Bio Data !!

21 July, 2010

களவாணி

இந்த வார விகடனின் 'பொக்கிஷம்' பகுதியில் புதிய வார்ப்புகள் பட விமர்சனம் வந்திருக்கிறது. " பல இயக்குனர்களால் பல முறை அலசப்பட்ட கரு தான். ஆனால் எடுத்துக் கொண்ட கதை .... ஒரே சீராகச் சொல்லி இருப்பதால் இந்த படம் தனித்து இருக்கிறது. அந்த வரிகளை களவாணி பட விமர்சனத்துக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

கதாநாயகன் 'என்னைக் கட்டிக்கிறியா?' என்று கதாநாயகியைப் பார்த்து கேட்பதற்கு எந்த உள்ளர்த்தமும் இல்லை என்று காட்டுவதற்காக பத்து வயதுப் பெண்ணைப் பார்த்து கேட்பதாக காட்டப்படுகிறது. அந்த பெண் வெட்கத்தோடு சொல்வது அழகு. பெண்களின் அந்த வெட்கமும் ஆண்களின் நியாயமான வீரமும் உலக மயமாக்குதலால் நாம் இழந்த குடும்பச் சொத்து. பஸ்ஸில் போகும் பெண்களில் முதல் சீட் பெண்ணுக்கு வலது கண்ணும் பின் சீட் பெண்ணுக்கு இடது கண்ணும் அடிக்கும் போது விமல் கிராமத்து விடலையை கண் முன் கொண்டு வருகிறார் .  

கிராமங்களில் பெருசுகள் சின்னப் பெண்களைப் பார்த்து கேட்கும் சொலவடை தான் இது. இங்கே 'என்னைக்  கட்டிக்கிறையா?' என இளைஞன் விமல் கேட்பதில் உருவாகிறது கதை. 

கதாநாயகி ஓவியா அந்தக் கால ஷோபாவை நினைவு படுத்துகிறார். கள்ளங் கபடற்ற முகம். தெளிவான உணர்வு வெளிப்பாடு. இளவரசு வயலில் நாற்று நடத் தொடங்கி வைக்க அழைத்ததும் பாவாடையை தூக்கி செருகிய படி வயலில் இறங்கி நடும் போது கொள்ளை கொள்கிறார். 

சரண்யா தான் திரையில் வரும் நேரங்களில் எல்லாம் அனைவரையும் ஆக்ரமிக்கிறார். துபாயிலிருந்து திரும்பிய கணவனிடம் அடி உதை பெற்ற போதும் ஜன்னலோரம் நின்றபடி 'ஆனி போய்ஆடி போய்  ஆவணி வந்திட்டா என் பையன் டாப்பா   வருவான்' என்னும் போதும் மகன் திருமணம் முடித்து வந்த போது ' என்னப்பா வீட்டு கிரக பிரவேசத்துக்கும், மகன் கல்யாணத்துக்கும் ஒரே சாப்பாடா போட்டுட்டியா?' என ஒருவர் கேட்கும் சின்ன சந்தர்ப்பத்தை பயன் படுத்தி கலவர நிலையை சகஜமாக்கும் போதும் சரண்யா ஜொலிக்கிறார். 

இளவரசு விமலின் தந்தை பாத்திரத்தை உணர்ந்து கொஞ்ச நேரம் வந்தாலும் படிக்கல்லாய் கதையின் தரத்தை உயர்த்துகிறார். அவர் நீண்ட காலத்திற்கு பிறகு ஊர் திரும்பும் சமயம் மகனை அவல நிலையில் கண்ட கசந்த   மன நிலையை சிறிதும் புரிந்து கொள்ளாமல் 'கோடாலி தைலம் வாங்கி வந்தியா?' 'சரக்கு கொண்டு வந்திருக்கியா?' என சுற்றம் கேட்கும் போது நடிப்பில் வசனம் இல்லாமலே விசனம் காட்டுகிறார். 

வில்லன் திருமுருகன். கோபக்கார அண்ணன், வேகமாக உணர்ச்சி வயப் பட்டாலும் பெரியவர்கள் சொன்னதும் அடங்கும் போதும், இறுதியில் விமலுடன் இணக்கமான காட்சியிலும் இயல்பாக செய்கிறார். உடல் அசைவுகளில் காட்டும் உணர்வு முகத்தில் கொண்டு வர பயிற்சி இன்னும் கொஞ்சம் வேண்டும். படத்தின் இணை இயக்குனர். 

கஞ்சா கருப்பு காமெடி. அறிமுகமாகும் உர மூட்டை கடத்தல் காட்சி தவிர மீதி இடங்களில் எல்லாம் என்ன நடக்கும் என்று முன்பே ஊகிக்க  முடிவதால்  ரொம்ப ரசிக்க முடியவில்லை.  

சில சின்ன சறுக்கல்கள்;
கதாநாயகன் மட்டும் மப்ளர் சுற்றி முகம் மறைத்து பகைவர்களின் ஊருக்கு திரு விழா காண சென்றாலும் கூட இருக்கும் நண்பர்களை வைத்து கண்டு பிடிக்காமல் இருப்பது. 
போன்று இருந்தாலும் படம் முடிந்ததும் மறுபடி பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. 

15 comments:

  1. நன்றாக இருக்கிறது என்று எல்லோரும் சொல்ல, தியேட்டருக்கு போனால் படத்தையே எடுத்துவிட்டார்கள். வெகு நாட்கள் கழித்து எல்லா விமர்சகர்களாலும் ரசிக்கப்பட்ட, பாராட்டப்பட்ட களவாணி.

    ReplyDelete
  2. இந்த விமரிசனமும் நல்லாருக்கு.

    ReplyDelete
  3. அதுக்குள்ளே படம் எடுத்துட்டாங்களா?
    தமிழ் எப்படியும் அடுத்த ரவுண்டு வரும் கண்டிப்பா பாருங்க.

    ReplyDelete
  4. "பெண்களின் அந்த வெட்கமும் ஆண்களின் நியாயமான வீரமும் உலக மயமாக்குதலால் நாம் இழந்த குடும்பச் சொத்து"

    yes...

    விமர்சனம் அருமை..

    ReplyDelete
  5. உங்க‌ விம‌ர்ச‌ன‌ம் ந‌ல்லா இருந்த‌து... நானும் ப‌ட‌ம் பார்த்தேன், பிடிச்சிருந்த‌து.

    ReplyDelete
  6. என்னை மாதிரியே ரொம்ப ரசிச்சு பார்த்திருக்கிறீர்கள். முதல் பத்தியில் நீங்கள் சொன்ன , அந்த சின்ன பொண்னு கொள்ளை அழகு.

    ReplyDelete
  7. ரசித்து பார்த்ததை ரசிக்கும் படி எழுதி இருக்கீங்க...

    ReplyDelete
  8. களவாணி படம் மிகவும் அருமை.முதல் காரணம் கதாநாயகன் வாழ்வில் நடந்த ஒரு சில சம்பவங்கள் கண்டிப்பாக ஒவ்வொரு கிராமத்து இளைஞர்கள் வாழ்க்கையில் நடந்திருக்கும்.
    இரண்டாவது கதையில் வரும் ஊரின் பெயரிலேயே இய்க்குனரின் திறமை வெளிப்படுகின்றது.அரசனூர்(ஆண்),ராணிமங்களம்(பெண்).
    மூன்றாவது இதில் பெரிய மாஸ் ஹீரோ நடித்திருந்தால் 10 வகை பஞ்ச்(பஞ்சர்) டயலாக்,
    அஞ்சு பாட்டு வெளிநாட்டுல,ஒரு குத்துப்பாட்டு இருந்திருக்கும் ஆனால் இதில் எதுவுமே இல்லை ஆனாலும் படம் வெற்றி.
    பொதுவாக படம் கடைசி அரைமணி நேரம் மிகவும் விறுவிறுப்பு,காமெடியும் கலக்கல், LC112
    அரிசி ரகம் மிகவும் அருமை.
    மொத்தத்தில் களவாணி எல்லோர்மணதையும் களவாடியது உண்மை.

    மிக்க நன்றி வணக்கம்.
    க.பார்த்திபன்
    சிங்கப்பூர்.

    ReplyDelete
  9. எனக்கு ரொம்ப பிடிச்சு எழுதிய வரிகள் நீங்கள் குறிப்பிட்டவை பார்வையாளன். நன்றி.

    ReplyDelete
  10. நன்றி நாடோடி, குறைந்த செலவில் நல்ல படங்கள் இப்போ வர ஆரம்பிச்சிருக்குது.

    ReplyDelete
  11. சின்ன சின்ன விஷயங்களை ரசிச்சு எடுத்திருக்காங்க. பிரபலமாகாத நடிகர்கள் வைத்து சிறப்பான படம், நன்றி பின்னோக்கி

    ReplyDelete
  12. நன்றி சித்ரா , விடுமுறை சிறப்பாக கழிந்ததா?

    ReplyDelete
  13. நன்றி பார்த்திபன் தங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.
    ஊர் பெயரில் இருந்த ஒற்றுமை நீங்கள் சொன்ன பிறகுதான் கவனத்திற்கு வந்தது. LC112 பற்றி எழுத நினைத்திருந்தேன், எப்படியோ விடுபட்டு விட்டது காதலியைத்தவிர பிறருக்கு புரியாத குறியீடு அழகாக கையாண்டிருந்தார்கள். நன்றி

    ReplyDelete
  14. கதாநாயகன் மட்டும் மப்ளர் சுற்றி முகம் மறைத்து பகைவர்களின் ஊருக்கு திரு விழா காண சென்றாலும் கூட இருக்கும் நண்பர்களை வைத்து கண்டு பிடிக்காமல் இருப்பது.
    போன்று இருந்தாலும் படம் முடிந்ததும் மறுபடி பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.
    //

    ama ama

    ReplyDelete

தங்கள் வரவு நல் வரவு ஆகுக !!