ள மரத்தில் கட்டி விடுவார்கள் என்று வளர்ந்த பின் புரிந்து கொண்டிருந்திருக்கிறேன்.
இந்த பசு ஈன்ற இடத்தில் அப்படி ஏதும் இல்லையே?? பசுவுக்கு ஏதும் ஆகி விடுமா?? என் கவலைகளுக்கு நடுவே உடைமைக்காரர்கள் தகவல் கிடைத்து வந்து விட்டார்கள். வந்து ஓய்ந்து கிடந்த கன்றைத் தூக்கி பைக்கின் முன் பகுதியில் வைத்து லேசாக நகரத் தொடங்கியதும் அந்த கரிய நிறப் அம்மாப் பசு "அம்மா" என்று சத்தமிட்ட படி அந்த பைக்கை தொடர்ந்து தன் கனத்த மடி அசைய ஓடத் தொடங்கியது.
தாய்மை. ஐந்தறிவு உடைய மிருகங்களிடமே தானாய் கனியும் போது,
இயற்கையான ஒன்றிற்கு
நாம் , பெண்கள் பெருமைப்பட எதுவுமே இல்லை என்று தோன்றியது.
No comments:
Post a Comment
தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!