Bio Data !!

02 March, 2026

நெல்லை சாரதா கல்லூரி. பல ஆண்டுகளுக்கு முன் தொலைபேசி அதிகாரியாகப் போய் கல்லூரி முதல்வரின் அறையில் ப்ராட் பேன்ட் சரி செய்து வந்திருக்கிறேன். அதன் பின் சமீபத்தில் என் தோழி உடனும் அவள் தோழியுடனும் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. தான் படித்த கல்லூரியை இருபதாண்டுகளுக்குப் பின் பார்க்க ஆசைப்பட்டாள். எங்க வீட்டிலிருந்து கிளம்பும் போது சுரிதார் வேண்டாம் , புடவைக்கு மாறிக் கொண்டு வா என அவள் தோழி சொன்னதும், நான் சுரிதாரில் இருக்கிறேனே பரவாயில்லையா எனக் கேட்டேன். நாங்க அந்த கல்லூரி மாணவர்கள். படிக்கும் போது புடவைக்கு மட்டுமே அனுமதி. அதிலும் அர்ஷா அங்கே உள்ள பல மாணவிகளுக்கு ரோல் மாடலாக இருந்தவள். அதனால் சொன்னேன் என்றாள். போகும் போது "அம்மா, பதினைந்து நிமிடம் தான். எனக்கு முக்கியமான இடங்களில் நின்று புகைப்படம் எடுக்கணும். எடுத்திட்டு கிளம்பிட வேண்டியது தான் " என்றாள். ஆனால் கல்லூரியில் நாங்கள் இருந்தது இரண்டு மணி நேரம். எனக்கு அந்த பிள்ளைகளின் சந்தோஷத்தை "நேரமாகுதுன்னு" சொல்லி கெடுக்க மனமே வரல. கல்லூரி முதல்வர் இவ்வளவு down to earth ஆ இருந்து ஒருவரை நான் பார்த்ததே இல்லை. பழைய மாணவிகளிடம் எவ்வளவு நினைவுப் பகிர்வு. என்னிடம்" நீங்கள் எத்த வருடம் இங்கே படித்தீர்கள் " என்று கேட்டார்கள். "நான் இந்த கல்லூரியில் படிக்கவில்லை. " என்று நான் படித்த கல்லூரியின் பெயரைச் சொல்லி என் வயதைச் சொன்னதும் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க. "இவ்வளவு வயதா? நம்பவே முடியல" என்று எனக்கு உற்சாக பானமளித்தார்கள். "இவ்வளவு கட்டுப்பாட்டில் வளரும் போது பெண் குழந்தைகள் திருமணத்துக்குப் பின் வாழ்க்கையை சுலபமாக எதிர் கொள்கிறார்களா" எனக் கேட்டேன். "நிச்சயமாக. விட்டுக் கொடுத்தலும் பணிந்து நடப்பதும் இயல்பாகவே வந்து விடும்" என்றார்கள். இவர்கள் கல்லூரிக்குள் ஆண்களுக்கு அனுமதி இல்லை. மாணவிகளை அழைத்துச் செல்ல வந்தவர்களும் கல்லூரிக்கு வெளியே தான் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காத்திருக்கிறார்கள். பெற்றவர்கள் பெண் குழந்தைகளை இந்த கல்லூரிக்கு அனுப்பி விட்டு நிம்மதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன். அந்த நேரம் வகுப்புகள் முடிந்ததற்கான மணி அடித்ததும் மாணவிகள் பட்டாம் பூச்சிகள் போலப் பறந்து வந்தார்கள். இவ்வளவு கட்டுப்பாட்டிற்கான எந்த நெருக்கடியும் அவர்கள் முகத்திலில்லை. ஒரு வகையில் குழந்தைகளுக்கு ரொம்ப சுதந்திரம் கொடுப்பதும் அவர்களுக்கு நாம் செய்யும் தீமையோ எனத் தோன்றுகிறது.