Bio Data !!

18 July, 2010

கனவே கலையாதே!

நாடோடி ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார் இரண்டு பேரை. தமிழ் உதயம் அண்ட் மீ .
தமிழ் உதயம் ஜஸ்ட் லைக் தட் உடனே தனக்கிருந்த ஒரு அனுபவத்தின் மூலம் எழுதி முடித்து விட்டார். அவர் ஒரு அனுபவங்களின் குவியல் என்று நினைக்கிறேன்.

என் பாட்டுக்கு ஒரு ஓரத்தில கதைன்ற பேர்ல ஏதோ எழுதிக்கிட்டு இருந்தா ஒரு கற்பனை சூழ்நிலையைக் கொடுத்து எழுதச் சொல்லி விட்டார், நாடோடி. சூழ்நிலை இன்னான்னா ,

  ப‌ழைய‌ ம‌ன்ன‌ர்க‌ளின் ஆட்சியில் நீங்க‌ள் இருந்தால் ( நீங்க‌ள் எந்த‌ ஒரு கேர‌க்ட‌ராக‌வும் எடுத்து கொண்டு எழுத‌லாம், ம‌ன்ன‌ர‌க‌வோ, ராணியாக‌வோ, பிர‌ஜையாக‌வோ) அந்த‌ அனுப‌வ‌த்தை ப‌கிர‌வும்.

ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ குலோத்துங்க அனா சூனா (அசகாய சூரர் )மன்னர் காலத்திய பிரஜை நான்.  அவரது ஆட்சியில் பசி என்று ஒருவர் இருந்ததில்லை. அவரது அரண்மனையை கடக்கும்  ஒருவர் பசியோடு இருந்தால் அரண்மனைக்குள் சென்று அதற்கென இருக்கும் நீள் தாழ்வாரத்தில் அமர்ந்து வேண்டுமட்டும் உண்டு வரலாம். 
நீருக்கு  என்றுமே தட்டுப்பாடு இருந்ததில்லை. ஓடைகளும், சோலைகளும் கண்ணுக்கெட்டிய தூரம் பசுமை தான். 

மாதம் ஒரு முறை அரசர் தன் மனைவியுடன் அரண்மனை மாடத்துக்கு வந்து குடி மக்களுக்கு தரிசனம் தருவார். அரசர் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்று காண  இயலாது. . ஆனால் அவரைக்  கண்டு  விட்டால் அடுத்த ஒரு மாதத்துக்கு அதைப் பற்றியே தான் பேச்சாக இருக்கும்.அவரின் தங்க நிறம், அவர் அணிந்திருந்த தங்க நகைகள் , அவரின் புன்சிரிப்பு என்று பேச்சு எங்கு தொடங்கினாலும் அரசரிடம் போய் தான் நிற்கும்.  சுத்தமான காற்று, உடல் சுகம் கெடுக்காத நீர், வயிறு நிறைய உணவு இவ்வளவும் கிடைத்த நான் தேவை இல்லாத ஒரு காரியம் செய்தேன். 

ஒரு கால இயந்திரத்தில் ஏறினால் இருநூறு ஆண்டுகள் தாண்டி 2010 க்கு வந்து விடலாம் என்று ஒருவர் சொல்ல, ஆசைப்பட்டு ஏறி விட்டேன். ஒரு மூன்று மணி நேரத்துக்கு மட்டும் 2010 இன் உலகத்தில் சுற்றி வரலாம் மூன்று மணி நேரம் முடியுமுன் கால இயந்திரத்தில் ஏறி விட வேண்டும்.   என்று மிகவும் எச்சரிக்கப் பட்டு ஆசையின் உந்துதலால் ஏறி விட்டேன். 

 கால இயந்திரம் என்னை நெல்லையில்  கட்ட பொம்மன்    நகரில்  எட்டு திக்கும் போகும் சாலைகளின்  நடுவில் கொண்டு வந்து விட்டது . கொஞ்ச நேரத்தில்  கண்களில் ஒரு பரிதவிப்பு மேலிட்டது. காரணம் வட்டம் வட்டமாக  போட்டு இருக்கிற சாலையில ஒரு திசையில பார்க்கும் போது  பின் பக்கமாக  வந்து ப்ப்பாஆ னு சங்கு ஊதுகிறான். அதற்கு  வழி விட்டு ஒதுங்கும் முன் மூணாவது திசையில இருந்து சத்தமே இல்லாமல்  ஒரு பெரிய ரதம் மஞ்சள் நிறத்தில் மணல் சுமந்து வந்து  பக்கத்தில்  நிற்கிறது. . இது சரிப்படாது, மெல்ல ஓரமாக நடக்க ஆரம்பித்தேன். 

ஒரு பெரிய பழச் சோலை. ஆனால் பழங்கள் எல்லாம் பறிக்கப்பட்டு ஒன்றன் கீழ் ஒன்றாக வரிசையாக அடுக்கப் பட்டு இருந்தன. வண்ண வண்ணமாக நீர் குடுவைகளில் அடைக்கப் பட்டு தூக்கில் தொங்குவது போல்  தொங்க விடப் பட்டிருந்தன. உடனே என் அடிவயிறை பசி கிள்ள நேராக சென்ற நான் பழங்களில் ஒன்றை எடுத்து கடித்த படி ஒரு நீர் குடுவையை உருவினேன். அடுக்கி வைக்கப் பட்ட பழங்கள் சரியத்  தொடங்கின.

 அதன் அருகே நின்றிருந்த மனிதன் "என்ன வேணும் சொல்லுங்க இப்படி நீங்களா எடுக்க கூடாது.  வேற என்ன வேணும்" எனக் கேட்டான். ரொம்ப நல்ல மனிதனாக இருக்கிறானே  என்று எண்ணிய படி " ஆறு செந்நிற பழங்களும் , இரு குடுவை வண்ண நீரும் கொடுங்கள்" என்றேன். மேலும் கீழும் பார்த்தபடி நான் கேட்டதை எடுத்துக் கொடுத்தான். ஒரு பழத்தை கடித்தபடி நடக்க ஆரம்பித்தேன்.  

ஓடி வந்து என் தோளருகே அழுத்திப் பிடித்தவன் " ஏஏய்! நீ வந்ததில் இருந்தே சரி இல்லை. பழமும்   கூல் ட்ரிங்க்ஸ் ம் வாங்கிட்டு பணம் கொடுக்காம போறே? "
"குடி நீருக்கு பணமா? "
"அப்பறம், ஓசிக்கு கொடுக்கவா அடுக்கி வச்சிக்கிட்டு காத்துக்கிட்டு இருக்கோம்."
"என்னிடம் பணம் இல்லை. இந்தக் கணையாழியை வேண்டுமானால் வைத்துக் கொள்"
என்றதும் என்ன நினைத்தானோ கணையாழியை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தவன் இன்னும் ஆறு பழங்களும் வண்ண நீரும் ஒரு பையில் போட்டுக் கொடுத்தான். 

கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் இருந்த கட்டடங்களைப் பார்த்தபடி நடந்து வந்து கொண்டிருந்தேன். வேகமாக என்னைக் கடந்த தேரை ஒத்த  ஒன்று புகை மேக மண்டலத்தை உருவாக்கி மறைந்தது. சிறிது  நேரம் என்னை சுற்றி இருப்பவர் ஒருவரும் தெரியவில்லை. புகை நுரையீரலை நிறைக்க இருமத் தொடங்கினேன். அந்த ஊர்தியின்  வெளியே ஒரு ஐம்பது பேர் தொங்கிக் கொண்டிருந்தார்கள். 

அதை அதிசயித்து பார்த்த படியே வந்தேன். அங்கே ஒரு முள் மரம் பூத்திருந்தது. அடடா! முள் மரத்தில் பூவா? ஆச்சர்யமாக அருகில் போனேன். முள் மரம் முழுவதும் காகித மலர்கள். வாசமில்லா மலர்கள். நான் பார்த்துக் கொண்டிருந்த போதே ஒரு சிறுவன் கண்ணாடி பையில் இருந்து எதையோ எடுத்து வாயில் போட்டு பையை வீசினான். அது எஞ்சி இருந்த ஒரு முள் மரக் கிளையில் போய் அழகாக இடம் பிடித்தது. ஓஹோ! முள் மரம் பூத்ததன்  ரகசியம் இது தானா? 

நடந்து வந்து கொண்டு இருக்கும் போதே நடுத் தெருவில் ஒருவனைப் போட்டு ஒன்பது பேர் அடித்து நொறுக்கிக் கொண்டு இருந்தார்கள். அவன் ஓலமிட்டு அழுது கொண்டு இருந்தான். அவர்கள் இரங்குவதாயில்லை. உரலில் உலக்கையை போடுவது போல் ஒருவன் மாற்றி ஒருவன் அடித்துக் கொண்டிருந்தான். எனக்குள் ஒரு பய உணர்வு பரவியது. கடந்து செல்லும் ஆட்களில் ஒருவரும் தட்டிக் கேட்பதாயில்லை.நான் அவர்கள் அருகே சென்று "பாவமில்லையா? ஒருவனை ஒன்பது பேர் அடிக்கிறீர்களே? இன்று அவனை அனுப்பி நாளை அவன் நண்பர்களை அழைத்து வரச் சொல்லி மோதிப் பாருங்கள் " என்றேன்.  அவர்களில் ஒருவன் நாக்கைத் துருத்திய படி கையில் உள்ள தடியை உயர்த்தி  என்னைப் பார்த்து  "ஓடிப் போய்டு" என்றான். அலறி அடித்து ஓடிய நான் இன்னும் இரண்டு மணி நேரம் மீதம் இருந்தும் ஓடிப் போய் கால இயந்திரத்தில் ஏறினேன். உயிர் பயத்தில் உறைந்து  போய் எங்கள் அரசரின் மாளிகை வாசலில் போய் பொத்தென விழுந்தேன். 

அப்பாடா! (இது நான் ஒரு வழியாக எழுதி முடித்து கூறியது) 

'கனவே கலையாதே ' என்னும் கவித்துவமான தலைப்பில் தொடர் பதிவுக்கு நான் அழைக்கும் மூவர்,  
 தேனம்மை
பின்னோக்கி 
சிவாஜி சிறகுகள் 



14 comments:

  1. கால‌ இய‌ந்திர‌த்தில் ஏறி வ‌ந்து ஒரு ம‌ணி நேர‌ம் சுத்திய‌திலேயே இவ்வ‌ள‌வு பிர‌ச்ச‌னையா?.... அப்ப‌ வாழ்நாள் முழுவ‌தும் சுற்றுவ‌து எவ்வ‌ள‌வு கொடுமை.... அருமையா எழுதிட்டீங்க‌!!!.வாழ்த்துக‌க‌ள்!!!! தொட‌ர்ப‌திவை தொட‌ர்ந்த‌மைக்கு ரெம்ப‌ ந‌ன்றி..

    ReplyDelete
  2. :)). நல்லாத்தானிருக்கு கனவு

    ReplyDelete
  3. அப்பாடா ஒரு வழியா முடிச்சிட்டிங்க.

    ReplyDelete
  4. சரித்திர சாறெடுத்து, சமூக பார்வை கலந்து,
    கவித்துமான நடையில்
    கால இயந்திர துணையுடன் ,
    கச்சிதமான படைப்பு
    அருமை

    ReplyDelete
  5. வணக்கம்ம்மா., நல்லாருக்கு உங்க கனவு..!!
    தொடர அழைத்தமைக்கு நன்றி அன்பு...

    பின்னோக்கி அண்ணாவுக்கும்,
    தேனக்காவுக்கும் வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  6. நன்றி நாடோடி, நான் ரொம்ப கஷ்டப் பட்டு எழுதிய பதிவு இதுவாகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  7. வானம்பாடிகள் சார், பாஸாயிட்டேனா?

    ReplyDelete
  8. ஆமாம் தமிழ், எழுதி முடித்ததும் தப்பிச்சோம் புழைச்சோம் னு பதிவு போட்டேன்.

    ReplyDelete
  9. நல்ல வேளை, கானா வரிசையில கருமைன்னு போட்டிருவீங்களோனு பார்த்தேன்.
    அருமைக்கு நன்றி பார்வையாளன்

    ReplyDelete
  10. நன்றி சிவா,
    'தொடர்ந்து வா ' திகில் படத் தலைப்பு போல இருக்கா?

    ReplyDelete
  11. நன்றி உங்கள் அழைப்பிற்கு. கண்டிப்பாக தொடர்கிறேன்.

    ReplyDelete
  12. சின்ன சந்தேகம். என்ன தலைப்பில் எழுதவேண்டும் ?. இதே மன்னர்,மகாராணி, பிரஜை ? இல்லை வேறு எதாவது சூழல் இருக்கிறதா ?

    ReplyDelete
  13. நன்றி பின்னோக்கி, 'கனவே கலையாதே ' என்ற தலைப்பில் எழுதுங்கள். ராஜ, ராணி, பிரஜை கண்டிப்பு இல்லை

    ReplyDelete
  14. மிக அருமை .. நான் இப்போதுதான் பார்த்தேன்.. கூடிய விரைவில் எழுதி விடுகிறேன் ராஜ்..:))

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!