Bio Data !!

31 March, 2026

கரிப்பு மணிகள் 3

"கரிப்பு மணிகள் " முதல் பதிப்பு 2013 இல் வந்திருக்கிறது. அதிலுள்ள ஒரு வரியைத் தருகிறேன். பதிமூணு வருடங்களுக்குப் பின்னும் இன்றும் அதே நிலை தொடர்வதை நினைத்துப் பாருங்கள். "பவருள்ளவ ( இந்தக் கதை நெடுக இறுதியில் வர வேண்டிய " ன்" னை விட்டே எழுதுகிறார்கள். விடும் போது பால் மாறி விடுகிறது. ஆணைப் பற்றிச் சொல்வது பெண் போல் குறிப்பிடப்பட்டு விடுகிறது. ஆனால் அது அங்கு உள்ள பேச்சு மொழி போல) சேட்ட செஞ்சா அது லாவம்னு அடங்கிப் போற பெண்டுவளத்தா இது வரைக்கும் நான் கேள்விப்பட்டிருக்கே. பாத்துமிருக்கே நீ தான் தயிரியமா எடுத்துச் சொல்றே" பல பெண்கள் தாம் வரம்பு மீறிக் கையாளப்படும் போது கையாள்பவன் பவருள்ளவனாக இருந்தால் அவனுக்கு தன்னைப் பிடித்ததே பெரும் பாக்கியம் என்பது போல் உணர்ந்து வளர விடுகிறார்கள். அது கை மீறிப் போகும் போது வெளியிடுகிறார்கள். அப்போ அதுவே அவர்களுக்கு எதிராகத் திரும்பி விடுகிறது. இந்த நிலை இன்று வரை இருக்கிறது. மாற்றம் பெண்களிடமிருந்தே தொடங்க வேண்டும். மிக அழகாகவோ, திறமையாகவோ, பொருளாதார வசதியோடோ so called பவருள்ளவனாகவோ இருக்கும் ஒருவன் "உன் விருப்பமின்றி" உன்னைத் தொட்டாலும் எதிர்க்கப் பழகு. இத்தகைய சிறந்த ஒருவனுக்கு நம்மைப் பிடித்ததே பெரிய விஷயம் என பெருமை கொள்ளாதே. அவன் வேலை முடிந்ததும் உன்னைத் துச்சமாய் தூக்கி எரிவான். மீண்டும் வருவேன்.

30 March, 2026

கரிப்பு மணிகள் 2

கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன். இதை வாசித்த பின் இனி சமையலில் உப்பிடும் போது நம் கண்ணீர் துளிகளும் இணைந்து உப்பின் சுவை கூடிப் போகலாம். எத்தனை விதமான கஷ்டங்களைக் கடந்து இந்த உப்பு நம்மை வந்து சேருகிறது என நமக்கு புரிய வைக்கும் ஒரு நாவல். இது வரை வாசிக்காதவர்கள் வாசிக்க வேண்டிய ஒன்று. உப்பளத்தில் பணிக்கு வரும் இளம் பெண்களுக்கு உபத்திரவம் கொடுக்கும் கங்காணிகள். சம்மதிக்க மறுப்பவர்களுக்கு பணி மறுப்பு. "போய்த் தொலையுது" ன்னு சம்மதிச்சிட்டால் அடுத்து குழந்தை சுமக்கும் துயரம். தொடர்ந்து வரும் பேறு கால அவதி. அன்னக்கிளி அந்த வெள்ளை வெளேரென்ற உப்பளக் களத்தில் தன் இரத்தம் சிதற விழுந்து கிடப்பதை விவரிக்கும் போது உப்பின் நிறம் சிவப்பாக உறுத்துகிறது. ப்பா!! என்னால் வாழ்நாளுக்கும் மறக்க முடியாத காட்சி. "கண்டவனுக்கும் முந்தி விரிச்சு வயித்துல பிள்ளை வாங்கிட்டு வந்து நம்ம உசுர வாங்குதுங்க" ன்னு வசைச் சொல் வேறு. அந்த நேரத்தில் பிறக்கும் குழந்தையும் பெண் பிள்ளையாகப் போக நமக்கே "ஐய்யோ! அடுத்தும் ஒரு பொட்ட பிள்ளையா" என அடி வயிற்றிலிருந்து ஒரு கூக்குரல் எழும். உணர்வு சரியா பிரதிபலிக்கணும்னு பாதிக்கும் இடம் வரும் போதே ஒரு பதிவைப் போட்டு விடுகிறேன். மீண்டும் வருவேன்.

28 March, 2026

கரிப்பு மணிகள் - ராஜம் கிருஷ்ணன்

அதிகம் கேள்விப்பட்டு நான் இது வரை வாசிக்காமலிருந்த நாவல் மூத்த தமிழக எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் எழுதிய "கரிப்பு மணிகள்" தற்போது ஊரக நூலகத்தில் கிடைத்து வாசிக்கத் தொடங்கி இருக்கிறேன். முதல் அதிகாரத்தில் நான் பார்த்த சிறப்பு அம்சம் வட்டார மொழியில் கதை எழுதுபவர்கள் பயன்படுத்த வேண்டும் எனத் தோன்றியதால் உடனே குறிக்கிறேன். வட்டார மொழி வார்த்தைகளின் அர்த்தம் புரியாமலே வாசிப்பது ஒரு குறையாகவே என் மனதில் இருந்தது. அவர்கள் கதையில் அதிகம் புழங்கப்படாததாக வரும் வட்டார மொழிச் சொல் வரும் இடத்தில் பக்கத்திலேயே அதன் அர்த்தத்தை அடைப்புக் குறிக்குள் போட்டு இருக்கிறார்கள். அது அர்த்தம் புரிவதாக மட்டுமல்லாமல் அது பயன்படுத்தப்படும் வேறு இடங்களிலும் நாம் புரிந்து கொள்ள உதவுகிறது. மொத்தமாக இறுதியில் வட்டார மொழிச் சொற்களும் அதன் அர்த்தங்களும் இருப்பதை விட இது நல்லா இருக்கிற மாதிரி எனக்குத் தெரியுது. வாசிப்பாளர்கள் தங்கள் கருத்தை பகிரவும்.

26 March, 2026

Couple friendly - Tamil film

Can i have a hug? இந்தக் காலப் பிள்ளைங்க எவ்வளவு சுலபமா ஒரு கட்டிப்பிடி வைத்தியத்தை கேட்டு வாங்கித் தான் பலவீனப்பட்ட நேரத்தில் தன்னை பலப்படுத்திக்கிறாங்க என்பதை அழகான ஒரு காதல் படமா பார்க்க, நீங்கள் தவற விடாமல் பார்க்க வேண்டிய படம் "Couple friendly" amazon prime ல இருக்குது. மூலம் தெலுகுன்னு நினைக்கிறேன். தமிழிலும் இருக்குது. ஹீரோ ஷிவா ( சந்தோஷ் ஷோபன்) ஹீரோயின் ( மானசா வாரணாசி) வாய் பேச முடியாத நடிகை அபிநயா போல சாயல். ஒரு வேளை உறவாக இருக்கலாமோ? இதர முக்கிய கதாபாத்திரங்கள் யோகி, லிவிங்ஸ்டன் மற்றும் பலர் . இசை : ஆதித்யா ரவீந்திரன். ஒன்றிப் போக வைக்கும் இசை. இயக்குநர் : அஸ்வின் சந்திரசேகர். நாயகன் திருச்சியில் இருந்தும் நாயகி நெல்லையில் இருந்தும் சென்னை செல்வதாகக் காட்டுகிறார்கள். இது தமிழில். மூலப் படம் தெலுகு. Interior decoration எடுத்து வேலை செய்ய ஆசைப்படும் ஒருவர் சரியான வேலை கிடைக்காமல் தத்தளிக்கும் போது rapido மாதிரி bike booling மூலம் சம்பாதிக்கிறார். Bike booling என்கிறார்கள். Rapido வுக்கும் bike booling க்கும் என்ன வித்தியாசம் தெரியல. அப்படித் தான் கதா நாயகனும் நாயகியும் அறிமுகமாகிறாங்க. நாயகிக்கு தங்க இடமே கிடைக்காத போது rent sharing ல ஒரே வீட்டில் தங்கி அந்நியோன்யமாகுறாங்க. அது என்னங்க மொட்டை மாடியில படுக்கிறது கேள்விப்பட்டு இருக்கிறோம். மொட்டை மாடியிலும் உள்ள ஒரு அறையின் மேலே போய் ஹீரோ தூங்குறார். உருண்டு விழுந்தா என்ன ஆகிறது. ஆனாலும் அங்கே படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரங்களைப் பார்க்கிறது டிவைன். அதுவும் ஜோடியா படுத்துக்கிட்டு பார்க்கும் போது சான்சே இல்ல. பல இடங்களில் DOP கலக்கி இருக்கிறார். இப்ப 2k kids வாழ்வியல் முறையைக் காட்டும் படங்கள் வரத் தொடங்கிடுச்சு. இதுவும் அந்த வகையில் ஒன்று தான். இப்போ உண்மையான காதல் இல்லை. பிடிக்கலைன்னா உடனே பிரிந்து வேற ஆளப் பிடிச்சிடுறாங்கன்னு சொல்றோம்ல. அது இல்ல. "நீ என்னை விட்டுட்டு போயிட மாட்டேல்ல" என்று ஒரு இடத்தில் நாயகனும், ஒரு இடத்தில் நாயகியும் கேட்பது போன்ற காதல். எனக்குப் பிடிச்சிருந்தது. நீங்களும் பார்த்திட்டு சொல்லுங்களேன்.

17 March, 2026

மிண்டியும் பறஞ்சும் அமேசான்

அமேசான் ப்ரைம் மலையாளம் இயக்குநர் : அருண் போஸ் முக்கிய நடிகர்கள் : உன்னி முகுந்தன், ( சனல்) அபர்ணா பால முரளி. ( லீனா வர்கீஸ்) ஜாஃபர் இடுக்கி ( வர்கீஸ், லீனாவோட அப்பா) , மாலா பார்வதி ( சனலோட அம்மா. மலையாளத்தில் மிண்டுறதுன்னாலும் பறையறதுன்னாலும் ஒரே அர்த்தம் தானே என்று சிந்தித்த படி படம் பார்க்கத் தொடங்கினால் மனதோடு மனது நெருக்கமாக பேசுவதற்கு பயன்படுத்துவது என்பது புரிந்தது. சரி தானா ன்னு மலையாளம் தெரிந்தவர்கள் தான் சொல்லணும். படத்துக்கு பெயர் மிகச் சரியானது கணவனை நினைத்து மனைவியும் மனைவியை நினைத்து கணவனும் முடிவெடுக்கிறார்கள். ஒரு சிலரது வாழ்க்கை எதிர் பாரா நிகழ்வுகள் நிறைந்ததாய் மேடும் பள்ளமுமாய் இன்பமும் துன்பமுமாய் கலந்து இருக்கும். ஒரு சிலருக்கு வாழ் நாள் முழுவதும் துன்பம் மிகுந்ததாய் இருக்கும். ஆனால் அபூர்வமாய் வெகு சிலருக்கு எந்த வித சிரமமும் இல்லாமல் ஐஸ் க்ரீம் தொண்டையில் வழுக்கிக் கொண்டு செல்வது போல் சுலபமாய் இருக்கும் வாழ்க்கை. இந்தக் கடைசி வகையைச் சேர்ந்தவர்களின் கதை தான் படம். ஹீரோ வெளி நாட்டிலிருந்து தன் மனைவியைப் பார்க்க வருகிறார். விமான நிலையத்திலிருந்து தன் வீட்டிற்குச் சென்று தாயைக் கண்டு, தங்கையின் கணவரின் காரை எடுத்துக் கொண்டு மனைவியை வந்து சந்திக்கிறார். இதற்கு இடையில் ஒவ்வொரு நிகழ்வுக்கு தொடர்பாய் பழைய காட்சிகள் ப்ளாஷ் பேக்கில் இடைச் செருகலாய் வருகிறது. கணவன் மனைவிக்கு இடையே ரொம்ப மென்மையாய் காதல் சீண்டல்கள். அருமையான பாடல்கள். எந்த ஒரு வில்லத்தனமும் இல்லாமல் வரும் அத்தனை கதா பாத்திரங்களும் மிக நல்லவர்கள். இப்படியான வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமற்றதாய் இருக்குமோ என நான் நினைத்தது மட்டுமே வில்லத்தனம். அழகான கதாநாயகன், நன்கு மெலிந்து உடல் எடை குறைத்த அழகான கதா நாயகி. இவர்களின் காதல் வீட்டுக்குத் தெரியும் போதும் பெரிதாய் பிரச்னையில்லை. பெரு மழையோடு பல நிலச் சரிவுகள் நடக்கும் பாதையில் சனலில் சுமுகமான பயணம், காதல் திருமணம் செய்த கணவனும் மனைவியும் திருமணமான ஆரம்பத்திலேயே நாடு விட்டு நாடு பிரிந்து இருந்தாலும் அவர்களிடையே எந்த ஒரு சிக்கலும் இல்லை. இப்படி போக்குவரத்தற்ற சாலையில் ஆட்டோ கியர் வண்டியில் பயணம் போவது போல் ஒரு படம் பார்க்க ஆசைப்பட்டால் இந்த படத்தைப் பார்க்கலாம்.

16 March, 2026

மான் குட்டிகளும் பருந்துகளும்.

மான்குட்டிகளும் பருந்துகளும் தொகுப்பாசிரியர் ஜெ.பி. ஜோஸபின் பாபா. உலகின் பல பகுதிகளிலிருந்து 21 பெண்களின் சிறுகதைகளைத் தொகுத்து உருவான புத்தகம். நான் அதிலுள்ள ஒரு சில கதைகளைப் பற்றி சின்ன சின்ன குறிப்புகள் தருகிறேன். வாசிப்பு ஆர்வமுள்ளவர்கள் வாங்குவதற்கு கீழுள்ள எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். சுவாசம் பதிப்பகம் ஹரன் பிரசன்னா. அலைபேசி எண் 8148066645 கோவையைச் சேர்ந்த அகிலாவின் எழுத்துக்கு நான் ரசிகை. அதனால் "காயம்" என்ற அவர்களின் சிறுகதையை முதலில் எடுத்து வாசித்தேன். ஒவ்வொரு பெண்ணுக்குமே சிறு வயதில் நடந்த நிகழ்வால் , யாரிடமும் சொல்ல முடியாமல் போய் , அழுத்தமான காயமாய் மனநில் பதிந்த விஷயம் ஏதாவதொன்று இருக்கும். அது இல்லாத பெண் பாக்கியசாலி. ஆரோக்கியமான குடும்ப வாழ்வைப் பெற்றிருப்பாள். அத்தகைய ஒரு பெண்ணின் கதை தான் காயம். ஊட்டி போகும் வழியிலுள்ள கேத்தியின் இளங்காலைப் பொழுதின் வர்ணனையோடு கதை தொடங்குகிறது. அங்கே யூக்கலிப்டஸின் மணம் எல்லா வீடுகளிலும் இருப்பதற்கான காரணமாக இவர் சொல்லப்படுவது அனேகமாக உண்மையாகவும் இருக்கலாம். "கண்கள் ஒரு நல்ல பேச்சு கடத்தி. வெகு சகஜமாக பாலம் போட்டு விடலாம். கண்களைத் தவிர்ப்பவர்களை பேச முற்படாதவர்களாக சங்கோஷப்படுபவர்களாக கொள்ளலாம்" என்கிறார். மன நலம் சார்ந்த மிகச் சரியான உண்மை. திருமணத்துக்கு முன்பே கருவுற்றதால் தற்கொலை செய்து கொண்ட ஒரு பெண்ணைப் பற்றி கூறுகையில் "ரொம்ப ஸ்டைலா டிரஸ் பண்ணிக்கும். திமிரா பேசும். அப்புறம் எவன் பார்த்துகிட்டு சும்மா இருப்பான் " என்று அங்கிருந்த ஒரு பெண் சொல்வதாக எழுதி தற்கொலைக்கான காரணத்தையும் அடிக்கோடிட்டு காட்டுகிறார். இதே போல தன் இள வயதில் நடந்து நேர் மறை முடிவெடுத்த ஒரு பெண்ணுக்கும் தனக்கும் உள்ள தொடர்பை சுவாரஸ்யமாகச் சொல்லி கதையை நகர்த்திய தருணத்தில் "அப்படியும் இருக்கலாமென நினைத்தேன்" என்று எழுதி அதிர்ச்சி தருகிறார். சிறு குழந்தைகளை சிறு வயது தானே என்று எண்ணி அலட்சியமாக நடத்தாதீர்கள். அது அவர்களின் உள் மன ஆறாதக் காயமாக இருந்து வளர்ந்த பின் குடும்ப வாழ்க்கையைக் கூட பாதிக்கும் வாய்ப்புண்டு் புத்தகத்தை வாங்கி வாசித்து இன்புறுங்கள்.

15 March, 2026

நகுலனின் நாலு கட்டு வீடு - குமரி உத்ரா

" நகுலனின் நாலு கட்டு வீடு" ஆசிரியர் : குமரி உத்ரா. வேரல் பதிப்பகம் . விலை : 140 ரூபாய் . முதல் பதிப்பு : ஜனவரி 2026 . இந்த சிறுகதை தொகுப்பிற்கு அழகான முன்னுரை கொடுத்திருக்கிறார் நட. சிவகுமார். இவர் குமரி உத்ராவின் கதைகள் மருத நிலப்பரப்புக்குள் உலாவும் உதிரி கதை மாந்தர்களைச் சுமந்து கொண்டு காட்டாற்று வெள்ளம் போல் நகருகிறது என்கிறார். தன் 14 வயதுக்குள் தான் பயணப்பட்ட பாதைகளில், வழித்தடங்களில் தன் கண்ணில் பட்ட காட்சிகளையும், செவி வழி கேட்ட நிகழ்வுகளையும் , தன் அனுபவங்களாகவும் கதைகளாகவும் லேசாக தொட்டு விட்டு சென்றதாக சொல்கிறார் உத்ரா. இது 11 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு . முதல் கதை அரளிப்பூ. வட்டார வழக்கில் எழுதப்பட்ட கதை. உழைப்பாளி மேனகா. எல்லோரும் அவளை மேனா என்றே அழைக்கிறார்கள். அதனால் மேனகா என முழுமையாக அழைக்கும் சின்னப் பண்ணை அழகுவை அவளுக்கு ரொம்ப பிடிக்கிறது. மேனகாவின் துள்ளலான வாழ்க்கையைச் சொல்லிச் செல்கிறது கதை . வீட்டில் வளரும் அரளிச் செடியைப் பற்றி சொல்லும் போது அரளிச்செடியின் வேர் மருந்தாக பயன்படுவதைச் சொல்லி " கெட்டது 10 இருந்தா நல்லது இரண்டு இருக்கும். நல்லதை மட்டும் நாம பயன்படுத்தணும் என்கிறார் வைத்தியர். இது பொருட்களுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் தானே. அரளிச்செடி ஒரு தவறான கதை முடிவுக்கு நம்மை அழைத்துச் சென்றாலும், நேர்மறையாகவே முடித்திருக்கிறது. "முட்டை கிறுக்கி" இரண்டாவது கதை. பாளை தெற்கு பஜார் சர்ச்சின் வாசலில் இருந்து ஸ்வட்டர் பின்னும் ஒரு வட இந்திய பெண் நினைவுக்கு வந்தார். அம்மா இல்லாத சமயம் சோறும் குழம்பும் இரண்டு வகை காய்கறியுடன் கொடுக்கும் மகளுக்கு வாழையிலை போட்டு சாப்பாடு கொடுக்க வெகு நாள் ஆசை. நாம மட்டும் சுட சுட தோசை சாப்பிடுகிறோம் ஆனால் ராப்பாடிக்கு மட்டும் கண்ணில் படாமல் வைத்து விடுகிறோம் அது தவறு என்று உட்கார வைத்து தோசை சுட்டு போட்ட ஒரு அண்ணன் இதை வாசிக்கும் போது எனக்கு நினைவுக்கு வந்தார். "கல்யாண குழியான்" என்றொரு கதை. சந்திரி, பஷீர் என்ற இரண்டு குழந்தைகளின் கல்மிஷமில்லா அன்பு. பஷீரின் தந்தை சில மாதங்களாக வீட்டுக்கு வராமல் இருக்க சந்திரி சொன்னதைக் கேட்டு மதம் தாண்டி கோயிலில் இரு குழந்தைகளும் பிரார்த்திப்பதை சொல்லும்போது இப்படி இருக்கும் குழந்தைகள் தானே வளர்ந்த பிறகு மதத்தின் பெயரால் ஒருவரையொருவர் வெட்டி சாய்க்கிறார்கள் என்று தோன்றியது. " நூல் சேலை" தாய் இறந்த செய்தி கேட்ட இளைய மகள் வெளிநாட்டிலிருந்து வரும்போது அவளை அணைத்துப் பிடித்த அக்காவின் அன்பை சொல்லும் கதை. " இளையவளாய் பிறந்த என் சின்ன மகள் ஒரு குழந்தைக்குத் தாயாகி விட்டாள் என்ற பெருமை முகம் அவளிடம் தெரிந்தது." இந்த வரி என்னைப் போன்ற தமக்கை இல்லா பெண்களுக்கும் ஒரு ஏக்கத்தை ஏற்படுத்தும். " அன்று பிடித்தது போல அவள் உடம்பு இப்போது கைகளில் இல்லை எனப் புரிந்தது " உத்ராவின் எழுத்து வன்மைக்கு ஒரு சான்று இந்த வரி. " மஞ்சாடி முத்துக்கள்" தன் வீட்டுக்கு வேலை செய்ய வந்த தேனம்மையின் தன் வயதுப் பேத்தி மல்லிகா வளர்ந்த பின் அதே ஏழ்மை நிலையில் பார்த்ததைச் சொல்லும் கதை . " அவள் மன உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து இரண்டாம் முறை சந்திக்க வாய்க்கும் போது பார்க்காமலே விலகிச் செல்லும் பாங்கு . உணர்வுபூர்வமான கதை. " வாயில் வெற்றிலையை மென்று கன்னம் ஓரமாக ஒதுக்கி வைத்து உப்பிய கன்னத்துடன் கை வீசி பெண்ணைப் போல நடக்கும் ராஜப்பனின் தாய்மைக் கருவாக்கி வரைந்த கதை வவுலாடி . ஒன்றிரண்டு கதைகள் பலமுறை சொல்லப்பட்ட கருக்கள் கீட்சிகளைச் சொல்கின்றன என்ற சின்ன குறையைத் தவிர்க்கலாம் . புத்தகம் விரும்புவோர் கீழ்க்கண்ட என்னை தொடர்பு கொள்ளவும். குமரி உத்ரா : 94865 56166

12 March, 2026

மாதவியின் கண்ணழகில் மயங்கிப் போன கோவலன் போல் வாயு அடுப்பில் கிறங்கிப் போய் கரியடுப்பை மறந்த நாங்கள் இன்று கண்ணகியிடம் திரும்பிய, திருந்திய கோவலனாய் விறகெரிக்க முடிவெடுத்துத் தேடினால் நிழல் தரும் நல்ல மரங்களை அல்லவா வெட்டிச் சாய்க்க வேண்டும் போல.

11 March, 2026

தமுஎச வி எம் சத்திரம் கிளை நடத்திய மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியை பாளை சரோஜ் நினைவகத்தில் பேராசிரியர் முத்துலட்சுமி அவர்கள் தலைமை ஏற்று நடத்தித் தந்தார். திரு வண்ணமுத்து அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள்.சி.த. இஷா & ச.ஜீவன் கவிதை வாசித்தார்கள். சாகித்ய அகடமி விருதாளர் முனைவர் விமலா " தமிழிலக்கியப் புலத்தில் பெண்ணியப் போக்குகள்" என்ற தலைப்பில் பேசினார். "பெண் சந்தித்த முதல் தோல்வி தான் முதன்மை இடத்திலிருந்து இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டது தான் என்றார். உண்மை தானே . ஆதியிலே தாய் வழிச் சமூகமாக இருந்து ஒரு மூத்த தாய்க் கிழவியின் பேச்சு கேட்டு நடந்த சமூகம் பற்றி நாம் அறிந்தது தானே. பாரதியார் பெண் விடுதலை பற்றி அதிகம் பேசிக் கொண்டிருந்த காலத்தில் ஒருவர் " எவ்வளவு புரட்சி பேசினாலும் சாலையில் நடந்து வரும் போது உமக்கு பத்தடி தள்ளி பின்னால் தானே உங்க மனைவி மனைவி வர்ராங்க" என்று கேட்ட உடன் தன் மனைவியின் தோளில் கை போட்டு அக்ரஹாரத்தில் உடன் அழைத்துச் சென்றவர் பாரதியார் என்பதை நினைவுபடுத்தினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சத்யா ஒரு அருமையான கருத்தினைச் சொன்னார். பாலியல் பற்றி கொஞ்சமும் தெரியாத வயதில் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக் கொடுக்கிறோம். ஆனால் அதுவே பெரியவர்களிடம் குழந்தைகளை தவறான இடங்களில் தொடாதே என அழுத்தி வலியிறுத்துவதில்லை என்றார். நம் பழக்கமே தவறு செய்யும் ஆண்களை விட்டு விட்டு பெண்களிடம் நீ சரியான உடை அணிந்து வா என சொல்வது தானே. பாப்பாக்குடி செல்வமணி அவர்கள் " உலகம் ரொம்ப மாறி விட்டது. என் மனைவி மகன்களிடம் நல்லா வீட்டு வேலை செய்யப் பழகிக்கோ. அப்போ தான் கல்யாணமாகிப் போற இடத்துல அடி வாங்காமத் தப்பலாம் " என்று சொல்லி வளர்ப்பதாகச் சொன்னார். அது நகைச்சுவைக்காக மட்டும் அல்ல உண்மையிலேயே ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றத்தைத் தான் குறிப்பிடுகிறார். ஆனாலும் அந்த குழந்தைகளின் தாய் பாராட்டுக்குரியவர்களே! தமிழ்நாடு அரசு சிறந்த பெண் குழந்தை விருது பெற்ற சூடாமணிக்கு பொன்னாடை போற்றி பரிசளித்தார்கள். சமூகப் போராளி துளசியம்மாள் " பிணம் எரிப்பது உட்பட பெண்கள் பங்களிக்காத தொழில் என்று எதுவுமே இன்று இல்லை. " என்றார். அவர் சொன்ன இன்னொரு கருத்தை என்னை வெகுவாகக் கவர்ந்தது. "எட்டு மணி நேரம் உழைப்பு போராடிப் பெற்றுக் கொடுத்தார்கள். அது ஏன் எட்டு மணி நேரம் உழைப்பு என்றால். எட்டு மணி நேரம் உழைப்பு , எட்டு மணி நேரம் உறக்கம் , எட்டு மணி நேரம் ஓய்வு. ஓய்வு என்பது பெண்களுக்கான நேரம் என்றார். சரி தானே " மீ டைம் " என்று இன்றைய பெண்கள் குரல் எழுப்பும் அந்த ஓய்வுக்கான எட்டு மணி நேரத்தில் தான் பெண்கள் குடும்பத்தின் உயர்வுக்காக வெளியே சென்று உழைக்கக் கற்றுக் கொண்டார்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வு என்பதே இல்லாமல் போனது. எட்டு மணி நேரம் கூட வேண்டாம். நமக்கான விருப்பத்துக்காக சில மணி நேரங்களையாவது ஒதுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலையை ஐடி போன்ற துறைகளில் தம்மை அறியாமலே இழந்து கொண்டிருக்கிறார்கள் என்றார். ஆட்டோ ஓட்டும் பெண்களைக் கௌரவிப்பது, தோழர் நாறும்பூநாதன் வார்த்தெடுத்த தமிழக அரசின் விருது பெற்ற குழந்தை சூடாமணியை பாராட்டுவது, வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு நடனம், கவிதை வாசித்தல் என வாய்ப்புக் கொடுப்பது என மகளிர் தின நிகழ்ச்சி களை கட்டியது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து அமைத்துத் தந்த தோழர்களுக்கு பாராட்டுகள்.

09 March, 2026

மகளிர் தினம் 2026

பாளை சரோஜ் நினைவகத்தில் 7.3.2026 அன்று தமுஎச வி.எம் சத்திரம் கிளை முன்னெடுத்து நடத்திய மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. போன உடன் நான் கண்டது மொத்தமாக பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் சீருடையுடன் வட்டமாக அமர்ந்திருந்த காட்சி. நம்ம ஊர்ல இத்தனை பெண் ஆட்டோ ஓட்டுனர்களா? ஆச்சர்யப்பட்ட நான் உடனே போய் அவர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டேன். பேரா. முத்துலட்சுமி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தார். தமிழ்நாட்டின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுனரான நெல்லையைச் சேர்ந்த காந்திமதி இருக்காங்களான்னு கேட்டு, திருச்சி பெண் ஆட்டோ ஓட்டுனர் பற்றிய என் பதிவு 1,70,000 வியூஸ் போனதைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டேன். அவர்கள் வரவில்லை. ஆனால் பெண் ஆட்டோ ஓட்டுனர்களை ஓரணியாக்கி பொறுப்பேற்று செயல் பட்டுக் கொண்டிருக்கும் தோழர் ஜெயஸ்ரீ அவர்கள் தான் அவரிடம் நான் விசாரித்ததை சொல்வதாகக் கூறினார்கள். அவர்களை மகளிர் தினத்தன்று மரியாதை செய்வதற்காக அழைத்திருந்தார்கள். துணிச்சலாக பெண்கள் எல்லா துறைகளிலும் இறங்குவதைப் பார்க்க பெருமையாக இருக்கிறது. பதிவு எழுதும் போது ஒரு விஷயத்தை வலியுறுத்தச் சொன்னார்கள். "நெல்லை புது பஸ் நிலையத்தில் பெண்களுக்கான தனி ஆட்டோ ஸ்டான்ட் கேட்டு ஆட்சியாளரிடம் மனு கொடித்திருக்கிறார்களாம். அதை செஞ்சு கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி எழுதுங்கம்மா" என்றார்கள். சாராள் டக்கர் கல்லூரி அருகில் உள்ள நிலையத்தில் ஐந்து பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் காத்து இருக்கிறார்களாம். சிறப்புல்ல !!!! பெண்கள் கல்லூரி அருகில் பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் இருப்பது வெகு சிறப்பு. உரியவர்களின் கவனத்துக்கு இது எப்படியும் போய் விடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு் . செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையோடு வேண்டுகோள் வைப்போம். செய்து கொடுங்கள் ஐயா. வணங்குகிறோம். நிகழ்ச்சி பற்றி தனியாக ஒரு பதிவு எழுதுகிறேன். காத்திருங்கள்

02 March, 2026

நெல்லை சாரதா கல்லூரி. பல ஆண்டுகளுக்கு முன் தொலைபேசி அதிகாரியாகப் போய் கல்லூரி முதல்வரின் அறையில் ப்ராட் பேன்ட் சரி செய்து வந்திருக்கிறேன். அதன் பின் சமீபத்தில் என் தோழி உடனும் அவள் தோழியுடனும் அங்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. தான் படித்த கல்லூரியை இருபதாண்டுகளுக்குப் பின் பார்க்க ஆசைப்பட்டாள். எங்க வீட்டிலிருந்து கிளம்பும் போது சுரிதார் வேண்டாம் , புடவைக்கு மாறிக் கொண்டு வா என அவள் தோழி சொன்னதும், நான் சுரிதாரில் இருக்கிறேனே பரவாயில்லையா எனக் கேட்டேன். நாங்க அந்த கல்லூரி மாணவர்கள். படிக்கும் போது புடவைக்கு மட்டுமே அனுமதி. அதிலும் அர்ஷா அங்கே உள்ள பல மாணவிகளுக்கு ரோல் மாடலாக இருந்தவள். அதனால் சொன்னேன் என்றாள். போகும் போது "அம்மா, பதினைந்து நிமிடம் தான். எனக்கு முக்கியமான இடங்களில் நின்று புகைப்படம் எடுக்கணும். எடுத்திட்டு கிளம்பிட வேண்டியது தான் " என்றாள். ஆனால் கல்லூரியில் நாங்கள் இருந்தது இரண்டு மணி நேரம். எனக்கு அந்த பிள்ளைகளின் சந்தோஷத்தை "நேரமாகுதுன்னு" சொல்லி கெடுக்க மனமே வரல. கல்லூரி முதல்வர் இவ்வளவு down to earth ஆ இருந்து ஒருவரை நான் பார்த்ததே இல்லை. பழைய மாணவிகளிடம் எவ்வளவு நினைவுப் பகிர்வு. என்னிடம்" நீங்கள் எத்த வருடம் இங்கே படித்தீர்கள் " என்று கேட்டார்கள். "நான் இந்த கல்லூரியில் படிக்கவில்லை. " என்று நான் படித்த கல்லூரியின் பெயரைச் சொல்லி என் வயதைச் சொன்னதும் ரொம்ப ஆச்சர்யப்பட்டாங்க. "இவ்வளவு வயதா? நம்பவே முடியல" என்று எனக்கு உற்சாக பானமளித்தார்கள். "இவ்வளவு கட்டுப்பாட்டில் வளரும் போது பெண் குழந்தைகள் திருமணத்துக்குப் பின் வாழ்க்கையை சுலபமாக எதிர் கொள்கிறார்களா" எனக் கேட்டேன். "நிச்சயமாக. விட்டுக் கொடுத்தலும் பணிந்து நடப்பதும் இயல்பாகவே வந்து விடும்" என்றார்கள். இவர்கள் கல்லூரிக்குள் ஆண்களுக்கு அனுமதி இல்லை. மாணவிகளை அழைத்துச் செல்ல வந்தவர்களும் கல்லூரிக்கு வெளியே தான் வரிசையாக வாகனங்களை நிறுத்தி காத்திருக்கிறார்கள். பெற்றவர்கள் பெண் குழந்தைகளை இந்த கல்லூரிக்கு அனுப்பி விட்டு நிம்மதியாக இருப்பார்கள் என நினைக்கிறேன். அந்த நேரம் வகுப்புகள் முடிந்ததற்கான மணி அடித்ததும் மாணவிகள் பட்டாம் பூச்சிகள் போலப் பறந்து வந்தார்கள். இவ்வளவு கட்டுப்பாட்டிற்கான எந்த நெருக்கடியும் அவர்கள் முகத்திலில்லை. ஒரு வகையில் குழந்தைகளுக்கு ரொம்ப சுதந்திரம் கொடுப்பதும் அவர்களுக்கு நாம் செய்யும் தீமையோ எனத் தோன்றுகிறது.